னது கிராமமான தேவபாண்டலத்திலிருந்து அதிகாலை மூன்றேகால் மணிக்கு திருவண்ணாமலை நோக்கி வரும் மஸ்தான் பேருந்தில்.....

’ஊரெல்லாம் உன் பாட்டுதான்

உள்ளத்தை மீட்டுது

நாளெல்லாம் உன் பார்வைதான்

Advertisment

இன்பத்தைக் கூட்டுது“- என்ற பாட்டுவரிகளை எத்தனையோ முறை இந்தப் பாடலைத் தூக்கக் கலக்கத்தில் கேட்டபடி பயணித்திருக்கிறேன். அப்போதெல்லாம் தெரியாது இப்பாடலை எழுதிய கவிஞர் பிறைசூடன் எழுதும், திரைப்படத்தில் நானும் ஒரு பாடலை எழுதுவேன் என்று. இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் 2018-ல் வெளியான ’பாடம்’ என்ற திரைப்படத்தில் கவிஞர் பிறைசூடன் நடித்தும் இருந்தார்.;

ssss

அதோடு ”கொடுமை போதும் என்ற பாடலையும் எழுதியிருந்தார்.

Advertisment

அப்பாடலில் பள்ளிப்பாடத்தைப் பற்றி ”பாடம் பாடம் மனப்பாடம் செய்தும் ஒன்றும் ஏறல.. பள்ளிப்பாடம் பலிபீடம் போல இன்னும் மாறல..” என்று இன்னும் மாறாமலிருக்கும் பள்ளிப் பாடத்திட்டத்தை சுட்டிக்காட்டிருந்தார்.

பாடம் திரைப்படப் பாடல் வெளியீட்டு விழாவில்தான் அவரை முதன்முதலில் அருகே பார்த்ததும் பேசியதும் தயாரிப்பாளர் ஜிபினும் நானும் கவிஞரைச் சந்தித்து முகமண் கூறிக்கொண்டோம். விழாவில் இயக்குநர்களான அண்ணன் சீமானும் சீனுராமசாமியும் என்னைப் பற்றிக் குறிப்பிடும் போது கவிஞர். நா. முத்துக்குமாரின் உதவியாளன் வேல்முருகன் இத்திரைப்படத்தில் பாடல் எழுதியிருக்கிறான் என்று அறிமுகப்படுத்திப் பேசியதை கவனித்துக்கொண்ட கவிஞர் பிறைசூடன் எனக்கும் சக கவிஞரான சொற்கோவுக்கும் வாழ்த்துக்கூறிப் பேசினார். பிறகு விழா முடிந்து வெளியே வரும்போது ’தம்பி நீங்க முத்துக்குமார்கிட்ட உதவியாளரா இருந்தீங்களா.. ஒரு விசயம் தெரியுமா?’ என்று சிறு இடைவெளிவிட்டு ’முத்துக்குமார் எங்கிட்ட கொஞ்ச நாள் உதவியாளராக வேலைப் பார்த்திருக்கிறார்’ என்றார்.

அது எனக்கே தெரியாத ஒரு தகவலாக இருந்தது. ’அப்படீங் களாய்யா’ என்று ஆச்சர்யப்பட்டு பேசினேன். அதன்பிறகு, கேகே நகர் நெசப்பாக்கத்தில் அவர் வீட்டினருகே காலாற நடந்துபோய் கொண்டிருந்தார். அப்போது ஒருமுறை அவரிடம் பேசினேன். எழுத்தாளர்கள் சங்கத்தில் உறுப்பி னரா என்றார். “ நாம் வாழும் வாழ்வே அது சிலகாலம் தான், உறவோடு வாழ்ந்தால் அது பூக்கோலம் தான்” , இந்த நிலமும் அந்த வானமும் அது எல்லோருக்கும் சொந்தம் . என்றெழுதிய கவிஞர் என்னைச் சங்கத்தில் உறுப்பினராக சேரும்படி அதாவது உறவாக இருக்கும்படி கேட்டுக்கொண்டார்.

ஒரு பெண்ணின் உறுதி அவள் உடல் மன வலிமை எப்படி பட்டதென்று கவிஞர் ஒரு காதல் பாடலில் சொல்லியிருக்கிறார், ”அக்கரையும் இக்கரையும் கடந்த வெள்ளத்தை.. கட்டி அணை கட்டி வைத்த பைங்கிளியே..” என்று இரு கரைகளையும் உடைத்துக்கொண்டோடுகிற வெள்ளத்தையே ஒரு பார்வையால் அல்லது ஒரு சின்ன சீண்டலால் அணைக் கட்டி போடக்கூடியவள்தான் பெண் என்று கட்டியம் கூறியிருக்கிறார். இசைகளில் ராகங்களில் இல்லாத அல்லது எந்த இசைக்கலைஞனும் கண்டுபிடித்து பயன்படுத்தாத ஒரு ராகம் இருக்கிறது அது காமன் நிகழ்த்துக்கலையில் மட்டுமே பிறக்கின்ற புதுராகமென்று கவிஞர், ”இனி காமன் கலைகளில் பிறந் திடும் ராகம் புதுமோகம்.. இதயம் இடம் மாறும் இளமை பறிமாறும்.. அமுதும் வழிந்தோடும் அழகில் கலந்தாட “ என்று இளமையை அள்ளி வார்த்தைகளில் தூவியிருக்கி றார். அதாவது, அவளோ அவனோ யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும், ’உனை மனதால் நினைத்தால் அணைத்தால் அது இனிமை ’ என்று காதலில் தனிமை எவ்வளவு அலாதியானது என்று பாடலில் எடுத்தியம்பியிருக்கிறார் பாருங்கள். ’கோயிலுக்குள் ஏற்றிவைத்த தீபம்’ என்று காதலுக்கு ஒரு உருவம் தந்தும் போயிருக் கிறார். கருவறையில் எரியும் தீபத்தை உற்றுப்பாருங்கள் காதலின் மகத்துவம் என்னவென்று புரியும்.

