Yugabharathi

பாடலாசிரியர் யுகபாரதியின் மேல்கணக்கு நூல், நம் காலத்தில் தமிழராகிய நமக்குக் கிடைத்த இலக்கிய விடிவெள்ளி. சங்கப் பாடலுக்கு உரையாசிரியர்கள் பலரும் சரியாக உரை எழுதாததால் நான் மேல் கணக்கு எழுதியுள்ளேன் என்கிறார். இவரின் நூல் சங்க காலத்தைப் பற்றிய சமகால வாசிப்பு.

Advertisment

தமிழ்ச் சமூகத்தின் பத்தாயிரமாண்டுப் பண்பாட்டு உருவாக்கத்தின் பெருமிதமான தன் வெளிப்பாடு அய்நூறுக்கும் மேற்பட்ட புலவர்களின் இமாலயப் பாக்கள். பலராலும் கவனிக்கப்படாத சங்கப் புதையலின் சத்தான பக்கங்களை உருவியெடுத்து நம் மீது பூக்களாய்த் தெளிக்கிறார் யுகபாரதி.

போர் அரசியலுக்கு இலக்கியத் தீர்வு அமைதி

போர்க்காலச் சூழலிலும் போருக்கெதிரான கருத்துக்களைப் பதிவு செய்த இலக்கியம் நம் காலத்திலும் தேவை . அறமும் ஈரமும் சாரமும் இயற்கையும் நமது இலக்கியச் சொத்து. மனிதநலச் சிந்தனைகளையும் சமகால நெருக்கடிகளுக்கான தீர்வுகளையும் ஏந்தி நிற்கும் மாந்த இலக்கியம். எண்ணற்ற மனிதர்களின் வாழ்வியல் நெருக்கடிகளின் போராட்டங்களின் பதிவு.

Advertisment

அகழாய்வில் புதிய புதிய உண்மைகள் வெளிச்சத்திற்கு வருவதைப் போன்றே இலக்கிய ஆய்விலும் புதுப் புதுப் பொருள்கள் காலத்தின் தேவைக்கேற்ப தோன்றுகின்றன. தனியொரு மனிதனின் வாழ்வியலையோ நாட்டின் வரலாற்றையோ வெளிப்படுத்துவது பேரிலக்கியம் என்ற வரையறை, சங்க இலக்கியம் முன்னிறுத்தும் வாழ்வியலைப் புரிந்துகொள்ளப் போதுமானதாக இல்லை.

பேரிலக்கிய வரையறைகளை நெகிழ்த்தாமல் வானம் வரை சிறகு விரிக்கும் புறநானூற்றுப் புலவர்க்கு நாம் நியாயம் வழங்க முடியாது. பண்பாட்டு மரபு காத்திட எட்டுத்திக்கும் பயணிக்கும்அவர்களைஎண்கோணங்களிலும் கவிஞர் ஆய்ந்துள்ளார். சமகால அரசியல் திறனாய்வையும் ஒப்பீடாகத் தருகிறார். நூலுக்குத் தனிப்பெருமை சேர்ப்பதாக இந்த அணுகுமுறை அமைகிறது.

சங்க இலக்கியம் காட்டும் மனிதன் கடவுளுக்கும் மன்னருக்கும் அடிபணிய மறுப்பவன். மனிதனுக்கு மனிதன் உற்ற துணை என்று உறவாடுபவன். சாதியும் வர்க்கமும் பாலின வேற்றுமைகளும் இல்லா மானுடன். உண்பது நாழி. உடுப்பது இரண்டே. மன்னன் உயிர்த்தே மலர்த்தலை உலகம் எனினும் மக்களைக் காப்பதே மன்னனுக்குச் சிறப்பு.

