விப்பேரரசு வைரமுத்துவோட "கள்ளிக்காட்டு இதிகாசம்' நூல் வெளியீட்டு விழா. ஜே... ஜேன்னு காமராசர் அரங்கமே கூட்டம் நிரம்பிவழியுது. வழக்கம்போலவே முத்தமிழறிஞர் கலைஞரின் பொற்கரங்களால் நூல் வெளியிடப்பட்டது. வைரமுத்து சார் பேசும்போது சொன்னாரு கள்ளிக்காட்டு இதிகாசம் நூலின் விலை 500 ரூபாய். இன்று மட்டும் 400 ரூபாய்க்கு விற்கப்படும். விழா முடிந்து நான் உங்களுக்கு அதில் கையொப்பமிட்டு தருகிறேன் அப்படின்னு சொன்னார். விழாவும் முடிஞ்சுது. நான் ஓடிப்போய் அரங்கத்து வெளியில இருக்கக்கூடிய விற்பனையாளர்கிட்ட ஒரு புத்தகத்தை வாங்கினேன். கூட்ட நெரிசலில் முண்டியடிச்சுகிட்டு வைரமுத்து ஐயா பக்கத்துல போய் நின்னுகிட்டு அந்த புத்தகத்தை அவர்கிட்ட கொடுத்தேன். அதை அவர் வாங்கி முதல் பக்கத்தில கையெழுத்து போட்டுக் கொடுத்தாரு. அப்படியே அவரு பக்கத்தில் நின்னு ஒரு போட்டோ எடுத்துட்டுகிட்டேன்.

புத்தகத்தைத் திருப்பி, பின்பக்க அட்டைய பார்க்கும்போது கள்ளிக்காட்டு இதிகாசம் நூல் உருவான அனுபவத்த கவிப்பேரரசு வைரமுத்து சொல்லி இருந்தாரு.

கடைசி அத்தியாயம் எழுதி முடித்த கனத்த மனதோடு, வைகை அணையின் மதகுத் தார்ச்சாலையில் படுத்துப் புரண்டுகொண்டே இந்த படைப்புக்காகத்தான் காலம் எங்களைத் தண்ணீரில் அமிழ்த் திப் பிழிந்து தரையில் வீசியதோ என்று கடைவிழியில் நீரொழுக நீரொழுக நினைத்துக் கிடந்தேன்.

அந்த வரிகளைப் படிக்கும்போது என் கண்களில் இருந்தும் கன்னத்தின் வழியாக நீர் வழிவதை என்னால் உணர முடிந்தது.

Advertisment

ஐம்பெரும் காப்பியங்கள் மாதிரி, இரட்டைக் காப்பியங்கள் மாதிரி, "கள்ளிக்காட்டு இதிகாசம்' ஒரு காப்பியம்தான். அதில் தேனி வட்டார மக்களின் வாழ்வியலை நிஜமாகவே படம் பிடித்திருப்பார் வைரமுத்து.

ஒரு படைப்பை உருவாக்குகிறபோது, ஒரு எழுத்தாளன் இறந்த காலத்திற்குச் சென்று இன்னொரு ஜென்மம் எடுத்து வாழ்ந்து பார்க்கிறான். அப்படி வாழ்ந்து பார்க்கிற படைப்புகள் எழுத்துருவாக்கம் பெறுகிறபோதுதான் அந்த படைப்புகள் உயிர்ப்புள்ள படைப்புகளாக பரிணமிக்கிறது.

அப்படி கவிப்பேரரசு வைரமுத்து, வைகை நீர்த்தேக்கத்தில் இருக்கும் நீரையெல்லாம் வாரி இறைத்துவிட்டு, தன் முப்பாட்டன் வாழ்ந்த முதல் அத்தியாயத்திற்கு போய், பொன்னையா தேவரோடும், சின்னாங்கி உடைய தேவரோடும், பேயத்தேவரோடும், மொக்கராசோடும் அன்னக்கொடியோடும் இன்னொரு ஜென்மம் எடுத்து வாழ்ந்த வாழ்க்கை அனுபவம்தான் "கள்ளிக்காட்டு இதிகாசம்' என்பது நாம் அந்த நூலைப் படிக்கும்போதே தெரியும். எழுதுவது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல அப்படிங்றதும் நமக்குப் புலப்படும்.

Advertisment

நாம் பழங்களை மட்டுமே சாப்பிடுகிறோம். அந்தப் பழம் உருவாவதற்கு தேவையான நீருக்காக, மண்ணுக்குள் ஊடுருவும் வேருக்கான தேடல்களும், அந்தப் பழம் உருவாகும் கருவைக் காப்பாற்றுவதற்காக காற்றோடும், மழையோடும், வெயிலோடும், புயலோடும் ஒரு சூலகத்திற்குள் ஏற்படும் போராட்டங்களும் நமக்கு புரிவதற்கு வாய்ப்பில்லை.

இதைத்தான் கவிப்பேரரசு வைரமுத்து கீழ்க்கண்டவாறு குறிப்பிடுவார்.

எழுதுவது என்பது எனக்கு எப்போதுமே இனிப்பான விஷயமாக இருந்ததன்று. அது ஒரு ரகசிய அவஸ்தை.

எழுதும்போது இருக்கக்கூடிய அந்த நெருப்பு நிமிசங்களில், மொழிக்கும் எனக்கும் மூளும் யுத்தம் மிக மோசமானது.

மொழியோடு போரிட்டு ஜெயித்தால், என் உணர்ச்சி அழகான வார்த்தைகளால் தன்னை அலங் கரித்துக்கொண்டு அமைதி பெறுகிறது.

vv

அஃதில்லாமல் மொழியோடு போரிட்டுத் தோற்றுப் போயின், என் உணர்ச்சி பொய்யான வார்த்தைகளால் போர்த்திக் கொள்வதில்லை. அது நிர்வாணமாகவே உறங்கி விடுகிறது. அல்லது இறந்துவிடுகிறது.

ஒரு சின்னப் படைப்பில் ஈடுபடும்போதுகூட நான் உஷ்ணப்பட்டு விடுகிறேன்.

இருதய ரத்தம் கண்களுக்கு ஏறி, புருவப் பொட்டு வரை போகிறது. நான் எழுதுவது சரியோ, தவறோ ஒன்றை எழுதும்போது எனக்கு நேருகிற உணர்ச்சி நிஜமானது.

காட்டுப்பாதையில் போகும் கார்ச்சக்கரம் மாதிரி, என் ஒவ்வொரு எழுத்துக்குப் பிறகும் நான் தேய்மானம் அடைகிறேன். என் எழுத்து ஒவ்வொன்றிலும் என் உயிரில் கொஞ்சம் ஒட்டி இருக்கிறது. எழுதி முடிக்கும் போது இழந்த உயிர் ஊறிவிடுகிறது.

ஒரு தேர்வு எழுதுகிற கவனத்தோடும், காதலிக்கு கடிதம் எழுதுகிற சுதந்திரத்தோடும் நான் என் எழுத்துக்களை படைக்கிறேன்.

பல்வேறு வார்த்தைகளை உள் மனசுக்குள் ஊறப் போட்டு, ஊறப் போட்டு எனக்கு ருசித்த வார்த்தை களை மட்டுமே என் கவிதா தேவிக்கு நான் படையலிடுகிறேன்.

ஒரு படைப்புக்கான சிருஷ்டியில் ஈடுபடும் போது என் கைகள் ஒன்றையொன்று பிசைந்து கொள்வதையும், என் கண்கள் அகல மலர்ந்து வெட்ட வெளிகளை விரிப்பதையும், என் நரம்புகள் நாணேற்றிக் கொள்வதையும், என் ரத்தம் சுடுவதையும், நான் இன்னொரு ஜீவனாக உடைந்து உருமாறுவதையும் என்னால் உணர முடிகிறது.

கவிதையைப் பெற்றுப் போட்ட களைப்பில் படுக்கையில் போய் ஒரு தலையணையைப்போல் விழுந்துவிடுகிறேன். உஷ்ணத்தை அப்போது தான் உணர்கிறேன். கண்ணிமைகள் தாமே கவிழ்ந்து கொள்கின்றன. தேகம் எங்கும் வியாபித்திருக்கும் வெப்பம் மெல்ல மெல்ல ஆவியாகிறது. மீண்டும் என் பெயருக்குரியவனாய் மறுபடி நான் பிறப்பெடுக்கிறேன். மேற்சொன்ன அவஸ்தைகளில் ஏதாவது ஒன்றுகூட இல்லாமல் இப்போதெல்லாம் என்னால் கடிதம் கூட எழுத முடிவதில்லை.

ஒரு அமுதசுரபியை ஊருக்கு உற்பத்தி செய்து தருவதற்காக ஒரு எழுத்தாளன் பகலிரவாய் பட்டினிக் கிடக்கிறான் என்று ஒரு எழுத்தாளனுக்கான உணர்ச்சிகளை, ஒரு எழுத்தாளனுக்கான புரிதல்களை, எழுதும்போது ஏற்படக்கூடிய ரணங்களை, கவிப் பேரரசு வைரமுத்து அவர்கள் அழகாய் பதிவிட்டு இருப்பார்.

அந்த கள்ளிக்காட்டு இதிகாச புத்தகத்தையும், அவரோடு சேர்ந்து எடுத்த போட்டோவையும் வாங்கிக்கிட்டு வந்து ஹாஸ்டல்ல இருக்கிறவங்க எல்லார்கிட்டயும் காட்டுனேன்.

அப்ப அங்க இருந்தவங்க எல்லாரும் யோசிக்கி றாங்க. யார்ரா இவன் ஆளு. எப்ப பாரு எங்கேயாவது, எதுக்காகவாவது சுத்திக்கிட்டே இருக்கிறான். நம்ம எல்லாம் ஹாஸ்டல்லயே கிடக்கிறோம். இவன் அப்படியே ஜாலியா எல்லாரையும் பார்த்துட்டு, விடாமுயற்சியுடன் இருக்கிறானே, அப்படின்னு ஹாஸ்டல் எல்லாரும் பேசிக்கிறாங்க.

அதுக்கப்புறம் இசைஞானி இளையராஜா சார் லயோலா காலேஜுக்கு ஒரு பங்க்ஷனுக்கு வராரு.

அதுக்கான இன்விடேஷன் நான் வேலைபாக்கிற நவீன வேளாண்மை தொழில்நுட்ப அலுவலகத்துக்கு வருது. அது வந்து ஒரு விவசாயத்தை ஒருங்கிணைக்கிற, விவசாயம் சம்பந்தப்பட்ட, ஒரு புத்தக வெளியீட்டு விழா. அதுல மதுரையிலுள்ள நமச்சிவாயம்ங்ற பேராசிரியர் வந்து ராஜா சாருக்கு பழக்கம் போல, அவருடைய நூல் வெளியீட்டு விழா. ராஜா சார்தான் அவருடைய நூலை வெளியிட்டாரு.

இப்ப அந்த நமச்சிவாயம் சாருடைய பையன் ஒரு கேமரா வச்சிருந்தாரு. அந்த கேமராவில்தான் போட்டோ எடுக்கணும். வேற எந்த கேமராவும் அவங்க அங்க அலோ பண்ணல. அந்த கேமராவில்தான் இளையராஜா சாரோட நின்னுக்கிட்டு ஒரு போட்டோ எடுத்துகிட்டேன். ஆனா அதுல பாதி முகம் தெரியிற மாதிரிதான் போட்டோ இருந்தது. மத்தவங்க எல்லாம் போட்டோ எடுக்க முடியல. இளையராஜா சாரோட எடுத்த போட்டோவை ஸ்டுடியோல கொடுத்து அதை பிரேம் பண்ணி வச்சுக்கிட்டேன். அதுக்கப்புறம் பிற்காலத்துல ராஜா சாரோட இசையிலேயே நான் பாடறதுக்கு எனக்கு வாய்ப்பு கெடைக்குது.

திடீர்னு ஒரு நாளு நவீன வேளாண்துறை பத்திரிகையினுடைய ஆசிரியர் அரிதாஸ் இந்த விளம்பரம் பார்த்தாயா அப்படின்னு கேட்டாரு. என்ன விளம்பரம்னு பாத்தா வயலின் விற்கப்படும் அப்படின்னு பேப்பர்ல போட்டிருந்துச்சு. அது எவ்வளவு அப்படின்னு சொல்லி கேளு நான் உனக்கு வாங்கித் தரேன் அப்படின்னு சொன்னாரு. அந்த வயலின் 1200 ரூபா. அப்ப இந்த 1200 ரூபாய் அப்படிங்கறது ரொம்ப அதிகம். அப்பவே புது வயலின் 3000, 4000 வரும். அவருதான் 1200 ரூபாய் என்கிட்ட கொடுத்து போய் வாங்கிக்க அப்படின்னு சொன்னாரு. அதை வாங்கிட்டு வந்து நான் கொஞ்ச நாள் அதை பிராக்டிஸ் பண்ணிக்கிட்டு இருந்தேன். இது மாதிரி போறப்ப வர்றப்ப செலவுக்கு காசும் கொடுத்து எனக்கு ஒரு அரவணைப்பா இருந்தாரு. அப்ப அவருடைய பசங்கள நான்தான் ஸ்கூல்ல கொண்டுபோய் விட்டுட்டு, அழைச்சிட்டு வருவேன். இப்ப அந்த பசங்க வளந்து ரெண்டு பேரும் பெரிய டாக்டர் ஆயிட்டாங்க. அந்த டாக்டர் பையங்க கல்யாணத்துக்கு நான்தான் கச்சேரி பண்ணினேன்.

அதுக்கப்புறம் லலிதாவின் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு கடிதம் வந்துச்சி. அந்த நிகழ்ச்சியில் கலந்துகிறத்துக்காக என்னுடைய நண்பர் கென்னடி ஜான்சன் அப்படிங்கறவரு என்ன அழைச்சிட்டுப் போறதுக்கு ராயபுரத்தில் சைக்கிள் எடுத்துட்டு வந்திருந்தாரு. நாங்க ரெண்டு பேரும் சைக்கிள்லையே ஆடிசனுக்குப் போறோம். அந்த நிகழ்ச்சிக்கு "ஜானி ஆபிரகாம்', "கிருஷ்ணராஜ்' அண்ணன் ரெண்டு பேரும்தான் ஜட்ஜ்.

"ஜானி ஆபிரகாம்' பெருசா வெளியில தெரியாட்டியும், சினிமாவுல நிறைய பாட்டு பாடி இருக்கிறாரு.

கூடையில கருவாடு

கூந்தலிலே பூக்காடு,

என்னாடி பொருத்தம் ஆயா

எம்பொருத்தம் இதைப் போல

தாளமில்லாப் பின்பாட்டு ஆஹா..

தாளமில்லாப் பின்பாட்டு

கத்து கிட்டா எங்கூத்து

என்னுயிர் ரோசா எங்கடி போறே

மாமலர் வண்டு ஆடுது இங்கு

அம்மாளு அம்மாளே.

இந்த பாட்டு எல்லாமே ஜாலி ஆபிரகாம்தான் பாடியிருக்காரு.

லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியில் பி.எச். அப்துல் ஹமீதுதான் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரா இருந்தாரு. இந்த நிகழ்ச்சி சாந்தோம்ல உள்ள "இமேஜ் ஆடிட்டோரியத்தில்தான்' நடக்குது. இந்த ஆடிட்டோரியம் சாந்தோம்ல உள்ள ஐயப்பன் கோயில் பின்னாடி இருக்கு.

மச்சான்? ஆளான நாள் முதலா

யாரையும் நெனச்சதில்ல

மாமா நான் உங்களுக்கே

வாக்கப்பட ஆச பட்டேன்

வேணான்னு சொல்லுறீகளே

சும்மா வெறும் வாய மெல்லுறீகளே

ஆடியில கட்டிக்கிட்டா

சித்திரைக்கு புள்ள வரும்

ஆகாது ஆகாது மச்சானே

இது தோதான தை மாசம் மச்சானே

ஆகாது ஆகாது மச்சானே?

இது தோதான தை மாசம் மச்சானே

இந்தப் பாட்டு நான் பாடுறேன். ஃபீமேல் வாய்ஸ்லயும் நானே பாடுறேன். அந்த நிகழ்ச்சியிலதான், சிறந்த குரல்வள பரிசும், முதல் பரிசும், ரெண்டு கோல்ட் காயினும் கொடுத்தாங்க. முதல் முதல்ல சென்னைக்கு வந்து, ஃபர்ஸ்ட் எடுத்த உடனே லக்கி பிரைஸ் அடிச்சது அப்பதான்.

2004-ல சுனாமி வந்தப்ப, சுனாமிக்காக ஒரு பாட்டு எழுதி, கச்சேரி பண்ணி, கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபாய் கல்லூரி சார்பா முதலமைச்சரோட நிதிக்கு அனுப்புனோம்.

மேஜர் சரவணன் அப்படிங்கிறவரு 99-ல, கார்கில் எல்லையில் இறந்துட்டாரு. அப்போ அவருக் காக ஒரு பாட்டு எழுதியிருந்தேன். அந்த பாட்டையும், சுனாமிக்காக நான் எழுதுன பாட்டையும் 2004-ல குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஐயாவுக்கு அனுப்பியிருந்தேன். நான் சும்மாதான் அனுப்பினேன்.

அப்புறம் பார்த்தா ஒரு நாளு மூனு மணிக்கு பிரின்ஸ்பல் ஆபீஸ் வாட்ச்மேன் வந்து உங்களை பிரின்ஸ்பல் கூப்பிடுறாங்க அப்படின்னு சொன்னார்.

எதோ ராஷ்ட்ரிய பவன் குடியரசுத் தலைவரிடம் இருந்து லெட்டர் வந்துருக்கு அப்படின்னாரு. உடனே பிரின்ஸ் பல் ஆபிஸுக்கு போறேன். அப்ப ஜெயா அம்மாதான் பிரின்ஸ்பால். அவங்கதான் அந்தக் கடிதத்தைப் பிரிக்கிறாங்க. பிரிச்சுப் படிச்சா தங்களுடைய சிறந்த கவிதை கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி. நீங்கள் வாழ்வில் நன்றாகப் படித்து உழைத்து வெற்றி பெறவேண்டும் என்று உங்களை மனமார வாழ்த்துகிறேன் இப்படிக்கு ஏ.பி.ஜே. அப்துல் கலாம். அப்படின்னு சொல்லிட்டு லெட்டர் வந்திருக்கு.

இப்ப பிரின்ஸ்பல் என்ன பண்றாங்கன்னா, அடுத்த நாள் பிரேயர்ல வச்சு அப்துல் கலாம் எனக்கு லெட்டர் எழுதுன செய்திய எல்லா மாணவர்களுக்கும் சொல்றாங்க. இதை பிரேயர்ல கேட்டதும், நிறைய நண்பர்கள் வந்து, நம்ம காலேஜ்ல படிக்கிற மாணவர் வந்து அப்துல்கலாம்கிட்ட பரிசு வாங்கியிருக்காரு அப்படின்னு சொல்லிட்டு வாழ்த்துச் சொல்ல வராங்க.

அப்படி வாழ்த்துச் சொல்ல வந்ததுல ஒருத்தர்தான் நம்ம கலா மேடம்.

அப்ப அவங்க பரதநாட்டியம் முதல் வருஷம் படிச்சுக்கிட்டு இருக்காங்க. நான் இசையில மூணாவது வருஷம் படிச்சிட்டு இருக்கேன். அப்புறம் அவங்க அடிக்கடி வந்து இப்ப என்ன பண்றீங்க, வேற ஏதும் பண்றீங்களா அப்படின்னு அவங்களும், அவங்க பிரண்டு விஜியும் என்ன நலம் விசாரிப்பாங்க.

நானும் இந்த கென்னடிஜான் தம்பியும், கலா, விஜி நாங்க நாலு பேரும் பேசுவோம், போவோம், வருவோம். அந்த நேரத்திலதான் விஜிங்கிற பொண் ணுடைய அக்காவுக்கு புதுக்கோட்டையில கல்யாணம். நானும் கலாவும் ஒரு வருஷம்தான் லவ் பண்ணினோம்.

நாங்க புதுக்கோட்டைக்கு கல்யாணத்துக்கு வரணும்னு சொல்லிட்டு விஜி வந்து என்னையும் கென்னடியையும் கூப்பிடுறாங்க.

அந்த கட்டத்திலதான் நான் கச்சேரிக்குப் போற காசுல கொஞ்சம் கொஞ்சமா சேத்து வச்சு 3000 ரூபாய்க்கு எக்ஸெல் சூப்பர்? வாங்கினேன். அப்புறம் சோனி எரிக்சன் போனும் வாங்கினேன். சோனி எரிக்சன் டவர் வச்ச மாதிரி இருக்கும். அது ஆண்டனா மாதிரி இருக்கும். அதுக்கு கவர் எல்லாம் உண்டு. அது வெளிய தெரியுற மாதிரி பந்தாவா பேண்ட்ல மாட்டிக்கிறது.

அப்பல்லாம் ஊருக்குப் பேசணும் அப்படின்னா, எஸ்.டி.டி. பூத்திலதான் போயி போன் பண்ணனும்.

அப்ப நான் கலாகிட்ட என்ன சொன்னேன்னா, உங்க வீட்ல என் நம்பர் குடுங்க. லஞ்ச் டயத்துல யாராவது அடிச்சாங்கன்னா உங்ககிட்ட நான் கொடுக்கிறேன் அப்படின்னு சொல்லியிருந்தேன். அப்ப எனக்கு இன்கம்மிங் ஃப்ரீ. அவுட் கோயிங் மட்டும் காசு. அதனால காலேஜ்ல இருக்கிறவங்க எல்லாரும் லஞ்ச் டைம்ல என்னுடைய போன்லதான் பேசுவாங்க.

இப்படி இருக்கும்போது நானும் கென்னடியும் அந்த கல்யாணத்துக்குப் போறோம். அங்க போனா கலா அவங்க ஊரு வேலூரு வாலாஜாபேட்டையில இருந்து புதுக்கோட்டைக்கு நேரா வந்துட்டாங்க. கலா பிறந்து வளர்ந்தது எல்லாம் கும்பகோணம். அவங்க சௌராஷ்ட்ரா. அவங்க அப்பா இ.பி.யில இருந்தத னால ட்ரான்ஸ்பர் ஆகி வாலாஜாபேட்டைக்கு வந்து அங்கேயே வீடு கட்டி கல்யாணம் பண்ணி செட்டில் ஆயிட்டாரு.

இப்ப வேலூரிலிருந்து கலா புதுக்கோட்டைக்கு வந்துட்டாங்க. முழுக்க முழுக்க இந்த கென்னடி ஜானை விஜி கவனிச்சுக்கிட்டே இருக்கு. நம்மள வந்து கண்டுக்கவே இல்லை. அப்படி கவனிச்சாதான் அவர் நம்மல முழுசா லவ் பண்ணுவாரு. இதான் சான்ஸ்னு சொல்லிட்டு, அது ரொம்ப பாசமா இருக்கு.

அப்புறம் கலாகிட்ட நான் சொன்னேன், ஏம்மா நம்மளே வரச் சொல்லிட்டு கென்னடிகிட்டதான் போய் பேசுது வருது. நம்ம பாட்டுக்கு யாருன்னே தெரியாம ஒரு ஓரமா உட்கார்ந்து இருக்கோம் அப்படின்னு சொன்னேன்.

