ராம் நகரை அடையும்வரை எந்தவொரு பிரச்சினையும் உண்டாகவில்லை. காளைகள் அனைத்தும் வரிசையைவிட்டு விலகாமல் நடந்தன. இடையே அவ்வப்போது ஓடவும் செய்தன. புத்துவின் கழுத்திலிருந்த மணியின் இனிய இசைக்கேற்ற வண்ணம் ஹல்ஸித்து கையிலிருந்த சாட்டையைச் சுழற்றியவாறு அவற்றுடன் சேர்ந்து ஓடினான்.

இன்னும் ஒருநாள் இருக்கிறது. பிறகு... கோவா. ஒவ்வொரு காளைக்கும் நாற்பதாவது கிடைக்கும். கால்நடைகளை கசாப்பு செய்யப்படும் இடத்தில் கொண்டுபோய் சேர்த்துவிட்டால்... பிறகு பைசாவை எண்ணி வாங்கிக்கொண்டு செல்லும் வழியில் சில பொருட்களையும் வாங்கலாம்.

மற்றவர்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கும் கோவாவின் பசுமையான நிலப்பகுதி அவனுக்கு முன்னால் தோன்றியது. உற்சாகத்துடன் அவன் கையிலிருந்த கம்பால் புத்துவைப் பின்னோக்கி இழுத்தான். புத்து முன்னோக்கி குதிக்க, அதன் தலை முன்னாலிருந்த காளையின் முதுகில் இடித்தது. முன்னாலிருந்த காளையோ பதட்டத்தில் வாலைத் தூக்கியவாறு ஒரு பக்கமாகப் பாய்ந்தது. அந்தச் சமயத்தில் பின்னால் வந்துகொண்டிருந்த ட்ரக், காளையின் பின்பகுதியில் இடித்தது. காளை உரத்து கத்தியவாறு விழ... ட்ரக் நிற்காமல் சென்றது.

விபத்தை ஸித்து புரிந்துகொண்டான். என்ன செய்யவேண்டும்? அவன் வேகமாக காளைகள் அனைத் தையும் பாதையின் ஓரத்திலிருந்த காலியிடத்தில் ஒதுக்கி நிறுத்திவிட்டு, மீண்டும் பாதைக்கு வந்தான். காளையின் கண்கள் பரிதாபமாக ஸித்துவின்மீது பதிந்திருந்தன. அதன் முதுகெலும்பு உடைந்திருந்தது. எனினும் முன்னங்காலை அசைத்து "நான் உயிருடன் இருக்கிறேன்' என்பதை உணரச்செய்தது. என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி தெளிவான தீர்மானம் எடுக்க முடியாமல் ஸித்து அதனருகில் போய் அமர்ந்தான். பாதை யில் சென்றவர்கள் ஒரு நிமிடம் அங்கு நின்றார்கள். வருத்தப் பட்டார்கள். பிறகு... அவர்களுடைய வழியில் சென்றார்கள். ஒரு ட்ரக்காரன் வண்டியை ஒரு நிமிடம் நிறுத்திவிட்டு, தன்னுடைய கோபத்தை வெளிக்காட்டினான்:

Advertisment

"இழுத்து ஒரு ஓரத்துல போடு. உன் கண்ணு எங்கயிருக்கு? ட்ரக் எப்படி முன்னோக்கிப் போகும்?''

உண்மையிலேயே கூறுவதாக இருந்தால், வீட்டிலிருந்து வெளியேறி வருவதற்குமுன்பே, தந்தை பாதையில் கவனம் செலுத்தவேண்டிய சில விஷயங்களைக் கூறியிருந்தார். அனுபவத்தின் வெளிச்சத்திலுள்ள நிறைய விஷயங்களை கசாப்பு சாலைக்காரனும் கவனத்தில் கொண்டு வந்திருந்தான். ஆனால், வழியில் இப்டியொரு விபத்து நடந்தால் என்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றி எதுவுமே கூறவில்லை.

வழியில் சென்றவர்களின் கையையும் காலையும் பிடித்து ஸித்து காளையை ஒரு ஓரத்தில் மாற்றிப் படுக்க வைத்தான். காளை அரைவயிறு பட்டினியாக இருந்தாலும், எடையில் அந்தக் குறை தெரியவில்லை. காளையின் பரிதாபத்திற்குரிய பார்வையைச் சந்திக்க இயலாமல், ஸித்து வேறெங்கோ பார்த்த காட்சிகளின் முடிவில் ஒரு சிறிய குடிசை தெரிந்தது. காளைகள் எதுவும் பாதைக்கு வராது என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு அவன் அந்த குடிசையை நோக்கி நடந்தான். வெளியே ஒரு வயதான மனிதர் அமர்ந்திருந்தார். ஸித்து நீர் கேட்டான். கேட்டது காளைக்கு. அவர் ஒரு சிறிய பாத்திரத்தில் நீருடன் வந்தார். அதைப் பருகி முடித்துவிட்டு, ஸித்து காளையின் விஷயத்தைக் கூறினான். அவர் ஒரு பிளாஸ்டிக் புட்டியில் நீரை நிறைத்துக் கொடுத்தார்.

