தங்களின் "வண்ணத்தோகை' நூலுக்கு தமிழக அரசின் பரிசு பெற்றீர்கள். "அனல்மூச்சு'க்கு ஆதித்தனார் விருது பெற்றீர்கள். இத்தகைய விருதுகள் தங்கள் இலக்கியப் பயணத்துக்கு அங்கீகாரம் என்று கருதலாம். ஆனால் வாசகத்தளத்தில் தங்கள் கவிதைகளுக்குக் கிட்டிய வரவேற்பு எப்படியிருக்கிறது?
முப்பது ஆண்டுகட்கு முன்னால் நான் சிங்கப்பூர் சென்றிருந்தேன். நிகழ்ச்சி முடிந்த பின்னர் செராங்கூன் சாலைக்குச் சென்று கொஞ்சம் பிள்ளைகட்குத் துணிகள் வாங்க ஒரு தமிழாசிரியர் அழைத்துச் சென்றார். ஒரு துணிக்கடையில் நுழைந்து அங்கிருந்த உரிமையாளரிடம், "இவர்தான் வேழவேந்தன்' என்று அறிமுகம் செய்தார்.
உடனே அந்த நண்பர் ""கவிஞரய்யாவா?' என்று வியப்புடன் வரவேற்று, ""சற்று அமருங்கள்'' என்று கூறிவிட்டு உள்ளே பரபரப்புடன் சென்றார்.
திரும்பியவர் கைகளில் அழுக்கேறிய அட்டை சிதைந்த ஒரு நூல் இருந்தது. அதை ஆர்வமுடன் காட்டி, ""ஐயா! இது தாங்கள் எழுதிய "வண்ணத் தோகை' நூல். எங்கள் மன்ற நண்பர்களுக்கு யாப்பிலக்கணம் கற்றுத் தரும்போது, இந்த நூலைப் பயன்படுத்திப் பயன்படுத்தி இந்த நூல் இப்படிக் கிழிந்துவிட்டது!'' என்றார். வந்த தமிழாசிரியர் மலைத்துப்போனார். நானும் பெரும் மகிழ்வுடன் திரும்பினேன்.
அதேபோல் "அனல்மூச்சு' கவிதை நூலுக்கு தினத்தந்தியின் ஒரு இலட்சம் பரிசு கிடைத்தவுடன், அதன் அதிபர் சிவந்தி ஆதித்தனாரைச் சந்தித்து நெகிழ்வுடன், ""ஐயா நீங்கள் என்னைத் தமிழர் இல்லங்களிலெல்லாம் கொண்டு சென்று சேர்த்து விட்டீர்கள். நன்றி!'' என்றேன்.
""இதைக் கேட்கும்போது, நாங்கள் ஏதோ உங்களுக்கென்று மாறுபட்ட வழியில் சென்று அப் பரிசை அளித்ததாக எண்ணுவதுபோல் தெரிகிறது. உண்மை அதுவன்று. நான் பரிசுக்கு வந்த நூல்களில் வடிகட்டிக் கொடுத்த 15 நூல்களை இரவு பகலாக முழுதும் படித்துப் பார்த்தேன். உங்கள் "அனல்மூச்சு' கருத்தாழத்துடன் இருந்தது. அதனால் தேர்வு செய்யப்பட்டது'' என்றார் சிவந்தியார்.
இவையெல்லாம், இரவுகள் பல கண்விழித்து எழுதிய இந்தக் கவிஞனுக்குக் கிடைத்த தனி வெகுமதிகள் அல்லவா?
முன்பெல்லாம் பாவேந்தர், கலைஞர், உவமைக்கவிஞர் சுரதா, மயிலை சிவமுத்து போன்றோ ரின் சீரிய தலைமையில் கவியரங்கேறியபோது ஏற்பட்ட மகிழ்வும் நிறைவும் இப்போது ஏனோ கிடைப்பதில்லை.
இப்போதெல்லாம் வசன கவிதைகள், புதுக் கவிதைகள் என்று எழுதிவந்து கவிஞர்கள் அவர்கள் பாடல்களை மட்டும் பிறர் கேட்கவேண்டும் என்ற கருத்தில் கூறி விட்டு, உடன் போய்விடுகிறார்கள்.
நானும் இப்போதெல்லாம் அரங்கக் கவியரங்குகளில் மிகுதியும் பங்கேற்பதைத் தவிர்த்து வருகின்றேன். அவ்வப்போது, வானொலிலி, பொதிகைக் கவியரங்கங்களில் பங்கேற்று வருகின்றேன்.
தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவில் உவமைக் கவிஞர் தலைமையில் ஒரு கவியரங்கம் நடைபெற்றது. 45 ஆண்டுக்கு முன்னர் பெரியார் திடல் இராதா அரங்கம் அப்போது கூரைவேய்ந்த கொட்டகையாக இருந்தது. தந்தை பெரியாரும் கவியரங்கை வராந்தாவின் கயிற்றுக் கட்டிலிலில் அமர்ந்து கேட்டார்கள். கவியரங்கம் நிறைவுற்றதும் சுரதா அவர்களும் நானும் அவர் அருகில் சென்று வணங்கினோம். அப்பொழுது அம் மாத்தலைவர் எங்கள் கவிதைத் தாள்களை வாங்கி, பூதக் கண்ணாடி கொண்டு படித்ததுடன், எங்கள் இருவரையும் தம் அருகில் கயிற்றுக் கட்டிலிலில் இருபுறமும் அமரவைத்து நிழற்படம் எடுக்கச் சொன்னார்கள். அவையெல்லாம் மறக்கவொண்ணா நினைவுகள்.
கவியரங்கங்களில் தங்கள் கவிதைகளுக்குக் கிட்டிய வரவேற்பு எப்படி இருந்தது என்பதற்குச் சில நிகழ்வுகளைச் சொல்ல முடியுமா?
இதழ்களிலும் "ஐக்கூ' போன்ற குறுங்கவிதை களையே மேய்வது என்பது சிலரின் வாழ்க்கையாகி விட்டது. அதனால் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பெருமக்களில் வாழ்வில் நிகழ்ந்த சுவை நிகழ்ச்சிகள் பற்றிக் குறுகிய மூன்று எண்சீர் விருத்தப் பாக்க ளிலேயே அவர்தம் சிறப்பியல்புகளைக் கூற முனைந்திருக்கிறேன். மனத்தில் பதியமிட்ட நெஞ்சைத் தொட்ட நிகழ்வுகளை என்றும் நிலைத்திருக்கும் வகையில் மணக்கும் "நாடறிந்தோம் வாழ்வில்...' நூலாக ஆக்கியிருப்பது உளத்திற்கு நிறைவாக உள்ளது.
பெரியவர்கள், சான்றோர்கள் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளை வைத்துக் கவிதைகள் எழுதியிருக்கிறீர்கள். உரைநடையில் எழுத வேண்டிவற்றைக் கவிதையில் எழுதிவிட்டதாகக் கருதுகிறீர்களா? இல்லை செய்திகளைக் கவிதையாக்கியிருக்கிறேன் என்கிறீர்களா?
உதாரணத்திற்கு, நல்லறிஞர் அப்துல் கலாம் எந்த நூலையும் இலவசமாகப் பெறமாட்டார். விலை கொடுத்துத்தான் பெறுவார் எனற கருத்தை கலாம் பற்றிய கவிதையில் வெளிப்படுத்தினேன்.
அந்தத் தொகுப்பு நூலை வெளியிட வந்த திரு. இல. கணேசன் மேடையிலேயே இப்படிக் கூறினார்:
""பாருங்கள் நான் இந்த நூலை வெளியிட்டு ஒரு பிரதியை இலவசமாகப் பெறத்தாள் வந்தேன்; வேழவேந்தனின் அப்துல் கலாம் பற்றிய பாடல் என் உள்ளத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. படைப்பாளர்கள் பலர் மேன்மேலும் உருவாக நாம் விலை கொடுத்தே நூல்களைப் பெறவேண்டும் என்பதை உணர்ந்து, விலையுடன் வந்திருக்கிறேன்!''
இதைக்கேட்ட மற்றவர்களும் நூல்களை விலை கொடுத்தே பெற்றுக்கொண்டனர்.
தங்களின் அரசியல் வாழ்க்கை, கவிதை வாழ்க்கை இரண்டைப் பற்றியும் என்ன நினைக்கிறீர்கள்?
வாரம் ஒருநாள் தொகுதிக்குச் சென்று, வாக்களித்த மக்களின் குறைகளைய, வழக்கறிஞர் தொழிலையே பலிலிதந்தவன் நான். அப்படிப்பட்ட என்னையே "சாவுக்கு ஒரு ஓட்டு, நோவுக்கு ஒரு ஓட்டு' என்று பேசப்பட்ட 1984-இல் குறைந்த வித்தியாசத்தில் தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பினார்கள் நான் மிகவும் நம்பிய என் தொகுதி மக்கள்; ஆனால் ஆண்டுக்கு ஓர் உயர்நிலைப்பள்ளி, ஊருக்கு ஒரு நற்சாலை, உபவட்டங்களாக இருந்த கும்மிடிப்பூண்டியும் ஊத்துக்கோட்டையும் தனி வட்டங்களாக உயர்ந்தது, எல்லாக் கிராமங்களுககும் என் காலத்தில் மின்சார வசதி ஆகியவை இன்றும் அந்த மக்களால் பேசப்படுவதே நான் பெற்ற பெரும் பரிசு.
