றம், பொருள், இன்பம் என முப்பிரிவுகளில் எக்காலத்திலும் மனிதர் பின்பற்றத் தகுந்த நீதியை குறளாய் வடித்துத் தந்தவர் வள்ளுவர். அவரது குறளுக்கு பரிமேலழகர் தொட்டு ஆயிரத்துக்கும் மேலான உரைகள் நாள்தோறும் புதிது புதிதாய் வந்துகொண்டேயிருக்கின்றன. அந்தவரிசையில் நடிகர் சிவகுமார் திருக்குறள் பற்றிச் சிறப்புரை நிகழ்த்தத் தயாராகி வருகிறார்.

விரைவில் அவரது கம்பீரக் குரலில் வள்ளுவரின் சிந்தனைகளை கேட்க இருக்கிறது தமிழுலகம்.

ss

"திரையுலக மார்க்கண்டேயர்' என்று வர்ணிக்கப்படும் நடிகர் சிவகுமார், நடிப்புக் கலையோடு ஓவியக் கலையிலும் சிறந்து விளங்குகிறவர். அவரது தனித் துவமான ஓவியங்கள் இன்றளவிலும் ஓவிய ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகின்றன.

Advertisment

அதேபோல், அவருடைய தமிழார்வமும் தெளிவான உச்சரிப்பும் கம்பீரமான குரலும் பல லட்சம் காதுகளையும் இதயங்களையும் கொள்ளையடித்தவை.

ஆரம்ப காலங்களில் இலக்கிய மேடைகளில் கலைஞரின் வசனங்களைப் பேசிக்காட்டி, கூட்டத்தினரை வியக்க வைத்தார் சிவகுமார். பின்னர் கம்ப ராமாயணத்தின் மேன்மையை இலக்கியச் சுவையோடு மேடைகளில் சொல்லத் தொடங்கினார்.

தமிழ்ப் பண்பாட்டுக்கு ஏற்ப அவர் ராமாயணத்தை மேடை களில் சித்தரிக்கும் பாணியே அலாதியானது. ராமனை அவதார புருஷனாக உயர்த்தி நம்மிடமிருந்து அந்நியப்படுத்தாமல், அவனை பண்பாடு மிகுந்த ஒரு மாமன்னனாக சித்தரிப்பார் சிவகுமார். அதற்குப் பொருத்தமான குட்டிக் குட்டிக் கதைகளையும் சொல்லித் தன் பேச்சில் சுவை ஏற்றுவதோடு, நிகழ்கால வாழ்வியல் சம்பவங் களையும் எடுத்துச் சொல்லி தன்னம்பிக்கையையும் ஒழுக்கத்தையும் போதிப்பார். அதனால் அவருடைய பேருரைகளைக் கேட்க மக்கள் அணியணியாய்த் திரள்வதும் வழக்கமானது.

Advertisment

ராமாயணத்தைப் போலவே, மகாபாரதத்தையும் கையில் எடுத்து, உரிய பாடல்களை மனனம் செய்து கொண்டு அது குறித்தும் உரை நிகழ்த்திவந்தார் சிவகுமார். அதற்காக அவர் மேற்கொண்ட கடும் பயிற்சிகள் அலாதியானவை. அதற்காகப் பொது நிகழ்சிகளைக் கூட ஒதுக்கி வைத்துவிட்டு தனியறைக்குள்ளேயே தவமிருந்தார் அவர். அதனால் அவரது மகாபாரத சொற்பொழிவுகளும் மக்களை பெரிதும் ஈர்த்தன. இந்த வரிசையில் தற்போது சிவகுமார், திருக்குறள் குறித்துப் பேருரைகளை வழங்கத் தயாராகி வருகிறார்.

இதற்காக 100 திருக்குறளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, அதற்கான உரை ஓவியங்களை மக்களிடம் தீட்டும் முயற்சியில் இறங்கியிருக்கி றார். அதற்காக அவர் கடுமையான ஹோம் ஒர்க்கிலும் ஈடுபட்டு வருகிறார். அவரது இந்த "திருக்குறள் தவம்' குறித்து வியப்பாகப் பேசும் "வைகறை வாசகன்' சங்கர சரவணன், "கடந்த நான்கைந்து ஆண்டுகளாகவே திருக்குறள் முயற்சியை மேற்கொண்டிருக்கிறார் சிவகுமார் அண்ணன். அதில் அவர் மேற்கொண்டிருக்கும் சலிப் பில்லா உழைப்பும் விடாமுயற்சியும் திகைப்பூட்டுகின்றன. நான், ஐ.ஏ.எஸ். படிக்கிற மாணவர்களுக்கு கடந்த பதினைந்து வருடங்களாக வகுப்பு எடுத்து வருகிறேன். நான், சந்தித்த மாணவர்களை விடவும், சிறந்த மாணவராகவே இருக்கிறார் அவர். எழுபத்தைந்து வயதைக் கடந்த அண்ணன் சிவகுமார், ஒரு இளைஞனைப் போல் ஆர்வமாக மேற்கொண்டு வரும் இந்த திருக்குறள் முயற்சியை அருகில் இருந்து கவனித்து வருகிறவன் என்ற முறையில், வியந்து வருகிறேன். இதற்காக அவர் எடுத்துத் தொகுத்துவரும் செய்திகளும் வாழ்வியல் சம்பவங்களும், மிகச் சிறப்பானவை. எந்த இலக்கியப் பேச்சாளராலும் செய்ய முடியாத சாதனையாக அவை அமையும் என்பது உறுதி. தன் சொற்பொழிவு மூலம் அவர் வழங்க இருப்பது திருக்குறளுக்கான பதவுரையோ பொழிப்புரையோ அறிவுரையோ அல்ல. இது வேறு ரகம். அவரது சிந்தனை உயரத்தைத் தரிசிக்க அவரது "திருக்குறள் 100' அரங்கேறும் திருநாளுக்காகக் காத்திருக்கிறேன். சிவகுமாரின் ஆழமான சொற்பொழிவுகளுக்காகவே விருதுகளை இந்த நாடு அள்ளித் தரவேண்டும்' என்கிறார் உணர்ச்சி வசப்பட்டவராய்.

சிவகுமார் என்ற அந்த மா கலைஞன், தமிழின் உயரத்தை மேலும் உயரப்படுத்திகொண்டிருக்கிறார்.