இனக்குழு பாத்தூண் மரபை உடைத்து நொறுக்கிய உடைமைப் பற்றும் இல்லாமையின் வறுமையும் இருப்பவன் உண்டாக்கிய ஏற்றத்தாழ்வுகளுமே இறைநெறி மயக்கத்தில் மக்களை அழுத்தி மனித ஆற்றலை முடக்குகின்றன. மனிதனுக்கு மனிதன் எதிரியானான். இச்சூழலில் மட்டுமின்றி எச்சூழலிலும் கைவிடமுடியாத மனிதப் பண்பையும் ஆற்றலையும் வலியுறுத்துவதே சங்கப் புலமை. வாழும் மக்கள் வாழப் போகிற மக்களுக்குக் கூறவிழையும் தமிழ் மக்கள் இலக்கியம். அது கற்பிக்கப்பட வேண்டிய பாடநூல் அல்ல. உண்மைத் தரவுகளும் நிகழ்காலப் பயன்களும் நிரம்பி வழிவதால் வாழ்ந்து காட்டவேண்டிய வாழ்வியல் நெறி.

வரலாற்று நூல்கள் மன்னர்களைப் பற்றித்தான் உள்ளன. கடைக்கோடி மக்களைப் பற்றிப் பேச மறுக்கின்றன. கடவுள் நம்பிக்கையையே தீர்வென முன்மொழியும் உலகப் பேரிலக்கியங்களிடையே மனிதத் துன்பத்திற்கு மனிதரே காரணம். மனித ஆற்றலால் இதை மாற்றலாம் என்னும் மனித நம்பிக்கை என்ற தும்பிக்கையைத் தரும் சங்கப் பாடலை மீண்டும் கவிஞர் நமக்குக் காட்சிப்படுத்துகிறார் யுகபாரதி.மக்களுக்குக் கேடு எனில் மன்னனுக்கும்தான். போரின்றி அண்டை நாடுகளோடு நல்லமைதியில் மகிழ்வோடு வாழ்தலே சிறப்பு என்பதைச் சங்கமே எடுத்தியம்புகிறது.

இன்றைய அரசுகளும் புலவர்களும் இந்தத் திசையில் செல்லவில்லை என்பதே கவிஞரின் வருத்தம். உள் - வெளிப் பகை வளர்த்து வயிறு வளர்க்கும் கேவலங்களை அருவருக்கிறார்.

கலம் செய் கோவே!

கடவுளுக்கும் மன்னனுக்கும் இணையாகப் பானை வனையும் குயவனைக் கலம் செய் கோவே எனக் கொண்டாடியது சங்கத் தமிழ். இந்தச் சமன் மையம் நயத்தகு நாகரிகமும் உலகம் கண்டிராதது. வெறுமனே ஏட்டில் எழுதப்பட்ட வெற்றுச் சொற்கள் அல்ல இவை. காலக் கரும்பை பிழிந்து உருவாக்கிய கருப்பஞ் காற்றின் கற்பூரப் பெட்டகம். எனவேதான் நம் காலத்தில் நம்மை வீழ்த்திவிட்ட சாதி-மதவெறியைக் கீழடி நீதிமன்றம் குற்றவாளிக் கூண்டிலேற்றி நீதி விசாரணை நடத்துகிறது. சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் நேசிக்காதவர்கள் சாமி கும்பிட்டால் என்ன? கும்பிடா விட்டால் என்ன?

சமன்மைக் கவிஞர் யுகபாரதி உக்கிரமான கேள்விகளை நம்மிடம் எழுப்புகிறார். சங்கம் என்றாலே வீரமும் காதலும் என்று நிறுவப்பட்டதை இன்னும் விரிவாக்கி அறமும் ஒப்புரவும் நீதியுணர்வும் சான்றாண்மையும் சமத்துவமும் அனைத்திற்கும் ஆணிவேர். அனைவருக்கும் அடிப்படை என்பதை நிறுவுகிறார்.

