விஞர் சிற்பி, வானம்பாடிக் கவிஞர்களில் பிரதானமானவர். புரட்சியும் புதுமையும் அவரின் முகவரி. நம் இதயத்திற்குள் சிந்தனை மேடையிட்டு, அதில் அழகியல் கவிதைகளை நடனமாட வைப்பதில் அவர் வல்லவர். தமிழ் இலக்கியத்தை உயர உயரங்களுக்கு உயர்த்த முனையும் உள்ளம் கவர் கள்வர்.

அவரது பார்வையில் இந்த கொரோனா காலம் எப்படி இருக்கிறது? இப்போது பொதுவாக ஏற்பட்டிருக்கும் உயிர் நெருக்கடி குறித்து அவர் என்ன நினைக்கிறார். பதை பதைப்பான இன்றைய பொழுதில் அவரது படைப்பு மனம் எப்படி இயங்குகிறது? இருட்டுக்கு நடுவிலும் நம்பிக்கை ஒளியுடன் அரும்பியிருக்கும் புதிய அரசுக்கு, அவர் வழங்குகிற வழிகாட்டுதல்கள் எவை? இப்படியான எண்ணங்களுடன் அவரிடம் நாம் சில கேள்விகளை வைத்தோம். கிட்டிய பதில்கள் அமுதம் சுரக்கும் அறிவுப்படையலாய் அமைந்திருக்கின்றன. அவற்றை ‘இனிய உதயம்’ வாசகர்களுக்குப் படையலிடுகிறோம்.

இன்றைய தமிழ்க்கவிதை எந்தத் திசைநோக்கி நகர்வதாகத் தாங்கள் நினைக்கிறீர்கள். நவீன கவிதை, பின் நவீன கவிதை என்றெல்லாம் புறப் பட்டு வருகிற கவிதைகளின் வாழ்நாள் எப்படி இருக்கும்?

நல்ல கேள்வி. ஆனால் இதற்கு விடை கூறுவது கடினம். இதற்கான காரணங்கள் பல. மிக முக்கியமானது.

Advertisment

தமிழ் கூறும் நல்லுலகில் இன்று எழுதப்படும் அனைத்து வகைக் கவிதைகளையும் அறியும் வாய்ப்பு எனக்கில்லை. மற்றொன்று ஒரு குறிப்பிட்ட போக்கு என்று எனக்குத் தெரிந்த வரையில் இன்றைய கவிதையில் காணப்படவில்லை. “இனிய உதயம்”போன்ற இதழ்கள் ஊக்கப்படுத்துவது ஒரு புறமென்றால், ஆங்காங்கே கவிதைச் சுவைஞர்கள் சிற்றிதழ்கள் நடத்தியும், இலக்கிய வட்டங்களை அமைத்தும் கவிதையை வளர்க்கிறார்கள். அரிய கவிதைத் தெறிப்புகள் பளீரிடுகின்றன. சுடர்ப் பரிதியின் கிரணங்களாக அவை உருப்பெறவில்லை. போலச் செய்தல் மிகுதியாகவும், காலம் கடத்தல் அரிதாகவும் உள்ளதாக நான் நினைக்கிறேன்.

நவீனத்துவ, பின் நவீனத்துவப் படைப்புகள் பற்றிக் கேட்கிறீர்கள். கோட்பாடுகளை வைத்துத் தமிழ்க் கவிதையை வகுப்பதும் பகுப்பதும் மிகையானது. காலம் வரலாற்றை, புதிய களங்களை நோக்கி உந்திக் கொண்டே இருக்கிறது. சமுதாயம் மாறுகிறது. மொழி மாறுகிறது. இவற்றுக்கிடையில் ஒரு சிறந்த படைப்பாளி தன் பார்வையில், மொழியில் பாடு பொருளில் புதுமையைப் படைக்க முற்படுகிறான். இலக்கியம் புதிதாகிற போது, அது குறித்த கோட்பாடுகளும் புதிதாகின்றன. படைப்புத்தான் கோட்பாட்டை உருவாக்கும் அடித்தளமாகிறது. விதிகளைக் கிழித்துக்கொண்டு தலைமுறை தோறும் கவிதை மாற்றம் கொள்கிறது.

