உலக வரைபடத்தில் புதுச்சேரி என்பது ஒரு சிறு புள்ளிதான். ஆனால் அந்த ஒரு புள்ளியில் மிகப்பெரிய புள்ளிகள் வாழ்ந்திருக்கின்றனர். அப்படிப்பட்டவர்களில் எழுத்துப் போராளி, மக்கள் எழுத்தாளர், தோழர் பிரபஞ்சன் அவர்கள் சிறப்பிடம் பெறுவார். .
புதுச்சேரியின் இலக்கிய அடையாளமாக அறியப்பட்டவர் பாவேந்தர், வாணிதாசன், தமிழ் ஒளி, புதுவைச்சிவம். அந்த வகையில் உரைநடை இலக்கியத்தில் தோழர் பிரபஞ்சன் அவர்கள்தான்.
இலக்கியம், எழுத்தாளர்கள், என்றாலே அது பல்வேறு முரண்பாடுகளைக் கொண்டதாக மாறிவிட்டது. இருந்தும் எல்லோராலும் அன்பு செலுத்தக்கூடிய, நட்பு போற்றக்கூடிய ஒருவர் இருந்தார் என்றால் அவர் பிரபஞ்சனாகத் தான் இருக்க முடியும் என நம்புகிறேன்.
அதே போல் இளைஞர்கள், பெரியவர்கள் என எந்த வேறுபாட்டு அளவுகோலும் இல்லாமல் அனைவரோடும் தோழமையோடு பழகும் அவரின் பாங்கு வியக்க வைக்கும்.
தனி மாந்த ஒழுக்கம் என்பதைக் காட்டிலும் சமூக ஒழுக்கம் வேண்டும். நம் வாழ்க்கை அன்பின் பொருட்டே இயங்கிக் கொண்டிருக்கிறது. நாமனைவரும் அன்பைப் பரிமாறவே எழுதிக்கொண்டிருக் கிறோம். அன்பு என்பது உலகின் பழைய சொல்லாக இருந்தாலும் அதுபோல் வலிய சொல் வேறில்லை. இவை அன்பு குறித்த அவரின் வாழ்வியல் பார்வை.
எல்லா எழுத்தாளர்களுக்கும், பேச்சாற்றல் வாய்ப்பதில்லை. ஆனால் பிரபஞ்சன் அவர்களின் எழுத்தைப் போலவே அவர் பேச்சும் அனைவரையும் ஈர்க்கும் தன்மை வாய்ந்தது. அவர் ஒரு சிறந்த கதைசொல்லியும் கூட. எத்தனை முறை அவர் ஒரே கதையைச் சொன்னாலும் நமக்குச் சலிக்காமல், முதல் முறை கேட்பது போன்ற உணர்வைத் தரும்.
புதுச்சேரியின் மீதும், பிரெஞ்சுப் பண்பாட்டின் மீதும் தீரா அன்பு கொண்டிருந்தார். அதனாலேயே அவருடைய பல சிறுகதைகளில் புதுச்சேரி எப்படியாவது நுழைந்துவிடும்.
இளம் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் அவருடைய அக்கறை மனம் நெகிழச் செய்துவிடும்.
இளம் படைப்பாளிகளுக்கு பயிலரங்கம் ஒன்று புதுச்சேரியில் நடைபெற்றது. அதில் பல சிறந்த எழுத்தாளர்கள் வந்து உரையாற்றினர்.
நான் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டவர்களுள் சிலர் நூல் எழுதி வெளியிட்டுள்ளனர் ஐயா! என்றேன்.
அதில் பங்கேற்ற இளைஞர்களை மீண்டும் ஒன்றிணைத்து அவர்கள் எழுத்து எப்படி மேம்பட்டு இருக்கிறது என்பதைக் காண வேண்டும் என்றார்.
பாண்டியன் அண்ணா, செய்யலாம் சார் என்றேன்.
