தந்தை பெரியார் அவர்களைத் தமிழர் தலைவர் என்கின்றோம். காரணம் என்ன? தமிழைப் பற்றிப் பெரியார் கூறியுள்ள கருத்துகள் அவர் தம் தொண்டர்களையே தொடக்கத்தில் நடுக்குறச் செய்தவை. தமிழர்களைப் பெரியாரைவிட வெளிப்படையாகத் திட்டியவர்கள் வேறு எவரும் இல்லை என்பதும் வெள்ளிடைமலை. தமிழ்மொழியிலாவது பாண்டித்தியம் பெற்று நூல்கள் ஏதேனும் செய்தாரா என்றால் அதுவுமில்லை.
அல்லது ஏதேனும் உயர்ந்த பதவிகளில் இருந்தாரா, அதன் காரணமாகப் புகழப்படுகின்றாரா என்றால் அதுவுமில்லை.
பெரியார் அவர்கள் மொழியானது கருத்தை வெளிப்படுத்த ஒரு சாதனம்- என்பதைத் தவிர அதற்கு முக்கியத்துவம் ஏதும் தந்தாரில்லை. தமிழர்கள் ஆங்கிலம் படிக்க வேண்டியதன் அவசியத்தை இவரினும் அழுத்தந் திருத்தமாக இனம், மதம், சாதி, நாடு, அரசியல் போன்ற எந்த எண்ணமும் தடை செய்ய இயலாதவாறு- இவை எவையும் தனது சிந்தனைப் போக்கிற்கு வழிகாட்டவோ, வரையறை வகுக்கவோ விடாதவாறு தெளிவாகச் சிந்தித்தார்.
தமது சிந்தனையின் பயனாகப் பிறந்த கருத்துகளை எள்ளளவும் அச்சமின்றியும் தனது புகழைப் பாதிக்குமே என்ற எண்ணம் கூடத் துளியும் இன்றி மிகத் தெளிவாகக் கூறிவந்தவர் தந்தை பெரியார் அவர்கள்.
சிந்தனையால், சொல்லால், செயலால், உலகக் குடிமகன் என்ற சொற்றொடருக்கு எடுத்துக்காட்டாய் இறுதிவரை இருந்து வந்தார்.
இப்படிப்பட்டவரைத் தமிழர் தலைவர் என்பது எப்படிப் பொருந்தும். அதுவும் தமிழைத் தாய்மொழி யாகக் கொண்டிராத ஒருவரைத் தமிழர் தலைவர் என்பது எப்படிப் பொருந்தும்? நமது எதிரிகள் இன்றில்லாவிட்டாலும் காலப்போக்கில் இந்த வினாவை எழுப்பி நமது மக்களைக் குழப்பமடையச் செய்வார்கள். குழம்புவதில் வல்லவர்களான நம்மவர்களும் இதனை ஒத்துக்கொண்டு அறிவுத் தெளிவு அடைவார்கள்(?)
பெரியார் அவர்களைத் தமிழர் தலைவர் என்று பல்வேறு துறைகளிலும் உள்ள பலர் கிட்டத்தட்ட கடந்த பல ஆண்டுகளாய் ஒத்துக்கொண்டு வந்திருக்கின்றனர்.
இவர்களில் மிகப் பெரும்பாலோர் அவர்தம் கடவுள், மதக்கருத்துக்களையோ, ஏனைய சமுதாயச் சீர்திருத்தக் கருத்துகளையோ அன்றி அரசியல்- முக்கிய மாகக் கட்சி அரசியல், மக்களாட்சி, இந்திய ஒருமைப்பாடு போன்றவை பற்றி அவர் வெளியிட்டுள்ள கருத்துகளையோ- சிறிதும் ஒத்துக்கொள்ளாதவர்கள். அப்படி இருந்தும் பெரியார் அவர்களை அவர்கள் அனைவரும் தமிழர் தலைவர் என ஒத்துக்கொண்டதற்கான காரணம் எதுவாக இருக்கும்?
