வளமை சேர்ப்பது தாயின் பாலடா
மானம் காப்பது மனைவியின் வார்த்தைகள்
கலியழிப்பது பெண்கள் அறமடா!
-என்பார் மகாகவி பாரதி.
மேற்சொன்ன பாரதியார் வரிகள், ஆணின் வளமை, தன்மானம், வரலாறு, புகழ் இவை எல்லாவற்றிலும் பெண்ணின் நிலையும் பங்கேற்பும் பல நிலைகளிலும் மேம்பட்டது என்பதைத் தெள்ளத் தெளிவாகப் புரிய வைக்கிறது.
மகாகவி காலத்திலும், அதற்கு முன்னரும், அச்சம், மடம், நாணம், பயிற்பு, ஒழுக்கம், கற்பு என்பவை பெண்களின் அறங்களாகவும், வீரம், போர்,வெற்றி, புகழ் இவை ஆண்களின் அறங் களாகவும் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளன. இவைகளில் கற்பு பெண்களுக்கு மட்டுமே வலியுறுத்தப்படுவதை கவனிக்கலாம்.
முடியாட்சி காலத்தில் போரில் வெற்றி பெற்ற மன்னர்கள் நாடு, நகரம், ஆடு, மாடு, குதிரை, யானை போல பெண்களையும் அடிமைகளாக எடுத்துச் சென்றனர்.
அன்று சாத்திரங்களை ஆண்கள் எழுதியதால் பெண்கள் மேல் பாரம் பல திணித்து பெண்ணை பலவீனப் பாலினம் என்றனர். பெண்ணால் தற்காப்பு கவசம் தானணிந்து, தம்மை வலிமையான பாலினம் என்றனர்.
சங்க கால இலக்கியங்களில் பெண்கள் வீரமுடையவராக, கவிச்செழுமை மிக்க நல் அறிவுள்ள கவிஞர்களாகவே சித்தரிக்கப்பட்டனர்.
புலியை முறத்தால் அடித்து விரட்டினர். மொழிச்செறிவு கொண்ட நல் புலவர்களாகவும், பல கலை வித்தகர்களாகவும் விளங்கினர். இந்தப் பெண்களை அடைவது ஆண்களுக்கே சவாலாக இருந்தது.
இன்னும் அழுத்தமாய் சொல்ல வேண்டுமென்றால், சதி, உடன்கட்டை ஏறுதல் என்ற சடங்குகள் இருந்த காலம். கணவன் இறந்தால் பெண்ணுக்குத்தான் உடன்கட்டை ஏறும் சடங்கு. பால்ய திருமணம், மிக சிறிய வயது, கணவனை இழந்த சோகம். இந்த கலவையான உணர்வுகளுடன் போராட்டம்.
உடன்கட்டை ஏறும் சடங்கு ஆணுக்கல்ல. உயிருடன் தீயில் இறங்கும் துணிவு, மனவலிமை பெண்ணுக்குத்தான் உண்டு என்பதாலோ ?
ஔவையார் இரண்டாம் நூற்றாண்டிலும், காரைக்கால் அம்மையார் ஐந்தாம் நூற்றாண்டிலும் ஞானம், புலமை, பக்தி என பெருமை சாதித்தனர்.
இந்தக் கால கட்டத்திற்குப் பிறகு பல ஆ

இந்தக் கால கட்டத்திற்குப் பிறகு பல ஆண்டுகளாக பெண்ணின் சாதனைகள் வெளியில் பேசப்படவில்லை. பக்தியில் ஞான ஊற்றாய் ஔவையார், காரைக்கால் அம்மையார், ஆண்டாள், சாரதா அம்மையார் போன்ற பலர் இருந்தும், ஆன்மிகப் பணிகள் ஆண்களுக்கென்றே கொடுக்கப்பட்டது.
பெண்கள் இருளில் வீட்டுக்குள்ளே பூட்டி வைக்கப்பட்ட காலத்தில் அவர்களுடைய சுதந்திரத்திற்காக, சமத்துவத்துக்காக உரிமைக்குரல் எழுப்பினர் இராஜாராம் மோகன்ராய், மகாகவி பாரதியார் போன்ற பலர்.
