மரபுக் கவிதையின் ஆழம் கண்டவர், புதுக்கவிதையில் திசைகளைக் கடந்தவர், உலகம் தழுவிய பேரன்போடும் மானுடப் பெருமிதத்தோடும் கவிதைகளைப் படைத்துக்கொண்டே இருப்பவர். ஒடுக்கப்பட்டவர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களை அடக்கி ஒடுக்க எண்ணும் ஆதிக்கச் சக்திகளுக்கு எதிராகக் கவிதைக் கணைகளைக் குறிபார்த்து எய்து, “மகாகவி’’ என்ற நிலையைத் தாண்டி, சர்வ தேசியக் கவிஞராக நம் காலத்தில் விளங்குபவர் ஈரோடு தமிழன்பன்.v தமிழன் என்கிற பெருமிதம் எப்போதும் அவர் கவிதைகளில் கொப்பளித்துக் கொண்டே ஓடுகிறது. அதே வேளையில் இந்தியத் திருநாட்டின் மேல் கொண்ட பற்று, போலித் தேசியவாதிகளைத் தோலுரித்துக் காட்டிபடியே படர்ந்து விரிகிறது. எண்பத்தாறு வயதிலும் அதே இளமையோடும், துள்ளலோடும் கவிதையைப் படைக்கிற பேராற்றல் இவருக்கு எப்படி வாய்த்தது என்பது வியப்பிற்குரியது.
ஓயாத வாசிப்பு, உணர்வுப் பூர்வமான மனிதநேயம், இயல்பாக ஊறிக்கிடக்கும் படைப்பாற்றல், புரட்சிக்கவிஞரோடு பத்தாண்டு கள் பழகிய கவிதை அனுபவம், பாப்லோ நெரூடா கவிதைகளில் தோய்ந்தது, தாகூர் படைப்புகளில் ஈடுபாடு, உலக இலக்கியங்களை இளவயதில் இருந்தே கற்றுத் தேர்ந்து நினைவில் நிறுத்திக்கொண்ட ஆற்றல், பாரதியைப் பாட்டனாக வும் பாவேந்தரைக் கவிதைத் தந்தையாகவும் வரித்துக்கொண்ட மனநிலை, எதையும் கவிதையாக வடிக்கத் துடிக்கிற துடிப்பு, நாளும் படைப்புவெளியில் புதுமையைச் செய்ய விழைகிற வேகம் என்று பல பொருண்மைகள் இவரின் ஆழமான அடித்தளமாக அமைந் திருக்கின்றன.
யாப்பு வழுவாத மரபுக் கவிதைகளை சென்ற நூற்றாண்டின் ஐம்பதுகளில் எழுதத் தொடங்கி, இதழ்கள், வானொலி, தொலைக்காட்சி, கவியரங்கம் என்று பல்வேறு ஊடகங்களின் வழியே தொடர்ந்து படைப்பு களால் தன்னைத் தகவமைத்துக் கொண்டு மேலெழுந்தவர். கவியரங்க முடிசூடா மன்னராக இவர் குரல் ஓங்கி ஒலித்தது. கவியரங்கக் கவிதைகளை நூலாக்கினால் காலவெள்ளத்தில் காணாமல் போய்விடும் என்று சில விமர்சகர்களும், கவியரங்கத்தில் வெற்றிபெறாமல் போனவர்களும் கதை அளந்தபோது, கவியரங்க மரபுக் கவிதைகளைத் தொகுத்து “தமிழன்பன் கவிதைகள்’’ என்று1970-ல் வெளியிட்டார்.
அந்நூல் தமிழக அரசின் பரிசை 1973-ல் பெற்றது.
அதேபோல் கவியரங்கில் வாசிக்கப்பட்ட புதுக்கவிதைகளை “திரும்பி வந்த தேர்வலம்’’ ’’ஊர் சுற்றி வந்த ஓசை’’ என்று நூல்களாகக் கொண்டுவந்தார். இவற்றின்வழி, கவியரங்கக் கவிதைகள் வெற்றிபெறுவதற்கான நுட்பங்களை இளங்கவிஞர்கள் அறிந்துகொள்ள முடிந்தது. ஹைகூ, சென்ரியு, லிமரைக்கூ, கஜல் என்று கவிதையின் பல தளங்களில் இவர் பயணப்பட்டுப் புதுமைகளைக் கொண்டுவந்தார் என்பது ஒரு புறம் என்றால், மறுபுறம் பெரியாரிய, மார்க்சியக் கருத்துகளை முன்னெடுத்த படியே உலகளாவிய மானுட நேயம், விடுதலை உணர்வைக் கவிதைகளில் விதைத்துக் கொண்டே இருந்தார்.
