சமத்துவத்தை நிலைநாட்டிய சங்ககாலப் பெண்கள்! - ஆதன்

/idhalgal/eniya-utayam/women-sangam-era-who-established-equality-adam

ரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, எவ்வித வேற்றுமையும் இன்றி மனித மாண்பைக் கொண்டாடும் சமூகமாக நம் தமிழ்ச்சமூகம் உலகில் உயர்ந்து நின்றதை சங்க இலக்கியங்கள் தலைநிமிர்ந்து சொல்கின்றன.

'யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று, உலகம் தழுவிய சிந்தனைப் பரப்பு, அன்றே தமிழர்களுக்கு வசப்பட்டிருந்தது. இது நமக்குக் கிடைத்திருக்கும் பெரும் பெருமையாகும்.

உரிமையும் சமன்மையும் அன்று அனைவர் நடுவிலும் தழைத்திருந்தது. ஆண்களும் பெண்களும் வாழ்வின் இரண்டு சிறகுகளாகத் தங்களை எண்ணி, சம உரிமையோடு சிறகடித்தனர். இதை நம் இலக்கியத் தரவுகள் இதமாக எடுத்துரைக்கின்றன.

ஆளுமைத் திறன்

பெண்கள் அனைத்து நிலைகளிலும் செல்வாக்கோடும் ஆளுமைத்திறனோடும் திகழ்ந்தனர்.

கலையும் இலக்கியமும் கூட அவர்களிடம் தழைத்திருந்தது. தங்கள் வாழ்வியலைப் பாடல்களில் ஆவணப்படுத்தும் திறனையும் அவர்கள் வெகுவாகப் பெற்றிருந்தனர். சங்ககாலத்தில் வாழ்ந்ததாகக் கருதப்படும் 473 புலவர்களில் ஏறத்தாழ 47 பெண்பாற் புலவர்கள், தங்கள் இதயத்துடிப்பை செய்யுள்களில் பதிவு செய்திருக்கிறார்கள். காதலும் இயற்கையும் அவர்களின் மொழியில் மேலும் அழகு பெற்றன.

பெண்பாற் புலவர்கள் இலக்கண, இலக்கியத்திலும் தேர்ச்சி பெற்றிருந்தனர். காக்கைப்பாடினியார், இலக்கண நூலை இயற்றி, செய்யுள் இலக்கியத்தை வழிநடத்த முனைந்திருக்கிறார் என்பதும் போற்றுதலுக்குரியது.

சமூகத்தில் மதிப்பான ஆளுமைத் திறனோடு திகழ்ந்த பெண்கள், அரசர்களுடன் நட்பு பாராட்டி வந்ததை, சங்க இலக்கியங்களில் பார்க்க முடிகிறது. சிற்றரசனான அதியமானுடன் ஔவையார், அன்பு பாராட்டி அவனிடம் செல்வாக்கு பெற்றிருந்ததை அவருடைய பாடல்கள் பலவாறாய்ப் பேசுகின்றன. அரசர்களுக்கு அறநெறி புகட்டும் அறிவுத்தெளிவும் அவர்களுக்கு இருந்ததற்கு சான்றுகள் உள்ளன. அதியமான் மீது தொண்டைமான் போர்தொடுக்க முனைந்த போது, அதே ஔவையார், அவனுடைய போர் வன்மையை அவனது முனைமுறிந்த ஆயுதங்கள் மூலமே உணர்த்தி தொண்டைமானின் முடிவைத் தளரச் செய்திருக்கிறார்.(புறம் - 95). அரச குலப் பெண்களும் கொடைத்திறன் கொண்டவர்களாகத் திகழ்ந்ததையும் அறியமுடிகிறது.