“கலியே பரிபாட்டு ஆயிரு பாலினும்

Advertisment

உரிய தாகும் என்மனார் புலவர்”

லிஎன்று அகப்பாடல்களுக்குக் கலியும் பரிபாடலும் உரியன என்ற தொல்காப்பியச் சட்டத்தைச் சங்க இலக்கியமே உடைத்தெறிகிறது. எனவே படைப்பும் கவிஞனும் வேலி தாண்டிப் பூத்த மலர்கள் ஆவதைத் தடுக்க முடியாது. எனவே கோட்பாடுகளைத் திறனாய் மொழிந்து கொண்டே இருக்கும் . சீரிய படைப்பு அதைத் தாண்டிப் பயணித்துக் கொண்டே இருக்கும்.

காவியங்கள் பிறக்க ஏதுவான சூழலற்ற காலமிது. எனினும் தாங்கள் “இராமனுசர் காவியம்” படைத்தளித்தீர்கள். அதற்குக் கிடைத்த வரவேற்பு எப்படி?

இது காவிய காலம் அல்ல என்பதை நானறிவேன். என் ஆதர்ச நாயகனாகிய இராமாநுசரை காவிய நாயகனாக்கிப் பார்க்கும் ஆசையால் “கருணைக் கடல் இராமாநுசர்” காவியம் எழுதினேன். வாசகர்களை நோக்கி எழுதப்பட்டதல்ல. என்னையே நோக்கி எழுதிக் கொண்டது இக்காவியம். வாலி வசன கவிதையில் எழுதி விட்டதால் மரபுக் கவிதையில் படைத்தேன். தேர்ந்த வாசகர்கள் நேசிக்கிறார்கள். இது ஒரு கிராமத்து நதியல்ல. தமிழகத்தின் புரட்சிச் சிந்தனையாளரான எம்பெருமான் வரலாறு பேசும் பாற்கடல்.

சமீப காலங்களில் தமிழ்ப் பண்பாடு, கலை, இலக்கியம் அனைத்திலும் ஊடுருவல் அதிகமாக உள்ளதே?

தமிழ்ப் பண்பாடு என்பது வேதப் பண்பாட்டிலிருந்து வேறுபட்டது. நிலத் தெய்வ வழிபாடு, கடவுளை முதற்பொருளாகக் கருதாமல் கருப் பொருளாகப் பாவித்தல். சமண,பௌத்தச் சிந்தனைத் தாக்கம், சித்தர் மரபு என்று பல இழைகளால் நெசவு செய்யப் பட்டது தமிழ்ப் பண்பாடு. அதன் தத்துவ முகம் திருமூலர் என்றால், மனித முகம் திருக்குறள். இதைக் கலைத்துப் போட்டு வேதப் பண்பாட்டை வலிந்து திணிக்கும் முயற்சிதான் இன்றைய சிக்கல்களுக்குக் காரணம். சிலப்பதிகாரம் இந்த மூலப் பண்பாட்டின் கூறுகளை வேட்டுவவரி, கானல்வரி, ஆய்ச்சியர் குரவை, குன்றக் குரவை எனப் பண்பாட்டு வேர்களில் அடையாளம் காண்கிறது. இன்றும் இந்தப் பண்பாட்டு மரபு நாட்டுப் புறங்களில் உயிர்ப்புடன் உள்ளது. அதனைக் குலைக்கும் வேற்றுப் பண்பாடுகளை எளிய தமிழன் ஏற்கமாட்டான். நம் பக்தி இலக்கியங்கள் வேத இந்து மரபைப் பிரித்து வைத்துப் பேசுபவை.

