"கெடுவல்யான் என்பது அறிகதன்

நெஞ்சம்

நடுவொரீஇ அல்ல செயின்.'

-என்பது ஆட்சியாளர்களுக்கு வள்ளுவர் கொடுக்கும் எச்சரிக்கையாகும்.

Advertisment

இதன்பொருள் "நடுவுநிலைமை தவறிச் செயல்படலாம் என்கிற எண்ணமும் தைரியமும் ஒருவருக்கு ஏற்படுகிறது என்றால், அவர் கெட்டழியப் போகிறார் என்று பொருள்' என்பதாகும்.

ramar

இந்த எச்சரிக்கை, யாருக்குப் பொருந்து கிறதோ இல்லையோ, திருக்குறளைப் பற்றி அடிக்கடிப் பேசி, தனக்கு தமிழார்வம் உள்ளது போல் அரசியல் மேடைகளில் காட்டிக் கொள்ளும் "மகா நடிகரான' நம் பிரதமர் மோடிக்கு நூற்றுக்கு இருநூறு சதம் துல்லியமாகப் பொருந்தும்.

காரணம், ஒரு நாட்டை ஆள்கிற பொறுப்பில் இருப்பவர்கள், தங்கள் குடிமக்கள் அனைவரையும் தங்கள் ரத்த உறவுகளைப் போல் கருதவேண்டும்.

இவன் இந்த இனம். அவன் அந்த இனம்.

இவன் இந்த மொழி, அவன் அந்த மொழி.

இந்த மதம். அவன் அந்த மதம்.

-என்றெல்லாம் எந்தவித பாகுபாடும் பார்க்காத தாயுள்ளம் கொண்டவராக, பொறுப்பில் இருப்பவர்கள் இருக்கவேண்டும்.

ஆனால் பிரதமர் மோடியோ, தான் ஒரு மதச் சார்பற்ற நாட்டின் பிரதமர் என்கிற எண்ணத்தை மறந்துவிட்டு, தன்னை இந்து மதத்தின் தூணா கவே ஸ்தாபித்துக்கொள்ளத் துடிக்கிறார்.

அவர் முன்னிலையில் அயோத்தி கோயிலின் கர்ப்பக்கிரகத்தில் பால ராமரின் மூல விக்ரஹம், கோலாகலமாக பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது.

இதன் மூலம் உலக இந்துக்களின் பல நூற்றாண்டுக் கனவு, நிறைவேறிவிட்டதாக இந்துத்துவாவாதிகளும் பா.ஜ.க.வினரும் கூத்தாடுகிறார்கள். இந்த நிகழ்வைக் கொண்டாடும்விதமாக நாட்டுமக்கள் அனைவரும் அன்றைய தினம் தங்கள் வீடுகளுக்குமுன் ஐந்து அகல் விளக்குகளை ஏற்றிவிட்டு, வழிபாடு செய்யவேண்டும் என்று மாறி மாறி கோரிக்கைகளை விடுத்தார்கள்.

அதே நாளில் நாடு முழுக்க இந்துமத ஊர்வலங்களை நடத்தி அமர்க்களப்படுத் தும்படியும் அறிவித்தார்கள். அதுமட்டுமா? அயோத்தியில் நடக்கும் அத்தனை களேபரங் களையும் அனைத்துக் கோயில்களிலும், அரங்கு களிலும் இந்து அமைப்புகள் லைவ் ரிலே செய்தன. பல லட்சம் மக்கள் அயோத்தியில் குவிக்கப்பட்டனர். வண்ண விளக்குகளாலும் பூக்களாலும் அயோத்தி நகரையே அலங்கரித்து ஜொலிக்கவிட்டிருக்கிறார்கள்.

Advertisment

rr

=

இவை எல்லாவற்றையும்விட, அந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி "இந்தத் திருப்பணியை முடிக்க இவ்வளவு நாட்கள் எடுத்துக்கொண்டதற்கு நான் ராமரிடம் மன்னிப்பைக் கோருகிறேன். அவர் மன்னிப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. பல ஆண்டுகளாக இதற்காக சட்டப்போராட்டம் நடத்தவேண்டியிருந்தது. நல்லதொரு நீதியை வழங்கிய நீதித்துறைக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ராமர் கோவில், சட்டப்படி கட்டப்பட்டிருக்கிறது'' என்று நீதிமன்றத் தீர்ப்பு குறித்தே, தனது தீர்ப்பை அறிவித்துவிட்டு...