ஆனால் தமிழ், தமிழர் மேம்பாடு, தமிழ் இலக்கியமாட்சி, தமிழரின் மறதி பற்றிய என் விழிப்புணர்வுக் கவிதைகள் காலங்காலமாக நிலைத்திருக்கும், பயனளிக்கும் என்பது இந்தச் சாமானியனின் பேரவா.
கவிதை இப்போது பல திசைகளில் கிளை பரப்பியிருக்கிறது. புதிய புதிய கருக்களோடும், சிந்தனைகளோடும் பலர் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் மரபுக் கவிதைக்கு எத்தகைய எதிர்காலம் இருக்கும் என்றெண்ணுகிறீர்கள்?
பல்வேறு கோணங்களில் புதுப்புதுச் சிந்தனைகளைப் புதுக்கவிதையில்தான் எழுத முடியும் என்பது தவறான வாதம்; பிழையான கருத்து.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் சொல்லப்படாத அறநெறிகளையும் அரும் சிந்தனைகளையும் புதுக்கவிஞர்கள் என்ன சொல்லிவிடப் போகிறார்கள்.
அவை அழகிய வெண்பாக்களிலும், யாப்பழகோடும் மிளிர்வதால் அல்லவா காலத்தை வெல்லும் வரத்தைப் பெற்றிருக்கின்றன. எதுகை எழிலும், மோனை வனப்பும், அசை அழகும் சங்கீதமாக வந்து நம் நெஞ்சில் நங்கூரமிடவில்லையா?
"நன்றி மறப்பது நன்றன்று; நன்றல்லது
அன்றே மறப்பது நன்று'
"நன்றியை மறவாமல் இருக்கவேண்டும்; நன்றல்லாதவற்றை அன்றே மறந்துவிடுவது நல்லது' ஆகிய இருபெரும் கருத்துகளை நம் நெஞ்சங்களில் கல்வெட்டாக்கிய வள்ளுவப் பேராசனைவிட யார் புதுக்கவிதையில் குறுகிய வரிகளில் இப்படிப்பட்ட கருத்துப் பேழைகளைத் தரமுடியும்? ஆகவே யாப்பருஞ் செல்வத்தை ஒதுக்குவது பேதமை என்று அடித்துக் கூறுவேன் நான்.
அரசியல் வாழ்க்கையிலிருந்து ஏறக்குறைய ஒதுங்கிய நிலையில் இருப்பதாகவே தெரிகிறது. இன்றைய அரசியல் நிகழ்வுகளோடு தங்களால் ஒத்துப்போக முடியவில்லையா? இல்லை இனிப் பயனில்லை என்று கருதி விட்டீர்களா?
ஐம்பது ஆண்டுகட்கு முன்னர் நான் தீவிர அரசியலிலில் ஈடுபட்டு சட்டப் பேரவைத் தேர்தலிலில் நின்றபோது, விவசாயி ஆன என் தந்தையார் எனக்கு அளித்த தேர்தல் செலவுத் தொகை வெறும் நாற்பதாயிரம் மட்டுமே. இன்று அதே தேர்தலிலில் ஈடுபட நாற்பது லட்சம் போதாது. நான் எங்கே போவேன்?
இன்றைய அரசியல் அரங்கத்தின் போலிலித்தனமும், பகட்டும், டாம்பீகமும் நெஞ்சைப் பதறடிக்கின்றன. அன்றைய அண்ணாவின் உண்மைச் சீடர்கள் இன்று ஒதுக்கப்பட்டு ஏகடியம் செய்யப்படுகிறோம்.
இருந்தாலும் தளபதி போன்ற செயல் மறவர்களால் தி.மு.கழகத்தின் செல்ல அணியான இலக்கிய அணியின் மாநிலத் தலைவராக என்னால் இயன்ற பணிகளைத் தொடர்கிறேன். "முரசொலிலி', "கவிதை உறவு' போன்ற இதழ்களில் தேவைகளைக் கவிதையாகவும், கட்டுரைகளாகவும் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
வாய்ப்பு நேரும் போதெல்லாம், தமிழ்த் திருமணங்களை நடத்தி வாழ்த்துதல், தமிழ்ப் படைப்பாளர்களின் நூல் வெளியீட்டு விழாக்களில் பங்கேற்று ஊக்குவித்தல், நாடறிந்த நல்லோர்களின் பாராட்டு விழாக்களில் இணைந்து போற்றுதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறேன்.
எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்களான நல்ல இளைஞர்களை உற்சாகப்படுத்தி, அவர்கள் வெற்றிபெற உடனிருந்து உழைக்கின்றேன்.
இந்த வயதில் தாங்கள் கடந்து வந்த பாதையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
என் இந்த 83 வயதில் ஓரளவு நிறைவான வாழ்க்கையை முடித்ததாக எண்ணி, மன நிறைவடைகின்றேன்.
என் வாழ்நாளில் இது வரை 16 நூல்களை எழுதியிருக்கின்றேன். எட்டுக் கவிதை நூல்களும், ஏழு கட்டுரைத் தொகுதிகளும், ஒரு சிறுகதைத் தொகுப்பும் என அவை அமைந்துள்ளன.
அன்றாடம் எழுதிய கால நிலைக்கேற்ப எத்தனையோ அரசியல் கவிதைகளும், கட்டுரைகளும் கணக்கில் சேரா.
திசைமாறிய பறவையாக மாறாமல், அறிஞர் அண்ணா உருவாக்கிய ஒரே கொடியின்கீழ், ஒரே இயக்கத்தில் பணியாற்றுவதுதான் நெஞ்சுக்குப் பிடித்தமானதாக உள்ளது.
சாதி, மதவாதம் தலைவிரித்தாடுகிற போது கவிஞர்களின் நிலைப்பாடு எப்படி இருக்க வேண்டும் என்று கருதுகிறீர்கள்?
"மனிதம்' மேலோங்கிடப் பாடுபடுவதுதான் மண்ணின்மீது கவிஞர்க்கு உரிய கடமையாகும். இடையினில் தோன்றிய சாதிப்பாகுபாடும், மதவெறிப் போக்கும் தகர்த்திட அவர்கள் பாடிக் கொண்டே இருக்கவேண்டும். கோளமீது பேதமில்லாச் சமுதாயமும், போரில்லா நாடுகளும் அமையும் கோட்பாடுகட்கே அவர்கள் விரல்கள் ஓடவேண்டும். சொந்த ஆதாயத்திற்கும், சுய மேம்பாட்டிற்கும் எழுதுவோர் இந்த மண்ணின் பதர்கள் என்பவன் நான்.
குறிப்பாக நாட்டில் இன்னும் நிலவும் மூடத்தனத்தின் முடை நாற்றம் ஓய, கவிஞர்கள் ஓயாமல் எழுதித் தீர்க்க வேண்டும் என்பதே என் ஆவல்.
"சாதி' எனும் நாகம் ஒழிய கலப்புத் திருமணம்தான் ஒரே வழி என்று நம்புபவன் நான். மருத்துவர்களான என் இரு மைந்தர்கட்கும் கலப்புத் திருமணம் செய்து மகிழ்ந்தவன் நான்.
உண்டியில் கடவுளுக்கே இலஞ்சம் போட்டு, கைம்மாறாக வரம் வேண்டும் ஒதிய மரங்கள் திருந்திடச் சாயாமல் படையல்களைத் தர வேண்டும் என்பதே என் அவா.
முன்பைவிடத் திராவிட இயக்கங்கள் தீவிரமாகச் செயல்பட வேண்டிய கால கட்டமாக இன்று இருக்கிறது. வந்தோரை வாழவைக்கும் தமிழ்நாடு என்று பெருமை பேசி இப்போது நாமே அயலவராக நிற்க வேண்டிய நிலை வந்துவிடும் போலிலிருக்கிறது.
திராவிட இயக்க வழிவந்த நீங்கள் இதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று கருதுகிறீர்கள்?
திராவிடக் காளையர் தீவிரமாகக் கிளர்ந் தெழுந்து சமுதாயச் சீர்திருத்தப் பணிகளில் தம் கருத்தைச் செலுத்தவேண்டும். நேர்மையும் நீதியும் வெல்ல அறவழி அரசியல் நிலைபெற்றாக வேண்டும். போலிலிகளும் மாயைகளும் பொசுக்கப்பட வேண்டும். தந்தை பெரியாரைப் போல், அறிஞர் அண்ணாவைப் போல், அருமைக் காமராசர் போல் இலட்சிய நோக்குடன் இந்த மண்ணை உயர்த்தும் இமாலயக் கோட்பாட்டுடன் பாடுபடும் தூயவர்களையே மேலோங்கச் செய்யவேண்டும். அதற்கே அனைவரும் துணை நிற்போம். அப்பொழுதுதான் வீழ்ச்சியுற்ற தாயகம் மீண்டும் எழுச்சி பெறும். அந்தப் புதிய "உட்டோபியன் உல'கை நோக்கி நடைபோடுவோம்.