ம்மா இறந்த பிறகு பெரிய மாமாவைப் பார்க்கும் போது, நெருப்புக் கொள்ளியை விழுங்கிய ஒரு அனுபவம் தான் எனக்கு உண்டாகும். இந்த அனுபவம் என் தம்பிக்கும் இருக்கிறதா என்று எனக்குத் தெரியாது.

அம்மா மரணமடைந்த காட்சி இப்போதும் ஞாபகத்தில் இருக்கிறது. அன்று துவாதசி... ஏகாதசி விரதம் இருந்ததன் சோர்வு தெரிந்தது. ஏகாதசி நாளன்று அம்மா எதுவுமே சாப்பிடமாட்டார்கள்.

சாப்பிடாமல் இருப்பதற்குப் பின்னால் வேதனை நிறைந்த சில நினைவுகள் இருக்கின்றன.

ஒரு ஏகாதசி நாளன்று கடுமையான சோர்வு உண்டானபோது, வாசலில் நின்றுகொண்டிருக்கும் தென்னை மரத்தின் மேலிருந்து ஒரு இளநீர் பறிக்கப்பட்டது.

Advertisment

பெரியவர் வந்தபோது யாரோ காதில் முணுமுணுத்தார்கள்: "சங்கரனை அழைத்து இளநீர் பறிக்கச் செய்து குடிப்பதுதான் அம்மாவுக்கும் பிள்ளைகளுக்கும் வேலையே...''

தொடர்ந்து கருங்காளியைப் போல ஒரு கர்ஜனை...

"இந்த தென்னை மரங்கள் அவளுடைய புருஷன் நட்டு வளர்ந்தவை அல்ல. திருடித் தின்று வாழும் ஒரு தாயும் பிள்ளை களும்... இனி இங்கிருந்து ஒரு மண்ணைத் தோண்டி தின்பது தெரிந்தால்....? அப்போ தெரியும் தாச்சுண்ணியின் நிறம்...'' அம்மாவின் கண்கள் ஈரமாகி விட்டிருந்தன. மேற்பகுதி வெட்டப்பட்டு தயார் பண்ணி வைக்கப்பட்டிருந்த அந்த இளநீரை அம்மா தொடவில்லை.

Advertisment

ss

நான் மேற்குப் பகுதியில் அமர்ந்து புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தேன்.

மாமா தலையை விரித்துப்போட்டிருக்கும் சாமியாடியைப்போல உலாத்திக் கொண்டிருந்தார்.

என்னைப் பார்த்ததும் கூறினார்: "என்னடா... இந்த தென்னை மரங்கள் உன் அப்பன் நட்டு வளர்த்தவையா? கண்டவனோட சொத்தைத் திருடித் தின்று திரியிற கேவலமான பிறவிகளே... இந்த நேரத்துல நீங்கள் பிச்சை யெடுக்க போகக்கூடாதா?'' ‌

எங்கள் மூன்று பேருடனும் பேசும்போது, பெரிய மாமாவின் மொழி மிருகத்தனமாக ஆகிவிடும். யாராவது ஒருவரை எதிர்பாராமல் பார்க்க நேர்ந்தால், குணமே மாறிவிடும்.

கூட்டிலடைக்கப்பட்ட பருந்தைப்போல நடக்க ஆரம்பித்து விடுவார்.

நாங்கள் என்ன தவறு செய்துவிட்டோம் என்பதே தெரியாது. அந்தச் சம்பவத்திற்குப் பிறகு அம்மா ஏகாதசி விரதம் இருந்தால், நீர் பருக மாட்டாள். தொண்டை வறண்டு போய்விட்டால், துளசி நீர் பருகுவாள். அன்று முழுவதும் ராமாயணம் வாசிப்பாள். பல பகுதிகளையும் வாசித்து கண்ணீருடன் பிரார்த்திப்பதைக் கேட்கலாம்:

"ராமபிரானே...என் பிள்ளைகளைக் காப்பாத்தணும். அவங்களுக்கு ஒரு ஆளோ அடைக்கலமோ இல்லை.''

ஆமாம்.... நாங்கள் ஆதரவற்றவர்களாக இருந்தோம். தந்தை இல்லாத பிள்ளைகள்.

தந்தையைப் பற்றி எனக்கு ஒரு மெல்லிய நினைவு மட்டுமே இருக்கிறது.

"கிருஷ்ணன் குட்டி, கோவிந்தன் நாயரின் அச்சு அசல் உருவம். அந்த குணம்கூட அப்படியே இருக்கு...'' - பக்கத்து வீட்டைச் சேர்ந்த பாப்பியம்மா என்னைப் பார்க்கும்போதெல்லாம் கூறுவாங்க.

உலகத்திலேயே என் அம்மாவிடம் மிகவும் அதிகமான ஈவையும் இரக்கத்தையும் காட்டியது பாப்பியம்மாதான். நான் நினைத்துப் பார்ப்பேன்.

அப்படியெனில், நான் என் தந்தையின் சாயலில் இருப்பவன்.

