வ்வொரு குழந்தையும் பிறக்கும் நேரத்தைக் கொண்டு அதன் பலாபலன்களை அறிகிறோம். அது போல் ஒவ்வொரு வருடமும், ஆங்கில புத்தாண்டு பிறக்கும் ஜனவரி 1-ஆம் தேதி, இரவு 12.00 மணிக்கு ஏற்படும் கோட்சாரம் கொண்டு 12 ராசி பலன்களையும் கூற இயலும். இந்த ஜாதகத்தில் லக்னம் முக்கியமாக எடுத்துக்கொள்ளப்படாது. மற்றைய ராசிகளில் அமர்ந் துள்ள கிரக நிலைகள் பலன்களை எடுத்துரைக்கும்.

Advertisment

ஆங்கில புது வருடம் என்பது மார்கழி மாதத்தில் தான் பிறக்கும். மார்கழி மாதம், சூரியன் எப்போதும் தனுசு ராசியில்தான் இருப்பார். மற்ற கிரகங்கள், அந்தந்த கோட்சாரப்படி இருப்பர்.

Advertisment

இந்த வருடம், தனுசு ராசியில் சூரியன் மட்டுமல்லாது, கூடவே செவ்வாய், சுக்கிரன், புதன் எனும் கிரகங்களும் உள்ளனர். வாக்கியப்படி, சனி கும்ப ராசியில் உள்ளார் குரு, வக்ரகதியில் மிதுன ராசியில் அமர்ந்து உள்ளார்.

2026 புது வருடத்தன்று சந்திரன் தனது ரோகிணி நட்சத்திரத்தில் ரிஷப ராசியில் உச்சமாக நிற்பது, மிக நல்ல கோட்சாரமாகும். 

Advertisment

2026-ஆம் வருட பொது பலன்கள்

பொது பலன்கள் எனும்போது, காலபுருச தத்துவத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்படி, முதல் வீடு உலக மனிதர்களை குறிக்கும்.

இந்த வருடம், அனேக மனிதர்கள், தானம், தர்மம் என நேர்வழியில் செலவளிப்பார்கள். இதற்கு காரணம் நல்ல பணவரவு இருக்கும். இன்னொரு காரணம், பெரும் பணவரவு கணக்கை, வெள்ளை பணமாக மாற்றவும், வருமானவரிக்காவும், தர்ம புண்ணிய காரியங்கள் செய்வர். 

இந்த வருடம் செல்வ செழிப்புமிக்க வருடமாக அமையும். இதற்கு காரணம், காலபுருசனின் 2-ஆம் வீட்டில் சந்திரன் உச்சமாக உள்ளார். தன் ஸ்தானத்தில் ஒரு கிரகம் உச்சமாகும் கோட்சார நிலையில், இந்த வருடம் பிறப்பதால், நிச்சயமாக, தன வரவு, செல்வ பெருக்கம் அதிகமிருக்கும். இது வீடு, வாகனம், வயல், தோட்டம், நீர் வகையறா, பால் பொருட்கள் அரிசி போன்ற இனங்கள்மூலம் நல்ல பணவரவு மேம்படும். அதிலும் இந்த வருடம் குறிப்பாக, பெண்கள் அதிகம் சம்பாத்தியம் அடைவர். அதிலும், வயதான பெண்களின் பணவரவு அதிகரிக்கும். கல்வி, விவசாயம், மீன் சார்ந்த பெண்கள், அதிக வருமானம் காண்பர். கலைத்துறையிலும், பெண்களின் வருமானம் உயரும். மேலும் வாக்குமூலம் சம்பாதிக்கும் பெண்களின் சம்பளம் மிக உயரும். கலைத்துறையில் டப்பிங் கலைஞர்கள் பெருமை பெறுவர்.

ஆக இந்த 2026-ஆம் ஆண்டு, பெண்களின் பெருமைக்குரிய சிறப்பு ஆண்டு என்றே சொல்லலாம். 

இந்த புதுவருடம் கல்வி விஷயத்தில் மாற்றமும், ஏற்றமும் பெறும். பள்ளிக் குழந்தைகளின் கல்வியிலும், உணவு விஷயத்திலும் சிறப்பு கவனமும், நல்ல திட்டமும் ஏற்படுத்தப்படும். நிறைய அம்மாக்கள், கையில் நல்ல பணபுழக்கம் இருக்கும். நிறைய பெண்கள் வீடு வாங்குவார்கள். பெண்கள் பெயரில், வயல், தோட்டம் பற்றிய பத்திர பதிவு நடக்கும். வெள்ளி விலை உயர்ந்து, முதலிடம் பிடிக்கும். 

நிறைய குழந்தைகள் போட்டி, பந்தயம் விளையாட்டு, பொழுதுபோக்கு விஷயம் என கலந்துகொண்டு, பரிசு, பத்திரம் பெறுவர். சில மாணவ குழந்தைகள் பண்ட மாற்று முறையில் வெளிநாடு சென்று பயிற்சி பெறுவர்.

நிறைய மக்கள், தங்கள் பூர்வீக வீடு, நிலத்தை ஒத்திக்குவிடுவர். பூர்வீக, குலதெய்வக் கோவிலின், மடப்பள்ளி எனப்படும் பிரசாதம் தயாரிக்கும் அறையை, சீர்செய்து கொடுப்பர்.

மக்கள் பித்தளை பொருள்மீது ஆர்வம் கொள்வர். அதுபோல் பழைய உணவு முறையான பழையதும், வெங்காயமும் பலரால் மிக விரும்பப்படும். சனி பார்வை 5-ஆமிடத்திற்கு கிடைப்பதால் இவ்விதம் கூறப்பட்டது. 

நிறைய மக்கள் தங்கள் வேலையை மாற்றுவார்கள். இந்த வேலை மாறுதல் என்பது குறுகிய தூரத்திலும் அமையும். அல்லது வெளிநாட்டிற்கு செல்வது அல்லது வெளிநாட்டிலிருந்து இங்கு வருவது- திரும்புவது என்றும் இருக்கும். நிறைய ஜனங்களுக்கு வேலை கிடைத்துவிடும். 

உலகில் நிறைய, மாறுதல்கள், நல்லவிதமாக நடக்கும். அது உலகின் அனைத்து தளங்களிலும் எதிரொலிக்கும். குறிப்பாக வெளிநாட்டு விஷயங்களில் இருந்துவந்த சங்கடங்களும், சச்சரவுகளும் நல்ல முடிவுக்கு வரும்.

தங்கத்தை குறிக்கும் குரு பகவான், பித்தளையை குறிக்கும் புதன்; கிரகத்தோடு பரிவர்த்தனை ஆகியிருக்கிறார். இதில் இருவித பலன் நடக்கக்கூடும். தங்க விலையேற்றத்தால், தங்கத்தோடு, பித்தளையையும் சேர்க்கக்கூடும். அல்லது தங்கம் விலை குறையக்கூடும். இந்த வருடம், குருபகவான் அதிக கிரகங்களின் பார்வையில் உள்ளார். இதனால் அவரின் பலம் கூடுமா அல்லது பலமிழந்து போவாரா என்பதை அவரே அறிவார். 

