ஏன் எழுதுகிறாய்
என்று கேட்பது, ஏன் சாப்பிடுகிறாய்
என்று கேட்பது போல. பசிக்கிறது சாப்பிடுகிறோம். உயிரோடிருக்க, சாப்பிடுகிறோம். பலம் வேண்டிச் சாப்பிடுகிறோம். ருசியாயிருக்கிறது என்று ஜிஹ்வா சாபல்யத்தினால் சாப்பிடுகிறோம்.
சாப்பிடாமல் இருந்தால் ஏதாவது நினைத்துக்கொள்ளப் போகிறார்களே என்று சாப்பிடுகிறோம்.
சில பேர் சாப்பிடுவ தற்காகவே சாப் பிடுகிறார்கள். ருசி, மணத்தைக்கூடப் பாராட்டாமல் சாப்பிடுகிறார்கள். நம் நாட்டு அரசியல் பிரமுகர் ஒருவர் அமெரிக்கத் தூதரா லய விருந்து, உடனே கவர்னர் விருந்து, உடனே ராமநவமி உத்சவச் சாப்பாடு மூன்றையும் ஏழிலிருந்து எட்டு மணிக்குள் சாப்பிடுவார். இத்தனை காரணங்கள் எழுத்துக்கும் உண்டு- அதாவது நான் எழுதுகிறதற்கு.
பணத்துக்காக, பேருக்காக, பேரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, நானும் இருக்கிறேன் என்று காண்பித்துக் கொள்வதற்காக, தாக்ஷிண்யத்திற்காக, எனக்கே எனக்காக, கொஞ்சம் எனக்கும் கொஞ்சம் உங்களுக்குமாக, சில சமயம் எதற்கு, யாருக்கு என்று தெரியாமல் - இப்படி பல மாதிரியாக எழுதுகிறேன். சில சமயம் நாடகத் தயாரிப்பாளர் சொல்லுகிறார்- ஒரு பிரமிப்பு, ஒரு தினுசான தாக்குதல் ஏற்படுத்த வேண்டும்; பார்க்கிறவர்கள் மனதில் என்று- சரி என்று சொல்கிறேன். கடைசியில் பார்க்கும் பொழுது, இத்தனை காரணங்களும் அல்லாடி அலைந்து மூன்று கழிகளில் பிரிந்து விழுந்து விடுகின்றன. எனக்கே எனக்கு, உனக்கே உனக்கு, எனக்கும் உனக்கும் - இந்த மூன்று தினுசுதான் கடைசியாக உண்டு என்று தோன்றுகிறது. இந்த மூன்றும் சேர்ந்து ஒரே இடத்தில் ஒரே எழுத்தில் இருக்கிறாற்போல சில சமயம் ஒரு பிரமை ஏற்படலாம். அது பிரமைதான்; உண்மையில்லை.
இரவு எட்டு மணிக்குக் காய்கறி வாங்கும்பொழுது, நேற்று மாலையில் வந்தது, இன்று காலையில் வந்து, இன்று முழுவதும் வெயிலில் காய்ந்தது, இன்று மாலை வந்தது மூன்றும் ஒரே குவியலாகக் கிடக்கும். ஆனால் சற்று உற்றுப் பார்த்து, தொடாமல்கூட, கலந்துகட்டி என்று கண்டுபிடித்து விடலாம்.
எனக்கே எனக்கு என்று சொல்லுகிற எழுத்தைப் பற்றித் தான் இங்கு சொல்ல வேண்டும். அதுதான் சொல்ல முடியும்? விஸ்தாரமாகச் சொல்ல என்ன இருக்கிறது? எனக்கே எனக்காக எழுத வேண்டும் போலிருக்கிறது. எழுதுகிறேன். அது என்னமோ பெரிய ஆனந்தமாக இருக்கிறது. காதல் செய்கிற இன்பம் அதில் இருக்கிறது. காதல் செய்கிற இன்பம், ஏக்கம், எதிர்பார்ப்பு, ஒன்றிப் போதல், வேதனை- எல்லாம் அதில் இருக்கின்றன. இன்னும் உள்ளபடி சொல்ல வேண்டும் என்றால் பிறர் மனைவியைக் காதலிக்கிற இன்பம், ஏக்கம், நிறைவு- எல்லாம் அதில் இருக்கின்றன. கண்யநஷ்டம், பாபம் பாபம் என்று மூலையில் முடங்கியவாறே கையாலாகாமல் முணுமுணுக்கிற மனச்சாட்சி, சந்தி சிரிப்பு, சந்தேகக்கண்கள்- இத்தனையையும் பொருட்படுத்தாமல் முன்னேறுகிற பிடிவாதம், வெறி, அதாவது ஆனந்தம்- எல்லாம் அதில் இருக்கின்றன. உங்களுக்காக எழுதும்பொழுதோ மனைவியைக் காதலிக்கிற நல்ல பிள்ளைத்தனமும் நிர்பந்தமும்தான் கண்ணுக்குத் தெரிகின்றன. பல சமயங்களில் நல்ல பிள்ளையாகத்தான் காலம் தள்ள வேண்டியிருக்கிறது. மனித வாழ்க்கையின் நெருக்கடிகளும் பிடுங்கல்களும் அப்படிச் செய்துவிடுகின்றன. இந்த நிர்ப்பந்தத்துக்குப் பணியாதவர்களைக் கண்டு நிர்ப்பந்தங்கள் இல்லாத வர்களைக் கண்டும் பொறாமைப்படுகிறேன்.