sr

“வேதம் நான்கிலும் மெய்ப்பொரு ளாவது நாதன் நாமம் நமசிவாயமே”லி என்று வேதத்துக்கு ரகசியமாகத் தமிழ்ச் சைவம் எதிர்ப்பு தெரிவிக்கும். அதனால்தான் வேத மரபினரான சங்கரர், திருஞான சம்பந்தர் என்ற “நற்றமிழ் வல்லவனை ” திராவிட சிசு என்று விமர்சித்தார். வைணவத்திலும் தென்கலை வேத மரபுக்கு எதிரானது. பெருமாள் “பழமறைகள் முறையிட பைந்தமிழ்ப் பின் சென்ற பச்சைப் பசுங் கொண்டல்” ஆனது அதனால்தான். எனவே ஆதி மரபுகள் வேர் பாய்ந்த மண்ணில் அன்னியத் திணிப்பு வெற்றி பெறாது. தமிழ்ப் பண்பாடுகளைச் சிதைக்க முற்படுவது இந்தியப் பண்பாட்டின் இசைவுகளைச் சின்னா பின்னமாக்கும்.

இன்று தீவிரமாகப் பல்வேறு நிலைகளிலும் இந்தியும், சமஸ்கிருதமும் திணிக்கப்படுவது கண்கூடு. அதை எதிர் கொள்கிற எதிர்ப்புணர்வு மங்கி விட்டது என்று கருதுகிறீர்களா?

நம் கல்வி முறை தாய்மொழிக் கல்வியாக மாறாத வரை பிறமொழி ஆதிக்கம் வளரவே செய்யும். நம் குழந்தைகள் ஆங்கிலம் அல்லது இந்திய முதல் மொழியாகக் கருதும்வரை இந்த ஆபத்து நீடிக்கவே செய்யும். தமிழகத்தின் புதிய அரசு, தானும் ஒரு புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதே சரியான தீர்வாக இருக்கும். தயங்குகிற வரை வெள்ளத்தைத் தாண்ட முடியாது.

கீழடி, கொடுமணல் என்று பல ஆய்வுகளும் முற்றுப்பெறாமலேயே தொடர்ந்து இழுத்தடிக்கப் பட்டு வருகிறதே?

கீழடி, கொடுமணல் ஆய்வுகள் தமிழகத்தின் பழமையை மேலும் மேலும் பின்னோக்கிக் கொண்டு செல்வதை வேத நாகரிகம் எதிர்க்கவே செய்யும். தமிழக அரசு உலகளாவிய வரலாற்று நிறுவனங் களின் உதவிகள் பெற்று, ஆய்வைத் தீவிரப் படுத்துவதே சரியான வழி. உலகத் தரமான வரலாற்று ஆய்வாளர்கள் நம்மிடம் உண்டு. அவர்களை ஒருங்கிணைத்து ஆய்வுகளைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் வழியே முன்னெடுக்கலாம்.

தமிழ்வழிக் கல்வி தமிழகத்தில் கட்டாயம் என்கிற நிலை உருவாக என்ன செய்ய வேண்டும்? தனியார் பள்ளி, கல்லூரிகள் இதை மறைமுகமாக எதிர்ப்பதாகக் கருதுகிறீர்களா?

ஆதி முதலாகச் செய்யவேண்டியது அரசுப் பள்ளிகளை இங்கிலாந்தின் ’ பப்ளிக் ஸ்கூல்’ அமைப்புகள் போல் கட்டமைக்க வேண்டும். இரண்டாவது தமிழ்ப்பற்று மிக்க ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இந்த இரண்டும் வலிமை பெற்றால், தனியார் பள்ளிகள் தானாகப் பணியும். தமிழகத்துத் தனியார் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியில் தமிழ்ப்பாடம் இடம் பெற்றே ஆக வேண்டும். விருப்பப் பாடமாக ஒதுக்கப்படலாகாது. எதிர்ப்புகள் இருக்கத்தான் செய்யும். அரசுப் பள்ளிகளின் தரம் உயர்ந்தால் எதிர்ப்புகள் வலுவிழக்கும்.

stalin

சாகித்ய அகாதமி விருது இந்த ஆண்டு திராவிட இயக்கச் சிந்தனையுள்ள எழுத்தாளர் இமையத்துக்கு வழங்கப்பட்டுள்ளதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

சாகித்ய அகாதமி குறிப்பிட்ட வருடங்களில் பரிந்துரைக்கப்பட்ட நூல்களிலிருந்து தனிச் சிறப்பானதைத் தெரிவு செய்து பரிசளிக்கிறது. திராவிடச் சிந்தனை உடையவரா? இல்லையா? என்பது அளவு கோல் இல்லை. தன் எழுத்துக் களில் தன் அரசியல் சிந்தாந் தங்கள் குறுக்கிட அவர் இடம் தருவதில்லை.