களைத்து... மெலிந்த... வெளுத்த ஒரு ஆள். தந்தைக்கு காதில் கல்லால் ஆன கடுக்கன் இருந்தது. எனக்கு அது இல்லை என்பது மட்டுமே வேறுபாடு.

வெளுத்து... சற்று மெலிந்து...

வழுக்கைத் தலையுடன்...

சாந்தமான குணத்துடன் காணப்பட்ட ஒரு நல்ல மனிதன்! என்னைப் பார்க்கும்போது, அம்மாவிற்கு அப்பாவைப் பற்றிய நினைவுகள் உண்டாவது இயல்பானதே...

எரிந்து கொண்டிருக்கும் ஒரு அடுப்பாக அம்மா இருந்தாள். அவள் மிகவும் தளர்ந்து போய் விட்டாள். என் அம்மாவிடமிருந்த இளமை மிகவும் முன்பே இல்லாமற் போய்விட்டது. அம்மாவைப் பார்த்தால், யாராக இருந்தாலும் அழுதுவிடுவார்கள் என்ற நிலை இருந்தது.

"மலரைப் போன்ற இளம்பெண்ணாக இருந்தாள்'' -பாப்பியம்மாவின் புகழுரைகளில் இதுவும் ஒன்று.

தந்தை இறந்ததற்குக் காரணமே பெரிய மாமா தான்.

தந்தையின் சொத்துக்களை அபகரித்துக் கொண்டதும் அந்த இதயமற்ற மனிதர்தான்.

தாராள மனம் படைத்தவராக இருந்தார். வரவு அறியாமல் செலவழிப்பவராக இருந்தார்.

குடும்பத்தில் பாகத்தைப் பிரித்து வாங்கிக்கொண்டு தந்தை, மனைவியின் வீட்டில் தங்கிவிட்டார்.

"மனைவியின் வீட்டில் வசிக்கக்கூடிய கணவனும், குறவனின் கையிலிருக்கும் பாம்பும் ஒரே மாதிரி...'' பாப்பியம்மா கூறியது உண்மையாகத்தான் இருக்கும்.

‌வரவு அறியாமல் தந்தை செலவு செய்தார். சுத்தமானவர்களில் சுத்தமானவராக என் தந்தை இருந்தார். திருச்சூரிலிருந்து வரும்போது, ஒரு பெட்டி பியர்ஸ் சோப்பைக் கொண்டு வருவார். வாரத்தில் மூன்றோ நான்கு தடவைகள் திருச்சூருக் குச் செல்வார். எந்த பொருளைக் கொண்டு வந்தாலும், சமமாகவே பங்கு வைக்கப்படும். தன் அக்காவிற்கும் (பெரியம்மா) தங்கைகளுக்கும் அம்மா கொடுப் பாள்.

ரவிக்கைக்கான துணியைக்கொண்டு வந்தாலும், குங்குமம் கொண்டு வந்தாலும்... அதே நிலைதான்.

ஒரு முழம் "ஜகந்நாதன்' எடுக்கவேண்டிய இடத்தில் மூன்று முழம் "மல்' எடுத்தால்தான் தந்தைக்கு முழு திருப்தியே உண்டாகும். ஏதாவது கொண்டு வந்தால், பலாப்பழத்தில் ஈக்கள் மொய்ப்பதைப்போல எல்லோரும் அம்மாவிற்கு அருகில் ஓடி குழுமி நிற்பார்கள்.

அம்மா ஒவ்வொருவருக்கும் பங்கிடுவாள்.

சிறிதளவில்கூட பிடித்து வைத்திருக்கத் தெரியாது.

ஒன்றிரண்டு வருடங்கள் இப்படியே ஓடி விட்டன. தேவைக்கும் அதிகமான பொருட்களை வாங்கிச் சிதறியடிப்பது என்பதை அப்பா ஒரு பெருமைக்குரிய விஷயமாகக் கருதினார்.

அதற்கேற்றபடி அம்மாவும் நின்றாள்.

காலப்போக்கில் தேவைகளை நிறைவேற்றக்கூட காசு இல்லாத நிலை வந்து சேர்ந்தது. கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொன்றாக குறைய ஆரம்பித்தது.

அம்மாவின் தங்கைகளுக்கு கணவர்கள் உண்டானார்கள்.

சித்திகளின் கணவர்கள் கண்ணாடி அணிந்த வர்களும், காலில் ஓசை உண்டாக்கும் செருப்பு இட்டவர்களுமாக இருந்தார்கள்.

மாளு சித்தியின் கணவர் ஒரு கவிஞராகவும் இருந்தார். அவர் சாந்துப் பொட்டுடனும் பட்டுச் சட்டையுடனும்தான் வருவார். வெள்ளி மணி ஒலிப்பதைப்போல ஒரு கவிதையைக் கூறியவாறுதான் உள்ளேயே நுழைந்து வருவார்.

பெரியம்மாவின் கணவர் ஒரு ஜோதிடர்.