சரி எனக்கே எனக்காக எழுதும்பொழுது என்ன எழுதுகிறேன்? எப்படி எழுதுகிறேன்? என்ன எழுத வேண்டும் என்று எனக்கு நானே உபதேசம் செய்து கொள்கிறேனோ? பசியே தொழிலாகக் கொண்டிருக்கிற ஏழைகளைப் பற்றி, பிச்சைக்காரர்களைப் பற்றி, பாட்டாளிகளைப் பற்றி, விருப்பமில்லாமல் வழுக்கி விழுந்த பெண்களைப் பற்றி, பள்ளிக்கூடம் போக முடியாமல், பிண ஊர்வலத்தில் நடனம் ஆடிக்கொண்டு போகிற குழந்தைகளைப் பற்றி, விருப்பமில்லாமல் திருட நேர்ந்தவர்களைப் பற்றித்தான் எழுத வேண்டும் என்று வகுத்துக் கொள்கிறேனா? இதையெல்லாம் எழுதி, உன்னைச்சுற்றி சாக்கடை தேங்கிக்கிடக்கிறது... ஏன் பார்க்கவில்லையென்று சமுதாயத்தைப் பார்த்துக் கோபித்துக் கொள்ள சங்கற்பிக்கிறேனா? அல்லது குடும்ப உறவுகள், உணர்ச்சிகள், கலைஞர்கள், பெரிய உத்தியோகஸ்தர்கள், நடுவகுப்பு, உயர்வகுப்பு மனிதர்கள், அவர்களுடைய ஆச்சாரங்கள், சீலங்கள், புருவம் தூக்கும் பாங்கு, கண்ணிய வரம்புகள், மேல்பூச்சுகள், உள்நச்சுகள் இவற்றைப் பற்றி எழுத வேண்டும் என்று திட்டம் போட்டுக்கொள்கிறேனா?
அல்லது சிம்ம விஸ்ணு, கரிகாலன், ராணாப் பிரதாப், வல்லவ சேனன், அலெக்ஸாண்டர் - இவர்க ளைப் பற்றி எழுதி பழையகாலத்தை மீண்டும் படைக்க வேண்டும், இன்றைய மனிதனின் மூதாதை யரின் நற்குண, துர்குணங்கள், இவற்றையெல்லாம் எழுதி சரித்திரக் கொள்கைகளையோ சித்தாந்தங் களையோ வகுத்து நிலைநாட்ட வேண்டும் என்று எழுதும்பொழுது திட்டம் போட்டுக் கொள்கிறேனா?
எனக்கே எனக்காக எழுதும் பொழுது இந்தப் பிடுங்கல்கள் ஏதும் என்னைத் தொந்தரவு செய்வ தில்லை. நான் இத்தனை பெயரைப் பற்றியும் எழுதினா லும் எழுதுவேன், எழுதாமலும் இருப்பேன். யாரைத் தெரியுமோ அவர்களைப்பற்றி எழுதுவேன். அதாவது அவர்கள் அல்லது அதுகள் என்மனதில் புகுந்து, தங்கி, அமர்ந்து என்னைத் தொந்தரவு பண்ணினால் எழுதுவேன். தொந்தரவு தாங்க முடியாமல் போனால் தான் எழுதுவேன். நானாகத் தேடிக் கொண்டு போய் "உன்னைப் பற்றி எழுதுவதாக உத்தேசம்' என்று பேட்டி காணமாட்டேன்- அப்ஸர்வ் பண்ண மாட்டேன். அவர்களாக, அதுகளாக வந்து என்னைத் தாங்கினால்தான் உண்டு. அதனால்தான் எனக்கு எழுதுவதற்காக யாத்திரை பயணங்கள் செய்வதில் உற்சாவம் கிடையாது. அதைவிட காதல் செய்து பொழுதைப்போக்கலாம். (என்ன காதல் என்று நிர்ணயித்துக்கொள்வது என்னுடைய இஷ்டம், வசதியைப் பொறுத்தது.)
