மாடு எப்ப புல்லு மேயும்? எப்ப தண்ணி குடிக்கும்? எப்ப சாணி போடும்? மாடு செனையா இருந்தா, எந்த பக்கம் கருப்பையி? எந்தப் பக்கம் உணவுப்பையி? எந்தப் பக்கம் படுத்தா, “பசு கன்னு” போடும்? எந்த பக்கம் படுத்தா, “காளக் கன்னு” போடும்? இப்படி இது எல்லாமே கிராமப்புற மக்களான எங்களுக்குத் தெரியும்.

இந்த நேரத்துல கவிஞர் வைரமுத்து எழுதுன "மாடு" பத்தின ஒரு கவிதை நெனைப்புக்கு வருது.

மாட்டுக்கு

இடப்பக்கம் இரைவயிறு

Advertisment

வலப்பக்கம் நீர்வயிறு

நடுப்பல்

வயது சொல்லும்

Advertisment

மாடு வாங்க வேண்டுமா?

கண்டதும்

வலக்கால் தூக்கித் தலைசொறிந்தால்

வாங்கு…

கண்டதும்

சாணமிட்டால் பசுவைக் கொள்

நீரிட்டால் எருதுகொள்

நெற்றிச்சுழி ஆகாது.

காளைக்கு நன்று

செவலை

பசுவுக்கு நன்று

மயிலை

ஈனும் சுபதினம்

எருமைக்கு வெள்ளி

பசுவுக்கு வியாழன்

மாடுமேய்த்தல் கல்வி

மாடுமேய்த்தல் தவம்

மாடுமேய்த்தல் ஞானம்

-கவிஞர் சொல்ற மாதிரி மாடு மேய்க்கிறது ஒரு தவம்.

ஆடு மாடு மேய்க்கறதுக்கு எனக்கு அவ்வளவு சந்தோசமா இருக்கும்.

ஆடு, மாடுகளுக்கு நம்மள விட அறிவு அதிகம்.

சில நேரங்கள்ல மாட்ட நாலஞ்சு ஊரு தாண்டி வித்துட்டா கூட, அடுத்த நாளு காலையில போய் பாத்தோம்னா, அது நம்ம வீட்டு மாட்டு கொட்டாயில வந்து படுத்து இருக்கும்.

ஆயிரம் வசதி இருந்தாலும் புகுந்த வீட்ட விட, பொறந்த வீட்டுலதான் பொண்ணுங்களுக்கு பாசம் அதிகம்.

அப்பா வீட்டுக்கு போகணும்னா பத்து நாளைக்கு முன்னாடியே தலகாலு புரியாது இந்த பொண்ணுங்களுக்கு.

பொறந்த வீட்டு பாசம் பொண்ணுங்களுக்கு மட்டும் இல்ல ஆடு மாடுங்களுக்கும் இருக்குது.

இத பத்தி கவிஞர். தமிழ் அமுதன் ஒரு படிமக் கவிதை எழுதி இருப்பாரு.

ve

"மேய்வதற்காக சென்ற மாடுகள் திரும்புகையில்

எந்த அடையாளத்தை வைத்து

அதனதன் வீட்டுக்குச் செல்கின்றன"

அதே மாதிரி பாத்தோம்னா ஆடு, மாடு, கோழி, பூனை, நாய், கிளி,

புறான்னு எல்லாத்தையும் தன்னோட புள்ள மாதிரி பாத்துக்கும் எங்க ஊரு சனம்.

தான் பட்டினியா கெடந்தாலும் கெடப்பாங்க. ஆனா ஆட்டு மாட்ட மட்டும் பட்டினியா போட மாட்டாங்க. மாடு கத்துறத வெச்சே பசியில கத்துதா, இல்ல தண்ணி தாகத்துக்கு கத்துதான்னு எங்களுக்கு தெரியும்.

காலையில எந்திரிச்சு தோட்டத்துக்குப் போனா, மாட்டு கோமியமும், சாணியும் சேர்ந்து தோட்டமே கமகம கமகமன்னு ஒரே வாசமா இருக்கும்.

அம்மா காலையிலேயே சாணிய மூங்கில் தட்டுல அள்ளி குப்பைக் குழியில போட்டுட்டு, மாட்டுக்கொட்டாய கூட்டுனதுக்கு அப்புறம் பாத்தா, மாட்டுக்கொட்டாயே கோயில் மாதிரி இருக்கும்.

மாடு பக்கத்துல போனோம்னா அது தன்னோட அன்பை வெளிக்காட்டுறதுக்கு நாக்கால நம்மள நக்கும். மாட்டோட நாக்கு செங்கக் கல்லு கணக்கா சொரசொரன்னு இருக்கும். அது நம்ம கையில, காலுல நக்கும்போது உடம்பே சிலுக்கும். மாடுன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்.