தந்தை பெரியார் அவர்கள் காங்கிரசி−ருந்து விலகியது முதற்கொண்டு 1925 முதற்கொண்டு- அவரது பொது வாழ்க்கையைச் சிறிது நோக்குவோமே யானால் இதற்கான காரணம் எளிதில் புரியும்.
1930-ஆம் ஆண்டுகளிலேயே பொதுவுடைமைக் கருத்துகளில் ஊறித்திளைத்தவர் பெரியார். உண்மை யான பொதுவுடைமைவாதிகள், மனிதனால் செயற்கை யாக அரசு, மதம் எனும் பெயர்களால் உலகப் படத்தில் வரையப்பட்டுள்ள கோடுகளை ஒத்துக்கொள்ளாதவர்கள் என்பதும், "உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்' என்பதைத் தாரக மந்திரமாக ஏற்றுக்கொண்டவர்கள் என்பதும் உலகறிந்த உண்மை.
அப்படி இருக்கப் பொதுவுடைமையக் கொள்கை யுடைய பெரியார் அவர்கள் பார்ப்பன எதிர்ப்பை மைய மாகக் கொண்ட வர்க்க பேதத்தை ஒழிப்பதற்குப் பதில் வகுப்பு பேதத்தை ஒழிக்க முயற்சி எடுத்துக்கொண்டு- செயல்புரிய நேர்ந்த அவசியம் என்னவெனில்; சாதிப்பிரிவு இந்தியாவில் மட்டும் இருந்தமையும், வர்க்க வேறுபாட்டை விட வருணவேறுபாடு கொடுமை நிறைந்ததாகவும், அதன் எதிரிகளை நிலைகுலையச் செய்யும் ஆற்றல் வாய்ந்ததாகவும் இருந்ததால்தான்.
இதன் காரணமாக அவரை வகுப்புவாதி என்றும், இன்னும் இறுதிவரை அவர் ஒழிக்கப் போராடிய சாதியின் பெயராலேயே அவரை இந்நாட்டுப் பத்திரிகைகளும், வானொலி−யும் அழைத்ததுமான நிலைமை உண்டானதையும் பற்றி அவர் கவலைப்படவில்லை.
தனக்கு உலகப்புகழ் வேண்டுமன்றோ அல்லது குறைந்தபட்சம் இந்தியா முழுவதுமாவது தான் புகழப்படவோ வேண்டுமென்றாவது தந்தை பெரியார் அவர்கள் விரும்பி இருந்தாரானால் அதற்கேற்ற வேடங்களை அவர் எளிதில் புனைந்திருக்க முடியும். தனது புரட்சிகரமான எண்ணங்களைத் தமிழகத்துப் பட்டிதொட்டிகளிலெல்லாம் கூறிக் கல்லடியும் சொல்லடியும் பட்டிருக்க வேண்டியதில்லை. எரியும் நெருப்புகளுக்கிடையே அந்த நாள் மதுரையிலும், எரித்துவிட்ட பந்தலுக்கிடையே இந்த நாள்வரை மாநாடுகள் நடத்தி இருக்கவேண்டுவதில்லை.
தமிழகத்தை யார் ஆண்டால் எனக்கென்ன? நானுண்டு, எனது புரட்சிக் கருத்துகளடங்கிய புத்தகங்கள் உண்டு என்று பொதுமக்களிடமிருந்து ஒதுங்கி புரட்சிக்கருத்துகளை எண்ணுவதோடும், எழுதுவதோடும் நின்றிருக்கலாம். இதன் காரணமாக இந்தியாவெங்கனும் உள்ள சமூக சீர்த்திருத்த கருத்துக்கள் கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டிருக்கும். இந்தியத் தலைமை கிட்டிவிட்ட காரணத்தால் உலகப் புகழும் ஓடிவந்திருக்கும்.