இந்த வருடம் சந்திரன், தனது சுய சாரத்தில் உச்சமடைகிறார். எனவே இது பெண்களின் ஆண்டு என்றே சொல்லலாம். பணச் செழிப்பும் பரவலாகும். இதனால், சாந்தமான அம்பிகையை வணங்க வளம் பல பெறலாம்.

அதிகிரக கூட்டணிக்காக, மக்கள் கோளறு பதிகம் பராயாணம் செய்யுங்கள். கும்பகோணம் பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நவகிரகங்களுக்கு இடையே நந்தி உள்ளார். இவரை வணங்கினால், நவகிரகங்களும் நன்மை செய்வர். 

இந்த வருடம் சிவபெருமானையும் அம்பாளையும் வணங்க, நன்மைகள் பெருகும். 

மேஷம்

மேஷ ராசி காலபுருசனின் முதல் ராசி. இது 30 டிகிரிவரை உள்ளது. இதன் அதிபதி செவ்வாய். இது ஒரு நெருப்பு ராசி. ராசி அதிபதி செவ்வாயும் ஒரு உக்ரமான கிரகம்தான். இங்கு சூரியன் எனும் நெருப்பு கிரகம் உச்சமடையும். எனவே எப்போதும் மேஷ ராசியார், அடுப்புமேல் உட்கார்ந்து இருப்பதுபோல், ஒருவித கொதி நிலையில் இருப்பர். இது ஒரு வீரத்துக்குரிய ராசி. எனவேதான் நிறைய மேஷ ராசியார் சீருடை பணியில் இருப்பர்.

இந்த ராசியில் உள்ள அஸ்வினி நட்சத்திரம் மருத்துவத்தைக் குறிக்கும். எனவே மேஷ ராசியார், அறுவை சிகிச்சை நிபுணர்களாக திகழ்வர்.

வசதி, வாய்ப்பு உள்ளவர்கள் தீப்பெட்டி, பட்டாசு போன்ற வகையில் தொழில் செய்தால், முதன்மை பெறமுடியும்.

இது மலையைக் குறிக்கும் ராசி. மலை சார்ந்து வேலையும், மலை சார்ந்த தெய்வமும் ஆகிவரும். இங்கு சூரியன் உச்சமடைவதால், அரசு சம்பந்த நன்மை கிடைக்கும்.

2026-ஆம் வருடப்பிறப்பு கோட்சாரம், உங்களின் 4-ஆம் அதிபதியான சந்திரனை உச்சமாக்கி இருக்கிறது. 

குருவின் பார்வை, உங்கள் ராசியாதிபதி செவ்வாய்க்கு கிடைக்கிறது. மேலும் குரு உங்களின் 7-ஆமிடம், 9-ஆமிடம் 11-ஆமிடம் இவற்றை பார்த்து செழிக்க செய்கிறார்.

சனி- உங்கள் ராசி, 5-ஆமிடம், 8-ஆமிடம் இவற்றைப் பார்க்கிறார்.செவ்வாய், உங்களின் 12, 3, 4-ஆமிடங் களைப் பார்க்கிறார்.

இந்த வருடம் எந்த ராசிக்காரன் எப்படி போனாலும் சரிதான். உங்க காட்டுல பண மழைதான். சும்மா கூரையை பிச்சுகிட்டு கொட்டும். வீடு விஷயம்மூலம் பணவரவு உண்டு. அதற்கு உங்கள் மனைமூலம் பணம் வரும் வாய்ப்புள்ளது. அல்லது உங்களின் அடுக்குமாடி குடியிருப்புகள்மூலம் பணம் பதிவு ஆகும். நீங்கள் வாங்கிய வீட்டை, வாடகைக்கு விடுவதால் வாடகைப்பணம், கைபேசி அக்கவுண்டில் சேரும்.

பணவரவு, உங்களின் பூர்வீகம் தர வாய்ப்புண்டு. உங்கள் வாக்கு ஒருவித ஈர்ப்புத் தன்மையுடன், ஆகர்ஷிக்கும்விதமாக அமையும். இதனால் பேச்சைக்கொண்டு தொழில் நடத்துபவர்கள் நன்மை காண்பர்.

உங்களில் சிலரின் கிணற்றுத் தண்ணீர் தேனாக இனிக்கும் அளவிற்கு சுவையாக மாறும். எனவே தண்ணீரை விற்கும் பிஸினஸ்  ஆரம்பித்துவிடுவீர்கள்.

குரலின் மேன்மை, சிலரை பாடகி, பிண்ணனி குரல் கொடுப்பது என ஏதோ ஒரு தொழிலை கையில் கொடுக்கும். ஏற்கெனவே பாடர்கள் போன்றோர் ஒரு நல்லதிர்ஷ்டம் பெறுவர்.

மனை, வீடு, வயல், தோட்டம், இவை வாங்க இயலும்.

மேஷ ராசி மாணவர்கள், ஆரம்பக் கல்வி, உயர்கல்வி, தொழில் கல்வி, ஆராய்ச்சி படிப்பு என இவற்றை நல்ல ஆர்வத்தோடு கற்க இயலும். சிலர் கல்வியின் பொருட்டு வெளியூர், வெளிநாடு என இடம் பெயர்வர் சில மாணவர்கள் கல்வி கற்று முடிக்கும் வேளையில், வேலையும் பெறுவர்.

சில இளைய உடன்பிறப்புகள் திருமணமாகி இடம்பெயர்வர். நல்ல பணியாள் கிடைப்பர். கைபேசியை கொண்டு தொழில் புரிபவர்கள் நல்ல வளமையும் வீச்சான தொடர்பு நிலையும் காண்பர்.

உங்கள் வாழ்வு நிலை நன்றாக இருப்பதால், பிறரை நக்கலடித்து கேலி செய்து, வம்பு பேசி மகிழ்வீர்கள்.

உங்கள் தாயாருக்கு பெரிய நன்மை கிடைக்கப் போகிறது. உங்களில் சிலரின் தந்தை அலைச்சலுக்கு ஆளாவார். சிலர் வீட்டில் கிணறு தோண்டும்போது அல்லது வீட்டு அஸ்திவாரம் அமைக்கும் போது, வெள்ளிக்காசுகள் புதையலாக கிடைக்கும்.

சிலர் வாரிசு யோகம் பெறுவர். சிலர் பேரன்- பேத்தி பெறுவர். சிலரின் வாரிசுகள் வேலை விஷயமாக வேறிடம் நகர்வர். உங்களில் சிலர் காதல் எனும் விஷயத்தை ஆரம்பிக்கலாம். உங்களின் சிலரின் பெண் வாரிசுகள், காதலில் மயக்கம் கொள்ளலாம். ஆனால் மேஷ ராசியில் எந்த வயதில் காதலில் ஈடுபட்டாலும், காதல் பிரிந்துவிடும்.

சினிமா கலைஞர்கள் மிக நல்ல நிறைய வாய்ப்பு பெறுவீர்கள். எனினும் இந்த அதிர்ஷ்டத்தின் திருஷ்டியா என என்னவொன்று சொல்லமுடியாத, ஒரு இடைஞ்சல் உண்டாகும். அது உடல் நலக்குறைவாக இருக்கலாம். அல்லது நம்பிக்கைத் துரோகமாக இருக்கலாம். இணையின் பிரிவாக இருக்கலாம். சில அபாண்டமான குற்றச்சாட்டை சுமக்க நேரிடலாம். எனினும், நீங்கள் அதில் இருந்து மீண்டு, தொடர்ந்து உங்கள் வேலையைத் தொடர்வீர்கள் என்பது மிகப்பெரிய ஆறுதலாகும்.

