அவள் கதவை மூடிவிட்டு, பற்றியெரிந்து கொண்டிருக்கும் அந்த உச்சிப்பொழுது வெயிலில் வெளியேறியபோது, குளத்தின் கரையிலிருந்த மாமரத்தில் சாய்ந்தவாறு விஜயன் நின்றிருந்தான். கையில் வைத்திருந்த ஒரு பேனாக் கத்தியைக்கொண்டு அவன் மிகவும் கவனமாக ஒரு குச்சியின் நுனிப் பகுதியை கூர்மைப்படுத்திக் கொண்டிருந்தான். அவள் கிட்டத்தட்ட ஒரு அடி தூரத்தில் வந்தபோது, அவன் கூறினான்: ""இங்க வந்துகிட்டிருக்கிற நீ நாளைக்குத் திருமணம் செய்துக்கப் போறவள்தானே?''
அவள் அவனை நோக்கி வந்து, அந்த வறண்ட மண்ணில் அமர்ந்தாள். தொடர்ந்து அவனுடைய கையிலிருந்த குச்சியின் சிறிய துண்டுகள் அதிர்ந்து பறப்பதைப் பார்த்தவாறு கேட்டாள்: ""விஜயன், நீங்க என்ன செய்றீங்க?''
""நான் நீர்க்கோழியைப் பிடிக்க ஆரம்பிச்சேன். நீ பார்க்கணுமா?''
அவள் தலையைக் குலுக்கினாள். ஆனால், அவள் வேறெதையோ சிந்தித்துக்கொண்டிருக்கிறாள் என்று அவனுக்குத் தோன்றியது. அவன் பேனாக்கத்தியை மடக்கி பைக்குள் போட்டவாறு கூறினான்: ""உனக்கு பயமா இருக்கா?''
""எதுக்கு?''
""உனக்கு கல்யாணம் செஞ்சிக்கறதுக்கு பயமா இல்லையா?''
அவள் தலையை ஆட்டினாள். தொடர்ந்து வேறெதுவும் கூறாமல், வெயில் விழுந்து மஞ்சள் நிறம் படர்ந்திருந்த அந்த குளத்தையே பார்த்தாள். அதன் கரையில் வளர்ந்து நின்றிருந்த புதர்களுக்குள்ளி லிருந்து நீர்க்கோழிகள் சத்தம் உண்டாக்கிக் கொண்டிருந்தன.
""அதோ... உனக்கு கேட்கலையா?'' விஜயன் கேட்டான்: ""நான் இந்த குச்சியால ஒரேயொரு குத்து... உடனே எல்லாம் வெளியே குதிக்கும். காட்டட்டுமா?'' ""வேணாம்''.
அவன் ஆச்சரியத்துடன் அவளுடைய முகத்தையே பார்த்தான். அவளுடைய கன்னங்களின் துடிப்பை அன்று முதல்முறையாக தான் பார்ப்பதைபோல அவனுக்குத் தோன்றியது.
""பிறகு... இந்த வெயில்ல நீ ஏன் வெளியே வந்தே?'' அவள் எழுந்து குளத்தின் கரையில் நடந்தாள். அவள் மனப்பூர்வமாக தன்னுடைய மெலிந்த இடையை ஒரு நடன மங்கையைப்போல அசைத்துக் கொண்டிருந்தாள். பாவாடைக்குக் கீழே தெரிந்த அந்தச் சிறிய பாதங்களை மட்டும் பார்த்தவாறு எந்தவித அசைவுமில்லாமல் நின்றுகொண்டிருந்தான். அவள் குளத்தின் கரையை அடைந்து, பின்னோக்கித் திரும்பி நின்றாள். தொடர்ந்து எந்தவொரு காரணமும் இல்லாமல், மெதுவாக சிரித்தாள். அவளுடைய பற்களின் அழகைக் காட்டுவதற்காக இருக்க வேண்டும். அவனுக்கு திடீரென்று கோபம் வந்தது.
""அம்மிணீ....'' அவன் அழைத்தான். தன்னுடைய குரல் தடுமாறுவதைப்போல அவனுக்குத் தோன்றியது. ""அம்மிணீ... இங்க வா. நான் ஒண்ணு கேட்கணும்.''
அவள் அசையவில்லை. மஞ்சள்நிறத் தும்பிகள் நீருக்குமேலே வட்டமிட்டுக் கொண்டிருந்தன. வானத்திலிருந்து நெருப்பு ஜுவாலைகள் வெடித்து விழுகின்றனவோ என்பதைப்போல அவனுக்குத் தோன்றியது.