தமிழரின் முதன்மைத் தேவை

தேவையில்லாமல் யோசிப்பதும் தேவைக்கு மேல் வாசிப்பதுமாகிய நம் கால நோயர்களின் அவலத்தைப் போக்க வந்த அமுதக் கவி யுகபாரதி. தமிழரின் முதன்மைத் தேவைகளே நமது முதன்மை வாசிப்பும் முக்கிய யோசிப்பும் என்பதால் மேல்கணக்கு நம் நெஞ்சார்ந்த நேசிப்பாகிறது. ஆரிய அடிவருடிகளாய்த் தேங்கிய நடைபிணங்களின் நாற்றங்களோடு சிற்றறிவுக் கவிஞர்கள் சிற்றுலா போகும் பாட்டு நாட்டுப் பரிதாப நடப்புகளைப் போட்டுடைக்கிறார் யுகபாரதி. தமிழ் இலக்கியங் களுக்கு முகாரியும் முடிவுரையும் எழுதுவதைத் தங்களின் பிழைப்புகளாக்கிப் பிதற்றுகிற அநாகரிக அறிவிலிகளிடையே தமிழ் மரபின் அன்பின் கொடியை யுகபாரதி உயர்த்திப் பிடிக்கிறார்.

மாந்த நாகரிகத்தின் முத்தாய்ப்பான முகவுரை சங்கத் தமிழ். நேற்று இன்று நாளை என்று எக்காலத்திலும் பேரிகை முழக்குகிற சங்க இலக்கியத்தை நம் காலத்திற்கு நகர்த்துகிறார் கவிஞர்.மேலேறும் தமிழர் வாழ்வைக் கீழிறக்கிச் சாரமிழக்கச் செய்கிற சதிகளிடையே கலக வாளேந்திக் களமாடுகிறார். கண்ணகியாய்ச் சீறியெழுந்து கணக்குக் கேட்கிறார் இந்த மேல்கணக்கு ஆசிரியர்.

மானுட விடியலுக்கான தமிழ் முன்னோடிகளின் முத்துச் சொற்களைச் சேகரித்துக் கொண்டே இலக்கியச் சிலம்பாடுகிறார் கவிஞர். ஈராயிரம் திரைப்பாடல்கள் எழுதிய பாடலாசிரியர் என்பதைவிட ஈராயிரமாண்டுத் தமிழ் மரபின் ஈரவரிகளைத் தான் சுமந்து வருவதையே இவர் பெருமையாகக் கருதுகிறார்.

பசுமையும் பகிர்தலும் பைந்தமிழ் மரபு

இல்லாத பெருமைகளைப் பேசி இருக்கிற பெருமைகளை இழக்கிற தமிழர்களிடம் சங்கத் தமிழின் பண்பாட்டு அரசியலை மேல்கணக்கு நூல் மீட்டெடுக்கிறது. பகிர்தலின் அறத்தை கோட்பாடாக்கு கிறது. வெள்ளமும் கள்ளமும் காவு வாங்கிய தமிழின் எஞ்சிய பக்கங்களைக் கடல் மண்ணில் கால்கள் புதையக் கிளிஞ்சல்களை ஓடோடிச் சேகரிக்கிற குழந்தையைப் போன்று அள்ளியெடுத்து நம் முன் படைக்கிறார்.

தண்ணீர் அதிகாரத்தின் அடையாளம். அதை சக மனிதனுக்கு மறுப்பதே பார்ப்பனிய அரசியல். தமிழரின் அறமோ பகிர்தலின் அறம். பொதுமையையும் புதுமையையும் எழுத்தில் மட்டும் போற்றுகிற அறம் அல்ல. அது அனைவரும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்வியல் அறம்.நீரின் மீதான சாமானியர்கள் உரிமையை நிலைநாட்டவே அண்ணல் அம்பேத்கர் பொதுக் குளத்தில் நீர் எடுத்தார். அவரின் பிறந்த நாளையே தண்ணீர் நாளாகக் கொண்டாடுகிறோம் என்பதை நூல் பதிவு செய்கிறது.

