கயல் எழுதிய "ஆரண்யம்' கவிதைநூலை வாசித்தது வாய்ப்பல்ல. பேறு. சமீபத்தில் என் கைக்குக் கிடைத்த மிக நல்ல கவிதை நூல்களில் அதுவும் ஒன்று. ஆரண்யம் என்கிற தலைப்பே என்னை ஆகர்ஷித்தது. காட்டை காடென்று சொல்லாமல், ஆரண்யம் என்பதிலிருந்தே அத்தொகுப்பு என் ஆர்வத்தைத் தூண்டிற்று. சின்னச் சின்ன சிதறல்களாக எழுதப்பட்டிருந்த அக்கவிதைகள் முழுக்க முழுக்க பச்சையத்தை எனக்குள் படரவிட்டன. கயலின் முந்தைய தொகுப்புகளையும் நான் வாசித்திருக்கிறேன். என்றாலும், ஆரண்யம் அவரின் ஆகச்சிறந்த வரிசையில் வரக்கூடியது. காடென்ற சொல், அடர்த்தியானதில்லை என அவருக்குப் பட்டிருக்கலாம். எனவேதான், ஆரண்யம் என்ற சொல்லை பயன்படுத்தியிருக்கிறார். காடோ ஆரண்யமோ வனமோ எல்லாமே ஒன்றுதானே, இதிலென்ன அடர்த்தி? அடர்த்தியின்மை? எனக் கேட்கலாம். சொற்களின் வழியே அர்த்தத்தைப் புரிந்துகொள்வதைவிட, அச்சொற்களின் வழியே காட்சியை உருவாக்கும் தந்திரத்தையே கவிஞர்கள் கைக்கொள்வர். அந்தவிதத்தில் ஆரண்யம் எனும் சொல், கயலின் கவனத்தை ஈர்த்திருக்கலாம்.
வனாந்திரங்களில் சுற்றித்திரிந்த நம்முடைய வாழ்வை, அதே

வனாந்திரங்களில் சுற்றித்திரிந்த நம்முடைய வாழ்வை, அதே வனாந்திரத்தை வைத்துச் சொல்ல முயன்றிருக்கிறார்.
காடுகள் அழிந்து விட்டனவே என்கிற கவலையைத் துறந்து, நாமே காடாகவும் காட்டிலுள்ள செடி, கொடி, மரம், புல், பூண்டு, பட்சி, விலங்கு ஆகியவையாக மாற இக்கவிதைகள் உதவுகின்றன. மயில்கள் இன்புற்றாடிய விலாசங்கள், மயிலிறகு குட்டிபோடுமென நம்பியதிலிருந்து தொலைந்துவிட்டதாக ஒரு கவிதையில் சொல்லியிருக்கிறார். உண்மையில், இழந்த மயில்களின் இறகுகளாக இக்கவிதைகள் மலர்ந்தாடுகின்றன. எதையுமே கவிதைகளுக்குள் அடக்கிவிடும் சாதுர்யத்தில் கயலின் தன் முனைப்பு ஒவ்வொன்றுமே கவிதைகளாகத் தெரிகின்றன. ஏதோ ஒரு புள்ளியில் கவிதையைத் தொடங்கி, அதோ புள்ளியில் நிறுத்திவிடாத அற்புதம் அவருக்கு வாய்த்திருக்கிறது.
வாசலிலோ கூடத்திலோ கோலமிடும் பெண்விரல், தன்னியல்யாக சித்திரங்களைத் தீட்டுமே அப்படி. வாழ்வை அதன் நெருக்குதலுக்கு அப்பாற்பட்டு தரிசிக்க முடிந்தவர்களால் மட்டுமே அவ்வாறான சித்திரங்களை வரையமுடியும். கவிதைச் செயல்பாடை பூ பூப்பதைப்போல என்று சிலர் சொல்வார்கள். எனக்கு விதை விழுவதைப் போல. நினைத்த காம்பில் என்றேனும் ஒரு நாள் பூ பூக்கும் என்று நம்பலாம். விதைமீது அத்தகைய நம்பிக்கையை வைக்கமுடியாது. ஏனெனில், ஒரு விதை துளிர்க்க விதை மட்டுமே காரணமில்லையே. காற்றும் வெளிச்சமும் நீரும் இல்லாமல் ஒருவிதை துளிர்ப்பதில்லை. கயலின் கவிதைகள் விதை போன்றவை. சொற்களில் காற்றையும் வெளிச்சததையும் நீரையும் தெளித்துவிடும் நேர்த்தியைக் கயல் கற்றிருக்கிறார். “ஆதிக்கோடரிக் / கிளையொன்றின் / பாவந் தீர்க்க / இன்னும் எத்தனை சிலவை / எனக் கேவியழுகிறது / ஒவ்வொரு மரமும் வெட்டுருகையில் என்ற கவிதையை வாசித்துவிட்டு ஒருநாள் முழுக்க அமைதியாயிருந்தேன். கண்ணில்பட்ட நிலைப்படி, மேசை, நாற்காலி, கதவுகள் என அத்தனையும் முன்னே நின்று மிரட்டுவது போலிருந்தது. ஒரு பெரும் துயரத்தைச் சுமந்த அம்மரங்களின் பிணவாடை என்மேல் வீச ஆரம்பித்தது.