சங்க காலப் பெண்கள் மறக்குடி மகளிராகவும், தன்மானம்,ஒழுக்க நிலையோடு வாழ்ந்ததை எங்ஙனம் மறுக்க முடியதோ, அதே அளவு அன்றைய சமூகத்தில் அவர்கள் பலவகை சமுதாய சிக்கல்களை சந்தித்ததையும் மறுக்க முடியாது.
"கற்பும் காமமும் நாற்பால் ஒழுக்கமும்
நல்லதின் புரையும் விருந்து புறந்தருதலும்
சுற்றம் ஓம்பலும் பிறவு மன்ன கிழவோள்
மாண்புகள்''
-என்பது தொல்காப்பியப் பாடல். இதில் கற்பு நிலை, ஒழுக்க நிலை, நன்னெறி, உபசரித்தல் - இவை பெண்ணின் கடமை என சொல்லப்படுகிறது.
"செறிவும் நிறைவும், செம்மையும் செப்பும்
அறிவும் அருமையும் பெண்பாலான''
-என்ற தொல்காப்பிய வரிகளே, செறிவு, நிறைவு, செம்மை, ஒழுங்குற செப்புதல், அறிவு, அருமை ஆகிய தகுதிகளும் பெண்ணிற்கானதே என்று சொல்கிறது.
பால்ய திருமணம் முடித்து, அவளின் பால பருவத்திலேயே கணவன் இறந்தப் பின், உடன் கட்டை ஏற்றுதல், முடி மழித்தல் எத்தனை கொடுமையுடைய செயல் என்பதை எண்ணிப் பார்க்கையில் நம் நெஞ்சம் பதறுகிறது. ஆணையும், பெண்ணையும் பற்றி மகாகவியின் கூற்றுக்களெல்லாம் இன்றும் சிந்திப்பதற்கு உரியதாகவே அமைந்துள்ளன.
" ஜகத்திற்கு ஆதாரமாகிய பெருங்கடவுள், ஆண், பெண் என இரண்டு கலைகளுடன் விளங்குகிறது. இரண்டும் பரிபூரணமான சமானம். பெண்ணை அணுவளவு உயர்வாகக் கூறுதலும் பொருந்தும். ஆத்மாவும்,சக்தியும் ஒன்று. ஆணும், பெண்ணும் சமம் " என்றார் பாரதி.
செய்யும் தொழில்களிலும்,சரீர பலத்திலும் மாதரைக்காட்டிலும் ஆண்கள் உயர்ந்திருக்கக் கூடும். எனினும், ஞானத்திலும், யுக்தியிலும், புத்திக்கூர்மையிலும் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் குறைவல்ல.சொல்லம்பை பிரயோகிப்பதில் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் அதிக திறமை உள்ளவர்கள். இதற்கு முக்கிய காரணம் ஆண்கள், பெண்களுக்குச் செய்த சரீரத் துன்பங்களும், அநீதிகளும், பலாத்காரங்களும் விளைவித்த வலியும், வடுக்களுமே போலும் என்று தோன்றுகிறது.
சங்க இலக்கிய காலத்திற்குப் பின்னர் வந்த காலங்களில், பெண்ணின் திறன் கண்டு பயந்த ஆண்கள் அடக்குமுறை ஆயுதத்தை பிரயோகிக்க ஆரம்பித்தனர். பெண்ணின் சக்தி கண்டு மிரண்டதால் பலமும், பலவீனமான பெண்ணியத்தை வைத்தே அடக்கி ஆண்டனர். பின்னர் குடும்பத்தவரால் பெண்களும் படிபடியாக தொழில்களில் ஈடுபடுத்தப் பட்டனர். எனினும், ஆணைவிட குறைந்த ஊதியத்தில் தான்.
1820 ஆம் வருடம் சமமான கூலி கேட்டு போராடி, போராடி இன்று பெண்கள் இல்லாத துறையே இல்லை. அதிலும் முதன்மை பதவிகள் வகிக்கும் ஆண்களைவிட, அதிகம் உழைக்கும்,அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் உலகமெங்கும் இயல்பான ஒன்றாகி விட்டது.
