சங்க காலத்திலிருந்தே பல நூற்றாண்டுகளாக கல்வி, சுதந்திரம், சொத்துரிமை, மத சடங்குகள் மற்றும் அந்தஸ்தில் கவனம் செலுத்தும் உரிமை ஆகியவற்றில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதில் தனித்துவமாக இருக்கிறது தமிழ்நாடு. பண்டைய தமிழ்ச் சமூகத்தில் பெண்கள் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளனர்.
சங்க காலம் முதல் சமீபகாலம் வரை பெண்களின் பல்வேறு பாத்திரங்களை இலக்கியம் கண்டிருக் கிறது. அதன் வளமான பாரம்பரியத்தைக் கொண்ட தமிழ் இலக்கியம், காதல், இயற்கை, சமூக சீர்திருத்தம், பாலின சமத்துவம் ஆகியவற்றில் மகத்தான பங்களிப்பைக் கண்டுள்ளது. ஆண்கள் ஆதிக்கம் செலுத்திய இடத்தில் அவ்வையார், ஆண்டாள், காக்கைபாடினியார் மற்றும் காரைக்கால் அம்மையார் போன்ற சிறந்த பெண் எழுத்தாளர்கள் இருந்தனர். தமிழ் இலக்கியத்தில் ஆரம்பகால பெண் கவிஞர்களில் ஒருவரான அவ்வையார், ஒரே பெயரில் வெவ்வேறு காலகட்டங்களில் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. அவ்வையார் களின் இலக்கியம் நீதி இலக்கியமாகப் பெயர் பெற்றது.
அவ்வையாரின் பாடல்கள் பெரும்பாலும் வீறுகொண்ட பெண்மையைக் கொண்டாடுகின்றன, அடுத்த தலைமுறையை வளர்ப்பதிலும் வடிவமைப்பதிலும் பெண்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றன. அவரது சில பாடல்கள் பெண்களை தலைவர்களாகவும் சுயமாக முடிவெடுப்பவர்களாகவும் சித்தரிக்கின்றன. பாரம்பரிய பாலின பாத்திரங்களின் அடக்குமுறையை உடைக்கின்றன.
பண்டைய காலத்திலேயே தமிழ் இலக்கியத்தில் உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான பெண் கவிஞர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் உணர்வுகளை பல்வேறு வழிகளிலும் வெளிப்படுத்துகிறார்கள். பெண்கள் இன்று வரலாற்றில் நீண்ட தூரம் வந்திருந்தாலும், அவர்கள் இன்னும் சமூகத்தில் பாகுபாட்டை எதிர்கொள்கிறார்கள் என்பது வருத்தத்திற்குரியது.
பெண்களுக்காகவும் அவர்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுப்பதை விரும்பாதவர்கள் இன்னும் இருக்கிறார்கள், அப்படிப்பட்டவர்களுக்கு எதிரான குரலை இன்றைய பெண் படைப்பாளர்கள் எழுப்புவதையும் பார்க்கமுடிகிறது.
தேவதாசி முறைக்கு எதிராகத் தீவிரமாகப் போராடிய முக்கியமான தலைவர்களில் ஒருவர் டாக்டர் முத்துலட்சுமி.
அவர் 1926 இல் சென்னை சட்டமன்றத்தில் நியமன உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது குரல் தேவதாசி முறைக்கு எதிராக சூறாவளியாக எதிரொலித்தது. திராவிட இயக்க முன்னோடிப் பெண்ணாக அவரது செயல்பாடுகள் மிளிர்ந்தன.
அவரது "சட்டமன்ற உறுப்பினராக எனது அனுபவம்" என்ற புத்தகம் அவர் எடுத்த சீர்திருத்த முயற்சிகளைப் பதிவு செய்திருக்கிறது.
அதே போல், டாக்டர் தர்மாம்பாளும் குறிப்பிடத்தக்க சமூக சீர்திருத்தவாதியாகத் திகழ்ந்தார். பெரியார் தலைமையை ஏற்று அவர் நிகழ்த்திய சமூக தொண்டுகளுக்காக அவர் இப்போதும் நினைக்கப்படுகிறார்.
