1972-ஆம் ஆண்டு. வியட்நாமில் உள்நாட்டுப்போர் உச்சத்தில் இருந்த நேரம். இந்தப் போரின் உண்மை நிலையை உலகிற்கு உணர்த்தும் என்ற நம்பிக்கையில் நியுயார்க் டைம்ஸ் பத்திரிகை, தன் முதல் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டது. அதே பத்திரிகை, 1993-ஆம் ஆண்டு மார்ச் 26-ஆம் நாள் அன்று சூடானில் நடைபெற்றுக்கொண்டிருந்த உள்நாட்டுப்போரின் கோர உக்கிரத்தை உலகிற்குக் காட்ட மற்றொரு புகைப்படத்தை வெளியிட்டது.
இரண்டு படங்களுக்கும் ஒற்றுமை உண்டு. போரின் கொடூரத்தை குழந்தைகளின் வழியாகச் சொல்லும் படங்கள். பின்னாளில், நோபல் பரிசு, ஆஸ்கார் விருதுகளுக்கு இணையாக புகைப்படக்காரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான புலிட்சர் விருது பெற்ற படங்களும்கூட. இந்தப் படங்கள் வெளிவந்ததற்கு அடுத்தநாள் பத்திரிகை அலுவலகத்திற்கு தொலைபேசி அழைப்புகள் வரத்தொடங்கின.
அந்தச் சிறுமி எப்படி இருக்கிறாள்? பாதுகாப்பாக இருக்கிறாளா அவள்? அந்த சிறுமியின் உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லையே? இப்படியான கேள்விகளோடுதான் அந்த அழைப்புகள் இருந்தன. யார் அந்தச் சிறுமிகள்?
நிக் வுட் எடுத்த படம்
தெற்கு வியட்நாம் போட்ட நாப்பாம் குண்டினால் தாக்குதலுக்குள்ளான வியட்நாமை நேர்ந்த பான் தி கிம் ஃப்யூக் என்னும் சிறுமியினுடையதுதான் அந்தப் படம். பத்திரிகையில் அந்தப் படத்தைப் பார்த்த அப்போதைய அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன் தம் உதவியாளர்களிடம் இந்தப் படம் உண்மையான படம்தானா? என நூறு முறை கேட்டிருப்பாராம்.
1954-ல் வடக்கு வியட்நாம் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்த்து வெற்றி கொண்டது. அதன் பிறகு வடக்கு, தெற்கு என இரண்டாக பிரிந்திருந்த வியட்நாமை ஒரே நாடாக்க விரும்பியது வடக்கு வியட்நாம். ஆனால் தம் சுய ஆட்சி உரிமையை இழக்கவிரும்பாத தெற்கு வியட்நாம் யாரும் எதிர்பாராவண்ணம் வட அமெரிக்காவுடன் கைகோர்த்தது. இந்தப் போரில் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் தெற்கு வியட்நாமுக்கு ஆதரவாக நேரடியாகப் போரில் பங்கேற்றனர். சீனா மற்றும் ரஷ்ய உதவியுடன் வடக்கு வியட்நாம் அமெரிக்கப் படைகளை எதிர்கொள்ளத் தொடங்கியது. இந்தப் போரின் உச்சத்தில் 58,200 அமெரிக்க ராணுவ வீரர்களும், 11 லட்சம் வியட்நாம் வீரர்களும், சுமார் 20 லட்சம் பொதுமக்களும் மாண்டுபோயினர் என்பது வரலாறு.
போர் உச்சத்திலிருந்த காலகட்டமான 1972 ஜூன் 9-ஆம் நாள், தெற்கு வியட்நாம் பெட்ரோலிய ரசாயனம் கொண்ட நாப்பாம் குண்டினை தராங்பாங்க் என்ற கிராமத்தில் வீசியது. நாப்பாம் குண்டுகள் பெரிய சத்தம் எழுப்பாது. நிலத்தைப் பிளக்காது. ஆனால் விழுந்த இடத்தில் தீப்பிழம்பாக எழுந்து, மொத்தமாக சூறையாடும். இந்த நிலையில்தான் தராங்பாங்க் கிராமத்தில் விளையாடிக்கொண்டிருந்த அந்த எட்டு வயதான அந்தச் சிறுமி தீக்காயங்களுடன் ஓடி வருகிறாள்.
