பாரதியாரைப் போலவே கி.ரா. தாத்தாவையும் அரவணைத்துத் தன் நிலத்திற்கு இலக்கிய உரம் சேர்த்தது புதுச்சேரி. எழுத்தாளர் பிரபஞ்சனையும், கி.ரா தாத்தாவையும் இரண்டு தெருக்கள்தான் பிரித்து வைத்திருந்தன. இவர்களைக் காண வருவோர் இருவரையும் தவற விடுவதே இல்லை. எப்போது தாத்தா வீட்டிற்குச் சென்றாலும் எழுத்தாளர்கள், வாசகர்கள் இல்லாமல் இருந்தது இல்லை.
அவர்கள் தாத்தாவிடம் பேச வந்தவர்கள் அல்லர். அவரின் பேச்சைக் கேட்க வந்தவர்கள்; அவரைப் பார்த்து மகிழ்வுற வந்தவர்கள்.
ஒருநாள் இளவேனில் அண்ணனை அழைத்துக்கொண்டு நானும், அப்பாவும் தாத்தா வீட்டிற்குச் சென்றோம். அவர் ஊரின் கதை, அங்கே இருக்கக் கூடிய மரங்கள் இவற்றைப் பற்றி பேசிக்கொ
பாரதியாரைப் போலவே கி.ரா. தாத்தாவையும் அரவணைத்துத் தன் நிலத்திற்கு இலக்கிய உரம் சேர்த்தது புதுச்சேரி. எழுத்தாளர் பிரபஞ்சனையும், கி.ரா தாத்தாவையும் இரண்டு தெருக்கள்தான் பிரித்து வைத்திருந்தன. இவர்களைக் காண வருவோர் இருவரையும் தவற விடுவதே இல்லை. எப்போது தாத்தா வீட்டிற்குச் சென்றாலும் எழுத்தாளர்கள், வாசகர்கள் இல்லாமல் இருந்தது இல்லை.
அவர்கள் தாத்தாவிடம் பேச வந்தவர்கள் அல்லர். அவரின் பேச்சைக் கேட்க வந்தவர்கள்; அவரைப் பார்த்து மகிழ்வுற வந்தவர்கள்.
ஒருநாள் இளவேனில் அண்ணனை அழைத்துக்கொண்டு நானும், அப்பாவும் தாத்தா வீட்டிற்குச் சென்றோம். அவர் ஊரின் கதை, அங்கே இருக்கக் கூடிய மரங்கள் இவற்றைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார். ஒரு டப்பாவை எடுத்து என் முன் நீட்டி னார். “உள்ளே என்ன இருக்கிறது தாத்தா? என்றேன். “எடுத்துப்பாரு அப்பதானே தெரியும்” கருப்புப் பேரீச்சம்பழம் இருந்தது.
“உனக்குப் பிடிச்சது எல்லாம் இல்லை கேட்டியா’ என்றார். “இதுவும் எனக்குப் பிடிக்கும்” என்றேன்.
விடைபெற்றுக் கிளம்பும்போது “பாப்பா என்கிட்ட பேசவே இல்லை” என்றார்.
“நீங்க பேசுறத கேக்கத்தானே வந்தேன்” என்று சொன்னேன்.
அவருடைய 95 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி பல்கலைக் கழகத் தின் எதிரில் அமைந்துள்ள பண்பாட்டு அரங்கில் மிகப்பெரிய விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவருடைய பெயர்த்திக்கு அந்நிகழ்விலேயே அனைவருடைய முன்னிலையில் மிக எளிமையாக சாதி, மத மறுப்புத் திருமணம் நடத்தி அவர் வியப்பை ஊட்டியது குறிப்பிடத் தக்கது.
அடுத்த பிறந்தநாள் நிகழ்வு புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்றது. நான் மேடைக்குச் சென்று தாத்தாவிடம் ஒரு பையை நீட்டினேன் “உள்ளே என்ன?” என்றார். “உங்களுக்குப் பிடிச்சதுதான்” என்றேன். கருப்புப் பேரீச்சம்பழத்தைப் பார்த்துவிட்டு “ நீ நல்லவேளை சால்வை வாங்கிட்டு வரல” என்று சொல்லிச் சிரித்தார்.
கணவதி அம்மாள் மறைவுச் செய்தி மிகுந்த அதிர்ச்சியைத் தந்தது. கண்ணாடிப் பேழையில் நீள் துயிலில் கணவதி அம்மா. அடுத்த அறையில் தாத்தா பேசிக்கொண்டு இருக்கிறார் எப்போதும் போல. அவர் முகத்தில் ஓர் அமைதி.
அவரின் உறவினர்களிடம் "என்ன செய்யறீங்க?" என்கிறார் கி.ரா.
"அம்மாவ குளிப்பாட்டனும் அதற்காக மூன்று பேர் தண்ணி எடுத்து வரணும்" என்கின்றனர். " எரிக்கத்தானே போறாங்க அப்புறம் ஏன் குளிப்பாட்டனும்? நெருப்பு எல்லாத்தயும் சுத்தப்படுத்திடும்" என்கிறார்.
அவர்கள் அமைதியாக இருக்கின்றனர். "எதையாவது செய்யுங்க" என்று கோவமாய்ச் சொன்னார்.
பின் கலந்துரையாடிக் கொண்டிருந்தவர் "மின் சுடுகாட்டின் உள்ளே சென்று பார்க்கவேண்டும் போகலாமா?" என்கிறார். இதை யாரும் எதிர்பார்க்கவே இல்லை "ஏன்?"என்கிறார் செயப்பிரகாசம் ஐயா. "நான் செத்தபின் அதைப் பாக்க முடியாதே அதனால்தான்... ” என்கிறார் கி.ரா.
புதுச்சேரிப் பல்கலைக் கழகத்தின் தமிழியற் புலத்தில் கி.ரா வின் துணைவியார் கணவதி அம்மாள் படத் திறப்பு நிகழ்வில் பங்கேற்று மாணவர்கள் முன்னிலையில் அவர் கலந்துரையாடிய போது ஒரு மாணவி கேட்டார் “மகிழ்ச்சியான, நிறைவான இல்லற வாழ்வுக்கு உங்களின் அறிவுரை என்ன ஐயா? என்றார்.
“பொய் சொல்லணும் பாத்தியா? அப்பத்தான் தப்பிக்க முடியும்“ என்று சொல்லிச் சிரித்தார்.
சென்ற ஆண்டு நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்வில் அவருடைய தேர்ந்தெடுத்த சிறுகதைகள் நூலில் என் பெயரெழுதி, கையொப்பம் பெற்று மகிழ்ந்ததை நினைவு கூர்கிறேன்.
கரிசல் மண், புதுச்சேரிக்கு வந்து மீண்டும் கரிசலிடமே சென்று விட்டது. இன்று கதைகள் சொல்ல தாத்தா இல்லை. ஆனாலும் மிச்சக் கதைகள் தீர்ந்து போகாமல் அவர் குரலுக்காகக் காத்திருக்கும்.