(மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் கடந்த பிப்ரவரி 6 அன்று பிருந்தாசாரதி கவிதைகள் பற்றி தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மா.திருமலை தலைமையில் ஆய்வரங்கம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் ஆற்றிய உரையின் கட்டுரை வடிவம்.)

எண்ணும் எழுத்தும்எனக்கு வழங்கப்பட்டிருக்கக்கூடிய "எண்ணும் எழுத்தும்' புத்தகமாக இருக்கட்டும், அதனுடைய கருப்பொருளாகட்டும், இதெல்லாம் பத்து நிமிடத்திற்குள் அடக்கக்கூடிய ஒன்றே கிடையாது. ஒருநாள் முழுக்க ஆய்வரங்கத்தில் பேசக்கூடிய அளவிற்கு அற்புதமான சிந்தனைகளை உள்ளடக்கி பிருந்தாசாரதி கவிதைகளை எழுதியிருக்கிறார்.

இந்த உலகம் எத்தனையோ பேரைப் பார்த்திருக்கிறது. கோடானுகோடி பேர் வாழ்ந்துமுடிந்திருக்கிறார்கள், வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள், வாழப் போகிறார்கள். அதிலே மிகப்பெரிய உடல் பலம்கொண்ட மல்யுத்த வீரர்கள் இருந்திருக் கிறார்கள், பேரழகிகள் இருந்திருக்கிறார் கள், கோடிக்கணக்கான செல்வங்களைப் படைத்த செல்வந்தர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். பலவிதமான திறமைகளை உடையவர்கள் இந்த உலகத்தில் வாழ்ந்திருக்கிறார்கள். விளையாட்டு வீரர்கள். பாடகர்கள், பாடகிகள். ஆனால் இந்த உலகம் இவர்கள் யாரையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்வதில்லை. திரும்பிப் பார்த்தால் இந்த உலகம் ஞாபகத்திலே வைத்துக்கொண்டிருக்கக்கூடியவர்கள் கவிஞர் களாக மட்டும்தான் இருக்கிறார்கள்.

brindhasarathy

Advertisment

திருவள்ளுவரிலே தொடங்கி ஔவை யிடம்வந்து அப்படியே வரிசையாக இன்றுவரை பார்க்கும்போது இந்த உலகம் வரலாற்றில் யாரை பதிவுசெய்துகொண்டிருக்கிறதென்றால் அற்புதமான கவிதைகளைப் பாடியவர்களை மட்டும்தான் அது ஞாபகத்தில் வைத்துக்கொண்டிருக்கிறது. இன்றைக்கு மிகப்பெரிய அளவிலே நம்மையெல்லாம் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கக்கூடிய சினிமாவிலேகூட எத்தனையோ பேர் வாழ்ந்து, நடித்து மடிந்துவிட்டாலும்கூட பாடல்கள் வடிவிலே அன்றாடம் நமக்குள் உலவிக்கொண்டிருக்கக்கூடியவர்கள் அந்த திரைப்படங்களில் பாடல்களை எழுதிய கவிஞர்கள்தான்.

கவிஞர் கண்ணதாசனை யாரும் எந்த காலத்திலும் மறக்கமுடியாது. இன்றைக்கு கவிதை எழுதிக்கொண்டிருக்ககூடிய வைரமுத்துவிலிருந்து, முத்துக்குமாரிலிருந்து இனி வரப்போகிறவர்கள்வரை யாரையுமே காலம் மறக்காது. கவிஞன் அத்தனை பெரியவன். கவிதை என்ற வார்த்தையே மிக அற்புதமான ஒன்று. தைப்பது என்று சொன்னால் உங்களுக்கெல்லாம் தெரியும். மனசுக்குள்ளே வைத்து தைப்பது. கற்பனையோடு தைப்பது கதை. ஆனால் கவிதை அப்படியல்ல. அது விதை. மனதிற்குள் விழுந்தால் அது நமக்குள் முளைக்கும். நாம் காதுவழி விழுகின்ற கவிதை நம் மனதிற்குள் முளைத்து, நம்மையும் ஒரு கவிஞனாக ஆக்கி சிந்திக்கச் செய்வது.

தண்டனையைக் கூட்டமுடியுமா?