போரில் இறந்துபோன குழந்தையை வைத்து கதறிக் கொண்டிருந்த ஒரு மூதாட்டியை அங்கு இருந்த புகைப் படக்காரர்கள் படமெடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது நிக் வுட் என்ற அசோசியேட்டட் பிரஸ்ஸின் புகைப்படக்காரருக்கு அலறித்துடித்து ஓடிவரும் சிறுமியின் உருவம் தென்படுகிறது. ஏதோ நடந்திருக்கிறது என்பதை உணர்ந்து தன் கேமராவில் அந்தச் சிறுமியைப் படமெடுக்கிறார். அந்தச் சிறுமியை புகைப்படம் எடுத்ததோடு நின்றுவிடாமல், அவளுக்கு முதலுதவி செய்து தூக்கிச்சென்று மருத்துவமனையில் சேர்க்கிறார். 1200 டிகிரி செல்சியஸ் வெப்பத்தால் வெந்துபோன அந்தச் சிறுமி, ஆறுமாதம் மருத்துவமனையில் இருந்த அந்தச் சிறுமி 17 அறுவைச் சிகிச்சை செய்து உயிர் பிழைக்க வைக்கப்படுகிறாள்.
நிக் வுட் எடுத்த அந்தப் படம் அசோசியேட்டட் பிரஸ் அலுவலகத்தில் பேசுபொருளாகிறது. சிறுமியின் நிர்வாணத்தைக் காரணம் காட்டி அதை பிரசுரம் செய்ய மறுக்கிறார்கள். நீண்ட விவாதத்திற்குப் பிறகு நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை தனது முதல் பக்கத்தில் இந்தப் படத்தை பிரசுரித்தது. இதன் தொடர்ச்சியாக இந்தப் படம் உலக ஊடகங்களில் வல்லாதிக்கப் போருக்கு எதிரான படம் என அடையாளப்படுத்தப்பட்டது.
உலக நாடுகளின் கடுமையான கண்டனம், உள்நாட்டு மக்களின் எதிர்ப்பு என அமெரிக்காவுக்கு தலைவலி ஏற்பட்டது. பாரிஸ் நகரில் வியட்நாம் போர்நிறுத்த பிரகடனம் கையொப்பமாக, 1973-ஆம் ஆண்டு மார்ச் 23 -ஆம் தேதி அமெரிக்க இராணுவம் வியட்நாமைவிட்டு வெளியேற அதன்பின் வியட்நாம் சோசலிசக் குடியரசு உருவானது. அந்தப் படத்துக்காக நிக் வுட்டுக்கு பத்திரிகைத் துறையின் உயரிய விருதான புலிட்சர் விருது வழங்கப்பட்டது.
கெல்வின் கார்ட்டர் எடுத்த படம்
ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள மிகப்பெரிய நாடு சூடான். வடக்கு சூடான், தெற்கு சூடான் என இரண்டாகப் பிரிந்திருக்கும் இந்த நாட்டின் மீது எகிப்து, பிரிட்டிஷ் ஆகிய இரண்டு நாடுகளுமே தங்கள் வல்லாதிக்கத்தை செலுத்தி வந்தன. சுமார் 22 லட்சம் அரபு மொழி பேசும் இஸ்லாமியர்கள் வசித்த வடக்கு சூடான் மக்களுக்கு அந்தக் காலகட்டத்தில் ஓரளவு நாகரீகம் சென்றடைந்திருந்தது. 1900 காலகட்டங்களில் பிரிட்டிஷ் ஆதிக்கத்தின்கீழ் இருக்கும்போதே இவர்கள் அனைவரும் பெரும்பாலும் கிறிஸ்துவர்களாக மாற்றப்பட்டிருந்த தெற்கு சூடானின் மக்கள் ஆப்பிரிக்க மரபு வழியைச் சேர்ந்தவர்களாகவும், பழங்குடியினராகவும் இருந்த னர். 1953-ஆம் ஆண்டில் சூடானுக்கு சுயாட்சி அளிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் வரை பிரிட்டிஷ் காலனி நாடாகவே இருந்தது சூடான்.