"ராமர் ஒரு பிரச்னையல்ல. அவரே தீர்வு. அவர் எங்களுக்கு மட்டுமானவர் அல்ல.

எல்லோருக்குமானவர். ராமர்தான் இந்தியாவின் நம்பிக்கை. ராமர்தான் இந்தியாவின் அடித்தளம், ராமர்தான் இந்தியா. ராமர்தான் இந்தியாவின் சட்டம். ராமர்தான் இந்தியாவின் கௌரவம்.''

-என்றெல்லாம் உணர்ச்சிமயமாய் முழக்கமிட்டிருக்கிறார்.

உணர்ச்சி வசப்பட்டு அவர் இப்படி பேசினாலும், அதன் மூலம் அவர் ஒன்றை நாட்டு மக்களுக்குப் புரியவைக்க முயல்கிறார்.

அதாவது, இனி "எல்லோருக்குமானவர் ராமராம். அவர்தான் இந்தியாவின் அடித்தளமாம்.

ராமர்தான் இந்தியாவாம். ராமர்தான் இந்தியாவின் சட்டமாம்.' இது எவ்வளவு மோசமான- ஆபத்தான அறிவிப்பு.

அனைத்து மதத்தினரும் வாழும் நாட்டில், ராமர்தான் அனைவருக்குமானவர் என்கிறார் பிரதமர். இது எவ்வளவு பெரிய அத்துமீறல். அராஜகம்.

அவரவர் மதத்திற்கும் ஒரு நம்பிக்கை இருக்கும்போது அதில் குறுக்கிடும் அதிகாரத்தை மோடிக்கு யார் கொடுத்தது? மோடி என்ன? ராம பக்தர்களுக்கு மட்டும்தான் பிரதமரா?

அவர்களுக்காக மட்டும்தான் ஆட்சி செலுத்துவாரா? அவர்கள் மட்டுமே அவருக்கு வாக்களித் தால் போதுமா? என்கிற கேள்விகள் தானாய் எழுகின்றன.

=

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நேரத்தில் இப்போது மோடிக்குக் கிடைத்திருக்கும் ஆயுதம்தான் அயோத்தியும் ராமரும். ராமரை அவர் அரசியல் ஆயுதமாகத் தூக்கிப் பிடிக்கிறார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் இன்னும்கூட முழுமையாக முடிவடையவில்லை என்கிறார்கள். எனினும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக அதைத் திறக்கவேண்டும் என்று திட்டமிட்டு அவசர அவசரமாக ராமர் கோயில் திறப்புவிழாவை நடத்தியிருக்கிறார்கள்.

இந்தியா மதச்சார்பற்ற நாடு என்கிற உண்மையை உடைத்தெறியும் முயற்சியில் பா.ஜ.க.வும் மோடியும் குறியாக இருப்பது, தேசத்திற்கே ஆபத்தல்லவா?

இது உண்மையில் ஒட்டுமொத்த இந்துக்கள் ஏற்றுக்கொண்ட விழாவா என்றால், அதுவும் கேள்விக்குறிதான். ஏனெனில், இந்து மக்கள் சங்கராச்சாரியார்களைத்தான் தங்களின் மதத் தலைவர்களாக கருதுகிறார்கள். ஆனால், இந்த ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் 4 சங்கராச்சாரியார்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று உத்தரகாண்ட் ஜோதிஷ் பீடத்தின் சங்கராச்சாரியாரான அவி முக்தேஸ்வரானந்த் சரஸ்வதி பகிரங்கமாக அறிவித்துவிட்டார்.

இதற்கு அவர் சொல்லும் காரணம், "இந்து மதத்தின் விதிமுறைகளை பின்பற்றாததால் சங்கராச்சாரியார்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளமாட்டார்கள். கோவிலைக்கட்டி முடிக்காமல் சிலைகளை நிறுவுவது இந்து மதத்திற்கு எதிரானது. அவ்வளவு அவசரம் தேவை யில்லை. கோவிலை கட்டிமுடிக்க போதுமான காலம் உள்ளது. அதன்பிறகு பிரதிஷ்டைகளை முடிக்க வேண்டும். நாங்கள் மோடிக்கு எதிரானவர்கள் அல்ல. அதேவேளையில் எங்கள் தர்ம சாஸ்திரத்திற்கு எதிராகவும் செயல்பட முடியாது'' என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், காஞ்சி சங்கராச்சாரியார்கள் மட்டும் மோடியின் அபிமானிகளாகக் காட்டிக்கொள்ள, அயோத்திக்குச் சென்றிருக்கிறார்கள் என்பது வேறு கதை.

