உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் ‘ஃபிடே கிராண்ட் சுவிஸ்’ செஸ் தொடர் நடந்தது.
உலகம் முழுவதிலும் இருந்து மொத்தம் 172 வீரர், வீராங்கனைகள் இந்த தொடரில் பங்கேற்றனர். இதில் கிராண்ட் சுவிஸ் ஆண்கள் பிரிவில் 116 பேரும், கிராண்ட் சுவிஸ் பெண்கள் பிரிவில் 56 பேரும் பங்கேற்றனர்.
இதில் மகளிர் பிரிவில் நடந்த 11-வது மற்றும் கடைசி சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் வைஷாலி 43-வது காய் நகர்த்தலில் முன்னாள் உலக சாம்பியன் சீனாவின் டான் ஜோங்ஜியுடன் டிரா செய்தார்.
11-வது சுற்று முடிவில் தமிழகத்தை சேர்ந்த வைஷாலியும் (6 வெற்றி, 4 டிரா, ஒரு தோல்வி) ரஷியாவின் கேத்ரினோலாக்னோவும் (5 வெற்றி, 6 டிரா) தலா 8 புள்ளிகளுடன் சமநிலை வகித்தனர்.
இருப்பினும் அதிக வெற்றி அடிப்படையில் வைஷாலி தொடர்ந்து 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
அத்துடன் அடுத்த ஆண்டு நடக்கும் 8 வீராங்கனைகள் இடையிலான கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கும் தகுதி பெற்றார்.
இதற்கு முன் கடந்த 2023-ஆம் ஆண்டு கிராண்ட் சுவிஸ் செஸ் தொடரில் வைஷாலி சாம்பியன் பட்டத்தை வென்று, கேண்டிடேட்ஸ் சுற்றுக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
கேண்டிடேட்ஸ் போட்டிக்குத் தகுதி பெற்றதன் மூலம், வைஷாலி உலக சாம்பியன் ஜூ வென்ஜுனைஎதிர்கொள்ளும் சவாலுக்குத் தயாராகி விட்டார்.
இத்தொடரில் ரஷ்யாவின் கேத்ரினா லாக்னோ இரண்டாம் இடத்தையும், கஜகஸ்தானின் பிபிசாரா அசாபயேவா மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.
இந்தியாவை சேர்ந்த கொனேரு ஹம்பி மற்றும் திவ்யா தேஷ்முக் ஆகியோர் ஏற்கனவே கேண்டிடேட்ஸ் செஸ் தொடருக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் 3-வது நபராக வைஷாலியும் அந்தப் பட்டியலில் இணைந்துள்ளார்.