கட்சி வேறுபாடின்றி எல்லாவற்றையும் கவிதையின் வழியே விமர்சனத் தராசில் ஏற்ற இவர் தயங்கியதில்லை. நெருக்கடிகால அடக்குமுறைகளுக்கு எதிராக விடிவெள்ளி என்ற பெயரில் இவரும் யுஜி என்ற பெயரில் இன்குலாப்பும் எழுதிய வீறார்ந்த கவிதைகள் இலக்கிய வரலாற்றின் பக்கங்களில் என்றும் ஒளிவீசிக் கொண்டிருக்கும். கவியரங்கங்களில் தமிழன்பனும், ரகுமானும் செய்த சாதனைகள் அளப்பரியவை. கலைஞர், கவியரங்கத்தை மக்களின் செவி அரங்கமாக மாற்றியபோது இந்த இரு பெரும் கவிஞர்கள்தான் தளபதிகளாக நின்றார்கள். களைகட்டியது கவியரங்கம்.
தமிழன்பனின் சமகாலத்தில் அவரோடு கவிதைப் பயணம் மேற்கொண்ட பல அருமையான கவிஞர்கள் தொடர்ந்து இயங்குவதில் தொய்வைச் சந்தித்தார்கள். இவரோ தொடர்ந்து கவிதையில் பல உச்சங்களைத் தாண்டி உயரே உயரே பறந்து உலகளாவிய சிந்தனைகளை இன்றுவரை தூவிச் செல்கிறார். பரந்துபட்ட அவர் கவிதையுலகின் ஆழத்தையும் அகலத்தையும் இச்சிறு கட்டுரையில் அடக்கிப் பார்க்க இயலாது எனினும் அங்கங்கே கிள்ளி எடுத்து அள்ளிச் சேர்க்க நினைத்ததை யாவது சொல்ல வேண்டாமா?
கவிஞரின் ஆரம்ப காலக் கவிதைகளில் புரட்சிக்கவிஞரின் தாக்கம் நிறைந்திருந்தது. உவமை, உருவகம், கற்பனை என்று ஊர்வலமாகக் கவிதை புறப்பட்டு வந்தது. அழகியல் உச்சத்தில் அமர்ந்திருந்தது. கவியரங்கக் கவிதைகளின் வழியே இவர் மக்கள் கவிஞராக அறியப்பட்டபோது, கவிதைகளுக்குள் ஒலித்த புதிய சிந்தனைகள், உவமைகள், உருவங்கள், அணிகள் வாசகர்களையும், நேயர்களையும் இவரைச் சுற்றி வலம்வர வைத்தன. “மழை’’ என்ற தலைப்பில் பாடிய கவியரங்கக் கவிதையில்
“வெள்ளியினைக் காய்ச்சிப்பல் துளிக ளாக்கி
விண்ணிருந்தே இறைத்தனரோ! வயிரத் தூளை
அள்ளியள்ளி வீசினரோ! வானில் கவ்வி
ஆய்வறையில் இருந்துகவிழ்ந் திட்ட முல்லை
வெள்ளைநிறப் பாதரசம் இந்த மண்ணில்
விரைந்துமழை யாகியதோ! ஆனால் இங்கே
உள்ளதமிழ் மக்களைப்போல் பிரிந்தி டாமல்
ஒற்றுமையாய் இணைவதொரு வியப்பே யன்றோ?’’
என்று உருவகங்களை உலாவர வைக்கிறபோது தமிழர் ஒற்றுமையோடு இருக்கக்கூடாதா என்ற எண்ணத்தையும் விதைக்கிறார். தமிழன் ஒன்றுபட்டு நின்றால் எதையும் வென்றுவிடலாம் என்பதைச் சொல்லாமல் சொல்கிறார். கண்ணகியைப் பற்றிப் பாடுகிறபோது
“அறத்துப்பால் தனைத்தாய்பால் கற்றாள் பற்றால்!
அதற்கப்பால் பொருட்பாலைத் தந்தை யின்பால்
சிறந்தன்பால் கற்றாள்மேல் பருவம் வந்து
சேர்ந்ததனால் அப்பண்பால் இன்பத் துப்பால்
திறமறிய வேண்டுமந்தப் பெண்பால் என்றே
தினமுமதைக் கற்பிக்க வல்லான் தன்பால்
உறவுகொளும் படிசெய்யும் விருப்பத் தாலே
ஒருமகனைப் பெற்றோர்கள் தேட லானார்.’’
