பெண்ணே... நாம் புறப்படுவோம். இனி கொஞ்சமும் தாமதிக்க வேண்டாம். மூன்று வருடங்களாக நாம் மாட்டிக் கொண்டிருக்கிறோம். இனியொரு வாய்ப்பு நமக்கு கிடைக்காது.
தாமதித்தால் கவலைப்பட வேண்டிய நிலை உண்டாகும். அதனால் சீக்கிரம் புறப்படு.' ஆண் கிளி பெண் கிளியிடம் கூறியது.
"கூறுவதெல்லாம் சரியாக இருக்க லாம். எனினும், இன்று இரவு நாம் இங்கிருந்து யாருக்கும் தெரியாமல் ஓடிச் செல்வது சரியல்ல. அவர் இந்த கூண்டை அடைப்பதற்கு மறந்திருக்க வாய்ப்பில்லை.''
"நம்மைச் சோதித்துப் பார்ப்பதற்காக செய்திருக்கலாம்.''
"தின்ற சோற்றுக்கு நாம் நன்றியைக் காட்டவேண்டும்.''
"மனிதர்களைப்போல, வாய்ப்பு கிடைத் தால் கையில் கிடைப்பதை எடுத்துக் கொண்டு ஓடக்கூடிய குணம் நமக்கு இல்லை என்பதை மேலுமொரு முறை ஞாபகப்படுத்தக்கூடிய சந்தர்ப்பம் இது. அதனால் அவசரப்பட்டு எடுக்கும் தீர்மானம் வேண்டாம் என்று வையுங்கள்.'' பெண் கிளி அமைதியான குரலில் கூறியது.
"முட்டாள் பெண்ணே... நீ கூறுவது எந்த அளவிற்கு மடத்தனமாக இருக்கிறது! அவர் கூண்டை மூடுவதற்கு மறந்திருக்க வாய்ப்பில்லையாம்! தினமும் இந்த கூண்டை பத்திரமாக அடைத்திருந்தார் அல்லவா? என்றைக்காவது ஒரு இரவு வேளையில் இந்த கூண்டைத் திறந்து வைக்கலாம் என்ற நல்ல மனம் அவருக்கு இருந்திருக்கிறதா? நான் எத்தனை முறைகள் இந்த கூண்டிற்குள் சிறகை வைத்து அடித்து அழுதிருக்கி றேன்! அப்போது எந்தச் சமயத்திலும் அவருக்குள் இரக்கம் என்ற உணர்ச்சி எழுந்ததைப் பார்த்ததே இல்லை. எழுந்திருக்கிறதா? நீயே சொல்லு...''
"ஒருவேளை இரவு நேரங்களில் திறந்து வைக்கவில்லை என்றிருந்தா லும், இந்த கூண்டை சில வேளை களிலாவது திறந்து வைத்திருப்பதற்கு முயற்சித்திருக்கிறார் என்ற விஷயம் எனக் குத் தெரியும். இந்த கூண்டிற்கருகில் வந்து நின்று பலமுறைகள் அழுவதை நான் கவனித்திருக்கிறேன். அவர் அன்பு உள்ளவர்.''
"அனைவருக்கும் சுதந்திர சூழல் இருக்கவேண்டும் என்று பேசக்கூடிய கூட்டத்தில்தான் அவரும் இருக்கிறார்.''
"அப்படிப்பட்ட ஒரு மனிதரை நாம் யோசிக்காமல் குற்றம் சுமத்துவது பெரிய விஷயம்தான்.''
"உன்னிடம் கூறி பயனில்லை. நீ அந்த மனிதரின் மாய வலையில் சிக்கிக்கொண்டுவிட்டாய். உனக்கு தரும் பாலில் அவர் மாயம் சேர்த்து விட்டிருப்பாரோ? பகல், இரவு வித்தியாசமில்லாமல் நம்மை கூண்டிற்குள் அடைத்துவைத்து, மூச்சு விடாமற்செய்து, நம் வாழ்க்கையை இருளுக்குள் தள்ளிவிட்ட அந்த மனிதரை நீ இந்த அளவிற்கு புகழ வேண்டியதில்லை.''
"அந்த அரக்க குணம் படைத்த மனிதர் கூண்டைத் திறந்துவிட்டிருக்கலாம். அப்படிச் செய்திருந்தால், நான் எப்போதோ சுதந்திரம் என்ற சொர்க்க உலகத்திற்குள் இருந்திருப்பேன்.''
"நீல நிற வானத்தில் ஒரு நட்சத்திரத்தைப்போல பறந்து விளையாடுவதற்காக என் சிறகுகள் உயிர்ப்புடன் எழுந்து நின்றிருக்கும். நீ முன்பே முட்டாள்தான்.உன் தலையில் எதுவுமே ஏறாது. சதியும் பித்தலாட்டமும் உனக்கு தெரியாது.''
"இல்லாவிட்டால் அன்று முதல் முறையாக அந்த பறவைகளை வேட்டையாடும் வேடனின் வலையில் மாட்டியிருக்க மாட்டாயே! நீதான் அந்த சிவந்த கனியைச் சுவைப்பதற்கான விருப்பத்தை வெளியிட்டாய்.''
