பழந்தமிழ்க் காலமாகிய சங்க காலத்தைப் பொற்காலம் என அன்று எழுதப்பட்ட இலக்கிய வரலாற்றின் கருத்து இன்று மறுக்கப்பட்டுள்ளது. தனியுரிமையும் சமன்மையும் நிலவிய இனக்குழு சமுதாயத்தில், பெண்கள் முதன்மை பெற்று எவ்விதக் கட்டுப்பாடும் இன்றித் தன்னிச்சையுடன் உலவியுள்ளனர். பயிர்த்தொழிலைக் கண்டுபிடித்ததும் பெண்ணே! காலத்தின் மாற்றம் இயங்கியல் விதி சார்ந்தது. இந்த தவிர்க்க இயலாத மாற்றத்தில் பொதுவுடைமைச் சமுதாயமாகிய இனக்குழு சமுதாயம் படிப்படியே மறைந்து அரசு தனியுடைமைச் சமுதாயம் தோன்றியுள்ளது. இனக்குழு சமுதாயத்தின் மறைவிலும் அரசு உடைமைச் சமுதாயத்தின் தோற்றத்திலும் இருந்த சமுதாயமே பழந்தமிழ்ச் சமுதாயம். வினையே ஆடவர்க்கு உயிரே மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர் எனத் தொல்காப்பியம் விதி வகுக்கும் அளவுக்கு, ஆண்களின் உடைமையும் உரிமையுமாக மகளிர் ஆக்கப்பட்டு வீட்டுடன் முடக்கப்பட்டனர்.
தம் முதன்மையை இழந்த பெண், தம் உரிமை யைப் பெறும் வகையில் போராடும் சூழல் இன்றி முடக்கப்பட்ட அடிமை நிலை உருவானது. ஆயினும் அவளை தனக்கே உரிய தாய்மைப் பண்பையும் அதன் கிளைகளான அன்பு, இரக்கம், ஈகை போன்றவற்றைத் தம்முடனேயே இருத்திப் பாதுகாத்துக் கொண்டாள். விரும்பிய ஆணை மணந்து தன்னிச்சையுடன் வாழும் நிலை இன்றிப் பெற்றோர் செய்து வைக்கும் திருமணத்துக்குத் தள்ளப்பட்டாள். எனினும் பண்டைய சமுதாயத்தின் தொடர்ச்சியாகக் களவொழுக்கம் நிலவியுள்ளது. ஆண், பெண் ஈர்ப்பான காதலுணர்வு இருவருக்கும் ஒரே தன்மையுடையது என்ற போதும், பெண், தன் உணர்வுகளை, இச்சைகளை வெளிப்படுத்தக் கூடாது என விதிக்கப்பட்டாள். விரும்பி மணந்து கொண்ட ஆண், அவளைத் தவிர வேறு பெண்களை நாடும் வகையில் பரத்தையர் பிரிவு உருவாக்கப்பட்டது. இல்லறப் பெண்கள், பரத்தைப் பெண்கள் எனப் பெண் சமுதாயம் இரண்டு பிரிவாக்கப்பட்டு ஆண்கள் எந்தக் கட்டுப்பாடும் மனச் சான்றும் இன்றிப் பீடும் பெருமையுமாக வாழும் நிலை உருவானது.
இந்த ஒருபாற்பட்ட சமுதாயத்தை ஏற்றுக் கொண்டோ, அல்லது வெளி உலகுக்காக மட்டும் இசைந்தோ பெண்கள் வாழ்ந்துள்ளனர். அக வாழ்க்கையில், தன்னுடைய தாழ்நிலை அல்லது இரண்டாம் நிலையைப் பற்றிக் கவலைப்படாமல் பெண்கள், தம்மளவிலான சமுதாயப் பங்களிப்பைச் செய்து வந்துள்ளனர். இனக் குழுச் சமுதாயத்தில் தலைவர்களாக இருந்தவர் சிற்றரசர்கள் எனும் சீறூர் மன்னர்களாக விளங்கிப் பலரும் வல்லரசுகளாகிய மூவேந்தருக்குப் பணிய மறுத்து தன்னாட்சி நடத்தியுள்ளனர். இப்போது போலவே அன்றும் ஒரு சிலர் மூவேந்தருக்குப் பணிந்து அவர்கள் தலைமையை ஏற்றுக்கொண்டு அவர்களின் படைத்தலைவர்களாகவும் அடங்கிய சிற்றரசு களாகவும் விளங்கியுள்ளனர்.