என்று கண்ணகிக்கு மணமுடிக்க எண்ணுகிற பெற்றோரின் விருப்பத்தைப் “பால்.. பால்..’’ என்ற சொல்லை வைத்துக்கொண்டு கவிதையோடு நம்மை அழைத்துக்கொண்டு போய் இன்பத்தைக் காண வைக்கிறார். மதவெறி இன்று நேற்று தலைவிரித்து ஆடவில்லை. தமிழன் தலைநிமிர்ந்த தலைவனாக இருப்பதா என்கிற எரிச்சலில் தில்லியில் பெருந்தலைவர் காமராசரின் மேல் தாக்குதல் தொடுக்கக் கிளம்பிய மதவெறிச் சாமியார்களான குள்ளநரிகளை “நெருப்பு’’ என்ற கவியரங்கக் கவிதையில் பதிவு செய்தார்.
“முன்பெல்லாம் தாடிவைத்துக் காவி கட்டும்
முனிவர்கள் யாகத்திற் கெனைவ ளர்த்தார்!
இன்றந்த மடச்சாதுக் கூட்டம் கூடி
இந்நாட்டுத் தலைவனுக்குக் கொள்ளி வைக்க
முன்வந்து விட்டதெனில் நாட்டில் பொல்லா
முழுமுண்டக் கூட்டமின்னும் வாழ லாமா?
பொன்னுக்குக் காவல்தே வைதான்! இந்தப்
புழுதிகளைப் பொன்மாடத் திருத்த லாமா?’’
பல ஆண்டுகளுக்கு முன் கேட்ட கேள்வி இன்றும் புகைந்து கொண்டே இருக்கிறது. இந்நாட்டுத் தலைவன் என்று பெருந்தலைவரைப் பாடுகிற கவிஞர் திராவிட இயக்கத் தலைவர்களோடு நட்புக் கொண்டவர் என்பது கவனிக்கத்தக்கது. இங்கே தமிழன் என்கிற உணர்வு தலைதூக்கி நிற்கிறது. புரட்சிக்கவிஞரின் வழிவந்த கவிஞர் அவரைப் பாடுகிறபோது ’’பாவேந்தர் பாரதிதாசன்’’ என்ற தலைப்பில்
“தேம்பும் வைகறைக்குத் தீயின் மணமூட்டிக்
கூம்பும் இமைவிளிம்புக் குமைச்சல் போக்கவந்தாய்!
தங்குலம் தங்குலம் எனச்சதிசெய் தருக்கரை
அங்குலம் அங்குலமாய்ப் பாட்டால் அடித்தவன்நீ!
சாதிகள் பேசிடும் சழக்கரின் நாக்கினைத்
தேதித்தாள் போல்தினமும் தெருவிலே கிழித்தெறிந்தாய்.
தாய்வயிறு சாதிச் சரக்கிருக்கும் கிடங்கன்று
சேயதனை அள்ளிச் சிறுகையால் கொண்டுவர!’’
என்று படம்பிடித்துக் காட்டுகிறார். கவிஞரின் மரபார்ந்த புலமையை, அன்றைய காலகட்டக் கவிதைப் போக்கை, ’கதவைத் தட்டிய பழைய காதலி’’ “தமிழன்பன் கவிதைகள்’’ “விடியல்விழுதுகள்’’ போன்ற தொகுப்புகளில் காணமுடியும்.
நமுத்துப் போன சொற்களில் மரபுக்கவிதை நடைபயின்றபோது, பொங்கிப் பெருகிவந்த புதுக்கவிதையில் “தோணி வருகிறது’’ என்று தன் கவிதைத் தோணியைத் துடுப்பசைத்துப் புறப் பட்டார் கவிஞர். புதுக்கவிதையை மக்கள் கவிதையாக மாற்றிய “வானம் பாடி இயக்கக்’’ கவிஞராகத் “திராவகத் தெளிப்பு’’ நடத்தினார்.
“ஆதிக்க வெள்ளத்தின் அடியிலே கிடந்தாலும்
பாதிக்கப் படாதவனே பாஸ்பரசே கண்விழிப்பாய்.
அசோகச் சக்கரத்துத் தேரேறி ஆணவத்தால்
முசோலினி பாதையிலே முன்னேற்றம் கண்டவர்கள்
வேர்வைத்துச் சிலுவை மரம்வளர வேர்வையினம்
வார்க்கட்டும் குருதியென வதைக்கவழி தேர்ந்தவர்கள்
மேல்வானப் பிறைவெளிச்சம் வீழ்கின்ற தம்வீதிv மேலெல்லாம் சவவாடை சவ்வாதால் மிக
மறைத்தோர்
இவர்கள்.’’