ஒரு ரெண்டு நாள் வர அங்கேயே தங்க வச்சுட் டாங்க. அங்க சூழ்நிலை சரியில்ல. அதனால அங்கேயே இருக்கிற மாதிரி ஆயிடுச்சு. அங்க என்கிட்ட இருக்குற பைசாவையும் அந்த விஜியோட அப்பா அவருக்குத் தேவைன்னு சொல்லிட்டு வாங்கிட்டாரு. இப்ப காசு கொடுத்தாதான் நாங்க திரும்ப ஊருக்குப் போக முடியும்.

அவங்க அப்பா கவர்மெண்ட் கண்டக்டர். அதனால அவர் என்ன பண்ணுனாரு ஒரு பஸ்ல கண்டக்டர்கிட்ட சொல்லி ஃபிரியா எங்க நாலு பேரையும் பஸ் ஏத்திவிட்டுட்டார். இப்ப என்ன ஆயிப்போச்சுன்னா விஜியும் அந்த கென்னடிஜானும் பின்னாடி சீட்ல போயி உக்காந்துட்டாங்க. நடுவுல வந்து ஒரே ஒரு சீட்டுதான் இருக்கு. அதுல கலாவ உக்கார வச்சுட்டு நான் நின்னுக்கிட்டேன். அப்புறம் மாத்தி மாத்தி உட்காந்துகிட்டு வர்றோம்.

அப்ப நான் கலாகிட்ட சொன்னேன். விஜி அவங்க அக்கா கல்யாணத்துல நம்மல மதிக்கவே இல்லல்ல, அதனால பேசாம உங்கள லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டு, அவங்க முன்னாடி நான் யாருன்னு காட்டணும்னு நினைக்கிறேன் அப்படின்னு சொல்றேன். அப்போ வந்து பஸ் ஒரு டீக்கடையில நிப்பாட்டுறாங்க. நான் இறங்கி ஒரு லிட்டில் ஹார்ட்ஸ் ஒன்னு வாங்குறேன். அந்த லிட்டில் ஹார்ட்ஸ கவரோடு கலாகிட்ட கொடுக்கிறேன். அதை அவங்க பத்திரமா வச்சுக்கிட்டாங்க. ஒரு வழியா சென்னை வந்து சேர்ந்துட்டோம்.

அப்புறம் அப்படியே போறப்ப வர்றப்ப பேசிட்டுப் போவாங்க. அப்ப ஒரு நாள் என்ன பண்ணுனாங்க ஊருக்குப் போகணும்னு சொன்னாங்க. நான் கொண்டுவந்து விடுறேன்னு சொன்னேன். அவங்க டிரெயின்ல போவாங்க. அப்போ பாரீஸ்லதான் திருவள்ளூவர் பஸ் ஸ்டாண்ட் இருந்துச்சி. பாரிஸில் பஸ் ஏத்திவிட்டா அவங்க வேலூருக்குப் போயிடுவாங்க.

அப்போதான் தேவி தியேட்டர்ல ?7ஜி ரெயின்போ காலனி? படம் ஓடுது. நான் சொன்னேன், படம் பாத்துட்டு மதியம் லஞ்ச் சாப்பிட்டு, நான் அப்படியே உங்கள பஸ் ஏத்தி விடுறேன் போயிடுங்கன்னு. ஒரு பிரியாணி ஆர்டர் போட்டோம். "நான் ஒரு விஷயம் உங்ககிட்ட கேட்கிறேன். நீங்க ஒத்துக்கிட்டா சாப்பிடுறேன், இல்லனா பரவால்ல இருக்கட்டும்" அப்படின்னு சொல்றேன். "என்ன விஷயம் அப்படி"ன்னு கேக்குறாங்க. "நான் உங்கள திருமணம் பண்ணிக் கலாம்னு நினைக்கிறேன். நீங்க என்ன சொல்றீங்க" அப்படின்னு கேட்டேன்.

அதுக்கு அவங்க ஒரு வார்த்தை சொன்னாங்க. அது...!