Advertisment

கவிக்குயில் சரோஜினி நாயுடுவை நீங்கள் மறந்திருக்கமுடியாது. அவரை தேசியத்திற்காக போராடியவர் என்கின்ற முறையிலே சிறையிலே போட்டுவிட்டார்கள். அவர் விடுதலை ஆகின்ற நேரம் வருகின்றது. ‘நாளைக்கு உங்களுக்கு விடுதலை’ என்று சொல்கின்றபோது சரோஜினி நாயுடு சிறை அதிகாரியைப் பார்த்து, "இன்னும் ஒரு பத்து நாளைக்கு நான் இங்கேயே இருக்கேனே. தண்டனையைக் கூட்டமுடியுமா?' என்று கேட்டார். எல்லோரும் எப்போது சிறையைவிட்டுப் போவோம் என்று நினைத்துக்கொண்டிருக்கின்ற நிலையிலே இந்த அம்மையார் இன்னமும் பத்துநாள் இருக்கின்றேனே என்று ஏன் சொன்னாரென்றால், அந்த சிறைச்சாலைக்குள்ளே அவர் நிறைய ரோஜாச் செடிகளை வளர்த்திருந்தார். அந்த ரோஜாச்செடிகள் மொட்டுவிட்டிருந்தன. அது பூவாக பூப்பதற்கு இன்னும் சில தினங்கள் தேவை. பூக்கின்ற அந்த தருணத்தை, பூக்கின்ற அந்த பூக்களை நான் பார்த்துவிட்டுப் போகிறேன். இதைவிட இந்த அனுபவத்தைவிட எனக்கு வெளியுலகத்திலே சென்றுதிரிவது எனக்கு பெரிதில்லை என்று அவர் சொன்னார். அதைக் கேட்ட அத்தனை பெரும் சிலிர்த்துப்போனார்கள். இது வரலாற்றுப் பதிவு.

கம்பர்

இப்படி ஒவ்வொரு கவிஞருக்குப் பின்னாலேயும் நாம் நினைத்துப் பார்த்து சிலிர்ப்பதற்கு எத்தனையோ சம்பவங்கள். உங்களுக்கெல்லாம் கம்பர் ஞாபகத்திலிருக்கும். கம்பனை சோழன் பெரிய அளவிலே ஆராதித்தான். ஆனால் ஒருநாள் அகந்தையோடு சொல்கிறான். இரண்டு பேரும் உலா போகும்போது கம்பனைப் பார்த்து சோழன் சொல்லுகிறான். "இந்த நாடே எனக்கு அடிமை. இந்த நாட்டிற்கு நான் ஒரு அரசன் என்று நினைக்கும்போது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கிறது. இல்லையா கம்பா?' என்று கேட்கும்போது கம்பனுக்கு சோழனுக்குள்ளே ஒரு ஆணவம் வந்துவிட்டது தெரிகிறது. உடனே அதைப் பார்த்துவிட்டு கம்பர் அந்த ஆணவத்தை மட்டம்தட்டும் விதமாகச் சொல்லுகிறார். "இவர்களெல்லாம் வேண்டுமானால் உங்கள் அடிமைகளாக இருக்கலாம். ஆனால் நீங்கள் என் பாட்டுக்கு அடிமை' என்று அவர் சொல்கிறார்.

சோழரால் அதைத் தாங்கிக்கொள்ளமுடியவில்லை. ‘தனக்குக் கட்டுப்பட்ட, தன் நாட்டிலே வசிக்கும் ஒரு கவிஞன். அவன் எனக்கு அடிமையென்று நான் நினைக்கப்போக, ஆனால் அவனோ தன் பாட்டுக்கு... தனக்கு அடிமையென்று சொல்லிவிட்டானே. இந்த கம்பனை சும்மாவிடக்கூடாது மட்டம்தட்டணும் என்று வருத்தப்படுகிறான். கம்பனுக்கு தாசி ஒருத்தி இருக்கிறாள். அந்த தாசியிடம் சோழர் ஒரு விஷயம் சொல்லுகிறார். தாசி சொல்கிறாள் "கம்பனை நான் கவிழ்த்துக் காட்டுகிறேன்' என்று.

அதேபோல கம்பரைத் தேடிவந்து தாசி சொல்லுகிறாள். "இந்த மாதிரி ராஜா ரொம்ப வருத்தப்படுறாரு. நீங்க என்ன இப்படி பண்ணிட்டீங்களே!' என்று சொல்லும்போது, "கம்பர் உனக்கு என்ன வேணும்?' என்று கேட்கிறார். "உங்களை மயக்கமுடியாதுன்னு எனக்கு தெரியும். இருந்தாலும் அரசனிடம் நான் சொல்லியிருக்கிறேன். உங்களை மயக்கி நீங்கள் என் அடிமை என்று எழுதி வாங்கிக்கொண்டு வந்து தருகிறேன் என்று சொல்லியிருக்கிறேன்' என்கிறாள். "நான் உனக்கு அடிமைன்னு எழுதிக்கொடுக்கனும். அவ்வளவுதானே.

brindhasarathy

’'என்று கம்பரும் எழுதிக்கொடுக்கிறார்.