படிமங்களை வெறும்
அழகியலுக்காகப் பயன்படுத்தா மல், வாழ்வியல் படிமமாக மாற்றிய கவிஞர், தொடர்ந்து பல அற்புதமான படிமங்களை ஆழமான அர்த்தச்செறிவோடு படைத்த போது, தமிழ்க்கவிதையை இப்படியும் எழுத முடியும் என்பதைக் காட்டினார். “அக்கினி வீணைகளே!’’ என்று வங்க விடு தலையை வாழ்த்திப் பாடினார்
“காகித அணைக்கட்டில்- ஒரு
கனல்நதி சிக்கிடுமோ?
பூகம்பத் தையெவரும்- பையில்
போட்டு முடிவதுண்டா?
தேவி விடுதலைக்கே- நீர்
தேகப்பூத் தூவுகின்றீர்
சாவு முடிவல்ல- ஒரு
சந்திப்பின் ஆரம்பம்.’’
இப்படிப் பாடிய கவிஞர் நாட்டின் நிலையைப் போட்டு டைக்கவும் தயங்கவில்லை. எளிய மக்களின் வாழ்வின் துயர நிலையை அவனே அறிவான்’’ என்று
“மாங்கல்ய மகிமையை
மனைவி அறிவாள்
மணாளன் அறிவான்
இவர்கள் இருவரை விட
மார்வாடியே
அதிகம் அறிவான்.’’
எனறும் “அடையாளம்’’ என்ற தலைப்பில்
“காந்தி கண்ட
இராம ராஜ்யத்தில்
கூனி உண்டா?
உண்டு.
நிமிர்ந்திருப்பாள்
யாருக்கும் அடையாளம்
தெரியாது.’’
என்று சுருக்கமாக வும் இறுக்கமாகவும் சொன்னார். கவிஞரின் “தீவுகள் கரையேறுகின்றன’’ “அந்த நந்தனை எரிச்ச நெருப்பின் மிச்சம்’’ போன்ற தொகுப்புகள் எரிமலை வெடிப்புகளாக எழுந்தன. நெருக்கடி நிலைக் காலத்தை கூர்தீட்டிய சொற்களால் குத்திக்கிழித்தார். போலி தேசியவாதம் பேசித் திரிபவர்களைப் பொசுக்கக் கூடியவை அவை.
“ஆடி அடங்கிய பின்னும்
அரசியல்வாதி
ராஜ்பவன் “லஸ்தர்’’
கதகதப்பில்
புனர் ஜென்மம் பெறலாம்.
ஜனாதிபதியின்
சவத்திற்கு நான்
மரியாதை தர
மறுக்கவில்லை..
இந்தியத் தாயே!
என் வாழ்வுக் கென்ன
மரியாதை நீ
தந்துவிட்டாய்?’’
என்ற கேள்வி நமக்குள் எழுவ தைத் தடுக்க முடியவில்லை. அதே நேரத்தில் “தேசிய கவி சம்மேளனத் தில்’’ அவர் வாசித்த கவிதை “கங்கையும் காவேரியும்’’ என்ற தலைப்பில் அமைந்தது. அதில்
“குமரிமுனைப் பாதத்தில்
முள்ளொன்று குத்திவிட்டால்
இமயம் குனிந்ததனை
எடுத்துவிடும் இந்நாட்டில்…
இடைமெலிந்த காவேரி
நடைதளர்ந்து போகாமல்
வடகங்கை அவளிடையை
வளைத்தணைத்துப் பிடிக்கட்டும்.
இரண்டும் இணைந்திங்கே
நடைபோட்டால் இயற்கையின்
பகைக்கையைப் பற்றிவெற்றிப்
பரிசுகளைப் பறித்திடலாம்.
கங்கை நதியோரம்
காவேரி நதியோரம்
எங்கும் இந்தியாதான்
எவரும் இந்தியர்தான்.’’
என்று முழங்கினார். இப்படிப் பாடினாலும் அவர் பொய்மை யான தேசியவாதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.
சுதந்திரத்தை வைத்துக் கொண்டு என்ன செய்ய என்ற வினா எளிய மனிதனின் இதயத்திற்குள் எழுவதை, பசியும் பட்டினியும் நிறுத்திவைக்க முடியாது. அதனால் “தேவை’’ என்கிற குறுங்கவிதையில்
“சுதந்திரத்தை
என்னால்
சாப்பிட முடியவில்லை
சோறுகொடு.’’
