ண்மை நிலை என்ன என்பதை அறிந்துகொள்ளும் ஆர்வமின்றி, கற்பிதங்களை நம்புவது மனித இயல்பு. இந்திய மக்களின் மனதில் நெடுங்காலமாகக் குடி கொண்டிருக்கும் கற்பிதங்களில் ஒன்று, இந்தி மொழிதான் இந்தியாவின் தேசிய மொழி என்பது. அதனால்தான் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் சென்னை விமான நிலையத்திற்குச் சென்றபோது, அவரிடம் இந்தியில் பேசிய பாதுகாவலரிடம் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று சொன்னபோது, “இந்தி தெரியாதா? நீங்கள் இந்தியர்தானே?’‘ என்று மக்கள் பிரதிநிதியைப் பார்த்து பாதுகாப்பு பணியில் இருப்பவரால் அதிகாரத்துடன் கேட்க முடிகிறது.

dd

யோகா குறித்த மருத்துவர்களுக்கானப் பயிற்சியில் பங்கேற்ற இந்திய ஒன்றிய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளரிடம், ஆங்கிலத்தில் பேசுங்கள் என தென்னிந்தியாவைச் சேர்ந்த பெரும்பாலான மருத்துவர்கள் வலியுறுத்தியபோது, “ஆங்கிலத்தில் பேச மாட்டேன். இந்தி தெரிந்திருந்தால் உட்காருங்கள். இல்லையென்றால் வெளியேறுங்கள்’’ என்கிற திமிர்த்தனமான தடித்த வார்த்தைகள் வெளிப்பட்டுள்ளன.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் மும்மொழித் திட்டம் வலியுறுத்தப்பட்டிருப்பதுடன் அதில் இந்தியையும் சமஸ்கிருதத்தையும் அனைத்து மட்டத்திலும் திணிப்பதற்கான முயற்சிகளும் பெருமளவில் வரையறுக்கப்பட்டுள்ளன. இவை எல்லாவற்றுக்கும் ஆட்சியாளர்களும் அவர்களுக்கு ஆதரவானவர்களும் சொல்கின்ற காரணம், இந்தி என்பது நமது தேசிய மொழி. ஆங்கிலம் என்பது அந்நியர்கள் மொழி என்பதாகும்.

Advertisment

dd

ஆங்கிலம் நமக்கு அந்நியர்கள் மொழிதான். இந்தி என்பது தேசிய மொழியுமல்ல. நமக்குத் தாய்மொழியுமல்ல. ஒருவகையில், இந்தியும் சமஸ்கிருதமுமே நமக்கு அந்நிய மொழிகள்தான். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் 22 மொழிகள் இடம்பெற்றுள்ளன. தமிழ், தெலுங்கு, மராத்தி, வங்காளம், மலையாளம், கன்னடம், பஞ்சாபி உள்ளிட்ட மாநில மொழிகள் பலவும் அந்தப் பட்டியலில் உண்டு. அவை அனைத்துக்கும் சமமான தகுதியும் உண்டு.

இந்தி என்பது இந்திய ஒன்றிய அரசின் அலுவல் மொழி. இந்தியாவில் உள்ள மக்கள் பேசும் மொழிகளில் அதிகம் பேர் பேசும் மொழி என்பதாலும், ஆட்சியாளர்கள் பேசுகின்ற மொழி என்பதாலும் அது அலுவல் மொழியாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 40 விழுக்காட்டிற்கும் குறைவானவர்கள்தான் இந்தி பேசுகின்றனர். இந்தி அல்லாத பிற மொழி களைப் பேசுவோரை மொத்தமாகக் கணக்கில் கொண்டால் அவர்கள்தான் பெரும்பான்மையினராக இருப்பார்கள். ஆனால், தனிப்பட்ட மொழி என்ற அடிப்படையில் அதிகம் பேர் பேசும் மொழியாக இந்திக்கு மத்திய அரசின் அலுவல் மொழி என்ற தகுதி வழங்கப் பட்டிருக்கிறது.

Advertisment

அதுமட்டுமல்ல, இந்தி பேசாத மாநில மக்களின் நலன் கருதியும், அந்த மாநில அரசுகள் இந்தியாவின் ஒன்றிய அரசுடன் தொடர்பு கொள்வதற்கு ஏதுவாகவும் ஆங்கிலம், இணை அலுவல் மொழியாக உள்ளது. எனவே, இந்திய அரசைப் பொறுத்தவரை ஆங்கிலம் என்பது அந்நிய மொழி கிடையாது.

அதுவும் அலுவல் மொழிதான். அதுமட்டுமின்றி, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுடனான தொடர்பு மொழியாகவும் ஆங்கிலமே உள்ளது.