"அதற்கான விளைவோ... மூன்று வருட தனிமைச் சிறைத்தண்டனை...'' ஆண் கிளி ஒரு விமர்சகரைப்போல சிறிதும் தயங்காமல் திடமான குரலில் இடைவெளியின்றி பேசிக்கொண்டிருந்தது.
சிறிது கேட்டு சோர்வு உண்டாக, பெண் கிளி அந்தப்பக்கம் பதில் கூறியது:
"இன்று இரவு நாம் இங்கு இருப்போம். அதிகாலையில் அவர் எழுந்து வருவார். நமக்கு பால் தருவதற்காக கூண்டின் கதவைத் திறக்கும் நேரத்தில்... அவரின் கண்களுக்கு முன்னாலேயே பறந்து செல்வோம். போகும் நேரத்தில் வேண்டுமெனில்...''
நீங்கள் விரும்பும் அளவிற்கு அவரை மோசமான வார்த்தைகளில் திட்டிக் கொள்ளுங்கள். அதுதான் நோக்கமென்றால்...''
"இல்லை... நான் அதற்கு தயாராக இல்லை. அதிகாலை வரை காத்திருப்பதற்கான பொறுமை எனக்கு இந்த விஷயத்தில் இல்லை.
வேண்டுமென்றால்... நீ அதிகாலை வரை இந்த கூண்டிற்குள் அவரை எதிர்பார்த்துக்கொண்டு காத்திரு... என்னை அந்த விஷயத்தில் எதிர் பார்க்க வேண்டாம். முன்பே... சொன்னால் நீ கேட்காதவள்தான்...'' -ஆண் கிளிக்கு கோபம் அதிகமானது.
"கோபம் வருகிறதா? கொஞ்சம் இந்த பக்கம் பாருங்க. பாருங்களேன்...'' அவள் கொஞ்சியவாறு ஆண் கிளியின் அலகில் அலகுகளை நெருங்கச் செய்தாள்.
அவளுடைய மோகச் செயலால் ஆண் கிளி தளர்ந்துபோய் விட்டதைப்போல தோன்றியது.
அவளை வேதனைப்படச் செய்வதில் விருப்பமில்லை.
அவள் இவ்வாறு சாதாரண பிடிவாதக்காரியாக இருப்பதற்கு அவள் ஒரு பச்சை அழகியாக இருப்பதுதான் காரணமோ? என்ன செய்வது? அனைத்தையும் தலைவிதி என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்.
மனதிற்கு சிறிது நிம்மதி கிடைத்தபிறகு, எதுவுமே பேசாமல் ஒரு மூலையில் அமைதியாக இருந்த அவளை அருகில் நெருக்கமாக இருக்கச் செய்தவாறு ஆண் கிளி கூறியது:
"அம்மு... நான் கூறுவது உனக்கு புரியும். மனிதர் களை நம்ப முடியாது. நாம் எப்படிப்பட்ட மனக் கோட்டைகளைக் கட்டி உயர்த்தினோம்! ஒரே நொடியில் அனைத்தும் தகர்ந்துவிட்டன. சில நிமிடங்களிலேயே நம் வாழ்க்கையின் வடிவமே மாறிப்போய்விட்டது. இந்த சிறைப்பட்டுக் கிடக்கும் நிலை எனக்கு அளவற்ற வேதனையை உண்டாக்கிவிட்டிருக்கிறது. நீ என்னுடன் இல்லாமலிருந்தால், நான் என்றோ மரணத்தைத் தழுவியிருப்பேன். நீ இல்லாத வாழ்க்கை என்னைப் பொறுத்தவரையில் முற்றிலும் பயனற்றது.இந்த சிக்கிக்கிடக்கும் நிலையிலிருந்து விடுதலை பெறுவதற்காக என் மனம் ஏங்கிக்கொண்டிருக்கிறது.''
"என் குரல் முரட்டுத்தனமாகவும் என் குணம் குரூரமாகவும் இருக்கின்றது என்றால், அதற்குக் காரணம்... இந்த இரும்புக் கூண்டுதான்.'' ஆண் கிளியின் குரல் கவலை நிறைந்ததாக இருந்தது.
"எனக்காக இந்த ஒரே ஒரு இரவை மட்டும் பொறுத்துக்கங்க....''
நிலவு காயும் மாலை நேரம் மறைந்துவிட்டது. இரவு! இரவின் கீற்றுகள் கூண்டிற்குள் ஊர்ந்து வர ஆரம்பித்தன. அந்த கூண்டிற்குள் இறுதி இரவு கடப்பதைப் பார்த்தவாறு ஆண் கிளி காத்திருந்தது. ஆண் கிளியைப் பெண் கிளி நெருங்கி உரசியவாறு...
அலகால் உரசி ரோமங்களில் வெப்பத்தை எழச்செய்து ஒன்றோடொன்று இறுகப் பிணைந்தன.
சிறிது நேரம் கடந்ததும், ஆண் கிளிக்கு இருப்பதற் குப் பொறுமையற்ற நிலை உண்டாக ஆரம்பித்தது. இரவின் இரண்டாவது ஜாமத்தில் ஆண் கிளி திடுக்கிட்டு எழுந்துகொண்டு கேட்டது: "அம்மு... பொழுது புலரப் போகிறது. வெளிச்சத்தின் குருதிக் கைகள்தானே கிழக்கு திசையில் தெரிகின்றன? சீக்கிரம் எழுந்திரு. நாம் போகவேண்டிய நேரம் வந்துவிட்டது.''
