மோகினிப் பனையின்கீழே வந்ததும் சிறுமி நின்றாள்.
"இதுக்குமேலே வசிக்கிற மோகினிப் பிசாசை... சின்னப் பொண்ணே... நீ பார்த்திருக்கியா?" அவள் கேட்டாள்.
"மோகினிப் பிசாசா?" சிறுமி ஆச்சரியம் நிழலாடும் கண்களுடன் மேல்நோக்கிப் பார்த்தாள்.
"என் கடவுள்களே... இதுக்குமேலே மோகினிப் பிசாசு இருக்குதாம். அப்படின் னா...நாம இங்கருந்து போயிடுவோம். நம்மைப் பிடிச்சு தின்னுட்டா..?"v "வேலாயுதம் ஒருநாள் சொல்றாரு...
அதேமாதிரியா இருக்குற ஒரு பொண்ணைதான் திருமணம் செய்யணும்னு..." சிறுமி கூறினாள்.
"அப்படின்னா... எந்த அளவுக்கு நல்லா இருக்கும்!" சின்னப் பொண்ணு கூறினாள். அவள் காலால் சிறிய மண் கட்டிகளை வெறுமனே உடைத்துக் கொண்டிருந்தாள்.v "உனக்கு என்ன வயசாச்சு?" சிறுமி கேட்டாள்.
"எனக்குத் தெரியல." சின்னப் பொண்ணு கூறினாள். "உனக்கு கல்யாணம் பண்ணிக்கிற வயசாயிடுச்சுன்னா...
எனக்கும் ஆயிடுச்சு. நீயும் நானும் ஒரே உயரம்..." சிறுமி கூறினாள்.
"கல்யாணம் பண்ணிக்கமாட்டேன்." சின்னப் பொண்ணு கூறினாள்: "பிறகு... ஒரு சுதந்திரம் கிடைக்காது."
"அது என்ன?" சிறுமி கேட்டாள்.
"பிறகு... உட்கார்றதுக்கும் படுக்குறதுக்கும் சுதந்திரம் இருக்காது." சின்னப் பொண்ணு கூறினாள்.
அவள் மண்ணில் அமர்ந்து, வடக்கு திசையிலிருந்த நெல் வயல்களைப் பார்த்தாள். சாயங்கால வெய்யில் பட்டு ஒளிர்ந்துகொண்டும், காற்று மோதி அசைந்து கொண்டுமிருந்த நெற்கதிர்களை நோக்கியவாறு அவள் கூறினாள்:
"எனக்கு கல்யாணம்னா வெறுப்பு... என் கடவுள்களே... எனக்கு ஒரு சுதந்திரமில்ல."
"வேலாயுதன் உன்னை அடிப்பாரா?" சிறுமி கேட்டாள்.
"அடிக்கறது இல்ல.. சுதந்திரம் தர்றதில்ல." சின்னப் பொண்ணு கூறினாள்.
"அதோ... உன்னை எஜமானியம்மா கூப்பிடு றாங்க." வேலைக்காரி அழைத்துக் கூறினாள்: "எவ்வளவு நேரமா தேடுறாங்க! ஏன் இந்த தொழுவத்துக்குப் பின்னால நின்னுக்கிட்டு இருக்கே?"
சிறுமி எழுந்து நின்று தன் பாவாடையின் சுருக்கங்களைத் தடவி சரிசெய்தாள்.
"ஆ... சின்னப் பொண்ணு இங்க இருக்காளா? நீ ஏன் வீட்டுக்குப் போகல?" வேலைக்காரி கேட்டாள்: "அந்த வேலாயுதன் உன்னை எவ்வளவு நேரமாக தேடி ஓடிக்கிட்டிருக்கான்?"
சின்ன பொண்ணு அதை காதில் வாங்கிய தாகவே காட்டிக்கொள்ளவில்லை.
"இந்த பொண்ணு பெரிய கர்வம் புடிச்சவ.." வேலைக்காரி கூறினாள்: "அவன் கூப்பிட்டான்னா காதுலயே வாங்கறது இல்ல. ராத்திரி வந்துட்டா... அவனோட பாயில படுக்குறதுக்கு சம்மதிக்கிறதில்ல. கேட்கறது எதுக்குமே பதில் சொல்றதில்ல... பொல்லாத பொண்ணு!"
"வேலாயுதன் சின்னப் பொண்ணுக்கு சுதந்திரமே கொடுக்குறது இல்லையாம்!" சிறுமி கூறினாள்: "அவளுக்கு கல்யாணமே வெறுத்துப் போச்சாம்."
சிறுமி அதைக் கூறியவாறு வாசலுக்குள் நுழைந்தபோது,பாட்டி அவளைக் கட்டிப் பிடித்தாள். "யாருக்கு கல்யாணம்னா வெறுப்பு?" கிழவி கேட்டாள்.
"சின்னப் பொண்ணுக்கு..." சிறுமி கூறினாள்: "எனக்கு கல்யாணமே நடக்க வேணாம். கல்யாணம் ஆயிட்டா... பிறகு ஒரு சுதந்திரமும் கிடைக்காது."