எவ்வளவுத்தான் வளர்ச்சி அடைந்த பொழுதிலும், இன்னமும், உழைக்கும் பெண்களுக்கானப் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டுத்தான் இருக்கின்றன.பாதுகாப்பும், சமத்துவமும் பெண்களுக்கான சலுகைகள் அல்ல, அவை அவர்தம் உரிமைகள் என எவ்வளவுதான் வலியுறுத்தினா லும், உழைக்கும் பல பெண்களுக்கு அவை போராட்ட மாகவே உள்ளது.
பெண்ணின் செயல்
பாடுகளை, பெண்
ணுரிமை, சமத்துவம் என்றெல்லாம் வர்ண மொழி பூசாமல், நம்மைப் போல் அவரும் மனித இனம் என்று எல்லா ஆண்களும் நினைத்து விட்டால், நான் சொல்வது - இங்கே விதி விலக்கின்றி எல்லா ஆண்களும் உணரத் துவங்கினால், பெண்ணின் வலி - அவருக்கும் வலிக்கும்.
வீட்டிலும் சரி, பணியிடத்திலும் சரி, " வலிமையை கொடுக்கவே இந்த வலிகள் " என்று மௌனமாக ஏற்று வாழ்க்கை நடத்துகிறார்கள் பல பெண்கள்.
பெண்களின் உழைப்பைத் தவிர, சுற்றுப்புற காரணி களும் அவர்கள் தொழிலின் வெற்றி, தோல்விகளை தீர்மானிக்கின்றன.
பெண், நகைகள் பல அணிந்து என்று ஒரு இரவு முழுவதும் வெளியில் தனியாக பாதுகாப்பாக இருக்க முடிகிறதோ அன்று தான் பெண்ணுக்கு சுதந்திரம் என்று அன்று மகாத்மா காந்தி சொன்னார்.
இந்தக் கூற்று தங்க நகைச் சார்ந்தது அல்ல.
அப்படியெனில் அவர் ஆணையே சொல்லியிருப்பாரே. இது பெண்ணின் பாதுகாப்பைப் பற்றியது. ஒரு துளி தங்கம் இல்லாமலும், ஒரு ரூபாய் கூட கையில் இல்லாமலும் கூட இன்று பெண்ணுக்குத் தனியாக இரவில் வீட்டைவிட்டு வெளியில் பாதுகாப்பு உண்டா ? பகலில் உண்டா முதலில் அதைச் சொல்லுங்கள்.
எனினும், பகல், இரவு பாராமல் வானமே எல்லையாய் பல துறைகளில், பல்வேறு திறமைகளோடு தடம் பதித்துக் கொண்டுத்தான் இருக்கிறார் பெண். பெண்ணுக்கு ஒவ்வொரு படிக்கட்டும் போராட்டமே. ஆனாலும் வெற்றிப் பாதைக்கான ஏணிப்படிகளே !
அடுத்தவர் எவ்வளவு தான் காயப்படுத்தினாலும், தொழிலில் உள்ள கடும்போட்டிகள், பொறாமையால் உண்டாக்கும் தீமைகள், சமூக விரோதிகளின் ஆதிக்கம், அராஜகம், இடையூறு,திருமணத்தடைகள், பாலியல் தொல்லைகள், பாதுகாப்பின்மைகள்...
அப்பப்பா !! பெண் தான் எவ்வளவு முக்கியமானவள் !
இன்னல்கள் இவை அனைத்தையும் தாண்டி சாதிக்கும் பெண்ணிற்குத்தான் ஏது எல்லை ? அவருள் இருப்பதை உய்த்துணர, ஒளிந்திருக்கும் ஒளியை ஒளிரச் செய்ய, தீ கொழுந்தினை தூண்டிவிடும் தீக்குச்சிகளே அவள் இன்னல் படிக்கட்டுகள் பெண், சமுதாயத்தில் தானும் சகமனுஷி என நிலைநாட்ட தேவையில்லாத சூழ்நிலை உருவாக வேண்டும். ஆம் ! சாதாரணமில்லை பெண். உயிருக்குள் உயிரை உயிர்ப்பிக்கும் வித்தையை வரமாய் பெற்றுள்ளவள். முட்களுக்கு இடையிலும் கூட மலர்ச்சி அவள் இயல்பான நிலை. வீட்டில் வாழ்வதை விட வீட்டிற்காக வாழ்பவள். பெண் நெருப்பின் வழியாக வந்தவள். தீபச்சுடர். அதனால் தான் ஒளியுடையவளாக இருக்கிறாள்.