தொழில் முனைவோராக சங்ககாலப் பெண்கள், எல்லாவற்றுக்கும் ஆண்களையே எதிர்பார்த்துக் கொண்டிராமல், பொருளாதார ஆளுமையும் கொண்டிருந்தனர் என்பது பெருமிதத்திற்குரியது

ரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, எவ்வித வேற்றுமையும் இன்றி மனித மாண்பைக் கொண்டாடும் சமூகமாக நம் தமிழ்ச்சமூகம் உலகில் உயர்ந்து நின்றதை சங்க இலக்கியங்கள் தலைநிமிர்ந்து சொல்கின்றன.

'யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று, உலகம் தழுவிய சிந்தனைப் பரப்பு, அன்றே தமிழர்களுக்கு வசப்பட்டிருந்தது. இது நமக்குக் கிடைத்திருக்கும் பெரும் பெருமையாகும்.

உரிமையும் சமன்மையும் அன்று அனைவர் நடுவிலும் தழைத்திருந்தது. ஆண்களும் பெண்களும் வாழ்வின் இரண்டு சிறகுகளாகத் தங்களை எண்ணி, சம உரிமையோடு சிறகடித்தனர். இதை நம் இலக்கியத் தரவுகள் இதமாக எடுத்துரைக்கின்றன.

ஆளுமைத் திறன்

பெண்கள் அனைத்து நிலைகளிலும் செல்வாக்கோடும் ஆளுமைத்திறனோடும் திகழ்ந்தனர்.

கலையும் இலக்கியமும் கூட அவர்களிடம் தழைத்திருந்தது. தங்கள் வாழ்வியலைப் பாடல்களில் ஆவணப்படுத்தும் திறனையும் அவர்கள் வெகுவாகப் பெற்றிருந்தனர். சங்ககாலத்தில் வாழ்ந்ததாகக் கருதப்படும் 473 புலவர்களில் ஏறத்தாழ 47 பெண்பாற் புலவர்கள், தங்கள் இதயத்துடிப்பை செய்யுள்களில் பதிவு செய்திருக்கிறார்கள். காதலும் இயற்கையும் அவர்களின் மொழியில் மேலும் அழகு பெற்றன.

பெண்பாற் புலவர்கள் இலக்கண, இலக்கியத்திலும் தேர்ச்சி பெற்றிருந்தனர். காக்கைப்பாடினியார், இலக்கண நூலை இயற்றி, செய்யுள் இலக்கியத்தை வழிநடத்த முனைந்திருக்கிறார் என்பதும் போற்றுதலுக்குரியது.

சமூகத்தில் மதிப்பான ஆளுமைத் திறனோடு திகழ்ந்த பெண்கள், அரசர்களுடன் நட்பு பாராட்டி வந்ததை, சங்க இலக்கியங்களில் பார்க்க முடிகிறது. சிற்றரசனான அதியமானுடன் ஔவையார், அன்பு பாராட்டி அவனிடம் செல்வாக்கு பெற்றிருந்ததை அவருடைய பாடல்கள் பலவாறாய்ப் பேசுகின்றன. அரசர்களுக்கு அறநெறி புகட்டும் அறிவுத்தெளிவும் அவர்களுக்கு இருந்ததற்கு சான்றுகள் உள்ளன. அதியமான் மீது தொண்டைமான் போர்தொடுக்க முனைந்த போது, அதே ஔவையார், அவனுடைய போர் வன்மையை அவனது முனைமுறிந்த ஆயுதங்கள் மூலமே உணர்த்தி தொண்டைமானின் முடிவைத் தளரச் செய்திருக்கிறார்.(புறம் - 95). அரச குலப் பெண்களும் கொடைத்திறன் கொண்டவர்களாகத் திகழ்ந்ததையும் அறியமுடிகிறது.

