மென்மையின் குறியீடாகச் சொல்லப்பட்ட பெண்கள், தாம் வலிமை மிக்கவர்கள் என்பதை இந்த நூற்றாண்டில் நிலைநிறுத்தி வருகின்றனர். எல்லா துறைகளிலும் அவர்களின் முன்னேற்றம் சமீப காலமாகச் சாத்தியப்பட்டிருக்கிறது.
குடும்பம் மட்டுமே நடத்தத் தகுதியானவர்கள் என்ற நிலைமாறி, நாட்டை ஆளும் திறமையைக் கண்டு உலகமே வியக்கிறது. அடைக்கப் பட்ட கதவுகளை உடைத்துக் கொண்டு புறப்பட்டபுலியைப் போல இதுவரை ஒடுக்குமுறைக்கு உள்ளானவர்களின் விடுதலைப் பாடல் ஓங்கி ஒலிக்கிறது. எப்படிப் பட்ட உடைகளை உடுத்த வேண்டும், யாருடன் பேசவேண்டும், எந்த மாதிரியான கல்வியைத் தேர்ந்தெடுக்க வேண்டும், பெண்கள் வேலைக்குப்போவது ஆடம்பரச் செலவுக்கு வழிசெய்து தருவதால் அவர்கள் வேலைக்குப் போகவேண்டாம், வீட்டில் பார்த்து வைக்கும் மாப்பிள்ளைக்கு எந்த மறுப்பும் சொல்லாமல் கழுத்தை நீட்ட வேண்டும், கணவனின் விருப்பத்திற்கு ஏற்ப குழந்தைகளைப் பெற்றுத்தர வேண்டும், கணவனை இழந்தவர்கள் வீட்டின் மூலையில் அடைந்து கிடக்க வேண்டும், மகன்களின் கட்டுப்பாட்டில் கடைசிவரை வாழவேண்டும் என்ற எண்ணற்ற கட்டுப்பாடுகள் இருந்த காலகட்டத்தில், ஒற்றைப் பெண்மணியாக ஒருகல்வி நிறுவனத்தைத் தொடங்கிய பெருமைக்குரியவர் பத்ம விபூஷன் மேரி கிளப்வாலா ஜாதவ்அம்மையார். மனிதன் தன்னுடைய அறிவு வளர்ச்சியின் காரணமாக நாகரிகத்துடனும் பண்பாட்டுடனும் வாழ முற்பட்டான். சமுதாயத்துடன் ஒட்டி வாழும் அவனை ஒரு சமுதாய விலங்கு என்று அறிமுகப்படுத்துகிறது மானிடவியல் ஆய்வு. எப்போதுமே கூட்டமாக வாழும் இயல்பு கொண்ட மனிதன் சமுதாயத்தில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியாமல் போகும் போது அதற்கான தீர்வாக ‘சமூகப்பணிக் கல்வி’ என்ற துறை உருவானது.
சமூகப்பணிக் கல்வி வரலாற்றின் மிக முக்கியமான நாளாக 10.06.1908 கருதப்படுகிறது. அன்றுதான் சமூகசேவைக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட மேரி அம்மையார் பிறந்தார். செல்வச் செழிப்பான பார்சி குடும்பத்தில் உதகமண்டலத்தில் பிறந்து, சிறப்பான முறையில் கல்வி கற்றார். இசையறிவு பெற்ற அம்மையார் உதவும் மனப்பான்மையும், உயிர்கள் மீது இரக்க குணமும் இயல்பாகக் கொண்டவர். இளம் வயதிலேயே நோகி கிளப்வாலா அவர்களைத் திருமணம் செய்து கொண்டு சென்னை நோக்கிப் பயணமானார்.
