ஆரியம், வேதங்களை உயர்த்திப் பிடிக்கிறது. அதன் வழியே மனுதர்மம் நிலைநிறுத்தப்படுகிறது. மனிதர்களை பிறப்பினால் உயர்ந்தவன்-தாழ்ந்தவன் எனப் பிரித்து பேதம் காட்டும் வருணாசிரமம் போற்றப்படுகிறது. அதுவே தர்மம் என்றும், அதனை பகவானே உருவாக்கினார் என்றும் பகவத் கீதை கூறுகிறது. இந்த வாழ்வியல் முறைக்கு நேர் எதிரானதும், மனிதநேயம் மிகுந்ததுமான பண்பாட்டைக் கொண்டது தமிழர் வாழ்வியல்.
இகம், பரம் என நில உலக வாழ்வையும் வானுலக வாழ்வையும் சுட்டிக்காட்டும் வேதமரபிலிருந்து மாறுபட்டு, அகம்-புறம் எனும் தனிவாழ்வு-பொதுவாழ்வு என வாழ்வின் பயனை சுட்டிக்காட்டுவது தமிழர் பண்பாடு. அந்த வாழ்வியலை ஈரடியால் விளக்குகிற அறநூல்தான் திருக்குறள். அது வேதமரபுக்கு எதிரான தமிழரின் வாழ்வியல் போர்க்கருவி.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்
-என்கிறது குறள்.
பிறப்பினால் மனிதர்கள் மட்டுமல்ல, எல்லா உயிர்களும் இணையானவைதான். அதில் ஏற்றத்தாழ்வு என்பதோ உயர்ந்தோர்-தாழ்ந்தோர் என்பதோ கிடையவே கிடையாது என்கிறது குறள் நெறி. மனிதர்கள் மேற்கொண்டுள்ள தொழில் அறவழிப்படி இருக்கிறதா அல்லது கொலை-கொள்ளை போன்ற அறவழிக்கு எதிரானதாக இருக்கிறதா என்பதைப் பொறுத்தே வேறுபடுவார்கள் என விளக்குகிறது. இது வேதமரபின் தொடர்ச்சி யாகக் கடைப்பிடிக்கப்படும், இன்ன பிறப்புக்கு இன்ன வேலைதான் என்கிற நால் வருண மரபுக்கு எதிரானது. மனிதர்களிடையே சமத்துவத்தை வலியுறுத்துவது.
ஊழ் எனும் விதிப்பயனை பற்றிப் பேசும்போதும்,
ஊழையும் உப்பக்கம் காண்பார் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்
என்று விதியையும் வெல்ல முடியும் வள்ளுவம் நம்பிக்கை தருகிறது. கடவுள் வாழ்த்து பாடிய வள்ளுவர்தான்,
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்
என்கிறார்.
மனித ஆற்றலை மதத்தின் பெயரால், மனிதப் பிறப்பில் பாகுபாடு காட்டுவதன் பெயரால் இழிவுபடுத்தி சிதறடிக்கும் வாழ்வியல் முறைக்கு எதிராக, மனிதர்களிடம் ஒருமைப்பாட்டையும் நம்பிக்கையையும் தருகின்ற வாழ்வியல் வழிகாட்டியாக விளங்குகிறது திருக்குறள்.
வள்ளுவர் காலத்திற்குப் பிறகு வேதமரபை எதிர்கொண்ட கலகக்காரத் தமிழர்கள்தான் சித்தர்கள். ‘அன்பே கடவுள்’ என்ற கொள்கையை அவர்கள் முன்வைத்தனர். உடலைப் பேணி, உயிரைக் காத்து, அன்பின் வழியே சிவனை அடைகின்ற தொண்டூழியத்தை முன்னிறுத் தினார்கள் சித்தர்கள்.
வேத மரபைக் கடைப்பிடிக்கும் சமஸ்கிருத மந்திரங்களுக்கு மாற்றாக, தமிழ் மந்திரங்களை சித்தர்களும் நாயன்மார்களும் ஆழ்வார்களும் தொகையடியார்களும் வழங்கினார்கள். திருமூலரின் திருமந்திரம் என்பது உடலினை உறுதி செய்து, உயிரினைப் பாதுகாத்து, பக்தி எனும் மெய்ஞானம் அடைகின்ற வழியினைக் காட்டுகிறது. அன்பே சிவம் என்றும் அதன் உறைவிடமான கோவில்தான் உடல் என்றும் அது வலியுறுத்துகிறது.
உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ் ஞானம் சேரவுமாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயமறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே
என்கிறது திருமந்திரம்.
ஓங்காரமான ‘ஓம்’ எனும் மந்திரம் தொடங்கி, உடலுக்குள் மூச்சுக்காற்றை சீராக்கிடும் ஓகம் எனும் பயிற்சி வரை அனைத்தையும் தமிழர் வாழ்வியல் தந்திருக்கிறது. அதனைத் தனதாக்கிக் கொள்ளும் அபகரிப்பு முயற்சியை காலந்தோறும் வேதமரபும் வருணாசிரமும் சமஸ்கிருதமும் மேற்கொண்டு வந்தபோது, அவற்றுடன் தமிழ் இலக்கியங்களும் பதிகங்களும் பண்பாட்டுப் போரினைத் தொடுத்தன. அதில் தமிழ் வெற்றி பெற்ற களங்களும் உண்டு. சூழ்ச்சிகளால் முறியடிக்கப்பட்ட களங்களும் உண்டு.
வெற்றி-தோல்விகளைக் கடந்து தமிழ் எனும் கருவியின் துணையுடன் தமக்கான வாழ்வியலை-மெய்யியலை நிலைநாட்டிய தமிழர் மரபில் வள்ளலார் இராமலிங்க அடிகளுக்கு மிகப் பெரிய பங்கு உண்டு. வள்ளுவர் ஏற்றிய சுடரை, திருமூலர் தந்த திருமந்திரம் எனும் எண்ணெய் ஊற்றி, பேரொளியாக ஒளிரச் செய்த கலகக்காரர்தான் வள்ளலார்.
அவர் பாடிய திருவருட்பாவில் ஐந்தாம் திருமுறை வரை பாடியவற்றுக்கும் ஆறாம் திருமுறையில் அவர் பாடியவற்றுக்கும் பெரும் வேறுபாடு உண்டு என்பதை மெய்யன்பர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். வள்ளலாரின் சிந்தனைப் போக்கில் பெரும் மாற்றம் ஏற்பட்ட காலகட்டம் இது என நிறுவுகிறார்கள் சமய நெறி ஆய்வாளர்கள். சமயத்தின் பெயரால், சாதிகளின் பெயரால், சடங்கு- சம்பிரதாயங்களின் பெயரால் பெரும்பாலான மக்களை ஏமாற்றி ஒரு சிலர் மட்டும் கொழுத்து வாழ்வதை ஆறாம் திருமுறையில் கண்டனத்துடன் வெளிப்படுத்தியிருக்கிறார் வள்ளலார்.
சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே
சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே
ஆதியிலே அபிமானத் தலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணேநீர் அழிதல் அலகலவே
என்கிறது அருட்பா.
தொல்தமிழர்கள் இயற்கையை வணங்கியவர்கள், மூதாதையரை வழிபட்டவர்கள், நடுகல் வணக்கம் என்பது தமிழ்ப் பண்பாட்டு அடையாளம். அதன்பின் லிங்க வழிபாடு, சக்தி வழிபாடு ஆகியவற்றைக் கடைப்பிடித்தனர். பிற்காலங்களில் வேதமரபின் தாக்கத்தால், தங்கள் வழிபாட்டு முறையை கைவிட்டு, ஆரியத்திற்கு அடிமையாகும் நிலை ஏற்பட்டது. அதிலிருந்து மீட்கின்ற பணியை மேற்கொண்ட சமயப்புரட்சியாளர்தான் வள்ளலார்.
அவர் கடவுளைத் தொழுதார். உருவ வழிபாட்டை மறுத்தார். தமிழைப் போற்றினார். சமஸ்கிருத மந்திரங்களை எதிர்த்தார். சாத்திரங்களின் பெயரால் நடக்கும் அக்கிரமங்களைக் கண்டித்தார். கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போக வேண்டும் எனப் பாடினார்.
அன்பை வளர்க்கும் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை உருவாக்கி, பசித்தோருக்கு இல்லையெனாது உணவு வழங்கினார், வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடிய மனது கொண்ட வடலூர் வள்ளலார். கடவுளை வழிபடுவதற்கு உருவம் தேவையில்லை, ஒளியே போதும் என ஜோதி வடிவில் தெய்வத்தை வழிபடும் நெறிமுறையை உண்டாக் கினார். "அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை' என்பது வள்ளலாரின் நெறியாகும்.
நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா
நவின்றகலைச் சரிதம் எலாம் பிள்ளை விளையாட்டே
மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார் இலைநீ
விழித்திதுபார் என்றெனக்கு விளம்பிய சற்குருவே
எனப் பாடுகிறார் வள்ளலார்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளு வருடைய குறளின் குரலை, நால்வருணம் என்பது பிள்ளை விளையாட்டே என்கிற வள்ளலாருடைய வரிகளில் கேட்க முடிகிறது.
தமிழர்களின் மெய்யியல் வாழ்வு தனிப் பண்பாட்டு அடையாளங்களைக் கொண்டது. அதை அழித்து, தஞ்சை பெரிய கோவில் கோபுரம் வரை தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது ஆரியமும் அதன் மொழியான சமஸ்கிருதமும். அவற்றின் பிடியிலிருந்து தமிழ்ப் பண்பாட்டை மீட்டு, கோவில் கருவறை முதல் கோபுரம் வரை தமிழ் ஒலித்திட, வள்ளலார் வழி மெய்யியலைத் திரும்பிப் பார்க்கவேண்டிய காலத்தில் நாம் இருக்கிறோம்.