ஒரு தடவ அப்பா ஒரு பசு கன்னுக்குட்டி வாங்கிட்டு வந்துச்சி. அது கொக்கு கணக்கா, வெள்ளை வெளேர்னு இருக்கும். கிட்டத்தட்ட பத்து பன்னெண்டு வருஷம் எங்ககிட்ட இருந்துச்சு.

பசு மாடு செனை பிடிக்கறதுக்காக, பசு மாட்டுக்கு காளை போடுறதுக்கு, எங்க ஊருக்கு காளை மாட்டை ஓட்டிட்டு வருவாங்க.

அது காங்கேயம் காளை, பொலி காளை, ஜெர்சி காளை, மணப்பாறை காளைன்னு ஒவ்வொரு தடவையும் விதவிதமா காளைகளை ஓட்டிக்கிட்டு வருவாங்க.

எந்த காளைய வெச்சு பசுமாட்டுக்கு காளை போடுறோமோ, அந்த காளை வகை கன்னு போடும்.

கிட்டத்தட்ட ஏழு எட்டு தடவை இந்த வெள்ளைப் பசுவுக்கு காளை போட்டும், அது செனை பிடிக்கவே இல்லை. மாடு மலடு போலருக்கு அப்படின்னு அக்கம்பக்கத்தில இருந்தவங்கெல்லாம் சொன்னாங்க.

அந்த நேரத்துல பாத்து, கேரளாவில இருந்து மாடு வாங்குறதுக்காக மாட்டுத் தரகருங்க எங்க ஊருக்கு வந்திருந் தாங்க. மாடு செனை புடிக்கலன்னு, மாட்ட கேரளத்து தரகர் கிட்ட அப்பா வித்துடுச்சு.

நான் பள்ளிக்கூடம் போயிட்டு வீட்டுக்கு வந்தேன். வந்து பார்த்தா வீட்ல பசு மாட்ட காணோம்.

அம்மாகிட்ட கேட்டேன், எங்கம்மா பசுமாட்ட காணும் அப்படின்னு. அம்மா சொல்லுச்சு வித்தாச்சுன்னு.

யாரு கிட்ட அப்படின்னு கேட்டேன். கேரளத்து தரகருங்க வந்தாங்க அவங்க கிட்ட அப்பா வித்துடுச்சு அப்படின்னுச்சு.

இது மாதிரி செனை புடிக்காத மலட்டு மாடுகளை யெல்லாம் வாங்கிட்டுப் போயி, கேரளாவுல அதை வெட்டி கறிக்குப் பயன்படுத்துவாங்களாம். அதுக்காக வாங்கிட்டுப் போயிட்டாங்க அப்படின்னு அம்மா சொன்னது.

எனக்கு ஒரே அழுக தாங்க முடியல. எனக்கு அந்த பசு மாடுன்னா உசுரு. எனக்கு அந்த மாடு திரும்ப வேணும் அப்படின்னு அம்மாகிட்ட சொல்லி, சொல்லி அழுதேன். அது வித்தாச்சுடா தம்பி அப்படின்னு சொன்னுச்சு. இல்ல எனக்கு நம்ம பசு மாடுதான் வேணுமுன்னு தேம்பித் தேம்பி அழுதேன்.

பள்ளிக்கூடம் போயிட்டு வந்து நான் எதுவும் சாப்பிடவே இல்ல.

அப்பதான் அப்பா வயலுக்கு போயிட்டு வந்துச்சு. ஏன்பா அலர்ற அப்படின்னு கேட்டுச்சு. அந்த மாட்டை ஏன் வித்தீங்க. அதை வாங்கிட்டு போயி வெட்டிக் கறிக்கில்ல பயன்படுத்துவாங்களாம். எனக்கு அந்த பசு மாடு வேணும் அப்படின்னு அழுதேன்.

அப்பாவுக்கு கையும் ஓடல காலும் ஓடல. நான் அழறத பாத்துட்டு, அப்பா அப்படியே செவுத்துல உறஞ்சி போயி ஒக்காந்துருச்சி.

சாயங்காலம் அஞ்சு மணி இருக்கும் அப்பா கையில் ஒரு தடிக் குச்சிய எடுத்துக்கிட்டு வெளி யில போனுச்சு. போனது ராத்திரி முச்சூடும் வீட்டுக்கு வரவே இல்லை. நானும் ராத்திரி சாப்பிடவே இல்ல. எனக்கும் ராத்திரி பூரா தூக்கமும் வரல.

மாடு வித்த சோகத்துல அடுத்த நாளு, நான் பள்ளிக்கூடமும் போகல.

velmurugan

அடுத்த நாளு காலைல 11 மணி இருக்கும். அப்பா அந்த மாட்ட புடிச்சிகிட்டு வேக்கு வேக்குன்னு வீட்டுக்கு வந்துச்சி.

