ன்புள்ள இளவரசி... சற்று சிரிக்க வேண்டுமென்ற விருப்பம் இருக்கிறது. இதயம் குளிர சற்று சிரிப்பதற்கு... ஆனால், ஒரு சிரிப்பின் விலை மிகவும் அதிகமென்று எனக்குத் தெரியும்.

இது ஒரு தத்துவ சிந்தனையல்ல. ஒருவேளை... மனிதர்கள் அவ்வாறு விளக்கிக் கூறலாம். இல்லை... எனக்கு அதெல்லாம் தெரியாது. நேற்றைய இருண்ட சாயங்கால வேளையும் ஒரு பயங்கரமன இரவும் முடிந்தபிறகு, நான் கவலையில் மூழ்கியிருக்கிறேன்.

இரவில் முழுமையாக உறங்கவில்லை. தூங்குவதற்காக முன்கூட்டியே மென்மையான மெத்தையில் நீலநிறப் போர்வைக்குக் கீழே சுருண்டு படுத்திருந்தேன். தூக்கம் வரவில்லை. வந்தால்கூட என்னுடைய தோழி அனுமதிக்க வில்லை. அவளுக்கு முழுமையாக நான் கீழ்ப்படிந் திருக்கிறேன். அவள் யார்? என் இளவரசியே... நீ கேட்கலாம்... நீ என்னுடைய வாழ்க்கையிலிருந்து விலகிச்சென்றபிறகு, மெதுவாக நுழைந்த ஒரு தோழி...

அவள் கூறுவது அனைத்தையும் நான் பின்பற்று கிறேன். நீ பிரிந்து சென்றபிறகுதான் இந்த புதிய தோழி நுழைந்துவந்தாள். இங்கு வசந்த காலம் இருக்கிறது என்பதைப்போல கூறியிருக்க வேண்டும். முடியாது... இளவரசியே! நீ சுதந்திரமானவள். ஆனால், நான் மனிதர்களைப் பார்த்து பயப்பட வேண்டும். நான் கூறுவது... ஆமாம்... அவள் நுழைந்துவந்தாள். நான் அவளைப் புல்லாக நினைத்தேன். "உன்னைப்போல எவ்வளவுபேரை பார்த்திருக்கிறேன்!' என்பதைப்போல நடவடிக்கை இருந்தது. ஆனால், அவள் என்னைக் கீழ்ப்படிய வைத்துவிட்டாள். இப்போது அவள் கூறுவது அனைத்தையும் நான் பின்பற்ற வேண்டும்.

Advertisment

அவள் கட்டளையிட்டாள்: "சிகரெட் புகைக்கக்கூடாது.'

பின்பற்றத்தான் வேண்டும். அவள் கட்டளையிட்டாள்: "எழுதவோ வாசிக்கவோ கூடாது!' பின்பற்றத்தான் வேண்டும்.

மெல்லிய மூடுபனி சுற்றிலும் பரவ ஆரம்பித்து விட்டால், படுத்துக்கொள்ளவேண்டும் என்பது கட்டளை. படுப்பேன். பிறகு... அவளுடைய கொஞ்சல்கள்... அதனால், இரவு முழுவதும் தூங்கமுடியாது.

Advertisment

அறிவில்லாத என் நண்பர் கூறுகிறான்: "அனைத்தும் எனக்குப் புரிகிறது. இதில் புரிந்துகொள்வதற்கு என்ன இருக்கிறது என்று நினைக்கிறேன். உன் காதலியின் புகழ் பாடுவதற்கு ஆரம்பிக்கிறாய்.'

நான் கூறினேன்:

"என் முட்டாளான மனிதா! உனக்குத் தெரியாது. இவள் அவளல்ல. இவளுடைய உண்மையான பெயர்... இனிப்பு. ஷேக்ஸ்பியரை ஞாபகத்தில் இல்லையா? உலகப் புகழ்பெற்ற கவிஞரான அவருடைய அழகிகளான நாயகிகளை நினைவுபடுத்தக்கூடிய அழகான பெயர் இவளுக்கு இருக்கிறது.'

"ஈஸ்னோஃபீலியா.'

ஒரு நோய்.