தொழில் முனைவோராக சங்ககாலப் பெண்கள், எல்லாவற்றுக்கும் ஆண்களையே எதிர்பார்த்துக் கொண்டிராமல், பொருளாதார ஆளுமையும் கொண்டிருந்தனர் என்பது பெருமிதத்திற்குரியது.

ss

உழைப்பும் பிழைப்பும் ஆண்களுக்கானவை என்று அப்போதும் சிலர் கருதினர். இதற்கு,

’வினையே ஆடவர்க்கு உயிரே வாணுதல்

மனையுறை மகளிர்க்கு ஆடவர்

(குறுந்தொகை-135)

-என்கிற பாலைபாடிய பெருங்கடுங்கோவின் பாடலே சான்று. எனினும், இக்கருத்தை முறியடிக்கும் வகையில் பெண்கள், தொழில் முனைவோராகவும் அக்காலச் சமூகத்தில் சிறந்திருக்கிறார்கள்.

தினைப்புனம் காத்த குறிஞ்சி நிலப்பெண்கள் கொடிச்சியர் என்றும், கால்நடைகளைப் பராமரித்த முல்லை நிலப் பெண்கள் ஆய்ச்சியர் என்றும், விவசாயத் தொழில் செய்த மருத நிலப்பெண்கள் உழத்தியர் என்றும், கடல் சார் தொழில் செய்த நெய்தல் நிலப்பெண்கள் நுளைச்சியர் என்றும் அழைக்கப் பட்டனர்.

இவை தவிர மலர் வணிகம் செய்யும் பூவிலை மடந்தையர், பட்டு, பருத்தி ஆகியவற்றைக் கொண்டு நெசவுத் தொழில் செய்யும் பெண்டிர், ஆடை வெளுக்கும் பெண்டிர், அரண்மனைகளில் பணியாற்றிய ஏவல் பெண்டிர், கள் சார்ந்த தொழில்களில் ஈடுபட்ட அரியல் மகளிர் என பலவாறான தொழில்களில் பெண்கள் ஈடுபட்டதை அறியமுடிகிறது. இவை தவிர ஆடல் பாடலையே தொழிலாகக் கொண்ட பானிடியர், விறலியர் முதலிய பெண்களும் அன்றைய சமூகத்தில் கலை களால் சிறப்புற்றுத் திகழ்ந்திருக்கிறார்கள்.

விவசாயத் தொழில், தோட்டத் தொழில், கால்நடைகள் சார்ந்த தொழில், கடல்சார் தொழில், வணிகம் சார்ந்த தொழில் என அக்காலப் பெண்கள் சகல தொழில்களையும் கைக்கொண்டு, பொருளாதார வாழ்வை சீரமைத்துக் கொள்ளும் தகுதியைப் பெற்றிருந்தார்கள் என்றால், நம் தமிழ்ச்சமூகத்தின் மாண்பை என்னவென்பது?.

மதிப்புமிகும் செல்வாக்கு

அதுமட்டுமன்று. அன்றைய பெண்பிள்ளைகளின் கருத்துக்கு அதிக மதிப்பளிக்கும் போக்கு அன்றைய குடும்பங்களில் தழைத்திருந்தது. தங்களுக்குத் தகுதி மிகுந்த மாப்பிள்ளைகளைத் தேடும் வகையில், அன்றைய இளம்பெண்கள் இல்லத்தில் மதிப்பு பெற்றிருந்தனர்.

நிறைய பரிசுப் பொருட்களைக் கொண்டுவந்து கொடுத்து, மகளைத் திருமணம் செய்து கொடுக்கும்படி பணிந்து நின்று கேட்டாலும், கேட்கிற ஆடவன் தகுதியற்றவன் எனில் அவனுக்கு என் பெண்ணைத் தரமாட்டேன் என்று சொல்லும் அக்கறை மிகுந்த தந்தையர் அன்று இருந்தனர். இதை, “நலஞ்சால் விழுப்பொருள் பணிந்துவந்து கொடுப்பினும்

புரையர் அல்லோர் வரையலள் இவளெனத்

தந்தையும் கொடா அன் ( புறநானூரு 383)

-என்று சங்க இலக்கியம் உவப்பாகப் பேசுகிறது.

