உலகின் மிகப் பெரிய தேர்தல் திருவிழா நடப்பது இந்தியாவில்தான். நாடாளுமன்ற ஜனநாயக அமைப்புகளில் நமக்கு முன்னோடியான இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இந்தியாவைப் போல 90 கோடி அளவிற்கான வாக்காளர்கள் கிடையாது. பல்வேறு மதம், மொழி, இனம் சார்ந்த மக்களைக் கொண்ட இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் தேர்தலை நடத்தி முடிப்பதென்பது உண்மையிலேயே ஒரு திருவிழாவுக்கான ஏற்பாடுகளைப் போன்றதுதான். ஆனால், இந்தத் திருவிழா யாருக்கான திருவிழா? இந்தத் தேர்தல் யாருக்கான தேர்தல்?
17-வது மக்களவைக்கான தேர்தல் ஏப்ரல் 11-ல் தொடங்கி மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெற்று மே 23-ல் வாக்குகள் எண்ணப் பட இருக்கின்றன. தமிழ்நாட்டில் இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற்ற ஏப்ரல் 18-ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. முடிவு களைத் தெரிந்துகொள்ள ஒரு மாத காலத்திற்கு மேல் காத்திருக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள் தமிழ்நாட்டு வாக்காளர் கள். ஆந்திர மாநிலத்தவருக்கு இன்னும் கூடுதல் காத்திருப்பு. இடைப்பட்ட காலத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் மோசடிகள் நடைபெறுமோ என்ற சந்தேகத்தைத் தீவிரமாக்கி யிருக்கிறது, மதுரையில் மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்குள் அனுமதியின்றி நுழைந்த வட்டாட்சியரின் செயல்பாடு.
ஒவ்வொரு தேர்தலும் பலவித எதிர்பார்ப்பு களுடன் நடைபெறுவதும், அதன் முடிவுகளில் புதுவித படிப்பினைகள் ஏற்படுவதும் வழக்கம். ஒவ்வொரு தேர்தலின்போதும், இந்தத் தேர்தல் போல இதற்கு முன்பு இருந்ததேயில்லை எனவும், மக்கள் ரொம்பவும் மவுனமாக இருக்கிறார்கள் என்று சொல்லப்படுவதும் வழக்கமாகிவிட்டது. இந்தத் தேர்தல் களம் குறித்த அரசியல் நோக்கர்கள், கருத்தாளர்கள் பலரும் இதனைக் காட்சி ஊடகங்களில் தெரிவித்தபடி இருந்தனர்.
உண்மையில், மக்கள் மவுனமாகத்தான் இருந்தார்களா? அந்த மவுனத்திற்கு காரணம் என்ன?
மத்தியில் கடந்த 5 ஆண்டுகளாக நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி (பா.ஜக.) ஆட்சியின் மீது மக்கள் கடும் கோபத்தில் இருந்தார்கள் என்பதுதான் உண்மை. அதை வெளிப்படுத்துவதற்கான நாள் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பே அவர்களின் மவுனம். 2004 முதல் 2014 வரை பத்தாண்டுகாலம் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடைபெற்றது. அதன் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. மக்களின் அதிருப்தி அதிகமா னது. அந்த நேரத்தில்தான், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை 2014 தேர்தலில் பிரதமர் வேட்பாளராக பா.ஜ.க. முன்னிறுத்தியது. இந்தியாவி லேயே சிறந்த மாநிலம் குஜராத் என்பதாக வும், அதற்குக் காரணம் மோடியின் நிர்வாகத் திறமைதான் என்றும் விளம்பரங் கள் பல நூறு கோடிகளில் வெளியிடப்பட்டன. சமூக வலைத்தளங்களில் பரவலான பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. அது இளைய வாக்காளர் களைக் கவர்ந்தது. மாற்றத்தை எதிர்பார்த்தவர்களை ஈர்த்தது. விளைவு, ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மையுடனான ஆட்சியை அமைத்து பிரதமரானார் மோடி.
மிகுந்த எதிர்பார்ப்புடன் பிரதமரான அவர் முதலில் வஞ்சித்தது தமிழகத்தைத்தான். அவரது பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்திருந்த கட்சிகளுக்குக் கொடுத்திருந்த வாக்குறுதிக்கு மாறாக, தனது பதவியேற்பு விழாவுக்கு இலங்கையின் அப்போதைய அதிபர் ராஜபக்சேவை சிறப்பு விருந்தினராக அழைத் திருந்தார். இலங்கை கடற்படையிடமிருந்து தமிழக மீனவர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்திருந்த மோடி, அந்த மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக் காரணமாக இருந்தவரை சிறப்பு விருந்தினராக அழைத்ததை அவருடன் கூட்டணியிலிருந்த தமிழகக் கட்சிகளே ஏற்கவில்லை. எதைப் பற்றியும் கவலைப்படாமல், தன்போக்கில் செயல்பட்டார் மோடி.