அவருக்கு உரத்த குரலில் சமஸ்கிருத சுலோகங்களைக் கூறத்தெரியும். எந்த காரியத்திற்கும் எதிர்வினை ஆற்றுவதற்கு அவரின் கையில் சமஸ்கிருத சுலோகங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன.

பழமையான ஒரு சிறிய வீட்டில் பிறந்து வளர்ந்த அப்பா திடீரென உண்டான இந்த மாற்றங்களைப் பார்த்து திகைப்படையாமலிருக்க வழியில்லை.

சித்திகள் மற்றும் பெரியம் மாக்களின் கணவர்கள் திறமை வாய்ந்தவர்களாகவும் விஷயங் கள் தெரிந்தவர்களாகவும் இருந்தார்கள்.

மாளு சித்தி, ஜானு சித்தி, பெரியம்மா ஆகியோரின் கணவர்கள் ஒன்றாகச் சேர்ந்து அமர்ந்து வெற்றிலை போட்டுக் கொண்டே தமாஷாக பேசியவாறு ஆனந்தத்தில் திளைத்திருப்பார்கள். உலக விஷயங்களைப் பற்றி விவாதம் செய்வார்கள். என்ன ஒரு ஒற்றுமை உணர்வு! அப்பாவை அவர்களுக்கு கண்களால் பார்த்தாலே பிடிக்கவில்லை.

அவர்கள் யாருமே மனைவியின் வீட்டில் நிரந்தரமாக தங்கியிருப்பவர்கள் இல்லையே? போதாததற்கு... ஜானு சித்தியின் கணவருக்கு ஆங்கிலத்தில் கையெழுத்துபோட தெரியும். அவர் சிகரெட் பிடிப்பார். பிறகு...

குட்டுங்ஙல் சந்தையிலிருந்து சாப்பாணன் புகையிலையை வாங்கிக்கொண்டு வருவார். அந்த புகையிலை பெரிய மாமாவிற்கு மிகவும் பிடித்திருந்தது.

"அச்சுதன் நாயர் கொண்டு வந்த புகையிலையில் கொஞ்சம் கொண்டு வா...ஜானு.'' அந்த அழைப்பிலும் பேச்சிலும் சந்தோஷம் நிறைந்திருந்தது.

அப்பா தனிமைப்படுத்தப்படுகிறாரோ? கையில் காசு இல்லாத நிலை உண்டாகிவிட்டது.

ஆண்டின் இறுதி நாட்கள் வந்தன. ஓணம், விஷு, திருவாதிரை...

எதற்குமே பணமில்லை.

கோடித் துணிகளும் வாழைக்குலைகளும் அறைக்குள் நுழைந்து வருகின்றன.

ஒவ்வொருவரும் தங்களுடைய அறைக்குள் கொண்டு வந்து வைத்து பூட்டுகிறார்கள். காரியத்தில் கண்ணாக இருக்கக்கூடிய கணவர்கள் வாசல் திண்ணையின் மீது பிரகாசமான முகத்துடன் இருக்கின்றனர்.

அப்பா சிந்தனையில் மூழ்கியிருக்கிறார்.

திருவோணம் நெருங்கி விட்டது. என்ன வழி? வேதனையை உண்டாக்கும் சிந்தனைகள்...

மதிப்பில் உண்டாகக் கூடிய வீழ்ச்சி...

அம்மாவிடம் உடனடியாக வருவதாக கூறிவிட்டு அப்பா வெளியே சென்றார். அந்த வருடம் எங்களுடைய ஓணம் கண்ணீரில் நனைந்ததாக இருந்தது.

திருவோண நாளன்று மதியத்திற்குப் பிறகு குஞ்ஞண்டாரன் வந்தான்.

குஞ்ஞண்டாரன் அப்பாவின் வீட்டின் பணியாள்.

ஓணத்திற்கான பழம், காய், பூசணிக்காய் ஆகியவற்றை குஞ்ஞண்டாரனை வைத்து தூக்கச் செய்தவாறு அப்பா பூராடச் சந்தையிலிருந்து திரும்பி வருவார்.

நாங்கள் அப்பாவை எதிர்பார்த்துக் காத்திருந்தோம்.

எங்களுடைய தந்தை மட்டும் வரவில்லை. ராகவன் அண்ணனும் கொச்சு கோவிந்தனும் சாரதாவும் சாந்தாவும் அரவிந்தாக்ஷனும் அம்புஜமும் புத்தாடைகள் அணிந்து வறுக்கப்பட்ட பழத் துண்டுகளைத் தின்றவாறு நடந்து திரிந்தார்கள்.

நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம். அப்பா ஏன் வரவில்லை...

கடவுளே?

அப்போதுதான் குஞ்ஞண்டாரனின் வருகை...

"பெரிய தம்புரான் எங்கு இருக்கிறார்?''- குஞ்ஞண்டாரனின் தொண்டை இடறியது. மதியம் சாப்பிட்டுவிட்டு பெரிய மாமா தன் மனைவியின் வீட்டிற்குச் சென்றிருக்கிறார்.

