மவயது கொண்ட தோழிகளுடன் சேர்ந்து தோம்பிமச, மலையின் அடிவாரத்திலிருந்த சமவெளியில் விளையாட்டில் மூழ்கியிருந்தாள். இப்போது மாலைநேரம் மயங்கியிருக்கிறது. விளையாடவந்த அந்தக் கூட்டத்தில் சில ஆண் பிள்ளைகளும் இருந்தார்கள். முழுமையான ஈடுபாட்டுடன் விளையாடிக் கொண்டிருந்த இளம் வயதினரின் சத்தத்திற்கும் ஆரவாரத்திற்கும் மேலே சில வயதான சத்தங்கள் உயர்ந்து ஒலித்தன. இளம் வயதினர் பயந்துபோய் இப்படியும் அப்படியுமாக ஓடினார்கள். ஓட்டத்திற்கு மத்தியில் பிள்ளைகள் அவர்களைப் பார்த்தார்கள்.

அவர்கள்... இராணுவத்தினர்.

இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு ஆளைச் சுற்றி நின்றிருந்தனர். கட்டப்பட்டிருந்த ஒருவன் அவர்களுக்கு மத்தியில் முழங்காலிட்டு அமர்ந்திருந்தான். சிறிதுநேரம் சென்றதும் அவர்கள் அவனை எழுந்திருக்கச் செய்தார்கள். பிறகு... கைகள் இரண்டையும் பின்னால் கட்டி, நிற்கும்படி கட்டளையிட்டார்கள்.

"இப்போ நீ நாயைப்போல 'பவ்...பவ்...'னு குரை...''

Advertisment

வேறு வழியில்லாமல் கட்டப்பட்டிருந்த மனிதன் அதன்படி நடந்தான். இன்னொரு இராணுவ மனிதன், கட்டப்பட்டிருந்த மனிதனின் இடுப்புக்குக்கீழே ஓங்கி மிதித்தான்.

"என்னடா? நாய் இப்படியா குரைக்கும்? ஒழுங்கா குதிச்சு குதிச்சு குரை!''

கட்டப்பட்டிருந்த மனிதன் இயன்ற வரைக்கும் அவ்வாறு செய்ய முயற்சித்தான். அதே இடத்தில் அவன் இருக்க, அவனுக்கு மீண்டும் மிதி கிடைத்தது. சக இராணுவத்தினர் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

Advertisment

அதைப் பார்த்து சிறுவர்களும் சிறுமிகளும் மெதுவாக சிரிப்பில் கலந்துகொண்டனர். கட்டப்பட்டிருந்த மனிதன் கூர்ந்து பார்த்தான்.

அந்த பிள்ளைகளின் கூட்டத்தில் ஒருத்தியாக தன் மகள் தோம்பிமசயும் இருக்கிறாளே! தந்தை மகளை அடையாளம் தெரிந்துகொண்டான். அவளும் தன் தந்தையின் முகத்தை அப்போதுதான் பார்த்தாள்.

அவள் உரத்த குரலில் கூப்பாடு போட்டாள்:

"அப்பா... அப்பா..''

இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் விசாரித்தார்கள்: "என்ன..? கட்டப்பட்டிருக்குற இந்த மனிதன் உன்னோட அப்பாவா?''

"ஆமா...'' அவள் கவலையுடன் கூறினாள்.

சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு சம்பவத்தை அவள் நினைத்துப் பார்த்தாள். ஒரு நாள் தந்தை இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது இராணுவத்தைச் சேர்ந்த சில மனிதர்கள் நேராக வீட்டிற்குள் நுழைந்து வந்தார்கள். எதுவுமே கேட்காமலும் கூறாமலும் அவர்கள் பலத்தைப் பயன்படுத்தி தந்தையை அழைத்துச் சென்றார்கள். எங்கு, எதற்கென்று யாருக்கும் சிறிதுகூட தெரியவில்லை. ஒரு துணியால் அவர்கள் தந்தையின் கண்களை இறுகக் கட்டினர். கையில் விலங்கு அணிவித்து நடத்திச் சென்றனர்.