நீட் தேர்வு, உதய் மின் திட்டம், உணவு பாதுகாப்புச் சட்டம் எனத் தமிழ்நாடு எதிர்ப்புத் தெரிவித்த அனைத் தையும் தமிழகத்தின் மீது திணித்தார். முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணப் படுக்கையில் விழுந்ததும், மாநில ஆட்சியையும் தன் கைப்பாவையாக்கி, ஒட்டுமொத்தமாக தமிழகத்தின் நலன்களைப் பறிக்கத் தொடங்கியது மோடி ஆட்சி. அதற்கேற்றாற் போல வளைந்து நெளிந்து கொடுத்தார்கள் அ.தி.மு.க. கட்சிக்கும் ஆட்சிக்கும் தலைமையேற்ற ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும்.
தமிழ்நாடு மட்டுமல்ல, மேற்குவங்கம் தொடங்கி எங்கெல்லாம் பா.ஜ.க. ஆட்சி செய்யவில்லையோ அங்கெல்லாம் மாநில உரிமைகள் பறிக்கப்பட்டன. கூட்டணிக் கட்சி ஆட்சி செய்த ஆந்திராவும் புறக் கணிக்கப்பட்டதால், அம்மாநில முதல்வரும் தெலுங்கு தேசக் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு போர்க்கொடி தூக்கினார். பா.ஜ.க.வின் பங்காளி யான சிவசேனா கட்சியும் மகாராஷ்ட்ராவில் எதிர்ப்புக் குரல் எழுப்பியது. மோடியின் ஆட்சி வெறும் அரசியல் கட்சிகளை வஞ்சிக்கும் ஆட்சியல்ல, தன்னை நம்பி வாக்களித்த மக்களையும் வஞ்சிக்கும் ஆட்சி என்பதை 2016ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி அவரால் கொண்டு வரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை உறுதிப்படுத்தியது.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மோடி அறிவித்ததால், ஏழை-நடுத்தர மக்கள் நள்ளிரவில் நடுரோட்டுக்கு வந்தனர். பல நாட்கள் வங்கி வாசல்களில் வரிசையில் நின்றனர். கையிருப்பை இழந்தனர். கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக இந்த நடவடிக்கை என்றார் மோடி. ஆனால், கறுப்புப்பணம் ஒழியவில்லை என்பதற்கு தேர்தல் களத்தில் ஓட்டுக்குக் கொடுக்கப்பட்ட பணமே சாட்சியானது. கார்ப்பரேட் முதலாளிகள் உள்ளிட்ட பெரும் பணக்காரர்களுக்கான அரசாங்கத்தை நடத்தி, ஏழை-நடுத்தர-உழைக்கும் மக்களின் வாழ்வுரிமையைப் பறித்தது மோடி அரசு.
ஜி.எஸ்.டி வரிவிதிப்பு மூலம் மாநில உரிமைகள் பறிக்கப் பட்டதுடன், சிறு-குறு தொழில்கள் சுத்தமாக அழிக்கப் பட்டன.
இந்தியாவின் பன்முகத்தன்மையைக் காப்பாற்றும் அரசியல் சாசனத்திற்கு சவால் விடும் வகையில் ஒருவரின் உணவுப்பழக்கம் வரை ஊடுருவி உயிர்ப்பலிகளுக்குக் காரணமானது பா.ஜ.க அரசு. ஜனநாயகத்திற்கு முற்றிலும் விரோதமான ஓர் அரசு இனியும் தொடர வேண்டுமா-வேண்டாமா என்பதே 17வது மக்களவைத் தேர்தல் எனும் ஜனநாயகத் திருவிழாவாகும்.
தொடரவேண்டும் என நினைப்பவர்கள் மோடி பக்கம் அணிதிரண்டிருக்கிறார்கள். தொடரக் கூடாது என்பவர்கள் ஓரணியாக சேராமல் ஆங்காங்கே தனித்தனியாக நிற்கிறார்கள். இந்த பலவீனத்தைத் தனது பலமாக்கிக் கொள்ள பா.ஜ.க. நினைக் கிறது. ஐந்தாண்டுகால ஆட்சியின் சாதனைகளை முன்னிறுத்த வகையில்லாமல் தேசபக்தி, ராணுவபலம், எதிரிநாடுகள் மீது பாய்ச்சல், எதிர்க்கட்சிகளை தேசவிரோதிகளாக்கும் கயமை இதுவே பா.ஜ.க மற்றும் மோடியின் பரப்புரை ஆயுதங்களாயின.
கோபத்தில் உள்ள மக்களை உணர்ச்சிப்பூர்வமாக்கி, தன் பக்கம் திருப்ப மோடி கையாண்ட வியூகம் பலன் தந்ததா என்பதை மே 23 தெளிவுபடுத்தும். மக்களின் கோபம் ஆட்சியாளர்களுக்கு எதிராக முழு வீச்சில் திரும்பினால் மத்தியில் மட்டுமல்ல, மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் நிச்சயம். மக்களின் மனவலிமையை பணபலத்தால் தடுக்க முடியும் என நம்புகின்றன ஆளும்சக்திகள். மக்களின் சக்தியால் மாற்றம் ஏற்படும் என நம்புகின்றன எதிர்க்கட்சிகள். யாருக்கான தேர்தல் இது?