என்று பாடியவர் தொடர்ந்து நாட்டின் நிலை குறித்து எண்ணி எண்ணிக் குமுறுகிறார்.
“நீ எங்கே இருக்கிறாய்?
சுதந்திர தேவியே
சொல்
நீ எங்கே இருக்கிறாய்?
உனது
தேசிய மயிலின்
தோகைக் காசுகள்
மார்வாடிகளின்
கல்லாப் பெட்டிகளில்
இதுவரை!
இனிமேல்
மூலதனத் தீனிபோட்டு
அந்நிய நாடுகளும்
அதன் சிறகுகள் முறிக்கும்.
சுதந்திர தேவி!
உனது பெயரில்
மதவெறி நடத்தும்
மரணத் திருவிழாக்கள்..
பலி பீடங்களில்
தேச பக்தியின் தலை
திருகி எறியப்படும்.
சாதிக் கலவரங்களில்
எரியும் மானுடம்
சாம்பல்
உனது பிரசாதமாய்ச்
சகலர்க்கும் விநியோகம்.’’
என்கிறார்.
“பகலின் உச்சரிப்பு - நீ’’ என்கிற கவிதையில்
“நீ
தொட்டது பொன்னாக வேண்டாம்
இரும்பாகட்டும்
ஆபரணங்களை விட
ஆயுதங்களே நமக்குத் தேவை.
நீ ஆயுதம் தாங்க வேண்டாம்.
தாயகத்தின் கையில்
நீயே ஆயுதமாகு.
எந்தப் பகையிடமிருந்தும்
இந்தியாவைக்
காப்பாற்று- அதோடு
இந்தியனிடம் இருந்து
இந்தியாவைக் காப்பாற்று.’’
என்கிறார்.
போலித் தேசியம் பேசி நாட்டைத் துண்டாடிக் கொண்டிருப்பவர்களை வரலாறு மன்னிக்காது. அவர்கள் உண்மையான தேசியவாதிகளை, சிறைக்குள் தள்ளுவதும் சீரழிப்பதும்,
அடக்கி முடக்க ஆசைப்படுவதும் மிக ஆபத்தானது.
தேசியத்தின் போர்வையில் இனங் களை அழிப்பதும் மொழிகளைச் சிதைப்ப தும் ஏற்கக் கூடியவை அல்ல.
இக்கவிதைகளை எழுதிப் பல ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆனால் நிலை என்ன என்பதை நாளும் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கி றோம். மதவெறியின் உச்சத்தில் உலகம் நின்றாடுமானால் மனிதகுலம் மண்ணோடு மண்ணாகும். நாகரிகச் சமூகத்தில் மூட நம்பிக்கைகள் முடிசூடிக்கொண்டால் அறிவியல் சிந்தனைகள் அனாதைகளாக நிற்கும்.
சாதிய ஏற்றத் தாழ்வுகள் இங்கே எந்த நிலையில் இருக்கிறது என்பதை நாம் அறிவோம். சமூகநீதி என்ன பாடு படுகிறது என்பதையும் அறிவோம். இதைக் கவிஞர்
“அண்ணல் அம்பேத்கர்’’ கவிதையில்
“உயர் சாதியான் வீட்டில்
ஒரு குழந்தை பிறந்தால்
உச்ச நீதிமன்றத்தில்
ஒரு நாற்காலி
துடைத்து வைக்கப்படுகிறது.
ஒடுக்கப்பட்டவன் குடிசையில்
ஒரு குழந்தை பிறந்தால்-அந்தத்
தாயின் கனவில் புதிதாய் ஒரு
கழிப்பறை திறக்கப்படுகிறது’’
என்று துயரம் தோயப் பாடுகிறார்.
தமிழன்பனின் கவிதைகளின் சூடு எப்போதும் எதற்காகவும் குறைவதில்லை. மனிதனை மேலெழ வைக்காத எந்த ஒன்றையும் அவரால் ஏற்கமுடிவதில்லை. மதவெறி காலந்தோறும் மாறாமல் தலைவிரித்துப் பேயாட்டம் ஆடிக் கொண்டே இருக்கிறது. உலகெங்கும் இதே வெறிதான். மனிதனைக் காணமுடியாத நிலைதான் இருக்கிறது. சாதிவாரியாக, மதவாரியாக மனிதனைப் பார்க்கிற சமூகம் மனிதச் சமூகம் என்பதை மறந்து விடுகிறது. கவிஞர் “மனிதனைத் தேட மார்க்கம் என்ன?’’ என்கிற கவிதையில்
“சமயம் என்பதே
சமரசத்தின் மொழிதான்..