Advertisment

ஸித்து புட்டியை காளையின் வாய்க்குள் கவிழ்த்தான். வயிற்றிற்குள் எவ்வளவு சென்றது அல்லது முழுவதும் வெளியிலேயே போய்விட்டதா என்பதைப் பற்றியெல்லாம் ஸித்துவால் உறுதிப்படுத்த முடியவில்லை.

"காளைகளோட கோவாவுக்குப் போறியா?'' கேட்டவாறு கிழவர் அருகில் வந்தார். ஸித்து தலையைக் குலுக்கினான்.

"கசாப்பு சாலை யாரோடது?''

"காசீம்...''

"இனிமேல... இப்போ நீ என்ன செய்வே?''

ஸித்து அசையவில்லை.

"நான் சொல்றதைக் கேளு. இனி... இந்த காளை நிமிர்ந்து நிக்காது. அது செத்து முடியறதுக்கு முன்னால யாருக்காவது கொடுத்து நாலு காசை வாங்கு. இங்கிருந்து அரை மணி தூரத்துல கரீம் இருக்கான். அவனைக் கூப்பிடட்டுமா?''

மீண்டும் அவன் மௌனத்தில் மூழ்கினான். காளை தலையை உயர்த்தினாலும், கீழ் நோக்கியே விழுந்தது.

அதன் பரிதாபத்திற்குரிய கண்கள் "என் வேதனையைக் கொஞ்சம் முடிவுக்குக் கொண்டுவா' என்று ஸித்துவிடம் கெஞ்சின.

"காசீமைத் எனக்கு தெரியும். கால்நடைகளைக் கொண்டுபோய் சேர்க்கற வேலைதான் நானும் முன்ன செஞ்சுக்கிட்டிருந்தேன். என் கசாப்பு சாலை இருக்கறது தபியில. இந்த தபியிலயிருந்து தான் காசீம் பெரிய ஆளா வளர்ந்தது... கோவா வுக்குப் போறப்போ என்னைப் பார்க்கறதுண்டு. இப்போ எதுவுமே முடியல...''

ஸித்து சிந்தனையில் மூழ்கியிருந்தான்.

"அய்யா. கசாப்பு கடைக்காரர்கிட்ட என்ன சொல்றது? அந்த ஆளு என்னை...''

"தர்காவுக்கு பக்கத்துல இருக்கற அஸ்ருமியா சொன்னாருன்னு காசீம்கிட்ட சொல்லு. இங்கிருந்துதான் வர்றதா... நானும் சொல்றேன். உன் தவறில்லியே! இப்படியிருக்கற சின்ன பாதைகள்ல இதெல்லாம் அன்றாடம் நடக்குற சம்பவங்கள்தான்னு அந்த ஆளுக்கும் தெரியும்.''

அஸ்ருமியாவின் வார்த்தைகள் நெருப்பு எரிந்துகொண்டிருந்த மனதிற்கு குளிர்காற்றாக வீசியது. கரீம் வந்து சேர்ந்தபோது, இருள் விழுந்திருந்தது. ஒரு சிறிய பெட்டி வண்டியுடன் வந்திருந்தான். இவ்வளவு பெரிய காளையை அவன் இரக்கமே இல்லாமல் அந்தச் சிறிய வண்டியில் அலட்சியமாக எறிந்தான்.

"அதுக்கு கஷ்டமா இருக்கும். வலி எடுக்கும்.''

ஸித்துவின் இரக்க உணர்வு, கரீமின் உதட்டில் ஒரு கிண்டல் சிரிப்பைத் தவழச் செய்தது.

"வளர்க்கறதுக்கு இல்ல... கொல்லறதுக்குல்ல கொண்டு போறேன்!''

கரீம் காளையுடன் புறப்பட ஆரம்பித்தபோது, ஸித்து மெதுவான குரலில் கிழவரிடம் கேட்டான்:

" பைசா...?''

"நீ அவன்கிட்ட பைசா ஏதாவது கேட்டா, அவன் உன்னை குழிதோண்டிப் புதைச்சிடுவான். அதை காசீம்கிட்ட கொடுக்கச் சொல்லி நான் சொல்லியிருக்கேன்.

காசீமுக்கும் எப்போதும் ஒரு பங்கிருக்கு.

அவனுக்கு அந்த ஆளை நல்லா தெரியும். நான் இப்படிச் சொன்னேன்னு நீ காசீம்கிட்ட சொல்லு.''

ஸித்து தளர்ந்து போய்விட்டான்.