இப்படி இந்துமதத் தலைவர்களான சங்கராச்சாரியார்களே ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்குதான் ராமர் கோயில் திறப்பும் கும்பாபிசேகமும் நடத்தப்பட்டிருக்கிறது.

அப்படியிருக்க, ஒட்டுமொத்த இந்து மக்களின் ஆதரவையும் ராமர்கோயில் கும்பாபிசேகம் மூலம் கவர்ந்துவிடமுடியும் என்று மோடி, தப்புக்கணக்குப் போடுகிறார்.

=

டந்த நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் வட மாநிலங்களில் உள்ள இந்துக்களின் ஓட்டுக்களை அறுவடை செய்ய நினைத்த மோடி, இமயமலையில் உள்ள கேதார்நாத்துக்குச் சென்று, அங்கே ஒரு நாடகத்தை அரங்கேற்றினார். ஒரு பெரும் படையோடு சென்ற அவர், தான் மட்டும் அங்கே சென்று பனிக்குகையில் தியானம் செய்வது போல் புகைப்படங்களை விதவித மாக எடுத்து வெளியிட்டார்.

தேர்தல் வெற்றிக்குப் பின்னர் அவருக்கு கேதார் நாத்தும் பனிக்குகை தியானமும் மோடிக்கு மறந்துவிட்டது. ஏனென்றால் அது உண்மையான பக்தி அல்ல. தேர்தலுக்காக வந்த பக்தி.

அதேபாணியில்தான் இந்த நாடாளு மன்றத் தேர்தலுக்கு அவர் சாமர்த்தியமாக ராமர் கோயிலை பிரச்சார சாதனமாக மாற்றி யிருக்கிறார்.

அந்தக் கோயில் திறப்பு விழாவிற்கு செல்லும் முன்பாக தென்மாநில இந்து மக்களை வசியம் செய்யத் திட்டமிட்ட அவர், ஆந்திரா கேரளா, தமிழகம் என்று தனது கோயில் படலத்தைத் தொடங்கினார். இதன்படி கடந்த 16 ஆம் தேதி ஆந்திராவில் உள்ள லபக்ஷி வீரபத்ரா கோவிலில் உருகி உருகி வழிபட்ட மோடி அங்கேயே தங்கினார். மறுநாள் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில், கருவனூர் ஆற்றங்கரையில் உள்ள திரிபிராயர் ஸ்ரீராமசுவாமி கோயிலுக்குச் சென்று வழிபட்டார்.

இதைத் தொடர்ந்து தமிழகம் வந்த அவர், இங்கும் மூன்று நாள் தங்கியிருந்து, திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலிலும் ராமநாதபுரம் கோயிலிலும், புனித நீராடி, ராமாயணப் பாராயணத்தை படிக்கச் சொல்லிக் கேட்டு, கோயில் யானையிடம் ஆசி பெற்று, சன்னதி சன்னதியாய் பூஜை செய்து, தன் ஆன்மீக நாடகத்தை அரங்கேற்ற்றியிருக்கிறார்.

இதற்கு முன் எத்தனையோ முறை தமிழகம் வந்த மோடிக்கு இப்படியொரு பக்தி தமிழகக் கோயில்களின் மீது ஏற்பட்டதில்லையே ஏன்? இப்போது தேர்தல் வந்ததும் அவருக்கு பக்தி பொத்துக்கொண்டு வருகிறதே அது எப்படி? அதுதான் மோடியின் தேர்தல் லீலை.

இப்போது இந்தியாவின் மதச் சார்பின்மை எங்கே என்று தெரியவில்லை.

=

ந்துமத பக்தியிலும்கூட மோடி, நடுநிலை தவறி ஒரு சார்பு கொண்டவராக இருக்கிறார் என்கிறார்கள் பலரும். வைணவக் கடவுளான ராமரை மட்டும் அவர் தூக்கிப்பிடிப்பதன் மூலம் சைவ சமயக் கடவுள்களை அவர் புறக்கணிக்கிறாரா? என்ற கேள்வி பலராலும் எழுப்பப்படுகிறது.

