கோவிட் 19 தாக்குதல் குறித்து இப்படியான நோய்த் தாக்குதலைக் கையாள்வதில் வல்லுனர்கள் சிலரின் உரை ஒன்றைக் கேட்டேன். தொடக்கத்தில் முதல்முறையாக அரசு அறிவித்த தனிமைப்படுத்திக் கொள்ளும் நடவடிக்கையான ஊரடங்கு (lockdown)நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்துவதில் பயனுடையதாக இருந்தது என்பது உண்மைதான். ஆனால் இதனூடாகக் கிடைத்த பலனைத் தக்க வைக்கும் திசையில் அரசு தொடர்ந்து செயல்படவில்லை.
நோய்த் தாக்குதல் குறித்த சோதனைகளைப் பெரிய அளவில் மேற்கொள்ளுதல், நோய்ப்பரவல் அதிகம் சாத்தியமுள்ள இடங்களை அடையாளம் காணுதல், நோயைக் கையாள்வதற்குத் திறமான மருத்துவமனைகளைக் கண்டறிதல். நம்பத்தகுந்த, துல்லியமான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்புதல் முதலான நடவடிக்கைகளுக்கு இந்தக் கால அவகாசத்தை அரசு பயன்படுத்திக் கொள்ளத் தவறியது,
இந்த ‘லாக்டவுனின்’ சமூக / பொருளாதார அம்சங்கள் இப்போது பெரிய அளவில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன. தனது குழப்பமான நடவடிக்கைகளின் ஊடாக மத்திய அரசு ஒரே கணத்தில் மக்களை வேலைகளும் வாழ்வாதாரங்களும் இல்லாதவர்களாக ஆக்கியது. நான்கே மணி நேர அவகாசத்தில் பல லட்சக்கணக்கான தொழிலாளிகள் வேலை, ஊர்கியம், உணவு, தங்குமிடம் எல்லாம் பறிபோய் தங்கள் வீடுகளிலிருந்து தொலைதூரத்தில் கையறு நிலையில் நிற்கும் நிலை ஏற்பட்டது.
அதுமட்டுமல்ல. பொது ஆரோக்கியம் எனும் நோக்கிலும்கூட இந்த முதல் ‘லாகவுட்’ மிக மோசமாகத் திட்டமிடப் பட்டது. மார்ச் மாத நடுவில் தமது வீடுகளுக்குத் திரும்ப விரும்பிக் காத்திருந்த தொழிலாளிகளில் சிலர் நோய்த்தொற்றுக்கு ஆளானார்கள். உரிய கால அவகாசம் கொடுத்து ‘லாக்டவுன்’ அறிவிக்கப்பட்டிருந்தால் இவர்கள் நோய்த்தொற்று இல்லாமல் அப்போதே வீடு திரும்பி இருப்பர்.
ஒன்றரை மாதம் தாமதமாக இப்போது தவறைச் சரி செய்யும் நோக்கில் ரயில் போக்குவரத்தை ஏற்படுத்தும்போது அவ்வாறு திரும்பிவரும் ஆயிரக் கணக்கானோர் இந்தக் கொலைகார வைரசைச் சுமந்தவர்களாக வரும் நிலை ஏற்பட்டுள்ளது. அதோடு இப்போது பொறுப்பு மாநில அரசுகளின் தலைகளில் சுமத்தப்பட்டுவிட்டது. இந்திய -பாக் பிரிவினைக் கால இழப்புகளுக்குப் பின் நாமே ஏற்படுத்திக் கொண்ட மிகப் பெரிய அழிவாக இது ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி ஆனதற்கான அனைத்துப் பொறுப்பும் பிரதமருடையதே.
