ஓய்வுபெற்ற தமிழ்ப் பேராசிரியர் முனைவர் நா.நளினிதேவி எழுதிய, "புறநானூறு தமிழரின் பேரிலக்கியம்', "காதல் வள்ளுவன்', "என் விளக்கில் உன் இருள்' ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா, நக்கீரன் ஆசிரியர் தலைமையில் ’டிஸ்கவரி புக்பேலஸ்’ வேடியப்பன், ’ஓவியா பதிப்பகம்’ கவிஞர் வதிலை பிரபா ஆகியோர் முன்னிலையில் நடந்தது. ஆரூர் தமிழ்நாடன் வரவேற்புரையாற்ற, நூலாசிரியர் பற்றிய அறிமுக உரையை முனைவர் ஜோதிமீனா வழங்கினார். நிகழ்ச்சியை முனைவர் ஆதிரா முல்லை நெறிசெய்து, தனது தேன்கசியும் குரலால் தொகுத்து வழங்கினார்.
நூல்களை அருள்திரு பிலிப் சுதாகர், முனைவர் ய.மணிகண்டன், கவிஞர் ஜெயபாஸ்கரன் ஆகியோர் வெளியிட, அவற்றின் முதல் படிகளை கவிஞர்களான பாரதி பத்மாவதி, மனோகரி மதன், நர்மதா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
வெளியீட்டுரை நிகழ்த்திய அருள்திரு பிலிப் சுதாகர் ""புறநானூற்றில் ஒரு அகழ்வாராய்ச்சியையே நடத்தி புதிய புதிய தகவல்களைத் தந்திருக்கிறார் நளினிதேவி.
ஈழத் தமிழர்களிடம் நாம் பார்த்த வீரம், புறநானூற்று கால வீரத்தின் தொடர்ச்சி என்றும் அவர் நிறுவியிருக்கிறார். போர் இலக்கியமாகக் கருதப்படும் புறநானூறு போருக்கு எதிரான அறத்தையே உயர்த்திப் பிடிக்கிறது என்பதையும் நளினிதேவி நிறுவியிருக்கிறார்.
இவருடைய ஆய்வு தமிழுலகத்தில் தனித்துவம் மிக்கதாகத் திகழ்கிறது'' என்று பாராட்டினார்.
உற்சாகமாக மைக் பிடித்த கவிஞர் ஜெயபாஸ்கரன், ""இதழியல் போராளியின் தலைமையில் ஒரு இலக் கியப் போராளியின் நூல் வெளியீட்டு விழா நடப்பது மிகவும் பொருத்தமானது. முனைவர் நளினிதேவி பல்வேறு சோதனைகளுக்கு நடுவிலும் விடாமல் எழுது கிறார்... தொய்வில்லாமல் எழுதுகிறார்... அக்கறை யோடு எழுதுகிறார்... எனக்குத் தொழில் எழுத்து என்றபடி எழுதுகிறார் என்றால் வியக்காமல் இருக் கமுடியாது. பெண்ணியம் பேசும் இவரது எழுத்துக்குத் தலைவணங்குகிறேன்'' என்றவர், நளினிதேவியின் கவிதையோடு, நக்கீரன் ஆசிரியரை ஒப்பிட்டுக்காட்டி அரங்கை கையொலியால் அதிரவைத்தார்.
முனைவர் ய.மணிகண்டனோ,’""நாங்கள் எங்கள் பல்கலைக்கழக வாழ்வில் அறிஞர்கள் பலரையும் பார்க் கிறோம். அவர்களில் கவனத்தில் கொள்ளத் தக்கவராக, உயர்த்திப் பிடிக்கத் தக்கவராக முனைவர் நளினிதேவி இருக்கிறார். இவர் பெரும் பேராசிரியர். மிகச்சிறந்த ஆராய்ச்சி அறிஞர். தனித்தன்மை கொண்ட கவிஞர். உ.வே.சா. புறநானூறைக் கண்டுபிடித்துத் தொகுத்துத் தராவிட்டால், உலகிற்கு தமிழரின் பண்பாடும் நாகரிகமும் தெரியாமலே போயிருக்கும் என்பார் வ.ஐ.சுப்பிரமணியன். அப்படிப்பட்ட புறநானூறைப் பற்றி அரிய ஆய்வு நூலை நளினிதேவி தந்திருக்கிறார். வள்ளுவன் என்றால் அவன் நீதிப்புலவன் என்றுதான் பலரும் எண்ணுகிறோம். அவன் மிகப்பெரிய காதல் கவிஞன் என்பதை, கலீல் கிப்ரானைப் போன்ற கவித்துவ மொழிநடையில் நளினிதேவி தந்திருப்பது போற்று தலுக்குரியது. இவரது மொழி ஆளுமையும் வியப்புக் குரியதாக இருக்கிறது'' என்று சிறப்பித்தார்.
விழாவில் நட்புரையாற்றிய முனைவர் இராம.குருநாதன், ""முனைவர் நளினிதேவி அவர்களை முப்பது ஆண்டுகளாக நான் அவரது எழுத்துக்களின் வழியாக அறிவேன். என் நெருங்கிய நண்பர் எழுத்தாளர் சு.சமுத் திரத்தின் சிறுகதைகளைப் பற்றி மிகவும் நுட்பமாக ஆய்வு செய்து எங்களை வியக்க வைத்தவர் இவர். இவரது பன்முகத்திறன் பாராட்டுக்குரியது. பன்முகத்திறமையின் அடையாளமாகத் திகழ்கிறவர் இவர். வானம் பொது. பறப்பது என் உரிமை என்று விடுதலைக் குரலைக் கவிதையாக்கிய இவரைப் பாராட்டுவது தமிழுல கத்தின் கடமையாகும்'' என்றார் உற்சாகமாக.