அதில் கம்பர் என்ன எழுதியிருக்கிறார் தெரியுமா? ‘இந்த தாசிக்கு நான் அடிமை’ என்று எழுதிக்கொடுக்கிறார்.

தாசி மறுநாள் ராஜாவிடம் அதை கொண்டுவந்து கொடுத்து, "பாருங்க.

அவரும் ஒருத்தருக்கு அடிமை என்பதை நான் எழுதி வாங்கிவந்துவிட்டேன்.' என்று சொல்லும்போது, கம்பர் சிரித்துக்கொண்டே சொன்னார். "அந்த வார்த்தையை மிகச்சரியாக படியுங்கள். தாஸ்ரீ என்று அந்த தாசியை பிரித்துப் படிக்கணும். தாஸ்ரீ என்று சொன்னால் மகாலட்சுமியை குறிக்கிறது. அந்த மகாலட்சுமிக்கு நான் அடிமை என்றுதான் எழுதித்தந்தேனே தவிர இவளுக்கு நான் அடிமை என்று நான் எழுதித்தரவில்லை' என்று அந்த இடத்திலே அவர் சொன்னபோது கவிஞர்களை யாராலும் எக்காலத்திலும் வெல்லமுடியாது என்று ஒரு உயர்வான கருத்து தோன்றியது.

அருந்தவப்பன்றி

பாரதிகூட ஒரு ஐந்து ஆறு ஆண்டுகள் கவிதை எழுதாமல் இருந்திருக்கிறான் போராட்டத்தில். அந்த காலகட்டத்தில் தான் கவிதை எழுதாத நிலையை அவன் எப்படித் தெரியுமா சுட்டிக்காட்டுகிறான்.

"இந்த காலத்தில் நீங்கள் பாரதியை கவிஞன் பாரதி என்று சொல்லாதீர்கள்.

அந்த காலகட்டங்களில் நான் பேனாவைத் தொடாமல் சும்மா இருந்த காரணத்தினால் ஒரு பன்றிக்கு ஒப்பானவன். ஆனாலும் மலம்தின்னும் பன்றியோடு என்னை ஒப்பிட்டுவிடாதீர்கள். அதனாலே அருந்தவப்பன்றி என்று நீங்கள் என்னை சொல்லுங்கள்' என்று கவிதை எழுதாத காலத்தில் வாழ்ந்த தன்னை அவன் ஒரு பன்றியோடு ஒப்பிட்டுக் கொள்கிறான்.

அப்படியென்றால் கவிதை எழுதுவதோ, ஒவ்வொரு கவிதையை முத்தாய்ப்பாகப் படைப்பது என்பதோ, எத்தனை பெரிய சிந்தனைக்குரிய ஒரு விஷயம் என்று உங்களுக்கு நான் சொல்லத்தேவையில்லை.

ஒன்றானவன் உருவில் இரண்டானவன்

இந்த அரங்கத்துலே நிறைய சொல்லிவிட்டார்கள். பேசுவதற்கு மிகவும் குறுகிய காலம் கொடுத்திருக்கிறார்கள். இந்த "எண்ணும் எழுத்தும்' என்கிற கவிதை நூலிலே அவர் எண்களை மையமாக வைத்து ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு என்று நாம் பயன்படுத்துகின்ற கணிதத்திலே வருகின்ற எண்களை மையமாகவைத்து கவிதை எழுதியிருக்கிறார். பெண்களை மையமாக வைத்து கவிதை எழுதுவது சுலபம். எல்லா கவிஞர்களுடைய கவிதைகளும் பெண்களிடம்தான் தொடங்கும். பெண்ணையும் நிலாவையும் தவிர்த்துவிட்டுக் கவிதை பாடியவர்கள் இந்த உலகத்தில் இல்லை.

