உலகப் பொதுமறையான திருக்குறள் மன்னுயிர்க்கு ஆக்கம் தரும் அறநூல் ஆகும். அன்பையும் அருளையும் எடுத்துரைத்து வையத்தில் வாழ்வாங்கு வாழ்வதற்கு வழிவகுக்கும் கருத்துக்கள் அடங்கிய ஞானப் பெட்டகம் அது. அறநூல்களில் தலைசிறந்தது. உலகப் பொது நெறிக்கு வழிவகுத்து வாழ்க்கைக்கு உரியதை வரைவுச்சட்டகமாகக் கொண்டுள்ளது அந்நூல். மதம், இனம், மொழி கடந்து நின்று உலகோர் நன்னெறியில் வாழ்வதற்குரிய அடிப்படைக் கருத்துகளைத் தன்னகத்தே உடையது.
திருவள்ளுவரின் கருத்தாக்கத்தில் பெரிதும் ஈடுபாடு கொண்டவர்களில் வள்ளலாரும் ஒருவர். தாம் நிகழ்த்திய திருக்குறள் வகுப்புகளின் மூலம் திருவள்ளுவர் கருத்துகளைப் பரப்பியவர்களில் முதன்மையர் அவர். திருவள்ளு வர் உரைத்த மானிட நேயத் திற்குரிய அன்பு, அருள், அறம் ஆகியன வள்ளலாரைப் பெரிதும் ஈர்த்துள்ளன. திருக்குறள்பால் தம் சிந்தனையைச் செலுத்த அவை பெரிதும் காரணமாக இருந்துள்ளன. இதனால் அவரது பாடல்களில் இந்த மூன்றின் தாக்கத்தைக் காணமுடியும். இந்த மூன்றன் அடிப்படையில் அமைந்த விளக்கங்களின் விரிவும், அவற்றின் செயற்பாடுகளும் வள்ளற்பெருமானை இன்றும் நினைவில் நிறுத்தற்குரியனவாய் -
அழியாத அருட்பாடல்கள் வழி அறியச்செய்வன. அன்பின் வலிமையையும், அருளின் திறத்தினையும், அறத்தின் பெருமையையும் நன்கு அறிந்தவர் அவர். சமூகத்தில் இவை நீக்கமற நின்று மக்களை நல்வழிப்படுத்துதற்குரிய நெறியாகக்கொண்டிருந்தவர் அவர்.
மனத்தைப் பக்குவப்படுத்தி மக்கள் நன்னிலை பெறவேண்டும் என்ற கனவு அவருக்கு மிக்கு இருந்துள்ளது. இதற்கு அவர் வழிகாட்டியாகக் கொண்டது திருக்குறளே! வள்ளலாரின் கொள்கை, திருவள்ளுவர் கருத்தின் பிழிவாகக் கருதத்தக்கது என்பதை அவர் கூறிச்சென்ற சீவகாருண்ய ஒழுக்கம், ஆன்மநேய ஒருமைப்பாடு ஆகியவற்றின் மூலம் கண்டறியலாம். வள்ளலார் தம் வாழ்நாள் முழுவதும் இவ்விரண்டின் கோட்பாட்டில் அமைந்த சன்மார்க்க நெறியைத் தம் அருட்பாடல்களில் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார். இதனைப் பல இடங்களிலும் வற்புறுத்திக் கூறியுள்ளார். மக்களைச் செந்நெறிப்படுத்தும் நன்னெறியாக இவற்றைக் கருதினார்.
வள்ளலார் போற்றிக் கடைப்பிடித்த நெறிகளில் தலையாயது பசிப்பிணி அறுத்தல் என்பதாகும். பசிப்பிணிதான் மனித ஒழுக்கத்தைச் சிறுமைப்படுத்தும்; நல்ல பண்புகளைச் சிறைப்படுத்தும். நாட்டின் சீர்க்கேட்டை விலக்கிவைப்பது பசி இன்மைதான். திருவள்ளுவர் நாடு பற்றிய அதிகாரத்தில்
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேராது இயல்வது நாடு
என்ற குறளில் பசியை முதற்காரண மாக்கினார். உண்டி கொடுத்தலைப் பேரறமாகப் போற்றியதால் தமிழர், அதனை உயிர்கொடுத்தோர்க்கு இணையாகக் கண்டனர்.
பசிப்பிணியின் கொடுமையை எண்ணிய காரணத்தால் அதனைப் பாவி என்று கருதினர். ஏழைகளின் வயிற்றுப்பசியைத் தீர்ப்பதை எண்ணியே திருவள்ளுவர், செல்வர் தம் பொருளைப் பாதுகாப்பாகச் சேமிக்கும் இடம் ஏழையின் வயிறாகும் எனக்கூறினார். அதுதான் பாதுகாக்கும் பெட்டகம் என்றார்.