காலையில் எழுந்தபோது, உடல் முழுவதும் வேதனையாக இருந்தது. கண்கள் கனத்துப் போய்க் காணப்பட்டன. நெஞ்சிற்குள் ஓராயிரம் மாடப் புறாக்கள் அமர்ந்திருக்கின்றன. அசைய முடியவில்லை. தாங்கமுடியாத அளவுக்கு கோபம் தோன்றியது. ஆனால், யாரிடம் கோபப்படுவது? படைத்த கடவுளிடமா? அந்த நண்பரிடம் முன்பு எனக்கு எதிர்ப்பு இருந்தது. இப்போது இல்லை. செய்துவிட்ட தன்னுடைய தவறுகளை நினைத்து, மனதில் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் அவர்மீது எனக்கு இரக்கம்தான் இருக்கிறது.

சாளரத்தின்வழியாக வெளியே பார்த்தேன். தரையை நோக்கி இறங்கிய மேகக் கீற்றுகளைப்போல பனிப்படலங்கள் தங்கிநின்றிருந்தன. ஒரு புலர்காலைப் பொழுது- எனக்கு முன்னால். புலர்காலை வேளையின் அழகைப் பற்றி கவிஞர்கள் பாடியிருக்கிறார்கள்.

water

சாளரத்தின் இரும்புக்கம்பிகளைப் பிடித்தவாறு நான் நின்றிருந்தேன்.

தூரத்தில் ஒரு மிகப்பெரிய மதிற்சுவர். மேலே கூர்மையான கண்ணாடித் துண்டுகள்... கனமான இரும்பாலான வெளிவாசல்... அதில் நிறைய முள் ஆணிகள்... அது சிறைதானே? முன்னால்... மங்கலான சுவர்களைக்கொண்ட பழைய கட்டடம் தெரிகிறது.

மஞ்சள்நிற திரைச்சீலை இல்லை.

மெல்லிய பாடல் இல்லை.

புலர்காலைப் பொழுதின் அழகு வெளிப்படவில்லை. அப்போது... அப்போதெல்லாம்... என் இளவரசியே... நான் உன்னை நினைக்கிறேன்.

இளவரசி... நீ எங்கிருக்கிறாய்?

முடியவில்லை...

சுற்றிலும் வேதனை... இனிமையான பாடலுக்கான தாகத்துடன் இருக்கிறேன். இப்போது என்னுடைய மாலைப்பொழுதுகளுக்கு வெளிச்சமில்லை.

சாளரத்தின்வழியாகப் பார்த்து நின்றவாறு, வேதனையுடன் பலவற்றையும் நினைக்கும்போது, ஒரு கதாநாயகியான பூக்காரி செல்வதைப் பார்த்தேன். பழைய கதாநாயகி... அவளுடைய பெயர் எனக்குத் தெரியாது. லீலா, பீனா, நீனா... எது வேண்டுமானாலும் இருக்கலாம். அந்த குஜராத்திப் பெண்ணின் மெலிந்த கையில் ஒரு பூக்கூடை இருக்கிறது.

அவளுடைய முகத்தில் எப்போதும் சிரிப்பு இருக்கிறது. ஒருமுறை ஒரு அடைக்கப்பட்ட கதவுக்கருகில் நின்றவாறு அவளுடைய குலுங்கல் சிரிப்பைக் கேட்டேன். அவளுடைய முகத்தில் சிரிப்பைப் பார்க்கும்போது என் கண்கள் ஈரமாகின்றன.

என் சிறிய தங்கையே... நீ அழுவதைப் பார்ப்பதற்கு நான் விரும்புகிறேன்.

அவளுடைய பூக்கூடையிலிருக்கும் பூக்கள் அனைத்திலும்... ஒருவேளை... கண்ணீர் அரும்பி நின்றுகொண்டிருக்கலாம். அவளுடைய பாவாடையின் நாடாவில் தொங்கவிடப்பட்டிருக்கும் சிறிய துணிப் பையிலிருக்கும் நாணயங்கள் உரசி சிரிக்கும்போது பூக்கள் அழாதா?

இருண்ட சிறையின் சுவர்களைப் பார்த்துப் பார்த்து மனம் வெறுப்பாகிவிட்டது. வெளியே சென்று நீண்ட நாட்களாகிவிட்டன. மனிதர்களின் கூட்டத்தையும் ஆரவாரத்தையும் பார்த்தவாறு தெருவின் வழியாக நடப்பதற்கு விருப்பம் இருக்கிறது. மைதானத் திற்கு அருகில் நிற்கலாம். பல வண்ணங்களின் அழகைக்கொண்ட பிரபஞ்சத்தை அப்போதுதான் பார்க்கிறேன். நடந்து... நடந்து இறுதியில் கடற்கரையை அடையவேண்டும். அலைகளை உண்டாக்கிக் கொண்டிருக்கும் அரபிக்கடலும்... புன்னகைக்கும் மணல்துகள்களும்... மணற்பரப்பில் எட்டு வைக்கும் சிறிய கால்களும்... அங்கு நீங்கிக் கொண்டிருக்கும் நறுமணங்களும், வண்ணங்களும்... வாழ்க்கையின் நூறு நிலவுகளை நீங்கள் அங்கு பார்க்கலாம். அந்த உலகத்தை அடையும்போது, எனக்கு பதைபதைப்பு உண்டாகிறது.