அப்படிப்பட்ட ஒரு காலச்சூழலில் பெண்களை விட்டுவிட்டு எண்களைத் தொட்டு எழுதுவதற்கு என்று சொல்லும்போது, எண்களை நினைக்கும்போதே பயமாக இருக்கிறதே. எண்கள் சம்பளமாக வரும்போதுதான் நமக்கு சந்தோஷம். ஆனால் அந்த எண்களை வைத்துக்கொண்டு என்ன சிந்திப்பது? என்ன எழுதுவது? என்று உங்களுக்கு மிகவும் வியப்பாக இருக்கும்.

சிவபெருமான் அவ்வையைப் பார்த்து ஒன்று, இரண்டு, மூன்று என்று பாடச்சொன்னபோது "ஒன்றானவன்… உருவில் இரண்டானவன்… மூன்றானவன்… நான்கானவன்' என்று அந்த அம்மா மிகவும் அழகாகப் பாடி ஒரு வழியைக் காட்டி விட்டுப் போய்விட்டார். அதை இவர் திருப்பிப் பாடினால் அது ரிப்பீட். அப்படி இருக்க அதையெல்லாம் மறுதலித்து விட்டு நம் வாழ்க்கையோடு இந்த எண்கள் எந்த அளவிற்கு சம்பந்தப்பட்டிருக்கின்றன. இந்த எண்களை எப்படியெல்லாம் பார்க்கலாம். இப்படிக்கூட பார்க்கமுடியுமா என்று வியப்பேற் படக்கூடிய அளவிலே ஒவ்வொரு கவிதையையும் பாடியிருக்கிறார்.

அவர் எழுதி இன்றைக்கு இந்த மேடையிலே ஆய்வுசெய்யப்படுகிற அத்தனை கவிதைப் புத்தகங்களும் அசாதாரணமான கவிதைகள். இந்த கவிதைகளை ஒரு சாதாரணமான கவிஞனால் எழுதமுடியாது.

ஒரு ஞானியாக மாறி...

சந்தம் சந்தித்துக்கொண்டால் போதும். அதெல்லாம் ஒரு கவிதை. ஓ, கவிதை என்பது இத்தனை சுலபமா? என்று நினைத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு நடுவிலே அந்த மலிவான கவிதைகளையெல்லாம் நீங்கள் விட்டுவிடுங்கள். அது கவிதையை நோக்கி இழுப்பவை. கண்ணடிப்பவை. ஆனால் பிருந்தாசாரதி இந்த விஷயத்திலே ஒரு மஹரிஷியாக மாறி, ஒரு ஞானியாக மாறி, ஊறி ஒவ்வொரு விஷயத்தையும் அணுகியிருக்கிறார்.

ஆற்றினுடைய தோலாக மணலைக் கருதுவது என்பது எப்பேர்ப்பட்ட கற்பனை? நினைத்துப் பாருங்கள். இன்றைக்கு எங்கேயாவது வண்டியில் மணல் போவதை நீங்கள் பார்த்தால், கையில் மணலை நீங்கள் எடுத்தால் உங்களுக்கு தோல்தான் ஞாபகம்வரும். நம்முடைய தோலை யாராவது உரித்தால் நமக்கு எவ்வளவு வலிக்கும்?

அப்படி இன்றைக்கு ஆறுகளை சுரண்டிக்கொண்டிருக்கின்ற தன்மை, அந்த பார்வை வெகு அசாதாரணமானது. இதில் பல கவிதைகள் இருந்தாலும் ஓரிரண்டு கவிதைகளைச் சொல்லி என் உரையை நிறைவுசெய்து கொள்கின்றேன்.

ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு என்பதில் நான்கு குறித்து இவர் எழுதிய கவிதை இருக்கிறதே அது எனக்கு மிகவும் பிடித்தது. ஏனென்றால் நான் நாலாம் எண்காரன். பதிமூன்றாம் தேதி பிறந்தவன். அதனாலேயோ என்னமோ அந்த கவிதையும் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. ரொம்ப அழகான கவிதை. கூர்ந்து கவனித்துக் கேளுங்கள். எண்களை வைத்து இப்படியெல்லாம் கற்பனை செய்து பார்க்கமுடியுமா என்று உங்களுக்கெல்லாம் தோன்றும். இது அற்புதமான தூண்டுதல்.

"நாலுபேர்' என்ற தலைப்பிலே அந்த கவிதையை எழுதியிருக்கிறார்.

பல்லக்கோ.... பாடையோ....

யாரோ நாலு பேர் தேவைப்படுகிறார்கள் தூக்குவதற்கு.

அதைப் பெற்றுவிடுபவர்கள்

பாக்கியசாலிகள்

பெறாதவர் அன்னக்காவடிகள்.