இந்த உண்மையை உரக்கப் பேசாமல், அலுவல் மொழியான இந்தியை, தேசிய மொழி என்று பிரதமர் உள்ளிட்டவர்களே சில நேரங்களில் குறிப்பிடுவது, இந்திய அரசியல் சட்டத்திற்கு மாறான கருத்தாகும். அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் தற்போது இடம்பெற்றுள்ள 22 மொழிகள் மட்டுமின்றி, மேலும் பல மொழிகளும் இந்தப் பட்டியலில் இணைவதற்காகக் காத்திருக்கின்றன. செப்பு மொழி பதினெட்டுடையாள் என்று மகாகவி பாரதி பாடினார்.

rr

அவரது காலத்திற்கு பிறகு, இந்தியாவில் அதிகம் கவனம் பெறாத மொழிகளும் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. அதன்காரணமாக, 22 மொழிகள் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ளன. எங்களையும் சேருங்கள் என இன்னமும் பட்டியலில் இணைக்கப்படாத மொழிகளைப் பேசும் இந்தியர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

பல மொழிகள் பேசும் இந்தியா வின் பன்முகப் பண்பாட்டுத் தன்மைக்கு இந்தி ஆதிக்கம் ஒவ்வொரு கட்டத்திலும் வேட்டு வைக்கும் வேலையை செய்து வருகிறது. இந்தி பேசும் மாநிலங்களிலும் அதனையொட்டியுள்ள மாநிலங்களிலும் பேசப்படும் பல மொழிகளை இந்தி விழுங்கிவிட்டது. மெல்ல மெல்ல அந்த மொழிகள் அழிக்கப்பட்டு, இந்தி மட்டுமே அங்கு கோலோச்சுகிறது. சுதந்திர இந்தியாவில் மாநிலங்களை மொழிவாரியாகப் பிரித்தார்கள். மகாத்மா காந்தியும் மாநில மொழிகளின் நலன்காக்க வலியுறுத்தினார். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நிலையில், ராஜஸ்தான் என்ற மாநிலத்தின் மொழியான ராஜஸ்தானி மொழி இந்த 22 மொழிகளின் பட்டியலில் இடம்பெறவில்லை. காரணம், ராஜஸ்தானி மொழியை இந்தி விழுங்கிவிட்டது. இதுபோலவே பீகார், ஜார்கண்ட், சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களின் பூர்வகுடி மக்கள் பேசும் மொழிகளை இந்தியின் ஆதிக்கம் அழித்துவிட்டது. தற்போதுதான் அந்த மக்கள் விழிப்படைந்து, தங்களின் மொழியைக் காக்க குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.

ஒரு மொழி ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினால் அதன் விளைவு என்னவாகும் என்பதை இந்தியா வில் பிற மாநிலங்களுக்கு முன்னதாகவே உணர்ந்த மாநிலம், தமிழ்நாடு. அதனால்தான் 1938ஆம் ஆண்டிலிருந்தே இங்கே இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டங்கள் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றன. 1965ல் நடைபெற்ற மொழிப் போரில் தமிழக இளைஞர்கள் தங்கள் தாய்மொழிக்காக உயிரைக் கொடுத்த தியாக வரலாறும் இந்த மண்ணுக்கு உண்டு. அன்றைய தினம் அதனை விமர்சித்தோர் உண்டு. குறுகிய மனப்பான்மை என்றும் வளர்ச்சிக்குத் தடை விதிக்கும் செயல் என்றும் கூறியவர்கள் இருந்தார்கள். ஆனால், தமிழகம் அன்று முன்னெடுத்த, இந்தி ஆதிக் கத்திலிருந்து தாய்மொழியைக் காக்கும் போராட்டத் தைத்தான் இன்று பக்கத்தில் உள்ள கர்நாடகம் எடுக்கிறது. மராட்டியம் எடுக்கிறது. வங்காளம் எடுக்கிறது.

மாநில உணர்வுகளை மதிக்காமல், அவரவர் தாய்மொழியின் சிறப்பை அறியாமல் இந்தியைத் திணிப்பதும், எந்த மாநிலத்திலுமே தாய்மொழியாக இல்லாத சமஸ்கிருதம்தான் இந்தியப் பண்பாட்டின் அடையாளம் எனக் கட்டமைப்பதும் மத்தியில் ஆட்சி செய்பவர்களின் இரட்டைத் தாக்குதலாகும். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருக்கிறது என நினைத்து அவர்கள் இதனைச் செய்கிறார்கள். அதனை எதிர்ப்பவர்களை தேசவிரோதிகள்(ஆன்ட்டி இண்டியன்ஸ்) என்கிறார்கள். இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்க நினைப்பவர்கள்தான் உண்மையான தேசவிரோதிகள்.