கடற்கரையின் வழியாக நடக்கும்போது, பல வருடங்களுக்குமுன் சிவந்த மெல்லிய விரல்களால் கையைப் பற்றியவாறு பாதங்களைக் கழுவிச்செல்லும் குளிர்ந்த அலைகளைப் பார்த்தவாறு எனக்கு அருகில் நின்றிருந்த ஒரு இளம்பெண்ணின் உருவம் நினைவில் தோன்றும்.

கொஞ்சுவதற்குத் தோன்றும் நினைவுகளே... உங்களுடைய கல்லறைகள் இருளில் மூழ்காமல் இருக்கட்டும்.

இந்த பொந்திற்குள் நான் அடங்கிக் கிடக்கிறேன். வெளியே... உலகத்தின் துடிப்புகளை ஏற்றுக் கொள்ளாமல்.

இன்றும் சாயங்கால வேளையில் சாளரத்தினருகில் வந்து நின்றேன். அந்த கட்டடம் இருட்டில் மூழ்கிக் கிடக்கிறது. மஞ்சள்நிறத் திரைச்சீலை போடப் பட்டிருக்கும் அந்த சாளரத்திலிருந்து புலர்காலைப் பொழுதின் அழகு வெளிப்படவில்லை. அதற்குப் பின்னா லிருக்கும் நிழல் நீங்கவில்லை. மெல்லிய பாடலின் சிறிய அலைகள் மிதந்து வரவுமில்லை.

என் அன்பிற்குரிய இளவரசியே...

அந்த மஞ்சள்நிறத் திரைச்சீலை போடப்பட்டிருக்கும் சாளரம் என் வாழ்வின் ஒரு பகுதியாக இருந்தது.

அன்று முதல்முறையாக ஒரு மெல்லிய பாடலின் சிறிய அலைகள் என் இதயத்திற்குள் மிதந்து வந்ததை நான் நினைத்துப் பார்க்கிறேன். வெளியே இருட்டும், இதயத்தில் வேதனையும் நிறைந்திருக்கும் ஒரு இரவு வேளையில், வெடிக்கப்போகும் ஒரு நீர்க்குமிழியைப்போல வாழ்வு நின்றுகொண்டிருக்கிறது. மெதுவாக... மெதுவாக... ஒரு குண்டூசியை இறக்கினால் போதும்... அவ்வாறு நினைத்து... நினைத்து அமர்ந் திருக்கும்போது, காலை நேரத்தின் பேரமைதியில் மெல்லிய பாடல் அலைகள் மிதந்து வருகின்றன... இரும்புக் கம்பிகளைப் பிடித்து நின்றுகொண்டு நான் பார்க்கும்போது, இருண்ட கட்டடம் கண்களைத் திறந்துகொண்டு நின்றிருக்கிறது. மஞ்சள்நிற திரைச் சீலையையும், புலர்காலைப் பொழுதின் அழகையும் பார்த்தேன். ஒரு நல்ல மனித உயிர் அங்கு தங்கியிருக்க வேண்டும். வெளியே இருள் மறைவதைப்போல தோன்றியது. உள்ளே வேதனைகள் நினைவில் கரைந்து... கரைந்து மறைந்து கொண்டிருக்கின்றன.

என் அன்பிற்குரிய நாயகியே... நீ யார்?

திரைச்சீலையில் தோன்றும் நிழலை மட்டும் நான் பார்த்தேன். யாரோ?

இரவில் நான் ஒரு கனவு கண்டேன். வாழ்க்கையில் எனக்கு உண்டான மிகவும் அழகான கனவுகளில் ஒன்று...

பகல் பொழுது தினமும் வெறுப்பைத் தரக்கூடியதாக இருக்கிறது. பற்றியெரிந்து கொண்டிருக்கும் வெயில்... தூரத்தில் புட்டித் துண்டுகள் பதிக்கப்பட்ட மதிற்சுவர்... கம்பீரம் கலந்த அமைதித்தன்மையுடன் அந்த கட்டடம் நின்றுகொண்டிருக்கிறது. காதுகளைக் கூர்மைப்படுத்திக்கொண்டு பார்ப்பேன். ஓசையில்லை.... அசைவில்லை...