நடிகர் ஜோ மல்லூரி அன்புரை ஆற்றினார்.
அப்போது, ""புறநானூற்று வீரத்தைத் தமிழகம் 2 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு பார்த்தது. அதை 21 ஆம் நூற்றாண்டில் நக்கீரன் கோபால் வழியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது. பத்திரிகை மீது ஆசை வைத்தவர்கள் உண்டு. அதற்கு மீசை வைத்துப் பார்த்தவர் நக்கீரன் கோபால் மட்டும்தான். அதனால் தான் அதற்கு இத்தனை துணிச்சல்'' என்று கைத்தட்டலால் அரங்கை அதிரவைத்த மல்லூரி, முனைவர் நளினிதேவியின் படைப்புத் திறனைப் பாராட்டினார். தலைமை உரையாற்றிய நக்கீரன் கோபால், ""கருத்துச் சுதந்திரம் இன்று கேள்விக்குறியாக் கப்படுவது பற்றியும், தான் அண்மையில் கைது செய்யப்பட்ட விதம் பற்றியும் விவரித்ததோடு...’முனைவர் நளினிதேவியின் நூல்கள் தமிழுக்குக் பெரும்பேறாய்க் கிடைத்திருக்கிறது. உடல் தரும் இடர்களைப் பொருட்படுத்தாமல் அவர் ஒரு போராளி யாக சமுக ஊடகங்களிலும் தமிழினத்துக்காக எழுதிக் கொண்டிருக்கிறார். அதனால் அவரை வணங்கி வாழ்த்துகிறேன்''’’ என்று பாராட்டினார்.
நிறைவாக சிறப்புரையாற்றிய மகாகவி ஈரோடு தமிழன்பன்... ""தன் ஆளுமையைத் தன் படைப்புகள் மூலம் நிரூபித்திருக்கிறார் நளினிதேவி. அவரை முதன்முதலில் மார்க்சிய அறிஞர் கோவை ஞானி மூலம்தான் அறிந்தேன். அவருக்கு நவீன ஔவை என்கிற பட்டம் கொடுக்கப்பட்டிருப்பது பொருத்தமானது. ஏனெனில் சங்க இலக்கிய ஔவை, கிரேக்க நாட்டு அறிஞன் சக்கோவுக்கு இணையாகக் கருதப்படுகிறவர். நான் ஒருமுறை அமெரிக்கா போனபோது அங்கே பிலடெல்பியாவில் இருக்கும் அறிவியல் மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கே ஒவ்வொரு தளத்திலும் ஒவ்வொரு அருங்காட்சியகம் இருந்தது. மூன்றாவது தளத்தில் வானியல் ஆய்வு தொடர்பான அருங் காட்சியம் இருந்தது. அதன் முகப்பில் பொறிக் கப்பட்டிருந்த இருந்த இரண்டு வரிகளைப் பார்த்து திகைத்து நின்றுவிட்டேன். அது ’கற்றது கையளவு கல்லாதது உலகளவு’ என்கிற ஔவையின் வரிகள். அறிவியல் வளர்ச்சி இல்லாத காலத்தில் வாழ்ந்த ஒரு தமிழச்சியின் சிந்தனை எவ்வளவு தூரம் சென்றிருக்கிறது என்று வியந்தேன். அப்படிப்பட்ட உலகம் தழுவிய சிந்தனை மரபில் புதிதாகச் சிந்திக் கிறவர் நளினிதேவி. அவரது புறநானூறு குறித்த ஆய்வுப் பார்வை மாறுபட்ட கோணத்தில் சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது. அவரது வாழ்க்கை வரலாறும் கதைப்போக்கில் எழுதப்பட்டிருக்கிறது. இதில் பல தகவல்கள் இருக்கின்றன. இதை உலகத் தமிழர்கள் வாங்கிப் படிக்க வேண்டும். நளினிதேவி தமிழர் களால் கொண்டாடப்பட வேண்டியவர்'' என்று பாராட்டினார்.
விழாவில் நளினிதேவிக்கு ஈரோடு தமிழன்பன் அறிவுலகின் நவீன அவ்வை’ என்ற விருதை வழங்கினார். நளினிதேவி ஏற்புரையாற்ற, கவிஞர் ஜலாலுதீன் நன்றியுரை ஆற்றினார்.
இந்த விழாவில், இயக்குநர் பிருந்தாசாரதி, நடிகர் அமர சிகாமணி, கவிஞர் அமுதபாரதி, ’"தமிழ் இந்து'’ மானா.பாஸ்கரன், ’"புதிய தலைமுறை' சுந்தர புத்தன், அரிமா.நா.கார்த்திகேயன், விமலா கார்த் திகேயன், முனைவர் மலர்க்கொடி, நா.சிவகாமசுந்தரி, கவிஞர் திருவாரூர் சுப்பிரமணியன், கவிஞர் வீரசோழன் திருமாவளவன், கவிஞர் அன்புச் செல்வி சுப்புராஜ், கவிஞர் பெருமாள் ஆச்சி, முனைவர் கலையரசி ஆகியோர் கலந்துகொண்டனர்.
-சூர்யா