bookrelease

ருமபுரி முன்னாள் பா.ம.க. எம்.பி. மருத்துவர் செந்தில் எழுதிய "விழித்தால் விடியும்' நூல் வெளியீட்டு விழா, சென்னை முத்தமிழ்ப்பேரவை அரங்கில் நடந்தது.

மருத்துவர் வானதி வரவேற்க, மருத்துவர் பாவை நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க, பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நூலை வெளியிட்டார். நக்கீரன் ஆசிரியர் கோபால் இதனைப் பெற்றுக்கொண்டார்.

Advertisment

தொடக்க உரையாற்றிய கவிஞர் ஜெயபாஸ்கரன் ""இன்றைய தமிழகம் இருண்டு கிடக்கிறது. இதை விடியவைக்க மருத்துவர் செந்திலைப் போன்றவர்கள் எழுதுகோலால், சிந்தனையால் களமாட வரவேண்டும்'' என்றார்.

கருத்துரையாற்றிய தேவநேயன் அயனாவரக் கொடுமை மானுடத்தின் அசிங்கம். குழந்தைகளின் நிலை இங்கே மோசமாக இருக்கிறது. குழந்தைகளுக்கு நலவாரியம் அமைக்கப்படவேண்டும். குழந்தைகளுக்காகவே சிறப்பு நீதிமன்றங்கள் உருவாக்கப்படவேண்டும். நாளுக்கு நாள் குழந்தைகள் மீதான குற்றம் பெருகிக்கொண்டே வருகிறது - என தனது கவலையை வெளியிட்டார்.

பேராசிரியர் மு. அப்துல் நமது தன் திறனாய்வுரையில் ""சிறந்த ஆவண நூல். இன்றைய அரசியல் நடப்பைத் தெளிவாகச் சொல்லும் நூல் இது. இன்று தமிழ்மொழிக்கு ஏற்பட்ட நெருக்கடியை அழகாகச் சொல்லிலியிருக்கிறார். மருத்துவர் செந்தில். இது போன்ற சிந்தனை நூல்கள் பெருகவேண்டும்'' என்று வாழ்த்தினார்.

Advertisment

சிறப்புரையாற்றிய நக்கீரன் கோபால், ""வீரப்பனைப்பற்றி இந்த நூலிலில் ஒரு தெளிவான கட்டுரையை எழுதியிருக்கிறார் மருத்துவர் செந்தில். வீரப்பன் வேட்டை பற்றி அதிகாரி ஒருவர் எழுதிய புத்தகத்தில் எவ்வளவு கதை புனையைப் பட்டிருக்கிறது என்பதை இந்தக் கட்டுரை அம்பலப்படுத்துகிறது. அந்த நூல் அந்த அதிகாரியின் சுய தம்பட்டத்துக்காக எழுதப்பட்டாலும் வீரப்பனின் ஆற்றலையும் வீரத்தையும் வெளிப்படுத்துவதாகவே இருக்கிறது என்று செந்தில் சொல்லிலியிருக்கிறார்.'' என்றதோடு... தான் காட்டில் இருந்தபோது யானைகளை எதிர்கொள்ள வீரப்பன் வகுத்த வியூகங்களைப் பற்றியும் அவனது குடும்ப விசாரிப்புகள் பற்றியும் வெளியே வந்து அரசியல்வாதியாகி ஆட்சியைப் பிடிக்க ஆசைப்பட்டது குறித்தும் இயல்பாகப் பேசி அரங்கை கைத்தட்டலால் அதிரவைத்தபடியே இருந்தார்.

நிறைவுரை ஆற்றிய மருத்துவர் ராமதாஸ், ""தமிழ்நாட்டில் தமிழ் இல்லை. மொழி உணர்ச்சியில்லை. எதைப்பற்றிய கவலையும் நமக்கில்லை. இங்கே அரசாங்கமா நடக்கிறது? ஊழல்மயமாய் ஆகிவிட்டது தமிழகம். இதை ஊடகங்கள் தடுக்க வேண்டும். ஊடகங்களால்தான் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். நக்கீரன் கோபால் இங்கே இருக்கிறார். அவர்தான் பூனைக்கு மணிகட்ட வேண்டும். அவரைப் போன்றவர்களால் தான் இது முடியும். தமிழர்களின் நாக்குகளில் தமிழ் மலரும் நாள் எது? அந்த நாள் விரைவில் வரும் என்று நம்புகிறேன்'' என்றார் அழுத்தமான குரலில்.

நூலாசிரியரான மருத்துவர் செந்தில் ""தமிழர்களுக்கு கண்ணோட்டம் இல்லை. தெளிவான பார்வையில்லை. சிக்கல் வரும் முன் யோசிக்காமல் சிக்கல் வந்த பிறகே யோசிக்கிறோம்.

இந்த நிலை மாறவேண்டும்'' என்றார். எழுச்சியும் உணர்ச்சியும் மிக்க விழாவாக, இவ்வெளியீட்டு விழா நடந்தது.