பாட்டிக்கு கையும் ஓடல காலும் ஓடல. அம்மாவோட கையி, காலெல்லாம் புடிச்சுவிட்டு, தலைய அமுக்கிவிட்டு, "அழாத தாயி, அழாதன்னு' பாட்டி தேத்துது.
பாட்டி தேத்தி என்ன பண்றது?
"இடுப்பு வலியும், திருகு வலியும் வந்தவங் களுக்குத்தானே தெரியும்".
அண்ட வீடு, அடுத்த வீட்டுக்கெல்லாம் ஓடிப் போயி, யாரையாவது உதவிக்குக் கூப்பிடமுடியுமானு பாட்டி பாக்குது. ஒரு சனத்தையும் காணும். எல்லாரும் காவடிய வேடிக்க பாக்க ஆத்துக்கு போயிட்டாங்க. பக்கத்துல எங்கேயுமே மருத்துவமனையும் கிடையாது. அப்படியே போகணும்ன்னாலும் ரொம்ப தூரம் போயாகனும். அதுக்கு ஆட்கள் எல்லாம் வேணும். வண்டி கட்டனும். அது இந்த நிலைமைல ரொம்பக் கஷ்டம்.
அப்பல்லாம் ஒவ்வொரு பிள்ளையையும் ஊருலதான் பெத்து எடுப்பாங்க. பாட்டிங்க ரெண்டு மூணு பேர் சேர்ந்தாலே போதும் சுகப்பிரசவமா புள்ள பொறந்துரும்.
சில பேரு மாசமா இருக்கிறவங்க வயலுக்கு வேலைக்குப் போற இடத்துல, தானாவே குழந்தை பிறந்து, வயல்ல இருந்து அவங்களே குழந்தையை தூக்கிட்டு வருவாங்க. அது மாதிரி காலம் அப்போ.
நல்லவேளை ஒரு வழியா பாட்டியோட கைப் பக்குவத்துல குழந்தை பொறந்துச்சி. அம்மாவுக்கு அம்மாவா, அப்பாவுக்கு அப்பாவா, சாமிக்கு சாமியா எங்க பாட்டித்தான் அம்மா கூடவே இருந்து குழந்தை பொறக்குறதுக்கு உதவியா இருந்துச்சு.
இப்போ அப்பாகிட்ட செய்தியை சொல்லணும். எப்படி சொல்றது?
அப்போ போன் வசதி எல்லாம் எதுவுமே கிடையாது. அவங்களா திரும்ப வந்தாதான் உண்டு.
காலையில மணி 9 இருக்கும். காவடியெல்லாம் கோவிலுக்கு போயிருக்கும். அதுக்கு அப்புறம் காவடிய இறக்கி, அலகு குத்தி இருந்தவங்க, அந்த வேலை எடுத்துக்கிட்டு, எல்லாரும் கோவிலுக்குப் பக்கத்துல இருக்குற தாமரை குளத்துக்கு வருவாங்க.
அந்த குளத்துல வந்துதான் முருகனோட வேல் கம்பைக் குளிப்பாட்டனும். எப்ப குளிப்பாட்டுனும் னா, 1 மணியில் இருந்து 2 மணிக்குள்ள ஆகாயத்தில் கருட பகவான் காட்சி கொடுப்பாரு. கருட பகவான் காட்சிகொடுக்குற அந்த நேரத்துலதான் வேலைக் குளிப்பாட்டுவங்க.
அப்போ பார்த்தோம்னா, கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேரு அந்த குளத்துல நின்னுக்கிட்டு இருப் பாங்க. கருட பகவான் காட்சி கொடுத்த உடனே, காவடி தூக்கினவங்க, வேலைக் குளத்துல முழுக்காட்டிட்டு தாங்களும் குளத்துல முழுகி எழுந்திரிப்பாங்க. அந்த நேரம் பார்த்து மத்தவங்களும் குளத்துல மூழ்கி எந்திரிப்பாங்க.