பங்கு வர்த்தகத்தைப் பொறுத்தவரை, ஒரே இடத்தில், பணத்தை முதலீடு செய்யாதீர்கள். நிறைய பிரித்து, பிரித்து, கொஞ்சமாக பங்குகளை வாங்குங்கள். ஏனெனில் மேஷராசியாருக்கு இவ்வருடம் பங்கு வர்த்தகம், ஏற்ற- இறக்கமாக அமையும். ரொம்ப ரிஸ்க் எடுக்க வேண்டாம்.

மேஷ ராசியினருக்கு, நீங்கள் சும்மா இருந்தாலும், இந்தாப்பா கடன் வாங்கு என வாலண்ட்ரியாக வந்து கடன் கொடுப்பர். நீங்களும் அட, சல்லிசா கடன் கொடுக்கிறானே, வாங்கி கொள்வோம் என கடன் வாங்கினால், கதை கந்தல்தான். கடன் பெருகிவிடும். திண்டாடிவிடுவீர்கள். 

இந்த வருடம், உங்களுக்கே பணவரவு நன்றாக இருப்பதால், வருகிற வருமானத்திற்குள், தேவைப்பட்ட பொருட்களை வாங்கி கொள்ளுங்கள்.

உடம்பில் நரம்புகள் இழுத்துக் கொள்வது போலவோ அல்லது பேச்சுக் குளறுவது போலவோ, நடக்கும் போது விழுந்துவிடுவது மாதிரி சிறு மயக்கம் வருகிற மாதிரியோ, தெரிந்தால்- உணர்ந்தால், உடனே வைத்தியரிடம் சென்று விடவும். ஏனெனில் நோய் பெருக்கமாவதற்குரிய, கிரக அமைப்பு தென்படுகிறது.

உங்களில் அனேகம் பேர், அரசு வேலை, அரசு சார்ந்த தனியார் வேலை கிடைக்கும். பண விஷயங்கள், பயணங்களின்போது சிறு வம்பு, வழக்கு வந்து விலகும்.

இந்த வருடம் காதல் திருமணம் நடக்கும். ஆனால் அந்த கல்யாணம் நடக்கும்முன்பு, அடிதடி, போலீஸ், அழுகை என எல்லாம் அரங்கேறியபிறகு கல்யாணம் தம்கட்டி நடக்கும். ஏன் தான் லவ் பண்ணினோமோ எனும் நினைப்பு வந்து, வந்து போகும்.

திருமணம் ஆனவர்களுக்கும், கடன் சார்ந்து, இளைய சகோதரம் விஷயமாக மற்றும் இன்ஷியூரன்ஸ், முதலீடு, வீட்டு விசேஷத்துக்கு எம்பூட்டு மொய் செய்வது, வாரிசுகளின் லவ் மேட்டர், உங்கள் மாமனார் என இதனை அடிப்படையாக கொண்டு, அவ்வப்போது, ஃபைட் வரும். வந்து போகும். சண்டை போட்டு சமாதானமாவீர்கள். சமாதானம் ஆனபிறகு, புது சண்டை போடுவீர்கள். அட, இது வழக்கமா உள்ளதுதான். இந்த வருசத்துக்குன்ன புதுசா என்கிறீர்களா சரி. ரைட் வுடு.

இந்த புது வருட கோட்சாரத்தில் சனிபகவான், உங்கள் 8-ஆமிடத்தை எட்டி பார்க்கிறார். சனி, 8-ஆமிடத்தை பார்ப்பது மட்டும் ஓகேதான். மற்ற இடத்தை பார்த்தால் இம்சைதான். எனவே மேஷ ராசி பெண்களுக்கு மாங்கல்ய பலம் கிடைக்கும். ஆண்களுக்கு, ஆயுள் விருத்தியுண்டு. மேஷ ராசியினர், இந்த புது வருடத்தில் கொஞ்சம் உடம்பு சரியில்லை என்றாலும், ஆயுள் பங்கம் ஏற்படாமல் பாதுகாப்பு உண்டாகும்.

சிலருக்கு தந்தைக்கு மருத்துவச் செலவு ஏற்பட்டாலும் சரியாகிவிடும். தெய்வ பூஜையின்போது, கொஞ்சம் இடையூறு ஏற்படும். சில மாணவர்கள், ஆசிரியரிடம் சற்று வம்பு வளர்ப்பர். ஆராய்ச்சி கல்வி, வெளிநாட்டு பயணம் இவற்றில் சற்று சங்கடம் ஏற்பட்டு பின் சரியாகும். குலதெய்வ வழிபாட்டில், உங்கள் பங்காளிகள் வீண் சண்டைக்கு வருவர்.

உங்களின் சில முதலாளிகள் அல்லது எச்.ஆர்.ஓ. சிலசமயம் நல்லவிதமாகவும், பலசமயம் கொடூரமாகவும் நடந்துகொள்வர்.

இந்த வருடம் தொழில் நன்றாக நடக்கும். மின்சார பொருட்கள், கெமிக்கல் பொருட்கள், வட்டி சம்பந்தம் மருந்து கடை, மளிகை வியாபாரம் என இந்த இனங்களில் லாபம் காணலாம்.

உங்களில் நிறைய மேஷ ராசியினர் புது தொழிலை, முதலீடு செய்து ஆரம்பித்து விடுவீர்கள். உங்கள் சொந்த தொழிலில் வெளிநாட்டு சம்பந்தம், இஸ்லாமிய பெருமக்கள் சம்பந்தம் இருப்பதுபோல் அமைத்துக் கொள்ளுங்கள்.

மேஷ ராசி அரசியல்வாதிகளுக்கு, இந்த 2026 புது வருடம் நன்றாகவே அமையும். ஏனெனில், வாக்கியப்படி, உங்களின் 11-ஆம் அதிபதி, கும்பத்தில் ஆட்சி மற்றும் குரு பார்வையுடன் உள்ளார். எனவே மேஷ அரசியல்வாதிகளின் வெற்றி என்பது, அவர்கள் எவ்வளவு செலவளிக்கிறார்களோ, அந்த அளவு கிடைக்கும். மேஷ ராசி அரசியல்வாதிகளின் வெற்றி என்பது, இவர்கள் எவ்வளவு அண்டர் கிரவுண்ட், கேப் மாரித்தனம் பண்ணுகிறார்களோ, அந்த அளவு கிடைக்கும். ஆக மேஷ ராசி அரசியல்வாதிகளின் வெற்றி என்பது இவர்களின் கையில்தான் உள்ளது.

மேஷ ராசி சமையல் கலைஞர்களும், உழைப்புக்கேற்ற பலன் பெறுவர். விவசாயிகள், நீர் சார்ந்த வேளாண் பொருட்களால், நல்ல வருமானம் பெற இயலும்.