வட மாநிலங்களில் இருந்து பெருமளவில் இங்கே வேலை தேடி வந்து குவிந்து குடியேறுகிறார்கள். இவர்களால் எதிர்காலத்தில் தமிழர்களின் தனித்துவமான பண்பாட்டுக்கு ஆபத்து ஏற்படுமா?

மிதக்கும் மக்கள் தொகை நிரந்தரமானதில்லை. நிரந்தரம் ஆகும் போது அவர்கள் இங்குள்ள அரசியலில் கரைந்து விடுவார்கள். எல்லா மாநிலங்களிலும் இந்தச் சிக்கல் இருப்பதாலும், இதை விடச் சிறந்த வேலை கிடைத்தால் போய்விடுவார்கள் என்பதாலும் நாம் அச்சப்பட வேண்டியதில்லை.

பக்கத்து மாநிலப் படைப்பாளர்களுக்கு எல்லாம் ’ஞானபீடம்’ விருது கிடைக்கிறது. தமிழ்ப் படைப் பாளர்கள் ஏன் கண்டு கொள்ளப்படுவதில்லை?

ஞானபீடம் உயர்ந்த விருது என்பதில் ஐயமில்லை. அகிலன், ஜெயகாந்தன் பெற்றுள்ளனர்.

சரஸ்வதி சம்மான் மற்றொரு பெரிய விருது. இந்திரா பார்த்தசாரதியும், கே.ஏ. மணவாளனும் பெற்றுள்ளனனர். எவ்வளவு உயர்ந்த எழுத்தானாலும் இவற்றில் இறுதிக் குழுவின் முடிவே விருதைத் தரும். என் ஆசிரியர் கா. மீனாட்சி சுந்தரம் இறுதிக் குழுவில் இருந்ததால் அகிலன் பரிசு பெறமுடிந்தது. கவிஞர் சச்சிதானந்தன் இறுதிக் குழுவில் இருந்த போது கவிஞர் ஓ.என்.வி.குறுப்பு பரிசு பெற்றார். தங்கள் மொழி பாராட்டப்பட வேண்டும் என்று நினைப் பவர்கள் இருந்தால்தான் இது சாத்தியம். அல்லது அனைத்திந்தியாவிலும் அறிமுகம் பெற்றிருந்தால் சாத்தியம். ஒவ்வொரு கட்டத்திலும் வாதாடுவது முக்கியம். அந்த முனைப்பு தமிழரிடம் போதாது. சில அனைத்திந்திய பரிசுக் குழுக்களில் உறுப்பினராக இருந்த என் அனுபவம் இது. என்னால் முடிந்தவரை தமிழ் எழுத்தாளருக்காக , அவர் யாராக இருந்தாலும் வாதாடுவது என் வழக்கம்.

தமிழகத்தில் புதிய அரசு மு.க. ஸ்டாலின் தலைமையில் பொறுப்பேற்றிருக்கிறது. தமிழ் வளர்ச்சி, தமிழ்ப் பண்பாடு காத்தல், மாநில உரிமைகளை மீட்டெடுப்பது, மக்கள் நலன் காப்பது என்று பல நிலைகளிலும் அரசுக்குத் தாங்கள் எப்படி வழிகாட்ட நினைக்கிறீர்கள்?

நம் மாநில முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றிருப்பது நல்ல வாய்ப்பு. என் கணிப்பில் காமராசருக்கு அடுத்தபடியாகத் தமிழக மாண்புகளை உயர்த்த வல்லவர் ஸ்டாலின்தான். நல்ல கருத்துக்களை வரவேற்கும் பக்குவமும், நல்லவைகளைச் செய்வதில் தீவிரமும், செயலாற்றும் துணிவும் இவருக்கு அணிகலன்களாக அமைந்திருக்கின்றன.