கணவரின் மரணத்தால் திருமண வாழ்வு சீக்கிரமாகவே முடிவுக்கு வந்துவிட்டது. ஒரே மகனுடன் தனிமைக்குத் தள்ளப்பட்ட அம்மையார் தன் கவனத்தைச் சமூக சேவையின் பக்கம் திருப்பிக்கொண்டார். பின்னர் பல ஆண்டுகள் கழித்து, சமூகப்பணியில் ஈடுபட்டிருந்த மேஜர் சந்திரகாந்த் கே. ஜாதவ் என்ற இந்திய ராணுவ அதிகாரியை மறுமணம் செய்துகொண்டார். சொந்த வாழ்க்கை யின் சோகத்தைத் தூக்கிஎறிந்து விட்டுச் சக மனிதர்களின் துயரத்திற்குத் தீர்வுகாணப் புறப்பட்டார்.
’அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும்
அடுக்கடுக்காய் நமதுநலம் சேர்ப்ப தல்லால்
இதுவரைக்கும் பொதுநலத்துக்கு என்ன செய்தோம்?
என்பதை நாம் நினைத்துப் பார்ப்பதுவு மில்லை’
- என்கிற, புரட்சிக்கவிஞரின் குற்றச்சாட்டை மறுக்கிற வகையில், சமூகத்தொண்டாற்ற வந்தவர் இவர்.
பல தன்னார்வ தொண்டு நிறுவனங் களை நிறுவியதுடன், மகளிரின் ஊக்கசக்தியாக மாறினார். மேலும் நாட்டின் பழமையான சமூகப்பணி அமைப்புகளைச் செழுமைப்படுத்திய பெருமைக்குரியவர். இவரின் பணிகள் சுகாதார மையம், ஆதரவற்றோர் இல்லங்கள், பெண் கல்வி, ஊனமுற்றோர் பராமரிப்பு, கிராமப்புற மேம்பாட்டுத்திட்டங்கள், மாற்றுத் திறனாளிகள் பள்ளி மற்றும் மறுவாழ்வு போன்றவற்றுடன் தொடர்புடையவை. மாற்றுத்திறனாளி களும்,திருநங்கைகளும் பாவத்தின் பலனாகப் பிறந்தவர்கள் என்று பேசிய மூடநம்பிக்கையாளர்கள் மலிந்திருந்த சூழலில் மாற்றுத்திறனாளி கள் மற்றும் திருநங்கைகளுக்கான நன்மையைப்பற்றிச் சிந்தித்ததே பெரிய புரட்சிதான்!
சுமார் 150 தொண்டு நிறுவனங் களுடன் தன்னைஇணைத்துக் கொண்ட மேரி அம்மையார், சேவா சமாஜம் என்று சொல்லப்படும் ‘கில்டு ஆஃப் சர்வீசின்’கௌரவச் செயலாளராகப் பல ஆண்டுகள் பணியாற்றியவர். இரண்டாம் உலகப்போரின் போது இந்திய ராணுவப் படையைப் பராமரிக்கும் வகையில் ‘இந்தியன் ஹாஸ்பிடாலிடி கமிட்டியை’ 1942-ஆம் ஆண்டு நிறுவினார்.
வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடந்த எல்லா தரப்புப் பெண்களையும் ஒருங்கிணைத்துப் பல்வேறு தொண்டுகள் செய்ய ஊக்குவித்தார்.
நடமாடும் உணவகம், ராணுவ மருத்துவமனைகளுக்குச் செல்வது, பொழுதுபோக்குக் கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது போன்றவற்றை அமைத்து ராணுவ வீரர்கள் வாழ்வில் புதிய நம்பிக்கையை உண்டாக்கினார். ராணுவ வீரர்களின் நலனுக்காகத் தொடங்கப்பட்ட இந்தக் கமிட்டிக்குத் தாராளமாகப் பொருளுதவி கிடைத்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பாதிக்கப்பட்ட முன்னாள் படைவீரர்களையும் அவர்களின் குடும்பத்தையும் மீட்டெடுத்து அவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்க இந்தக் கமிட்டி பல வழிகளில் உதவி வந்தது. போருக்குப் பின் நாடு சந்தித்த அழிவுகளைப் பார்த்த அம்மையார் மக்களின் அறியாமையை நினைத்து வேதனைப்பட்டார். நாட்டு மக்களுக்காகத் தன்னை ஒப்புக்கொடுத்துக்கொண்ட வீரர்களைப் பராமரிப்பதற்கு சாதாரண மக்களுக்குத் தெரியவில்லையே என்ற ஆதங்கத்தில் அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தார். சமூகப் பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வைக் கல்வியின்வழியாகத் தந்தால் சமூக மேம்பாட்டை விரைவில் காணலாம் என்ற தொலைநோக்குப் பார்வையால் புதுமுயற்சியைத் தொடங்கினார்.