மேஷ ராசியினர், இந்த வருடம் பயணம் சார்ந்து, எந்த அட்டவணை போட்டாலும், அதில் கொஞ்சம் குளறுபடிகள் ஏற்பட்டுவிடும். சிலசமயம் டிக்கெட் வாங்கிய நாளில், பயணம் செல்ல இயலாமல் போய்விடும். அல்லது ஏதோ ஒரு காரணத்தால், ஆன்மிக பயண தேதியை அவர்களே மாற்றி அமைப்பர். எனவே பயணம் சார்ந்து, அது உள்நாடு அல்லது வெளிநாட்டு பயணமாக இருக்கட்டும். கொஞ்சம் இம்சை தரும்.

கவனம் தேவை: இந்த வருடம், முன்பின் தெரியாத நபர்களிடம் கடன் வாங்குவதோ, மனஸ்தாபம் கொள்வதோ, அவர்களுடன் எங்காவது பயணம் செய்வதோ கூடாது. விளைவுகள் விபரீதமாகி விடக்கூடும்.

பரிகாரம்: திருவண்ணாமலை, அருணாச்சலேஸ் வரரையும், உண்ணாமுலை அம்மனையும் வணங்கவும். திருச்செந்தூர், சென்று வழிபாடு நடத்துவது நல்லது. கந்தசஷ்டி கவச பராயாணம் நல்லது.


ரிஷபம்

ரிஷப ராசி என்பது 30 டிகிரியிலிருந்து 60 டிகிரிவரை அமைந்துள்ளது. இதன் அதிபதி சுக்கிரன். இங்கு சந்திரன் உச்சமாகும். இது ஒரு பெண் ராசி. மேலும் நில வகையைச் சார்ந்தது. எனவே இந்த ராசி தாய்மைத் தன்மை நிறைந்த ராசி. பொறுமையாக, எந்த விஷயத்தையும் கைகொள்வர். இந்த ரிஷப ராசியில் எந்த கிரகமும் நீசம் பெறாது. இதுவே இந்த ராசியாரின் பெருந்தன்மையான குணத்தைக் காட்டும். இது காலபுருசனின் 2-ஆம் வீடு. ஆதலால், இந்த ராசியினர் அனேகமாக பணம் புழங்கும் வேலை, உணவு தயாரிக்கும் வேலை, வாக்குமூலம் சம்பாதிக்கும் வேலை இவற்றில் தன்னிச்சையாக ஈடுபடுவர். இதன் அதிபதி சுக்கிரன். ஆதலால் கலைத்தொழில், அழகுகலை தொழில், தையல் தொழில் இவற்றில் ஈடுபாடு கொள்வர். இந்த ரிஷப ராசி தொழுவம், மேய்ச்சல் நிலத்தை குறிப்பதால், இவர்களில் பெரும்பாலோர் மாடு வளர்ப்பதில் வெகு அக்கறையாக இருப்பர்.

ரிஷப ராசி ஜாதகர்கள், இந்த 2026-ஆம் வருடத்தில், எதிர்பாராத நன்மைகளை பெறப் போகிறீர்கள். இதற்கு முக்கிய காரணம் உங்களின் குயுக்தியான, சுறுசுறுப்பான, பலமான ஞாபக சக்தியாக இருக்கும். உங்களின் சிந்தனைகளின் வேகம், காற்றைப்போல் ஓரிடத்தில் நிற்காமல். நாலா திக்குகளிலும் அலைந்து பாயும். இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில், அது நல்லதனமாகவும் இருக்கும். எதிர்மறையாகவும் இருக்கும். இந்த வருடம் உங்கள் குணம், நடவடிக்கையும் சற்று வேறுபாடாக அமையும்.

இந்த வருடம் பணவரவு மிக நன்றாகவே இருக்கும். நீங்கள் வாழ்வின் எந்த தளத்தில் இருப்பினும், எதிர்மறையான பணவரவு எக்கச்சக்கமாக கிடைக்கும். இதனால் ஒரு வேண்டாத கெத்து, மிதப்பு வந்துசேரும்.
 
உங்கள் பேச்சு, ஆளுக்கு தக்கவாறு மாறும். ஒருத்தரிடம் காரியம் ஆக வேண்டும் எனில் ஒரு மாதிரியாகவும், உதவி வேண்டும் என்று யாசிப்பவர்களிடம், வேறு மாதிரியாகவும் பேசுவீர்கள்.

உங்களுக்கு வரும் பணத்தை பூர்வீக இடத்தில் ஒளித்து வைத்துவிடுவீர்கள். அல்லது மந்திரி யாரிடமாவது கொடுத்து வைப்பீர்கள். உங்கள் வாரிசுகளிடம் கை மாற்றிவிடுவீர்கள். பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்வீர்கள். சிலர் சினிமா டி.வி. தொடர்கள் எடுக்க மறைமுக பண பரிவர்த்தனை செய்வர். உங்களுக்கு கிடைக்கும் அபிரிதமான பண பெருக்கத்தை வெளியில் சொல்ல முடியாமல் மறைக்க நேரிடும்.

ரிஷப ராசி குழந்தைகளுக்கு, தங்கை பிறக்கும் வாய்ப்பு இந்த வருடம் கிடைக்கும். நல்ல பெண் பணியாளர் கிடைப்பர். உங்கள் தாய், மிக உதவியாக இருப்பார். நீங்கள் மீனவராக இருந்தால், மீன்பிடி படகுகள் வாங்க முடியும்.

உங்களில் நிறையபேர், தண்ணீர் சார்ந்த, குத்தகை பெறுவீர்கள். கடலில் இருக்கும் மீனவர்களுடன் தகவல் பரிமாற்றம் செய்யும் பணி கிடைக்கும். 

ரிஷப ராசி மாணவர்கள், இந்த வருடம் ரொம்ப கஷ்டமான, சிக்கலான பாடப் பிரிவை எடுக்கவேண்டாம். ஏனெனில் உங்கள் புத்திசாலித்தனம், மூளை சமயத்தில் மறந்து தொலைத்துவிடும். விடைகள் தெரியாமல் திண்டாட வேண்டியிருக்கும். ஆராய்ச்சி மாணவர்கள். தீஸிஸ் சமர்பிக்கும் நிலையில் உள்ளவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

வீடு கட்டுபவர்கள், கொஞ்சம் சிரமம் வந்து சரியாகும். போர் எடுத்தால் தண்ணீர் வருவது சற்று திண்டாட்டம் ஆகும். உங்கள் பெற்றோர், அவ்வப்போது சிறுசிறு உடல்நலக் குறைவை சந்தித்தாலும், அவை பின் சரியாகிவிடும்.

உங்கள் வாரிசுகளில் சிலருக்கு திருமணம் நடக்கும். இந்த திருமணம், உங்கள் வாரிசுகளின், குணத்தை சற்று மாற்றிவிட வாய்ப்புள்ளது. பூர்வீக அசையா சொத்துகள் வீடு, மனை, வயல், தோட்டம் போன்றவை சற்று இம்சை தந்து பின் சரியாகும்.

கலைஞர்கள், நல்ல வாய்ப்பு, வேலை வாய்ப்பு அதிகரித்தாலும், அதற்குரிய பணம் வருவதற்குள் பெரிய கஷ்டமாகிவிடும்.