அற்றார் அழிபசி தீர்த்தல் பெற்றான்
ஒருவன் பொருள் வைப்புழி
என்பது குறள். பசியால் ஒருவன் வாடுகிறான்
என்பதைப் பொறுக்காத வள்ளலார் காட்சி வாயிலாக இரந்து வாழும் அவன் நிலையைக் காண்கிறார். அதுவே சமூகத்தின் காட்சியாகத் தோன்றுகிறது. பசியால் இளைத்தே வீடுதோறும் இரந்தும் பசியறாமல் அயர்ந்து இருப்போரைக் கண்டு உள்ளம் பதைத்தார். "பரந்து கெடுக என்று' திருவள்ளுவர்போல் சொல்லாமல், வள்ளலார் சாடுவதற்குப் பதிலாக அக்காட்சி கண்டு மௌன சாட்சியாக நின்றுவிடாமல், பசிப்பிணி களைவதையே தம் வாழ்நாள் குறிக்கோளாகக்கொண்டு பசி ஆற்றுவிப்பதைச் செயற்படுத்தினார். திருவள்ளுவரின் கோபம் வள்ளலாரால் தணிந்ததாகக் கொள்ளலாமா? இரந்துண்ணும் நிலையை ஏற்காத வள்ளுவம் போலவே அருட்பாவியமும் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இரவு, இரவச்சம் ஆகிய ஈரதிகாரங்களில் இரத்தலின் வன்மை மென்மைகளை அலசுகிறார் திருவள்ளுவர். இரவு, இரவச்சத்தின் பிழிவினை அருட்பா பாடல் ஒன்று ஆழமாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்கிறது.
ஈஎன்று நான்ஒருவர் இடம்நின்று கேளாத
இயல்பும்என் னிடம்ஒருவர்ஈ
திடுஎன்ற போதவர்க் கிலைஎன்று சொல்லாமல்
இடுகின்ற திறமும் இறையாம்
நீஎன்றும் எனைவிடா நிலையும்நான் என்றும்உள
நினைவிடா நெறியும்அயலார்
நிதிஒன்றும் நயவாத மனமும்மெய்ந் நிலைநின்று
நெகிழாத திடமும்உலகில்
சீஎன்று பேய்என்று நாய்என்று பிறர் தமைத்
தீங்குசொல் லாததெளிவும்
திரம்ஒன்று வாய்மையும் தூய்மையும் தந்துநின்
திருவடிக் காளாக்குவாய்
என்னும் பாடலின் முதல் நான்கடிகளில் இரவு, இரவச்சம்
ஆகிய இரண்டன் நிலைப்பாடுகளை வள்ளலார் கூறிச்சென்றிருப்பது திருக்குறள் கருத்தடிப்படையில் அமைந்துள்ளது.
இறைவனை என்றும் போற்றிப் பாடிப்பரவிய அருட்பிரகாசர், நாளும் இறைவனை மறவாத பண்பினர். தன்னை எஞ்ஞான்றும் கைவிடாத நிலையை இறைவனிடத்து வேண்டும் அவர், ""நீஎன்றும் எனைவிடாத நிலையும்'' என்று கூறிவிட்டுத் தாமும் இறையை எப்போதும் நினைவிலிருந்து அகலாதநெறியையும் என்றும் பாடியுள்ளார். கடவுள் வாழ்த்தின் பிழிவை இவ்வடிகள் எதிரொலிக்கின்றன.
"அயலார் நிதி ஒன்றும் நயவாத மனம்' என்றது, பிறர் பொருளின் மீது ஆசையற்ற தன்மையைக்குறித்து வந்தது. மனத்தில் ஆசை புகுமானால் பிறர் பொருள்மீது கண்ணோட்டம் செலுத்தும். அது மனத் திற்கு மாறான செயல். வெஃகாமை அதிகாரத் தில் வரும் கருத்தோட்டத்தில் இருந்து இதனை அணுகலாம். "உள்ளத்தால் உள்ளலும் தீது'; "படுபயன் வெஃகிப் பழிபடுவ செய்யார்'; "இலமென்று வெஃகுதல் செய்யார்'; "வேண்டற்க வெஃகியாம் ஆக்கம்' ஆகிய குறட்சிந்தனையின் விளைவு வள்ளற்பெருமானின் உள்ளத்தில் பதிந்துள்ளதைக் காட்டும்.
