திரைத்துறை அனுபவங்களின் பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் கவிப்பேரரசு வைரமுத்து, வயதுகளால் தீண்டமுடியாத வாலிபத்தோடு தனது சாதனைப் பயணத்தை தொடர்ந்துகொண்டே இருக்கிறார்.

திரைக்கப்பால் அவர் நிகழ்த்திக்கொண்டிருக்கும் ‘நாட்படு தேறல் எனும் சுதந்திரமான பாட்டு வேள்வி, ஏப்ரல் 17 முதல் இரண்டாம் பருவத்தை எட்டிப்பிடித்து, வளரத்தொடங்குகிறது.

நாட்படு தேறலை வைரமுத்துவே தயாரித்து வழங்கி வருகிறார். இதன் முதல் பருவ நிகழ்ச்சிகள், கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, உலகத் தமிழர்களின் பெரும் கவனத்திற்கு உள்ளானது.

Advertisment

vaa

அதனைத் தொடர்ந்து இப்போது அதன் இரண்டாம் பருவம் மலர்கிறது.

100 இசையமைப்பாளர்கள் - 100 பாடகர்கள் - 100 இயக்குநர்கள் என்ற பெரும் திட்டத்தோடு இயங்கிவரும் நாட்படு தேறலின் இரண்டாம் பருவம், 13 பாடல்களோடு 13 வாரங்கள் வரவிருக்கிறது.

நாட்படு தேறல் இரண்டாம் பருவத்தில், வித்யாசாகர் - யுவன்சங்கர் ராஜா - ஜி.வி.பிரகாஷ் - ரமேஷ் விநாயகம் - அனில் சீனிவாசன் - ஜெரார்ட் பெலிக்ஸ் - நௌபல் ராஜா - அவ்கத் - வாகு மசான் - இனியவன் உள்ளிட்ட இசையமைப்பாளர்களும், எஸ்.பி.பாலசுப்ரமணியம் -ஹரிஹரன் - சங்கர் மகாதேவன் - பாம்பே ஜெயஸ்ரீ - விஜய் யேசுதாஸ் - ஹரிணி - கல்பனா ராகவேந்தர் - பென்னி தயாள் - ஹரிசரண் - அந்தோணி தாசன் - வைக்கம் விஜயலட்சுமி உள்ளிட்ட பாடகர்களும், காந்தி கிருஷ்ணா - சரண் - பரதன் - சிம்புதேவன் - சரவண சுப்பையா - காக்கா முட்டை மணிகண்டன் - விருமாண்டி - கணேஷ் விநாயம் - விக்ரம் சுகுமாரன் - தளபதி பிரபு - ரமேஷ் தமிழ்மணி - ராதிகா உள்ளிட்ட இயக்குநர்களும் பங்களிப்புச் செய்திருக்கிறார்கள்.

இது குறித்துப் பேசும் வைரமுத்து “எனக்குத் தமிழ் கற்றுக் கொடுத்ததில் திரைப்பாட்டுக்குப் பெரும்பங்கிருக்கிறது. ஒரு தலைமுறைக்குத் தமிழ் சொல்லிக்கொடுக்கும் கடமையை நாட்படு தேறல் ஆற்றும்; ஆற்றவேண்டும் என்று விரும்புகிறேன். நாட்படு தேறல் என் சமகாலத்தில் வாழும் உலகத் தமிழர்களுக்கு காணிக்கை என்கிறார் பெருமிதமாய்.

-இலக்கியன்