இந்த வருடம் காதல் விஷயங்கள் வேண்டவே வேண்டாம். உங்கள் குடும்ப உறுப்பினர்களே, உங்களை ஆய்ந்து அலசி, பிழிந்து எடுத்துவிடுவர்.

இந்த வருடம் கிடைக்கும் அதிக பண வரவைக்கொண்டு, உங்கள் கடனை அடைத்துவிடுவீர்கள். சரி, கடனை எல்லாம் தீர்த்தாகிவிட்டது. அதனால் மேலும் புது கடன் வாங்கலாம் என, கடன் வாங்கி விடாதீர்கள். கடன் பெருகிவிடும்.

உங்களுக்கு தனியார் வேலை கிடைத்தாலும், அது நிலைத்து இருக்குமா, பாதியில் வேலையை விட்டு விரட்டி விடுவார்களா எனும் பயம் மனசில் இருந்துகொண்டே இருக்கும்.

சிலர், சிறைச்சாலை செல்வது தவிர்க்கப்படும். நோய் தாக்கமும் கட்டுக்குள் இருக்கும். பரம்பரையாக வரும் நோய்க்கு உரிய மருந்துகளை, ஒழுங்காக எடுத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் வேலை செய்யும் இடத்தில் ஒரு பிரச்சினை வந்து பின் சரியாகும். இந்த வருடம், ரொம்ப வேலைப்பளு உண்டாகும். இளம் பெண்களிடம் கவனமாக இருக்கவேண்டும்.

இந்த வருடம், திருமணத்திற்கு காத்திருப்போருக்கு திருமணம் முடிந்துவிடும். கல்யாணத்தில், கொஞ்சம் சண்டைவரும். இதற்கு வரும் மாமனார் காரணமாக இருப்பார்.

இந்த ரிஷப ராசிக்காரர்களில், யாருக்கு எல்லாம் இந்த வருடம் திமணம் நடக்கிறது. அவர்கள், தாலி கட்டிய கொஞ்ச நேரத்தில், ஒரு கோபூஜை நடத்திவிடுங்கள். அல்லது காலையில் கோபூஜை  நடத்திவிட்டு தாலி கட்டிக்கொள்ளவும். புது வருடபிறப்பு கோட்சாரம், இவ்விதமாக கூறுகிறது.

ஏற்கெனவே, கல்யாணமான தம்பதிகள். மாங்கல்யம் சார்ந்த பூஜை செய்து கொள்ளவும். பயணங்களில் தாலியை பத்திரமாக பார்த்துக்கொள்ளவும். 

இந்த வருடம், நீங்கள் அன்னதானம் செய்ய விருப்பம் இருந்தால், அதற்குண்டான பணத்தை, தகுந்த நபர்களிடம் கொடுத்து விடவும். ஏனெனில் அன்னதானம் செய்யும்போது, வில்லங்கம வர வாய்ப்புள்ளது.

இதுபோல் சமையல் கலைஞர்களும் சற்று சூதனமாக இருத்தல் நலம். கோவிலுக்கு போனால், பணம் திருட்டுப் போக வாய்ப்புள்ளது. தர்மம் சார்ந்த விஷயங்களில் கவனமாக இருக்கவேண்டும்
.
உங்கள் சொந்தத் தொழிலில், லாபத்துக்கு குறைவிருக்காது. லாபம் வரும் வழிதான் கொஞ்சம் தகிடுதத்தமாக இருக்கும். தொழில் சுறுசுறுப்பாக நடக்க, கண்டிப்பாக, உபரி பணம் கொடுத்தால்தான்  ஆச்சு என்பர். சிலர், வேண்டுமென்றே, உங்களுக்கு வரவேண்டிய தொகையை, லாக் செய்துவிடுவர். அதை வரவழைப்பதற்குள் போதுமடா சாமி என்றாகிவிடும். அரசியல்வாதிகளும் பண விஷயத்தில் அழும்பு பண்ணுவர்.

நீங்கள், ஏற்றுமதி- இறக்குமதி தொழில் செய்பவராக இருந்தால், உங்கள் மனநிலையில் ஒருவித தீர்க்கமான உறுதியை எடுக்கவேண்டும். அதாவது பணம் வந்தால் சந்தோஷம். அதுவே கால தாமதமாக வந்தாலும் சந்தோஷம்தான் எனும் முனிவரின் எண்ணத்தோடு இருப்பின் மன அழுத்தம் வர வாய்ப்பிருக்காது. 

ரிஷப ராசி அரசியல்வாதிகள். ஒரு மந்திரி பதவிக்காக, எவனையாவது சம்பவம் பண்ணினாலும், குத்தமில்லை எனும் ஆவேசம் கொண்டு திரிவர். இதற்காக பணம் செலவழிக்க, அலைய தயங்கவே மாட்டார்கள். மனதிற்குள் ஆயிரம் வன்மம் இருந்தாலும், வெளியே சமாதான புறாவாக வலம்வருவர். இது இவர்களுக்கு எளிதாக கைகூடும். இதற்கு காரணம், புது வருட பிறப்பு ஜாதகப்படி, ரிஷபத்தாருக்கு 6-ஆம் அதிபதியும், 12-ஆம் அதிபதியும், 8-ஆமிடத்தில் மறைகிறார்கள். எனவே இவர்கள் செய்யும் தில்லுமுல்லுகள், மறைத்து வைக்கப்படும்.

இவர்கள் நிறைய செலவு செய்ய அசைப்பட்டாலும், அவை ஒருவிதமாக கட்டுப்படுத்தப்படும். வெளியூர், வெளிநாடு பயண திட்டம் வழுத்தாலும், அது அவ்வளவாக சரி வராது. முதலீடுகளை, ஒருமுறைக்கு நாலுமுறை யோசித்து செய்யவேண்டும்.

கவனம் தேவை: பூர்வீக விஷயம், பங்கு சந்தை முதலீட்டில் ரொம்ப கவனம் தேவை. கலைஞர்கள், பண விஷயத்தில், முதல் முறையிலேயே, பேசி உறுதி செய்துகொள்ளவும். இல்லையெனில் வீண் வாக்குவாதம் உண்டாகும். முக்கியமாக சாப்பாட்டு விஷயத்தில் கட்டுப்பாடாக இருங்கள். ஃபுட் பாய்சன் அரணிக் கோளாறு, வாய்ப்புண் வரவழைக்கும்.

பரிகாரம்: காஞ்சி காமாட்சியம்மனை வணங்கவும். திருக்கோஷ்டியூர் சென்று வணங்கவும். 

மிதுனம்

மிதுன ராசி என்பது 60-யிலிருந்து 90 டிகிரி வரை பரவியுள்ள ராசி. இதன் அதிபதி புதன் ஆவார். புதன் சற்று சுறுசுறுப்பான கிரகம்.  அவர் இருக்கும் மிதுனம் காற்று ராசி. எனவே இவர்களின் பரபரப்புக்கு பஞ்சமே இராது. சமயத்தில் அண்டாவுக்குள், கை நுழையாத அவசரம் கொள்வர். இவர்களின் ராசியாதிபதி புதன் உச்சமானால், நல்ல கல்வி மேன்மை இருக்கும். நிறைய வீடுகளை சொந்தமாக வைத்திருப்பர். அந்த வீடுகளில் தண்ணீர் வளமாக இருக்கும். மேலும், இந்த ராசியாதிபதி புதனின் உச்சம், இவர்களின் வாழ்க்கைச் செய்யும். இவர்கள், தங்கள் தாயாரின்மேல் மிக அன்புடன் நடந்துகொள்வர். இந்த ராசியாதிபதி புதன் உச்சமானால், இவர்களை திருமணம் செய்தபிறகு, இவர்களின் வாழ்க்கைத்துணை தொழிலில் மிக அபிவிருத்தி காண்பர்.