கலகக் கவிஞனின் அரசியல் பிரகடனம்

அரசு தரும் பரிசுகளுக்காக அதிகாரத்தின் அயோக்கியத்தனத்தைப் பேச எனக்கு அச்சமில்லை. அயோக்கியனை அயோக்கியன் என்று கூறாமலிருக்க மாட்டேன். அதற்காக எதையும் இழக்கத் தயாராக உள்ளேன். நான் வெறுமனே திரைப் பாடல்கள் எழுதிவிட்டுச் செல்கிற பாடலாசிரியன் அல்ல. தமிழ் மரபுக் கடலின் ஆழத்திலிருந்து அமுதத்தையும் ஆவேசத்தையும் நான் பிறந்த மண்ணுக்கும் மக்களுக்கும் கொண்டுபோய்ச் சேர்க்கிற கொண்டுகூட்டுப் பொருளாளன் என்பதே கவிஞரின் அரசியல் பிரகடனம். நாமார்க்கும் குடியல்லோம். நமனை அஞ்சோம் என வீறு கொண்டெழுகிற தன்மானக் கவிஞன். மன்னவனும் நீயோ? வளநாடும் உனதோ? என்று அறம் பாடிய கம்பனும் நீயே அரசன். நீயே கள்வன் என்று கனன்றெழுந்த கண்ணகியும் எத்திசை செலினும் அத்திசை சோறே என்று எவரின் கைகளுக்குள்ளும் அடங்க மறுத்து ஆர்ப்பரித்த கண்ணகியும் நம் கண் முன் கடந்து செல்கின்றனர்.

நமது படைப்புகளே நமக்கான அடையாளம். நம்மைப் பற்றிய அறிமுகம். நாம் எதைப் படைக்கிறோம்? யாருக்காகப் படைக்கிறோம்? நாம் நமது சங்க மரபின் சமன்மைத் தொடர்ச்சியா? நம்மைச் சதிராடிச் சாய்த்துப் பிரித்து மேய்ந்திடப் பாதியில் வந்து பாதை மறிக்கும் சாதிமதச் சனியின் சழக்கர்களா? நான் மானுடன் என்பதில் இல்லாத எந்தப் பெருமை சிறுத்துப் போன சில்லறை அலப்பறைகளில் உள்ளது? கவிஞர் நாம் எவ்வளவு தேறுவோம் என்பதை இலக்கியத் தராசில் எடை போட்டுப் பார்க்கிறார்.

கவிஞர் யுகபாரதியின் மேல்கணக்கு நூல் நாம் எளிதாகக் கடந்து செல்ல முனைகிற மரபுச் செல்வங்களின் கணக்கைச் சரிசெய்ய வாராது வந்த மாமணி நூல். குறளையும் சங்கப் பாடலையும் தமிழருக்கு இன்றைக்கும் தேவைப்படுகிற முதன்மை இலக்கியங்கள் என்பதைத் திறம்பட எடுத்துரைக்கிறார்.

நூலை முன்னிருத்தி மேலும் சில தேடல்கள்

சிறியன வாழும். சிறியன வெல்லும் என்பது இயற்கையின் நியதி. பெரியோரை வியத்தலும் இலமே. சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே என்கிற சங்கப் புலவன் நம் காலத்தின் தேவை. பொதுமை வெல்லும். பதுக்கல் ஒழியும் என்கிற நம்பிக்கையையும் கவிஞர் யுகபாரதி நம்மிடம் புதுப்பிக்கிறார்.ஓர் அடிமை தானொரு அடிமை என்பதையும் ஒரு முட்டாள் தானொரு முட்டாள் என்பதையும் உணர்ந்து கொண்டால்தான் விடுதலை பெறமுடியும். கொலைகார முரடன் அங்குலிமாலாவுடனான புத்தரின் உரையாடல் மிகவும் கவனிக்கத்தக்கது. அன்பும் அறிவுமே ஒருவரை விடுவிக்கும். புத்தர் இரண்டையும் கையிலெடுக்கிறார்.