எனக்கு அந்த மாட்டைப் பார்த்த உடனே இது கனவா இல்லை நனவான்னு தெரியாம தெகைச்சிப் போயி நிக்கிறேன்.

எனக்கு அழுக அழுகையா வருது. தேம்பித் தேம்பி அழறேன். கண்ணெல்லாம் குளமாப் போச்சு. அந்த மாட்டைப் போய் கட்டிப் பிடிச்சு கிட்டு அழுதேன். அப்பாகிட்ட எப்படி என் னோட நன்றிய சொல்றதுன்னு தெகைச்சுப் போயி நின்னேன்.

ச்சே அப்பா எவ்வளவு பெரிய மனுசன். அப்பா அந்த நேரத்துல எனக்கு "கடவுளா" தெரிஞ்சாங்க. அந்த சம்பவத்தை இப்ப நினைச்சா கூட எனக்கு தொண்டைய கட்டுது.

ஆனா கருத்தரிக்காமல் மலடுன்னு சொன்ன அந்த பசு மாடு, எங்க வீட்டுக்கு மறுபடி யும் வந்தவுடனேயே, அடுத்த ஆறு மாசத்துல செனை புடிச்சது. அதுக்கப்புறம் எங்க வீட்ல ஏழு எட்டு கன்னு போட்டுச்சு. அது எங்க வீட்டு மகாலட்சுமி.

அந்த வெள்ளைப் பசு மறுபடியும் எங்க வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம்தான் நாங்க பசி பட்டினி இல்லாம சாப்பிட்டோம். எப்படியும் காலையில 3 லிட்டர் சாயங்காலம் 2 லிட்டர் பால் கறந்துடும்.

அந்த பால சொம்புல கறந்தவுடனேயே, நுரையோட, தோட்டத்திலேயே அப்பா எங்களுக்கு ஒரு ஒரு டம்ளர் ஊத்திக் கொடுக் கும். அதை குடிக்கும்போதே வெதுவெதுன்னு இளஞ்சூடா, அவ்வளவு வாசமா இருக்கும்.

அதுக்கப்புறம் காலங்கள் ஓடுச்சு. நாங்க ளும் படிக்கிறதுக்கு வேலைக்குன்னு வெளி யூருக்கு வந்துட்டோம். மாடு மேய்க்கிறதுக்கு ஆளுங்க இல்ல. வேற வழி இல்லாம, அந்த பசு மாட்டை ஒரு கன்னுக் குட்டியோட பக்கத்து ஊர்ல வித்திட்டோம்.

மனுசாளுங்களைவிட பிராணிகள் நம்ம மேல அவ்வளவு பாசமா இருக்கும்.

மாடு மேய்க்கப் போறப்பெல்லாம், மாடு மேய்ச்சுட்டு சாயங்காலம் அஞ்சு ஆறு மணிக்கெல்லாம் எல்லாரும் வீட்டுக்கு வந்துடுவோம். அப்புறம் என்ன இருக்கோ அதை சாப்பிடுட்டு, பாயை எடுத்துக்கிட்டு வாசல்ல படுக்கப்போவோம். அதுக்கு முன்னாடியே வாசல்ல வெறும் தரையில் படுத்தா சூடு ஏறுமுன்னு, வாசல்ல தண்ணிய தெளிச்சு வச்சிருவோம்.

அப்படியே வாசல்ல பாய போட்டுப் படுத்தா… அந்த நெலா வெளிச்சத்துல, மேகமெல்லாம் மெதந்து போறது, நட்சத்திரங்கள் விதவிதமா ஆகாயத்துல குழுமிக் கெடக்குறது. ரொம்ப பாக்க பாக்க அழகழகா இருக்கும்.

நெலா வெளிச்சம் இல்லாத அமாவாசை போன்ற நாட்கள்ல மின்மினி பூச்சிங்க அழகழகா ரயில் வெளிச்சம் மாதிரி பளிச்பளிச்சுன்னு வெளிச்சம் போட்டுட்டு பொகும்.

வாசல்ல பாய போட்டு மல்லாக்க படுத்துக்கிட்டு ஆகாயத்த பாத்தோமுன்னா இப்படி அழகழகா அற்புத மான காட்சியையெல்லாம் பாக்கலாம்.

நாளு காலு கட்டில் நட்சத்திரம், நல்லதங்காள் தன்னோட பிள்ளைங்களோட இருக்கிற நட்சத்திரம், பஞ்சபாண்டவர் மாதிரி அஞ்சி நட்சத்திரம், வால் நட்சத்திரம் வாணவேடிக்கை மாதிரி வானத்துல பறந்து போறது, தென்மேற்கு மூலையில வெள்ளி முளைச்சி இருக்கிறது. இப்படி நட்சத்திரங்களைக் காட்டி எங்க பாட்டி கதை கதையா சொல்லும்.