அவரின் நீண்ட நாள் கனவான தென்னிந்தியாவின் முதல் சமூகப்பணிக் கல்லூரி (மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் ஒர்க்) 1952-இல் உருவானது.
சமூகப் பணிக்கான கல்வி நிறுவனம் இந்தியாவில் வடக்குப் பகுதிகளில் இருந்ததால் தென்னந்திய மாணவர்களுக்கு அங்குச் சென்று படிப்பது பெரிய சவாலாக இருந்தது. உணவுப் பிரச்சினையும்,மொழிப் பிரச்சினையும், குடும்பத்தை விட்டு வெகுநாள் பிரிந்திருக்க வேண்டிய சிக்கலும்இருந்ததால் மாணவர்கள் படிப்பைத் தொடர முடியாமல் பாதியிலேயே வீடு திரும்பினர். இந்தக் கல்லூரி இன்றளவும் மாணவர்களின் சமூகப் பணி கல்விக் கனவை நிறைவேற்றி வருகிறது. இயற்கைச் சீற்றங்களான புயல் மழை, வெள்ள அபாயம்போன்றவற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க இக்கல்லூரி மாணவர்கள் தொண்டாற்றி வருகின்றனர். உலகம் முழுக்க கொரோனா தொற்றுநோய் அழிவைத் தரும்வேளையில் அது குறித்த விழிப்புணர்வைப் பொதுமக்களிடம் ஏற்படுத்த காவல்துறையும் இந்தக் கல்லூரியின் இளைஞர் படையை எதிர்பார்த்து நின்றது. மேலும், இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமுள்ள இன்றைய காலத்தில் அவர்களைச் சமூகத் தொழில்முனைவோராக மாற்றும் ‘சமூகத் தொழில்முனைவோர் துறை’ இக்கல்லூரியின் புதிய வரவாக மலர்ந்திருக்கிறது. சமூக மற்றும் சூழல் நலனை உள்ளடக்கிய இந்தத் துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்குவகிக்கிறது.
சமூகப் பணிக்கான சர்வதேச மாநாட்டின் நிரந்தர உறுப்பினர் என்ற புகழுக்குரிய அம்மையாரின் ராணுவ சேவையைப் பாராட்டி ஜப்பானிய வாள் பரிசாக வழங்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் ‘டார்லிங் ஆஃப் தி ஆர்மி’ என்றும் அழைக்கப்படுகிறார். மேலும் கில்டு ஆஃப் சர்வீஸ் மற்றும் சென்னை ரோட்டரி கிளப்புடன் இணைந்து சிறப்புக் குழந்தைகளுக்கான ‘பால விஹார்’ என்ற சிறப்புப் பள்ளியைத் தொடங்கி னார். ஒருபக்கம் கல்விச் சேவை என்றால் இன்னொரு பக்கம் தவறு செய்துவிட்ட சிறார்களின் பிரச்சினைகளைக் காது கொடுத்துக் கேட்கும் நீதிப் பணி. சிறார் நீதிமன்றத்தில் தலைமை ஏற்கும் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டபோது, பெண்களின் தலைமை ஏற்கும் நியமனத்துக்காக விடாமல் போராடினார்.
இவரது விடாமுயற்சியின் காரணமாகச் சிறார் நீதிமன்றங்களுக்குத் தலைமை தாங்குவதற்குப் பெண் நீதிபதிகள் இன்று நியமிக்கப்படுகின்றனர்.