இங்கு... இந்த இரவு வேளையுடன் ஹல்ஸித்து உடனிருந்தே ஆகவேண்டும். அஸ்ருமியாவிட மிருந்து இரவலாகப் பெற்ற பாத்திரத்தில் கொஞ்சம் புண்ணாக்கை இட்டு கொதிக்க வைத்தான். யல்லம்மாவுக்குப் பிரசாதம் படைப்பதைப்போல எல்லா காளைகளுக்கும் பிரித்துப் பரிமாறினான். தொடர்ந்து அந்த பாத்திரத்தில் நீர் ஊற்றி அனைத் திற்கும் கொடுத்தான். ஒவ்வொன்றும் இரண்டு காளை கள் பருகக்கூடிய நீரை ஆர்வத்துடன் பருகின. இறுதியில் எல்லா காளைகளையும். வட்டமாக அமரவைத்தான். மத்தியில் புத்து களைப்புடன் படுத்திருந்தது.

வழியில் உண்பதற்காக தாய் துணியில் கட்டி புத்துவின் கொம்பில் தொங்கவிட்டிருந்த உணவை ஸித்து எடுத்தான். காளையை நீர் பருகச்செய்த புட்டியை எடுத்து நீர்கொண்டு வந்தான். மரத்தின் நிழலில் அமர்ந்து உணவுப் பாத்திரத்தைத் திறந்தான். வயிறு உள்ளே குழிவிழச் செய்திருந்தது.

வெள்ளைப் பூண்டு சட்னி சேர்த்து மூன்று சோள ரொட்டியைச் சாப்பிட்டும், மீண்டும் வயிற்றுக்குத் தேவை இருந்துகொண்டேயிருந்தது. பாத்திரத்திற்குள் பார்த்து, பாதி இருக்கிறது என்பதை உறுதிப்படுத்திக் கொண்டாலும், திரும்ப வரும் பயணத்தின்போது அது தேவைப்படும் என்ற புரிதல் இருந்ததால் இறுதியில் அந்த விருப்பத்தைப் பாத்திரத்துடன் சேர்த்து தற்காலிகமாக அடைத்து வைத்தான். நீர் பருகி ஏப்பம் விட்டவாறு மரத்தின் நிழலில் தலையைச் சாய்த்தான்.

உண்மையிலேயே கூறுவதாக இருந்தால், அவனு டைய வீட்டிற்கு முன்னாலும் இப்படிப்பட்ட மரம் இருக்கிறது. இதைவிட இன்னும் அளவில் சற்று பெரியது. ஆனால் கடந்த குளிர்காலத்தில் இலைகளின் பச்சை ஆடையை அவிழ்த்தெறிந்த மரத்தில் பத்து மாதங்கள் கடந்தபிறகும் புதிய ஒரு தளிர்கூட எட்டிப் பார்க்கவில்லை. வறட்சியின் நெருப்புச் சூட்டில் மழைக்காகக் காத்திருப்பதற்கிடையே அந்த மரத்தின் ஆயிரக்கணக்கான கிளைகளில் பலவும் காய ஆரம்பித்தன. அந்தப் பகுதியை முழுமையாக வறட்சி விழுங்கி விட்டிருந்தது. இங்கு...

இந்த கிளைகளில் பசுமையைப் பார்க்கும்போது... கோவாவை அடைவதற்குள் எங்கு பார்த்தாலும் குடைவிரித்து நின்றுகொண்டிருக்கும் பசுமையைப் பார்க்கலாம்! "வளர்ந்தபிறகு, கோவாவுக்குப் போய் ஒரு மனுஷனைப் போல வாழு...''

தந்தை ஸித்துவிடம் கூறியிருந்தார். தன்னால் முடியாமல் போனதை மகன் செய்யவேண்டும் என்பது அவருடைய விருப்பமாக இருந்தது.

ss

கானாபூரில்... நெடுஞ்சாலையைவிட்டு விலகி ஏழு மைல் தூரத்தில் உள்ளே இருக்கக்கூடிய கிராமத்தில் ஒரு பள்ளிக்கூடம்கூட இல்லை. தந்தையின் தந்தை பாபா ஸாஹேப் அம்பேத்கரின் சொற்பொழிவைக் கேட்டிருக்கிறார். அவர் தந்தையிடம் கூறினார்: "படிச்சு மனுஷனா ஆகு...''

தந்தை பள்ளிக்கூடத்திற்குச் சென்றார். ஆரம்ப வகுப்பில் தேர்ச்சிபெற்றார். ஆனால், மனிதனாக முடிய வில்லை. தொடர்ந்து பல தரத்திலுள்ள பிள்ளைகள் படிக்கக்கூடிய மார்வாடியின் பள்ளிக்கூடத்திற்குச் சென்றார். உயர்நிலைப் பள்ளிக்கூடம்வரை போனார். ஆனால் கிராமத்தில் வாழக்கூடிய அவர்கள் யாருமே மனிதர்களாக இல்லை. கானாபூருக்கும் பெல்காமிற்கும் சென்ற பிள்ளைகள் கிராமத்தில் இருந்தவர்களைவிட சிறந்த வாழ்க்கையை எட்டிப்பிடித்தார்கள். எனினும் தந்தை அதையும்விட வேறுபட்டுக் காணப்பட்ட ஒரு இடத்தைக் கண்டுபிடித்தார்.