இப்படியொரு செல்வாக்கு, உலகின் வேறு எந்த பகுதியிலும் அன்று பெண் பிள்ளைகளுக்கு இருந்ததா? என்பதற்கு உறுதியான பதில் இல்லை.

விடுதலை பறவைகள்

அதுபோலவே, சங்ககாலத்தில் பெண்குழந்தை களை வீட்டிற்குள் அடைத்து வைத்து வளர்க்கும் வழக்கமும் இல்லை என்பதை உணரமுடிகிறது.

அவ்வாறு பெண் குழந்தைகளை அடைத்து வைத்தல் அறமாகாது என்றும், அது அவர்களின் உடல் நலத்திற்கும் தீதானது என்றும் அன்றைய தமிழ்க் குடும்பங்களில் பரந்த சிந்தனை நிலவி வந்ததால், விளையாடும் நேரத்தில், பெண் குழந்தை களை வெளியே சென்று பறவைகளாய்ச் சிறகடிக்கச் செய்து அவர்களின் விடுதலை உணர்வைப் பேணினர். இதை...

‘விளையா டாயமொடு ஓரை யாடாது

இளையோர் இல்லிடத் திற்செறிந் திருத்தல்

அறனும் அன்றே ஆக்கமும் தேய்ம்மெனக்

குறுநுரை சுமந்து நறுமலர் உந்திப்

பொங்கிவரு புதுநீர் நெஞ்சுண ஆடுகம்...”

(நற்றிணை 68)

என்கிறது சங்க இலக்கியம். இம்மாதிரியான உயர்ந்த பார்வையும் நோக்கமும் கொண்ட சமுகமாக நம் தமிழ்ச்சமுகம் இருந்ததை எண்ணி எண்ணி நாம் மகிழ்வெய்தலாம். இவ்வாறு மதிப்போடு வளர்க்கப்பட்டதால்தான் பெண் பிள்ளைகள், சுயமரியாதை உணர்வோடு தங்கள் உரிமைகளை நிலை நாட்டும் விதமாகத் திகழ்ந்தனர்.

தடைச்சுவர்களை உடைத்தெறிதல்

சங்ககால மகளிர் அகத்துறையிலும் தங்கள் உரிமைகளை நிலை நாட்டும் திண்மை கொண்டவர்களாகத் திகழ்ந்தனர். குறிப்பாக தங்கள் காதல் சார்ந்த விருப்பத்தை வெளிப்படுத்தும் மனத் தெளிவைம் அவர்கள் பெற்றிருந்தனர்.

’தன்னுறு வேட்கை கிழவன் முற்கிளத்தல்

எண்ணுங் காலை கிழத்திக்கு இல்லை.

(தொல்காப்பியம். களவு. 8)

-என்றவாறு, காதல் உணர்வைத் தன் காதலுக் குரிய தலைவனிடம்கூட வெளிப்படுத்தும் உரிமை காதல் வயப்படும் பெண்ணுக்கு இல்லையென, அக்காலச் சமூகத்தில் சிலர் எழுப்பிவைத்த ஆணாதிக் கச் சுவர்களை எல்லாம் சங்க காலப்பெண்கள் அநாயச மாய் உடைத்துத் தவிடுபொடியாக ஆக்கியிருக்கிறார் கள். இதற்கு ’முட்டுவேன் கொல் தாக்குவேன் கொல்’என்ற ஒளையாரும், ’பரந்தன்று இந்நோய் நோன்றுகொளற் கரிதே’ என்ற வெள்ளிவீதியாருமே சால்புக்குரிய சான்றாகத் திகழ்கின்றனர்.

காதலைத் தேடி

காதல் உணர்வை வெளிப்படுத்தும் உரிமை மட்டுமல்ல, காதலை உரிய வகையில் அடையும் உரிமை தனக்கு உண்டு என்று சொல்லும்விதமாய், வெள்ளிவீதியார் தன் காதல் தலைவனைத் தேடிச்சென்றார். இதை அவரது அகநானூற்றின் 45 ஆம் பாலைத்திணைப் பாடலினுள் வரும்

’காதலற்? கெடுத்த சிறுமையொடு

நோய்கூர்ந்து ஆதி மந்தி போலப்? பேதுற்று

அலந்தனென்? உழல்வென்? கொல்லோ ’ என்ற வரிகள், உணர்த்துகின்றன.