"மேலும் கொஞ்சம் வெப்பத்தைப் பகிர்ந்தவாறு நாம் இங்கேயே படுத்திருப்போம்.''
தெரியுதா? அதிகாலைக்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. இந்த குளிர் நிறைந்த இரவுப் பொழுதை தூங்காமல் பேசி கடத்த வேண்டுமா? பொழுது புலரும் வேளை வந்தால், நானே தட்டி எழுப்புறேன். என்மீது நம்பிக்கை இல்லையா?''
ஆண் கிளியின் கோபம் திடீரென மடை
திறந்து வெளியே வந்தது: "நீ ஒரு மூதேவி... சகுனத்தை முடக்குபவள்... உன்னுடன் வாதம்புரிய எனக்கு நேர மில்லை. நான் புறப்படுகிறேன்.
இனி... அதிர்ஷ்டம் இருந்தால், பார்ப்போம். ஆண் கிளி திறந்துகிடந்த நுழைவுவாயிலின் வழியாக சிறகடித்தவாறு பறந்து சென்றது.
அவளுடைய மன ஓட்டம் வேறொரு வழியில் இருந்தது.
அவன் முன்கோபக்காரன். கோப குணம் உள்ளவர்கள் எப்போதும் தூய மனம் கொண்டவர்களாக இருப் பார்கள். போனாலும், வரா மலிருக்க மாட்டார்கள். வெளியே பச்சிலைச் செடி களுக்கு மத்தியில் தன்னிடம் விளையாடிப் பார்க்கலாம் என்பதற்காக மறைந்து இருப்பான். சிறிது நேரம் பார்க்காமல் இருந்தால், திரும்பிவருவான். அவளுக்குச் சிரிப்பு வந்தது.
சின்ன எஜமானர் அதிகாலை வேளையில் எழுந்து கூண்டிற்கருகில் வந்து நின்று அழைத்தார்:
"கிளிக்கண்ணு....''
"குர்ர்ர்...'' உடனடியாக கூண்டிற்குள் அவருடைய விழிகள் பதிந்தன. ஆண் கிளி எங்கு சென்றது?
"இந்துமணி.... உன் நண்பன் எங்கு போனான்?''
"ச்சி... ச்சி... ச்.... ஷு... ஷு...'' பெண் கிளி ஓசை உண்டாக்கியது.
(என்னிடம் விளையாட்டுக் காட்டுவதற்காக அழகன் வாசலில் இருக்கும் முருங்கை மரத்தில் மறைந்து அமர்ந்திருப்பான்.)
அவருக்கு எதுவுமே புரியவில்லை.
திடீரெனத் தான் திறந்து கிடக்கும் கூண்டு பார்வையில் பட்டது. வேகமாக கதவை அடைத்தார்.
எஜமானர் மெதுவான குரலில் அவளிடம் கேட்டார்: "இந்து.... நீயும் பறந்து போக விரும்புபவள்தானே? உங்களுடைய இனம் முழுவதும் மனிதர்களைப் பார்த்து ஏன் இப்படி பயப்படுகிறீர்கள்?"
அவளுக்கு அப்போதுதான் அறிவு திறந்தது.
அவன் கூறிய வார்த்தைகள் உண்மையாக இருக்குமோ? மனிதர்கள் நம்பிக்கைத் துரோகிகள்தானோ? சின்ன எஜமானர் தன்னையும் சதியில் சிக்கவைத்து விடுவாரோ?
கூண்டிற்குள் பால், பழம், தினை ஆகியவற்றைக் கொண்டு வந்து வைத்தார்.இது தினந்தோறும் நடக்கும் செயல்தான். அவள் அந்தப் பக்கம் பார்க்கவே இல்லை. அவளால் எப்படி சாப்பிட முடியும்? தொண்டைக்குள் வேதனை அடைத்தது.
எதையும் உட்கொள்ள முடியாது. ஒரு துளி நீரைக் கூட!
இனி அழகன் வரமாட் டானா? அழகன் வருவான். வராமல் இருக்க மாட்டான். அழகன்.... பாவம்! தன்னிடம் கோபத்தைக் காட்டுகிறான்.
இப்போது எங்காவது அமைதியாக அமர்ந்திருப் பான்.
பாவம்! முழு அப்பிராணி! சிறகை அடிப்பதற்கு ஆர்வம் இருக்கும். சிறிது நேரம் பறந்து விளையாடட்டும்! எல்லை யற்று பரந்து கிடக்கும் ஆகாயத்தின் விசாலமான நீல வண்ணத்தில் இன்னும் சிறிது நேரம் பரவிப் பறக் கும்போது தன்னைப் பற்றி நினைப்பான்.
அப்போது திரும்பி வராமலிருக்க மாட்டான்.
வராமலிருக்க மாட்டான்...
அவளுடைய கள்ளங்கபடமற்ற மனம் முணு முணுத்துக் கொண்டேயிருந்தது.
