வைக்கம் முஹம்மது பஷீர்...

என் கல்லூரிக் காலத்தில் இந்த மாபெரும் எழுத்தாளரின் படைப்புகளை நேரடியாக மலையாளத் தில் வாசிக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் மலையாள மொழியையே கற்றேன். அதில் வெற்றியும் பெற்றேன்.

மலையாளத்தை வாசிக்கவும் எழுதவும் பேசவும் கற்றவுடன் இவரின் பல அருமையான படைப்புகளை மலையாளத்தில் வாசித்தேன். பஷீரின் பரம ரசிகராகவே ஆனேன்.

பஷீரின் அற்புத படைப்பான 'மதிலுகள்' புதினத்தைத் தமிழில் மொழிபெயர்க்க ஆசைப்பட்டேன். அதற்கான அனுமதிக்காக பஷீருக்குக் கடிதம் எழுதினேன்.

Advertisment

உடனடியாக அவரிடமிருந்து பதில் வந்தது. பஷீரே தன் கைப்பட எழுதியிருந்தார்.

sss

அதில் இருந்த வரிகள் இதுதான்...

Advertisment

ப்ரிய ஸுஹ்ருத்தே...

நிங்ஙளுடெ கத்து கிட்டி. வளரெ சந்தோஷம்.

"மதிலுகள்' தர்ஜும செய்யுக. ஞான் சாஹித்யம் கொண்டு மாத்ரம் ஜீவிக்குன்ன ஒரு ஆளாணு.

எனிக்கு ஏதெங்கிலும் ரோயல்டி தரணும். சஸ்னேஹத்தோடெ, வைக்கம் முஹம்மது பஷீர்' இதற்கான தமிழ் அர்த்தம்...

அன்புள்ள நண்பரே...

உங்களுடைய கடிதம் கிடைத்தது. மிகவும் மகிழ்ச்சி.

"மதிலுகள்' புதினத்தை மொழிபெயர்ப்பு செய்யுங்கள்.

நான் இலக்கியத்தை மட்டுமே வைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மனிதன். எனக்கு ஏதாவது ராயல்டி தரவேண்டும்.

அன்புடன்,

வைக்கம் முஹம்மது பஷீர்

நான் மொழிபெயர்த்த 'மதிலுகள்' புதினம் 'மஞ்சரி' மாத இதழில் 'மதில்கள்' என்ற பெயரில் பிரசுரமானது.

இது நடைபெற்றது 1979 ஆம் வருடத்தில்.

தொடர்ந்து "ப்ரேம லேஹனம்' என்ற புதினத்திற்கும், "ஜீவித நிழல்பாடுகள்' என்ற புதினத்திற்கும் மொழிபெயர்ப்பு உரிமை கேட்டு நான் பஷீருக்குக் கடிதங்கள் எழுத, அவர் என்னுடைய 2 புதிய கடிதங்களுக்கும் உடனடியாக அனுமதி அளித்து, பதில் கடிதங்கள் எழுதினார். முதல் கடிதத்தில் இருந்த அதே வரிகள்தான். நூலின் பெயர் மட்டும் வேறாக இருந்தது.

"ப்ரேம லேஹனம்' புதினம் "மஞ்சரி' மாத இதழில் 1980-ஆம் வருடத்தில் "காதல் கடிதம்' என்ற பெயரில் பிரசுரமானது.

அதே வருடத்தில் நான் மொழி பெயர்த்த "ஜீவித நிழல்பாடுகள்' புதினம் "மஞ்சரி'யில் "நிழல்கள்' என்ற பெயரில் பிரசுரமானது. இவை இரண்டும் 1980-ஆம் வருடத்தில் பிரசுரமாயின.

நான் மொழிபெயர்த்த பஷீரின் இந்த மகத்தான படைப்புகள் இலக்கிய உலகில் எனக்கு ஒரு அடையாளத்தை உண்டாக்கிக் கொடுத்தன.

வைக்கம் முஹம்மது பஷீரைத் தவிர, வேறு பல முன்னணி எழுத்தாளர்களின் படைப்புகளையும் அந்தக் காலகட்டத்தில் நான் மொழிபெயர்த்தேன். அவை மஞ்சரி, தாமரை ஆகிய இதழ்களில் தொடர்ந்து பிரசுரமாயின.

என் மொழிபெயர்ப்பு படைப்புகளை நூல்களாக கொண்டு வருவதற்கு பூம்புகார் பிரசுரம், கலைஞன் பதிப்பகம் ஆகியவற்றில் முயற்சித்தேன். நான் எதிர்பார்த்த அளவிற்கு அது கைகூடி வரவில்லை.

அதன் விளைவாக என் கவனத்தை வேறு பக்கம் திருப்பினேன். சாவி, பிலிமாலயா ஆகிய பத்திரிகைகளில் உதவி ஆசிரியராக பணியாற்றிய நான் திரைப்படத் துறைக்குள் நுழைந்தேன்.