ஓர் இலையைக் கிள்ளி கீழே போடச் சொல்கிறார். அவனோ மரக் கிளையையே வாளால் வெட்டி வீழ்த்துகிறான். மறுபடியும் அந்தக் கிளையை மரத்தோடு ஒட்டவைக்கும்படி கூறுகிறார். அவனால் இயலவில்லை. அப்போது புத்தர் கூறுகிறார். ""ஒன்றை அழிப்பது எளிது. ஆனால் ஆக்குவது கடினம். உன்னால் பிற உயிரை அழிக்க முடியும். ஆனால் ஓர் உயிரை உன்னால் இவ்வுலகிற்குக் கொண்டு வரமுடியுமா? "" என்கிறார். அங்குலி நிலைகுலைகிறான். தனக்கு அறிவூட்டிய புத்தரை வணங்குகிறான். அன்பும் அறிவுமே நம் அனைவரையும் அழிவிலிருந்து காப்பாற்றும்.

சங்க இலக்கியம் கிரேக்க வீரயுகப் பாடல்களைப் போன்று போரையும் பேரழிவையும் கொண்டாடுவதல்ல. வாழ்வின் மேன்மை மதிப்புகளை அது முன்னிருத்துகிறது. மான்களின் புணர் இன்பம் பாதிக்கும் என்று புறக்கடை வழியே வீடடையும் தலைவியின் செயல் உலக இலக்கியம் கண்டிராத அற்புதச் சித்தரிப்பு. கிள்ளிவளவன், மலையமானின் சின்னஞ் சிறிய பிள்ளைகளை யானைகள் இடறச் செய்து கொலை செய்ய முனையும்போது ஒரு புலவன் என்ன செய்துவிட முடியும்? கோவூராரைக் கோ. கேசவன் கையாலாகாத புலவன் என்று சாடுவது அவரின் வறட்டுத்தன்மையைப் பறைசாற்றுகிறது. கோவூரார் அந்தச் சிறுவர்களைக் காப்பாற்றுகிறார். இதுவே ஆள் பார்த்துச் செயல்படாத தமிழ்ப் புலமை. தமிழ் அறம். போரை நிறுத்திய ஒளவையாரைப் போன்றவர் கோவூரார்.

அவரின் பேராற்றல் பெருங் கருணையைக் காணத் தவறும் கேசவன் பொறுப்பற்ற படைப்பாளர். தமிழரின் மேன்மைப் பக்கங்களைச் சிறுமைப்படுத்தும் இவரின் சித்தரிப்பை ஏற்பதற்கில்லை. கட்சி சார்ந்த மார்க்சியரின் பார்வைக் கோளாறு இவரிடமும் உள்ளது.துன்பமும் அழிவும் தரும் போர்கள் ஒழிவதையே கவிஞர் விரும்புகிறார்.

விலகியோடுவது வாழ்வை நேசிப்பது ஆகாது.

மன்னர்களின் செல்வம் மக்களுடையது என்ற புலவர் கருத்தே பின்னாளில் பொதுவுடைமையாயிற்று. நிலையாமைக்காகத் துறவறம் என்பதையோ அவ்வுலக இன்பத்துக்காய் கடவுள் வழிபாடு என்பதையோ சங்கப் புலவர் ஏற்கவில்லை. வாழ்வாங்கு வாழ்ந்த நம்பி நெடுஞ்செழியனை பேரெயில் மூவனார் இனி புதைப்பதோ எரிப்பதோ எதுவேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள் என்பதில் வாழ்தலே கொண்டாடப்படுகிறது. சாதலின் பின் சடங்குகளும் கடவுளர் வழிபாடுகளும் அர்த்தமிழக்கின்றன. வாழ்வின் சாரம் வாழ்தலில்தான்.

