கடந்த வாரம் தமிழகத்தை அதிர வைத்த பொள்ளாச்சி நிகழ்வு புதியது ஒன்றுமில்லை. நாள்தோறும் பல இடங்களில் பல வகைகளில் நடந்து வரும் ஒன்றே! எனினும் நமக்கென்ன என்ற மனநிலையில் கண்டும் காணாமலும் கடந்துகொண்டிருந்த முகமூடிச் சமுதாயத்தின் முகத்தில் ஓங்கி அறைந்த நிகழ்வு இது! உணர்ச்சிவசப்பட்டுப் பொங்கி ஆர்ப்பரிப்பதும். போராட்டங்களும், புலனாய்வுக் கண்துடைப்புகளும் மட்டும் இதற்குத் தீர்வுகள் ஆகா! அடுத்த இன்னோர் அதிரடி நிகழ்வு நடைபெறும் வரை தொடர்ந்து, பின்னர் மறக்கப்பட்டுவிடும் என்பதைக் கடந்த காலப் பல நிகழ்வுகளே சான்று! வெகு சிலர் தவிர, இந்த வன்முறைக்கு ஆணையும்- பெண்ணையும் குறை கூறி மரபுகளை அறிவுறுத்தி வருகின்றனர்.
புரையோடி அழுகிப் போய்விட்ட கட்டியை அறுத்து எறியாமல் போர்வையிட்டுப் போர்த்துவதும், மணப்பொருட்கள் தடவுவதும் பயனற்றவையே! நிலையான தீர்வு காணுமாறு காலம் ஒவ்வொரு நிகழ்விலும் தம் கெடுவை நீட்டித்துக்கொண்டே உள்ளது. இப்போதும் தவறினால் சமுதாயம் வினாக் குறியாகிவிடும். இதுவரை நடந்தவை போக. இனியும் இவ்வாறு தொடராதிருக்க ஆவன செய்தாக வேண்டும் என்ற கட்டாயம் நம் முன் நிற்கின்றது. இத்தகைய நிகழ்வுகளுக்கான காரணத்தை அதன் ஆழமுடன் உணரவேண்டும். விருப்பு, வெறுப்பு, மரபு, தூய்மை, ஒழுக்கம் உயர்வு, இழிவு என்பவற்றுக்கு இடம் தராத தீர்வுகளே த
கடந்த வாரம் தமிழகத்தை அதிர வைத்த பொள்ளாச்சி நிகழ்வு புதியது ஒன்றுமில்லை. நாள்தோறும் பல இடங்களில் பல வகைகளில் நடந்து வரும் ஒன்றே! எனினும் நமக்கென்ன என்ற மனநிலையில் கண்டும் காணாமலும் கடந்துகொண்டிருந்த முகமூடிச் சமுதாயத்தின் முகத்தில் ஓங்கி அறைந்த நிகழ்வு இது! உணர்ச்சிவசப்பட்டுப் பொங்கி ஆர்ப்பரிப்பதும். போராட்டங்களும், புலனாய்வுக் கண்துடைப்புகளும் மட்டும் இதற்குத் தீர்வுகள் ஆகா! அடுத்த இன்னோர் அதிரடி நிகழ்வு நடைபெறும் வரை தொடர்ந்து, பின்னர் மறக்கப்பட்டுவிடும் என்பதைக் கடந்த காலப் பல நிகழ்வுகளே சான்று! வெகு சிலர் தவிர, இந்த வன்முறைக்கு ஆணையும்- பெண்ணையும் குறை கூறி மரபுகளை அறிவுறுத்தி வருகின்றனர்.
புரையோடி அழுகிப் போய்விட்ட கட்டியை அறுத்து எறியாமல் போர்வையிட்டுப் போர்த்துவதும், மணப்பொருட்கள் தடவுவதும் பயனற்றவையே! நிலையான தீர்வு காணுமாறு காலம் ஒவ்வொரு நிகழ்விலும் தம் கெடுவை நீட்டித்துக்கொண்டே உள்ளது. இப்போதும் தவறினால் சமுதாயம் வினாக் குறியாகிவிடும். இதுவரை நடந்தவை போக. இனியும் இவ்வாறு தொடராதிருக்க ஆவன செய்தாக வேண்டும் என்ற கட்டாயம் நம் முன் நிற்கின்றது. இத்தகைய நிகழ்வுகளுக்கான காரணத்தை அதன் ஆழமுடன் உணரவேண்டும். விருப்பு, வெறுப்பு, மரபு, தூய்மை, ஒழுக்கம் உயர்வு, இழிவு என்பவற்றுக்கு இடம் தராத தீர்வுகளே தேவை! இதற்கான காரணத்தை வெகு எளிதாக மிகச் சுருக்கமாகக் கூறிவிட முடியும்.