இவர்களின் வரிசையில் அணி வகுக்கும் மூவலூர் ராமாமிர்தம் ஒரு தமிழ்ச் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவர் ஒரு எழுத்தாளர் மற்றும் திராவிட இயக்கத்தின் அரசியல் ஆர்வலர். 1936 ஆம் ஆண்டில், தேவதாசிகளின் அவல நிலையை அம்பலப்படுத்தும் தாசிகளின் மோசவலை என்ற நாவலை எழுதினார். அவரது நினைவாக, 1989 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு "மூவலூர் ராமாமிர்தம் அம்மாள் நினைவு திருமண உதவித் திட்டம்" என்ற சமூக நலத் திட்டத்தைக் கொண்டுவந்தது, இது ஏழைப் பெண்களுக்கு நிதி உதவி வழங்குவதற்கான ஒரு சாதனைத் திட்டமாகும்.
எழுத்துத்துறையிலும் தமிழகப் பெண்கள் சாதனைகளை நடத்தக் களமிறங்கினர். 1960-களின் முற்பகுதியில் வை.மு. கோதைநாயகியம்மாள் ஒரு பதிப்பகத்தை நிறுவினார். இவர், பிற பெண் எழுத்தாளர்கள், பெண்கள் ஆகியோரின் பிரச்சினைகள் குறித்த கருத்தைப் பதிவுசெய்ய உதவியதால், அவர் எழுத்துக்கள் பெண்ணிய வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக உள்ளது.
சுதந்திரத்திற்குப் பிந்தைய காலத்தில் எழுத்து, பதிப்பு மற்றும் வெளியீடு ஆகியவை பெண்களுக்கான கண்ணியமான தொழில்களாகக் கருதப்பட்டன. 1921ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கம், பெண் எழுத்தாளர்களை பொது நடவடிக்கைகளில் பங்கேற்க ஊக்குவித்தது. திருச்சி நீலாவதி, மூவலூர் ராமாமிர்தம் அம்மாள் போன்ற பெண் எழுத்தாளர்கள், சமூக சீர்திருத்தத்திற்கான ஒரு கருவியாகத் தங்கள் எழுத்தைப் பயன்படுத்தினர்.
இந்தக் காலகட்டத்தில்தான் பெண்கள், சமூக ஒழுக்கம் என்ற பெயரில் விதிக்கப்பட்ட பழமைக் கோடுகளைத் தாண்டி, சாதனை உலகில் புத்தெழுச்சியுடன் நுழைந்தனர்.
இந்தக் காலகட்டத்தில் ராஜம்கிருஷ்ணன், ஆர். சூடாமணி, சி.எஸ்.லட்சுமி போன்ற எழுத்தாளர்கள் தங்கள் எழுத்துக்களால் பெண் களுக்கு நம்பிக்கையூட்டும் படைப்புகளைப் படைத்தளித்தனர்.
சாகித்ய அகாடமி (1955) தொடங்கப்பட்டதிலிருந்து, ராஜம் கிருஷ்ணன் (1973), லட்சுமி திரிபுரசுந்தரி (1984), திலகவதி (2005) மற்றும் சி.எஸ். லட்சுமி (2021) ஆகிய நான்கு தமிழ் பெண் எழுத்தாளர்கள் மட்டுமே அகாடமி விருதை வென்றிருக்கிறார் கள். இந்த பட்டியல் இன்றுவரை விரிவடையவில்லை. தமிழ் பெண் எழுத்தாளர்கள் அங்கீகாரத்தைப் பெற இன்னும் போராடுகிறார்கள் என்பதற்கு இது சான்றாகும். தமிழ்நாட்டில் பெண்கள் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிவருகின்றனர்.
ஒருபுறம் தங்கள் தனிப்பட்ட சுயம், உள் உணர்ச்சி, குடும்பம், திருமணம், தாய்மை ஆகியவற்றை எழுதிவருவதோடு, மறுபுறம் பெண்களை ஒடுக்கும் சமூக-கலாச்சார அரசியல் பற்றியும் எழுதி, இருண்மையின் முகமூடிகளைக் கிழித்து வருகின்றனர்.
"பெண்களுக்கான கல்வி அவசியம் என்பதை முதலில் வலியுறுத்தியவர் வேதநாயகம் பிள்ளை. அவர் ‘பெண் கல்வி’ என்ற புத்தகத்தை எழுதினார். அவரது சுகுணசுந்தரி நாவலில், கதாநாயகி, கதாநாயகனைப் போலவே படித்தவர். இது அப்போது திகைப்பாகப் பார்க்கப்பட்டது. பெண் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வேதநாயகம் பிள்ளை கீர்த்தனைகளையும் எழுதி இருக்கிறார்.