நாங்க சின்னப் புள்ளையா இருக்கும்போது, ஆயா காலு ரெண்டியும் நீட்டிப்போட்டுகிட்டு அதுல எங்களை குப்புற படுக்க போட்டு, முதுகுல தட்டிக் குடுத்துக்கிட்டே பாட்டெல்லாம் பாடும்.

லே லே லே லே,

லே லே லே லே,

லே லே லே லே லே

அம்மா...

லே லே லே லே,

லே லே லே லே,

லே லே லே லே லே

பூச்சிக்காரன் வருவான் புடிச்சுகிட்டு போயிடுவான்

தூங்கு தக்கடி தூங்கு

கோச்சுக்காரன் வந்தா புடிச்சு குடுக்க மாட்டேன்

தூங்கு தக்கடி தூங்கு

அப்பா அம்மா வருவாங்க

தூங்கு தக்கடி தூங்கு

பாட்டி கதை சொல்லி தூங்க வைக்கிறேன்

தூங்கு தக்கடி தூங்கு

லே லே லே லே லே

தூங்கு தக்கடி தூங்கு

தூங்கு தக்கடி தூங்கு

-இது மாதிரி கால்ல போட்டு ஆட்டிக்கிட்டே பாட்டுப் பாடுனா அப்படியே தூங்கிடுவோம். இதுவும்

கூட எனக்கு பாட்டுக்கான ஆசையைத் தூண்டுச்சுன்னு தான் சொல்லனும்.

இதெல்லாம் இப்படி பதிவு பண்ணனும் அப்படின்னு

நான் அடிக்கடி நினைக்கிறது உண்டு. ஆனா அறிவு சார்ந்த மனிதர்களோடு இன்னும் பழகுவதற்கான வாய்ப்பு கிடைக்கலையே அப்படின்னு வருத்தப்பட்டதும் உண்டு.

ஆனா எப்படினாலும் காலம் நமக்கு ஒரு பாலத்தை போட்டுக் கொடுக்கும் அப்படிங்கற ஒரு நம்பிக்கை மட்டும் எனக்கு இருந்துகிட்டே இருந்துச்சு. அந்த பாலம் இதுவாகத்தான் இருக்குமோன்னு தோணுது.

நான் வாழ்ந்த வாழ்க்கை அப்படின்னு பார்த்தா, அது ஒரு எழுதப்படாத, சொல்லப்படாத, பேசத் தெரியாத ஒரு விஞ்ஞானி மாதிரிதான் நான் வாழ்ந்து இருக்கிறேன் அப்படின்னு தோணுது.

இரவு எட்டு மணி ஒன்பது மணி ஆனாகூட சில நேரங்கல்ல தூக்கம் வராது. அது மாதிரி நேரத்துல அப்பா நாடகக் கதைகளை எல்லாம் சொல்லுவாங்க.

நல்லதங்காள் கதைகளைச் சொல்லி, நல்லதங்கா பாடல்களைப் பாடுவாங்க.

பஞ்சமோ பஞ்சம்

மரக்கால் உருண்ட பஞ்சம்

மன்னவரை தோற்ற பஞ்சம்

நாழி உருண்ட பஞ்சம்

நாயகரை தோற்ற பஞ்சம்

தாலி பறிகொடுத்து

தன்னவனைப் பறி கொடுத்து

கால்வயித்து கஞ்சிக்கு

கைக்குழந்தை விற்ற பஞ்சம்

அப்படின்னு நல்லதங்காள் கதைய அப்பா பாட்டா பாடுவாரு.

ஒரு தனி பொம்பளையா நின்னு, அந்த புள்ளைங் களை காப்பாத்த முடியாம, எல்லாப் புள்ளைங்களையும் பாழும் கெணத்துல தூக்கிப் போட்டுட்டு, தானும் கெணத்துல விழுந்து உயிரை மாய்ச்சுக்கிற நல்லதங்கா கதைய கேட்டா கண்ணுல தண்ணி தண்ணியா

வரும்.

அப்புறம் அல்லி அரசாணி மாலை. பாஞ்சாலி சபதம். பஞ்சபாண்டவர் வனவாசம் இப்படியா வாழ்க்கை முறைகளை, வாழ்க்கை சிந்தனைகளை கதை மூலமா சொன்னத கேட்டுதான் நாங்கள்லாம் வளந்தோம். இதெல்லாம் என் ரத்தத்துல பாடல்களை சிறுக சிறுக சேர்த்துகிட்டே இருந்துச்சு.

இன்னொரு நல்லதங்காள் கதை மாதிரி, எங்கள வளக்குறத்துக்கு எங்க அம்மா பட்ட பாட்ட சொன்னா...

பச்சை மரமும் பத்தி எரியும், பாறாங்கல்லுலயும் ஈரம் கசியும்.

(வண்டி ஓடும்)