இந்த ‘லாக் டவுன்’ எவ்வாறு திட்டமிடப்பட்டுச் செயல்படுத்தப்பட்டது என்பதில் வெளிப்படையான ஒரு வர்க்கச் சார்பு உள்ளது. ஏற்கனவே ஆழப் பதிந்திருந்த சமூக ஏற்றத் தாழ்வுகள் இப்போது இன்னும் ஆழமாகி உள்ளன. வேலை மற்றும் வருமான இழப்புக்கள் கோடிக்கணக்கான தொழிலாளி வர்க்கத்தினரை முற்றிலும் எல்லாவற்றையும் இழந்தவர்களாக்கி உள்ளது. அவர்களுக்கு இப்போது போதுமான உணவும் இல்லை. உண்ணக் கிடைப்பதும் தரமானதில்லை.
அவர்களின் இன்றைய உணவு அவர்களை கோவிட் 19க்கு மட்டுமல்லாமல் இன்னும் எத்தனை நோய்கள் உள்ளனவோ அத்தனைக்கும் வாய்ப்பாக்கியுள்ளது.
இந்தக் கொடுந் தொற்றைப் பொருத்த மட்டில் இன்னும் எத்தனையோ தவறுகளை மோடி அரசு செய்துள்ளது. இந்தத் தவறுகள் அம்மக்களின் இழப்புகளை இன்னும் கொடுமையாக்கின. நமது பொருளாதாரம் கலகலத்துக் கிடக்கிறது. நமது சமூகக் கட்டமைப்பும் பலவீனமாகித் தளர்ந்துள்ளது. நமது மருத்துவ நல அமைப்போ இன்னும் வலுவிழந்துள்ளது.
எனினும் இன்னும் கூட மோடி அரசு செய்யக்கூடிய சரியான செயல்பாடுகள் உண்டு. இந்த வகையில் நான் கலந்துகொண்ட அந்தக் கருத்தரங்கில் பேசிய வல்லுனர்கள் முன்வைத்த ஐந்து முக்கிய கருத்துக்கள் இங்கே குறிப்பிடத் தக்கன.
முதலாவதாக எல்லாம் சரியாக உள்ளது என திருப்தி கொள்வது முற்றிலும் அபத்தம்.இதுவரைக்கும் இந்த வைரஸ் நகர்ப்புறம் அல்லாத பகுதிகளில் ஆழமாகப் பரவவில்லை. அஸ்சாம், ஒடிஷா, சட்டிஸ்கார் முதலான மாநிலங்களில் இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆட்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமில்லை. ஆனால் வரும் மாதங்களில் இந்த நிலை மாறலாம். இந்த மாநிலங்களில் வைரஸ் தாக்குதலின் அளவு அதிகரிக்கும்போதுதான் இம்மாநிலங்களின் மருத்துவ நல அமைப்பு எத்தனை பலவீனமாக உள்ளன என்பது அம்பலமாகும்.
அடுத்து நமது ‘இந்திய மருத்துவ ஆய்வுக் குழும’ அமைப்பிற்கு (ஒஈஙத ள்ஹ்ள்ற்ங்ம்) வெளியிலிருந்து செயல்படும் இந்தியாவின் தலைசிறந்த தொற்றுநோய்ச் சிகிச்சை வல்லுனர்கள் மற்றும் ஆய்வாளர்களின் திறமைகளையும் சேவைகளையும் அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சமீப காலங்களில் ஐஒய மற்றும் ஐ1ச1 வைரஸ் தாக்குதல்கள், இளம்பிள்ளைவாதம் ஆகியவற்றை கட்டுக்குக் கொண்டு வருவதில் இப்படியானவர்கள் பங்களித்துள்ளனர். அவர்களின் ஆலோசனைகளையும் பெறலாம். இந்த வைரஸ் தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கு அவர்களது இந்த அனுபவங்களும் அறிவும் பயன்படும். இப்போதும் அதைச் செய்ய முடியும்.