இன்னும் திரும்பி வரவில்லை.

"குஞ்ஞிகிருஷ்ணன் தம்புரான் இங்கு இருக்கிறாரா?''-

சின்ன மாமாவை விசாரிக்கிறான்.

"என்ன விசேஷம்... குஞ்ஞண்டாரா?''

"ஒண்ணுமில்ல... சின்ன தம்புரான்.''- அவனுடைய கண்கள் ஈரமாக இருக்கின்றனவோ? ஏதோவொரு இயல்பற்ற நிலை அங்கு ஒட்டுமொத்தத்தில் இருக்கிறது. சின்ன மாமாவைச் சதுரங்கம் விளையாடிக்கொண்டிருந்த இடத்திலிருந்து அழைத்துக்கொண்டு வந்தேன்.

குஞ்ஞண்டாரன் ஒரு கடிதத்தைக் கொடுத்தான்.

கடிதத்தை அவசர அவசரமாக வாசித்தார். முகத்தில் உணர்ச்சிகள் மாறின. சின்ன மாமா தாடையில் கையை வைத்தவாறு பெஞ்சின் மீது குனிந்து அமர்ந்திருந்தார்.

"என்ன விசேஷம்?''- அம்மா கேட்டாள்.

"கிருஷ்ணன் குட்டியின் அப்பா...''- முழுமை செய்யவில்லை.

அதற்கு முன்பே கண்களைத் துடைப்பதைப் பார்த்தேன்.

தொடர்ந்து அம்மாவின் கூப்பாடு கேட்டது. ஆமாம்...

எங்களின் அப்பா அரளி விதையைத் தின்று இறந்து விட்டார். உத்திராடம் நாளன்று இரவில் அது நடந்திருக்கிறது.

நாங்கள் அனாதைகளாக ஆகிவிட்டோம். எங்களுக்கு தெய்வம் கூட துணையாக இருக்கவில்லை.

பிரிக்கவோ ஒடிக்கவோ முடியாத இரு குழந்தைகள்...

இதயத்தையே இழந்து விட்ட...

வேண்டப்பட்டவர்கள் என்று கருதப்படும் சிலரின் கூட்டம்...

எங்களை வளர்ப்பதற்காக அம்மா எந்த அளவிற்கு கண்ணீரைக் குடித்திருப்பாள் என்ற விஷயம் தெரியுமா? வாழ்க்கைப் பயணத்தில் எங்களை இடுப்பில் வைத்தவாறு அம்மா கஷ்டங்களுக்கு மத்தியில் நீந்திக் கொண்டிருந்தாள். கைகளும் கால்களும் வேதனித்தன.

எனினும், எங்களை இதயத்தின் இடது பக்கத்திலும் வலது பக்கத்திலும் வைத்தவாறு வாழ்வெனும் கடலின் கரையை அடைவதற்காக அம்மா நீந்தித் துடித்தாள்.

ஒரு வெளுத்த துணியை அணிவதற்காக அம்மா ஆசைப்பட்டாள்.

இறப்பது வரை அம்மாவின் கண்களில் கண்ணீர் வருவது நிற்கவில்லை. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகள் வேறுபட்ட நிலையில் வாழ்வது...! உணவு சாப்பிட்டு வெறுத்துப்போன பிள்ளைகள்... ஒரு பிடி சோறு உண்பதற்காக ஏங்கும் பிள்ளைகள்! என்ன ஒரு கொடுமை!

ஜோதிடம் சம்பந்தப்பட்ட விஷயங்களை தலைக்குக் கீழே வைத்தவாறு இரவிலும் பகலிலும் படுத்துறங்கிக் கொண்டிருந்த பெரியம்மாவின் கணவருக்கு பல வகைகளிலும் என் தந்தை உதவியிருக்கிறார். கையில் காசு இல்லாத வேளையில் பத்தும் பதினைந்தும் கொடுத்து உதவியிருக்கிறார்.

உடுத்த ஆடையில்லாமல் கவலையில் மூழ்கியிருந்த என் பெரியம்மாவிற்கு முழக் கணக்கில் துணி தந்து உதவியிருக்கிறார்.

என் தாய் இறப்பது வரை ஈரத் துணியுடனே வாழ்ந்தாள்.

பெட்டியில் எத்தனையோ துணிகளை பெரியம்மா அடுக்கி வைத்திருந்தாள்.

ஆனால், இரக்கம் அவளைத் தொடவில்லை.

உயிருடன் இருந்தபோதே பெரும்பாலும் இறந்து விட்ட ஒரு தாய்க்கும் அவளுடைய ஆதரவற்ற பிள்ளைகளுக்கும் மிகவும் அதிகமாக துரோகம் செய்தது அந்த ஜோதிடரும், ஜோதிடரின் மனைவியான என் பெரியம்மாவும்தான்.