பகல்பொழுது கடந்து சாயங்காலம் வந்தது. சூரியன் மறைந்துவிட்டது. அழகன் எங்கு போனான்?
கண்களில் ஈரம் உண்டானது. இரும்புக் கம்பிகளுக்குள் மல்லாந்து படுத்தவாறு அவள் வானத்தின் விளிம்பை வெறித்துப் பார்த்தாள். சிவந்த அஸ்தமனத்தின் மெல்லிய கீற்றுகள் கூண்டிற்குள் சாய்ந்து விழுந்து கொண்டிருந்தன.
கிழக்கு திசையிலிருந்து வந்த சில கிளிகள் ஓசை உண்டாக்கியவாறு கடந்து சென்றன.
அந்த கூட்டத்தில் அவளுடைய அழகனும் இருப்பானோ? அவள் அந்த பக்கத்தையே வெறித்துப் பார்த்தாள்.
அவளுடைய அழகன் அந்த கூட்டத்தில் இருந்தால், இங்கு வந்திருக்க வேண்டிய தேவையே இல்லையே?
"ஷு...ஷு...ஷு...
ஷேஷிம்...''
(அழகா...
அழகனுக்காக இந்து கண்ணீருடன் காத்திருக்கிறாள்.)
அழகன் அதைக் கேட்டிருக்க மாட்டான்.
கேட்டிருந்தால்....?
இதயம் முழுக்க வேதனையின் நெருஞ்சி முட்கள்... காயமடைந்த இதயச் சுவர் களில் குருதி கசிந்து நின்று கொண்டிருக்கிறது.
அவளால் சிறகுகளைக்கூட அசைக்க முடியவில்லை.
எஜமானர் கூண்டிற்கருகில் வந்து அழைத்தார்: "கிளி கண்ணு... குர்ர்ர்...''
"ஷுஊ... ஷுஊஷு... ச்சீசு...''
(எனக்கு எதுவுமே வேண்டாம். என் அழகனைக் காட்டினால் போதும்.)
கம்பிகளின் வழியாக அவர் ஒரு சிறிய பழத்தை அவளை நோக்கி நீட்டினார். அவள் அதைப் பார்க்காததைப்போல காட்டியவாறு எதிர்த் திசையை நோக்கி திரும்பி அமர்ந் தாள். தன் தலையை யாரும் பார்க்கக்கூடாது என்பதற்காக தன் சிறகுகளுக்கு நடுவில் அதைச் சொருகிக் கொண்டாள்.'' இனி எனக்கு எதையுமே தர வேண்டாம். எனக்கு தொந்தரவு தராமல் இங்கிருந்து போயிடுங்க. நான் இந்த தனிமைச் சூழலில் சிறிது நேரம் அமர்ந்து கண்ணீர் சிந்துகிறேன்'' என்ற எண்ணமாக இருக் குமோ?
அந்த மனிதர் அவளைச் சுய உணர்விற்கு கொண்டு வருவதற்காக பல சத்தங்களையும் உண்டாக்கி பார்த்தார்.
அமைதியான தன்மையிலிருந்து எழுந்து வரக்கூடிய நிலையில் அவள் இல்லை.
"கிளி கண்ணு... பூனை... பூனை...'' இறுதி தந்திரத்தை யும் பயன்படுத்தி பார்த்தார்.
வேதனையால் நொறுங்கிப் போயிருந்த அவளு டைய இதயம் கொதித்தது.'' பூனை வரட்டும்... நான் என் கழுத்தை என் பிறவி எதிரிக்கு முன்னால் நீட்டுகிறேன். கடித்து மென்று தின்னட்டும். அதைப் பார்க்கக்கூடிய வாய்ப்பு அழகனுக்குக் கிடைக்கட்டும்.
விளையாடுவதற்கும் ஒரு அளவு இல்லையா? பொய் சொல்லக்கூடிய ஏதாவது பெண் கிளிகள் அவரை தவறான வழியில் அழைத்துச்சென்று விட்டனவோ?
எனக்கு தற்கொலை செய்துகொள்ள வேண்டும் போல தோன்றுகிறது.
அழகன் இல்லாத வாழ்க்கை! அதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. விதி மீண்டும் சோதித்துப் பார்க்கிறதோ? என்னைக் கொன்று விடு...'' அவளுடைய மனம் ஒரு பைத்தியக்காரிக்குச் சொந்தமானதாக மாறி விட்டிருக்கிறது.
பொழுது இரவானது. சுற்றிலும் இருள் பரவிவிட்டிருந்தது.
வெளிச்சத்தின் ஒரு கீற்றுகூட இந்த ஊரில் இல்லையா? மங்கலாக எரிந்து கொண்டிருந்த ஒரு தீபத்தின் ஜுவாலை மிகவும் தூரத்தில் எரிந்து கொண்டிருந்தது.
எஜமானர் பற்றி எரிய வைக்கும் நெய் விளக்காக இருக்குமோ? அந்த வெளிச் சத்திற்கு முன்னால் அமர்ந்து கொண்டு எஜமானர் நீண்ட பெருமூச்சை விட்டுக் கொண்டிருப்பாரே? வேதனை என்றால் என்னவென்று அறியக்கூடிய எஜமானர் எங்களை எதற்காக இப்படி நெருப்பைத் தின்ன வைக்கவேண்டும்? அவரா கூண்டிற்குள் போட்டு அடைத்தார்? இல்லை..