*பணம் சம்பாதிக்கும் பேர்வழிகள் தி.மு.க.விலும் உண்டு. அவர்களைக் கடிவாளமிட்டு அடக்க வேண்டும்.

*தமிழக வேளாண்மை காக்கலி நதிகள், குளங்கள், கண்மாய்கள், அணைகள் மூலம் நீர்வளம் காக்கவேண்டும். மணல் அள்ளுவோரை மணலிலேயே நிறுத்தித் தண்டிக்க வேண்டும்.

*தமிழ் வளர்ச்சிக்குத் திட்டமிட ஒரு வல்லுநர் குழுவை எல்லா அதிகாரங்களோடும் நிறுவவேண்டும். திருவாளர்கள் இறையன்பு, உதயச்சந்திரன் அனுபவங்கள் இவ்வகையில் பயன்கொள்ளப்பட வேண்டும். இந்தக் குழு, பள்ளி, கல்லூரிப் பாடத் திட்டங்களை மாற்றும் அதிகாரம் பெற்றிருக்க வேண்டும்.

* தமிழ்ப் பல்கலைக்கழகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், உலகத் தமிழ்ச் சங்கம் ஒரு குடையின் கீழ் அமைய வேண்டும். ஒருங்கிணைந்து முதலமைச்சரின் நேரடிப் பார்வையில் திட்டங்கள் வகுத்துச் செயல்பட வேண்டும். (அறிஞர் வீ. அரசு, கி. சுந்தரமூர்த்தி முதலிய அறிஞர்களை ஒருங்கிணைந்து, தெ.ஞானசுந்தரம், செ.வை. சண்முகம், கு. சிவமணி போன்றோரின் ஆலோசனைப்படி பணியாற்றலாம்)

*மற்ற மாநிலங்களில் இருப்பது போல மாநில சாகித்ய அகாதமி உருவாக்கப்பட வேண்டும். இதற்கு “தமிழக இலக்கியப் பேரவை” என்று பெயர் சூட்டலாம். இந்த அவை அரசு உதவி பெறும் அவையே தவிர அரசவை அல்ல. தலைவர், செயற்குழு, பொதுக்குழு அமைக்கப்பட வேண்டும். சாகித்ய அகாதமி பொதுக்குழுவுக்கு உறுப்பினர்களை இந்த அவை பரிந்துரைக்கும். மாநில அளவில் இலக்கியப் பரிசுகள் வழங்கும். மாநில அளவில் இலக்கிய விழாக்களை ஒருங்கிணைக்கும்.

*கல்வி, வேளாண்மை போன்ற துறைகளை மத்திய அரசின் பிடியிலிருந்து மாநில உரிமை மட்டும் கொண்டதாக மாற்றுவது அவசரம். அவசியம்.

அப்படிச் செய்தால் தேவையற்ற வேளாண் சட்டங்கள், நீட் தேர்வுகளிலிருந்து மக்களைக் காக்கலாம்.

*மக்கள் நலம் காக்கும் உறுதி, நம் முதல்வருக்கு முதல் அக்கறையாக இருப்பதை பதவியேற்ற முதல் நாட்களிலேயே பார்த்து விட்டோம். அவருக்கு ஒத்துழைப்பு அளிப்பதே நம் கடமை.

வானம்பாடி இயக்கத்திற்குப் பின்னால் அப்படிப்பட்ட பேரெழுச்சி கொண்ட ஒரு கவிதை இயக்கம் உருவாகாமலேயே போய்விட்டதே?

தமிழ் இலக்கிய வரலாற்றில் தேக்கம் ஏற்படும் போதெல்லாம் ஒரு புதிய இயக்கம் தோன்றி வழிநடத்தும். பக்தி இயக்கம், சித்தர் இயக்கம், சன்மார்க்க இயக்கம் ஆகியவை எல்லாம் அப்படிப் பிறந்தவைதான். மேலைத் தாக்கத்தாலும் மேட்டுக்குடி மனப்பான்மையாலும் புதுக்கவிதை பிறந்த போது, அதை மக்கள் சொத்தாக மாற்றியது “வானம்பாடி” இயக்கம். இதன் விளைவாக இன்று எங்கெங்கும் புதுக்கவிதை எழுதுவோர் பெருகிவிட்டனர்.