""அந்த வெயில்ல நிற்கவேணாம். முகம் முழுமையா கருத்துவிடும்.'' அவள் மீண்டும் சிரித்தாள். தொடர்ந்து ஒரு விரலின் நுனியால் தன் கன்னங்களைத் தொட்டு வருடினாள்.
அவன் எழுந்து, அவளை நோக்கிச் சென்றான். அவளுடைய முகம் மேலும் சிவந்தது.
""உனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இருக்கு. இல்லையா?'' அவனுடைய குரலுக்கு ஒரு கத்தியின் கூர்மை இருந்தது.
அவள் அவனுடைய தோளைத் தட்டியவாறு சிரித்தாள்.
""விஜயன்... என்ன முட்டாள்தனமான கேள்வியைக் கேக்குறீங்க?'' ""என்னைத் தொடாதே.'' அவன் கூறினான்: ""இனிமே என்னைத் தொடக்கூடாது.''
""தொட்டா...''
""அது... ஆபத்து.''
அவள் அவனுடைய கண்களையே பார்த்தாள். அவன் தன்னுடைய பதினாறு வயதிலிருக்கக்கூடிய அந்த மெல்லிய குரலை முடிந்தவரைக்கும் கனமாக்கியவாறு கூறினான்: ""என்னால் அதைத் தாங்கிக்க முடியலை. உன்னால் என்னை இதுவரை புரிஞ்சிக்க முடியலையா?''
அவள் அப்போதும் எதுவும் கூறவில்லை. ஆனால், அவளுடைய முகத்திலிருந்து அந்த புன்சிரிப்பு முற்றிலுமாக மறைந்து போயிருந்தது. அவன் பேனாக்கத்தியை மீண்டும் பைக்குள்ளிலிருந்து எடுத்தவாறு கூறினான்: ""நாளைக்கு இந்த நேரத்தில நீ ஒரு ஆளோட மனைவி. நான் இந்த குளத்தில...''
""என்ன?''
""இந்த குளத்துக்கு அடியில... சாயங்காலம் நீ குளிக்கிறதுக்காக வரும்போது... ஒரு குளிர்ந்து, விரைச்சுப்போன பிணத்தைப் பார்க்கலாம். உன்னைக் காதலிச்ச விஜயனின் பிணம்...''
அவளுடைய கண்கள் விரிந்தன. அவள் அழப்போவதைப்போல அவனுக்குத் தோன்றியது. நல்ல எண்ணத்துடன் அவன் மீண்டும் தொடர்ந்தான். ""உன்னோட இந்த உடம்பு வேறொரு மனுஷனோட கையில் படுறது... அதை என்னால தாங்கிக்க முடியாது. தெரியுதா?''
அவள் அவனுடைய தோளில் தலையை வைத்து அழ ஆரம்பித்தாள்.
""ஏன் அழறே?''
""எனக்கு கல்யாணம் வேணாம்.''
""அது எப்படி? இப்போ... எல்லாம் முடிவு பண்ணியாச்சே. நாளைக்கு அவன் வருவான். மேளதாளத்துடனும் கோஷத்துடனும் உன்னை அவன் கூட்டிட்டுப் போவான். என் விஷயத்தை மறந்துடு. அதுதான் நல்லது.''
அவன் அவளுடைய முகத்தைத் தட்டி விலக்கியவாறு மண்ணில் அமர்ந்தான். மீண்டும் தன்னுடைய குச்சியைக் கூர்மைப்படுத்த ஆரம்பித்தான். அவள் மரத்தின்மீது தன்னுடைய முகத்தை வைத்தவாறு தேம்பித்தேம்பி அழ ஆரம்பித்தாள்.
""ஏன் அழறே?''
அவனுடைய இதயத்தில் சந்தோஷம் நிறைந்து ஓடிக் கொண்டிருந்தது. இந்த பதினைந்து வயதுப்பெண் எந்த அளவுக்கு முட்டாளாக இருக்கிறாள்! எவ்வளவு எளிதாக அவன் அவளைக் கீழே கொண்டு வந்துவிட்டான்!
அவள் திடீரென்று அவனுக்கு அருகில் வந்து அமர்ந்து, அவனுடைய முழங்கால்களில் தன் முகத்தை வைத்தாள்.
""ச்சே...'' அவன் கூறினான்: ""யாராவது பார்த்துட்டா?'' ஆனால், அவனுடைய கை விரல்கள் அவளின் தலைமுடிச் சுருள்களை வருடிக்கொண்டிருந்தன.