தாயும் பிள்ளைகளும் நெடுநேரம் வாய்விட்டு அழுதார்கள். அன்றிலிருந்து தந்தையைப் பார்க்கவே முடியவில்லை. இன்று எதிர்பாராத நிலையில் தந்தையைப் பார்த்ததும், மனதிற்கு சிறிய ஒரு நிம்மதி கிடைத்தது. தந்தை ஏதோ வேடிக்கை காட்டி இராணுவத்தைச் சேர்ந்தவர்களை இடைவெளி விடாமல் சிரிக்கச் செய்துகொண்டிருப்பதாக மகள் முதலில் நினைத்தாள். இராணுவ வீரர்கள் நிறுத்துவதாகத் தெரியவில்லை. ஒருவன் உரத்த குரலில் கத்தினான்: "இப்போ நீ பூனையைப்போல "மியாவூ... மியாவூ...'னு கத்தணும்.''

சாவோபா அப்படியே செய்தான். அதைப் பார்த்து மற்ற இராணுவ வீரர்கள் சிரித்தார்கள். ஒரு இராணுவ வீரன் கட்டப்பட்டிருந்த மனிதனின் தோளில் ஏறியமர்ந்து முடியை பலமாகப் பிடித்திழுத்து "குதக்...குதக்' என்று சத்தம் உண்டாக்கினான். அப்போதும் உடனிருந்தவர்கள் சிரித்தார்கள். சிறிது நேரம் சென்றதும் இன்னொரு இராணுவ வீரன் சாவோபாவின் முதுகில் ஏறியமர்ந்தான். துப்பாக்கியின் நுனியால் அடித்தவாறு அவன் கட்டளையிட்டான்: "டக்கடா... டக்கடான்னு சத்தம் வர்றமாதிரி நடடா குதிரை!''

ffdf

அது முடிந்ததும், மற்றவர்களின் முறை வந்தது. அவர்களும் சாவோபாவின் முதுகில் ஏறியமர்ந்து அவனை நடக்கச் செய்தார்கள். கட்டப்பட்டிருந்த மனிதனின் முழங்கால் வலித்தது. அவன் நிலை குலைந்து விழுந்துவிட்டான். அனைவரும் சுற்றிலும் நின்று சிரித்துக்கொண்டிருக்கும்போது, தோம்பிமச தேம்பித்தேம்பி அழுதாள். அவள் நிறைந்த கண்களுடன் அங்கு செயலற்று நின்றிருந்தாள். கவலை காரணமாக அவளுடைய கன்னம் மிகவும் ஒட்டிப்போய்க் காணப்பட்டது. இறுதியில் அவள் உரத்த குரலில் கத்தினாள்:

"நிறுத்துங்க... நிறுத்துங்க... இப்படி பண்ணினா, என் அன்பான அப்பா இறந்துடுவாரு.''

அதைக் கேட்டதும் சாவோபாவும் கண்ணீர் சிந்தினான்.

"மகளே... என்னால தாங்கமுடியல. ஓ! என்னவொரு வேதனை!''

அதைக் கேட்டதும் இராணுவ வீரர்களின் சிரிப்பு மேலும் உரத்து ஒலித்தது. தோம்பிமசவுக்கு இந்த கொடூரச் செயலைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சம்பவங்கள் அனைத்தையும் தாயிடம் கூறவேண்டுமென தீர்மானித்து, அவள் வேகமாக அங்கிருந்து ஓடத் தயாரானாள். ஆனால், அப்போது ஒரு இராணுவ மனிதன் அவளையும் இழுத்துப் பிடித்தான். தலைமுடியைப் பிடித்து இழுத்துக்கொண்டு வந்து அவன் அவளை தந்தைக்குமுன் நிறுத்தினான். அதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் சாவோபா இராணுவ வீரனை மோசமான வார்த்தைகளால் திட்டினான்: "நீங்க ஏன் என் அப்பாவி மகள் கிட்ட இப்படி கண்ணுல ரத்தமே இல்லாம நடந்துக்கறீங்க?''

தோம்பிமச பாதத்திலிருந்து தலைவரை நடுங்கினாள்.