சரியா அந்த கருட பகவான் காட்சி குடுத்து, வேலைக் குளிப்பாட்டும் அந்த நேரத்துலதான் அம்மாவுக்கு குழந்தை பொறந்துச்சு.
இப்பதான் பாட்டி குழந்த பொறந்த செய்தியை அப்பாகிட்ட சொல்லனும். என்ன பண்றது? அம்மாவுக்கும் இன்னும் மயக்கம் தெளியல. ஓடிப்போயி அப்பாகிட்ட சொல்லலாமுன்னா, இங்க வீட்ல வேற துணைக்கு ஆளுங்களும் இல்லை. விட்டுட்டுப் போனாலும், ரத்தக் கவுச்சியப் பாத்துட்டு பன்னி, நாயி ஏதாவது வந்து குடலை கடிச்சிக் கொதறிபுட்டுப் போயிடுமுன்னு பாட்டி பதட்டமாவே நிக்குது.
சாமி வந்தா மாதிரி, பாட்டி குழந்தையை தூக்கி அம்மா பக்கத்துல போட்டுட்டு, சுத்தி மண்ணெண்ணைய ஊத்தி, மிளகாய் பொடியத் தூவி விட்டு, குழந்தையையும் அம்மாவையும் சாக்கு போட்டு மூடிட்டு, பாட்டி ஓடிப்போய் ரோட்டில் நின்னு பாக்குது. யாராவது போறாங்களா வராங்களான்னு.
அப்பாகிட்ட செய்தியைச் சொல்லி ஆகணுமே! ஒரு பய புள்ளையையும் ரோட்டுல காணும். நாய், நரிக்கு பயந்துகிட்டு பாட்டி, மறுபடி குடுகுடுன்னு வீட்டுக்கு ஒடியாருது. மறுபடி ரோட்டுல ஓடி போய் பாக்குது. பாட்டிக்கு ஒரே பயம். மழை பெஞ்சு ஓஞ்ச மாதிரி ஊரே வெறிச்சோடிக் கெடக்கு.
அப்பதான் ஒரு பய தூரத்திலிருந்து சைக்கிள்ள வர்றான்.
"ஏலே யாருரா அவன், மருதன் மவனா.”
"ஆமாம் பாட்டி.”
"கோயிலுக்காடா போற.?”
"ஆமாம் பாட்டி. ”
"எப்பா கோயில்ல தவிலு வாசிக்கிறவரு என் மவன். பேரு தனசேகரன். அவர் மனைவி பேரு அமிர்தம் பாள். அவங்களுக்கு ஆம்பள புள்ள பொறந்துருக் குன்னு, அங்க போயி, கோயில்ல இருக்கிற மைக்ல அனவுன்ஸ் பண்றவங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லுப்பா. என் பையனுக்கு காதுல விழுந்து வந்துருவான்' அப்படின்னு சொன்னுச்சு.
மருதன் மவன் வேகு வேகுன்னு சைக்கிள மிதிச்சுக்கிட்டுப் போறான். அங்க போயி ரேடியோ செட்டுகாரங்ககிட்ட சேதிய சொல்றான். உடனே அவரு அனவுன்ஸ் பன்றாரு.
"முதணைங்ற கிராமத்துல, வடக்கு தெருவுல இருக்குற தனசேகரன், அவரு இங்க கோயில்ல தவில் வாசிக்கிறவராம், அவருடைய மனைவி பெயர் அமிர்தம் பாள், அவங்களுக்கு ஆம்பள புள்ள பொறந்து இருக்கு. அதனால அவரு எங்க இருந்தாலும் இங்க வரனும்' அப்படின்னு அனவுன்ஸ் பன்னுனாரு.