அணிந்திருப்பதற்கு மாற்றுத் துணி இல்லாமல் இடுப்பில் கட்டியிருப்பதையே உலர வைத்து, நனைந்த கண்களுடன், திருநீறு பூசி தெய்வத்தின் பெயரை உச்சரிப்பதற்காக அமர்ந்திருக்கும் என் தாய், வேதனையின் அடையாளமாக இருந்தாள்.

"துன்பத்திலிருந்து கரையேற்றிடணும்.... கருணை வடிவமான பகவானே!''- அம்மா சந்தியா நாமத்தைக் கூறும்போது, தொண்டையில் நரம்பு புடைத்து நிற்பதும், நெஞ்சு எழுவதும் தெரியும்.

பள்ளிக்கூடம் விட்டு வந்தால், முதலில் குளிக்க வேண்டும்.

குளிக்காமல் உள்ளே நுழையக் கூடாது. கூடை மூழ்குவதைப்போல சற்று மூழ்கி விட்டு வந்து, சமையலறையில் ஈ இறந்து கிடக்கும் கஞ்சி நீரை எடுத்து பருகுவேன். காயப் போட்டிருக்கும் அழுக்கு புரண்ட கிழிந்த கோவணத்தை அணிந்து, திருநீறு டப்பாவிலிருந்து ஒரு கிள்ளு திருநீறை எடுத்து நெற்றியின் மீது பூசிக்கொண்டு அம்மாவின் இடது பக்கத்திலும் வலது பக்கத்திலும் அமர்ந்து நாங்களும் பிரார்த்திக்க ஆரம்பிப்போம்.

"துன்பத்திலிருந்து கரையேற்றிடணும்.... கருணை வடிவமான பகவானே!''

கனிவு மனம் கொண்ட ஒரு தெய்வம் பிரபஞ்சத்தை நிர்வகிப்பதற்கு இருந்திருந்தால், நாங்கள் இந்த அளவிற்கு நெருப்பைத் தின்றிருக்க மாட்டோம்.

நாங்கள் தெய்வத்தின் நாமத்தை உச்சரிப்பதற்காக அமரும்போது, பெரியம்மா உள்ளேயிருந்தவாறு அழைத்து கூறுவாள்: "ஓ... புலம்பல்கள் ஆரம்ப மாயிடுச்சு... சாயங்கால வேளையில் இந்த பாழாய்ப் போனதுகள் இப்படி கூப்பாடு போட்டால், இந்த குடும்பம் சீக்கிரமே நாசமாயிடும்...''

நாமத்தை உச்சரித்தால் குடும்பம் நாசத்திற்கு வந்துவிடும் என்று நினைக்கக்கூடிய இடத்திற்கு பெரியம்மா முன்னேறியிருந்தாள்.

சாயங்கால வேளை வந்துவிட்டால், மாளு சித்தியின் அறையிலிருந்து கிராமஃபோன் பாட்டு களைக் கேட்கலாம்.

பலவற்றையும் புரிந்துகொள்கிறேன். தம்பி ஒரு அப்பாவி. அவனுக்கு அந்த அளவிற்கு சிந்தனைகள் இல்லை.

மாளு சித்தியும் ஜானு சித்தியும் பெரியம்மாவும் அத்தைமார்களும் ஒவ்வொன்றைக் கூறி சிரிப்பதைப் பார்க்கலாம். மதியம் சாப்பிட்டு முடித்த பிறகு, ஊரிலிருக்கும் ஒவ்வொரு பெண்களைப் பற்றியுமுள்ள மோசமான பேச்சுகள்தான்... அது முடிந்த பிறகு, பங்கு சேர்த்து சாப்பிடக்கூடிய திட்டத்தைச் செயலாக்கும் முயற்சியில் இறங்குவார்கள்.

அவர்களில் யாராவது ஒருத்தி பிரச்சினையை எழுப்பி கூறுவாள்: "நாம கொஞ்சம் கள்ளப்பம் தயாரிக்கலாமா?'' "மாளு வயித்துல உண்டாகி இருக்காள்ல?''

-பட்ஜெட்டிற்கு ஒப்புதல் கிடைப்பதற்காக பெரியம்மா, கர்ப்பமாக இருக்கும் மாளு சித்தியைக் கருவியாக ஆக்குவாள்.

மொத்தத்தில் வரக்கூடிய செலவுகளைக் கணக்கிடுவார்கள்.

ஆறு படி அரிசி, ஏழு ராத்தல் சர்க்கரை, நான்கு தேங்காய்கள், மூன்று குப்பி கள்ளு- இத்தனை பொருட்களும் தவிர்க்க முடியாதவை.

உப்பையும் வெங்காயத்தையும் வீட்டிலிருந்து எடுத்துக்கொள்ளலாம்.

ஒவ்வொருவரின் பங்கும் தீர்மானிக்கப்படும்.

"ஜானு சர்க்கரைக்குப் பொறுப்பேற்கட்டும்.''- பெரியம்மா கூறுவாள்.

"தேங்காய்க்கான பொறுப்பை மாளு எடுத்துக் கொள்ளட்டும்.'' சோர்வடைந்து காணப்படும் மாளு சித்தி சம்மதத்தை வெளிப்படுத்துகிற வகையில் முனகுவாள்.