இந்த வரலாறு தெரியாதவர்கள் இன்னும் வானம்பாடியை கற்றுச் சொல்லிகளாக விமர்சித்து வருகிறார்கள். எந்த அளவுக்கு இந்த முட்டாள் தனம் பரவி இருக்கிறது என்றால் வானம்பாடியில் தருமு சிவராமு எழுதியிருக்கிறார் என்றால் பொய்பொய் என்று கூக்குரல் இடுகிறார்கள். கவிதை எழுதியது மட்டுமல்ல, ஒரு நேர்முகமும் வானம்பாடிக்குத் தந்திருக்கிறார். இப்படித்தான் வானம்பாடியைப் பற்றிப் பெரும்பான்மையான கூற்றுக்கள்.

இந்த கொரோனா காலகட்டத்தில் தங்களின் படைப்பு மனம் எப்படி இயங்குகிறது?

கொரோனா ஒரு கொடிய யுகம். ஓர் ஆண்டு முடிந்து மற்றோர் ஆண்டும் வந்து விட்டது. உடலும் உள்ளமும் சோர்ந்து போய்விட்டன. “யோசிக்கும் வேளையில் பசி தீர உண்பதும் உறங்கு வதுமாக முடியும்” என்று கவிஞர் சொன்னது மட்டும் தான் நடந்து வருகிறது. இப்படி ஒரு சோர்வு எனக்கு ஏற்பட்டதில்லை. இனியவர் பலரின் மரணங்கள் நெஞ்சை உலுக்குகின்றன. “கவிதையோடு நாம் இக் காலத்தைக் கடக்க வேண்டும்”என்ற நண்பர் தமிழன்பனின் குறுஞ்செய்தி கூட மனத் தில் அதிர்வை ஏற்படுத்துகிறது. கொஞ்சமாக எழுதிக் கொண்டிருக்கிறேன். இன்னொரு காவியம் மனதில் தீயாய் எழுகிறது. எழுத முடியுமா என்று தெரியவில்லை.

தங்களின் வாழ்க்கை வரலாற்றை எது வரை எழுதியிருக்கிறீர்கள்?

என் மாணவப் பருவம் முடிந்து பணிக் காலத்துக்கு வந்திருக்கிறேன். இனிமேல் தானே வாழ்வின் அகல, நீளங்கள்!மறதி வேறு குறுக்கிடுகிறது. மறதியும் நானும் நடத்துகிற போரில் வெல்வது யாரென்றுதெரியவில்லை. தூரத்தில் கொரோனா வின் தூதுவன் வேறு உளவு பார்த்துக் கொண்டி ருப்பதாகத்தோன்றுகிறது.

வளர்ந்து வரும் இளைய கவிஞர்களுக்கு என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?

எழுதும் இளைஞர்களை ஏறிட்டுப் பார்க்கிறேன். பலருக்கும் பாரதியைக் கூடத் தெரியவில்லையே.அப்புறமல்லவா இராமலிங்கர், திரிகூட ராசப்பக் கவிராயர், செயங்கொண்டார், ஒட்டக்கூத்தர், அந்த மானுடப் பெருங்கவி கம்பர், இளங்கோ, கபிலர், பரணர்? நான் இளங்கவிஞர்களுக்குச் சொல்வதெல்லாம் படியுங்கள். நம் பாரம்பரியப் பெருங்கவிகளைப் படியுங்கள். மேலும் படியுங்கள்.இன்னும் படியுங்கள். பாரதிதாசன் சொன்னது போல “மாலை, இரவு பொருள்படும்படிலிநூலைப்படிலிநூலைப்படி” என்பதுதான் என் வருங்காலக் கவிகளுக்கு நான் சொல்லும் செய்தி.