‘மணிக்குயில் இசைக்குதடி’ என்ற பாடல் எனக்கு எப்போதுக்குமான பாடலாக இன்று வரை இருந்துவருகிறது, ஆற்று நீரில் ஆட்டம் போட்டு ஆடி வந்த நாட்களும்.. நேற்று வந்த காற்றுப் போலே நெஞ்சை விட்டுப் போகுமா?” என்ற வரியைக் குரலோடு கேட்கும் போதெல்லாம் உடல் சிலிர்த்து உதறி எழுகிறேன். ஆறாம் ஏழாம் வகுப்பு படிக்கும்போதெல்லாம் எப்போதும் பசங்களோடு சேர்ந்து திருமண வீடுகளில் ஆட்டம் போடுகிற பாட்டாக ஆட்டமா தேரோட்டமா’ பாடல் இருந்திருக்கிறது. ’கேப்டன் பிரபாகரன்’ திரைப்படத்தின் இக்குறிப்பிட்ட சுழலுக்கு மிகச்சிறந்த வார்த்தைகளால் கோர்க்கப்பட்ட ஒரு பாடலாகத்தான் இப்பாடல் இருக்கிறது. ‘ யாருக்கும் தெரியாமல் நான் போட்ட முடிச்சு.. நீ வந்து சுகமாக்கி தரவேணும் முடிச்சு.. நான் உன்ன காணாம நூலாக இளைச்சு.. நீ செல்லும் தடம் பார்த்து வலை போட்டு வளைச்சு.. கண்ணாலே கட்டி வைக்க வா-அட மாமா என் கையாலே பொட்டு வைக்கவா’ என்று சொல்லிவிட்டு கடைசி வரியில்’ கன்னியின் எண்ணம் முடிவது திண்ணம் வா..’ என்று இசை சிறுதும் பிசகாமல் காட்சியின் பதற்றத்தை அதாவது ஒரு பெண்ணின் ரகசிய பின்னலை ஒலியில் ஏற்றி அதிரவைத்தவர் கவிஞர் பிறைசூடன். ’கண்ணாலே கட்டி வைக்க வா’ என்று குளிருக்கும் நெருப்புக்கும் பொருந்தும் ஒரு வரியை எழுதிய கவிஞன் எம் பிறைசூடன்.

இன்று வரை காதல் படமென்றாலும் காதல் பாடலென்றாலும் எல்லோரும் சொல்லும் ஒரு படம் ’இதயம்’ நடிகர் முரளியின் முகமும் அக்காதலும் தமிழ் சினிமா நடந்துமுடிக்காத ஒரு தடம். இசைஞானியின் இசையில் பிறைசூடனின் வரிகளில் எல்லாக் காலக்கட்டக் காதலுக்கும் பொருத்திப் பார்க்கிற ஒரு பாடல் ‘இதயமே இதயமே உன் மௌனம் என்னைக் கொல்லுதே இதயமே’ ’பனியாக உருகி நதியாக மாறி அலைவீசி விளையாடி இருந்தேன்.. வெறிக்கொண்டு நதிபோல ஓடோடிக்கொண்டிருந்த என்னை நீ வெறும் கானல் நீராக்கிட்டு ஒன்றும் தெரியாதவள் போல பார்க்கிறீயே அது நியாமாடி என்று காதலில் மன்றாடி சொல்லிவிட்டு கடைசியில் கவிஞர், ‘ நீ இல்லாத வாழ்வு இங்கு கானல் தான்..’ என்று உள்ளத்தைப் போட்டு உடைத்து எழுதியிருக்கிறார். அதுதான் நடிகர் முரளியின் வாழ்வைச் சொல்லிச் சென்ற வரியும்.

சகோதரர் பிறைசூடன் மறைந்தார் என்பது துயரம். முதல்வர் ஸ்டாலினே நேரில் வந்து அஞ்சலி செய்யும் அளவுக்கு அவரது உயரம் இருந்தது என்பது துயரத்திலும் பெருமை. அமர்விழி மூடிப்படுத்திருக்கும் காட்சியைக் காணச் சகிக்கவில்லை.

ஆலம் விழுதுகள் போலே ஆடும் நினைவுகள் கோடி… ஆடும் நினைவுகள் நாளும் வாழும் உனதருள் தேடி.. இந்தப் பிறப்பிலும் எந்தப் பிறப்பிலும்…. ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது.