"யாதும் ஊரே! யாவரும் கேளிர்!' என்ற கணியன் பூங்குன்றனாரின் வாக்குக்கேற்ப, சாதியைச் சாகடித்து, மதத்தைத் தூக்கியெறிந்து, தேச எல்லைக்கோடுகளைத் தாண்டி அனைவரும் மனிதர்களாக ஒன்றிணையவேண்டும். இதே கருத்தைத்தான் பாரதியாரும், திருவள்ளுவரும்கூட வலியுறுத்துகிறார்கள். இவர்களுக்கிடைப்பட்ட மையப்புள்ளி நோக்கி நகரவேண்டும்! சாதியில்லாத, மதமில்லாத, தேசிய மில்லாத உலகை உருவாக்க வேண்டும்! எல்லைக்கோடுகள் அனைத்தும் மனிதக் குருதிகளால் வரையப்பட்டவை! - மேற்கூறிய கருத்துக்கள் அனைத்தும் யாரோவொரு இலக்கிய வாதி சொன்னதல்ல, ஒரு தொழிலதிபர் சொன்ன கருத்துக்கள் என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா? அவர்தான் மதுரா டிராவல்ஸ் நிறுவனர் கலைமாமணி வீ.கே.டி.பாலன்.
"வேறு எதையும் நம்பாதே... உன்னை நம்பு! உன் உழைப்பை மட்டுமே நம்பு! உன் உழைப்பால் ஆகாத எதுவுமில்லை!" என்ற நம்பிக்கை விதைகளை, தான் ஏறுகின்ற மேடையெங்கும் விதைத்து, இளைய சமுதாயத்தினருக்கு வாழும் வழிகாட்டியாக... அனுபவப் பாடமாக வலம்வந்த தொழிலதிபர் மதுரா டிராவல்ஸ் நிறுவனர் கலைமாமணி வீ.கே.டி.பாலன், கடந்த நவம்பர் 11-ஆம் தேதி திங்கட்கிழமை யன்று, ஓயா உழைப்பிலிருந்து விடைபெற்றுக்கொண்டார்.
வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை, காலில் ஒரு ஹவாய் செருப்புடன்... கிராமத்துப் புன்னகை தவழும் முகத்துடன், வாழ்நாள் முழுக்க, தனது சொல்லிலும், செயலிலும் எளிமைவாதியாக வாழ்ந்தவர் வீ.கே.டி.பாலன். முழுப்பெயர் வீரசங்கிலி கண்ணையா தனபாலன்.
தமிழகத்தின் தென்கோடியில், தமிழ்க்கடவுள் முருகன் குடி கொண்டுள்ள திருச்செந்தூரில், மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் கண்ணையா - இசக்கியம்மாள் தம்பதியரின் மகனாக, 1954, ஜனவரி 26-ஆம் தேதி பிறந்தார். அவரது சிறு வயதுப் பருவம் முழுக்க வறுமை சூழ்ந்தது. தினசரி பசியாறுவதற்கே கடினமான குடும்பச்சூழலில் அவரால் எட்டாவது வரை மட்டுமே படிக்கமுடிந்தது. ஏழ்மை என்பதன் துயரை, சமூகத்தால் கைவிடப்படலின் துயரத்தை... வார்த்தையாக இல்லாமல் வாழ்க்கையாக உணர்ந்ததால்தான் அவர் பின்னாளில் பொருளாதாரத்தில் முன்னேறிய பிறகு, சமூகத்தால் ஒதுக்கப்பட்ட வர்களை, ஒடுக்கப்பட்டவர்களை அரவணைத்து நம்பிக்கையளிப்பதை ஓர் சமூகக்கடமையாகக் கொண்டிருந்தார்.
உழைப்பால் உயர்ந்தவர்
திருச்செந்தூரிலேயே இருந்தால் தமது வாழ்க்கையில் எவ்வித மாற்றமும் ஏற்படாதென உணர்ந்தவர், 1981-ஆம் ஆண்டில் திருச்செந்தூரிலிருந்து சென்னைக்கு வந்துசேர்ந்தார். வந்தாரை வாழவைக்கும் சென்னையில் பாலனை வரவேற்க யாருமேயில்லை. அவருக்குத் தெரிந்ததெல்லாம் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் மட்டுமே. எனவே அங்கேயே படுத்துறங்கி எழுந்து, பகலில் வேலை தேடி ஒவ்வொரு நிறுவனமாக அலைவார்.
ஏறியிறங்கிய படிக்கட்டுகள் அதிகம். ஆனால் எந்த படிக்கட்டும் அவரை உள்ளுக்குள் அழைக்கவில்லை. அதற்காக அவர் அசரவில்லை. ரயில் நிலைய நடைமேடையில் படுத்துறங்குபவர் களை அவ்வப்போது சந்தேக கேஸில் பிடித்துச்செல்வது காவல்துறை யினரின் வழக்கம். அதுபோல் ஒருமுறை, அங்கு படுத்துறங்கிய பாலனை பிடித்துச்செல்ல காவல்துறையினர் முயன்றபோது, அவர் களிடமிருந்து தப்பி, வேறொரு இடத்தில் உறங்கியிருக்கிறார். அவர் படுத்துறங்கிய இடம் அமெரிக்க தூதரகத்துக்கு முன்புறம். அங்கே ஏற்கனவே விசா வாங்குவதற்காக வருபவர்கள், நீள்வரிசையில் காத்திருப்பதிலிருந்து தப்பிப்பதற்காக முந்தைய நாளே அங்கு வந்து படுத்துறங்கி இடம்பிடிப்பது அந்நாளில் வழக்கமாக இருந்துள்ளது. அவர்களின் வரிசையில்தான் பாலனும் படுத்துறங்கியிருக்கிறார்.
மறுநாளில் அதே வரிசையில் முன்னும்பின்னுமாக சிலர் நின்றுகொண்டிருக்க, அவருக்கு புரியவேயில்லை. அப்போது ஒருவர் வந்து, "உங்கள் இடத்தை எனக்குத் தருகிறீர்களா? நான் அதற்காக உங்களுக்கு இரண்டு ரூபாய் தருகிறேன்" எனக் கூறியிருக்கிறார். அந்நாளில் இரண்டு ரூபாய் என்பது ஒருநாள் பசிபோக்குவதற்கு போதுமான தொகை. அவரிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு அந்த இடம் குறித்து விசாரித்தபோது அவருக்கு ஆச்சர்யமாக இருந்தது.
அமெரிக்க விசா வாங்குவதற்காக தூதரகத்துக்கு வருபவர்கள், நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தவிர்ப்பதற்காக, முதல் நாளே வந்து இடம்போட்டு படுத்துறங்குவார்களாம். அப்படி வந்து இடம்பிடிக்க முடியாதவர்கள், அவர்களுக்கு பதிலாக யாரையாவது இடம்பிடிக்க நிறுத்துவார்களாம். அதைப்போல் நினைத்துதான் பாலனுக்கு 2 ரூபாயை அளித்திருக்கிறார். அவரோ, இது நல்ல வருமானமீட்டும் வாய்ப்பாக இருக்கிறதே என நினைத்து, பின்பு அதையே தொழிலாகத் தொடர்ந்தார். தான் மட்டும் நிற்பதோடு, துண்டு போட்டும், கல்லை எடுத்துவைத்துமாக அடுத்தடுத்து இடம்பிடித்துக் கொடுத்து சம்பாதிக்கத் தொடங்கினார்.
அப்படியான தருணத்தில், அமெரிக்க தூதரகத்துக்கு வந்திருந்த ஒரு பயண ஏற்பாட்டு நிறுவன அதிபர், இவரது செயல்பாட்டால் ஈர்க்கப்பட்டு, "நான் உனக்கு 5 ரூபாய் தருகிறேன். எனது நிறுவனத்தில் பகலில் வேலைக்கு வந்துவிடு. இரவில் நீ எப்பவும்போல் இங்குவந்து படுத்துறங்கு" எனக்கூறியிருக்கிறார். பாலனுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. அந்த பயண ஏற்பாட்டு நிறுவனத்தில் மிகவும் கடுமையாக உழைத்தார். அந்தத் தொழிலின் நுணுக்கங்கள் அனைத்தையும் கற்றுக்கொண்டார். கனிவான சேவையின் காரணமாக, நிறைய தொடர்புகளையும் உருவாக்கிக்கொண்டார். அதன்பின்னர், 1986-ஆம் ஆண்டு, மதுரா டிராவல்ஸ் லிமிடெட் நிறுவன சேவையைத் தொடங்கினார். தனது பயண ஏற்பாட்டு நிறுவனத்தில் பல்வேறு புதுமைகளைப் புகுத்தினார். தமிழ்நாட்டில், 365 நாட்களும், 24 மணி நேரமும் பயண சேவைகளை வழங்கும் பயண ஏற்பாட்டு நிறுவனங்களுக்கு இவரது நிறுவனமே முன்னோடி.
சென்னையில் தனது வாழ்க்கையின் தொடக்கமாக அமைந்த எழும்பூர் ரயில் நிலையத்துக்கு எதிரிலேயே சொந்த கட்டடத்தில் தனது நிறுவனத்தை இயக்கிவந்தார்.
எளியோர் மீதான அன்பு அவரது வாழ்க்கையில் அவர்பட்ட அவமானங்கள், புறக்கணிப்பு கள், அனுபவங்கள் என ஒவ்வொன்றும் அடுத்த தலைமுறையினருக்கு படிப்பினையானவை. தனது நிலையில் உயர்ந்தபோதும், ஏற்றத் தாழ்வின்றி அனைவரையும் நேசித்தார். சமூகத்தால் ஒதுக்கப்படும் திருநங்கைகள், யாசகர்கள், ஆதரவற்ற முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள், சிறைத்தண்டனையிலிருந்து விடுதலை பெற்றவர் கள், எய்ட்ஸ் நோயாளிகள் என அனைவருக்கும் ஆதர வளித்து, அவர்களின் வாழ்க்கை மேம்படுவதற் காக பாடுபட்டார். தனது தொழிலில், பணக் கார வர்க்கத்தினர்களோடு பழகிக்கொண்டு, புறக்கணிக்கப்பட்ட சமூகத்தையும் அரவணைப்பது குறித்து அவர் கூறுகையில், "முன்னது எனது தொழில்.
பின்னது எனது இயல்பு. வெறுத்து ஒதுக் கத்தக்கவர்கள் என்று இவ்வுலகில் யாருமேயில்லை. அவர்களில் ஒருவ னாக இருந்து உருவான நான் அவர்களை எப்படி வெறுத்திட முடியும்?!" எனக் குறிப்பிடுவார். தன் வாழ்நாளின் இறுதிவரை, தனது அனுபவத்தால் பெற்ற நற்கருத்துக் களை, இச்சமூகத்துக்கு கொண்டு சேர்ப்பதில் ஆர்வத்தோடு இருந்தார், அதன் ஒரு பகுதியாகத்தான் பொதிகை தொலைக்காட்சியில் 'வெளிச்சத்தின் மறுபக்கம்' என்ற நிகழ்ச்சியில், சமூகத்தின் பார்வையில் புறக்கணிக்கப்பட்ட எளிய மக்களையும், அவர்களுக்காக இயங்கும் சமூக ஆர்வலர்களையும் சந்தித்து உரையாடியதன்மூலம் அவர்கள் மீது சமூகத்தின் கருணைப்பார்வை விழுவதற்கு காரணமாக இருந்தார் வீ.கே.டி.பாலன். எளிய மனிதர்களை சாலையோரங்களில் சந்தித்து, அங்கேயே அமர்ந்து அவர்களோடு ஈர்ப்பான குரலில் மிகவும் இயல்பாகப் பேசி, அவர்களின் வாழ்க்கைமுறையை மக்களின் முன்பாகக் காட்சிப்படுத்தியவர் பாலன். இவரது சமூகநோக்கான செயல்பாட்டைப் பாராட்டும்விதமாக 'கலைமாமணி' விருதளித்து பெருமைப்படுத்தியது தமிழக அரசு!
இளைஞர்களுக்கு அறிவுரை
இளைஞர்களுக்கு அவரது அறிவுரைகள் மிகவும் முக்கிய மானவை. படித்துமுடித்ததும் இன்னொரு நிறுவனத்தில் வேலைக்குச் செல்லாதீர்கள். அப்படி வேலைக்குச் சென்றால் உங்கள் வாழ்க்கையை அடமானம் வைக்கிறீர்கள் என்று அர்த்தம்! எனது நிறுவனத்தில் வேலைக்கு யாராவது வேலைக்குச் சேர வரும்போது, தொடர்ந்து என்னுடைய நிறுவனத்திலேயே வேலைசெய்வதாக இருந்தால் வேலைக்கு வராதீர்கள். இரண்டாண்டுகள் எங்களிடம் பணியாற்றி அனுபவங்களைப் பெற்றபின் வெளியே சென்று தனியாகத் தொழில் தொடங்கவேண்டும். அப்படி தொழில் தொடங்கினால் உதவத் தயாராக இருக்கிறேன். எங்கள் நிறுவனத்தின் பெயரிலேயே இன் னொரு ஊரில் நீங்கள் நிறுவனத்தை நடத்தி வருமானமீட்டினாலும் மகிழ்ச்சியே என்று இளைஞர்களைத் தொழில்முனைவோர் களாக மாற்றுவதற்கு உந்துசக்தியாக இருந்தவர்.
உழைப்பின் மேன்மை குறித்து முற்போக்காகவும், பகுத்தறி வோடும் அவர் பேசுவதே தனி அழகு! தொழில் முனைவோர்கள் நேரம் பார்க்காமல் இஷ்டப்பட்டு, கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும். உன் உழைப்பே உன் வாழ்க்கை! உன் உழைப்பின் அளவு தான் உன் வாழ்க்கையின் உயர்வு இருக்கும்! எந்த பக்தியும் உன்னை உயர்த்த உதவாது! ஏதேனும் தொழிலில் பின்னடைவு ஏற்பட் டால் உடனே அவர்கள் சொல்லும் இரண்டு காரணங்கள், நேரம் சரி யில்லை, ஜாதகக்கட்டம் சரியில்லை! இப்படி நேரத்தையும், ஜாதகத்தையும் காரணமாகக் கூறும் மனோ பாவத்தை தூக்கி வீசவேண்டும். ஆயிரம் பெரியார் வந்தாலும் இவங்க கேட்கமாட்டாங்க. கடவுள் மேலயும் சேர்த்து பழியப் போட்டுடுவாங்க என்கிறார்.
தான் கல்விக்கூடத்தில் அதிகம் கற்காத போதும் தொழிலில் முன்னுக்கு வந்தது குறித்து பேசும்போது, வாழ்க்கை கற்றுக்கொடுக்காத தையா பள்ளிக்கூடங்கள் கற்றுக்கொடுத்து விடும்? என் வாழ்க்கையின் ஓட்டத்தில் அவ்வளவு அவமானங்கள், சிரமங்கள், காவல்துறையின் நெருக் கடிகள், சிறைச்சாலை என அனைத்தையும் சந்தித்து விட்டுத்தான் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். தொழிலில் ஈடுபடுபவர்கள் தங்களை 'பிஸி' என்று கூறிக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். பிஸி என்று கூறுவதன் அர்த்தம், மற்றவர்களை நிராகரிப்ப தற்கு ஒப்பானது. ஒருவர் தங்களை சந்திக்கவோ, தங்களோடு பேசவோ முயலும்போது, தன்னால் இயலாது, ரொம்பவும் பிஸி என்று கூறுகிறோ மென்றால், அவரை சந்திக்கவோ, உரையாடவோ மனமில்லை என்பதாகத்தான் அர்த்தம். நமக்குத் தேவையில்லைன்னு நினைக்கும் மனிதர்களிடம்தான் பிஸின்னு சொல்வோம்! அப்படி மனநிலையிலிருந்தால் அதன்பின் அவர்கள் உங்களை நெருங்கவே மாட்டார்கள் என்கிறார் வீ.கே.டி.பாலன்.
அதேபோல், தொழிலில் எந்நேரமும் மன உளைச்சலோடு, குழப்பத்தோடு இருப்பதாகச் சொல்வ தும் தவறு என்கிறார். தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதற்கேற்ப, நம் மன உளைச்சலென்பது நாமாகவே உருவாக்கிக்கொள்வதன்றி, பிறரால் நமக்கு ஒருபோதும் நேராது என்கிறார். ராணுவ வீரர்களைவிடவா கடினமான பணியை நாம் செய்துவிடப் போகிறோம் என்று கேட்கிறார்.
ஆக, நாமாகவே பேராசைப் பட்டால் மட்டுமே நமக்கு மன உளைச்சல் ஏற்படும். நம்மால் முடிந்ததை மட்டுமே செய்ய வேண்டும். கடன் வாங்கி தொழில் செய்ய நினைப்பதோ, கடன் வாங்கி வாழ்க்கையை நடத்த நினைப்பதோ தவறு என்கிறார்.
தொழில்முனைவோர்கள், படோடாபமாகத் தொழிலை நடத்த முயலக்கூடாது. வாடிக்கையாளர்களுக்கான வசதியை மட்டும் செய்து கொடுப்பது மட்டுமே முக்கியம். அப்போதுதான் வாடிக்கை யாளர்கள் நம்மைத்தேடித் தொடர்ந்து வருவார்கள். வாடிக்கையாளர்களின் முதலீடுதான் எனது வெற்றி! அதற்கு, நம்முடைய சேவை நன்றாக இருக்க வேண்டும். சேவைக்கான கட்டணம் நியாயமாக இருக்கவேண்டும். நாம் விற்கும் பொருள் தரமானதாக இருக்கவேண்டும். வாழ்க்கையில் யாரையும் ஏமாற்றி முன்னேற முயற்சிக்கக்கூடாது. அப்படி ஏமாற்ற நினைப்பவர்களுக்கு இந்த உலகம் சொந்தமில்லை என்கிறார்.
பெண்கள் ஜல்லிக்கட்டு தான் ஒரு தமிழர் என்ற பெருமிதம் எப்போதும் வீ.கே.டி.பாலனுக்கு உண்டு. தமிழர்களின் பாரம்பரிய விளையாட் டான ஜல்லிக்கட்டில் புதுமையாகப் பெண்களுக்கான ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி யைக் கொண்டுவருவதற்கான முன்னெடுப்புக்களை எடுத்துவந்தார். அடுத்த ஆண்டில் தமிழ்நாடு அரசோடு இணைந்து, அலங்காநல்லூரில் பெண் வீராங்கனைகள் காளை மாட்டை அணையக் கூடிய ஜல்லிக்கட்டை நடத்துவது குறித்து செய்தியாளர் களிடம் தெரிவித்திருந்தார். பெண் காவலர்கள், கபடி வீராங்கனைகள், கல்லூரி மாணவிகளில் ஜல்லிக்கட்டில் ஈடுபடும் துணிச்சலுள்ள பெண்களுக்கு அதற்கான 3 மாதப் பயிற்சியளிப்பதோடு, பாதுகாப் புக் கவச உடைகளையும் வழங்கவுள்ளதாகக் குறிப்பிட்டார். அந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை உலக அளவிலான சுற்றுலா நிறுவனங்களையும், இந்தியாவிலுள்ள 38 சுற்றுலா நிறுவனங்களையும் அழைத்துவந்து காண்பிக்கத் திட்டமிட்டிருந்தார். இதன்மூலம் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டை உலக அளவில் கொண்டுசெல்லும் அவரது முயற்சி பாராட்டுக்குரியது.