எனவேதான் வாழ்ந்தோருக்கும் வழிகாண்பித் தோர்க்கும் நடுகல். செயற்கரிய செய்தார்க்கே வணக்கம். நிலைப்பது புகழே. சங்க இலக்கியம் மக்கள் சமுதாய வரலாற்றுப் பதிவு. வாழ்ந்தவரைக் காட்டிச் சமுதாயத்தை வாழவைக்கவும் செம்மைப்படுத்தவுமான முயற்சி. கடவுள் சமயம் இனம் சார்ந்து இயங்காமல் மனித இயல்பு இயற்கை சார்ந்து இயங்கியதை உயர்த்திப் பிடிப்பது.

ஒதுக்குவதும் ஒடுக்குவதும் மோசமான அரசியல் என்றால் ஒதுங்குவதும் ஒதுங்குவது போன்று பாசாங்கு செய்வதும் அரசியலே?. கவிஞர் யுகபாரதி இரண்டையும் சாடுகிறார். மனிதனின் உள்ளே நடக்கும் போரின் வெளிப்பாடே உலகப் போர்கள். உள்ளத்தில் அமைதியின்றி உலகில் அமைதி பிறக்குமா?அகமும் புறமும் என்று மானுடத்தின் அனைத்துப் பரிமாணங்களையும் உள்ளடக்கிய சங்க இலக்கியம் தமிழரின் பேரிலக்கியம். இயல்புக்கு மாறானதை இடித்துரைப்பதால் இது தமிழரின் மூலப் பேரிலக்கியம். முதற்பேரிலக்கியம். இதுகாறும் இதை உணராதிருப்பது தமிழுக்கும் தமிழருக்கும் பேரிழப்பு. அதை தமிழ்கூறு நல்லுலகிற்கு மறு நினைவூட்டல் செய்வதே மேல் கணக்கு.

மகளிர் இலக்கியம்.

பெண் முதன்மைச் சமுதாயமாகவும் மகளிர் வாழ்வியலின் உச்சமாகவும் விளங்கியது சங்க காலச் சமுதாயம். உலகின் வேறெந்த நாட்டிலும் இவ்வளவு பெண்பாற் புலவர்கள் அக்காலத்தில் இல்லை. ஆண் முதன்மைச் சமுதாயம் பெண்ணை வீட்டிற்குள் முடக்கியது. புறநானூற்றுப் பெண்கள் ஆணுக்கு இணையானவர்கள். அவ்வையார், வெண்ணிக்குயத்தியார் போன்ற புலவர்கள் வெளிப்படுத்தும் கட்டற்ற மனமும் துணிவும் கலகமும் கவிதைகளும் அக்கால உலக இலக்கியங்கள் எதிலும் இல்லை.

புறநானூற்றுப் பெண்கள் வறுமையில் செம்மையர். தன்மதிப்புடையவர்கள். வாட்டும் வறுமையிலும் வற்றாத அன்புள்ளம் கொண்டவர்கள். எவ்வுயிர்க்கும் இரங்கியவர்கள். வழிவழி வந்த பாத்தூண் மரபினர். இனப்பற்றின் இமயங்கள். வறுமை நீங்கிடக் கடவுளை வழிபடாதவர்கள்.அள்ளுர் நன்முல்லையார், ஒக்கூர் மாசாத்தியார், காக்கைபாடினியார், காவற்பெண்டு, குறமகள் இளஎயினி, பாரிமகளிர், பூங்கண் உத்திரையார் ,பெருங்கோப்பெண்டு, நக்கண்ணையார், நச்செள்ளையார், மாற்பித்தியார், வெண்ணிக்குயத்தியார், வெறிபாடிய காமக் கண்ணியார் என்று அறிவு மகளிர் பட்டியல் அளவின்றித் தொடர்கிறது.

இனம் காக்கும் போரில் தாமே முன்வந்து ஆண்களைப் போருக்கு அனுப்பும் வீரமகளிரைக் காண்கிறோம். புறமுதுகிட்டால் பாலுண்டு முலைகளை அறுத்தெறிவேன் என்று மகளிர் வஞ்சினம் கூறல் வாளினும் கூர்மையாய் நம்மைத் துளைக்கிறது. இளவயதினனைப் போருக்கனுப்புவதைக் கண்டிக்கவும் முடியாமல் துணிவைப் போற்றவும் முடியாமல்கெடுக சிந்தை கடிதிவள் துணிவே என்று மனவருந்தப் பாடுகிறார் புலவர்.