அப்படியென்றால் நீர் எழுதுவதற்காகப் பயணம் செய்வதில்லையா என்று யாராவது கேட்டால்? ம்.... செய்கிறதுண்டு. அது உங்களுக்காக, உங்களுக்கும் எனக் குமாக எழுதும்பொழுதுதான். அதனால் கொஞ்சம் பணம் சம்பாதிக்கலாம், ஏமாளிகளைப் பிரமிக்க அடிக்கலாம் என்று தோன்றினால் செய்வதுண்டு. நடுநடுவே அல்ப சந்தோஷங்கள்படுவதில் தப்பொன்றுமில்லை.
ஆக, எனக்குத் தெரிந்தவர்களையும், தெரிந்ததுகளையும் பற்றி எழுதுகிறேன்.... அல்லது என் கண்ணிலும் மனதிலும் பட்டவர்களையும் பட்டவைகளைப் பற்றியும் எழுதுகிறேன். சிலசமயம் என்ன அம்மாமி பாஷையாக இருக்கிறதே என்று சிலர் சொல்கிறார்கள். நான் என்ன செய்ய அம்மாமி களைத்தான் எனக்கு அதிகமாகத் தெரியும். ஆத்தாள் களைப் பற்றி ஏதோ சிறிதளவுதான் தெரியும். தெரிந்த விகிதத்துக்குத்தான் எழுத்தும் வரும்.
எதற்கு எழுதுகிறாய் என்று கேட்டதற்கு, என்ன எழுதுகிறேன் என்று சொல்வதா பதில் என்று யாராவது கேட்கலாம். எனக்காக என்று சொல்லும் பொழுது, என்ன, எப்படி இரண்டும் சொல்லத்தான் வேண்டும் என்று முன்னாலேயே சொல்லிவிட்டேன். மறுபடியும் சந்தேகம் வரப்போகிறதே என்பதற்காக ஞாபகமூட்டினேன்.
எப்படி என்ற கேள்விக்குப் பதில் சொல்லுவதுகூட அவ்வளவு கடினமில்லை, ஏனெனில் எனக்காக எழுதுவது சொல்பம்தான். எழுதுகிறது என்னமோ அதிகம்தான். கூலிக்கு மாரடிப்பதும், கோயில் மேளம் வாசிப்பதும் நிறைய உண்டு. ஆனால் அது என்றும் சொந்தத்திற்கு என்று எழுகிற எழுத்தைப் பாதிப்பதில்லை என்று நிச்சயமான உணர்வு இருக்கிறது. கூலிக்கு மாரடித்தால், மார்வலியோ சோர்வோ இருந்தால்; வலியடங்கிக் சோர்வகன்ற பிறகு அதுவும் அவசியமானால் முடிந்தால் எழுதுகிறதே தவிர, வலியோடும் சோர்வோடும் எழுதுகிறது கிடையாது. எவனாவது எழுதுவானோ அந்தமாதிரி! எழுதத்தான் முடியுமா? திராணி எங்கே இருக்கும்?
எப்படி எழுதுகிறேன் என்று சொல்வதைவிட எப்படி எழுத ஆரம்பிக்கும் நிலைக்கு வருகிறேன் என்று சொல்வதுதான் இன்னும் பொருந்தும். புகையிலையை மென்றுகொண்டு சும்மா உட்கார்ந்து மனம் சுற்றி ஒன்றை முற்றுகையிடுகிற, வழிகாணாமல் தவிக்கிற, வழி காணப் பறக்கிற ஆட்டங்களைப் பார்த்துக்கொண்டே உட்காந்திருக்கிறேன். சாப்பிடும் பொழுது வேறுவேலைசெய்யும் பொழுது, வேறுஏதோ எழுதும்பொழுது, யாருடனோ பேசும்பொழுது இந்த அமர்க்களமும் தவிர்ப்பும் நடந்துகொண்டுதானிருக்கின்றன. நடப்பது தெரிகிறது. வழி தெரிந்ததும் எழுதமுடிகிறது. அவ்வளவுக்குமேல் அதைப்பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை.
(சென்னையில் 08-04-1962ல் நடந்த எழுத்தாளர் களுக்கான கருத்தரங்கில் "எதற்காக எழுதுகிறேன்' என்ற தலைப்பில் தி. ஜானகிராமன் வாசித்த கட்டுரையிலிருந்து...)