1. மனித வாழ்நாளில் சற்றொப்பக் கால் பகுதி அளவு கல்வி கற்றும் அதனால் பயனில்லை. ஏன்? கல்வி வாழ்க்கைக்கு வழிகாட்டித் துணைநிற்கும் கருவியாக இல்லை. வேலை, ஊதியம், எல்லையற்ற நுகர்வியல் தேவைகளைப் பெறுவதற்கான ஏட்டுக் கல்வியாகவே உள்ளது. காலமாற்றத்துக்கு ஏற்றவாறு அமையாமல் இயந்திரமயமான வணிகக் கல்வியே நமது கல்வி.
2. செல்லரித்துப்போன பழைய கண்மூடி மரபுகளை மாற்றாமல் காட்டாறு போல் பெருகி வரும் புதிய மரபுகளைப் பின்பற்றுவதால் நேரும் எதிர்மறை, எதிர்விளைவுகளுள் கடுமையான ஒன்று வன்புணர்வு.
3. ஆண்- பெண் ஈர்ப்பான பாலியல் உணர்வு இருபாலருக்கும் பொது என்ற இயற்கையைப் புறம் தள்ளி அதனைப் பெண்ணுக்கு மறுத்து அதன்மேல் பல கற்பனை விதிகளை உண்டாக்கி இவற்றைப் பின்பற்றியாக வேண்டும் என்ற சமுதாயத்தின் வலியுறுத்தல், பெண் உடல்தான் காதல் என்ற வகையில் எழுதப்பட்டுள்ள இலக்கியங்கள், கவிதைகள், திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள்.
4. பெண்ணின் இயற்கை அமைப்பு என்பதை மூடி மறைத்து, அதன்மீது எண்ணற்ற கற்பனைகளைப் புகுத்தி உள்ளதால், திறந்து பார்க்க இருபாலரும் விரும்புகின்றனர். ஆனால், கற்பு, ஒழுக்கம், தூய்மை, கன்னிமை என்ற பெயர்களில் பெண், கட்டுப்படுத்தப்பட்டதால், கால வெள்ளத்தில் அக்கட்டுப்பாடுகள் தாமே கட்டவிழ்கின்றன. இதைச் சமுதாயம் உணரினும், உணராததுபோல் அமைதி காத்து அண்ணன் வேலை மட்டுமே பார்க்கின்றது.
5. வன்புணர்வு என்பது எந்த வகையிலும் கடுமையான குற்றமே! அடக்கப்பெற்ற உணர்வுகள் பெண்ணை மீறி வெளிவரும்போது, அதைத் தவறு என்று எப்படிச் சொல்வது? இதே தவறைச் செய்யும் ஆணுக்கு ஏன் இழிவும், சிறுமையும் இல்லை! ஆணைப் போலத்தானே பெண்ணின் உணர்வும்.
இந்த அடிப்படைக் காரணங்களை முன்னிறுத்திக் காணாத எந்தத் தீர்வும், இத்தகைய நிகழ்வுகளைத் தடுத்து நிறுத்த முடியாது என்பதே கசக்கும் உண்மை! இதற்கான வழிகள் மிகவும் எளிதானவையே. இதனால் ஆண்கட்கும் நன்மை இல்லை என்பதாலேயே இவற்றுக்கான முயற்சிகளில் சமுதாயம் ஆர்வம் காட்டவில்லை!
தீர்வுகள்
பாலியல் கல்வியைப் பள்ளிகளிலும், கல்லூரி களிலும் பாடமாக்க வேண்டும். இதனால் பாலியல் உணர்வுகள், உறவுகள், உறுப்புகள் பற்றிய புரிதலும் தெளிவும் உண்டாகும். அதில், உயர்வோ, தூய்மையோ இழிவோ இது எதுவும் இல்லை என்ற உண்மை புரியும். பசி, நீர்வேட்கை, உறக்கம் போன்றதே இவ்வுணர்வுமே என்ற உண்மை புரியும். பெண் ஆடையும், உடலும் மட்டும் இல்லை என்பது புலனாகும். பெண்கள், தம் உடல் பற்றிய கூச்சம், தயக்கம், அச்சம் இன்றி உலவும் நிலை உருவாகும். கற்போ களங்கமோ அறவே இல்லை என்பதை உணரவேண்டும். கல்வி நிலையங்களில் மட்டுமல்லாது, வீடுகளிலும் பெற்றோர், பெரியோர் ஆண், பெண் பாகுபாடின்றி வளர்க்க வேண்டும். பாலியல் பற்றிய உண்மைகளைத் தயக்கமின்றி அவர்களுடன் பேசி, உறவாடி அறிவுறுத்த வேண்டும்.