அவருக்குத் தெரிந்த சிலர் கோவாவில் வசித்தார்கள். அவர் நான்கு முறை கோவாவுக்குப் போய்வந்தார்.

அங்குள்ள வாழ்க்கையைப் பார்த்த அவர் ஸித்துவிடம் கூறினார்: "ஸித்து... எவ்வளவு படிக்கணும்னாலும் படி. ஆனால், வளர்ந்தபிறகு கோவாவுக்குப்போய் வாழ்ந்து மனுஷனாகணும்.''

கோவாவுக்குச் சென்று வாழ்வதற்கும் மனிதனா வதற்குமான கனவுகண்டு ஸித்து வளர்ந்தான். ஆனால் அதைச் செயல்வடிவத்திற்குக் கொண்டுவரக் கூடிய எந்தவொரு அறிகுறியும் அவனிடம் தெரியவில்லை.

கசாப்பு சாலை இருக்கக்கூடிய கிராமத்தை அடைந்த போது, அவனுடைய எதிர்பார்ப்பிற்கான அடையாளங் கள் நசுங்கி அழிந்தன. கிராமம் வறண்டு காய்ந்து கிடந்தது. விவசாய வேலை செய்பவர்கள் அனைவரின் வயிறுகளும் ஒட்டிக் கிடந்தன. தின்பதற்கும் குடிப்பதற்கும் வீடுகளின் அடுப்பு ஒரு நேரம் மட்டும் புகைந்தது.

மனிதனின் கதை இந்த நிலையில் இருக்கும்போது, கால்நடைகளைப்பற்றி யார் கவலைப்படப் போகிறார் கள்? முதுமையடைந்து நரைத்துப்போன கால்நடை களின் விஷயத்தை விடுங்கள். வயதாகாத காளை களுக்குக்கூட, கொண்டுவருவதை எண்ணி சரிபார்த்துத் தான் ஏதாவது கிடைக்கும். மழை பெய்யுமென்ற எதிர் பார்ப்பில் இந்த காளைகளின் முதுகில் கட்டிய நுகம் உண்டாக்கிய காயங்களின் அடையாளம் மட்டுமே மிச்சம். கழுத்தில் மணி தொங்கிக்கொண்டிருக்கும் இந்தக் காளைகளால் யாருக்கு என்ன பயன்? குழந்தைகளைப் போல வளர்த்துக்கொண்டு வந்த இந்த காளைகள் இப்போது எடுத்துத் தூக்கமுடியாத சுமையாகிவிட்டன.

விவசாயிகளின் கஷ்டங்களாலும் சிரமங்களா லும் பயன்பெற்றவர்கள் கசாப்புசாலை நடத்துபவர்கள் தான். கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டிருப்ப வர்களின் கால்நடைகளை துடைப்பத்தின் விலைக்கு வாங்கி தூரத்திலிருக்கும் இடங்களில் நல்ல விலைக்கு விற்றுவிடுவது.

தலைப்பாகை அணிந்த தாடிக்காரன் காசீம் கோவாவிலிருந்து மிடுக்காக கிராமத்திற்கு வந்தான். முதலில் அந்த கிராமத்தில் பணத்திற்கான தேவை இருப்பவர்களைப் பற்றி விசாரித்துத் தெரிந்துகொண்ட பிறகு காளைகளுக்கு விலை மதிப்பான். கையில் உடனடி யாகக் கிடைக்கப்போகும் பணத்தை நினைத்து ஆட்கள் அதன்மீது ஈர்க்கப்படுவார்கள்.

ஸித்துவுக்கும் காளை இருந்தது. அதைக் கொடுக்க வேண்டுமென ஸித்து நினைக்கவில்லை. தந்தை எந்த அளவுக்கு அதை கவனித்துப் பார்த்தார் என்ற விஷயம் அவனுக்கு நன்றாகத் தெரியும். ஆனால் ஆச்சரியம் உண்டானது... 'காளையை வித்தா என்ன?' என்று தந்தை கேட்டதுதான்.

கால்நடைகளை கோவாவிலிருக்கும் கசாப்பு சாலையில் கொண்டுபோய் சேர்ப்பதற்கு ஒரு ஆள் வேண்டும். கிராமத்திற்கு காசீம் வந்ததிலிருந்து தந்தை அவனையே கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தார்.

"ஹல்ஸித்து... எப்படி வாழறதுங்கறதைப் பத்தி நீயே சிந்திச்சுப் பாரு. நீ காளைக்காரனோட வேலையைச் செய்றியா?''