மிதுனத்திற்கு புதுவருட பலன்கள்

பிறக்கும் 2026-ஆம் வருடம் உங்களுக்கு மிக நல்ல பலன்களை கொடுக்கப்போகிறது.

இந்த புது வருடம் பிறந்தவுடன், ஆட்கள் பழக்கம் அதிகரிக்கும். மக்கள் தொடர்பு தொடரும். நிறைய மனிதர்களை சந்திப்பு நடத்தி, பழகுவீர்கள். 

முக்கியமாக நிறைய மிதுன ராசியாரில், திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமணம் நடக்கும். அதிலும் குறிப்பாக, வரன் வீட்டார் அவர்களே தேடிவந்து, திருமணம் ஏற்பாடுகளை முன்னின்று நடத்துவர். சில வீடுகளில் பெண் கொடுத்து, பெண் எடுக்கும் கல்யாணமும் நடக்கும். சில வீடுகளில் மருமகள்- மருமகன் வரும் வைபவமும் அரங்கேறும். 

இந்த வருடம் பண வரவு சிறப்பாக இருக்கும். இந்த ஓவர் பண பெருக்கம் உங்களை அதிரிபுதிரி ஆக்கிவிடும். அதனால் விலை அதிகமான பொருட்களை, தேவையில்லாமல் வாங்கி காசை கரைப்பீர்கள். ஜாலிடூர் போகிறோம் என்று, வந்த பணத்தை வழியெல்லாம் இரைத்துவிடுவீர்கள். இவ்வளவு பணவரவு வரும்போது வாய் சும்மா இருக்குமா? சவடால் பேச்சு பேசி, குடும்பத் தினர், தெரிந்தவர்களை டெலிட் பண்ணி விடுவீர்கள். ரொம்ப பேசுகிறான் என்று உறவுமுறைகள், மூஞ்சியை தூக்கி வைத்துக்கொண்டு, விலகிவிடுவர். வரும் பணத்தை, வெளியூர், வெளிநாடு, வயல் தோட்டம் மற்றும் ஒரு குடிநீர் தயாரிப்பு நிறுவனத்தில் முதலீடு செய்வீர்கள். ஆரம்பக்கல்வி மிக நல்ல பள்ளியில், ரொம்ப செலவில் கிடைக்கும். கண்ணிற்கு ரொம்ப செலவு செய்து, கண் கண்ணாடி, லென்ஸ் வாங்கி மாட்டிக் கொள்வீர்கள். சிலர் பல் சம்பந்தமாக பெருமை செலவு செய்வீர்கள். உங்களில் சிலரின் குடும்பம் வெளியூர், வெளிநாடு செல்லும்.

உங்கள் இளைய சகோதரனின் வேலை அல்லது திருமணம் சம்பந்தமாக, நிறைய செலவு ஏற்படும். பணியாளர்கள், திருமண விஷயமாக சொந்த ஊர் செல்வதற்காக, பணம் கொடுக்க வேண்டியிருக்கும்.

அரசு, கட்டடம், அரசு குடிநீர் சார்ந்த இனங்களின் வேலை ஒப்பந்தம் கிடைக்கும். இதனால் அதிக வேலை சிரமமும், அதே அளவு லாபமும் கிடைக்கும். உங்கள் மனையை, அரசு சட்டப்படி எடுத்துக்கொண்டி ருந்தால், அது சார்ந்த பணம், முதலீடு வகையில் கிடைக்கும்.

இந்த ஆண்டு மாணவர்கள் தொழில் சார்ந்த கல்வி கிடைக்கும். சில மாணவர்கள் படித்துக்கொண்டே, தொழிலும் கற்றுக்கொள்வர். இதனால் நிறைய தொழில் சார்ந்த மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். வீடு கட்ட அரசுவகை கடன் கிடைக்கும். சிலர் உங்கள் பூர்வீக நிலத்தை, உங்கள் ஊரிலுள்ள உறவினர்களிடமே விற்று விடுவீர்கள்.

விவசாயிகள், தங்கள் சொந்த நிலத்தோடு, குத்தகை நிலமும் எடுத்து, வேளாண்மையை பெருக்குவர். 

விவசாயம் செழிக்க, அரசு அதிகாரிகளின் உதவியை நாடுவர். 

உங்களில் சிலர், மாமியார் குடும்பத்தின் வீட்டையும், உங்கள் வீட்டையும், இடம் மாற்றிக்கொள்ளும் சூழ்நிலை ஏற்படும்.

சிலர் காதல் வசப்படுவீர்கள். அந்த காதல், வீட்டருகே அமையும். சிறு சண்டை, தகராறுக்குப் பிறகு திருமணத்தில் முடியும்.

வாரிசு பிறப்பதற்கு, நீங்களும் உங்கள் வாழ்க்கைத் துணையும், மருத்துவ ஆலோசனை பெறுவீர்கள்.

சினிமா கலைஞர்கள், நிறைய வாய்ப்புக்களையும், அது சார்ந்த அனேக சந்திப்புக்களையும் பெறுவர். டி.வியில் வரும், இவருக்கு பதில் இவர் என்ற நிலை ஏற்படும். சில கலைஞர்கள், சொந்த படம் எடுப்பீர்கள். கலை சம்பந்த ஒப்பந்தங்களில் கையெழுத்து போடுவீர்கள்.

பங்குவர்த்தக முதலீடு சம்பந்தமாக, அந்த ஏஜெண்ட்டுகளுடன் மீட்டிங் வைத்து, அறிவுரை ஏற்பீர்கள். பொழுது போக்கு துறையினர், அதன் ஏற்பாட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, வாய்ப்பு பெறுவீர்கள். 

மனை வாங்க கடன் வாங்குவீர்கள். சீருடை பணியாளர்களுக்கு அரசு சார்பில் கடன் கிடைக்கும். உங்களில் சிலர் சிறு தூரப் பயண வாகனம், வயல், அடுக்கு மாடி வீடு, உங்கள் மூத்த சகோதரன் சார்பில் கடன் வாங்குவீர்கள். 

அவ்வப்போது, அடிவயிற்றில், உஷ்ணம் சார்ந்து வலி சுண்டி இழுக்கும். உங்கள் தாய்மாமன், அவசரத்துக்கு உதவுவார். சமையல்  கலைஞர்கள், தங்களின் சமையல் பாத்திர பண்டங்களை பத்திரமாக பார்க்க வேண்டும். திருடு போகும் வாய்ப்புண்டு. திருடு போனால், திரும்ப கிடைக்காது.