இப்படி அபத்தமாக, மோடியை வைத்து இந்துப் பரிவாரங்கள் நடத்தும் இந்தக் கூத்துக்களை எல்லாம் பொதுமக்கள் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்து வருகிறார்கள். எனவே மோடியின் ஆன்மீக நாடகங்கள் தேர்தலில் எடுபடுமா என்பது கேள்விக்குறி.

அதேபோல் மோடி கையில் எடுத்திருக்கும் இந்த அயோத்தி ஆயுதத்தால் இந்தியாவில் இருக்கும் எந்தப் பிரச்சினையும் தீர்க்க முடியாது என்பதுதான் உண்மை.

இது குறித்த கவலையை வெளியிட்ட ராகுல் காந்தி "நாட்டின் முன் நிற்கும் மிகப் பெரிய பிரச்சினை என்றால் அது வேலையில்லாத் திண்டாட்டமும், பணவீக்கமும்தான். நரேந்திர மோடியின் தவறான கொள்கை காரணமாக இந்தப் பிரச்சினைகள் நாட்டில் கொழுந்து விட்டு எரிகிறது. வேலை இல்லாததால் இளைஞர்கள் ஏமாற்றம் அடைந் துள்ளனர். என்று தெரிவித்திருக்கிறார்.

அதாவது ஆண்டுக்கு 2 கோடிபேர் வேலையின்றித் தவிப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நாடாளுமன்றத்தின் முன்பே குற்றச்சாட்டை வைத்தார்.

இதை உறுதிசெய்வது போல், சென்டர் ஃபார் மானிட்டரிங் இந்தியன் எகானமி (ஈஙஒஊ), என்கிற நிறுவனம் எடுத்த சர்வே, இந்தியாவின் வேலையின்மை விகிதம் தற்போது 10.05 சதவீதம் என்று அறிவித்திருக்கிறது.

 இப்படி, படித்தும் வேலையின்றித் தவிக்கும் இளைஞர்களின் கண்ணீரை, மோடியின் இந்த பக்திக் கைக்குட்டை கொஞ்சமாவது துடைக்குமா?

 தவறான பண மதிப்பீட்டு நடவடிக்கை யால் வீழ்ந்த பொருளா தாரத்தை மோடி யின் பூஜையால் நிமிர்த்தமுடியுமா?

 14 கோடி விவசாயிகளைக் கொண்ட இந்திய நாட்டில், உரம் மற்றும் பெட்ரோலிய மானியங்கள்,

கடன் தள்ளுபடி, விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை வைத்து, விவசாயிகள் போராடி வருகிறார்களே, அவர்களின் கவலையையும் கலக்கத்தையும் மோடியின் பூஜை புனஸ்காரங்களால் போக்கமுடியுமா?

 நாளுக்கு நாள் வானளவு உயர்ந்து நின்று, மக்களை மிரட்டி வரும் விலைவாசியை, மோடியின் இந்த திடீர் பக்தியால் குறைக்கமுடியுமா?

 நீட் தேர்வால் கல்லறைக்குச் செல்லும் மாணவர்களின் மருத்துவக் கனவுகள், மோடியின் பக்தியால் உயிர்த்தெழுமா?

 சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் இந்தியாவிற்கு கடல்வ ழியாகவும் நிலத்தின் வழியாகவும் தொடர்ந்து ஏற்படுத்திவரும் அச்சுறுத்தல்களை, மோடியின் நாடக பக்தியால் நீக்கமுடியுமா?

அனைத்து வகையிலும் ஒடுக்கப்படும் சிறுபான்மை மக்களின் கவலைகளை, மோடியின் இந்த மதவாதக் கைக்குட்டையால் துடைத் தெறிவது சாத்தியமா?

 இனக் கலவரத்தால் பற்றி எரிந்துகொண்டிருக்கும் மணிப்பூரின் இதயத்தை, மோடியின் பூஜைகளால் குளிர வைக்கத்தான் முடியுமா?

-இவை எதையுமே மோடி தூக்கிப் பிடிக்கும் மதவாதத்தால் சாதிக்க முடியாது.

எனவே, இந்தியாவின் இருண்ட காலமாக இருக்கும் மோடியின் பா.ஜ.க. அரசை, மக்கள் தேர்தல் மூலம் தூக்கி எறிவார்கள் என்பது மட்டும் உறுதியிலும் உறுதி.

ஆதங்கத்தோடு,

நக்கீரன்கோபால்