அப்பா காதுல விழுந்த உடனே, நேரா மைக்கு கிட்ட வந்து, "அது என்னுடைய மனைவிதாங்க. மாசமா இருந்துச்சு. அப்படின்னு சொல்லிட்டு, அங்க கோவிலுல இருந்து விபூதியை கையில எடுத்துக்கிட்டு, நாணல் கரையில எதுகாத் துல வேகுவேகுன்னு வராரு. வந்து விபூதியை பொறந்த சிசுவான என் நெத்தியில பூசி, வேலைப் புடிச்சுக் கிட்டு எல்லோரும் குளத்துல குளிக்கிற நேரத்துல பொறந்தது னால, இவனுக்கு வேல்முருகன்னு பெயர் வக்கிறேன். அப்படின்னு, எனக்கு பெயர் வச்சாராம் எங்க அப்பா.
அந்த மைக்செட்டுக் காரவரு, அந்த மைக்க புடிச்சு நான் பொறந்துட்டேன்னு சொன்னதுனாலயோ என்னமோ தெரியல, அந்த மைக்க இப்ப நான் புடிச்சிட்டேன். அந்த மைக்குதான் இப்ப எனக்கு சோறு போடுது…
என்னோட சின்ன வயசில் என் குருநாதர் காலையில நாலு மணிக்கெல்லாம் பாட ஆரம்பிச்சிடு வாரு. மார்கழி மாசத்து குளிருக்கு, செத்த செருவெல் லாம் அரிச்சுப் போட்டு, பத்த வச்சு, கை காலை நீட்டி விட்டு குளிர் காய்ந்துகொண்டே அவர் பாடுறத கவனமா கேட்பேன். அவர் பாடறத கேட்டு கேட்டு அவர் கூடவே நானும் பாடுவேன். அப்படி பாடி பாடிதான் நான் பாடக் கத்துக்கிட்டேன்.
ஆத்துக்கு போறப்ப, கடைக்கு போறப்ப நான் எங்க போனாலும் அவரு பாடுறது என் காதுல கேட்டுகிட்டே இருக்கும்.
என்னோட குருநாதர் யாருன்னு சொன்னா நீங்க என்ன விசித்திரமா பார்ப்பீங்க… அப்புறம் நீங்களும் அவர தேடுவீங்க… அவரு பாடுற முதல் பாட்டு இதுதான்.
‘விநாயகனே வெவ்வினையை
வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான்
விநாயகனே விண்ணிற்கும்
மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினால் கண்ணிற் படுமின் கனிந்து...”
எங்க ஊர்ல இருக்கிற முத்துமாரிஅம்மன் கோயில்ல, காலையில , சாயங்காலம் பக்திப் பாட்டும், மத்தியான நேரத்துல தத்துவப் பாட்டுமா பாடுவாரு என்னோட குருநாதர்.
எங்க அம்மா கடையில எண்ணை வாங்கிட்டு வர;க் சொல்லி அந்த ஹார்லிக்ஸ் பாட்டில கொடுக்கும்.
அந்த பாட்டில் உள்ள ஒரு ஸ்பூன் இருக்கும். ஒரு ரூபாய் என்ன வாங்குனா அது அந்த பாட்டில் அடியிலேயே கெடக்கும். அதுலயும் ஒரு ரூபாய் கொடுத்தாங்கன்னா முக்கால் ரூபாயை கடையில் கொடுத்து எண்ணை வங்கிக்கிட்டு, மிச்சம் இருக்குற நாலணாவ எங்க அம்மா நாளைக்கு வந்து திரும்ப தருவாங்கன்னு சொல்லிட்டு, இன்னொரு கடைக்கி போயி, அந்த நாலணாவுக்கு ஒத்த காசு ஆரஞ்சு முட்டாயும், ஒத்த பைசா பிரிட்டானியா ரொட்டியும் வாங்கித் தின்னுக்கிட்டே வீட்டுக்கு வந்து சேருவேன்.
அம்மா என்னைக்காவது கடைக்கு போறப்ப, கடைக்காரர் உங்க பையன் முக்கால் ரூபா குடுத்தான். நாலனா எங்க அம்மா வந்து குடுப்பாங்கன்னு சொல் லிட்டு போனான் அப்ப டின்னு சொன்னா, உடனே அப்படியா சொன்னான்.
