ம்.ஜி.ஆரும், சிவாஜியும் தமிழ்த் திரையுலகை கட்டியாண்ட இரு துருவங்கள். அந்த இரு துருவங்களின் ஒரு துருவமாக வந்தது போல் எழுத்துலகை ஆட்சி செய்த இறைவன் பாலகுமாரன். அவரது எழுத்தை வாசிக்காமல், பிரமிக்காமல், பிரதிபலிக்காமல் எவரும் பேனாவை எடுத்துவிடமுடியாது.

balakumaran

எந்த கருவைத் தொடுகிறாரோ. . . அந்த கருவிற்காக எழுத்தில் பிரம்மாண்டமாக செட் போட்டு. . . திரைக்கதையைத் தருவதில் அசகாயசூரர் அவர். புருவம் உயர்த்தாமல் எவரும் அவர் எழுத்தை எளிதாக வாசித்துவிட்டுக் கடந்துவிட முடியாது.

ஜெயகாந்தனுக்குப் பிறகு தன் மனதில் தோன்றுவதை முகதாட்சண்யம் பாராமல் வாழ்த்தோ, வசையோ கொட்டும் என கவலைப்படமாட்டார் என நான் கேள்விப்பட்டதுண்டு. எழுத்துலகில் நான் வளர்ந்து வரும் காலக்கட்டம் (1980-களில்) என்பதால் அவரைப் பற்றி கிடைக்கும் இதுபோன்ற தகவல்கள் என்னை பிரமிக்க வைத்ததுண்டு.

Advertisment

அவரின் கம்பீரமும், ஆழத்துளைக்கும் கண்களுமான ஆளுமையான தோற்றமும் அவரை சந்திக்க நினைப்பவர்களை கொஞ்சம் தயங்கி, ஒதுங்கி நிற்கவே செய்யும். அவரை சந்தித்து பல விசயங்களை விவாதிக்க வேண்டும் என்கிற விருப்பம் எனக்கும் இருந்ததுண்டு. ஆனால், அவரது கம்பீரமும் ஆளுமையும் எனக் குள் ஒரு தயக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இப்படிப்பட்ட ஒரு சூழலில்தான், அந்த மகானே என்னைத் தேடி வந்தபோதும், அவரை சந்திக்க முடியாமல் போனது. இன்றைக்கு நினைத்தாலும் அந்த வருத்தம் எனக்குள் நிழலாடுவதை மறைக்க முடியாது.

ஒரு பத்திரிகையின் ஆசிரியராக நான் பணிபுரிந்த காலத்தில் (2000 ஆம் ஆண்டு), பாலகுமாரனின் நாவலையும் பிரசுரித்துக் கொண்டிருந்தோம். அந்தச் சமயத்தில், ஒரு நாள் எனக்குப் போன் பண்ணினார் பாலகுமாரன். வெகு இயல்பாக இருந்தது அவரது பேச்சு.

""எப்படிம்மா இருக்கே?'' என்று நலம் விசாரித்துவிட்டு, ""எழுத்துலகில் வளர்ந்து வரும் எழுத்தாளர் நீ ! நானோ, பெரிய எழுத்தாளன். உனது எழுத்து ஆழமாக இருக்கிறது. கதையை நகர்த்திச் செல்லும் பாங்கு என்னை பிரமிக்க வைத்ததுண்டு. உன்னை நான் சந்திக்க வேண்டுமே!'' என அவர் சொல்ல…எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

Advertisment

எவ்வளவு பெரிய எழுத்தாளர் அவர். நம்மை சந்திக்க வருவதாகச் சொல்கிறாரே என்கிற பிரமிப்பால் எனக்குப் பேச்சு வரவில்லை. சுதாரித்துக்கொண்டு, ""நீங்கள் என்னை பார்க்க வருவதா? வேண்டாம் சார்! நான், உங்களைச் சந்திக்க வருகிறேன். சொல்லுங்கள், என்றைக்கு நான் வரட்டும்?'’’ என்று கேட்டபோது, ""நானே, கூப்பிட்டுச் சொல்கிறேனம்மா!''’’ என்று கூறி போனை வைத்து விட்டார்.