தமிழ்மணி, பாண்டியன், தமிழ்மொழி ஆகியோர் அந்தப் பொறுப்பை எடுத்துக்கொள்ளுங்கள் என்றார். மீண்டும் அவர்களைச் சந்திக்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சி அவருக்கு ஏற்பட்டது.
என்னுடயை "நினைவில் வராத கனவுகள்' என்னும் புதுப்பா நூலுக்கு அணிந்துரை எழுதித் தந்தபின் ""நன்றாக இருக்கிறது தமிழ்மொழி! தொடர்ந்து எழுதுங்க. சிறுகதை எழுத முயற்சி செய்யுங்க'' என்றார்.
அவரின் தூண்டுதலின் பேரில் ஒரு பக்க அளவில் ஒரு சிறுகதை எழுதினேன். அது பிரான்சில் இருந்து வெளிவரும் தமிழ்நெஞ்சம் மின்னிதழில் இடம்பெற்றது.
ஆசிரியர்கள் மட்டுமே சிறந்த மாணவர்களை உருவாக்கப் பாடுபடுபவர்கள் அல்லர். ஒரு மூத்த எழுத்தாளரும், வளரும் இளம் படைப்பாளிகளை ஊக்குவித்து அவர்களுக்கு வழிகாட்டலாம் என்பதற்குப் பிரபஞ்சன் அவர்களே சான்று.
ஒருமுறை சிகரெட் (வெண்சுருட்டு)பிடிக்கும் பழக்கம் அவருக்கு எப்படி வந்ததென்று கேட்டதற்கு, தம் கருத்துக்கு மாற்றுக் கருத்து சொல்பவர்களுடன் முரண்படுவ தற்காக ஒரு எதிர்ப்பைக் காட்ட சிகரெட் பிடிக்கத் தொடங்கிய தாகவும், அப்படி எதிர்ப்பைக் காட்ட பிடித்த சிகரெட் எனக்கே எதிரியாகிவிட்டது என்றும் சொன்னார்.
நட்பாக இருந்தவர்கள் உறவாக மாறிப்போனார்கள், உறவாக இருந்தவர்கள் நட்பாக முடியாமல் தனித்துப் போனார்கள். இதனை இறுதிக் காலத்தில் உணர்ந்தார் பிரபஞ்சன்.
புதுச்சேரி வரலாற்றை எழுத வேண்டும் என்ற அவாவால் தன்னிடம் உள்ள புதுச்சேரி தொடர்பான நூல்களைத் தேடி எடுத்தார், மற்றவர்களிடமிருந்தும் நூல்களைத் திரட்டினார். ஆனால் நோய், அவரின் குரல்வளையை நெறித்துக்கொண்டது.
ஓர் எழுத்தாளன் தனி மாந்தனல்லன். பிரபஞ்சன் ஐயாவை இழந்ததில் மூலம், புதுச்சேரியின் வரலாறு முழுமையாகப் பதிவாகாமல் போய்விட்டது. இது புதுச்சேரி மக்களுக்கு மட்டுமின்றி, வரலாற்றுலகிற்கே பேரிழப்பு.
"நண்பர்களே!' எனத் தொடங்கும் உரையை இனி அவர் நிகழ்த்தப் போவதில்லை.
"இப்ப என்ன எழுதிட்டு இருக்கீங்க? என்ன புத்தகம் படிச்சீங்க?' என்று அவர் யாரையும் அக்கறையோடு வினவப் போவதில்லை.
"ஒரு காபி சாப்பிடலாமா சார்?' என அவர் தோழமையோடு அழைக்கப் போவதில்லை.
"பிறகு பேசலாம் சார்!' என்று அன்போடு வழியனுப்பி வைக்கப் போவதில்லை.
எனினும் பிரபஞ்சனின் எழுத்தும், அதில் படர்ந்து இருக்கும் அன்பும் எப்போதும் நம்முடன் ஓசையின்றி பேசிக்கொண்டிருக்கும்.