வேறு நான்கு பேர்கூட காளைக்காரனின் பணியைச் செய்வதற்கு வந்தாலும், இளைஞனான ஸித்துவின் சுறுசுறுப்பையும் உற்சாகத்தையும் பார்த்தபோது, கசாப்பு சாலைக்காரன் அவனையே காளைக்காரனாக நியமித்தான். பிறகு... தந்தை தன் தீர்மானத்தை அறிவித்தார். அந்த கசாப்பு சாலைக்கு காளைகளை விற்பதுடன், தான் கொண்டுசெல்லும் பன்னிரண்டு காளைகளின் கூட்டத்தில் புத்துவையும் கொண்டு செல்லலாம். புத்துவை நல்ல லாபத்திற்கு யாருக்காவது விற்கவும் செய்யலாம். தந்தையின் புத்திக்கூர்மையை நினைத்து அவனுக்கு சந்தோஷம் உண்டானது. விலங்கு மருத்துவரிடமிருந்து பன்னிரண்டு காளைகளுக்கான சான்றிதழ்கள் கிடைத்தன. ஆனால் தந்தை கூறினார்: "பன்னிரண்டா இருந்தாலும் பதிமூணா இருந்தாலும் என்ன? யாரும் அது எதையும் கவனிக்கப் போறதில்லை.''

கால்நடைகளுக்கான சத்துணவாக தேங்காயை உடைத்து எடுப்பது, அவற்றின் கொம்புகளில் பச்சை நிறத்தைப் பூசுவது, விலங்கு மருத்துவரின் சான்றிதழைத் தயார் செய்வது ஆகிய வேலைகளை கசாப்பு சாலையின் ஆளே செய்து தந்துவிட்டான். காளைகளின் கழுத்திலிருந்த மணிகளை அவர்கள் அகற்றி பத்திரப்படுத்தி வைத்தார்கள். புத்துவின் கழுத்திலிருந்த மணிகளை ஸித்து கழற்றவில்லை. விற்பனை செய்யும் நேரத்தில் அகற்றினால் போதுமல்லவா?

தாய் ஒரு குன்று சோளத்தைக்கொண்டு ரொட்டிகள் தயாரித்தாள். வெள்ளைப் பூண்டின் சுவையைக்கொண்ட சட்னியைத் தயாரித்தாள். அதை உண்டாக்கும்போது வாயில் நீர் ஊறியது.

"எல்லம்மா தேவியோட திருவிழா நெருங்கிட்டது.

அஞ்சு ராத்திரி அங்க இருக்கணும். வேலை முடிஞ்ச வுடனே நீ திரும்பிவரணும். எல்லம்மாவின் ஆசீர்வாதத் தைப் பெறுறதுக்கு, திருவிழாவுக்கு அனஸியையும் அழைச்சிக்கிட்டு செல்லணும். நீ திரும்பி வர்றதுக்கு சிறிதும் தாமதமாகக் கூடாது. இந்தமுறை நல்ல பணம் கிடைக்கறதா இருந்தா, திருவிழா முடியறப்போ திருமணம் நடத்தி அனஸியை வீட்டுக்குக் கொண்டு வரணும்.''

இறுதியாக அனஸியை மருமகளாக ஆக்குவதற்கு தந்தையும் தாயும் தீர்மானித்தது குறித்து ஸித்துவின் மனதில் சந்தோஷத்தின் துடியோசை ஒலித்தது. சென்ற வருடம் எல்லம்மாவின் திருவிழாவுக்கு முன்னால் மாங்க் வாட்யோரிக்குச் சென்றபோதுதான் இரண்டு கைகளைக் கொண்டும் சாண வரட்டி உண்டாக்கிக்கொண்டிருந்த அவளை முதல்முறையாகப் பார்த்தான்.

புதிய புடவையைக் கட்டியிருப்பதைப்போல, தூக்கிக் கட்டிய பாவாடையுடன் அவள் காட்சியளித்தாள். கிழிய ஆரம்பித்திருந்த ரவிக்கையின் வழியாக அவளுடைய இளமை வெளியே தெறித்து நின்றிருந்தது. அவிழ்ந்து பிரிந்து கிடந்த கூந்தல் கண்களில் சிதறிக் கிடந்தது. ஹல்ஸித்துவின் கூர்மையான பார்வையில் சுருண்டு போன அவள் சாணம் புரண்ட கைகளாலேயே கண்களில் விழுந்து கிடந்த தலைமுடிகளை விலக்க, கன்னங்களிலும் சாணத்தின் பசுமை படர்ந்தது. அதைப் பார்த்ததும் ஸித்துவுக்கு அடக்கமுடியாத சிரிப்பு உண்டானது.

அந்த கன்னங்களை வெட்க உணர்வு மேலும் அதிகமாக சிவப்பாக்கியது. பிறகு... எல்லம்மாவின் திருவிழாவில் மலையின்மீது நின்றுகொண்டிருந்த நேரத்தில் கண்கள் அனஸியைத் தேடிப்பிடித்தன. முதலில் அவர்களுடைய கண்கள்தான் பேசிக்கொண்டன. இறுதியில் இரவு வேளையில் ஸித்து அருகிலிருந்த புதர்களின் மறைவுக்கு அவளை இழுத்துக்கொண்டு சென்றான்.