கூண்டிற்குள் அடைத்தவன் அந்த வயதான கிழவன்...
எப்படிப்பட்ட எதிர்பார்ப்புகளை அந்த கிழவன் சாம்பலாக்கி விட்டான்! அழகன் எப்போதுமே கூறுவான்... "மனிதன் வஞ்சகன் என்று.'' "எந்தக் காலத்தி லும் அவன் ஏமாற்றாமல் இருந்ததில்லை. அந்த கூண்டு சதிப்பொறி. அதற்குள் வைக்கப்பட்டிருந்த அத்திப்பழம் நமக்கு விலக்கப்பட்டது.'' நான் அது எதிலும் கவனம் செலுத்தவில்லை. எது வேண்டுமென கேட்டாலும், அழகன் அதைக்கொண்டு வந்து கொடுப்பான். முதல் காதலின் வசந்த காலமல்லவா? எல்லா காதலர்களையும்போல அழகனும் வீரச்செயல்களில் சென்று ஈடுபடுவான்.
அத்திப்பழத்தைச் சாப்பிட வேண்டும் என்பதற்காக கூண்டிற்குள் நுழைந்தோம்.
இரண்டு பேரும் ஒரே நேரத்தில் நுழைந்தோம்.
ஆர்வத்துடன் அந்த தகர டின்னிலிருந்த அத்திப் பழத்தைக் கொத்தியதும், கூண்டின் கதவு பலமாக மூடியதும் ஒரே நேரத்தில் நடந்தன.
கிழவன் கூண்டுடன் நகரத்திற்குக் கொண்டுசென் றான். எஜமானர் எங்களை கூண்டுடன் விலைக்கு வாங்கினார்.
புகையைத் துப்பிக்கொண்டிருந்த ஒரு பயங்கர ஜந்து எங்களையும் ஏற்றிக் கொண்டு சீறிப் பாய்ந்தது. பிறந்து வளர்ந்த சூழலிடம் இறுதியாக நாங்கள் விடைபெற்றோம். இனி எந்தச் சமயத்திலும் அந்த அழகான நிலப்பகுதிகளை நாங்கள் பார்க்கப் போவதில்லை.
எங்களுடைய காதல் செயல்களுக்கு இடமளித்த அத்தி மரங்களில் இனி பறக்க முடியுமா?
அவளுடைய கடந்தகால நினைவுகளுக்கு திரைச்சீலை இட்டுக்கொண்டு அந்த நள்ளிரவுப் பொழுதின் பேரமைதியிலிருந்து மிகவும் பயங்கர மான ஒரு குரல் கேட்டது: "ம்யாவோம்! ம்யாவோம்! ம்யாவோம்!'' ஏதோ ஒரு காட்டுப் பூனை இரையைத் தேடி வெளியே வந்திருக்கிறது.
அவளுடைய உள்ளம் முழுவதும் நடுங்க ஆரம்பித்துவிட்டது. அழகன் இருந்திருந்தால், ஒருவரையொருவர் இறுக அணைத்தவாறு கண்களை மூடிக் கொண்டு இருந்திருப்பார்கள்.
அவள் வெளியே சற்று பார்க்க மட்டும் செய்தாள். இருட்டில் பளிங்கு கோலியின் அளவில் இரண்டு நெருப்புத் துண்டுகள் மின்னிக்கொண்டிருந்தன.
"ம்யாவோம்... வோம்.... ம்யாவோம்... வோம்....''
அந்த சத்தம் அருகில் நெருங்கிக்கொண்டிருந்தது.
நெருப்புத் துண்டுகள் மின்னிக்கொண்டிருந்த அந்த உருவம்தான் மரணமா? நான்கு கால்களில் நடந்து வந்த மரணம் கூண்டிற்கு அடியில் இருந்தது.
அது அவ்வப்போது மேல்நோக்கி பார்த்துக் கொண்டிருந்தது.
பிரகாசித்துக் கொண்டிருந்த கண்களின் வெளிச்சத்தில் மீசையும் பற்களும் தெரிந்தன. மரணம் தன் சரீரத்தைத் துடைத்து பளபளப்பாக்கிக் கொண்டிருந்தது.
திடீரென தூரத்திலிருந்து ஒரு நாயின் குரைக்கும் சத்தம் கேட்டது. மரணம் அந்த குரைக்கும் சத்தத்தை கவனிக்கிறதோ? நீண்டநேர காத்திருப்பிற்குப் பிறகு மரணம் அங்கிருந்து வெளியேறிச் சென்றது.
அவள் கண்களை இறுக அடைத்துக்கொண்டு பிரார்த்தித்தாள்:
"நான்கு கால்களில் நடக்கும் மரணம் திரும்பிவராதா?''
அவளுடைய நாட்கள் அர்த்தமற்று நீங்கிக் கொண்டிருந்தன.
அழகன் வருவான் என்ற எதிர்பார்ப்பு நடக்காமல் போய்விட்டதை அவள் உணர்ந்தாள்.
