பலராலும் பாராட்டப்படும் ஊத்தங்கரை முத்தமிழ் இலக்கியப் பேரவை தலைவரும் கல்வியாளருமான வே.சந்திரசேகரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். அதிலிருந்து....
ஊத்தங்கரை முத்தமிழ்ப் பேரவை குறித்து?
சந்திரசேகர்: பொதுவாக தமிழ் உணர்வு, தமிழ் ஆர்வம் மக்களிடம் குறைந்துவருகிறது. அதற்கு மாறாக ஆங்கில மோகம் அதிகரித்துவருகிறது. எனவே நாம் தமிழ் உணர்வை நமத்துப் போகவிடாமல் காப்பாற்றவேண்டும் என்பதற்காகத்தான் இந்த அமைப்பைத் தொடங்கினோம். சிறந்த இலக்கியவாதிகள், கவிஞர்களை அழைத்து, அவர்கள் மூலம் இளைஞர்களிடம் தமிழ் ஆர்வத்தை விதைத்து வருகிறோம். இதயத்திற்கு இதமான பணி இது.
நினைத்ததை செயல்படுத்த முடிகிறதா?
சந்திரசேகர்: மாணவர்களிடையே ஊக்கத்தை உருவாக்கி யிருக்கிறோம். இங்குள்ள மாணவர்கள் நம் தமிழ்மொழியின் பெருமையை உணர ஆரம்பித்திருக்கிறார்கள். அதேபோல் நலிந்த கலைஞர்களை அடையாளம் கண்டு அவர்களுக்குப் பொருளாதார உதவிகளையும் செய்துவருகிறோம்.
பிள்ளைகள் மத்தியில் மொழி குறித்த விழிப்புணர் வையும் ஆர்வத்தையும் படைக்கும் ஆசையையும் ஏற்படுத்தி யிருக்கிறோம். புகழ்பெற்றவர்களின் பட்டிமன்றங்களை தொலைக்காட்சியில் பார்த்த மக்களுக்கு, மகிழ்வூட்டும் வகையில் நேரடியாக அவர்கள் மண்ணில் அவர்கள் கண்ணெதிரில் நடத்துகிறோம். இலக்கியம்,கல்வியில், பத்திரிகை, அரசியல் என சகல துறைகளிலும் சாதித்தவர்களை அழைத்து வந்து எங்கள் மக்கள் முன் பேசவைக்கிறோம். கிராமப்புறங்களில் உள்ள புதிய பேச்சாளர்களை, புதிய கவிஞர்களை ஊக்குவித்து, அவர்களுக்கு மேடை அமைத்துத் தருகிறோம்.
இதற்கெல்லாம் எந்த அளவிற்கு ஆதரவு இருக்கிறது?
சந்திரசேகர்: மக்களிடம் பெரும் ஒத்துழைப்பு இருக்கிறது. அவர்கள் இந்த அமைப்பின் பணிகளை இன்னும் அதிகம் எதிர்பார்க்கிறார்கள். கிராமப்புற மக்கள் எங்கள் நிகழ்ச்சிக்கு வந்து மொழியின் தேவை, நமது பண்பாடு போன்றவற்றை அறிந்துகொள் கிறார்கள். அவர்களின் ஆதரவு இல்லை என்றால் கடந்த 5 ஆண்டுகளை நாங்கள் இலக்கியத் தேரில் கடந்திருக்க முடியாது.
தனியார் கல்விக் குழுமத்தின் நிறுவனராக இருந்துகொண்டு கல்வி இலவசமாக வழங்க வேண்டும் என்று சொல்ல உங்களால் எப்படி முடிகிறது?
சந்திரசேகர்: வளர்ந்த நாடுகள் பல கல்வியை இலவச பட்டியலில் வைத்துள்ளன. அமெரிக்காவில் அரசு பள்ளிகளுக்குத் தான் அரசாங்கம் முக்கியத்துவம் தருகிறது.
நம் நாட்டில் படிக்க வசதியில்லாமல் திறமையான பிள்ளைகள் வாழ்க்கையை இழக்கிறார்கள். நம் நாட்டில் மட்டும் கல்விநிதியாக 28 ஆயிரம் கோடி ஒதுக்குகிறார்கள். இதைக்கொண்டு என்ன செய்கிறார்கள்? இந்த நாடு வல்லரசாக கல்வி, சுகாதாரத்தை இலவசமாக்கினால் தான் சாத்தியமாகும். நான் தனியார் கல்வி நிறுவனத்தை நடத்துவது கல்வி கிடைக்காதவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காகதான். தனியார் கல்வி நிறுவனத்தை நடத்துவதால் இலவச கல்வி கேட்கக் கூடாதா?
தொகுப்பு: து.ராஜா