"இனி வேண்டியவை... கள்ளும் அரிசியும்தான்.''

அப்போது வெளுத்த மல் மல் துணியையும், சிவப்புநிற கல் பதித்த கம்மலையும் அணிந்திருக்கும் பெரிய அத்தை வருவாள்.

"என்ன... பகல் வேளை மீட்டிங்?''- சற்று கனமான குரலில்... தனக்கு ஊரிலும் வீட்டிலும் ஒரு உயர்ந்த இடம் இருக்கிறது என்பதைக்காட்டும் வகையில் அந்த பேச்சு இருக்கும்.

"ஒண்ணும்ல அத்தை. மாளு வயித்துல உண்டாகி இருக்காள்ல? கொஞ்சம் கள்ளப்பம் தயாரிச்சு கொடுக்கலாம்னு நினைச்சோம்.''

"அதுக்கு இப்போ என்ன பிரச்சினை?''

"அரிசி விஷயத்துலதான் சிக்கல்...''- குரலைச்சற்று தாழ்த்தி வைத்தவாறு பெரியம்மா பவ்யமாகக் கூறினாள்.

"அரிசி விஷயத்தை நான் பார்த்துக்குறேன்.''- தானிய அறையின் சாவி அவளுடைய கணவரின் அறையில்தானே இருக்கிறது? அதை எடுப்பதற்கு அந்த அளவிற்கு சுதந்திரம் வேறு யாருக்கும் இல்லை.

"அத்தை... நீங்க நினைச்சால் மட்டுமே அது நடக்கும்ன்ற விஷயம் எங்களுக்கு முன்பே தெரியும்.''- அத்தை மேலும் ஒரு அங்குலம் உயர்ந்தாள்.

வேண்டியதை வேண்டிய வகையில் கூறுவதற்கு பெரியம்மாவிற்குத் தெரியும்.

கள்ளப்பத்திற்கு கள்ளு தவிர, அனைத்தும் தீர்மானிக்கப்பட்டு விட்டன.

"கள்ளுக்கான பொறுப்பைப் பெரிய அக்கா எடுத்துக்கொள்ளட்டும்.''- ஜானு சித்திதான் இந்த கருத்தை வெளியிட்டாள்.

"எனக்கு எங்கிருந்துடீ கள்ளு கிடைக்கும்?''

"கள்ளு கிடைக்கும். குட்டாப்பு அங்கு தயார் பண்றான்.''

"நமக்கு வேண்டியதைப்போல அதை அவன் செய்வானாடீ...

மகளே?''

அந்த காசும் ஜானு சித்தியின் கையிலிருந்துதான் என்பதுதான் விஷயமே.பெரியம்மா காலணா செலவழிக்கமாட்டாள்.

அனைத்திலும் பங்கு மட்டும் இருக்கும்.

பிறகு... கள்ளப்பம் தயாரிக்கும் பரபரப்பு உண்டானது.

குத்துகிறார்கள்...

இடிக்கிறார்கள்...

தூளாக்குகிறார்கள்... இரண்டு... மூன்று நாட்களில் கள்ளப்பம் தயாராகி விட்டது. மதிய உணவு முடிந்த பிறகு, பின்பக்கத்தில் உள்ள இடை வெளியில் அமர்ந்து கள்ளப்பத்தைப் பங்கு வைத்தார்கள்.

பெரிய அத்தை, சின்ன அத்தை, சாந்தா, ரோஹிணி, அம்புஜாக்ஷி, அரவிந்தாக்ஷன்...

இவ்வாறு ஒரு பட்டியல்.

பெரியம்மாவும் மூன்று பிள்ளைகளும், ஜானு சித்தி, மாளு சித்தி... இவ்வாறு ஒவ்வொரு பங்கும் வைக்கப்படுகிறது.

‌அந்த நீண்ட பட்டியலில் மூன்று பேரின் பெயர்கள் மட்டும் இல்லை.

கல்யாணியும் பிள்ளைகளும்... அனைவராலும் வெறுக்கப்பட்டவர்கள். எல்லாரும் சூடான கள்ளப்பத்தை வாய்க்குள் போட்டு மெல்லும்போது, மாதவன் (தம்பி) எட்டிப் பார்க்கிறான்.

அவனுக்கு நாணமும் மானமும் இல்லை. சின்ன அத்தை ஒரு துண்டு கள்ளப்பத்தை மாதவனுக்குக் கொடுத்தாள். அதைக் கொடுத்தபோது, பெரியம்மா கூறினாள்: "வாய்களைப் பார்க்கும் பிறவிகள்...

நல்லா... பணத்தைச் செலவழிச்சு தயார் பண்ணியவை... நாணமோ மானமோ இல்லாத ஜந்துக்கள்...''

"அவனும் ஒரு குழந்தைதானே?''- சின்ன அத்தை கூறினாள்.

அவளுடைய இதயத்தின் ஏதோவொரு மூலையில் கனிவின் சிறிய அம்சம் எஞ்சியிருந்தது.