சாயங்காலம் வருகிறது. மஞ்சள்நிறத் திரைச்சீலை தோன்றுகிறது. வெளிச்சம் மிதந்து வருகிறது. அதில் நிழல் நீங்குகிறது. தெளிவற்ற ஒரு நிழல் மட்டும்... உற்சாகத்துடன் காத்திருக்கிறேன். கேட்கிறதா?

இல்லையா?

மெல்லிய அலைகள் உண்டாக்கும் பாடல்! வெறும் தோணலா?

ஒருவேளை...

இல்லை... உண்மைதான். என் மனதிற்கு எந்தவொரு பிரச்சினையும் உண்டாகவில்லை. கவிதைகள் ஞாபகத்தில் வருகின்றன. வேண்டுமென்றால்... கூறுகிறேன். கடந்த காலத்தின் நினைவுகள் மனதில் இருக்கின்றன. செவ்வந்திப் பூக்களும், நடனப் பெண்ணும், செயற்கை முத்துக்களைக்கொண்டு உண்டாக்கப்பட்ட மாலையும்- அனைத்தையும் தெளிவாக மனதில் பார்க்கிறேன். என் அறிவுக்கு எதுவுமே நடக்கவில்லை.

உண்மைதான்...

மஞ்சள்நிறத் திரைச்சீலையில் நீங்கும் நிழலும், மெல்லிய பாடலும்... கண்கள் மூடிக்கொண்டன.

கண் விழித்தபோது, சுற்றிலும் அடர்ந்த இருட்டு... சிரிப்பும் மெல்லிய பயமும் உண்டாயின. சிறு வயது நாட்களில் கேட்ட கதை மீண்டும் உயிர் பெற்று வருகிறது. கனவுகளுக்கு என்ன அழகு இருக்கிறது! உலகத்தில் எது அழிந்தாலும், எனக்குக் கவலையில்லை. கனவுகள் அழியாமல் இருக்கட்டும்.

அழகு படைத்த இளவரசி எனக்காகக் காத்திருக்கிறாள்.

தரையில் நின்றால், ஆகாயத்தில முட்டக்கூடிய தலையைக் கொண்டிருக்கும் ராட்சசன் அவளை அள்ளியெடுத்துக் கொண்டு சென்றான். ஏழு கடல்களையும் கடந்து... ஒரு காலடி எடுத்து வைப்பதில் ஒரு கடலினை அவன் தாண்டுகிறான். நெருப்பு ஜுவாலைகள் சூழ்ந்து கொண்டிருக்கும் தீவினில் எறும்புகூட நுழைந்திராத கோட்டைக்குள் அவள் கட்டப்பட்டிருக்கிறாள். காவலுக்கு சர்ப்பங்கள்... மின்னிக் கொண்டிருக்கும் சர்ப்பங்கள்... நாக்குகள் நெருப்புக் கொழுந்துகளைப்போல... தைரியம் படைத்த இளவரசன் அவளை மீட்பதற்காக ஏழு கடல்களையும் ஏழு மலைகளையும் கடந்து, நெருப்பு ஜுவாலைகள் கொண்ட சுவரைத் தாண்டினான். உயிரைப் பணயம் வைத்து அவன் அரக்கர்களுடன் போரிட்டான். மிகவும் ஆவேசமாக நடைபெற்ற போரினை அவள் நெஞ்சு துடிக்க பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள். ரத்தம் படிந்த வாளினைக் கீழே எறிந்துவிட்டு, அவன் வெற்றிப் பெருமிதத்துடன் நின்றுகொண்டிருக்கும்போது, மென்மையான இரண்டு கரங்கள் கழுத்தில் விழுகின்றன.

ஆமாம்... அந்த இளவரசன் நான்தான்.

என் அன்பிற்குரிய இளவரசியே! நீ எங்கிருக்கிறாய்?

கண் விழித்துப் படுத்திருக்கும்போது, வேறுசில விஷயங்கள் தோன்றின. பக்கத்திலிருக்கும் யாருமற்ற வீடு ஒரு கோட்டை... அதற்குள்ளும் நெருப்பு கொழுந்துகளைப்போல உள்ள நாக்குகளை நீட்டிக்கொண்டிருக்கும் மின்னும் சர்ப்பங்கள் இருக்கலாம். என் நாயகியை யாரென்று தெரியாத ஒரு பயங்கரமான அரக்கன் அங்கு இருக்கச் செய்திருக்கிறான்.