ஆதிமந்தி காவிரியில் அடித்துசெல்லப்பட்ட தன் காதலன் ஆட்டனத்தியைத் தேடி அலைந்தது போல, தன் காதலனைத் தேடி வெள்ளிவீதியார் உழன்றதை சரியென நினைக்கும் ஔவையார், வெள்ளிவீதியாரைப் போல் நானும் என் காதல் தலைவனைத் தேடிச் செல்வேன் என்று, எவருக்கும் அஞ்சாது தன் அகநானூற்றுப் பாடலில் முரசறைகி றார்,

’பொறி கிளர் உழுவை போழ் வாய் ஏற்றை

அறு கோட்டு உழை மான் ஆண் குரல் ஓர்க்கும்

நெறி படு கவலை நிரம்பா நீள் இடை

வெள்ளிவீதியை போல நன்றும்

செலவு அயர்ந்திசினால் - (அகம் 147)

-இதில், என் உயிர் நிகர்க் காதலனைத் தேடி, உயிர் ஆபத்து நிறைந்த காட்டுவழியிலும் செல்வேன் என்று, தனது கட்டறுக்கும் காதலை பாடலில் அவர் பெருக்கெடுக்கவிடுகிறார்.

இப்படிப்பட்ட பெண்பாற் புலவர்களின் பாடல்கள், ஆணாதிக்கம் போட்டுவைத்த பிற்போக்குக் கோடுகளைத் தாண்டக் கொஞ்சமும் தயங்கவில்லை என்பதை நமக்கு உணர்த்துகின்றன.

இதில் வெள்ளிவீதியார் ஒருபடி மேலே சென்று...

குறுந்தொகை 27-ல், துய்க்காத காமத்தால் தன் உடலின் அந்தரங்க அழகு மங்குவது குறித்த கவலையையும் வெகு துணிச்சலாகப் பேசுகிறார்..

'பசுவும் உண்ணாது கலத்தினும் படாது

நல்லான் தீம்பால் நிலத்துஉக் காஅங்கு

எனக்கும் ஆகாது என்னைக்கும் உதவாது

பசலை உணீஇயர் வேண்டும்

திதலை அல்குல் என்மாமைக் கவினே.

(குறுந்தொகை, 27)

இப்படியாக நம் சங்கப்பெண் புலவர்கள் பலரும் ஆணாதிக்கம் பேசும் தொல்காப்பிய வரிகளைப் புறந்தள்ளுகின்றனர்.

sdf

இதுபோல் தாங்கள் விரும்பிய காதல் வாழ்வை எளிதில் எட்டக் கூடிய உரிமை உடையவர்களாக அக்காலப் பெண்கள் இருந்தனர்.அவர்களின் அகவாழ்க்கை வெற்றி பெற, அவர்களின் தோழியர்கள் தூது சென்று உதவினர்.

அப்படிக் காதலுக்குத் தூது செல்லும்போது, ஆண்களின் இயல்பை எடுத்துச் சொல்லி, அவளை எச்சரிக்கிறவர்களாகவும், தலைவியின் பேரன்பை, காதல் தலைவனுக்கு உணர்த்த முற்படுகிறவர்களாகவும் தோழிகள் திகழ்ந்தனர்.