1954-ஆம் ஆண்டு சூடான் குடியரசாக மாறியதும் அனைத்து அதிகாரங்களையும் வடக்கு சூடான் கையில் எடுத்துக்கொண்டு தெற்கு சூடானின் மீது தன் ஆதிக்கத்தை செலுத்தத் தொடங்கியது. மேலும் அரபு மொழியை அரசு மொழியாகவும், இஸ்லாத்தை தேசிய மதமாகவும் அறிவித்ததால், கொதித்து எழுந்தது தெற்கு சூடான். இதனால் 1955-ஆம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் வெடித்தது. 16 ஆண்டுகள் வடக்கு சூடான் ராணுவத்திற்கும், தெற்கு சூடான் மக்கள் விடுதலைப் படைக்கும் நடந்த இந்தப் போர், தெற்கு சூடானுக்கு சுயாட்சி அளித்ததன் மூலம், சுமார் ஐந்து லட்சம் மக்களை பலிவாங்கிய பின் 1972 ஆம் ஆண்டு தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. ஆனால் செவரான் என்ற நிறுவனம் மூலம் தெற்கு சூடானில் எண்ணெய் வளம் இருப்பதைக் கண்டுபிடித்த வடக்கு சூடான் அந்த வருவாயை தானே எடுத்துக்கொள்ள, 1983-ஆம் ஆண்டு மீண்டும் உள்நாட்டுப் போர் தொடங்கியது.
1993-ஆம் ஆண்டு சூடானில் நடந்த உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்காக உணவுப் பொருட்களை எடுத்துச் சென்ற ஐக்கிய நாடுகள் சபையின் குழுவின் விமானத்தில் போர் பாதிப்புகளைப் பதிவு செய்வதற்காக கார்ட்டர் என்ற புகைப்படக்காரரும் சென்றார். தெற்கு சூடானின் ஒரு கிராமத்தில் இறங்கிய அந்தக் குழு அங்கு அமைக்கப்பட்டிருந்த நிவாரண முகாம் மூலம் உணவுகளை விநியோகிக்க, பட்டினியால் துவண்டிருந்த மக்கள் அதைப் பெற அலைமோதினர்.
இந்த நிகழ்வுகளைப் பதிவுசெய்த கார்ட்டர் அங்கிருந்து சிறிது தூரம் நடந்தார். அப்போது உணவைப் பெறும் அவசரத்தில் பெற்றோரால் தனித்துவிடப்பட்ட ஒரு சிறுமி நடக்கக்கூட வலிமையில்லாமல், அந்த உணவு முகாமை நோக்கி பசி முனகலுடன் தவழ்ந்துவருவதை கார்ட்டர் பார்க்கிறார். ஒரு கட்டத்தில் அவளால் முடியாமல் சோர்ந்து போய் விழுந்துவிட, இந்தக் காட்சியைப் புகைப்படமெடுக்க அமர்கிறார் கார்ட்டர்.
கழுகு அருகில் அமர்ந்திருக்கிறது. அதற்கு முன்னால் உடல் நலிந்து கிடக்கிறாள் ஒரு சிறுமி. அந்த கழுகிற்கு இப்போது பசி இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதற்கு கொஞ்சம் பசி எடுத்தாலும் அதன் இரை அதன் கண்முன் உள்ள அந்தக் குழந்தைதான். எப்படி இருந்தாலும், இன்னும் கொஞ்ச நேரத்தில் அந்தக் குழந்தையை அந்தக் கழுகு தூக்கிச் சென்று தன் இடத்தில் வைத்து கிழித்து, கிழித்துத் தின்று தன் பசியைப் போக்கிக்கொள்ளலாம்.
அதற்கடுத்த சில விநாடியில் அந்த சிறுமியை தனக்கு இரையாக்கிக் கொள்ள அந்தப் பக்கம் வந்து அமர்ந்தது ஒரு கழுகு. சுமார் இருபது நிமிடங்கள் அந்தக் கழுகு சிறகை விரிப்பதற்காக காத்திருந்த கார்ட்டர், அது நடக்கவில்லை என்பதால் மெதுவாக அந்த சிறுமியின் அருகில் சென்று அந்தக் காட்சியை தனது கேமராவில் பதிவு செய்கிறார். பின் அந்தக் கழுகை மட்டும் விரட்டிவிட்டு அங்கிருந்து திரும்பிவிட்டார் கார்ட்டர்.
