"ஐயா, அவரைப் பற்றி சில மாதங்களுக்கு பின்தான் அவர் திருடி பிழைப்பவர் என்று எனக்கு தெரிந்தது. நானும் திருடன் ஆனேன். திருட்டு தொழில்செய்து நிறைய சம்பாதித்தேன். இப்போது என்னிடம் வீடு, நிலம், நகை, பணம் என்று ஏராளமான சொத்துகள் உள்ளது. ஆனால் ஒரு தடவைகூட போலீஸில் பிடிபடவில்லை, இப்போது திருடுவது பாவம் என்று என் மனம் உறுத்துகிறது. நிம்மதி குறைகின்றது, நான் திருடியதால் உண்டான பாவம் தீர பரிகாரம் கேட்டு அறிந்துகொள்ளதான் அகத்தியரை நாடி வந்துள்ளேன்'' என்றார்.
நான் சற்றே ஆச்சர்யமாய் அவரைப் பார்த்துவிட்டு ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன்.
ஓலையில் அகத்தியர் எழுத்துவடிவில் தோன்றி பலன்கூறத் தொடங்கினார்.
மகனே, இந்த பூமியில் பிறக்கும், ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு தொழிலைச் செய்து பொருள் சம்பாதித்துதான் வாழவேண்டும். வேறு எந்த சக்தியும் எதையும் தந்து வாழ வைக்காது. அவரவர்க்குத் தேவையான உடை, உணவு, இருப்பிடம் இவற்றை அவரவரே உழைத்து அடைந்து கொள்ளவேண்டும் என்பதுதான் இயற்கை நிர்ணயித்த விதி.
மண்ணுலகில் மனிதர்கள் வாழ 18 வகையான தொழில் உண்டு. ஒவ்வொரு தொழிலிலும் பதினெட்டு வகையான உட்பிரிவுகள் அதில் உண்டு. ஆய கலைகள் அறுபத்து நான்கு என்று கூறுவார்கள். இதில் திருடுவது ஒரு தொழில்தான். திருட்டு என்பது பொருள் திருடுவது மட்டுமல்ல, பொய் சொல்லுதல், ஏமாற்றுதல், பொருள் அபகரித்தல் , நம்பிக்கை துரோகம், நன்மை செய்வதுபோல் நடித்தல், மக்களிடையே பிரிவினை செய்தல் போன்ற இன்னும் பல செயல்களைச் செய்வதும் திருட்டுதான்.
கலியுகத்தில் மனிதர்கள் ஏதாவது ஒரு செயல்மூலம் திருடித் தான் பிழைப்பார்கள். அரசர்கள் வேறு நாடுகளில் படையெடுத்து, பொருட்களை கொள்ளையடிப்பது, அரசியல்வாதிகள், ஆட்சி புரிவோர், அதிகார வர்க்கத்தினர் பதவியைப் பயன்படுத்தி, மக்களை ஏமாற்றி பணம் சம்பாதித்தும், வியாபாரிகள், பொருட்களை குறைந்த விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு விற்பது, பொருட்களில் கலப்படம் செய்வது, ஆன்மிகவாதிகள், கடவுள் பெயரைச் சொல்லி, கடவுள் கதைகளைக் கூறி மக்களிடம் ஏமாற்றி பணம் பறிப்பது, பாவலி புண்ணியம் என்று கூறி இவை தீர பூஜை, யாகம், வழிபாடு, மந்திரம், பரிகாரம் என்ற பெயரால் பணம் பறிப்பது, மதம், சாதி, இனம், பிரிவு என்று மக்களிடையே பிரிவினை, பேதத்தை உருவாக்கி மக்களைப் பிரித்து தன்னை சார்ந்தவர்கள் இடம் பணம், பொருள். சம்பாதிப்பதும் திருடர்கள் செயல்தான்; திருட்டுத் தொழில்தான்.
குடும்பத்தில் பெற்றவர்களை ஏமாற்றி பிள்ளைகளும், உடன்பிறந்த சகோதர- சகோதரிகளை ஏமாற்றி சொத்தை அபகரிப்பதும், கணவன்- மனைவி ஒருவரை ஒருவர் ஏமாற்றுவதும், இன்னும் நம்பியவர்களையும், நண்பர்களையும், தொழில் கூட்டாளிகளை பணம், பொருள் பறித்துதான் வாழ்கின்றார்கள். இவையனைத்துமே திருட்டு பிரிவைச் சேர்ந்ததுதான். ஒருவரின் பொருள், பணத்தை அவருக்குத் தெரியாமல் அபகரிப்பது மட்டும் திருட்டு அல்ல என்பதை புரிந்துகொள்.
இந்த பூமியில் பிறக்கும் ஒவ்வொருவரும், இந்த பிறவியில் என்ன விதமான தொழில்செய்து, பணம் தேடி பிழைக்க வேண்டும் என்று, அவரவரின் பிறப்பிலேயே தீர்மானிக்கப்பட்டுதான் பிறக்கின்றார்கள். இந்த பிறவியில் நீ, திருட்டு தொழில்செய்து, பணம் சம்பாதித்து வாழவேண்டும் என்பதுதான் உனக்கு நிர்ணயிக்கப்பட்ட தொழில் விதி. அதனால்தான் இளம்வயதில் பெற்றோரை இழக்கவைத்து, உறவுகளை பிரியவைத்து, தனிமைபடுத்தி, அனாதையாக்கி, ஒரு திருடனிடம் உன்னை விதி கொண்டுவந்து சேர்த்தது. அதனால்தான் இன்றுவரை காவலர்களிடமோ, மனிதர்கள் இயற்றி வைத்த சட்டத் திட்டமோ, நீ அகப்படாமல் இருக்கின்றாய் என்பதை புரிந்துகொள்.
நீ, பிறர் பொருளை திருடுவது பாவம் என்று விட்டாலும், வேறு எந்தத் தொழில் செய்தாலும், அதிலும் பலவிதமான பொய்களைக் கூறி பிறரை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் நிலைதான். இந்த பூமியில் நேர்மை யான தொழில் என்று எதுவும் கிடையாது. நேர்மையான குணம் கொண்டவனும் கிடையாது.
மகனே, திருடுவது உனக்கு பிடிக்கவில்லை என்றால், திருடுவதை விட்டுவிடு, உன்னிடம் இருக்கும் பணம், சொத்துகளை அழியாமல் காப்பாற்றிக்கொண்டு வாழ்ந்துகொள். ஆனால் கையில் இருக்கும் பணத்தை முதலீடுசெய்து, வேறு தொழில் செய்தால், இந்த பணம், சொத்து முழுவதும் அழிந்துவிடும். கவனம் என்று கூறிவிட்டு அகத்தியர் ஓலையில் இருந்து மறைந்தார்.
என் கையில் இருப்பதை கவனமாக காப்பாற்றிக்கொண்டு பிழைத்துக்கொள்கிறேன் என்று கூறி என்னிடம் விடைபெற்றுச் சென்றார்.
செல்: 99441 13267