தந்தையின் உடல்நலனில் கவனம் தேவை. நீங்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டிற்கு கிளம்பி போய், வேறு ஒரு கோவிலை வணங்கிவிட்டு வருவீர்கள். பிறமத வழிபாட்டு ஸ்தலங்களுக்கும் செல்வீர்கள்.

இந்த வருடம் தொழில், மிக நன்றாக நடக்கும் தொழில் பங்குதாரரை அதிகம் சேர்த்துக்கொள்வீர்கள். அல்லது அடிக்கடி மாற்றுவீர்கள். வீட்டை, மாடிஃபை பண்ணுகிறேன் என்று செலவளிப்பீர்கள். இந்த வருடம், இந்த மிதுன ராசியார், பெருமைக்கு மாவிடிப்பார்கள். இவர்களைப் பற்றி, ஊரே பெருசாக பேசவேண்டும் என்று, எதையெதையோ செய்வார்கள். இதன் காரணமாகவே, இவர்களுக்கு வரும் பணம் எல்லாம் செலவாகிவிடும். புது தொழில் தொடங்க எண்ணமுடையவர்கள் தாராளமாக தொடங்கவும்.

இந்த அரசியல்வாதிகள், மிதுன அரசியல்வாதிகள் இந்த வருடம் பண்ணும் அழும்பு தாங்காதுடா சாமி. வீடுவீடாக செல்வதென்ன, பணியாளர்களின் நலன் விசாரிப்பதென்ன, தாய் மார்களின் தாடையை பிடித்து விசாரிப்பதென்ன, சினிமா கலைஞர்களை, கையோடு இழுத்துகொண்டு போவதென்ன, உங்கள் கடனை நான் அடைத்துவிடுவேன் என சத்தியம் செய்வதென்ன, ஓட்டலில் தோசை சுடுவதென்ன என்று சும்மா தூள் பரத்துவார்கள்.

ரைட்டு, நிறைய மிதுன ராசியார் அரசியலில் குதிக்கப்போவது கன்ஃபார்ம்ட், இந்த வருடம், மிதுன ராசியாருக்கு ரொம்ப பண செலவு இருக்கும். அது திருமண செலவு அல்லது பிறரை சந்திக்கும் செலவாக இருக்கும். எனவே கூடியமட்டும், வருகிற பணத்தை, வீடு, வயல் பங்குகள் என முதலீடாக மாற்றிவிடுங்கள். உங்களில் சிலர் சினிமா படம் எடுப்பார்கள்.

கவனம் தேவை: செலவு விஷயங்களில் கண்டிப்பும், கட்டுப்பாடும் தேவை. இந்த வருடம் நிறைய ஆட்களின் பழக்கம், தொடர்பு உண்டாகும். எனவே, அவர்களின் உண்மை தெரிந்து, சிலரிடம் அளவோடு பழக்கம் வைத்துக்கொள்ள வேண்டும். ஆரோக்கியம், உணவு பழக்கங்களில் முன்னெச்சரிக்கை தேவை. வேலை செய்யும்  இடங்களில், உங்கள் முதலாளி மற்றும் எச்.ஆர்.ஓ.க்களிடம் சுமூகமாக போகவும்.

பரிகாரம்: சிதம்பரம் சிவாகாமி அம்மனை வணங்கவும் திருப்பதி சென்று தரிசனம் செய்வது நல்லது.

கடகம்

கடக ராசி, 90 டிகிரியிலிருந்து, 120 டிகிரிவரை பரவி இருக்கும். இதன் அதிபதி சந்திரன். இது ஓர் நீர் ராசி. எனவே இவர்கள் எப்போதும் ஓடிக்கொண்டே இருப்பார்கள். சந்திரன் எனும் கிரகம் தாயைக் குறிப்பது. எனவே, இந்த கடக ராசியார், எப்போதும் தாய் உள்ளத்தோடு பழகுவர். யாரை பார்த்தாலும், முதல் கேள்வி, சாப்பிட்டாயா என்பதாக இருக்கும். இந்த சந்திரன், காலபுருசனின் 2-ஆம் வீட்டில் உச்சமடைவார். எனவே இவர்களின் வருமானம், உணவு மற்றும் பணபரிவர்த்தனை சார்ந்து அமையும். இந்த கடக ராசியில், குரு பகவான் உச்சமடைவதால், பக்தி உணர்வு, கோவில் தரிசனம். தர்ம சிந்தனை என இவை அதிகம் இருக்கும். இங்கு செவ்வாய் நீசமடைவதால், தைரியம் சுத்தமாக இருக்காது. அதுபோல் இளைய சகோதர அனுசரணையும் கிடைக்காது.

கடக ராசிக்கு 2026 புது வருட பலன்

இந்த வருடம், குறிப்பாக கடக ராசி பெண் அரசியல்வாதிகளுக்கு உரியது என்று அடித்துக் கூறலாம். இவர்கள் அரசியலில் மிக உயரிய பதவியை பிடிப்பார்கள். இவர்கள், தாங்கள் என்னவாக வேண்டும் என்ற லட்சியம் கொண்டு, இவ்வளவு நாள் பாடுபட்டார்களோ, அதனை இந்த வருடம் நிச்சயமாக அடைந்தே தீருவார்கள். கடக ராசிக்கு 2-ல் கேதுவும், 8-ல் ராகுவும், சனியும் இருந்தாலும், அதனை தங்களுடைய கடும் உழைப்பால் தட்டி தூக்கிவிடுவர். 

இந்த வருடம், உங்களில் பலர், பேசியே பணம் சம்பாதிக்கும் வேலையில் சேர்வீர்கள் சிலர், அரசியல் கட்சி, பேச்சாளர் ஆகி விடுவீர்கள். அரசியல் பேச்சாளர் ஆன மட்டுக்கும். அநிநியாய பொய் பேசுவது, இல்லாததை இருப்பதுபோல் திரித்து கூறுவது, வீணாக விவாதம் பண்ணுவது, உண்மையாக இருப்பதுபோல் நடிப்பது என மிக சுவாரசியமாக வாழ்க்கையை கொண்டு போவீர்கள். சரி, இவ்வளவு செய்பவருக்கு, பணம் சம்பாதிக்க தெரியாமல் இருக்குமா? கொடுக்கிற பணத்துக்கு தக்கவாறு எதிரியை விளாசி எடுப்பீர்கள்.

இந்த வருடம், கடக ராசி மாணவர்களுக்கு மிக நல்ல வருடம் என்றே கூறலாம். நீங்கள் உயர் கல்வி, கடைசி வருடம் படித்துக்கொண்டு இருக்கும்போதே, உங்களுக்கு, வேலைக்கான ஆர்டர் வந்துவிடும். அல்லது நீங்கள் வெளியூர் அல்லது வெளிநாட்டில், படித்துக் கொண்டே பணிபுரியும் வாய்ப்பு கிடைத்து, வேறிடம் நகர்ந்துவிடுவீர்கள்.

இந்த வருடம் மாணவர்கள், தொழில் சார்ந்த கல்வி கற்பர். அதுவும் கடக ராசி மாணவிகள் மிக நல்ல தேர்ச்சிபெறுவர். அதனால், கடக ராசி மாணவிகள் கஷ்டமான பாடம் என்றாலும், மிக தைரியமாக எடுத்து படியுங்கள். வெற்றி உங்களுக்கே- நிறைய மாணவர்கள், ஆராய்ச்சி கல்விக்கு வெளிநாடு செல்வீர்கள்.