அது
கழுகின் அலகுகளில் இப்போது
உச்சரிப்பாகிறது.
நரிகளின்
கடைவாய் ஓரம் சிவந்து வழிகிறது.’’
என்கிறார்.
போலி வேடதாரிகள் மதங் களைக் கையில் எடுத்துக் கொண்டு, கள்ளக் காசைப் பதுக்கிக் கொண்டு, இளிச்ச வாயர்களை மூளைச்சலவை செய்து சமூக முன்னேற் றத்தையே முடமாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை வரலாறு நெடுக நாம் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம். அந்தக் கொதிப்பு
“தொழிலாளிகளின் தோள்களைவிட
எந்தக்
கைலாயம் உயர்ந்தது?
எந்தத்
திருப்பதி புனிதமானது?
மதங்களும் தத்துவங்களும்
மண்டைகள் உடைபட
விவாதம் செய்யலாம்..
ஒரு
நெல்மணியை
விளைவிக்க முடியாது.
கச்சேரி செய்தால்
மழை பெய்யுமாம்..
கச்சேரி செய்பவன் மச்சினிமார்கள்
நாட்டியம் ஆடினால்
உடுக்க ஆடைகள் உற்பத்தியாகுமா?’’
என்று விரிகிறது.
கவிஞரின் அமெரிக்கப் பயணம் அவரை எழுத வைக்கிறது. “உன் வீட்டிற்கு வந்திருந்தேன் வால்ட்விட்மன்’’ என்கிற நெடுங்கவிதையாக விரிகிறது. அதில் சுதந்திரதேவி சிலையைப் பார்த்துக் கேள்வி கேட்கிறார். “விடுதலை தேவி என்னைக் கேட்ட வினா’’ என்ற கவிதையில்“
“வாழ்ந்தவர்
சுதந்தரத்தைப் பறித்துவிட்டபின்
வருகிறவர்களைத் தேடி
எதற்காக இப்படிக் கையில் விளக்கோடு?
ஓ
இது சுதந்தரம் பெற்ற
வெள்ளையர்க்கும் சின்னம்!
சுதந்தரத்தை இழந்த
இந்தியர்க்கும் சின்னம்!’’
என்கிறார். இதற்குள் எத்தனையோ வரலாற்று உண்மைகள் வரிசைகட்டி நிற்கின்றன. மின்னல்
உறங்கும்போது என்கிற தொகுப்பில்
“மிஸிஸிபி மிசௌரி
நதிகளில் ஈராக்கின் இரத்தம்
அதில்
பிம்பப்படும்
வெள்ளை மாளிகை
உலகை விழுங்கும்
கல்லறையாக
வாயைப் பிளக்கிறது.’’
என்றும்-
“ஈரோசிமா நாகசாகியின்
வாழும் மரணங்கள் எச்சரிக்கின்றன
“பூமியைப் போர்களால் பொசுக்காதீர்கள்’’
என்றும் ஆதிக்க வெறியைத் தட்டிக் கேட்கிற குரலைக் கேட்க முடிகிறது. “ஏதும் அறியாள்-’’ என்கிற கவிதையில் காங்கோ நாடு கண்திறந்து பார்க்கிறது.
அதன் அழுகை ஒலி நம்மை அதிர வைக்கிறது.
“மூன்றாம் உலக நாடுகளில்
மரணங்கள்
நேரடிப் போர்களால் நிச்சயமாவதில்லை
ஏவிவிடப்படும் பசி, பட்டினிநோய்
எல்லாம்
போர்கள் போடும் மாறு வேடங்கள்.
காங்கோ நதி
காங்கோ நாடு தாண்டி ஓடியதில்லை
இந்த
ஏதும் அறியாள்
நாடு தாண்டி, கண்டம் தாண்டி
எத்தனையோ முறை செத்துவிட்டாள்.
செத்துக்கொண்டிருக்கிறாள்
இன்னும்
வேறு வேறு பெயர்களில்
வேறு வேறு நாடுகளில்.’’
என்கிறார். இதற்குமேல் சொல்ல என்ன இருக்கிறது? கவிஞரின் “என் அருமை ஈழமே!’’ உருக உருக எழுதப்பட்ட வரலாற்றுக் காவியம் என்றுதான் சொல்லவேண்டும்.
