ழுத்துகள் எத்தனையோ விதவிதமான உணர்வுகளை வெளிப்படுத்துகிறது. மகிழ்ச்சி, மௌனம், கோபம், பயம், கவலை, துக்கம், வலி என்று எழுத்துகள் ஏற்படுத்தும் உணர்ச்சிகளை அடுக்கிக் கொண்டே சென்றாலும் வலி எனும் உணர்வை கையில் எடுத்துப் பேசும் இலக்கியங்கள் சொற்பமாகவே படைக்கப்படுகின்றன. அதிலும் பெண்களின் வலியை எழுத்துலகில் பேசுவதும் முக்கியமாக அவர்களின் அந்தரங்க வலிகளையும், வேதனைகளையும் முழுக்க முழுக்க பேசி செல்வதுமென்பது அரிதாகவே மாறிவிட்ட நிலையில் எழுத்தாளரும் கவிஞருமான சல்மாவின் ""மனாமியங்கள்"" பெண்ணுலகின் அத்தனை விடயங்களையும் ஒளிவுமறைவின்றிப் பேசும் ஒரு அற்புதப் படைப்பு.

பெண் உலகைப் பற்றி இவ்வளவு ஆழமாய் பேசிய ""மனாமியங்கள்"" பெண் இலக்கியங்களில் தனக் கான தக்க இடத்தைப் பிடித்து நிற்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. தான் சார்ந்த பின்னணியிலிருந்து ஒரு களத்தை கையிலெடுத்து, கதைவடித்து அதை நாவலாக்கியிருக்கிறார் ஆசிரியர்.

women

மனாமியங்கள் - கனவுகள்.

Advertisment

பெண்களுக்கு எல்லாமே இங்கு கனவுகளில் தான் கை கூடுகிறது. தனக்கு பிடித்த படிப்பு, துணை, வேலை, பயணம், ஆடை என்று எல்லாமே இங்கு களைந்து போகும் கனவுகளில் தான் அரங்கேறுகிறது. யாருமே குறுக்கிட முடியாததால் தான், கனவுகளில் பெண்கள் தனக்கான உலகை கட்டமைத்து கொள்கி றார்களோ?

பெண்களின் பாடே மோசம் என்றால்... அதிலும் இஸ்லாமிய பெண்களின் நிலை இன்னும் மோசம் என்ற நிலையை வெளிப்படுத்தும் வண்ணம் கதைக்களம் நகர்கிறது.

மார்க்கங்களை கையில் எடுத்துக் கொண்டு அதன் மூலம் பெண்களை என்றுமே தங்களுக்கு அடிமையாக வைத்துக் கொள்வதை பெரும் சாதனையாக உணர்கிறார் கள் ஆண்கள். இஸ்லாமியத்தில் மட்டுமல்ல எல்லா மதங்களிலும் ஆணுக்கு ஒரு நியதி, பெண்ணுக்கு வேறு. அதை கட்டமைத்தவர்கள் ஆண்கள் தானே, பின்னர் எப்படி அவை பெண்ணிற்கு சாதகமாக இருக்கும். பெண்களை அடிமைப் படுத்துவதில் எந்த மார்க்கமும் தவறுவதில்லை. அப்படியாய் இந்த கதையில் வரும் ஹஸன் எனும் கதாபாத்திரம் மார்க்கத்தை தன் கையில் எடுத்துகொண்டு அதில் சிக்குண்டு யதார்த்தங்களையும், வாழ்வின் இயல்புகளையும் மீறிக் கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டு தானும் வாழாமல், பிறரையும் வாழ விடாமல் இறுக்கங்களோடும், மனப்போராட்டங்களோடும் உழல்கிறான்.

Advertisment

மனிதர்களை நல்வழிப்படுத்த வேண்டிய மார்க்கமே மனிதநேயத்தை சூறையாடுவதாய் தோன்றுகிறது.

நீ பொட்டச்சி... நீ பொட்டச்சி... என்று பெண்களை ஒடுக்கும் வார்த்தையை ஹசன் பயன்படுத்தும் ஒவ்வொரு இடத்திலும் ஆணாதிக்கத்தின் உச்சமாகவே தோன்றுகிறான்.