இந்தப் படம்தான் போரினால் பாதிக்கப்பட்ட சூடானின் நிலமையை முழுமையாக உலகத்திற்கு எடுத்துச் சொன்னது என்பதில் மறுப்பேதும் இல்லை. ஆனால் அந்தப் புகைப்படக்காரரின் மனிதநேயம் என்னானது? என்று கார்ட்டர் மீது வைக்கப்பட்ட விமர்சனத்திற்கு, அவரால் பதில் சொல்ல இயலவில்லை.
குழந்தையின் துன்பத்தைப் போக்காமல் அவள் படும் துயரத்தை சரியான கோணத்தில் படமெடுக்கும் பொருட்டு தன் புகைப்படக் கருவியின் லென்சை சரிசெய்து கொண்டிருந்த கார்ட்டர் இன்னொரு கொலையாளி என்று செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் டைம்ஸ் என்ற பத்திரிகை விமர்சனம் எழுதியது. எந்த படத்திற்காக புலிட்சர் விருது பெற்றாரோ, அந்தப் படத்தால் மன உளைச்சலுக்கு ஆளான கார்ட்டர், 1994 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் நாள், தம் 33 ஆம் வயதில் தற்கொலை செய்துகொண்டார்.
அறம் எது?
நிக் வுட் காப்பாற்றிய பான் தி கிம் ஃப்யூக் தற்போது கனடாவில் வசித்து வருகிறார். கனடிய அரசின் ஆர்டர் ஆஃப் ஆன்ட்ரியா விருதும், யோர்க் பல்கலைக்கழகத்தின் டாக்டர் ஆஃப் லா பட்டமும் பெற்ற இவர், 1994-ஆம் ஆண்டு யுனெஸ்கோ நல்லெண்ணத் தூதுவராக நியமிக்கப்படடுள்ளார். உடலின் 65 சதவீதப் பகுதித்தசைகள் உருகி ஒன்றோடு ஒன்று ஒட்டிப்போனதால் இன்று சொல்லொண்ணா வலியை தாங்கி நின்றாலும் வியட்நாம் போரின் உயிருள்ள சாட்சியாக வாழ்ந்து கொண்டிருக் கிறார்.
2005 ஆம் ஆண்டு வரை நீடித்த இந்தப் போரில் சுமார் 20 லட்சம் மக்கள் வறுமையின் காரணமாகவும், கொடுமையான தொற்றுநோயின் காரணமாகவும் இறந்தனர். 40 லட்சம் மக்கள் அகதிகளாகவும் இடம் பெயர்ந்தனர். 2011-ல் தெற்கு சூடானில் நடத்தப்பட்ட பொதுவாக்கெடுப்பின் மூலம் தெற்கு சூடான் உலகின் தனி நாடாக மலர்ந்தது. ஆனாலும் அந்தச் சிறுமிக்கு என்ன ஆயிற்று? அந்தச் சிறுமி எங்கிருக்கிறாள்?
அந்தச் சிறுமியை காப்பாற்றி விட்டார்களா? உயிரோடு இருக்கிறாளா என்ற கேள்விகளுக்கு இன்று வரை பதில் யாரிடமும் இல்லை.
புலிட்சர் விருது பெற்றோர் பட்டியலில் இவர்கள் இருவர் பெயரும் இருக்கிறது. ஆனால், கிம் ஃப்யூக் பவுன்டேசன் என்னும் பெயரில் போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவிக் கொண்டிருக் கும் கிம் ஃப்யூக்கின் ஒவ்வொரு செயலிலும் நிக் வுட் ஒரு புதிய படைப்பை வழங்கியவராகப் பிறப் பெடுத்துக்கொண்டே இருக்கிறார். 19 வயதான நிக் வுட்டுக்கு இல்லாத மனிதநேயம், 32 வயதான கார்ட்ட ருக்கு இல்லாமல் போனது வருந்தத்தக்கது மட்டுமல்ல அறம் எது? என்ற வினாவை எழுப்புவதற்குமானது. மனிதத்தைத் தேடியவர்களின் பெயரை, வரலாற்றின் பக்கங்களில் நிறைத்து வைத்திருக்கிறது என்பதை நிக் வுட் நமக்கு நிரூபித்திருக்கிறார்.