வெளுத்த பாபுவைப்பற்றி அவள் கேள்விப்பட்டது தனது பாதுகாவலரான போலீஸ்காரர் கூறித்தான். தோற்றத்தை விளக்கிக் கூறியவுடன், தொடர்புகொள்ள வேண்டுமென்ற விருப்பம் உண்டானது. வெளுத்த நிறம், தலையை மூடுவதற்கு ரத்த வண்ணத்தில் துவாலை, கறுத்துத் தேய்ந்த பற்கள், பீடிக்கறை படிந்து கறுத்துப்போன உதடுகள், குதிரை சவாரி செய்பவர்களிடம் இருப்பதைப்போன்ற வளைந்த கால்கள்... அவனை ஒரே பார்வையில் அடையாளம் கண்டுபிடித்துவிட முடியுமென்று அவளுக்குத் தோன்றியது. தன் நீண்டகால விருப்பத்தை அவன் நிச்சயம் நிறைவேற்றுவான்.

வேலைக்காரி, ஓட்டுநர், காவலாளி ஆகியோரின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு, ஒற்றையடிப் பாதைகளின் வழியாக நடந்து, ஆட்டோவில் பயணித்து, யூதர்களின் தேவாலயமும் பழமையான விக்கிரகங்கள் விற்பனை செய்யப்படும் கடைகள் இருக்கும் பகுதியை அவள் காலை பத்தரை மணிக்கு அடைந்தாள். சூரிய வெளிச்சத்தின் கடுமை அவளுடைய கண்களை வேதனைப்படச் செய்தது. முஸ்லிம்களின் பாணியில் ஆடை அணிந்திருந்தது காரணமாக இருக்க வேண்டும்- அவளை உடனடியாக யாராலும் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை.

வரிசை வரிசையாக இருந்த கடைகளை அவள் பார்த்தாள். மண்ணில் விழுந்து அழிந்த புகழ்பெற்ற வீடுகளிலிருந்து சேகரிக்கப்பட்ட புராதன விளக்குகளையும், கோபுரப் பெட்டி களையும், செம்புப் பாத்திரங்களையும் ஆர்வத்துடன் பார்த்தாள்.

dd

Advertisment

உரிமையாளர்களைக் கடந்து வாழும் வாழ்க்கையின் பயன்பாட்டுப் பொருட்கள்... மனிதனின் எலும்புக்கூட்டை விட ஆயுளுள்ள உலோகப் பொருட்கள்... தன் பாரம்பரிய வீட்டில் இருளில் ஒளிர்ந்துகொண்டிருந்த விளக்குகள் அவளுடைய நினைவில் வந்தன. இனி எந்தக் காலத்திலும் தான் நுழைவதற்கு அனுமதிக்காத அந்த கிராமத்தையும் அவள் சினேகத்துடன் நினைத்தாள். இல்லை... இன்று அவள் ஒரு புதிய அவதாரம் எடுத்திருக்கிறாள்.

கடந்தகாலத்தின் சின்னமான அந்த கிராமத் தின் வீட்டிற்குள் நுழைவதற்கு அவளுக்கு அனுமதி கிடைக்காது.

தன்னுடைய கவிதைத் தொகுப்புகள் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த ஒரு புத்தகக் கடையின் படிகளில் மிகவும் சிரமப்பட்டு ஏறியபோது அவளுக்கு வியர்த்தது. அதன் நிழல்களிலிருந்து பிரிந்து, ஒரு வெளிறிப்போன மனிதன் அவளை நெருங்கினான்.

Advertisment

"புதிய புத்தகங்கள் வந்திருக்கின்றன.'' அவன் கூறினான்: "லத்தீன் அமெரிக்கன் எழுத்தாளர்களின் புதிய நூல்கள்...''

"நான் புத்தகங்கள் வாங்குவதற்காக வரவில்லை.'' அவள் கூறினாள்: "நான் ஒரு ஆளைத்தேடி இந்தப் பகுதிக்கு வந்திருக்கிறேன். வெளுத்த பாபு என்று அழைக்கப்படும் ஒரு இளைஞன்...''