"அந்தப் பொண்ணு ஒவ்வொண்ணையும் சொல்லி அடக்கி வச்சிருக்கா."
வேலாயுதன் கூறினான்: "நான் அவளோட கதையை முடிக்கிறேன். ஒரு பச்சை மூங்கில் குச்சியைச் சீவி வைக்கிறேன். இன்னிக்கு
அவளோட தோலை உரிக்கிறேன் நான்... அடங்காப் பிடாரி!"
"நீ அவளை அடிக்க கி்ளம்பினதுனால
தான் அவள் உன் பக்கத்திலயே வரல." கிழவி கூறினாள்: "நீ ஏன் இவ்வளவு சின்ன வயசுல இருக்குற ஒருத்தியைக் கல்யாணம் பண்ணினே? உன் வயசுக்குப் பொருத்தமா இருக்குற ஒரு பொண்ணைக் கொண்டு வந்திருக்கலாம்ல?"
"நீங்க சொல்றது சரிதான்." வேலாயுதன் கூறினான்: "ஆனா...அந்த பொண்ணைப் பார்த்தப்போ கண் மறைஞ்சிடுச்சு. அந்த பொண்ணோட நிறமும் சுருண்ட முடியும்... இதையெல்லாம் பார்த்தவுடன் என் கண் மறைஞ்சிடுச்சு.அந்த பொண்ணு இப்படிப்பட்ட பொண்ணுன்னு தெரிஞ்சிருந்தா... நான் இந்த பிறவியில ஒருத்தியைக் கல்யாணமே பண்ணியிருக்க மாட்டேன்."
"கல்யாணத்தை செஞ்சு முடிச்சுட்டே... இனி நீ அவளைப் பார்த்துக்கணும். அப்படி இல்லாம... அடிக்கிறதுக்கும் கொல்றதுக்கும் புறப்படக் கூடாது. அதையெல்லாம் செஞ்சா...அவ அங்கே போயிடுவா..." பாட்டி கூறினாள்.
"சின்னப் பொண்ணு..." வேலாயுதன் சத்தமான குரலில் தன் மனைவியை அழைத்தான்.
"அந்தப் பொண்ணு தொழுவத்துக்குப் பின்னால
உட்கார்ந்திருக்கா." வேலைக்காரி கூறினாள்.
"நான் அங்க போறேன்." வேலாயுதன் கூறினான்:
"நான் அவளோட கதையை முடிக்கிறேன்பாருங்க..."
"நீங்க அந்த பொண்ணைக் கொன்னுடுவீங்க." வேலைக்காரி கூறினாள்: "ஒருநாள் அது நடக்கப்போகுது."
"வேலாயுதம் சின்னப் பொண்ணைக் கொன்னுடுவாரா?" சிறுமி கேட்டாள்: "பாட்டி...
வேலாயுதன் சின்னப் பொண்ணைக் கொன்னுடுவாரா?"
கொல்லெல்லாம் மாட்டான்." கிழவி சிரித்துக்கொண்டே கூறினாள்: "அவன் ஏன் அவனோட மனைவியைக் கொல்லணும்?"
"சின்னப் பொண்ணு... நீ ஏன்டீ ஒளிஞ்சிருக்கே?" வேலாயுதன் உரத்த குரலில் அழைத்துக் கேட்டான்.
"சின்னப் பொண்ணு... உன் புருஷன்தானே கூப்பிடுறாரு?" வேலைக்காரி கேட்டாள்: "உனக்கு காது கேட்கலையா?"
சின்னப் பொண்ணு மெதுவாக நடந்து வந்து, முற்றத்திலிருந்த பரிஜாதத்தின்மீது சாய்ந்தவாறு நின்றாள்.
அவளுடைய ஆடையில் சிவந்த மண் ஒட்டியிருந்தது.
"இன்னைக்கு நான் அவளை அடிச்சு பாடம் கத்துத் தருவேன்." வேலாயுதன் திரும்பிப் பார்த்துக்கொண்டே கூறினான்.
அவனுடைய உதட்டில் ஒரு சிரிப்பு இருந்தது.
அவர்களுடைய குடிசையின் முற்றத்தை அடைந்ததும், வேலாயுதன் தன் மனைவியின் கையைப் பிடித்தான். அவளுடைய கண்ணாடி வளையல்கள் குலுங்கின.v "சின்னப் பொண்ணு... நான் சொன்னது எல்லாத்தையும் நீ நம்பிட்டியா?"
சின்னப் பொண்ணின் கண்கள் ஈரமாகியிருந்தன. அவள் எதுவும் கூறவில்லை.
"என் மகளே...உன்னை நான் அடிப்பேனா?"
அவள் முகத்தை மறைத் துக்கொண்டு தேம்பினாள்.
"நீ என்ன ஒரு முட்டாள் பொண்ணு! என் மகளே..." வேலாயுதன் கூறினான்: "இந்த பிறவியில நான் உன்னை அடிப்பேனா?"