""உனக்கு இவ்வளவு சீக்கிரம் கல்யாணம் செய்துக்கணும்னு எப்படி தோணிச்சு. பதினைஞ்சு வயசுதானே ஆகியிருக்கு!'' அவன் கேட்டான்.
""எனக்கு தோணல...''
""பிறகு...?''
""அப்பா முடிவு செய்ததுதானே?''
""ம்... அப்பா...''
அவளுடைய கண்ணீர் வழிந்துகொண்டிருந்த முகத்தைப் பார்த்து, உடனடியாக ஒரு வெறுப்புடன் அவன் வேகமாக எழுந்தான்.
""நான் போறேன்.''
""போகக்கூடாது.''
""ம்...?''
அவள் நிறைந்த கண்களுடன் அவனுடைய கண்களையே பார்த்தாள். அவன் உடனடியாக அமைதியானவனானான். ஆனால், தன்னுடைய முகத்தில் வெப்பம் அதிகரிக்கிறது என்பதையும், உதடுகள் அந்த வெப்பத்தில் வியர்க்கின்றன என்பதையும் அவன் உணர்ந்தான். வெயில் ஜுவாலைகள் குளத்தில் வந்து விழுந்துகொண்டிருந்தன.
அவன் கண்களை இறுக மூடிக்கொண்டான். மீண்டும் திறந்தான்.
""அம்மிணி...''
""ம்...?''
""அப்படின்னா... நீ என்னைக் காதலிக்கிறியா?''
""ம்...''
""அப்படின்னா... அதை நிரூபிச்சிக் காட்டு.''
""எப்படி?''
""வா. நாம அந்த குளத்துக்கிட்ட இருக்குற கட்டடத்திற்குப் போலாம்.''
அவள் எழுந்து அவனைப் பின்பற்றினாள். புதர்களிலிருந்து ஒலித்துக் கொண்டிருந்த நீர்க்கோழிகளையும், நீருக்குமேலே வட்டமடித்துக் கொண்டிருந்த மஞ்சள்நிறத் தும்பிகளையும், வானத் திலிருந்து உதிர்ந்து கொண்டிருந்த நெருப்பு ஜுவாலை களையும்... அனைத்தையும் அவர்கள் சில நிமிடங்களுக்கு மறந்துவிட்டார்கள்.
""அம்மிணி, நீ யாரையும் கல்யாணம் செஞ்சுக்கத் தேவையில்லை. என் மனைவி. புரியுதா?'' அவன் கேட்டான்.
அவள் அவனுடைய கண்களில் முத்தமிட்டாள். இன்னொரு மனிதனுக்காக அனுபவிக்க வேண்டி வந்த வேதனை தன்னை ஒரு பெண்ணாக வளர்த்தது என்பதைப்போல அவளுக்குத் தோன்றியது. இனி என்றும் அவள் விஜயனின் மனைவிதான்.
அவள் எழுந்து பாவாடையை தட்டிச் சரிசெய்தவாறு கூறினாள்: ""வரட்டுமா?''
அவன் தலையைக் குலுக்கினான்.
நீர்க் கோழிகள், மஞ்சள் தும்பிகள், நீர், உச்சி வெயில்...
அவன் கண்களை மூடியவாறு தன்னுடைய மனதின் உள்ளறைகளை ஆராய்ந்தான். அவளை கீழ்ப்படியச் செய்ததற்காக தான் சந்தோஷப்பட வேண்டாமா? இதுதான் சந்தோஷமா? வெற்றி பெற்றவர்களின் சந்தோஷம்? தொண்டையில் அடைத்து நின்றுகொண்டிருக்கும் வேதனை?
அவன் எழுந்து வெளியே வெயிலில் இறங்கினான். மாமரத்திற்கு அடியில் அவர்கள் ஒன்றாக அமர்ந்திருந்த இடத்தில், பாதி கூர்மைப்படுத்தியிருந்த அந்த குச்சி கிடந்தது. அவன் திடீரென்று வந்த ஒரு கோபத்துடன் அதை எடுத்து குளத்திற்குள் வீசியெறிந்தான். தொடர்ந்து எழுந்து வந்த அழுகையை அடக்குவதற்கு முயற்சித்தவாறு, நடுங்கிக்கொண்டிருக்கும் உதடுகளுடன் தன்னுடைய வீட்டிற்கு தன் அன்பிற்குரிய தாய் படுத்துறங்கும் வீட்டிற்கு ஓடிச்சென்றான்.
அவனுடைய கால்களை எடுத்து வைக்கும் சத்தம் முற்றிலும் நின்றபோது, மஞ்சள் அரளி புதர்களுக்குள்ளிருந்து நீர்க் கோழிகள் வெளியே வந்தன.