கடையின் சொந்தக்காரன் அவள் அமர்வதற் காக ஒரு இருக்கையை நகர்த்திப் போட்டான்.'' இங்கு பாபு என்ற பெயரைக் கொண்டவர்கள் ஐந்தாறு பேர் இருக்கிறார்கள். வெளுத்த ஒரு பாபு இங்கு வெங்கலப் பாத்திரங்களை விற்பனை செய்துகொண்டிருக்கிறான். "இங்கிருந்து ஏழாவது கடை அவனுடைய கடை... வெளியே செம்புப் பாத்திரங்கள் வைக்கப் பட்டிருக்கும் கடை...'' அவன் கூறினான்.

"நான் சொன்ன பாபுவுக்கு பாத்திர வியாபார மில்லை. அவனொரு வாடகைக் கொலையாளி...'' அவள் முணுமுணுத்தாள்.

சிறிது நேர மௌனத்திற்குப்பிறகு அவன் கேட்டான்: "மேடம்... உங்களுக்கு ஒரு வாடகைக் கொலையாளி தேவைப்படுகிறானா?'' அவள் தலையைக் குலுக்கினாள்.

அவளுடைய கண்கள் ஈரமாவதை அவன் குழப்பத்துடன் புரிந்துகொண்டான்.

"உங்களைப் பார்க்கும்போது, சிறிதும் கொடூரத் தன்மையே இல்லாத ஒரு நல்ல பெண் என்று யாருக்கும் தோன்றும்.'' அவன் கூறினான்:

"மேடம்... உங்களுக்கு இந்த மனிதனைப் பற்றி யார் சொன்னது?''

"என் பாதுகாவலரான ஒரு போலீஸ் காரர்தான் வெளுத்த பாபுவைப் பற்றி சொன் னார். முப்பதாயிரம் ரூபாய் தந்தால், பாபு யாரையும் கொல்வான் என்று சொன்னார்.

பெரும்பாலும் இருப்பது சிறைக்குள்தான். வெளியே வரும்போது, மீண்டும் பழைய தொழிலில் இறங்கிவிடுவான். வேறு எந்தவொரு தொழிலும் அவனுக்குத் தெரியாது.

அரசியல் கட்சித் தலைவர்களுக்கு வேண்டிய வன்... ஜாமினில் வெளியே கொண்டு வருவதற் கும், வழக்கில் வாதாடுவதற்கும் பெயர்பெற்ற மனிதர்கள் இருக்கிறார்கள்.'' அவள் மூச்சிரைக்க கூறி முடித்தாள்.

"மேடம்... உங்களின் குரலைக் கேட்டபிறகு... இதோ... இந்த நிமிடத்தில் எனக்கு ஆளைப் புரிந்துவிட்டது. மதம் மாறியபிறகு, ஒருமுறைகூட நான் பார்க்கவில்லை. மன்னிக்கவேண்டும்... காபி வாங்கிகொண்டு வரட்டுமா?'' கடையின் உரிமையாளர் கேட்டான்.

"வேண்டாம். நேரம் தவறி நான் எதுவும் பருகுவதில்லை.'' அவள் கூறினாள்.

"அப்படியென்றால் ஒரு கொக்கோகோலா...'' அவன் கேட்டான்.

"இல்லை. நான் திரும்பப்போகிறேன். வெயில் அதிகமாக வருவதற்கு முன்னால்... நான் இன்னொரு நாள் வருகிறேன். எனக்கு தலை கிறுகிறுப்பதுபோல இருக்கிறது. ஒரு ஆட்டோ கிடைத்தால் நன்றாக இருக்கும்...'' அவள் முணுமுணுத்தாள்.

"நான் அழைத்து வருகிறேன். இங்கேயே உட்கார்ந்திருங்கள்...'' அவன் கூறினான்.

பிறகு... ஆட்டோவில் கையைப் பிடித்து ஏற்றியவாறு அவன் கேட்டான்:

"எதிரி யார்? கொலைசெய்யப்பட வேண்டிய எதிரி யார்?''

"எதிரி... நான்தான்...'' அவள் கூறினாள்.