அவள் இராணுவ வீரனிடம் தாழ்ந்த குரலில் கெஞ்சியவாறு கூறினாள்: "என் அன்பான அப்பா எந்தவொரு தவறையும் செய்யலையே! அப்பா நல்லவரு. அப்பாவுக்கு நீங்க தொல்லை கொடுக்காதீங்க. யாரோட எதையும் அப்பா திருடி எடுக்கல. துப்பாக்கிய எடுக்கல. அப்பாவுக்கு வயசாகிட்டது. தயவுசெஞ்சு அனுப்பி வைங்க...''

முழங்காலிட்டு அமர்ந்திருந்த சாவோபாவை இராணுவ வீரர்கள் பிடித்து எழுந்திருக்கச் செய்தார்கள். மகள் கெஞ்சிக் கேட்டுக்கொண்டாள் என்பதற்காக அவர்கள் தன்னை விடுதலை செய்யப் போகிறார்கள் என்று தந்தை நினைத்தான். இரண்டு இராணுவ வீரர்கள் முன்னால் வந்து, பிடித்து வைக்கப்பட்டிருந்த மனிதனின் கைகளைப் பின்னால்கட்டி நிற்கச் செய்தார்கள். ஒருவன் கேட்டான்:

"நீ இங்க நடந்த போராட்டத்துல பங்கு வகிச்ச இல்லியா?''

மறுக்கும் வகையில் சாவோபா தலையை ஆட்டினான்.

"யார் சொன்னது? நீ பி.எல் ஏ.வைச் சேர்ந்த ஆள்தானே?''

அதற்கும் சாவோபா 'இல்லை' என்ற அர்த்தத்தில் தலையை ஆட்டினான்.

"துப்பாக்கியை மறைச்சு வச்சிருக்கற இடம் எங்க இருக்குன்றத சொல்லிடறது நல்லது.'' ஒரு இராணுவ வீரன் கர்ஜித்தான். அவன் சாவோபாவின் முதுகை பூட்ஸால் மிதித்தான். தொடர்ந்து துப்பாக்கியின் முனையால் பலமுறை அடித்தான்.

சாவோபா கண்களை இறுக மூடிக்கொண்டு, முகத்தைக் கோணலாக வைத்துக்கொண்டு, வேதனையைக் கடித்து அழுத்திக்கொண்டான். ஒரு இராணுவ வீரன் கூறினான்: "இப்போ வாயைத் திறக்கணும்!''

கட்டப்பட்டிருந்த மனிதன் அவ்வாறு செய்யவில்லை என்பதைப் பார்த்தவுடன், இராணுவ வீரன் அவனை பலமாகப் பிடித்து நாக்கினை வெளியே நீட்டச் செய்தான். இடுப்பில் செருகி வைக்கப்பட்டிருந்த கூர்மையான கத்தியை எடுத்து, அவன் சாவோபாவின் நாக்கினை அறுப்பதற்கு முயற்சித்தான். உயிர்போகும் வேதனையில் சாவோபா கூப்பாடு போட்டான்.

மகளால் அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. "அப்பா... அப்பா..." என்று கத்தியவாறு அவள் அழுதாள். அவளுடைய முழு உடலும் நடுங்கிக் கொண்டிருந்தது.

ஒரு இராணுவ வீரன் அவளுடைய வாயைப் பொத்திப் பிடித்துக்கொண்டான். சத்தம் வெளியே வரக்கூடாதென்று எச்சரிக்கவும் செய்தான். உடனிருந்த சிறுவர்களும் சிறுமிகளும் அந்த காட்சியைப் பார்த்து பயந்து ஓடிப்போனார்கள்.