அப்படி ஒன்னும் இல்லை யேன்னு அம்மா சொல்லி சமாளிப்பாங்க. அப்ப, அம்மா என்ன வந்து கேப்பாங்க. அதுக்கு நான் இல்லம்மா நான் ஓடும்போது அந்த கார்ரூவா கால் சட்டை பையில ஓட்டை இருந்துச்சா அதுல இருந்து எங்கேயோ விழுந்துடுச்சுபோல. நீ திட்டுவன்னுதான் உன்கிட்ட சொல்லல. அப்படின்னு சொல்லி சமாளிப் பேன்.
இப்படி கடைக்கு போகும்போது முட்டாயி தின்னுக்கிட்டு பாட்டுப் பாடிக்கிட்டே ஓடுறது, பாடிக் கிட்டே ஓடியார்ரது. இப்படித்தான் நான் பாட்ட பயிற்சியா எடுத்துக்கிட்டேன்.
அதுக்கப்புறம் எங்க அப்பா ஐயப்பன் கோவிலுக்கு மாலை போடுவார். அப்போ அந்த முத்துமாரியம்மன் கோயில்ல, ராத்திரியில சாமிக்கு பஜனை பாட்டு பாடுவாங்க, அவங்க பாடும்போது கூடவே நானும் பாடுவேன்.
எங்க ஊரு அம்மன் கோயில ஐயப்பன் பாட்டு பாடுன நான், இப்போ சபரிமலை ஐயப்பன் கோயிலிலேயே போய் பாட்டுப் பாடிட்டு வர்ரேன்.
இப்படித்தான் எங்க ஊரு பாட்டு, என்னை எங்க ஊருலே இருந்து சபரிமலை வரைக்கும் மட்டு மில்ல, இந்த உலகம் முச்சூடும் அழைச்சிக்கிட்டுப் போயிக்கிட்டு இருக்கு.
நான் இந்த அளவுக்கு வளர்ந்து வந்துருக்கேன்னா, அதற்கு முழுமுதல் காரணம் என்னோட அப்பா அம்மா வின் அனுக்ரகமும், என்னோட குருநாதரின் ஆசீர் வாதமும்தான்.
வருஷத்துல மார்கழி மாசம் வந்தாலே எனக்கு ஒரே கொண்டாட்டமா இருக்கும். அந்த மாசம் முழுவதும் காலையிலேயும் சாயங்காலத்திலேயும் அவர் பாடிக்கிட்டே இருப்பார்.
இப்பவும் அவரு பாடிக்கிட்டுதான் இருக்காரு.
ஆனா எத்தனை பேரு என்ன மாதிரி அவர குருவா ஏத்துக்கிட்டு இருக்காங்க அப்படின்னு தெரியல.
செல்லாத்தா செல்ல மாரியாத்தா...
எங்கள் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா...
கண்ணாத்தா உன்னைக் காணாட்டா...
இந்த கண்களிருந்து என்ன புண்ணியம் சொல்லாத்தா...
உந்தன் பெருமையை இந்த உலகுக்கு எடுத்து பாடாட்டா
இந்த ஜென்மமெடுத்து என்ன பயனென்று சொல்லடி நீயாத்தா
உந்தன் பெருமையை இந்த உலகுக்கு எடுத்து பாடாட்டா
இந்த ஜென்மமெடுத்து என்ன பயனென்று சொல்லடி நீயாத்தா
-என்று அவர் எல்.ஆர். ஈஸ்வரி குரலில் பாடும் போது நானும் அவரோட மெய்மறந்து பாடியிருக் கேன்.
நான் பாடும்போதே என்னையும் அறியாமல், என்னுடைய கண்ணெல்லாம் குளமானத நெனச்சு ஆச்சரியப்பட்டு இருக்கேன்.
அதனால தானோ என்னவோ இந்தப் பாட்டோட பெருமையை உலகம் முச்சூடும் பாடுறதுக்கு எனக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு.