பெண்களுக்கு ஆண்களின் எல்லை மீறலையும், வன்புணர்வுகளையும் எதிர்த்து நிற்கும் வழிகளையும், தற்காப்பு முறைகளையும் துணிச்சலையும் கற்றுக்கொடுக்கவேண்டும். அறியாமல் நிகழ்ந்துவிட்ட வன்புணர்வால் அவர்களை வசைபாடித் துன்புறுத்தாமல் அணைத்துக் கொள்ள வேண்டும். ஒழுக்கமோ, கற்போ மானம், மரியாதை இல்லாமல் போய்விடும் என்ற எண்ணங்களைக் கைவிடவேண்டும்.
பெண்கள், தம்மிடம் எல்லை மீறுபவரை எதற்கும் அஞ்சாமல் எதிர்ப்பதுடன் அடையாளம் காட்டி காவல் துறையிடம் புகார் கொடுத்தால் ஆண்கள் அடங்கிவிடுவார்கள். பெண்களின் அச்சமே ஆண்களின் வலிமை. குடும்பங்களிலும் விருப்பமில்லாத வன்முறை புணர்வுகள் நிகழவே செய்கின்றன. அதை வெளியில் சொல்ல அஞ்சிப் பெண்கள் சொல்வதில்லை என்பதே உண்மை.
பெண் திருமணம் செய்துகொண்டாக வேண்டியவர். அதற்கு அவளது கன்னிமையும் திருமணத்துக்குப் பின்னர் கற்பும் காக்கப்பட வேண்டும் என்ற கற்பிதங்களைக் கைவிட வேண்டும். இவற்றில் கடுகளவுகூட உண்மை இல்லை. இளவயதினர் தம் பாலுணர்வு உந்தல்களையும் அவற்றுக்கான தீர்வுகளையும் அறிந்துகொள்ளும் வகையிலும் அய்யங்களைப் போக்கிக்கொள்ளும் வகையிலும் கலந்துரையாடல் மையங்கள் வழிகாட்டும் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும். வரையறையற்ற பாலுறவால் விளையும் கேடுகள் பற்றிய விழிப்புணர்வு மையங்கள் பரவலாக்கப்பட வேண்டும்.
இவை யாவும் நடைமுறையில் இருப்பின் பொள்ளாச்சி நிகழ்வுகள் போன்றவை குறையும்.
பாலியல் கல்வி, இப்போதுள்ள நிலைமையை இன்னும் மிகுதிப்படுத்தும் என்றும் கூறப்படுகின்றது. இக்கல்வியில் பாலியல் பற்றிய விளக்கம், உட்பட அனைத்துக் கூறுகளுடன் பெண்களுக்குத் தற்காப்புப் பயிற்சியும், மனவலிமையும், துணிச்சலும் கற்றுத்தரப்படுவதால் இடம்பெறுவதால் மிகுதியாவதற்கு வாய்ப்பில்லை!
ஆண், பெண்ணின் மனக்கட்டுப்பாடு என்பது இறுதிநிலைத் தீர்வாகும் பாலியல் பற்றிய புரிதல் இல்லாமல், அது, ஏன், எதற்கு, எப்படி? எவ்வாறு என்பது தெரியாமல் மனக்கட்டுப்பாடு உடல், உள்ளக்கோளாறுகளுக்கே வழி வகுக்கும்.
பெற்றோர்களின் புரிதலும், துணையும், பாலியல் பற்றிய தெளிவும் சிறந்த தீர்வுகளாக அமையும்.
மனக்கட்டுப்பாடு என்ற பெயரில் மேற்கொள்ளப் படும் யோகா, தியானம் போன்றவற்றால் சிறிதும் பயனில்லை.
பாலியல் பற்றிய மிகையான, உண்மை இல்லாத கற்பனைகளும், கற்பிதங்களும் இல்லாத தூய்மையும் இழிவும், பற்றிய இடைவிடாத பரப்புரைகள் சமுதாயத்தின் ஒவ்வொரு கூறிலும் இடம்பெறவேண்டும். கடவுளுக்கும் கற்புக்கும், புண்ணிய பாவத்துக்கும், பாலியலில் இடம் இல்லை.