கட்டியணைத்தவாறு கூறினான்: "நீ உன் அம்மா கிட்ட சொல்லு. நான் வீட்ல சொல்றேன்.''

ஆனால் அவன் வீட்டில் விஷயத்தைக் கூறியதும், தந்தையின் எதிர்வினை மிகவும் வேகமாக வந்தது: "அது எப்படி நடக்கும்? அவள் மான்க் ஜாதியைச் சேர்ந்தவ. நாம பிற்படுத்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவங்க.''

தாய் இடையே புகுந்தாள். "மான்க் ஜாதியைச் சேர்ந்தவங்க நம்மைவிட தாழ்ந்தவங்க. ஆனா அவங்க நம்மை தாழ்ந்தவங்கன்னு நினைக்கிறாங்க.''

ஸித்து விரலை முன்னால் நீட்டியவாறு என்னவோ முணுமுணுத்தான்.

"பாபா அம்பேத்கரைப்போல இவன் நமக்கு கத்துத் தர்றானோ?''

இப்போது அது நடக்கப்போகிறது. நான்கு காசு உண்டாக்கி விட்டால் உடனடியாகத் திருமணம்...

ட்ரக்கில் காளையை அலட்சியமாக எறிந்தபோது தோன்றியது- கசாப்பு சாலைக்கு கட்டாயம் பைசா கொடுத்தே ஆகவேண்டுமென்று... அஸ்ருமியா என்ற மனிதநேயர் கிடைத்தது நிம்மதியை அளித்தது.

தர்காவிற்கருகில் இருக்கக்கூடிய அஸ்ருமியா! ஆ... இங்கும் அருகில் எங்கோ ஒரு தர்கா இருக்கிறது. நாளை பொழுது புலர்ந்தவுடன் தர்காவிற்குச் சென்று தொழவேண்டும். அங்கு யார் வேண்டுமானாலும் இருக்கட்டும். அங்குசென்று வேண்டிக்கொள்ளவேண்டும்... திருமணம் மிகவும் சீக்கிரம் நடப்பதற்கு. அனஸியுடன் நடந்துவரவேண்டும்.

நிலவு மறைவதற்குமுன்பே அவன் எழுந்தான். தர்காவுக்கு வெளியே நின்று வணங்கிவிட்டு வந்தான். காளைகள் அனைத்தையும் எழச் செய்தான். சாணத்தின்... மாட்டு மூத்திரத்தின் வாசனை நாசிக்குள் வேகமாக நுழைந்தது. கிராமத்தில் இருந்திருந்தால், இவ்வளவு சாணத்தைக்கொண்டு இருபத்தைந்தோ முப்பதோ சாண வரட்டிகள் உண்டாக்கியிருக்கலாம் என சிந்தித்தவாறு, பொழுதுபுலர்ந்த வேளையிலேயே அவன் காளைகளுடன் பயணத்தைத் தொடங்கினான்.

கோவாவை நெருங்க நெருங்க வழியில் பசுமையின் செழிப்பு பிரகாசமாகத் தெரிந்தது. ஸித்துவைப்போல காளைகளுக்கும் கோவாவை சீக்கிரம் அடையவேண்டும் என்ற எண்ணம் இருப்பதைப்போல அவற்றின் கால்களுக்கும் வேகம் அதிகரித்தது. அகலம் குறைவான சாலையாக இருந்ததால், நான்கு சாலைகள் சந்திக்கக்கூடிய சந்திப்பை அடைந்த தும், ஸித்து காளைகளை ஒரு ஓரத்தில் போகும்படி நடத்திச்சென்றான். எனினும், பின்னாலிருந்து வந்த ஒரு ட்ரக்காரன் வண்டியின் வேகத்தைக் குறைத்துக்கொண்டு காரணமே இல்லாமல் மோசமான வார்த்தைகளால் திட்டினான்.

உச்சி வெயில் பாதையைப் பிரகாசிக்கச் செய்துகொண்டிருந்தது. தந்தை தந்த செருப்பு காளையின் கொம்பில் தொங்கிக் கொண்டிருந்தது. ஸித்து அதை எடுத்துக் கால்களில் அணிந்தான். தார் போட்ட சாலையில் நடப்பதென்பது அவனுக்கும் காளைகளுக்கும் ஒரேமாதிரி சிரமமான விஷயமாக இருந்தது. அவற்றின் கால் வைப்பு கள் இடறாமல் இருக்கவேண்டும் என்பதற் காகத்தான் காளைகளுக்கான உணவைத் தயாரிப்பதற்கு முன்னால் தேங்காயை உடைப்பதே... ஸித்துவுக்கு செருப்பு இல்லை. அதனால் அது பழக்கமும் இல்லை. தந்தையிடமிருந்த ஒரு ஜோடி தோலில் செய்யப்பட்டது. அது ஏதோ கோவிலி-ருந்து திருடப்பட்டது. ஒரு சடங்கைப்போல எப்போதாவது எடுத்து துடைத்து எண்ணெய் தேய்த்து வைத்தாலும் அணிவதில்லை. வருடத்தில் ஒருமுறை எடுத்து கால்களில் அணிந்து திருப்திப்பட்டுக் கொள்வார். திரும்பத் திரும்பக் கேட்டும், ஒருமுறைகூட கொடுத்ததில்லை.