________________

ணக்கம்.

இந்த மாத "இனிய உதய'த்திற்காக மூன்று சிறந்த மலையாளச் சிறுகதைகளை மொழிபெயர்த்திருக்கிறேன். "சூறாவளிக் காற்றில்...' கதையை எழுதியவர் மூத்த மலையாள எழுத்தாளரும், சாகித்ய அகாடெமி விருதுபெற்றவருமான உறூப். இந்தக் கதையின்மூலம் மழை பொழியும், சூறாவளிக்காற்று பலமாக வீசும் இடத்திற்கே நம்மைக் கொண்டுசென்று விடுகிறார் உறூப். ஆபத்தில் சிக்கிக்கிடக்கும் பெண்களும் குழந்தைகளும் காப்பாற்றப்பட்டுவிட மாட்டார்களா என்று கதையை வாசிக்கும் ஒவ்வொருவரும் கட்டாயம் ஏங்குவார்கள். குஞ்ஞிக்கண்ணன் மாஸ்டர், வயதான கிழவர், அவரின் மகன் மாயன், பேரன் மொய்தீன்... எப்படிப்பட்ட உயர்ந்த பாத்திரங்கள்! அனைத்தும் நல்லவண்ணம் முடிந்தபிறகு சாவகாசமாக அங்குவந்து சேரும் அரசாங்க அதிகாரியைப் போன்றவர்கள்தானே இன்றும் அதிகாரத்தில் இருப்போரில் பெரும்பாலானவர்கள்!

"வனம்' கதையை எழுதியவர் ஃப்ரெஞ்ச் அரசாங்கத்தின் செவாலியே விருது பெற்றவரும், சாகித்ய அகாடெமி விருதுபெற்றவரும், நவீன மலையாள இலக்கியத்தின் உயர் நட்சத்திரமுமான எம். முகுந்தன். "போஸ்ட் மாடர்னிஸம்' என்று குறிப்பிடப்படும் "பின் நவீனத்துவ பாணி'யில் எழுதப்பட்ட கதை இது. இதில் வரும் கதாபாத்திரங்கள்... மிகவும் நவீனத்தன்மை கொண்டவை.கதையில் பிரதான பங்கு வகிக்கும் இளைஞன், இளம்பெண்,

அவளின் "சூரிய குளியல்' தந்தை... அனைவருமே மாறுபட்டவர்கள்; வேறுபட்டவர்கள். டில்லி ஃப்ரெஞ்ச் தூதரகத்தில் நீண்டகாலம் பணியாற்றியதாலும், ஃப்ரெஞ்ச் இலக்கியங்களைப்பற்றி நன்கு தெரிந்திருப்பதாலும் முகுந்தனால் இப்படியொரு கதையை எழுத முடிந்திருக்கிறது. உரையாடல்களின்மூலம் எந்த அளவுக்கு கதையை அருமையாக நகர்த்திச் செல்கிறார் முகுந்தன்! அவரிடம் கற்றுக்கொள்ளவேண்டிய சிறந்த உத்தி இது!

"வெளுத்த பாபு' கதையை எழுதியவர் மலையாளப் பெண் எழுத்தாளர்களின் அரசியான மாதவிக்குட்டி. வாடகைக் கொலைகாரனான வெளுத்த பாபுவைத் தேடிச்செல்லும் மாதவிக்குட்டி... இப்படியொரு புதுமையான... யாரும் எதிர்பார்த்திராத கருவை வைத்து கதையை எழுதியிருக்கிறார். கதையின் இறுதி வரி... இதில் வரும் கடையின் உரிமையாளரை மட்டுமல்ல; கதையை வாசிக்கும் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்யும்.

இந்த மூன்று சிறுகதைகளும், இவற்றை வாசிக்கும் உங்களுக்கு மூன்று மாறுபட்ட அனுபவங்களைத் தரும். "இனிய உதயம்' வெளியிடும் என் மொழிபெயர்ப்புப் படைப்புகளைத் தொடர்ந்து வாசித்துவரும் உயர்ந்த உள்ளங்களுக்கு என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றி.

அன்புடன்,

சுரா