இன்றைய ஈழத்தில் தம் இனம் காக்கத் தம் வீட்டு ஆண்களை போருக்கு அனுப்பிய தாயர், துணைவியர் போன்று அன்று, மூவேந்தருக்கு எதிராக நடைபெற்ற போர்களில் தம் இனத்தைக் காக்கும் வகையில் தம் வீட்டு ஆண்களைப் போர்க்களத்துக்கு அனுப்பி, அவர்களின் வீரம் கண்டு பெருமிதம் கொண்டு மகிழ்ந்தனர். தாய் மண்ணே தமக்கு முதலிலிடம் என்ற உணர்வு பெண்களுக்கு இருந்துள்ளது. போர்க்களங் களில் இறந்து கிடக்கும் தம் மகனை அல்லது துணைவனைக் கண்டு ஒருபுறம் வருந்தினும் அவர்களின் வீரச் செயல்களை கண்டு மகிழ்ச்சிக் கண்ணீர் வடித்துள்ளனர். ஆண்கள்தாம் தமக்கு வாழ்க்கை, அவர்கள் இல்லை எனின், தமக்கு எந்த இன்பமும் பொருளும் இல்லை என்ற நிலையிலும் அவர்களை இழந்த பின்பு தமக்கு யார் உளர்? தமது வாழ்க்கை என்னாகும் என்பதைப் பற்றிச் சிந்திக்காத பேராண்மையும், தாய்மண் பற்றும், வீர உணர்வும் கல்வியறிவு இல்லாத பெண்களிடமும் இருந்துள்ளது.
மூவேந்தரின் மனைவியர் பற்றிக்கூட எந்தக் குறிப்பும் இல்லை.
அவர்கள் வெளித் தெரியாத வண்ணம் வாழ்ந்துள்ளனர்.
ஆனால் எளிய பெண்கள், கடும் உழைப்பிலும் விருந்தோம்ப லிலும் மனவலிலிமையிலும் எளிமையான வாழ்க்கையிலும் மன நிறைவுடன் வாழ்ந்துள்ளனர். பறவைகள், விலங்குகள் இயற்கைச் செடி, கொடிகளும் உறவும், உள்ளமுமாய் வாழ்ந்து இல்லறத்தை நல்லறமாக்க இன்புற்றுள்ளனர். புலவர்களின் மனைவியர் எத்தகைய வறுமை நிலையில் அதன் எல்லையில் உழன்றுள்ளனர் என்பதைப் புறநானூற்றுப் பாடல்கள் விரிவாகக் கூறுகின்றன.
ஆண்கள் தாம் தமக்கு எல்லாம் என்ற நிலையில், அவர்களை இழந்து தவிக்கும் பெண்களின் நிலை மிகுந்த வருத்தத்திற்குரியது. அரசியாக இருந்தாலும், எளிய பெண்ணாக இருந்தாலும் கைம்மைக் கோலத்தில் வசதியான படுக்கையோ சுவையான உணவோ, பூவோ பொட்டோ, நகையோ, வண்ண ஆடைகளோ இன்றி வாழ்வதைவிட இறப்பதே மேல் என்ற மனநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
உடன்கட்டை ஏறுதல், வாழ்வதை விடக் கொடுமையானது இல்லை என்பதை அரசன் பூதப் பாண்டியன் தேவியே கூறுகின்றார். கணவன் உடல் வைக்கப் பட்டுள்ள இடமும், எரியும் தமக்கு குளிர்ச்சியான பொய்கையே என்று ஒரு பெண் கூறுவாளேயானால், கணவனை இழந்த வாழ்க்கை அவளுக்கு எத்தகைய கடுமையாக இருந்திருக்கும் என்பதை உணர முடிகின்றது.