"சாலை சுட்டுப் பொசுக்கும்போது கால்ல போட்டுக்கோ'' என்று கூறியவாறு இப்போது தன் சொந்த விருப்பப்படி கொடுத்திருக்கிறார்.

ஆனால் சிறிது நேரம் அணிந்ததும் செருப்புகள் உரசி, காலில் காயம் உண்டாக ஆரம்பித்தது. காளைகளுக்குப் பின்னால் அங்குமிங்குமாக செருப்புடன் நடப்பதில் என்ன ஒரு சிரமம் இருக்கிறது! அதை அவன் கழற்றி மீண்டும் பிளாஸ்டிக் பைக்குள் போட்டு கொம்பில் தொங்க விட்டான். கர்நாடகத் தின் எல்லையில் தாள்களைப் பரிசோதித்துப் பார்த்தார்கள்.

"யாரோடது? காசீமினி கசாப்பு சாலைக்கா? பன்னிரண்டுதானே? போ...''

கோவாவின் எல்லையில் தனிப்பட்ட சோதனை இருந்தது. காளைகள் அனைத்தையும் எண்ணி சரிபார்த் தார்கள். காசீமிடமிருந்து பன்னிரண்டு காளைகளுக்கான கமிஷன் கிடைத்திருக்கும். பதின்மூன்று காளைகள் இருந்திருந்தால் மாட்டியிருப்பான். ஒரு காளை செத்துப் போனதால், புத்து தப்பித்துக்கொண்டது.

அனைத்தும் முடிந்துவிட்டது. கோவாவை அடைந்து விட்டான். இங்கு ஏதாவது பணியைத் தேடிப்பிடிக்க வேண்டும். தங்குவதற்கு ஒரு இடத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். மனிதனாகவேண்டும்.

கசாப்பு சாலைக்காரன் தரக்கூடிய பணத்தைக் கொண்டு வெறும் கையுடன் செல்லக்கூடாது. கிடைக்கும் பணத்திற்கு மதுப்புட்டி வாங்கவேண்டும். கோவாவில் மதுவின் விலை குறைவு. கானாபூரில் அதை விற்றால், இரண்டு மடங்கு பணம் கிடைக்கும். தந்தையின் வியாபார உத்தியை உண்மையிலேயே தெரிந்துகொள்ளவேண்டும். ஆனால் கொஞ்சம் பணத்தைச் செலவாக்கியே ஆகவேண்டும். தந்தைக்கும் தாய்க்கும் அனஸிக்கும் ஏதாவது வாங்கிக்கொண்டு செல்லவேண்டும்.

திஸ்காரிலிருக்கும் கசாப்பு சாலையில் காசீம் இருப்பான். மேட்டாரிலிருந்து நான்கு மணிநேரம் ஆகுமென கூறினான். போய்ச் சேரும்போது உச்சிப் பொழுதாகிவிடும். இன்று... இங்கு எங்காவது தங்குவதற்கு ஏதாவது வழி கண்டுபிடிப்பது நல்லது. பாதையின் ஓரத்தில் பார்த்த வெற்றிடத்தில் புத்துவை மத்தியிலும் மற்ற காளைகள் அனைத்தையும் சுற்றிலுமாக இருக்கச் செய்தான். சோற்றுப் பாத்திரத்தைத் திறந்தான். பிறகு... நேற்று செய்ததைப்போல காலை மடித்து வயிற்றுக்கருகில் கொண்டுவந்து அனஸியின் நினைவை இறுக அணைத்தவாறு உறங்கினான்.

அதிகாலையில் புத்துவின் கழுத்திலிருந்த மணிகளின் கிண்கிண் சத்தம் அங்கு... எங்கும் ஒலித்தது. சுற்றிலும் பச்சை இலைகள்... பாதை முழுவதும் எளிதில் கிடைக்கக் கூடிய நீர்... இடையில் ஆங்காங்கே அரசாங்கத்திற்குச் சொந்தமான குடிநீர்... அனஸிக்கு இங்கு எந்தவகையான சிரமமும் இருக்காது. இங்கிருப்பவர்கள் மிகவும் நல்லவர்கள். இங்கு வசிக்கலாம்... மனிதனாகலாம்.

அருகில் பார்த்த கோவிலுக்கருகில் ஏதோ மீட்டிங் நடந்துகொண்டிருந்தது. ஜிப்பா அணிந்திருந்த தலைவர் உரத்த குரலில் பேசிக்கொண்டிருந்தார். ஆட்கள் கைகளைத் தட்டினார்கள். ஸித்து நடையை மெதுவாக ஆக்கினான். வெயில் கண்களுக்குள் குத்தி நுழைந்து கொண்டிருந்தது. வயிறு பற்றி எரிந்துகொண்டிருந்தது. சோற்றுப் பாத்திரத்தில் எஞ்சியிருக்கும் ஒரு ரொட்டி? அங்குபோய்ச் சேர்ந்தபிறகு சாப்பிட்டால் என்ன? இது என்ன மீட்டிங்? தேர்தல் சம்பந்தப்பட்டதா?