இரவிலும் பகலிலும் எழுதுவதிலும் வாசிப்பதி லும் மூழ்கிவிட்டிருந்த எஜமானர் அவளைப் பார்த்துக்கொள்வதில் அதிக நேரத்தைச் செலவிட் டார்.
எனினும், மனதில் வேதனை உமியில் பற்றிய நெருப்பைப்போல கனன்று... கனன்று நின்று கொண்டிருந்தது.
ஆசையோ எதிர்பார்ப்போ இல்லாத வாழ்க்கை எந்த அளவுக்கு பயனற்றது! பகலும் இரவும் உதிர்ந்து விழும் இலைகளைப்போல ஆகிவிட்டன.தன் இழக்கப்பட்ட... மதிப்புமிக்க நினைவுகளை அசை போட்டவாறு அவள் நிமிடங்களை தள்ளி நீக்கிக்கொண்டிருந்தாள்.
அழகனை முதல் முறையாக பார்த்த நாள் நேற்று நடந்ததைப்போல தோன்றியது.
உலகிற்கு பூ சூடிய இளவேனில் காலம்! அத்தி மரத்தின் கிளைகள் ரத்தத் துளிகளைப் போன்றிருந்த அத்திப்பழங்கள் நிறைந்து சுமையுடன் தொங்கிக் கொண்டிருந்தன.
நன்கு பழுத்த அத்திப்பழத்தை வாய்க்குள் போட்டால், தானே கரைந்து விடும்.
வீடு வடக்கில் மிகவும் தூரத்தில் இருந்தது. தாயும் பாட்டியும் தாத்தாவும் பல வருடங்களாக வாழ்ந்துகொண்டிருப்பது அத்திமேடுகளில் உள்ள காய்களையும் கனிகளையும் தின்றுதான்.
அத்திமரம் பூத்துவிட்டால், எங்களுக்கு சந்தோஷம்தான்.
மிகவும் இளம் குஞ்சாக இருந்தபோதே அத்திப் பழத்தின் ருசியை அறிந்திருந்தேன். வயதிற்கு வந்தவுடன், அத்திப்பழத்தைப் பறிப்பதற்காக நகரத்திற்குச் செல்ல ஆரம்பித்தேன்.
எங்களின் இருப்பிடத்திலிருந்து நிறைய ஆட்கள் நகர பகுதிக்கு வருவதில்லை.
பயணம் மிகவும் தனிமை நிறைந்ததாக இருந்தது. அதிகாலை வேளையில் இங்குவந்து சேர்ந்தால், சாயங்காலம்தான் திரும்பிச் செல்வேன்.
அத்திப்பழத்தைப் பறிப்பதற்காக வேறு பலரும் வந்திருந்தார்கள்.
ஓணான், காகம், புறா, வவ்வால் அனைவரும் இருந்தார்கள்.
அவர்களுக்கு மத்தியிலிருந்து ஏதாவது கிடைப்பது என்றால், அதற்கு மிகுந்த சாமர்த்தியம் வேண்டும். எனக்கு பெரிய அளவில் பழக்கமில்லை.
வந்தவர்கள்....
வந்தவர்கள் பறித்துக்கொண்டிருந்தார்கள். அனைவரின் அவசரமும் சற்று தீரட்டுமென கருதி ஓரத்தில் விலகி நின்றுகொண்டிருந்தபோது, அந்த குரல் தேன் துளியைப்போல காதுகளில் வந்து விழுந்தது.
"என்ன.... அத்திப்பழம் கிடைக்கலையா? நான் பறித்துத் தரட்டுமா?''
அறிமுகமற்ற ஒரு ஆள் இவ்வாறு கூறிய போது என் தலை வெட்கத்தால் குனிந்துவிட்டது. அவருடைய கண்களில் புன்சிரிப்பு இருந்தது. கண்கள் என் சரீரத்தில் படர்கின்றனவோ?
அவருடைய பார்வை என் கழுத்திலிருந்த பஞ்சவர்ண மாலையின்மீது இருந்தது. துளைத்து நுழையும் அந்த பார்வை சிலிர்ப்பை அள்ளிப் பரவச் செய்தது.
நகரத்துடன் நெருக்கமான அனுபவங்களைக் கொண்ட அவர் ஒரு கிராமப் பகுதியில் அடங்கி ஒதுங்கி வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு பட்டிக்காட்டு பெண்ணிடம் எதற்கு இப்படியொரு அக்கறையைக் காட்டவேண்டும்?
"ஒரு அத்திப்பழத்தைச் சாப்பிடு. நல்ல இனிப்பு இருக்கு...''
"வேண்டாம். நான் பறிச்சுக்குறேன்....''
"இப்படி ஒரு மூலையில் அடங்கி ஒதுங்கி நின்றால், அத்திப்பழம் கிடைத்து விடாது. இங்கு கை வலிமை கொண்டவர்கள் காரியத்தைச் சாதிப்பார்கள்.''
நான் பேசாமல் நின்றுகொண்டிருந்தேன்.
"தவறாக நினைக்கக் கூடாது. இந்தா...
இதைக் கொஞ்சம் சுவைத்துப் பார்...''
அவர் நீட்டிய அத்திப்பழத்தை என்னால் மறுக்க முடியவில்லை.