மகாகவி பாரதி (1882-1921) போன்றவர்கள், நவீனமயமாக்கல் மற்றும் தேசியவாதத்தின் உணர்வை எழுத்தின் மூலம் பரப்பினர். சக்ரவர்த்தினி இதழில், கல்வியின் மூலம் மட்டுமே பெண்களின் நிலையை மேம்படுத்தமுடியும் என்று அழுத்தமாக அவர் எழுதியுள்ளார்.
“வீட்டுக் குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போமென்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்” என்னும் பாரதியாரின் அழகிய கவிதை. "பெண்களை வீட்டில் அடைத்து வைக்க விரும்பும் விசித்திரமான மனிதர்களை தலைகுனியவைக்கும் வகையில் அமைந்தது. இந்தக் கவிதை எப்போதோ எழுதப்பட்டது, ஆனால் உண்மையில் இந்த நிலை முழுதும் மாறிவிட்டதா? ஆம், பெண்களுக்கான கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் நாம் முன்னேற்றம் அடைந்துள்ளோம், ஆனால் பெண்கள் உண்மையிலேயே சம உரிமைகளை அனுபவிக்கிறார்களா? நாம் 2025 இல் இருக்கிறோம், ஆனால் 'பெண்கள் வீட்டிலேயே இருக்கவேண்டும், அதனால் அவர்கள் பாதுகாப்பாக இருக்கமுடியும்' என்ற கருத்து இன்னும் பரவலாக உள்ளது. இது முதலில் அகற்றப்படவேண்டும்.
தமிழ்நாட்டில் பாலினங்களுக்கு இடையே நிலவும் ஏற்றத் தாழ்வுகளை பாரதி கடுமையாக விமர்சிக்க விரும்பினார்.
பாரதியின் துடிப்பான நவீனத்துவ மற்றும் தேசியவாத இலக்கியங்களைத் தொடர்ந்து, ஒரு புரட்சிகர சமத்துவ உலகை உருவாக்கும் நோக்கில் அவரது வழியில் பாரதிதாசன் தோன்றினார். அவர் தனது பல கவிதைகளில் பெண் சமத்துவத்தின் அவசியத்தை வலியுறுத்தினார். "பெண்களுக்கு பேச்சு சுதந்திரம் மறுக்கப்பட்டு, அவர்கள் கட்டுண்டு கிடக்கும் வரை, நாட்டின் சுதந்திரம் என்பது ஒரு தொலைதூரக் கனவாகவே இருக்கும்" என்று அவர் அறுதியிட்டுக் கூறினார்.
பெண் குழந்தைகளை வெறுத்து ஒதுக்கி, அவர்களைத் தேவையற்ற குழந்தைகளாக நடத்தும் பெற்றோர்களைப் பார்த்து பாரதிதாசன் வேதனைப்படுகிறார். இந்த சூழ்நிலைக்கு பதிலளித்த கவிஞர், இரண்டு சக்கரங்கள் இல்லாத வண்டி வீழ்ச்சியடையும். அதேபோல், பெண்களை வெறுத்து, தாழ்த்தி வைக்கும் சமூகம் வெற்றிபெறவோ அல்லது அந்தஸ்தில் முன்னேறவோ முடியாது. நமது இரண்டு கண்களில் ஒன்று சேதமடைந்தால், அது மற்றொரு கண்ணுக்கோ அல்லது ஒட்டுமொத்த உடலுக்கோ அழகு சேர்க்காது என்றெல்லாம் அவர் வாதிடுகிறார். பெண்களை அடக்கும் ஆண், தன் உடலை அதன் ஓட்டுக்குள் வைத்திருக்கும் ஆமை போன்றவன் என்பது அவரது வாதமாகும்.
1980-1990 களில் தமிழ் இலக்கியம் பெண் எழுத்தாளர் களுக்கு தன் விசாலக் கதவுகளைத் திறந்துவிட்டது, மேலும் பெண்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை மையமாகக் கொண்ட அதிகமான பெண் எழுத்தாளர்கள் தோன்றியதன் மூலம் தமிழ் இலக்கிய வெளியில் ஒரு முக்கியமான மாற்றம் ஏற்பட ஆரம்பித்தது.
21-1ஆம் நூற்றாண் டில் பெண்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட வரலாற்று அநீதிகளைப் பார்க்கத் தேவையில்லை. அதை யெல்லாம் புறந்தள்ளி விட்டு, அவர்கள் தங்கள் அதிகாரத்தைக் கையில் எடுக்கவேண்டிய நேரம் இது.
(சாகித்ய அகாடமி நிகழ்ச்சியில் வழங் கிய உரையின் சுருக் கம்)