கணவனுடன் பொருள் தேடச் சென்ற பெண்கள், ஆள் நடமாட்டம் அறவே இல்லாத காட்டு வழியில், கணவன் இறந்து விட்டால் என்ன செய்வர் என்பதை ஒரு பாடல் நேரில் காண்பதுபோலவே கூறுகிறது. ஒரு பெண் பொருள் தேடும் பொருட்டோ வேறு காரணத்தாலோ எங்கோ சென்று விட்டு தன் கணவனுடன் திரும்பி வருகின்றாள். பாதி வழியில் அவன் இறந்து விடுகின்றான். யாருமற்ற காட்டு வழியில் அவள் என்ன செய்ய இயலும்? அவன் இறப்பை எண்ணி அய்யோ என வாய்விட்டு அலறவும் முடியாது. அலறல் ஒலிலி கேட்டால் அங்கே உலவிக் கொண்டிருக்கும் புலிலி ஓடி வந்து அவனது உடலை இழுத்துச் சென்று விடும். மெல்ல உடலைத் தூக்கிக் கொண்டு ஏதேனும் மரநிழலுக்குச் செல்லலாம் என்றால் விரிந்து பரந்த மார்பைக் "கொண்ட அவனை அவளால் தூக்க இயலவில்லை. இறந்து கிடக்கும் அவனைப் பார்த்துக் கொஞ்சம் என் முன்கையைப் பற்றிக் கொண்டு மெதுவாக நடந்து வா! அதோ அந்த மரத்தடியில் சென்று அமரலாம்' என்று பேசிப் புலம்புகின்றாள். பின் என்ன செய்திருப்பாள் அவள் என்ற ஆவலை நம்முள் எழுப்பிப் பாடல் மனம் அலைபாய வைக்கின்றது. நல்ல கதைக்குரிய கருவாக உள்ளது இப்பாடல். இது போன்று பல பாடல்கள் பழந்தமிழ் இலக்கியத்தில் உள்ளன.
இவள் இப்படி எனின், இன்னொரு பெண் முற்றிலும் நேர்மாறான இயற்கைச் சூழல். வீட்டுக்கு வெளியே வெயிலுக்காகவே பந்தல் போடுவதை இன்றும் காண்கிறோம் அவ்வாறு அவளது எளிய குடிலுக்கு முன்னால் பந்தல் போட வேண்டிய தேவை இன்றி முல்லைக் கொடிகள், அங்குள்ள மரத்தில் படர்ந்து பந்தல் போல உள்ளது. அந்தக் குளிர்ச்சியான நிழலிலில் காட்டுக்குச் சென்று களிறை வேட்டையாடி வந்த களைப்பில் அவள் கணவன் ஆழ்ந்து உறங்குகின்றான். அங்குக் கம்பத்தில் மான் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அம்மானை நோக்கி வந்த கலைமான் ஒன்று அதனுடன் மகிழ்ந்து விளையாடுகிறது. கணவனை எழுப்புவதற்காக வந்த அந்தப் பெண், இந்த மான்களைப் பார்த்ததும், நாம், வாய்விட்டுக் கணவனை எழுப்பினால், அந்த ஒலிலி கேட்டு அம்மான்களின் மகிழ்ச்சி குலைந்து விடும் என்று எண்ணித் தம் வீட்டுக்குள்ளும் நடமாடாது அமர்ந்து விடுகின்றாள். முற்றத்தில் காய வைத்த தினையரிசியைக் கோழிகளும், காடைகளும் உரக்க ஒலி எழுப்பிக் கொண்டு கொத்தித்த தின்ன அவற்றை விரட்டுவதற்காக வெளியே வரவும் தயங்குகின்றாள் இந்த எளிய பெண். விலங்குகளின் மகிழ்ச்சியைக் கெடுத்துவிடக் கூடாது என் நினைப்பது எத்துணை பெரிய உள்ளம்! இவளைப் போன்ற பல பெண்களை இலக்கியத்தில் கண்டு அவர்களுடன் உறவாடுகின்றோம்.
இவ்வாறு பெண்கள் கள்ளமற்ற அன்பு உள்ளத்துடன் உலவுகின்றனர். இதற்கு மாறாக அவ்வை போன்ற புலவர்கள் கல்வி அறிவும், உலகியல் நெறியும், சமுதாயப் பங்களிப்பும் அரசியல் அறிவும் கொண்டவராக விளங்கியுள்ளனர். மன்னர்களுக்கு நெருக்கமாக அவர்களை அறிவுறுத்தியும் இடித்துரைத்தும், கடிந்துபேசியும் பழகும் மதிப்புடன் விளங்கியுள்ளனர். நாற்பதுக்கும் மேற்பட்ட பெண் புலவர்கள் இருந்துள்ளனர். ஆண்களுக்கு நிகராகவும் அவர்களைவிட மேலாகவும் கவிதை பாடும் திறன் பெற்று விளங்கியுள்ளனர். அதில் நாள் ஒன்றுக்கு எட்டுத் தேர்கள் செய்யும் தச்சன் ஒரு திங்கள் முழுவதும் முயன்று செய்த ஒரே ஒரு தேர் போன்ற வலிலிமையுடையவன் அதியன். அத்தகு வலிலிமை பெற்ற அதியன், அவ்வையின் கவிதைத் திறன் கண்டு வியந்து மகிழ்ந்து, உண்டால் நீண்ட வாழ்நாளைத் தரும் அரிய நெல்லிலிக்கனியைக் கொடுத்துப் போற்றியுள்ளான்.