வாழ்க்கையில் வேறு எதையும்

சம்பாதிக்காவிட்டாலும்

இந்த நாலு பேரையாவது

எப்பாடுபட்டும் சம்பாதித்துவிடு.

புகழோ பணமோ

உறவோ நட்போ

கொஞ்சம் கொடுத்து வாங்கினால்

கிடைத்துவிடும் இது.

பெரும்பாலும்

விலைகொடுத்துதான்

வாங்க வேண்டும்

பல்லக்குத் தூக்கிகளை.

கடமைக்காகவாவது

கிடைத்துவிடுவார்கள் சிலர்

கடைசியில் பாடை தூக்க.

அன்பால் பெறாமல்

விலைக்கோ கடமைக்கோ நாலு பேரை

வாங்கவேண்டி இருந்தால்

நாலு கால் கொண்டே

வாழ்ந்திருக்கலாம் நீ.

நாலை எப்படி சம்பந்தப் படுத்துகிறார் பாருங்கள். பல்லக்கு தூக்கவும் நான்குபேர் வேண்டும். பாடையை தூக்கவும் நான்குபேர் வேண்டும். அதை பெற்றுவிடுபவர்கள் பாக்கியசாலிகள். நான் பல்லக்கில் உட்காந்திருந்தா போதுமா? தூக்குவதற்கு நான்கு பேர் வேண்டாமா? அப்போது எனக்கு கிடைத்தால்தான் நான் பாக்கியசாலி.

நீ எதை சம்பாதிக்காவிட்டாலும் பரவாயில்லை. ஏனென்றால் அனாதைப் பிணமாக கிடந்தால், காக்கையும் கழுகும் கொத்தித் தின்றுவிடும். அப்போது தூக்கிக்கொண்டு போய் போடுவதற்கு நான்குபேர் வேண்டுமல்லவா. குறைந்தபட்சம் இந்த நான்கு பேரையாவது நீ சம்பாதித்துவிடு.

புகழோ, பணமோ, உறவோ, நட்போ கொஞ்சம் கொடுத்து வாங்கினால் கிடைத்து விடும். இது பெரும்பாலும் விலைகொடுத்துதான் வாங்கவேண்டும். பல்லக்குத் தூக்கிகளே சும்மா. வந்துவிடுவார்களா? பணம் கொடுத்தால்தான் வருவார் கள். கடமைக்காவது கிடைத்து விடுவார்கள் சிலர் கடைசியில் ‘"விட்டா நாறிடும்ப்பா. தூக்கிட்டுப்போய் போடனும்.' என்று தன்னுடைய நலன் கருதியாவது தூக்கிக்கொண்டு போய்விடுவார்கள்.

அப்போது என்ன அர்த்தம்?. வாழ்க்கையில் மனிதர்களைச் சம்பாதிக்க கற்றுக்கொள்ளுங் கள். அன்பு செலுத்துங்கள். அன்பு காட்டுங்கள். அன்பு கொடுங்கள். அன்பு உங்களுக்கு திரும்பக்கிடைக்கும். உங்களைச் சுற்றி நிறைய மனிதர்கள் இருக்கவேண்டும். நீங்கள் மனிதர்களை சம்பாதிக்க துப்பில்லாதவர்களாக ஆகி விட்டால் அவ்வளவுதான், இந்த நான்காம் எண் கவிதை உங்களுக்கு அந்த கருத்தை உணர்த்துகிறது.

என்னைப் பொருத்தவரை நம்பர் இல்லையென்றால் ஏதுமில்லை. நீங்கள் கொஞ்சம் முயற்சிசெய்து பாருங்கள். எண்களைப் பயன்படுத்தாமல் உங்களால் பேசவேமுடியாது. ஒன்றிலிருந்து ஒன்பது எண்களை நீங்கள் பயன்படுத்தவேகூடாது. பயன்படுத்தாமல் ஒரு வாழ்க்கையை நீங்கள் வாழ்ந்துபார்ப்பதற்கு முயற்சிசெய்து பாருங்கள். உங்களால் எதுவுமே செய்யமுடியாது.

‘காலையிலே எழுந்திருந்தேன் அப்படியென்று சொல்வதில் ஆரம்பித்து ஒவ்வொரு செயலும் செய்வதில்... பாருங்கள் ஒவ்வொரு என்பதில் ஒன்று வந்துவிட்டது.