அறிவியல் வளர்ச்சியால் போக்குவரத்துச்சாதனங் கள் பெருகியிருக்கும் சூழலில் தன் வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்ளவும், மக்களுக்கு மேம்பட்ட சேவைகளை வழங்கவும் மளிகைப் பொருட்களை, மருந்துகளை, துணிமணிகளைஇன்னும் பல பொருள்களை வீட்டுக்குக் கொண்டு வந்து தரும் வசதிகள் எளிதில் கிடைத்துவருகின்றன. ஏழை எளிய மக்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்திற்குச் சென்று உணவு வழங்கவேண்டும் என்று எண்ணி வாகன வசதி பெருமளவில் இல்லாத காலத்தில் ‘மீல்ஸ் ஆன் வீல்ஸ்’ என்ற திட்டத்தைத் தீட்டிச் செயல்படுத்திய சாதனைப் பெண்மணி இவர். உணவைத் தேடி சென்ற நிலையை மாற்றி உணவு மக்களைத் தேடிவரும் புதுமையை ஏற்படுத்தினார். அதுபோல அடித்தட்டு மக்கள்வாழும் பகுதிகளில் மருத்துவ சேவையையும் உறுதி செய்தார்.
உள்ளாட்சித்தேர்தலில் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்ற பெண்களை இன்று நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். சென்னையின் மேயராக ஒரு பெண் இன்று சாதித்திருக்கிறார். ஆனால் இந்த வாய்ப்பு இல்லாத காலத்தில் சென்னையின் ‘முதல் பெண் ஷெரிஃப்’ என்ற பதவிவகித்தவர். உள்நாட்டில் மட்டும் இவர்வணங்கத்தக்கவராக இல்லாமல் வெளிநாடான அமெரிக்க நாடு அழைப்பு விடுத்த சமூகசேவகராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
அதுவரை எந்தப் பெண் தன்னார்வ சமூக சேவகரையும் அழைக்காத அமெரிக்கா முதன்முதலில் மேரி அம்மையாரை அழைத்துக் கௌரவித்தது. நாட்டின் உயரிய விருதான ‘பத்மஸ்ரீ’,‘பத்மபூஷன்’ மற்றும் ‘பத்மவிபூஷன்’ ஆகிய விருதுகளைப் பெற்றவர். சமூகப் பணியில் புதுப்புது அணுகுமுறையைச் செயல்படுத்தியவர் புற்றுநோயின் காரணமாகத் தன் இறுதிமூச்சை 1975-இல் நிறுத்திக் கொண்டார். இவருக்கான இரங்கல் செய்தியை வெளியிட்ட அன்றைய பிரதமர் இந்திரா காந்திஅம்மையார் ‘‘ஓர் உண்மையான சமூக சேவகியை நாடு இழந்துவிட்டது” என்று சொல்லித் தன்வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டார்.
இவர் கல்லறை இருக்கும் இடத்தை ‘வடசென்னை’ என்ற நூலில் எழுத்தாளர் நிவேதிதா லூயிஸ் பதிவுசெய்திருக்கிறார். கல்லூரிநிறுவனரின் நினைவைப் போற்றும் விதமாக, சென்னை சமூகப்பணிக் கல்லூரி தன் வைரவிழாஆண்டிலிருந்து தன் வாழ்நாளைத் தொண்டுக்காக அர்ப்பணித்துக் கொண்ட தனிமனிதருக்கோ அல்லது அமைப்புக்கோ மேரி கிளப் வாலா ஜாதவ் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிப் பாராட்டுகிறது. தகவுரையுடன் கூடிய ஒரு லட்சம் ரூபாய் என்ற தொகையிலான இவ்விருது தகுதியானவர்களுக்குக் கிடைப்பது வரவேற்கத்தக்கது. மேரி அம்மையார் தொடங்கிவைத்த சமுதாயப் பணிகள் இன்றும் அவரின் சேவையை உரத்துப்பேசிக் கொண்டே இருக்கின்றன. சமூகப் பிரச்சினைகளும், பாலின சமத்துவமின்மையும் அதிகமாக இருக்கும் இந்தச் சூழலில் மேரி அம்மையாரைப் போன்றவர்களின் சேவை அவசியம் தேவை.
பெண்கள் அறிவை வளர்த்தால் - வையம்
பேதமை யற்றிடும் காணீர்’
-என்ற பாரதியின் கவிதைக்குச் சிறந்த இலக்கண மாகத் திகழ்ந்தவர் மேரி அம்மையார்.