மூன்றாவதாக, இது வெறுமனே ஒரு மருத்துவம் சார்ந்த பிரச்சினை மட்டுமே அல்ல. இது ஒரு சமூகப் பிரச்சினையும் கூட ஏற்கனவே இந்தத் தொற்று குடி, குடியின் விளைவான குடும்பப் பிரச்சினைகள், தற்கொலை ஆகியவற்றின் அதிகரிப்பிற்கும் காரணமாகியுள்ளது. நோய், மரணம் ஆகியவற்றைப் போலவே ஏழ்மை, வேலையின்மை ஆகியனவும் இந்த நோய்த் தொற்றின் தவிர்க்க இயலாத பின்விளைவுகள்தான். எனவே இது வெறுமனே வெறும் மருத்துவ நல வல்லுனர்கள், அல்லது பொருளாதார நிபுணர்களால் மட்டும் தீர்க்கப்படக் கூடிய பிரச்சினை அல்ல. சமூகவியலாளர்கள், உளவியலாளர்கள் ஆகியோரையும் அரசு கலந்தாலோசிப்பது முக்கியம்.
நான்காவதாக மோடி அரசு எல்லாவற்றையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து ஆணையிடும் அதன் வழக்கமான ‘ஸ்ரீர்ய்ற்ழ்ர்ப்-ஹய்க்-ஸ்ரீர்ம்ம்ஹய்க்’ வடிவில் இந்தப் பிரச்சினையையும் கையாளக் கூடாது. மோடி அரசு இப்போது உள்ளதைக் காட்டிலும் அதிகமாக மாநில அரசுகளின் கருத்துக்களுக்கு மதிப்பு அளிக்க வேண்டும். மாநிலங்களைக் கலந்தாலோசித்து முடிவுகளை எடுக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். மாநிலங்களுக்கு ஏற்கனவே மத்திய அரசு கொடுக்க வேண்டிய நிதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும். கூடுதல் நிதி உதவியையும் அளித்திட வேண்டும். மாநிலங்கள்தான் கொரோனாவை எதிர்த்த போராட்டங்களை நேரில் நடத்திக் கொண்டிருக்கின்றன. ஆளுகை மிகப் பெரிய அளவில் மைய நீக்கம் செய்யப்பட வேண்டும். மத்தியிலிருந்து மாநிலத்திற்கும், மாநிலங்களிலிருந்து முனிசிபாலிடிகளுக்கும், பஞ்சாயத்துகளுக்கும் அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும். பில்வாரா போன்ற மாவட்டங்களிலும், கேரளம் போன்ற மாநிலங்களிலும் கொரோனா தாக்குதல் பெரிய அளவில் முறியடிக்கப்பட்டுள்ளதென்றால் கீழிருந்து மேல்நோக்கிய அணுகல் முறையும் உள்ளூர்த் தலைமைகளின் திறமான செயல்பாடுகளும்தான் அவற்றுக்குக் காரணம் என்பதை மனம் கொள்ள வேண்டும்.
ஆனால் துரதிர்ஷ்ட வசமாக மோடி அரசு அதிகாரங்களை மத்தியில் இருத்திக் கொள்ளும் நோக்கில் இந்தக் கொள்ளை நோயைப் பயன்படுத்துகிறது. எல்லாவற்றையும் தனது “ஷோ’’ ஆக நடத்திக் கொள்ளும் பிரதமரின் செயல்பாடுகள் பிரச்சினைக்குரிய ஒன்று. உள்துறை அமைச்சரின் செயல்பாடுகளும் அப்படித்தான் உள்ளன. உடனடி எதிகாலத்தில் அரசு எவ்வாறு செயல்படப்போகிறது என ஒரு மரியாதைக்குரிய ஊடகவியலாளர் கேட்டபோது அவர் சொல்கிறார் :’’கோவிட் தொடர்பான எந்தப் பிரச்சினையிலும் உள்துறை அமைச்சகத்தை எதுவும் கேட்க வேண்டாம். அதை விட்டுவிடுங்கள்..’’.