பெண்ணின் திறமை அவள் உடைமை. வெறும் உரிமை அல்ல, அவள் உடைமை. விதைக்குள் ஒளிந்திருக்கும் பூ அவள். பூவினுள் இறைவனைக் கண்டார் தாயுமானவர். பெண்ணோ அவள் உள்ளத்தால் தாயுமானவள். பெண்ணை மலரென்கின்றனர் கவிஞர்கள், எனில் அவள் எத்தனை மென்மை, வெண்மை, சுகந்தம் ! பூவின் மொழி ஆழமானது. அதனால் தான் சப்தமில்லை.
பெண்ணுள்ளம் - பூவின் மொழி. அதனால் ஆரவாரமற்ற, மணக்கும் பூஞ்சோலை ! உன் முன்னேற் றத்திற்கு, சாதனைக்கு இடையூறுகள் வரின், தோழி துவளாதே - உன் மேல் விழுந்த உளிகளே உன்னைச் சிற்பம் ஆக்கியுள்ளன. தாம் இதைத்தான் செய்கிறோம் என அறியாமலே, “”உன்னில் இருந்து உன்னை, உன்னில் இருந்த உன்னை “” உருவாக்கிய நம் தோழருக்கு நன்றி சொல். தோழர் அவருக்கு என்றும் உன் தோள் கொடு தோழி. பலவீன பாலினம் என்று பெண்ணை நெருப்பில் வாட்டி, வாட்டி புடம் போட்ட தங்கமாய் இன்று மிளிர வாய்ப்பளித்துள்ளனர். கோணல் வழியில் சுற்றி வரவில்லை பெண். யானையைப் போல் கூட்டத்தைப் பிளந்து கொண்டு வந்துள்ளனர்.
சளைத்தவளல்ல பெண் என்று சாதித்த கருத்து சரியென்று தெரிந்தப் பின்னும் விவாதம் ஏன் ? மேடைப் பேச்சு ஏன் ? மகளிர் தினமென்று ஒன்று தான் ஏன் ? எல்லா நாட்களும் பெண்களின் நாள் தானே.
அன்று ஆணாதிக்கம் - பெண்ணடிமை. குரல் கொடுத்தோம், தடைய ஓரளவு தகர்த்து விட்டோம். ஆனால், இன்று பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்கின்ற குரல் பரவலாய் கேட்கிறது, முளையிலேயே கிள்ளி எறிந்து விடுவோம்.
எல்லாவற்றிற்கும் பயன்படுகிறது நீர்.ஆனால் தாழ்வான இடங்களில் தான் வசிக்கிறது. உயிர் மூச்சு தருவது முதல் எல்லாவற்றிற்கும் இன்றியமையாதது காற்று. ஆனால் இருக்கும் இடம் மற்றவர் அறிய முடியாமல் அமைதியாய் வாழ்கிறது. ஆனால், வலிமையை வெற்றிக் கொள்வதில் இவைவிட உயர்ந்தவை வேறொன்றில்லை. அந்த நீர், காற்று போன்றவள் பெண்.
அவளும், அவள் மென்மையும், வலிமையும் எல்லையின்றி எங்கும் வியாப்பித்துள்ளவை.
"உயிரைக் காக்கும், உயிரினை சேர்த்திடும்
உயிரினுக்குயிராய் இன்பமாகிடும்
உயிரினும் இந்தப் பெண்மை இனிதடா !
ஊது கொம்புகள் ! ஆடு களி கொண்டே!''
- என்ற மகாகவி பாரதியாரின் கூற்றுப்போல் கொண்டாட வேண்டியதாக உள்ளது இன்று எங்கும், எதிலும் பெண்களும், அவர் பல சாதனைகளும்.