நீதியை நிலைநாட்டுதல்

இன்றைய உலகில் இருப்பது போல், காதல் குற்றங்கள் அப்போதும் இருந்திருக்கின்றன. ஆடவரில் சிலர்,தங்களது காதலுக்குரிய பெண்களை ஏமாற்றத் துணிந்தவர்களாகவும் இருந்திருக்கிறார் கள். அதனால்தான், உளம் கலந்த காதலர்களை ஊரார் ஒன்று கூடி, மணம் முடித்துவைக்கும் வழக்கமும் தொடங்கியிருக்கிறது. இதை,

’பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்

ஐயர் யாத்தனர் கரணம் என்ப’(கற்பியல்-4)

-என்று தொல்காப்பியம் எடுத்துச்சொல்கிறது. திருமணம் இல்லாமலும் சேர்ந்து வாழும் ஒரு நிலை இருந்ததையும் இந்த சூத்திரம் உணர்த்துகிறது.

அதேபோல்-- தங்களுக்கு காதலின் பெயரால்; அநீதி இழைக்கப்பட்டால், அதையும் உரியவகையில் வெளிப்படுத்தி, சரியான வழியில் முறையிட்டு நீதியினைத் தேடிக்கொள்கிற துணிவுகொண்டவர்களாகவும் சங்ககாலப் பெண்டிர் இருந்தனர் என்பது தலைநிமிரத்தக்க நிகழ்வாகும்.

எடுத்துக்காட்டாக,அகநானூற்றில் ஒரு பாடல். கள்ளூர் என்ற ஊரில், நெறி தவறிய ஆண் ஒருவன், ஓர் இளம்பெண்ணுடன் நட்பாகப் பழகி, நம்ப வைத்து நுகர்ந்தபின், அவளைத் தனக்குத் தெரியாது என்று கபட நாடகமாடுகிறான்.

இதைக்கண்டு கண்ணீர் சிந்திக் கரைந்து போகாமலும், அவனைத் தப்பவிடாமல், ஊர்ச்சபையின் முன் அவனை நிறுத்தச் செய்கிறாள் அந்தப் பெண். ஊர் மன்றத்தினர் விசாரித்து, அவன் மீதான குற்றத்தை உறுதி செய்து கொண்டபின், பெண்னை ஏமாற்றிய அவனுக்கு தண்டனை கொடுக்கின்றனர். எப்படி? அவனை மரத்தில் கட்டிவைத்து,அவன் தலையில் சாம்பலைக் கொட்டி அவனுக்குத் தண்டனையைக் கொடுத்தனர்.

இதை

’கரும்பு அமல் படப்பை பெரும் பெயரக் கள்ளார்த்

திருநுதல் குறுமகள் அணிநலம் வவ்விய

அரணிலாள னறியே னென்ற

திறனில் வெஞ்சூ ளறிகரி கடாஅய்

முரியார் பெருங்கிளை செறியப்பற்றி

நீறுதலைப் பெய்த ஞான்றை

வீறுசால் அவையத்து ஆர்ப்பினும் பெரிதே.

(அகம்-256)

என்கிற அகநானூற்று வரிகள் பெருமிதமாய்ப் பேசுகின்றன. கண்ணகியைப் போல் சங்ககாலப் பெண்களின் உடலில் நீதிக்காக ஆர்த்தெழும் தன்மான அணுக்கள் மிகுந்திருந்தன என்பதை இப்பாடல் உணர்த்துகிறது.

எனவே ஆண்களுக்கு நிகராக கல்வி, வணிகம், கருத்துச் சுதந்திரம், அகவிடுதலை, நீதியை நிலைநாட்டிக்கொள்ளும் மனத்துணிவு என சங்ககாலப் பெண்கள் நிமிர்வோடு வாழ்ந்திருக் கிறார்கள்.

அறிவியலின் மாயங்கள் அதிகம் உணரப்படாத அக்காலத்திலேயே, உலக இனங்களில் பெண்கள் சம உரிமையோடு வாழ்ந்த சமுதாயமாக நம் தமிழ்ச்சமூகம் இருந்தது என்பது, நமக்குக் கிடைத்திருக்கும் ஈடில்லாப் பெருமையாகும்.

uday011123
இதையும் படியுங்கள்
Subscribe