"மெய்ந்நிலை நின்று நெகிழ்ந்திடாத திடம் என்றது வள்ளலாரின் உள்ளத்துறுதியை உணர்த்தும். உண்மைத் தன்மையிலிருந்து மாறுபடா நிலை என்றும்,மெய்ப்பொருளை முற்றற உணர்ந்த நிலை என்றும் கொள்ளலாம். தன்னிலையில் தாழாதிருத்தலும் இதனைச் சாரும். மெய்ப்பொருள் என்னும் செம்பொருள்கண்டவருக்கே இது சாலும். மெய்யறிவினருக்கு ஒருசிறிதும் மயக்கமும் இராது.
யாரையும் இகழாதிருத்தல் மானிடப்பண்பு. "பகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி' என்பது திருக்குறள். இகழ்ந்து பேசக்கூடாது என்பது மட்டும் அன்று. கடுஞ்சொல் தவிர்த்து கனிவான இனிய சொல்லைப் பேசவேண்டும். இன்னாச்சொல் சொல்லாமை அறத்தில் அடங்கும். சிறுமையான சொற்கள் சொல்லாமல் இருத்தல் ஒருவருக்கு இம்மையிலும் மறுமையிலும் இன்பம் தரும் என்பது வள்ளுவர் வாக்கு. செம்பொருள் கண்டார்வாய்ச்சொல்லில் இனிமை இருக்கும்; கனிவும் இருக்கும். பணிவுடையவனுக்கு இன்சொல் அணிகலனாகும் என்பார் திருவள்ளுவர். வள்ளலார் இன்சொல்லுக்கு எதிரான நிலையை எண்ணியே, ""பிறர்தமைத் தீங்குசொல்லாத தெளிவு'' என்றுரைக்கிறார்.
வள்ளலார் கண்ட நெறிகளில் கொல்லாமை ஆகிய அறம் மிகுந்த செயலாக்கம் உடையது. பசிப்பிணிக்கு அடுத்து அவர் முன்வைத்த பெருநெறி கொல்லாமையும், புலால் உண்ணாமையும் ஆகும். இவை இரண்டும் அவர் வலியுறுத்திய சீவகாருண்ய ஒழுக்கத்தில் அடங்கும். கொல்லாமை குறித்துத் திருவள்ளுவர் கூறியுள்ள கருத்தாக்கத்தின் அடிப்படையில் வள்ளலார் இதனை வற்புறுத்துகிறார்.
இந்நெறியை வள்ளலார் தம் பாடல்களில் மிகுதியாக வற்புறுத்தியிருக்கிறார்.
தவத்தின் வடிவத்தை வலியுறுத்தும் வள்ளுவர் உயிருக்கு உறுகண் செய்யாமையை எடுத்துரைப்பார். அறிவினால் ஆகும் பயன் என்று திருவள்ளுவர் கருதுவது பிறர் துன்பத்தைத் தம் துன்பமாகக் கருதும் பண்பு என்றார். ஒத்ததறிவான் உயிர்வாழ்வான் என்றும் குறிப்பிடுகின்றார். உயிரிரக்கம் பற்றிய வள்ளலார் கருத்திற்கு அரண் செய்வதாகும் இக்குறட்கருத்துகள்.
மண்ணுலகதிலே உயிர்கள்தாம் வருந்தும்
வருத்தத்தை ஒருசிறி தெனினும்
கண்ணுறப் பார்த்தும் செவியுறக்கேட்டும்
கணமும் சகித்திட மாட்டேன்
என்ற அருட்பாடல் மேற்கூறிய கருத்தின் அடிப்படையில் அமைந்ததெனலாம்.
மனிதப் பண்புகளில் வேண்டாத ஒன்று சினம். அது தரும் விளைவுகள் அகத்தையும் புறத்தையும் தீமைப்படுத்தும்; நோய்க்கு ஆளாக்கும். இதனை எண்ணியே சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி என்றார் வள்ளுவர். வெகுளாமை அதிகாரத்தில் இடம் பெறும் குறட்பாக்களை அப்படியே எடுத்தாண்டு சினத்தின் இழிவினை எடுத்துரைக்கிறார் வள்ளலார்.
பாபக் கடற்கோர் படுகடலாம் பாழ்வெகுளிக்
கோபக் கடலில் குளித்தனையே - தாபமுறச்
செல்லா விடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்லதனில் தீயதென்ற தெண்ணிலையே - மல்லல்பெறத்
தன்னைத்தான் காக்கில் சினங்காக்க என்றதனைப்
பொன்னைப்போல்போற்றிப் புகழ்ந்திலையே- துன்னி
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல என்னுந்
திகழ்வாய் மையும்நீ தெளியாய் -
இவ்வாறு திருவள்ளுவரின் கருத்தோட்டத்தில் சிந்தை செலுத்திச் செம்மையான உள்ளம் பெற்று வாழ்வாங்கு வாழ வழிவகுத்துள்ளார் வள்ளலார்.