கடக ராசி குழந்தைகளின் தாய், அரசுப்பணி கிடைக்கப் பெறுவர். தந்தை, அலைச்சல் மிகுந்த வேலைக்கு மாறும் சூழ்நிலை ஏற்படும். அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு வாங்க இயலும். வேலைக்கு பயன்படும் அளவில் வாகனம் வாங்குவீர்கள்.

சினிமா கலைஞர்கள், வேலைவாய்ப்பு நிறைய பெற்றாலும், அனைத்தும் ஏனோ அலைச்சல் மிகுந்ததாக இருக்கும். 

இந்த அலைச்சல் மிக சோர்வு தரும். இந்த சோர்வு, சில சமயம் உடல்நல குறைபாட்டை கொடுத்து, ஓய்வும், மருத்துவ தேவையும் எடுக்கும்படி ஆக்கிவிடும். 

பங்கு வர்த்தகம், அது சார்ந்த தொழில் சுறு சுறுப்பாக இருந்தாலும், அதிக முதலீடுகள் வேண்டாம். ஏனெனில் நீங்கள் வாங்கிய பங்குகளில், சில சறுக்கல்கள் வரும்போல் தெரிகிறது. பங்கு வர்த்தகத்தை பொறுத்தவரை, ஒரு கட்டுப்பாடு தேவை.

பழைய வேலைக்கு செல்லும், வாய்ப்பு வந்தால், யோசித்து முடிவெடுங்கள். 

இந்த வருடம் மலம் சார்ந்த பிரச்சினைகள் வருகிறமாதிரி உள்ளது. எனவே முதலிலேயே ஜீரணம் சார்ந்த கட்டுப்பாட்டில் இருக்கவும்.

இந்த வருட காதல், அடிபட்டு, ஓட ஓட விரட்டும். வாரிசுகள், வேலை நிமித்தமாக வேறிடம் செல்வர்.

கடன் எவ்வளவு வாங்கினாலும், அதனை அடைத்துவிடுவீர்கள். அது சரி, அரசியலில், முதன்மை பெறும் போது, கடன் எல்லாம் ஒரு விஷயமாப்பா.

இந்த வருடம் அரசுப்பணி கிடைக்க வாய்ப்புண்டு. எந்த வேலை கிடைத்தாலும். அது கண்ணுக்கெட்டாத தூரத்தில்தான் கிடைக்கும். 

இதுவரையில் உங்கள் மீதிருந்த வம்பு, வழக்குகள் தள்ளுபடி ஆகிவிடும். மக்கள் சேவை செய்யும் நபராக இருப்பின், நிறைய இடம் செல்ல வேண்டி இருக்கும். மனை விற்பனை வழக்கு, பணியாளர்கள் சார்ந்த வழக்கு, உங்கள் இளைய சகோதரன் உங்கள்மீது போட்ட வழக்கு, ஒப்பந்தம், குத்தகை சம்பந்த வழக்கு, தபால் நிலையம் சார்ந்த வழக்கு, செய்தி நிறுவனங்களின் வழக்கு, போக்குவரத்து வழக்கு என இவையாவும் உங்களுக்கு வெற்றி தரும் வகையில் தீர்ப்பு வரும். அல்லது தள்ளுபடி செய்யப்படும்.

இந்த வருடம், திருமணம் என்பது ரொம்ப சிரமம் கொடுக்கும். இவ்வளவு கஷ்டப்பட்டு, கல்யாணம் செய்யணுமா எனும் நேரத்தில், வெகு செலவில் அல்லது வெகு தூர இடத்தில் கல்யாணம் நடந்துவிடும். உங்கள் வியாபார பங்குதாரர் வச்சு செஞ்சு நன்கு ஏமாற்றிவிடுவார்.

தம்பதிகளுக்குள் சந்தேகத்தின் பேரில் சண்டைவரும். சந்தேகத்தின் காரணம், வேறு மத, வேறு இன ஆட்களாக இருப்பார். ஆன்மிக தல யாத்திரை உண்டு. 

நீங்கள் செல்ல நினைத்த கோவில், கொஞ்ச தொலைவில்தான் உள்ளது என நினைத்து இருப்பீர்கள். ஆனால் பிற்பாடுதான் தெரியும் அது உலக உருண்டையின் மறுபக்கத்தில் இருக்கிறது என்று கூறுவர். வெறுத்துப் போய் விடுவீர்கள். சிலர் உடல்நிலை சரியில்லாமல் திரும்பிவிடுவர். கவனம் தேவை.

தொழிலில் அதிக முதலீடு செய்வீர்கள். முன்பு பார்த்த வேலையின் அனுபவம் இப்போது உதவும். தொழில் பெருக்கம் பணியாளர் பெருக்கத்தை உண்டாக்கும்.  கௌரவ மேன்மை பொருட்டு சில சேவைகள் செய்வீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். வீட்டிலேயே இருக்க முடியாதபடி, அலைச்சல் இருக்கும். சிலர் அடிக்கடி வெளிநாடு சென்று வருவீர்கள். சமையல் கலைஞர்கள், நிறைய வாய்ப்பு கிடைக்கப் பெறுவீர்கள். உங்கள் மூத்த சகோதரி, அரசு பணி கிடைக்கப்ùறுவார். அல்லது கடனில் வீடு வாங்குவார். உங்கள் மாமனார் வேலை மாற்றம் பெறுவார்.

இந்த வருடம், நீங்கள் வாழ்வின் எத்தளத்தில் இருந்தாலும், தொழில், வேலை என எந்த பிரிவில் இருந்தாலும், அலைச்சல் மாறுதல் என அது ஒன்றும் மட்டும் மாறாது. வேலை செய்யும். இடம் மாறும். 

அல்லது வேலை மாறும். ஒப்பந்தங்கள் மாறும். வீடு மாறும். வாகனம் மாறும். செய்திதாளை மாற்றுவீர்கள். டி.வியை மாற்றுவீர்கள். சிலர் கையெழுத்து போடும் விதத்தை மாற்றுவீர்கள். வீடு மாற்றத்தால், தபால், வங்கி கணக்கை மாற்ற வேண்டியிருக்கும்.  மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை நன்கு புரிந்துகொள்வீர்கள்.

கவனம் தேவை: இந்த வருடம், உங்கள் மோசமான பழக்கங்களில் கவனமாக இருக்கவும். காதல் தேவையில்லை. சினிமா கலைஞர்கள், பங்கு வர்த்தகம் என இவற்றில் கவனம் தேவை. கர்ப்ப ஸ்திரிகள். மருத்துவரின் அறிவுரைப்படி நடந்துகொள்ளவேண்டும். உணவு மற்றும் வாக்கு கட்டுப்பாடு தேவை. தொழிலில், வேலை செய்யும் ஆட்களிடம் கவனமாக இருக்கவேண்டும்.

பரிகாரம்: சங்கரன் கோவில் கோமதி அம்மனை வழிபடவும். மற்றும் உங்களுக்கு இஷ்டமான ஆம்பாளை வணங்கவும்.

-ராசிகüன் தொடர்ச்சி வரும் இதழில்...