புறநானூற்றுப் பெண்கள் வீரப் பெண்கள் மட்டுமல்ல. ஈரநெஞ்சத்தினரும்தான். காயமுற்றோரைப் பெண்கள் காப்பாற்றப் போராடுகின்றனர். வீரம் போற்றப்பட்டாலும் இழப்பின் துயரம் பெண்டிரை நிலைகுலையச் செய்கிறது. இளம் வயதுப் பெண்கள் கனவுகள் கருகிட மண்ணும் வாழ்வும் பறிபோக மடியும் கதைகள் பேரவலம் உடையன.பூதப்பாண்டியன் இறந்தபோது பெருங்கோப்பெண்டு கைம்மையின் கொடுமைகளை எண்ணித் தீப்பாய்ந்தாள். மற்றொரு செல்வக்குடிப் பெண் கணவன் இறந்தபோது குயவனிடம் தாழியைப் பெரிதாகச் செய்யச் சொல்கிறாள். தானும் புதைபடவிரும்புகிறாள். ஆனால் கணவன் இறந்தால் துடியன் பாணன் விறலியர் நிலை என்னாகுமோ என்று இரவலர்க்காய் இரங்குவோராக எளிய பெண்கள் இருந்துள்ளனர்.

ஊரையே அழிக்கும் அணங்குகளாகவும் பெண்கள் கருதப்பட்டுள்ளனர். பெண் இறந்தால் ஆணுக்குப் பாதிப்பில்லை. ஆண் இறந்தால் பெண் கைம்மைக்கோலம். இதைப்பொல்லாச் சூழ்ச்சிச் சான்றோரே என்று பெண் வசைபாடுகிறாள். கணவர் தம்மோடில்லாததால் விருந்தினரைக் கவனிக்க முடியவில்லை என்று கண்ணகியும் சீதையும் புலம்புகின்றனர். ஆனால் கண்டீரக்கோவின் மனைவி கணவன் வேறிடம் சென்றுள்ள நிலையில் தானே இரவலர்க்குப் பிடியானைகளைப் பரிசளிக்கிறாள்.

காதல் உணர்வுகள் பெண் மொழியில் பேசப்படுகின்றன. சமைத்ததை அனைவரோடும் பகிர்கின்றனர். உடைமைச் சமுதாயம் பெண்ணுக்கு முதன்மை இடம் அளிக்கவில்லை. கடைநிலைக்குத் தள்ளுகிறது. எனினும் தாய்வழிச் சமுதாயத்தின் பாடாண் மரபையும் பாத்தூண் மரபையும் மகளிர் முதன்மை மரபுவழிப் பண்புகளையும் பெண்களே அடுத்து வரும் சமுதாயத்திற்குக் கொண்டுசேர்த்துள்ளனர். பெண் அறிவும் தாய்மையும் பெண் ஆளுமையும் தொலைநோக்கும் உலகியல் அறிவும் துணிவும் மனவலிமையும் புறநானூற்றுப் பெண்களிடம் பொங்கி எழுந்ததைப் பெண் மொழியிலேயே பதிவு செய்துள்ளது தனிபெரும் சிறப்பு. கைம்மை எதிர்ப்புக் குரல் ஓங்கி ஒலிக்கிறது. இவை அனைத்தும் புறநானூற்றை மகளிர் இலக்கியமாகவும் பேரிலக்கியமாகவும் உயர்த்துகின்றன. மேல் கணக்கு நூல் பெண்களின் பெருமிதமிக்க சங்க கால வாழ்வில் நம்மை சஞ்சரிக்கச் செய்கிறது.

அந்த வகையில் கவிஞரின் இந்த நூல் காலத்தினால் செய்த உதவி.