முதல் வாசிப்பிலேயே இக்கவிதைகள் என்னை அதிகமும் ஈர்த்துவிட்டன. ஆனாலும், அதன் ஆபத்துகளை பின்னால்தான் உணரத் தொடங் கினேன்.
கவிதைகள் ரம்மியத்தையும் நறுமணத்தையும் தருமென்று நினைத்தால், கயலின் கவிதைகள் அதற்கு நேர்மாறாக அமைந்திருக்கின்றன. ஒரு சின்னக் கேள்வியில், மொத்த யோசனைகளையும் புரட்டிப்போட்டுவிடுகிறார். இறுதி வாக்கியம்வரை காத்திருக்கமுடியாமல் பல கவிதைகள் உந்தியெழ முடியாமல் உட்கார வைக்கின்றன. “எதிர்ப்பட்ட பின் / கடப்பது கடினம் / காதல் / கடவுள் / காடு’என்றொரு கவிதை. என்னைக் கேட்டால் எதிர்ப்பட்ட பின் கடக்க கடினமாவது கயலின் கவிதையும்தான். பொதுவாக கவிதைகள் இதயத்தின் திறப்பாக இதயத்தை அமைவது. கயலோ சாவியை தம்மிடமே வைத்துக்கொண்டு காகிதங்களில் நம்மைப் பூட்டிவிடுகிறார். பெண்ணை வர்ணித்தல் எத்தகைய பேதமை, புரிய வைத்தது காடு என்றொரு தொடரில் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறார். அவரே பெண்ணாயிருந்தும் அவ்வரிகளை அவர் ஆக்கும்போது என்ன மனநிலையை கொண்டிருந்தாரோ? பாராட்டுக்காக ஏங்கும் வழமையான பெண்ணாய் அவர் இல்லை. மாறாக, காட்டைப் பாராட்டும் வன அரசியாக தம்மை வரிந்துகொள்கிறார்.
மயில்கொன்றை மரமொன்றில் வனதேவதை சிறகசைக்கிறாள் என்னும் பதத்தில் என் ஊகம் மெய்யாகிறது. ஆரண்யம் முழுக்க அலைந்து திரிந்து தொலைந்துபோகும் ஆசை உள்ளவர்களுக்கு இக்கவிதைகள் போதுமானவை. போதுக்கும் கவிதை / பொழுதெல்லாம் சங்கீதம் என்று ச.து.சு. யோகியார் ஒரு கவிதையில் சொல்லியிருக்கிறார். போதுக்கும் அன்பு / பொழுதெல்லாம் ஆரண்யம் என்பதாக இத்தொகுப்பை புரிந்துகொள்ளலாம். உலகில் எவை எவற்றுக்கு எது உச்சமென்று ஒரு கவிதையை இந்நூலில் கயல் எழுதியிருக்கிறார். அழகின் உச்சமாக மலர்களையும் அன்பின் உச்சமாக காதலையும் சொல்லிக்கொண்டே வந்து இறைவனின் மிச்சம் காடு என்று முடித்திருக்கிறார். எல்லாவற்றுக்கும் உச்சத்தை சொல்ல முடிந்த அவருக்கு, இறைவனின் உச்சமே காடென்று சொல்வதில் விருப்பமில்லாமல் மிச்சம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இறைவனுக்கே உச்சம் காடென்றாலும் சரிதான். ஆனால், இறைவனின் உச்சத்தை அவர் கண்டுபிடிக்கத் துணியவில்லை. மொழியின் சாத்தியங்களை கைப்பற்றி, அதன் வழியே தம் பார்வைகளை பதிந்திருக்கும் கயல், கவிதைகளின் உச்சத்தை கண்டடைவார் என்பதில் சந்தேகமில்லை. மொழியின் உச்சமே கவிதையென்று அவர் சொல்லியிருந்தாலும், கவிதையின் உச்சமாக அவர் மிளிரவும் வளரவும் வாழ்த்தத் தோன்றுகிறது. கிறங்கி நீந்தும் கூழாங்கற்கள், கால ஓட்டத்தில் பளபளப்பாவதைப்போல கயிலின் எழுத்துகள், தம் உயரத்தை தாமே எட்டிவிடக்கூடியவை.