இன்னும் கொஞ்சம் அத்திப்பழங்களைப் பறித்துத் தந்தார்.
இதற்கிடையில் வீட்டின் செய்திகளையும் கேட்டு அறிந்துகொண்டார்.நாங்கள் மிகவும் சீக்கிரமாகவே நெருக்கமானோம்.
எனக்கு அவருடைய நடவடிக்கைகள் மிகவும் பிடித்தன. நல்லவர்... நேரம் இருள ஆரம்பித்தது. வவ்வால்கள் வர ஆரம்பித்தன.
"நான் வீட்டுக்கு போகணும்.''
"இந்த பொருத்தமற்ற வேளையில் இங்கிருந்து போறியா? அது ஆபத்தான விஷயம்!''
நான் சம்மதித்தேன். அன்று இரவு இரண்டுபேரும் அந்த மரத்தில் காலியாக இருந்த ஒரு பொந்தில் இருந்தவாறு நேரத்தைக் கழித்தோம். பல நாட்களின் சந்திப்புகள் எங்களை ஒரே உயிராக ஆக்கின.
அவர் கூறுவார்:
"பெண்ணே...
உன்னை நான் கட்டிக்கொள்ள போகிறேன். உன் கழுத்திலிருக்கும் இந்த பஞ்சவர்ண மாலைக்கு நான் ஒரு பதக்கம் வாங்கித் தர போகிறேன்."
அவர் எப்போதும் என்னை கிண்டல் பண்ணிக்கொண்டிருப்பார்.
எனக்கு மிகவும் மெதுவாக சிரிக்க மட்டுமே தெரியும்.
நாங்கள் ஒருவரையொருவர் தொட்டுக் கொண்டும், வாழ்க்கையில் தம்பதிகளாக வாழவும் ஆரம்பித்தோம்.
சொந்தமாக ஒரு கூடு கட்டவும், அந்த கூட்டில் பிள்ளைகளை வளர்க்கவும் நாங்களும் ஆசைப் பட்டோம். நாம் ஒன்றை நினைக்கின்றோம்.
விதி வேறொன்றைச் செயல்படவைக்கிறது.
அனைத்தும் எந்தவொரு அர்த்தமுமே இல்லாத கனவைப்போல கடந்து சென்றன.
"என் அழகா... என் மனம் நொறுங்கிவிட்டது. என் தவறைத் திருத்தி, நீ இங்கு திரும்பி வர மாட்டாயா?''
இளவேனில், வசந்தம், குளிர் காலம், முன்பனிக் காலம்... காலங்கள் கடந்து போய்க்கொண்டிருந்தன.
மழைக்கால மேகங்கள் ஆகாயத்தில் இருண்டு சேர்ந்திருக்கின்றன.
பலமான இடியும், மின்னலும்...
எப்போதையும்விட முன்கூட்டியே பூமியை இருள் விழுங்கியிருக்கிறது.பலம் மிக்க காற்று ஓசை எழுப்பி வீசிக்கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு நிமிடமும் காற்று வளர்ந்து கொண்டிருக்கிறது.
மரங்களின் உச்சிகளில் காற்று சீட்டியடித்துக் கொண்டிருக்கிறது.
இருளின் மார்பைப் பிளந்துகொண்டு கண்கள் கூசும் அளவிற்கு இடியும் மின்னலும் அட்டகாசம் செய்துகொண்டிருக்கின்றன. பலமாக பெய்யும் பேய் மழை!
எங்கு பார்த்தாலும் நீர்! குளிரால் பூமி உறைந்து போகுமோ? உயிரினங்கள் அழிவின் ஆழத்திற்குள் நீங்கிச் செல்கின்றனவோ? அவளுடைய இதய துடிப்புகளுக்கு வேகம் அதிகரித்துக்கொண்டிருந்தது.
இடது பக்க தோள் பகுதியிலிருந்து அன்று காலை வேளையில் இரண்டு தூவல்கள் விழுந்துவிட்டன. அது கெட்ட சகுனத்தைக் குறிப்பாக உணர்த்துகிறது.
அதை அவளால் நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை.
வெளியே பார்த்தால், எதுவுமே தெளிவாக தெரியவில்லை.
சூறைக்காற்றில் உழன்றுகொண்டிருக்கும் மரத்தின் இலைகளும், சீறியடிக்கும் கடலின் இரைச் சல் சத்தமும்.... இதுதான் எங்கும். மரணத்தின் கருநாகங்கள் கூண்டிற்குள் ஊர்ந்து வருகின்றனவோ? குரூர உயிரினங்கள் கூண்டைச் சூழ்ந்துவிட்டனவோ? தீட்டப்பட்ட நகங்களும் கூர்மையான பற்களும் கம்பிகளின் வழியாக நீண்டு வருகின்றனவோ? பயங்கரமான மரணத்தின் சத்தம் மீண்டும் உரத்து கேட்டது:
"ம்யாவோம்...
ம்யாவோம்...
ம்யாவோம்!'' மீண்டும் மரணம் கண்களுக்கு முன்னால் கிடந்து நடனமாட ஆரம்பித்துவிட்டதோ? அவளுடைய சரீரம் அந்த குளிரிலும் வியர்க்க ஆரம்பித்தது.