சொல்லத் துடிக்குது மனசு கலைமாமணி வீ.கே.டி.பாலன், தனது அனுபவத்தின்மூலமாகப் பெற்ற முத்தான கருத்துக்களை நம் நக்கீரன் வெளியீடாக வந்த 'சொல்லத் துடிக்குது மனசு' என்ற நூலில் விரிவாக எடுத்துரைத்துள்ளார். இந்நூலில், 'அரவணைப்போம் அரவாணிகளை' என்ற தலைப்பில், 'அவர்களுக்கும் உயிர் இருக்கிறது, உணர்வுகள் இருக்கிறது,
அவர்களும் மனிதப்பிறவிகள்தான் என்பதையே நாம் பல நேரங்களில் மறந்துவிடுகிறோம்.' என்று திருநங்கைகளுக்கு பரிந்துபேசுவதோடு, திருநங்கைகள் குறித்த பெருமைக்குரிய பல்வேறு செய்திகளை அக்கட்டுரையில் பகிர்ந்துள்ளார். 'எய்ட்ஸ்' என்ற கட்டுரையில், அந்நோய் குறித்த பல்வேறு தகவல்களைப் பகிர்வதோடு, எவ்விதத் தவறும் செய்யாமலேயே எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுவோர் குறித்தும், அதுகுறித்த விழிப்புணர்வு குறித்தும் எடுத்துரைக்கிறார்.
'கை வீசம்மா கை வீசு' என்ற கட்டுரையில், மன வளர்ச்சிக் குறைபாடுடைய குழந்தைகள் பிறப்பது குறித்தும், அவர்களைப் பராமரித்து வளர்க்கும் பெற்றோர்களின் சிரமங்கள் குறித்தும், இவர்களை சமூகம் மனித நேயத்தோடு அணுகவேண்டும் என்பது குறித்தும் நெகிழ்ச்சியாக எடுத்துரைக்கிறார்.
அதேபோல், 'தாய்மொழி சாகுமானால்' என்ற கட்டுரையில், தாய்மொழி வழிக்கல்வி யின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக் கிறார். தாய்மொழியை விடுத்து பிற மொழியில் கற்பதைவிடக் கொடுமை வேறுதுவும் இல்லை என்கிறார். உலக அளவிலும், அனைத்து நாடுகளும் அந்தந்த நாட்டின் தாய்மொழியைக் கற்பவர் களுக்கே வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்திலும் முன்னுரிமை கொடுப்பதைத் தனது உலகளாவிய அனுபவத்தின் மூலம் சுட்டிக்காட்டுகிறார். 'சிறை' என்ற கட்டுரையில், தமிழ்நாட்டிலுள்ள சிறைச்சாலைகள், குற்றவாளிகளைத் திருத்துவதைவிட, இன்னும் பெரிய குற்றங்களைச் செய்யக்கூடியவர்களாக வளர்த்தெடுக்கும்விதமாகத்தான் சிறைச்சாலைக்குள் செயல்பாடுகள் இருக்கின்றன என்பதை அக்கட்டுரையில் உணர்த்துகிறார். மேலும், கடன் தொல்லைகளில் சிக்காதிருக்கவும், சரியான உணவுப் பழக்கத்தை உருவாக்கவும், சுற்றுலா செல்லும் பயணிகள் கவனத்தில் கொள்ளவுமெனப் பல்வேறு தகவல்களை 'சொல்லத் துடிக்குது மனசு' என்ற நூலில் மிகவும் எளிமையாக அனைவருக்கும் புரியும்விதத்தில் எழுதியிருக்கிறார். இந்த நூல், நக்கீரன் வெளியீடாக, சமூக முன்னேற்றத்துக்கான விழிப்புணர்வு நூலாக, அவரது அனுபவப் பகிர்வாக வெளிவந்துள்ள சிறப்பான நூலாகும். தன் வாழ்நாள் முழுக்க உழைப்பையும், சமூக முன்னேற்றத்தை யுமே சிந்தனையாகக் கொண்டு வாழ்ந்த சமூக சேவகர் வீ.கே.டி.பாலன், தனது நற்கருத்துக்களால் என்றென்றும் நினைத்துப் போற்றப்படுவார்!