“பவுத்த பாதம் பதியும் முன்
திராவிடம் இருந்த பூமி அது!
பிக்குகளின் உதடுகள் தம்மம்
உச்சரிக்கும் முன்
திக்குகள்
எல்லைகளைத் தமிழால் தீர்மானித்த
நாடு அது!’’
என்று ஒரு பெரும் வரலாற்று நிகழ்வைச் சுருக்கமான வரிகளில் விரித்து வைக்கிறார்.
ஒவ்வொரு நாளையும் யார் தீர்மானிக்கிறார்கள் என்கிற உண்மையை “திசைகடக்கும் சிறகுகள்’’ தொகுப்பில் “எந்த ஒரு நாளிலும்..’’ கவிதையின் வழியே சொல்கிறார்.
“எந்த ஒரு நாளின் செய்திகளையும்
கண்ணீர் தயாரிக்கிறது.
கவலையில் வேகவைத்து எடுக்கப்பட்ட
நேரங்கள் தயாரிக்கின்றன
இலங்கையில், உக்ரைனில், துனிசியாவில்
சிரியாவில் எங்கும்தான்.
எந்த ஒரு நாளின் செய்திகளையும்
கூலிப் படைகள், ஐந்தாம் படைகள் தயாரிக்கின்றன
கையாள்கள் அமரும் பதவி நாற்காலிகள்
சதித்திட்டங்கள் தயாரிக்கின்றன.’’
அரசியல், பொருளாதாரம், வரலாற்று உண்மைகளை அறியாமல் இப்படிப் பட்ட வரிகளை எழுதிவிட முடியாது. குர்து மக்கள் படுகிற துயரை உலகம் ஊடகங்களின் வழி பார்த்து ஊமையாகி நின்றது. ஆனால் அதை
“தமிழினத்துக்கும் குர்து இனத்துக்கும்
மொழிகள் வேறு வேறு
பண்பாடு
கலைமரபுகள் வேறு வேறு
ஆனால்
சாவு பொது, சரித்திரம் பொது.’’
என்று இணைத்துப் பார்க்கிற போதுதான் கவிஞரின் பரந்து பட்ட பார்வை பளிச்சென்று தெரிகிறது.
கவிஞரின் படைப்புலகம் விரிந்து பரந்தது. ஹைகூ, சென்ரியு, லிமைரைகூ, பழமொன்ரியு, கஜல் என்று பல அடுக்குகளைக் கொண்டது. “சூரியப் பிறைகள்“ ஹைகூ தொகுப்பில்
“களத்து மேட்டில்
பதர் தூற்றுகிறார்கள் எனக்கொரு
முறம் தரமாட்டார்களா?’’
“பிணத்தை
மொய்த்து வந்த ஈக்கள்
உனது ரொட்டியின் மேல்.“
“ஓட்டுப் போட்டுவிட்டுத்
திரும்பிவந்த பிணம் திடுக்கிட்டது
தனது கல்லறையில் வேறொரு பிணம்.’’
“பத்தாவது தடவையாக விழுந்தவனுக்கு
முத்தமிட்டுச் சொன்னது பூமி
ஒன்பதுமுறை எழுந்தவனல்லவா நீ!
“ஊர் முழுதும் சுற்றிவந்த
கோயில் மணியோசை என்
குழந்தை கிலுகிலுப்பையில்.“
“களை எடுக்கிறாள்
வயல் காட்டில்
கருக்கரிவாளில் இரத்தக் கறை’’
போன்ற ஹைகூக்கள் அர்த்த அடர்த்தி நிறைந்தவை. பொழிப்புரை, விளக்கவுரை தேவைப்படாத சென்ரியு கவிதைகளை “ஒரு வண்டி சென்ரியு“ என்று பொழிந்தார்.
“அயல்நாட்டுக்குப்
புறப்பட்டார் தலைவர்
உள்நாட்டில் மகிழ்ச்சி.“
-
“வரிசெலுத்தி வாழும்
ஒரே ஒரு விலங்கு
மனிதன்“
அமெரிக்காவின் லிமிரிக் கவிதை வடிவத்தையும் ஹைகூ வடிவத்தையும் இணைத்து மூன்று வரிகளில் லிமைரைகூ என்ற கவிதை வகைமையை வளர்த்தார்.