அப்போது நிறைய வாகனங்கள் அங்கு வந்து சூழ்ந்து நின்றன. இப்போது துப்பாக்கி முனைகள் தோம்பிமசவிற்கு நேராக நீண்டன. பாறையைப்போல மிகுந்த பலசாலிகளாக அந்த இராணுவ வீரர்கள் இருந்தார்கள். அனைவரும் கருப்பு நிற ஆடைகளை அணிந்திருந்தார்கள். வாய், மூக்கு... எதுவுமே வெளியே தெரியவில்லை. உரத்த குரலில் என்னவோ கூறிக்கொண்டார்கள். எந்தவித இலக்கும் கட்டுப்பாடும் இல்லாமல் குண்டுகள் சீறிப் பாய்ந்துகொண்டிருந்தன. அப்போது சுற்றிலும் நின்றுகொண்டிருந்த ஆட்கள் இங்குமங்குமாக ஓடினார்கள். அந்தப் பகுதி முழுவதிலும் அடர்த்தி யான இருட்டு பரவியது.

தோம்பிமசவால் பேசவோ அசையவோ முடிய வில்லை. எப்படியாவது நெளிந்தோ எட்டியோ தந்தையை ஒரு முறையாவது பார்ப்பதற்கு படாதபாடு பட்டாள். ஓடிச்சென்று தந்தையைச் சற்று கட்டிப்பிடித்துக் கொள்ளவேண்டும்... ஒரு முத்தம் கொடுக்கவேண்டும்... இப்படியெல்லாம் அவள் ஆசைப்பட்டாள். ஆனால், இராணுவத்தைச் சேர்ந்தவர்களோ அனைத்தையும் கடுமையாகத் தடுத்தார்கள்.

இராணுவ வீரர்கள் தந்தையின் கைகளையும் கால்களையும் கட்டி, சுமந்துகொண்டு செல்வதை மகள் பார்த்தாள். தந்தை இயன்றவரையில் உதறிப் பார்த்தும் பயனெதுவும் உண்டாகவில்லை. இறுதியில் அவர்கள் தந்தையை ஒரு குழிக்குள் வீசியெறிவதையும், பிறகு... அந்த குழியை மண்ணிட்டு மூடுவதையும் மகள் பார்த்தாள்.

வாயை மூடிக் கட்டியிருந்ததால், தோம்பிமசவின் குரல் வெளியே வரவில்லை. தந்தை குழிக்குள் கிடந்து கைகளையும் கால்களையும் அடித்து உண்டாக்கும் சத்தம் காதில் ஒலிப்பதைப்போல உணர்ந்தவுடன், அவள் நிலைகுலைந்து கீழே விழுந்தாள்.

ஒரு இராணுவ வீரன் அவளைப் பிடித்து எழச் செய்ய முயற்சி செய்தான். சுய உணர்வு திரும்ப வந்தவுடன், அவள் திமிறினாள். இராணுவ வீரனின் பிடி தளர்த்துவிட்டது. அதைத் தொடர்ந்து தோம்பிமச ஓடித் தப்பிப்பதற்கு முயன்றாள். ஓடினாளென்றாலும், கால்களுக்கு வேகம் குறைவாகவே இருந்தது.

"மகளே... மகளே..'' பின்னாலிருந்து தாய் அழைக்கும் சத்தத்தை அவள் கேட்டாள். "தங்க மகளே... கொஞ்சம் கண்ணைத் திற. நான் கூப்பிட்டதை நீ கேட்கலையா?''

தோம்பிமச மெதுவாகக் கண்களைத் திறந்தாள். தூக்கக் கலக்கம் நிறைந்த கண்கள்... அவற்றிலிருந்து கண்ணீர் தாரைதாரையாக வழிந்து கொண்டிருப்பதை தாய் பார்த்தாள்.

"தங்க மகளே... சொல்லு. உனக்கு என்னாச்சு?

நீ கெட்ட கனவு ஏதாவது கண்டியா என்ன?'' தாய் வாஞ்சையுடன் கேட்டாள்.

கண் விழித்துப் பார்த்தபோது, நடைபெற்ற அனைத்தும் கனவைப்போல அவளுக்குத் தோன்றியது. கண்ணீர் விட்டவாறு தேம்பித்தேம்பி அவள் நடைபெற்ற சம்பவங்கள் அனைத்தையும் கூறினாள்:

"என் அம்மா... அந்த இராணுவக்காரங்க அப்பாவ உயிரோட குழிக்குள்ள தள்ளி மூடினாங்க.''