ஒரு ஆணைச் சுற்றி எத்தனை, எத்தனை பெண்களின் வாழ்க்கை இருக்கிறது? பாட்டி, தாய், சகோதரி, மனைவி, மகள், மருமகள், பேத்தி என்று அநேக உறவுகளால் பின்னப்பட்டிருக்கிறது ஆணின் உலகம். ஆனால் அதை தவறாய் புரிந்து கொண்ட ஹசன் போன்ற ஆண்கள், தன்னைச் சேர்ந்தல்ல, தன்னைச் சார்ந்தே அவர்களை இருக்க வைக்க முயல்கிறார்கள்.

மார்க்கத்தை கையிலுயர்த்திப் பிடிக்கும் ஹசன் தன் வாழ்க்கையில் மட்டும் அதை மீறி நடக்கிறான். முதல் மனைவியின் ஒப்புதலின்றி இரண்டாம் மணம் முடிக்கிறான். தன்னை நம்பி வந்த மெஹரையும், தன் பிள்ளைகளையும் பற்றி சற்றும் சிந்திக்காமல் சுயநலத்தின் உச்சமாகிறான். ஹசன் கையிலுள்ள இம்மையை விட்டு, பார்க்காத மறுமைக்காய் தினம் தினம் வாழ்கிறான்.

ஹசனால் கேள்விக்குறியாகிறது மெஹரின் வாழ்க்கை. தங்கள் வாழ்வைப் பற்றிய ஆசைகளோடும், கனவு களோடும் தன் மண வாழ்விற்குள் நுழைகிறார்கள் பெண்கள். திருமண பந்தத்திற்கு ஆதாரமான தாம்பத்தியமே சிலருக்கு பொய்த்துத்தான் போகிறது. அதையும் தாங்கிக்கொண்டு வாழத்தான் எத்தனிக்கிறார்கள் பெண்கள். ஆனால் ஆணவத்தின் உச்சம் அல்லது அதன் எதிர்ப்பதமான ஆணாக தோற்று விட்டோம் என்ற இயலாமை நிலை என இரண்டுமே ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு. தான் தோற்றாலும் தான் ஆண் என்ற அகம்பாவம் கொண்ட ரஹீமும், நாம் ஆணாய் தோற்றுவிட்டோம் என்று உலகை எதிர்கொள்ளத் தயங்கும் குற்ற உணர்வு கொண்ட சாகுலும் ஒரே கோட்டில்தான் நிற்கிறார்கள். இவர்களால் பர்வீன் மற்றும் சுபைதாவின் வாழ்க்கை பாழாகிறது.

இந்த மூன்று பெண்களில் சுபைதா, தனக்கு கிடைத்த ஏதோ ஒரு வாழ்வை ஏற்றுக் கொண்டு வாழ்ந்து விடுகிறாள்.

மெஹர், தன் கணவனை பழிவாங்கும் எண்ணத்தில் வேறொரு வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கிறாள்.

அதுவே அவளுக்கு வினையாகி தன் சுயத்தை இழக்கச் செய்து, தனது பொக்கிஷமான பிள்ளைகளை இழக்க வைக்கிறது. பிள்ளைகளைப் பிரிந்து அவள் படும் வேதனை மனதை அழுத்திப் போடுகிறது. இறுக்கத்திற்குள்ளே வாழ்ந்து முடிக்க பெண்கள் தங்களைப் பழக்கப்படுத்திக் கொள்கிறார் களோ? என்ற மனக் குமுறல் என்னை முழுவதுமாய் ஆட்கொள்கிறது.

இவர்களுள் பர்வீன் சற்று மாற்றி யோசிக்கிறாள். மீண்டும் இறுக்கத்திற்குள் செல்லாமல் தனக்கென்று தனி வழியைத் தேடிச் செல்கிறாள். மகளிர் சுய உதவிக்குழு, அது சார்ந்த பயிற்சிகள் என்று தன் வெளி உலகத்தை அமைத்துக் கொண்டாலும், அவளது அந்தரங்க உலகில் உடல் பசியால் அவள் படும் பாட்டைக் கண்டு ஒரு பெண்ணாய் கலங்கித்தான் போனேன். பர்வீனிற்கும், மூர்த்திக்கும் இடையிலான தொடர்பு எந்த வகையிலானது என்று மனதை குடைந்தால் அர்த்தமற்ற உறவுகளுக்குள் இந்த உலகம் பெண்களை தள்ளுவதில் எவ்வளவு குறியாய் இருக்கிறது என்றே தோன்றுகிறது.