“குருக்களே தெய்வங்கள் ஆனார்கள்
கோவி லில்லா ஊர்களிலே தெய்வங்கள்
குடியி ருக்கப் போனார்கள்.“
“ஜபமாலை உருட்டும் பாதிரி
பார்வை பட்டுப் பக்தை உடம்பு
கூசி யதுஒரு மாதிரி.“
“சிறையில் பக்தி கற்றான்
வெளியே வந்தான். கோவில் சிலைகள்
திருடித் திருடி விற்றான்.“
“கம்பனுடன் கவிதை போச்சாம்
தமிழன்னைக்குக் கருத்தடைச் சிகிச்சை
எங்கே வச்சு ஆச்சாம்?“
என்று அத்தகைய கவிதைகளிலும் சமுதாயப் பார்வைகளையே முன்வைத்தார். அதேபோல் நம் ஊர் பழமொழியையும் சென்ரியு கவிதைகளையும் இணைத்து “பழமொன்ரியு’’ என்ற கவிதை வகைமையை முன்னெடுத்தார். அதிலும்
“நீர்இடித்து நீர்விலகாது
நீருக்காக இடித்துக் கொண்டால்
மாநிலங்கள் விலகும்.“
“கழுதை கெட்டால் குட்டிச்சுவர்
கெடாமல் இருந்தால்
அதற்குப்
பாராளு மன்றமா?“
“கண்ணைக் கட்டிக் காட்டிலே
விட்டார்கள்.. வெளியே வந்த போது
முப்பது முனைவர் பட்டம்.“
“ஆறிலும் சாவு நூறிலும் சாவு
அம்மா வயித்திலே பொண்ணா
இருக்கையிலும்தான் சாவு.“
என்றும் பலபடத் தன் பார்வையைப் பதிவு செய்தார்.
தொடர்ந்து கவிதையுலகில் ஓயாமல் இயங்கிவரும் தமிழன்பனின் படைப்புத்தளம் உலகளாவிய சிந்தனையோட்டங்களைக் கொண்டது. அன்றாட நிகழ்வுகளுக்கு உடனுக்குடன் கவிதையில் எதிர்வினையாற்றக் கூடியவராக இருக்கும் கவிஞர் எவரோடும் எதற்காகவும் பகைமை பாராட்டாதவர். அதோடு எதற்காகவும் தன் நிலைப்பாட்டில் சமரசம் செய்து கொள்ளாதவர் என்பதை அவருடைய கவிதைகளை நுணுகிப் படிப்பவர் நொடியில் அறிந்து கொள்ள முடியும். இந்திய அளவில் உலகளாவிய சிந்தனைகளை முன்னெடுக்கும் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில கவிஞர்களில் முன்னணியில், முதல்நிலையில் இருப்பவர் ஈரோடு தமிழன்பன்தான் என்பதை அவருடைய படைப்புகளே பறைசாற்றும். ஏனென்றால் “அறிவியல் முழக்கம்“ இடுகிற கவிஞர்
“இன்று
விஞ்ஞானமே
இவ்வுலகின் தலைமை மதம்
மறைகளை
வெளிப்படுத்துவதே இதன்
மறை
ஆராய வழிவிடும்
அறிவே தெய்வம்.’’
என்கிறார். இதை அறியாமல்தான்
“பிணங்களை அலங்கரிக்கிறோம்
நாம்
அம்மணமாய் வாழ்ந்து கொண்டு.’’
என்று சுட்டிக்காட்டு
கிறார். இவையெல்லாமே கவிஞரின் புறப்பாடல்கள்தான்.
அகப்பாடல்களை ஆராய்வது தனி. அவர் தங்கு தடையின்றி எழுதியிருக்கி றார். நெடுங்கவிதைகளும் குறுங்கவிதைகளுமாக எழுதிக் குவித்திருக்கி றார்.அநீதிகளுக்கு எதிராக வெடித்துக் குமுறியிருக்கிறார். புதுப்புது முயற்சிகளை முன்னெடுத்திருக்கிறார். எப்படியென் றாலும் அவர் கவிதைகளில் ஒலிப்பது
“உழைக்க ஒரு சாதி
உறிஞ்சிப் பிழைக்க ஒரு சாதி
இந்தக்
கிழட்டு நீதி
கிழிபடப் போவது எந்தத் தேதி?“
என்கிற குரல்தான். இந்தக் குரல்தான் காலங் காலமாக உலகெங்கும் கேட்டுக் கொண்டே இருக்கிறது.
அந்த உலகக் குரலோடு ஈரோடு தமிழன்பனின் இதயக்குர லும் ஒலித்துக்கொண்டே தான் இருக்கும். அக்குரல் எல்லாத் திசைகளிலும் எதிரொலிக்கும்.