அதனால்தான் நம்மவர்கள் ஒரு பழமொழியாக சொல்லும் போதும்கூட, ‘எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்.’ எண்ணை முன்னால்வைத்து எழுத்தைப் பின்னால் வைத்துச் சொன்னார்கள். எண்தான் எல்லாம். எண்தான் நியாயத்தின் வடிவம். எண் இல்லையென்று சொன்னால் எதுவுமே இல்லை. எண்ணுடைய பெருக்கம்தான் எண்ணம். நிறைய சொல்லலாம்.

அந்த கவிதை மட்டுமல்ல பல கவிதைகள் ஒன்றிலிருந்து ஒன்பதுவரை இவர் எழுதியிருக்கிற ஒவ்வொரு கவிதையும்.

எழுத்தில் வாழ்க்கை

உலகத்திலேயே எழுத்தில் வாழ்க்கையைச் சொன்னவன் தமிழன். இங்கே "அ ஆ' என்கிற எழுத்து இருக்கிறதே அதற்குள் வாழ்க்கையைச் சொல்லியிருக்கிறான். "அ' என்கிறபோது குழந்தை அழுதுகொண்டுதான் பிறக்கிறது.

"அ ஆ இ' இரண்டு சொட்டு பாலையாவது எனக்கு ஈவாய் என்று கத்துகிறது. அதற்குபிறகு "உ ஊ'. அந்த வடிவத்தைப் பாருங்கள். தலைநிமிர்ந்து பார்க்கின்ற வடிவம். அடுத்து "ஐ'. பின்பக்கம் பாருங்கள், அமர்ந்திருப்பதுபோன்று இருக்கும். அடுத்து "ஒ ஓ'. எழுத்து ஓடத்தொடங்குகிறது. இப்படி எழுத்துக்குள் வாழ்க்கையைச் சொன்னவன் நம்முடைய தமிழன். இறுதியில் "ஃ'- இல் முடியும். முதுமை வந்து கையிலே கோலைப் பற்றிக்கொண்டு தரையிலே நிற்கும்போது, இரண்டு காலோடு, இந்தக் கோல் மூன்றாவது கால். ஆக மனிதனுடைய வாழ்க்கை "ஃ'-இல் முடிகிறது. இப்படி வாழ்க்கையை எழுத்திலே சொன்னவன் தமிழன். உலகத்துக்கே மிகப்பெரிய வழிகாட்டியானவன் தமிழன். அவன் எண்களோடு பொருத்திச்சொல்லுகிறான்.

கவிதையை விரிவாகவும் சொல்லலாம், சுருக்கமாகவும் சொல்லலாம். விரிவாகச் சொன்னால் அது கம்பராமாயணம். சுருக்கமாகச் சொன்னால் அது திருக்குறள்.

நம்முடைய பிருந்தாசாரதி அவர்கள் திரைப்படத் துறையிலே வசனகர்த்தாவாக, இயக்குநராக வலம்வந்து கொண்டிருப்பவர். அவர் திரைப்படத்துறையில் ஒரு கவிஞராக அவதாரம் எடுக்கவில்லை. ஆனால் அவர் அப்படியொரு அவதாரத்தையும் எடுக்கவேண்டும். அப்படி எடுத்து நிறைய பாடல்கள், ஏனென்று சொன்னால் அந்தப் பாடல்கள்தான் ஒரு 100 ஆண்டிற்குப்பிறகு நமக்குள் என்றைக்கும் வாழ்ந்துகொண்டிருக்கும். "உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்… உலகத்தில் போராடலாம்' என்கின்ற பாடல் 50, 60 வருடங்களுக்கு முன்னால் ஒரு கவிஞனால் எழுதப்பட்டது. நாம் இன்றைக் கும் பாடிக்கொண்டிருக்கிறோம்.

அதுபோல இன்னும் 50, 60 ஆண்டுகளுக்குப்பிறகு அவர் சிந்திக்கப்பட வேண்டுமென்று சொன்னால் அவர் இந்த கவிதைகளை மீடியாவிற்குள்ளும் கொண்டுவந்து மீடியாவிலும் ஒரு விஸ்வரூபம் எடுத்து அவர் தன்னுடைய கடமையைச் செய்யவேண்டும்.

அதேசமயம் இந்த கவிதைத் தொகுப்புக்களை உயர்வான அமைப்பில் சாகித்திய அகாடமி போன்ற அமைப்பில் உள்ளவர்கள் கவனிக்கவேண்டும். அவர்கள் கவனித்து இதற்குரிய அங்கீகாரத் தைத் தரவேண்டும்.