எழுந்தபோது, முதலில் பார்த்தது ஆளற்ற வீட்டைதான். என் நாயகி அதற்குள் இருக்கவேண்டும். நீலநிறக்கற்கள் பதிக்கப்பட்ட கல் படுக்கையில், நிறைய வேலைப்பாடுகள் கொண்ட வெள்ளைநிற ஆடை அணிந்த அவள் தளர்ந்து கிடக்கிறாள். ஒருவேளை... நான் கேட்டுக்கொண்டிருக்கும் மெல்லிய பாடல், கவலைகள் நிறைந்த அந்த இதயத்தின் துடிப்புகளாக இருக்கும்.

இளவரசியே... உன் கவலைகள் முடிவுக்கு வந்துவிட்டன. விடுதலைக்கான நேரம் வந்துவிட்டது.

ஒரு இரவு வேளையில் இருட்டின் மறைவில் நான் கோட்டைக்குள் நுழைந்து செல்வேன். நெருப்பு ஜுவாலைகள் எனக்கு சர்வ சாதாரணம்... விஷத்தைக் கக்கும் சர்ப்பங்களுக்கு நான் பயப்படமாட்டேன். பிறகு... ஆகாயத்தை முட்டியவாறு நின்றுகொண்டிருக்கும் ராட்சசன்... ஆனால், பார்... கண்களைக் கூசச்செய்யும் போர் நடக்கும். நோயாளியும் கையற்றவனுமான நான் வீரம் படைத்த நாயகனாக மாறுவேன். வெற்றி என் கைகளில்... காரணம், இது தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையே நடக்கும் போர்!

கவனமாக இரு.

குளிர்ச்சி நிறைந்த சாயங்காலப் பொழுதுகள்... மஞ்சள்நிற திரைச்சீலை தோன்றுகிறது. நிழல் நீங்குகிறது. மெல்லிய பாடல் மிதந்து வருகிறது.

நான் சந்தர்ப்பத்திற்காகக் காத்திருக்கிறேன்.

அனைத்தையும் உறுதியாக முடிவுசெய்து, அமர்ந் திருக்கிறேன்.

இளவரசியே... நான் கவலைப்படுகிறேன்.

அந்த சாயங்காலம் எந்த அளவுக்கு இருள் நிறைந்த தாக இருந்தது!

விடுதலையாகும் நாளை எதிர்பார்த்து நின்றிருக்கும் போது, மஞ்சள்நிற திரைச்சீலை தோன்றவில்லை. பாடல் மிதந்து வரவில்லை. நிழல் நீங்கவில்லை... வெறும் இருட்டு... என் அன்பிற்குரிய இளவரசியே... நீ எங்கிருக்கிறாய்? தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையே நடைபெறும் போரின் இறுதியைப் பார்க்காமல் நீ எங்கு போனாய்? இன்று சற்று சிரிப்பதற்கு நான் விரும்புகிறேன். முடியாது... தூரத்தில் புட்டித் துண்டுகள் பதிக்கப்பட்ட மிகவும் உயரமான மதிற்சுவர்... மங்கலான சுவர்களைக்கொண்ட ஆளற்ற கட்டடம்... உடன்.. என் இளவரசியே... நீ இல்லை.

அப்படியென்றால்... ஈஸ்னோஃபீலியா?

அவள் எனக்கு யாருமில்லை... அவளை நான் வெறுக்கிறேன்.

இருட்டின் இதயத்திலிருந்து நான் ஒரு சிரிப்பைக் கேட்கிறேன். உன்னுடையதா? அப்படி இருக்காது. வெறுப்பை உண்டாக்கக்கூடிய சிரிப்பு உனக்கு இருக்காது. நீ நல்ல விஷயங்களின் அழகான வடிவம். என்றும் அப்படியே இருக்கட்டும். கல்படுக்கையில் தளர்ந்து படுத்திருக்கும் உன் உருவம் என் கண்ணில்...

மீண்டும் அந்தச் சிரிப்பு கேட்கிறதோ?

அரக்கனின் சிரிப்பா? இல்லை... அரக்கனுக்கு மெல்லிய குரல் இருக்குமா? பிறகு... பிறகு...

என் இளவரசியே... நான் தோல்வியடைந்தவன்!