manimala

மறுநாள் நான் அலுவலகம் சென்றபோது, இன்ப அதிர்ச்சியும், வருத்தமும் கலந்த தகவல் காத்திருந்தது. எப்போதும் 10 மணிக்கு அலுவலகம் செல்வேன். அன்றைக்கும் அதேபோல சென்றபோது, ""ஒன்பதரை மணிக்கு உங்களைக் காண எழுத்தாளர் பாலகுமாரன் வந்திருந்தார். நீங்கள் இல்லை என்பதால் கிளம்பிவிட்டார்''என அலுவலக உதவியாளர் சொல்ல, எனக்கு மகிழ்ச்சியாகவும் வருத்தமாகவும் இருந்தது. எப்பேர்ப்பட்ட வாய்ப்பு அது? சந்திக்க முடியாமல் போனதற்காக பல முறை வருந்தியிருக்கிறேன். அவர் வரும் போது நான் இல்லை என்பதற்காக மன்னிப்புக் கேட்க நினைத்தேன். ஆனால், மன்னிப்புக் கேட்கக்கூட ஒருவித பயம்! ஏனெனில், எழுத்துலகின் மிக பிரம்மாண்டம் அல்லவா, பாலகுமாரன்! .

அதன்பிறகு, நீண்ட நாட்கள் அவரைச் சந்திக்கும் வாய்ப்பே எனக்கு அமையவில்லை. காலங்கள் இப்படியே நகர, தனது மூத்த மகளின் திருமண வைபவத்தில் கலந்து கொள்ள என்னை அழைத்திருந்தார் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர். அதில் கலந்துகொள்ள சென்றிருந்தேன். பாலகுமாரனும் வந்திருந்தார். ஆன்மீகவாதியாய் அதே கம்பீரமும் வளர்ந்த நீண்ட தாடியுமாய் அவரைப் பார்த்தேன். அருகில் சென்று வணங்கி, என்னை நான் அறிமுகப்படுத்திக்கொள்ள, புன்னகையுடன் தலையை அசைத்து ஆசிர்வதிப்பது போல் கையை உயர்த்தி, ""நலமாக இருக்கிறாயா?'' என கேட்டுவிட்டு நகர்ந்துவிட்டார்.

பேச முடியாமல் சூழ்நிலை தடுத்தது. அதனால் அவரை தொந்தரவு செய்ய விரும்பாமல் அமைதியாகி விட்டேன். அதன்பிறகு, அவரை சந்திக்க வேண்டும் என தோன்றும்போதெல்லாம், அவருக்கு உடல் நலம் சரியில்லை. அவரை சந்திக்கச் செல்வதை தவிர்க்கலாம் என நண்பர்கள் பலரும் சொன்னபோதெல்லாம் ஒருவித சோகம் மனதை அழுத்தும்.

இப்போது அவர் நம்மிடத்தில் இல்லை. மரணித்துவிட்டார் என்கிற செய்தி மனதை நொறுக்கிப் போட்டுவிட்டது.

அதனை நம்புவது கடினம் என்பதைவிட ஏற்றுக்கொள்வது சிரமமாக இருந்தது. தமிழ் எழுத்துலகத்திற்காக, தமிழ்த் திரையுலகத்திற்காக இன்னும் கொஞ்சம் காலம் வாழ்ந்திருக்கலாம். உயிரற்ற அவரின் உடல், இன்னமும்கூட இம்சிக்கிறது! சில மரணங்கள் அப்படித்தான்... நம்மால் என்றுமே ஏற்றுக்கொள்ள முடிவதில்லை!

ஒரு சாதாரண வளர்ந்துவரும் எழுத்தாளராக நான் இருந்த அந்த காலகட்டத்தில், கொஞ்சமும் கர்வமின்றி என்னைத் தேடி பாலகுமாரன் வந்ததெல்லாம்... நினைத்துப்பார்க்கவே மெய்சிலிர்க்கிறது. அப்படியொரு மனிதத்தை இனி எப்போது பார்ப்போம்?