ஐந்தாவதாக இந்தக் கொடுந்தொற்றை எதிர் கொள்வது எனபதைப் பொருத்தமட்டில் ஒருவரோடு ஒருவர் இணைந்து நின்று செயல்படுவது இன்று அவசியமாகிறது. அதிகாரத்தில் இருந்த இந்த ஐந்தாண்டுகளில் மோடி அரசு தொண்டு நிறுவனங் களின் (சஏஞள்) மீது உச்சகட்ட வெறுப்பையும் எதிர்ப்பையும் காட்டி வந்தது. இப்படியான பிரச்சினைகளை எதிர்கொள்வதில் தொண்டு நிறுவனங்கள் ஆற்றக்கூடிய ஆக்கபூர்வமான பணிகளின் மீது மோடி அரசின் கவனம் திரும்ப வேண்டும். கைவிடப் பட்டவர்களுக்கு உணவு சமைத்துத் தருவதாகட்டும், மருத்துவத் துறை உதவிகளில் ஆகட்டும், அவர்கள் தங்குவதற்கு உதவுவதில் ஆகட்டும், பாதிக்கப்பட்டவர் களுக்கு ‘கவுன்சிலிங்’ தந்து தைரியம் ஊட்டுவதிலா கட்டும் கடந்த சில வாரங்களில் சிவில் சமூகம் மிகப் பெரிய அளவில் பங்காற்றியுள்ளது.
எதிர்காலத்தை யோசிக்கும்போது ஓர் உண்மை நமக்கு நம்பிக்கை ஊட்டுகிறது. ஐரோப்பா அல்லது வட அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது நம் நாடு அதிக அளவில் இளம் மக்களைக் கொண்டுள்ள ஒன்று. கொரோனாவினால் ஏற்படும் உயிர்ப்பலி அந்தவகையில் குறைவாக இருக்கும் என நம்பலாம். அப்படிக் கொரோனா தாக்குதல் நிற்கும்போது நாம் நமது பொருளாதாரம், சமூகம், நமது மருத்துவநல அமைப்பு ஆகிய அனைத்தையும் மிகக் கவனமாகச் சீரமைத்தாக வேண்டும். இந்த மீள்கட்டமைப்பு சரியாக மேற்கொள்ளப்பட வேண்டுமானால் மத்திய அரசின் செயல்பாடுகள் பெரிய அளவில் மாற்றம் அடைய வேண்டும். மத்திய அரசு மாநிலங்களுக்கு அதிக சுதந்திரம் மட்டுமல்ல நிதியையும் அளிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். கருத்துச் சுதந்திரம், சிவில் சமூக அமைப்புச் செயல்பாடுகள் ஆகியன செழித்து வளர இடம் கொடுக்க வேண்டும். அவர்களின் ஒவ்வொரு செயல்பாடுகள்யும் முடக்குவதை நிறுத்த வேண்டும்.பிரதமரின் செயல்பாடுகளும் பெரிதும் மாற்றம் அடைய வேண்டும். அவர் கவனம் கொடுத்து மாற்றுக் கருத்துக்களைக் கேட்பதும், இன்னும் அகன்ற அளவில் பலரையும் கலந்தாலோசிப்பதும் அவசியம். தன்னிச்சையாகவும் அதிகம் யோசிக்காமலும் முடிவெடுப்பதையும் அவர் தவிர்க்கவும் வேண்டும்.
அறிவியல் மற்றும் நிர்வாகத் திறன் ஏராளமாக உள்ள நாடு நம்முடையது. கொரோனாவுக்குப் பிந்திய உலகில் வாழ்வது என்பதில் இப்படியானவர்களில் அறிவுரையை பிரதமரும், மத்திய அரசும் கேட்டு நடக்கத் தவறக் கூடாது என்பதுதான் நான் இக்கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்ட வல்லுனர் களின் உரையிலிருந்து நான் புரிந்து கொண்டது.
ஆனால் பிரதமரும் அரசும் அத்தகைய அகன்ற இதயமும் திறந்த மனமும் கொண்டுள்ளார்களா என்பது வேறு கதை