கள்ளப்பத்துடன் மாதவன் வந்தான்.

அம்மாவிடமும் என்னிடமும் நீட்டினான்.

"வேண்டாம், மகனே. பிள்ளைகளே... சாப்பிடுங்க''- அம்மா கண்ணீருடன் கூறினாள்.

நான் அந்தப் பக்கம் எட்டிப் பார்க்கவேயில்லை.

அது எதையும் சாப்பிடாமலே வாழ்ந்தால் போதும்.

இல்லாவிட்டால்... சாவோம். ஒரு துண்டு கள்ளப்பம் சாப்பிடுவதற்கு ஆசை இல்லாம லில்லை.

எனினும், அது எதையும் சாப்பிடக்கூடாது என்ற புரிதல் எனக்கு இருந்தது. இளம் வயதிலேயே....

அம்மா மிகவும் மெலிந்து, எலும்பும் தோலுமாக ஆகி விட்டாள். தலைமுடி உதிர்ந்துவிட்டது. கண்கள் குழிக்குள் கிடந்தன. எப்போதும் கடவுளின் நாமங்களை உச்சரித்துக்கொண்டே இருப்பதைப் பார்க்கலாம்.

அடைத்து பூட்டப்பட்டிருக்கும் ஒரு சிறிய அறைக் குள் மூடப்பட்டுக் கிடக்கும் பதுங்கு குழியைப்போல அம்மாவின் இதயத்தில் ஏதோவொன்று நிசப்தமாக முழங்கிக் கொண்டிருந்தது.

யாரிடமும் பேசுவதில்லை.

காலையில் எழுந்து குளிப்பாள். திருநீறு பூசி ராமாயணத்துடன் இருப்பதைப் பார்க்கலாம். மதியம் எதையாவது அள்ளித் தின்றால் ஆனது.

வாரத்தில் பெரும்பாலான நாட்களில் ஒரு பொழுது விரதமோ வேறு ஏதாவது விரதமோ இருக்கும்.

எங்களைவிட்டு அம்மா போய்விடுவாளோ என்ற பயம் எனக்குள் எப்படியோ நுழைய ஆரம்பித்தது. நேரம் கிடைக்கும்போது, அம்மாவின் அருகில் சென்று அமர்ந்திருப்பேன்.

எங்களிடம் கூறுவதற்கு அம்மாவிடம் என்னவோ இருந்தது. ஆனால், எதுவுமே கூறவில்லை.

அன்று... வைகுண்ட ஏகாதசி கடந்து... துவாதசி.

காலையில் எழுந்து குளித்துவிட்டு, திருமங்கலத்தில் உள்ள சிவன் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டுவிட்டு வந்தேன்.

"கிருஷ்ணன் குட்டி... என் மகனே!''- என்னை அழைத்தாள்:

"இன்னைக்கு நீ பள்ளிக்கூடத்துக்குப் போகவேண்டாம்.''

எந்தச் சமயத்திலும் அம்மா அதை மட்டும் முடக்கியதில்லை.

உடுத்துவதற்கு இல்லையென்றாலும், பருகுவதற்கு இல்லையென்றாலும் பள்ளிக்கூடத்திற்குச் செல்வதை நிறுத்தவே கூடாது என்றுதான் அம்மா கூறியிருக் கிறாள்.

பொழுது கிட்டத்தட்ட மதியம் ஆனது. தனக்கு தலை சுற்றுவதாக அம்மா கூறினாள். கூடத்தில் பாயை விரித்து படுக்கச்செய்தேன். "மகனே... கொஞ்சம் துளசித் தீர்த்தம் கொடு...'' துளசித் தீர்த்தத்தைக் கொடுத்தேன்.

"என் மகனே...பக்கத்துல உட்காரு.''

என் நெற்றியைச் சிறிது நேரம் அம்மா தடவினாள்.

"மாதவன் எங்கு போயிட்டான்... மகனே?'' "பள்ளிக்கூடத்துக்குப் போயிருக்கான்.'' மயக்கத்தில் கிடப்பதைப்போல சிறிது நேரம் கிடந்தாள். கண்கள் நிறைந்திருந்தன. உள்ளேயிருந்து ஒவ்வொருவராக வந்துபார்க்க ஆரம்பித்தார்கள்.

"அம்மாவுக்கு முடியல... மகனே. தாங்க முடியாத அளவுக்கு தாகம்...'' அதைக் கூறியபோது, முகத்தில் இனம் கூறமுடியாத உணர்ச்சிகளின் பரவல் தெரிந்தது.

நான் விழித்துக்கொண்டிருந்தேன். என்னால் அசைய முடியவில்லை.கைகளும் கால்களும் குழைந்தன.

"மாதவன் எப்போ வருவான்?''

"இப்போ வந்திடுவான்... அம்மா''.

"நான் அவனைப் பார்க்கணுமே... கண்ணு.''

"அவன் இப்போ வந்திடுவான்.''