ஆண்களின் அடக்குமுறைகளையும், நம்பிக்கைத் துரோகங்களையும் விட்டு விலகினாலும் ஒரு கட்டத்தில் பெண்ணுடல் ஒரு ஆணுடலை தேடத்தான் செய்கிறது.

we

அப்படியாய் கட்டமைக்கப்பட்டு விட்டோமோ? என்ற நெடுங்கேள்வி என் நெஞ்சைத் துளைக்கிறது.

தங்கள் வாழ்வின் இயலாமையைப் புலம்பல்களாலும், ஒப்பாரிகளாலும் கடக்கும் ஆசியா போன்றவர்கள் வாழ்வையே சூனியமாக்குகிறார்கள். தன்னைச் சுற்றியுள்ளவர்களை இன்னும் வேதனைக்குள்ளாக்குகிறார்கள். ஆசியாவின் புலம்பல்களுக்கு நடுவிலான மெஹரின் வாழ்க்கை, அடர்த்தியான பாரத்தை மனதிற்குள் கடத்துகிறது.

இவர்களெல்லாருக்குமிடையே கண் பார்வையற்ற ஆமினாவின் வாழ்க்கை சற்று வித்தியாசமாகத்தான் இருக்கிறது. பார்வையற்றவர்களின் உலகில் ஒரு பெண் பார்வையற்றவரின் உலகம் முற்றிலும் வித்தியாசமானதாகவே இருக்கிறது. ஆமினா சிறு வயதில் இழந்த விளையாட்டுகளும், வயதிற்கு வந்த போது அவள் கேட்ட அம்மாவின் வசவுகளும், அதன் பிறகு வீட்டை விட்டு செல்லாமல் வீட்டையே உலகமாக மாற்றிக் கொண்டதும். படிக்கப் படிக்க நீர்த்தாரைகள் கண்களிலிருந்து கசியாமலில்லை. பின் தனக்கான உலகம் இதுதான் என்றான பிறகு அதை வாசனைகளாலும், சப்தங்களாலும், தொடு உணர்வாலும் நிறைத்து வாழத் தொடங்கிய ஆமினா நன்னி மனதிற்கு நெருக்கமான கதாபாத்திரமாய் மாறித்தான் போனார்.

ஆமினாவின் கண்கள் இருண்டிருந்தாலும், மனம் வெளிச்சத்தால் ஜொலிக்கிறது. இம்சிக்கும் வாலிப வயதை தானும் கடந்த அனுபவத்தால் பக்குவமாய் பேசி பேத்தி பர்வீனை அவள் அணுகியமுறை அத்தனை அழகு. ஆமினா நன்னியை பிடித்துப்போக எத்தனை, எத்தனை காரணங்கள் இருக்கின்றன. ஆமினா நன்னியின் மனாமியக் காட்சிகள் எவ்வாறு இருக்கும் என்ற நினைப்பும் அடிக்கடி சுழன்றது.

சாஜிதா, அஷ்ரப் என்ற இரண்டு குழந்தை களும் சிறுவயதிலேயே படும் அவஸ்தை களையும், ஆதரவற்ற தன்மையையும் கடக்கத் தடுமாற்றமாக இருந்தது. வாழ்க்கையின் இனிமையான குழந்தை பருவத்திற்கான அனைத்தையும் இழந்து இயல்பை தொலைத்தவர்களாய் வளர்கிறார்கள். அம்மாவிடம் இருப்பதா? அப்பாவிடம் இருப்பதா? என்ற போராட்டத்திலேயே சிறு பிள்ளைப் பருவம் சிரமத்துடன் நகர்கிறது.

இரு நன்னிகளின் வசவுகள், அம்மாவின் துக்கமேறிய முகம், அப்பாவின் மார்க்கத் திணிப்பு மற்றும் அம்மாவை வெறுக்க செய்யும் வகையிலான அப்பாவின் பாடங்கள் என்று குழந்தைகளின் போராட்டங்கள் மனதைக் கனமாக்குகிறது.