"பேசாத உயிரினங்களின்மீது அன்பு வைத்திருக்க வேண்டும். மிருகங்களைத் தொந்தரவு செய்யக்கூடாது. யாராவது செய்வதாக இருந்தால், நீங்கள் அதைத் தடுக்க வேண்டும். சட்டம் உங்களுடன் இருக்கிறது. ஒளிந்து கொண்டும் பதுங்கிக்கொண்டும் வேட்டையாடு பவர்களை சட்டத்திற்கு முன்னால் கொண்டுவரவேண்டும். நாக்கால் அன்பை வெளிப்படுத்தும் மிருகங்களுக்கும் வேதனை இருக்கிறதென்பதை நாம் மறந்துவிடுகிறோம்.

கோழியையும் ஆட்டையும் பலிகொடுப்பதைத் தடைசெய்யவேண்டும். பசுவையும் ஆட்டையும் கொன்று தின்பதையும் தடுக்கவேண்டியது அவசிய தேவை...''

பொதுக் கூட்டத்திற்கு வந்திருந்த யாரோ ஒரு ஆள் கைகளைத் தட்டியவாறு உரத்த குரலில் கூறினான்: "அங்க... சாலையைப் பாருங்க. காளைகளை கசாப்பு சாலைக்குக் கொண்டு போறான்.''

மைக்கில் பேசிக்கொண்டிருந்த தலைவர் வேகமாக வந்தார். "பாரு...கோமாதாவை தெய்வமா நாம பார்க்க றோம். காளையை நந்தியாவும்... இந்த கால்நடைங்கள நம்ம நிலங்கள்ல உழுறதாலதான் நம்மால வயிறை நிறைக்க முடியுது. அதுக்கு பதிலா நாமோ?

இந்த கால்நடைங்களைக் கொல்றதுக்காகக் கொண்டுசெல்றப்போ, கைகளைக் கட்டிக்கிட்டு பேசாம நின்னுட்டிருக்கலாமா?''

அவர்களின் மொழி ஸித்துவுக்குப் புரியவில்லை. பொதுக் கூட்டத்திலிருந்தவர்கள் வெறிபிடித்த வர்களைப்போல எழுந்து ஓட ஆரம்பித்தார்கள். எங்கு ஓடவேண்டும் என்பதைத் தெரிந்துகொள்வதற்காக சிலர் சாலைக்கு வந்தார்கள். சிலர் கம்புகளுடன் நின்றுகொண்டிருக்க, வேறு சிலர் வெறுமனே வாயால் ஓசை உண்டாக்கி காளைகளை ஓடவிட்டு நின்றுகொண்டிருந்தார்கள். புத்து ஓட ஆரம்பிக்க, மிகவும் சிரமப்பட்டு ஸித்து அதைப் பிடித்து நிறுத்தினான். அதற்குள் ஆட்கள் அங்கு ஓடிவந்தார்கள். ஸித்துவைப் பிடித்திழுத்து ஒரு மூலைக்குக் கொண்டுசென்றார்கள். காளைகளை ஓடச் செய்தார்கள். புத்து ஓடிக்கொண்டிருந்த வழியில் அதன் கொம்பில் தொங்கவிடப்பட்டிருந்த சோற்றுப் பாத்திரம் வைக்கப்பட்டிருந்த பை கீழே விழுந்தது.

அதை எடுப்பதற்காக ஸித்து ஓட, ஆட்கள் அவனைத் தடுத்தார்கள். "காளைங்களை கொல்றதுக்காக கொண்டு போறேல்ல? உனக்கு பாடம் கத்துத் தர்றோம்.'' ஸித்துவின் கன்னத்தில் அடி விழுந்தது.

"பசுக்களையும் காளைங்களையும் கொல்லுறியா? முதல்ல உன்னைத் தீர்த்துக் கட்டுறோம்.''

கூறியதுடன்... காலை உயர்த்தி ஒரு மிதி... தொடர்ந்து அடுத்த ஆள்... தேன்கூடு இளகியதைப்போல ஆட்கள் அவனை இடிக்கவும் அடிக்கவும் செய்தார்கள். பேசாத உயிரினங்களின்மீது அன்பு வைத்திருக்கும் அந்த ஆட்களின் கூட்டம் ஸித்துவைத் தங்களின் விருப்பப்படி கையாண்டது.

எல்லாரும் சேர்ந்து தன்னை எதற்குக் கொல்கிறார் கள் என்ற விஷயம் இறுதி நிமிடம்வரை அவனுக்குப் புரியவே இல்லை.