மணி நான்கு ஆனது. பள்ளிக்கூடம் விடக்கூடிய நேரம் வந்துவிட்டது.

என்னிடம் ராமாயணத்தை வாசிக்கும் படி கூறினாள். நான் எந்திரத்தனமாக வாசித்தேன்.

அம்மாவின் கண்கள் மேல்நோக்கி உருண்டு... உருண்டு போய்க் கொண்டிருந்தன.

அருகில் வரும்படி சைகை செய்தாள். அருகில் சென்றேன். இரண்டு கைகளையும் சிறிது நேரம் என் தலையில் வைத்தாள். அந்த மெலிந்த கைகள் தலையிலிருந்து நழுவி விழுந்தன. உதடுகள் விரிந்தன.

ராமேஸ்வரத்தின் தீர்த்தத்தில் கொஞ்சத்தை எடுத்து வாயில் புகட்டினேன். உதடுகள் கோணின. கண்கள் மூடின.

நான் உரக்க அழுதேன். மற்றவர்கள் ஓடி வந்தார்கள்.

மாதவன் பள்ளிக்கூடம் விட்டு வந்தபோது, தெற்குப் பக்க திண்ணையில் அம்மாவைப் படுக்க வைத்திருந்தார்கள். நெடுநீளமாக... தெற்கு வடக்காக படுக்கச் செய்திருந்தார்கள்.

முகம்வரை ஒரு வெண்ணிறத் துணியால் மூடப்பட்டிருந்தது. தலைப்பகுதியில் ஒரு குத்துவிளக்கு எரிந்துகொண்டிருந்தது.

இடது பக்கமும் வலது பக்கமும் கால் பகுதியிலும் ஒவ்வொரு தேங்காய் முறிகள்... அதில் தேம்பி அழுத வாறு எரிந்துகொண்டிருக்கும் கொஞ்சம் திரிகள்...

"என் அம்மா... எங்களுக்கு இனி யாரும் இல்லையே?''- தம்பியின் வெடித்த அழுகை...

உள்ளேயிருந்து சத்தத்தை அழுத்திப் பிடித்த பேச்சு..

"அவள் அதிர்ஷ்டம் செய்தவள். இன்னைக்கு வைகுண்ட ஏகாதசி கடந்த துவாதசி.''- சின்ன மாமா கூறினார். ஒரு மாமரம் பற்றிய சர்ச்சை காதில் விழுந்தது.

"சிறிய மாந்தடி போதும்.''

"சரியா இருக்காது. பெரிய மாந்தடி வேணும்.''-சின்ன மாமா கூறினார்.

"ஏன்? தேவையில்லாமல் அந்த அளவிற்கு பெரிய மரத்தை வெட்டி அறுக்கணுமா? போதாததற்கு... வருடா வருடம் காய்க்கும் மாமரம் அது.''

"அவளுக்காக பெரிதாக யாரும் எதுவும் செல வழிக்கலையே? இதற்காகவாவது... பிணம், சாம்பலாக உதவக்கூடிய விறகைக் கொண்ட மாமரத்தை வெட்டணும்.''- சின்ன மாமா உறுதியான குரலில் கூறினார்.

மாமரத்தை வெட்டினார்கள்.

எந்திரத்தனமாக நாங்கள் என்னவோ செய்தோம். ஒரு புதிய பானை உடைக் கப்பட்டது. ஒரு உடைக்காத தேங்காயின் மேற்பகுதியில் ஆணியை அடித்தார்கள். என் அம்மாவின் நெஞ்சில் நானும்கூட ஆணியடிக்க வேண்டுமோ? பின்னோக்கி திரும்பி நின்று அம்மாவின் நெஞ்சில் இறுதியாக நெருப்புக் கொள்ளியை வைத்தேன்.

பயங்கரமான புகை மலைகள் மேல் நோக்கி உயர்ந்து சென்றன. பற்றிப் பற்றி தீ படர்கிறது. வெடித்தல்கள்.... சீற்றல்கள்.... சதை கரிந்த வாசனை காற்றில் பரவியது.

மறுநாள் நனைந்த அதிகாலை வேளையிலும் வெப்பம் குறைந்திராத சிதையிலிருந்து என் அம்மா வின் இதயத்தில் எரிந்து புகைந்து கொண்டிருந்த சிந்தனைகளைப் போல புகைச் சுருள் மேல் நோக்கி உயர்ந்து கொண்டிருந்தது.

பெரிய சிறகுகளைக்கொண்ட ஒரு பிரம்மாண்ட பறவை அந்த சிதை மேடைக்கு மேலே பறந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். தெற்கு திசையிலிருந்த தூணில் சாய்ந்து நான் அமர்ந்திருந்தபோது, ரோமம் நிறைந்த ஒரு முரட்டுத்தனமான தடித்த கை என் மீது தடவியவாறு கூறியது:

"நீ கவலைப்படாதே. இங்கு நான் இருக்கிறேன்.'' திரும்பிப் பார்த்தபோது, கண்டது... சின்ன மாமாவை