இன்று பெண்களுக்கு இடையே காணப்படும் உறவுப் பகை அன்றைய பெண்களிடையே இல்லை எனத் தெரிய வருகின்றது. போரில் வீரம் காட்டி மன்னரிடம் பரிசில் பெற்று வருவான் என ஒரு வீரனின் தாய் காத்திருக்கின்றாள். அந்த வீரனோ போர்க்களத்தில் இறந்து பட, அவள் மனைவி, "உன் இறப்பை என் வாயால் உன் தாயிடம், உன் மகன் இறந்து விட்டான் என எப்படிச் சொல்வேன். அதை அவள் எவ்வாறு தாங்குவாள்' எனக் கரைகின்றாள். தன் துணைவன் இறந்த பின்னர் தனக்கு வாழ்வில்லை; வாழ்வியல் இன்பங்கள் இல்லை என்பது அறிந்தும், மாமியின் துயரம் நினைந்து வருந்துகின்றாள்.
போர்க்களத்தில் காயம்பட்ட வீரர்களை வீட்டிற்கு தூக்கி வந்து சிகிச்சை அளிக்கின்றனர். அக்கால முறைப்படி வேப்பிலைகள் தொங்க விட்டு, நிமித்தம் பார்க்கின்றனர். கணவன் உயிர் பிழைப்பது அரிது; மெல்ல மெல்ல இறந்து கொண்டிருக்கிறான் என்பதை அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு பெண் தம்மை நம்பி இருக்கும் பாணர்களையும், விறலிலியரையும், நோக்கி இனி இவன் பிழைப்பது அரிது. இவன் இறந்த பின்பு நான் உயிர் வாழப்போவது இல்லை. எனவே, இப்பாதே உங்களுக்குப் பொருள் கொடுக்கும் வள்ளல்களை நாடிச் செல்லுங்கள் என அவர்களின் பசி பற்றிக் கவலைப்படுகின்றாள்.
விருந்து வந்தால் அவர்கட்குத் தம் கணவனுடன் இணைந்து நின்று உணவளிக்க வேண்டும் எனச் சிலம்பு, இராமாயணம் போன்றவை கூறுகின்றன. கோவலன், இராமன் பிரிவில் கண்ணகி, சீதையால் விருந்தோம்ப முடியவில்லை எனப் பாடல்கள் கூறுகின்றன. ஆனால் பழந்தமிழ்ப் பெண்கள், போருக்கோ, வேறு தேவைக்கோ சென்றிருக்கும் தத்தம் துணைவர்கள் வரவேண்டும் என்று காத்திரா மலே தன் பாணருக்கும், பாடினியருக்கும் பரிசில் கொடுக்கின்றனர். ஆண்களின் ஓயாத கொடை போலிலப் பெண்கள் கை ஓயாமல் சமைத்துப் பரிசிலருக்குத் தந்துள்ளனர்.
அகப்பாடல்கள் காட்டும் பெண்கள், காதல் பிரிவில் கலங்கிக் கருத்தழிந்து, ஏக்கங்களையும் எதிர் பார்ப்புகளையும் நெஞ்சில் சுமந்து தாய், தந்தை, தமையருக்கு அஞ்சித் தலைவனின் பரந்தையற் பிரிவில் கண்ணீர் விட்டு, உடன் போக்கில் பல இடர்கள் உற்று சமுதாயப் பங்களிப்பு இன்றி இல்லறத்தில் இணைந்து நின்றுள்ளனர். புறவாழ்க்கையில் பெண்கள், தமது இரண்டாம் நிலை பற்றிப் பொருட்படுத்தாது பெண்மையின் போற்றுதற்குரிய தாய்மை, பொறுமை, கடமை, அன்பு, ஆற்றல், எளிமை, ஈகை, மனவலிலிமை, உள்ளத்தெளிவு, உலகியல் அறிவு, தனித்தியங்கும் ஆற்றல் பெற்றுக் கல்வியறிவு பெற்றவராகவும் அரசியல் நெறி உணர்ந்தவராகவும், அறிவுரை கூறித் திருத்து பவராகவும் தன்மதிப்பும் தான் என்ற முனைப்பும் கொண்டவராக விளங்கியுள்ளனர். நண்பனே எனினும் தன்னைக் காணாது கொடுத்தனுப்பிய பொருளையும் பெறாது, "பெரிதே உலகம், பேணுநர் பலரே' என உரக்கப் பாடி உயர்ந்துள்ளனர்.