நேரம் என்ன ஆனது? நள்ளிரவு கடந்துவிட்டது அல்லவா? புலர்காலைப் பொழுது மலரப்போகிறது அல்லவா?
திடீரென அசாதாரணமான ஒரு சத்தம் கேட்டது. கூண்டிற்கு மேலே என்ன வந்து விழுந்தது? அவளுடைய இதயம் தேம்பி வெடிப்பதைப்போல இருந்தது. நெருப்பு மின்னும் கண்களுடன் நான்கு கால்களில் நடக்கும் மரணமாக இருக்குமோ?
கடவுளே... எனக்கு விடுதலை கிடையாதா? என் அழகனே... இந்த இரவு வேளையில் நீ திரும்பி வந்தால்....?
புலர்காலைப் பொழுதின் முதல் கிரணங்கள் கிழக்கிலிருந்து வருகின்றனவோ?
மழை அப்போதும் நிற்கவில்லை.
எனினும், சிறிது வெளிச்சம் இருந்தது. மங்கலான வெளிச்சத்திற்கு மத்தியில் அவள் கூண்டிற்குக் கீழே கண்களைப் பதித்தாள். பச்சைநிற சிறகு களை விரித்தவாறு அங்கு கிடப்பது யார்? சிவந்த எறும்புகள் பச்சை சிறகுகளில் அரித்து நகர்ந்து கொண்டிருந்தன.
அழகனா? அவளுடைய மனதால் பொறுமையாக இருக்க முடியவில்லை.
கம்பிகளைச் சுற்றி பறந்து நடந்தாள். சிறகுகளை அடித்தாள்.
அசாதாரணமான சில சத்தங்களை எழுப்பினாள்.
அழகனை அழைக்கக்கூடிய கூப்பாடு அது என்பதை யாராலும் புரிந்து கொள்ளமுடியும்.
வீட்டின் உரிமையாளர் கதவைத் திறந்து பார்த்த போது, கண்ணில்பட்ட காட்சி ஆச்சரியத்தை உண்டாக்கியது.
முதலில் கூண்டிற்குள்தான் பார்த்தார். இந்து அதே இடத்தில்தான் இருந்தாள். பிறகு...
கிடப்பது என்ன? எடுத்து பார்த்தபோது, அவருக்குப் புரிந்துவிட்டது. அது...
அழகன் என்பது.
பல வருடங்களுக்குப் பிறகு அழகன் திரும்பி வந்திருக்கிறான்.
அவளுடைய சன்னதியிலேயே அழகன் மரணத்தைத் தழுவியிருக்கி றான்! இது என்ன ஒரு ஆச்சரியம்! எவ்வளவு சிந்தித்துப் பார்த்தும் விடை கிடைக்கவில்லை.
அந்த இணைப் பறவையின் திரும்பி வந்த செயலும் அதன் பரிதாபத்திற்குரிய மரணமும் அவரை நீண்டகால நினைவுகளுக்குக் கொண்டு சென்றன. தாங்க முடியாத மன வேதனையுடன் அந்த மனிதர் அந்த இறந்த பறவையை எடுத்துப் பார்த்தார்.
சிறகுகள் நனைந்திருந்தன.
காலின்மீதும் அலகின்மீதும் காயங்கள் இருந்தன. சரீரத்தில் ரத்தம் கசிந்து வழிந்த குருதிக்கோடுகள் இருந்தன.
எதையும் சிந்திக்க நிற்கவில்லை.
உடனடியாக கூண்டைத் திறந்தார். இதய வேதனை நிறைந்த ஒரு கூப்பாட்டை எழுப்பியவாறு ஆண் கிளியின் இறந்த உடலின்மீது பெண் கிளி வந்து விழுந்தது. அதற்கு பறப்பதற்கான சக்தி இல்லாமல் போனதோ? ஆண் கிளியின் பிணத்தின்மீது சிறகுகளால் அடித்துக்கொண்டேயிருந்தது.
அவர் அதை எடுப்பதற்கு முயற்சித்தார். அதைத் தொட்ட நேரத்தில்... பலமான எதிர்ப்புணர்வுடன் எஜமானரின் கையில் ஆவேசத்துடன் கொத்தியது.
விரல்களில் காயங்கள் உண்டாயின.
எனினும், அவர் அந்த பெண் கிளியை நெஞ்சோடு சேர்த்து வைத்தவாறு அதன் தலையில் முத்தமிட்டு கூண்டிற்குள் அடைத்து கதவை மூடினார்.
மறுநாள் காலையில் கூண்டைத் திறந்து பார்த்த போது, பெண் கிளி சிறகை விரித்த நிலையில் இறந்து கிடப்பதைப் பார்த்தார்.
யாருமற்ற கூண்டை எடுத்துக்கொண்டு அந்த மனிதர் நொறுங்கிய இதயத்துடன் வாசலில் இறங்கி நடந்தார். விரலை வைத்தால் நொறுங்கக்கூடிய அளவிற்கு பலமான மழை அப்போதும் பெய்துகொண்டிருந்தது.
உலகம் முழுவதுமே ஒரு துக்கம் நிறைந்த கண்ணீர்ப் பொய்கையாக மாறிவிட்டதைப்போல தோன்றியது.