என்னோட குருநாதர் ஒரு பல குரல் வித்தகர். நான், இப்ப அவரை பார்த்தாகூட கையெடுத்துக் கும்பிடுவேன்.
எல்லாரு வீட்டுலயும் கல்யாணம், காதுகுத்து, சில துக்க நிகழ்ச்சிகள் இப்படின்னு எல்லா இடத்திலை யும் அவரு பாடுவாரு..
மொய் வைக்கிற நேரத்துல, தாய்மாமன், உறமொற, பங்காளிங்க அதுக்கப்புறம் ஊர்ல யாருன்னாலும் வந்து மொய்வைப்பாங்க. அப்போ காலையில இருந்து சாயங்காலம் வரைக்கும் எங்க ஊருல ரேடியோ செட்டு இடைவெளியே இல்லாம அது பாட்டுக்க பாடிக்கிட்டே இருக்கும். அதுகூட மைக்கும் வெச்சிருப்பாங்க. மொய் வக்கிறவுங்க மொய் வைக்கலாமுன்னு அதுலதான் அனவுன்சு பண்ணுவாங்க.
சில பேர் என்ன பண்ணுவாங்கன்னா, வேலைக்கு போயிட்டு வந்து சாயங்காலம் மொய்வைக்கலாம் அப்படின்னு நினைச்சுகிட்டு போயிடுவாங்க. அப்போ அந்த இடைப்பட்ட நேரத்துல, இந்த அலுமினியத்துல இருக்குமுல்ல அன்னக் கூடை, அதை கவுத்துவச்சு, ஓட்டஞ்சில்லால அந்த அன்னக் கூடையில தாளம் போட்டுக்கிட்டே, அந்த மைக்கை வச்சுக்கிட்டு பாட்டு பாடுவேன்.
நான் பாடுறத கேட்டுட்டு, ஏதாவது விஷேச முன்னா இடைப்பட்ட நேரத்துல என்ன பாடுறதுக்கு கூப்பிடுவாங்க. இதுவே எனக்கு மிகப்பெரிய பயிற்சியா இருந்துச்சு.
இது நாளடைவுல என்ன ஆச்சுன்னா, சும்மானா ளும் பாட்டுப் பாடினா கூட்டம் கூடுவாங்க அப்படின்னு, இத ஒரு நிகழ்வாகவே வச்சு என்னை பாடச் சொல்லு வாங்க. அதுக்கு எனக்கு ஒரு ரூவா தரேன், ரெண்டு ரூவா தரேன் அப்படின்னு கொடுத்து என்னைப் பாட வைப்பாங்க.
அந்த காசை வாங்கி நான் திருப்பி திருப்பி பாப்பேன். அது எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கும்.
இதுமாதிரி நான் பாட்டு பாடி வாங்குற காசை அம்மா கிட்ட கொண்டுவந்து குடுப்பேன். அப்படி கொடுக்கும் போது எனக்கு அவ்வளவு சந்தோசமா இருக்கும்.
அம்மா பொழுதேனிக்கும் வேலை செஞ்சா அஞ்சு ரூவா குடுப்பாங்க. நான் ரெண்டு ரூவா கொண்டு போய் குடுக்கும்போது, அம்மா முகத்துலயும் அவ்வளவு சந்தோசம் களைகட்டும்.
அம்மான்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால தானோ என்னவோ அம்மாவை பத்தி நான் பாடுன ’பத்து மாசம் என்ன சுமந்து பெத்து எடுத்த அம்மா...
உன் பாசத்துக்கு முன்னால எல்லமே சும்மா… ’
இந்த பாட்டுதான் பட்டிதொட்டியெல்லாம் எனக்கு பேரு வாங்கிக் கொடுத்துச்சி.
என்னோட குருநாதர் குருநாதர்ன்னு சொன்
னேல்ல அவரு யாருன்னு சொல்லட்டுமா..?
(வண்டி ஓடும்...)