ஆனால் பெரியார் அவர்கள் சமுதாயச் சீர்த்திருத்தக் கருத்துகள் கருதத்தக்கவை. எழுதத்தக்கவை என்ற நிலையோடு நின்று விடாது. கைக்கொள்ளத் தக்கவை என்ற நிலையும் ஏற்பட வேண்டும் என்று எண்ணினார். மேலும் சாதியின் பெயரால் இடுப்பொடிந்து கிடந்த தமிழரெல்லாம், தமது பார்ப்பன எதிர்ப்புக் கொள்கை எனும் "கைத்தடி'யின் மூலமாக நொண்டி நடக்கவாவது வேண்டும் என்பதால் சாதி முதலாளி வர்க்கத் தைச் சாடுவதைத் தனது பெரும் போராட்டமாக இறுதிவரை நடத்தி வந்தார்.
இதனால் பதவி எதற்கும் எப்போதும் ஆசைப்படாத பெரியார், காமராசரையும், பின்னர் கழக அரசையும் ஆதரித் தார். இவற்றின் காரண மாகத் தமக்கு எழுந்த அவப்பெயரைப் பற்றி அவர் சிறிதும் கவலை கொள்ளவில்லை.
தங்களது தகுதிக்கு மீறிய பதவிகளின் மீதே மோகங்கொண்டு நாள்தோறும் செயல்புரிவோரைப் பார்க்கின்ற நாம்- வலி−ய தனது எல்லையைச் சுருக்கிக் கொண்டு தமிழகம் முழுவதும் தள்ளாத வயதிலும் பெரியார் பவனி வந்த காரணம், தமிழர்களை எப்படியாவது தன்மானம் பெறச் செய்யவேண்டும். பகுத்தறிவு கொளச் செய்ய வேண்டும்- பழைமைப் பிடியி−ருந்து விடுதலை பெறும் மனப்பாங்கு வரச்செய்யவேண்டும், சாதியின் பெயரால் தான் பார்ப்பானின் வைப்பாட்டி மகனாய் வைக்கப்பட்டுள்ள நிலையை உணர்ந்து பொங்கி எழச்செய்ய வேண்டும்; ஆளுந்திறமையும் தமிழர்க்குண்டு என்பதை மாற்றார் உணர்ந்து கொள்ளச் செய்யவேண்டும் என்பதை எல்லாம் குறிக்கொளாகக் கொண்டு தனது செயல்படும் எல்லையைத் தமிழகத்திற்குள் தானே சுருக்கி வைத்துக்கொண்டார். என்றாலும் இன்று பெரியாரியலை உலகம் தொழுது கொண்டிருக்கிறது.
எண்ணத்தளவில், எழுத்தளவில் அவர்தம் கருத்துகள் உலகளாவியவை, ஆனால் அடிமைத்தமிழன்மீது தாம்கொண்ட மீளாக்காதலால் தமிழர் உயர்வையே தனது ஒரே குறிக்கோளாகக் கொண்டு இறுதிவரை அயராது உழைத்தார்.
அவரின்றேல் சாதிக்கொடுமையின் மொத்த உருவமாகத் திகழ்ந்துவந்த தமிழகம் இன்று எந்த நிலையில் இருக்கும் ஒன்பதை எண்ணிப் பார்த்தால் தெரியவரும் தந்தை பெரியாரின் அருமை. இதனால்தான் எல்லாரும் அவரைத் தமிழர் தலைவர்- ஏன் உலகத் தமிழர்களின் ஒரே தலைவர் என ஏற்றுக்கொண்டனர்.
""குடிசெய்வார்க்கு இல்லை பருவம் மடிசெய்து மானம் கருதக் கெடும்.''
என்ற குறள் கருத்துக்கேற்ப தமிழக்குடியின் உயர்வொன்றே கருதி இறுதிவரை போராடினார் பெரியார். சிற்றெறும்பெனத் தாம் சேர்த்த செல்வமனைத் தையும் தமிழர் சமுதாய நலன்கருதி இறுதிமுறி எழுதிவைத்துச் சென்றார். எனவேதான் அவர் தரணி புகழும் தமிழத் தலைவர்.
அந்தத் தலைவர் காட்டிய வழி நடந்து உலகச் சிந்தனையாளர் சமுதாயத்தின் முன்னோடியாகத் தமிழன் விளங்கும் நாளை விரைவில் கொணர நாமெல்லாம் அயரது பாடுபடுவதே நாம் தந்தைக்காற்றும் நன்றிக் கடனாகும்.