வாழ்வின் போராட்டங்களால் எத்தனையோ பெண் பிள்ளைகள் தவறான பாதையில் செல்லும் சூழலில் வாழ்வின் கடினங்கள் சாஜிதாவிற்கு நல்வழியைக் காட்டுகிறது. இலட்சியங்களில் தோற்றா லும் தன் வாழ்வைத் தகவமைத்துக் கொள்ளும் சாஜிதாவின் ஆற்றல் மனதை உற்சாகப்படுத்துகிறது. அம்மாவுக்கும், அத்தைக்கும் கிடைக்காத படிப்பை தனதாக்கினால், வாழ்வை ஜெயிக்கலாம் என்றுணர்ந்து, தனது வாழ்வை செம்மையாக்கிக் கொள்ள தொடர்ந்து போராடுகிறாள். சாஜிக்கு சிறுவயதிலேயே குழந்தைதன்மையைப் போக்கி முதிர்ந்த முடிவுகளை எடுக்கப் பழக்குவித்தது வாழ்க்கை.

கதை நெடுக... ஒரு ஆணாவது பெண்ணை உணர்ந்துவிடுவான் என்ற என் எதிர்பார்ப்பு கடைசி வரைப் பொய்த்துத்தான் போனது. அஷ்ரப் ஒருவன் தான் பெண்களை சற்று உணருகிறான், பெரியவனா னால் அவனும் ஆண் என்ற ஆனவத்திற்குள் புகுந்து விடுவானோ? எனறே தோன்றியது. உலகில் நல்லுள்ளம் படைத்த ஆண்களும் இருக்கத்தானே செய்கிறார்கள் என்று என்னை தேற்றிக் கொண்டேன்.

இறுதியில், மகள் வழிதவறிப் போய்விடுவாளோ என்ற பயத்தில் சாஜித்தாவைப் படிப்பை நிறுத்தச் சொல்லும் மெஹரின் வார்த்தைகள் என்னைப் பெரும் ஏமாற்றத்திற்குள்ளாக்கியது. எத்தனைப் பட்டாலும் மார்க்கத்தின் பிடியிலும், அறியாமையின் கைகளிலும் பெண்மனம் சிக்கிக்கிடக்கவே எத்தனிக்கிறது. பெண்மனம் படிப்பின் அவசியத்தை உணர மறுக்கிறது. இன்று பெண்கள் முன்னேறி விட்டார்கள் என்று பெருமிதம் பேசினாலும், அனேக பெண்களின் நிலை கேள்விக் குறியாகவே இருப்பது மனதை வேதனைக் குள்ளாக்குகிறது. நாவலின் முடிவு என்னை சற்று அதிரத்தான் வைத்தது.

""மனாமியங்கள்"" எனக்குள் பல ஆழமான புரிதல்களையும், பல ஆழமான கேள்விகளையும் ஏற்படுத்திச் சென்றிருக்கிறது.

எனக்கு முற்றிலும் புதிதான வாழ்க்கை முறை என்றாலும் மிகவும் எளிமையாய் பயணிக்கச் செய்தது கதை நடை. அனேக இடங்களில் அழகியல் அள்ளி தெளிக்கப்பட்டிருந்தது. பெண்களின் வலிகளை கருவாய் கொண்டு கதை விரிந்தது அருமை. பெண்களின் யதார்த்தங்களை பதிவு செய்து கொண்டே, பெண்களின் அந்தரங்கங்களையும் தனது ஊடுருவிய பார்வையால் அழகிய இலக்கியமாய் படைத்த எழுத்தாளர் சல்மாவின் ""மனாமியங்கள்"" பெண்ணுலகின் அழுத்தமான குரல். கனவுகள் கலைந்து போக கூடியதுதான், இருப்பினும் கனவு களால்தான் பெண்களின் உலகம் நிரம்பி கிடக்கிறது.

இந்நாவல் ஒரு எழுத்துச் சுதந்திரத்தின் சாயல், குறிப்பாக பெண் இலக்கியத்தில். நிச்சயமாய் இந்நாவல் கடப்பவரின் உள்ளத்தின் ஆழத்தில் வலியையும், அந்த வலி தன் சுவடையும் ஏற்படுத்தி விட்டுச் செல்லும். ஆண்களிடம் தன் வலிமை மிகுந்த குரலால் ""மனாமியங்கள்"" காத்திரமாய் பேசும் என்று தீர்க்கமாய் நம்புகிறேன்....