தாய் தன் மகளை இறுகக் கட்டிப்பிடித்துக் கொண்டாள். சிறிதுநேரம் எதுவுமே பேசமுடியாத நிலையில் அவள் இருந்தாள். பிறகு... சத்தமாக அழுதாள். அவள் தன் கணவனைப் பார்த்துப் பல நாட்கள் கடந்துவிட்டன. அவன் உயிருடன் இருக்கிறானா இல்லையா என்பதைப் பற்றி எந்தவொரு எண்ணமும் இல்லை.

துப்பாக்கிகளை வைத்திருந்த சில இளைஞர்கள் சமீபத்தில் ஊரில் சில இராணுவ வீரர்களைத் தாக்கினார்கள். இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் ஊரில் இருப்பவர்களையும் வெறுமனே விடவில்லை.

அவர்களும் சில இளைஞர்களைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்கள். இராணுவத்தைச் சேர்ந்தவர் களுக்கும் போராளிகளுக்கும் இடையே உண்டான மோதல்களைப் பற்றிய செய்தி தொடர்ந்து பத்திரிகைகளில் வந்தது. "வழியில் நடந்துசென்ற ஒரு சிறுவன் குண்டடிபட்டு இறந்தான். வீட்டிலிருந்த ஒரு மூதாட்டியை நோக்கி இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து குண்டுமழை பொழிந்தார்கள். ஒரு பொறியியல் நிபுணர் குண்டடிபட்டு மரணத்தைத் தழுவினார். ஒரு அரசாங்க ஊழியர் குண்டுக்கு இரையானார். வங்கியில் மிகப்பெரிய கொள்ளை நடந்தது. ஒரு பணியாள் பெற்ற சம்பளப் பணத்தைத் தட்டிப்பறித்தார்கள். வழியில் ஒரு ஆதரவற்ற பிணம் கிடப்பதைப் பார்த்தார்கள். ஒரு இளம்பெண்ணை வெட்டித் துண்டுகளாக்கி வீசியெறிந்தார்கள்...' இப்படிப்பட்ட பல செய்திகளும் பத்திரிகையில் தொடர்ந்து வந்தன.

காயிரம்பந்த் பஜாரில் இயல்பு நிலையில் பிரச்சினை உண்டானது. அங்கிருந்து ஆட்கள் வீடுகளைவிட்டு ஓடினார்கள். இராணுவ வீரர்கள் வீடுகளுக்குள் நுழைந்து சந்தேகப்படுபவர்கள் அனைவரையும் பிடித்துக்கொண்டு சென்றார்கள். வயலில் பணிசெய்து அன்றாடப் பிழைப்பைப் பார்த்துக்கொண்டிருந்த ஐம்பது வயதான சாவோபா என்ன தவறு செய்தான்? அவனுடைய குடும்பத்தில் உள்ளவர்கள் யாருக்கும் அதைப்பற்றி எதுவுமே தெரியாது. கிராமத்தில் உள்ளவர்களுக்கும் இந்த சம்பவத்தைப் பற்றி எதுவுமே நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை. ஒருநாள் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் வீட்டிற்கு வந்து அவனைப் பிடித்துக்கொண்டு சென்றார்கள்.

அவ்வளவுதான்...

நீண்ட நாட்களாக அவனுடைய மனைவியும் மகளும் நெருப்பைத் தின்று வாழ்ந்துகொண்டிருக்கி றார்கள். இன்று தோம்பிமச கூறிய விஷயங்கள் ஒரு கெட்ட கனவாகத்தான் இருக்கவேண்டும். தாயும் அவளுடைய அருமை மகளும் கட்டிப்பிடித்து அழும் சத்தத்தைக் கேட்டு அருகிலிருக்கும் வீடுகளிலுள்ள பிள்ளைகள் கண்விழித்தார்கள். அவர்களிடம் எப்படி விஷயத்தைக் கூறுவது? குழந்தைப் பருவத்திலிருந்து பதின்மப் பருவத்திற்குள் நுழைந்தவர்கள் தங்களின் அன்னைகளைப் பார்த்து எதுவுமே கூறாமல் பயத்துடன் திகைத்த நிலையில் நின்றுகொண்டிருந்தார்கள்.