திரைப்படங்களுக்கு மக்கள் தொடர்பாளராகப் பணியாற்ற ஆரம்பித்தேன். 200 திரைப்படங்களுக்கும் 70 தொலைக்காட்சித் தொடர்களுக்கும் மக்கள் தொடர்பாளராக நான் பணியாற்றினேன்.

இலக்கிய மொழி பெயர்ப்பு எதையும் அந்த காலகட்டத்தில் நான் செய்யவில்லை. இலக்கிய படைப்புகளை வாசிப்பதுடன் என்னை நிறுத்திக் கொண்டேன்.

1994-ஆம் வருடத்தில் நடிகர் நெப்போலியனுக்கு மக்கள் தொடர்பாளராக நான் இருந்தபோது, நெப்போலியனைப் பார்ப்பதற்காக கவிஞர் அறிவுமதி வந்தார். அவர் என் நீண்டகால நண்பர். தான் கேரளத்திற்குச் சென்றதாகவும், உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த வைக்கம் முஹம்மது பஷீரைப் பார்த்ததாகவும், அவரின் படைப்புகளைப் பாராட்டிக் கூறியதாகவும் என்னிடம் கூறினார். "என் படைப்புகளை நீங்கள் எங்கு வாசித்தீர்கள்?'' என பஷீர் கேட்க, "என் நண்பர் சுரா மொழி பெயர்ப்பில் மதில்கள், காதல் கடிதம், நிழல்கள் ஆகிய புதினங்களை நான் வாசித்திருக்கிறேன்'' என்று கூறியிருக்கிறார் அறிவுமதி.

அதைக் கேட்ட பஷீர் "அவரின் பெயர் எனக்கு நன்றாக ஞாபகத்தில் இருக்கிறது. அவர் எனக்கு கடிதங்கள் எழுதியிருக்கிறார். நான் அவருக்குக் கடிதங்கள் எழுதியிருக்கிறேன். சுராவை நான் கேட்டதாக கூறுங்கள்'' என்று கூறியிருக்கிறார்.

இந்தச் சம்பவத்தை அறிவுமதி கூற, நான் மிகவும் சந்தோஷப்பட்டேன்.

அதற்குப் பிறகு சில மாதங்களில் பஷீர் இந்த மண்ணிலிருந்து விடை பெற்றுக்கொண்டார்.

எனக்கு இலக்கிய அடையாளத்தைத் தந்த அந்த பகலவன் மரணத்தைத் தழுவியதை அறிந்து, நான் அடக்க முடியாமல் அழுதேன். பஷீரின் மீதும் அவரின் எழுத்தின் மீதும் எனக் கிருந்த அளவற்ற மதிப்பே அதற்குக் காரணம்.

வருடங்கள் கடந்தோடின.

1999 ஆம் வருடம்...

கேரளத்தின் கோழிக்கோட்டிற்குச் சென்றிருந்தேன்.

வைக்கம் முஹம்மது பஷீரின் வீட்டிற்குச் செல்ல ஆசைப்பட்டேன். அதை என் நண்பரும் மலையாள திரைப்பட இயக்குநருமான கே.ஏ. தேவராஜனிடம் கூறினேன். அவர் என்னை பேப்பூரிலிருக்கும் பஷீரின் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார்.

பஷீர் இல்லாத பஷீரின் வீட்டிற்குள் நுழைந்தேன்.

சுவர் எங்கும் பஷீரின் படங்கள்... ஓவியங்கள்... ரசிகர்களின் கைவண்ணங்கள்... பஷீரின் மனைவி ஃபாபி, மகன் அனீஸ், மகள் ஷாஹினா ஆகியோர் என்னை அன்புடன் வரவேற்றார்கள்.

பஷீருக்கு பல வருடங்களுக்கு முன்பு நான் கடிதங்கள் எழுதியது... அவர் எனக்கு பதில் கடிதங்கள் எழுதியது... பஷீரின் புதினங்களை நான் மொழி பெயர்த்தது... அனைத்தையும் அவர்களிடம் கூறினேன்.

அத்துடன் பஷீரின் வேறு புதினங்களைப் பற்றியும், சிறுகதைகளைப் பற்றியும் மிகுந்த ஆர்வத்துடனும் ஈடுபாட்டுடனும் நான் பேசப்பேச அதை தங்களையே மறந்து அவர்கள் கேட்டுக் கொண்டிருந்தனர்.

"தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட ஒருவனுக்கு பஷீரின் மீது இப்படியொரு இணையற்ற பக்தியா' என்ற வியப்புடன் என்னையே பார்த்தார்கள்.

ஒரு மேஜையின் மீது போடப்பட்டிருந்த கண்ணாடிக்குக் கீழே பஷீர் தன் கைப்பட எழுதிய வரிகள் தெரிந்தன.

"ஜீவிதம் தைவத்தின்றெ அனுக்ரஹமாணு' என்ற அந்த பஷீரின் வார்த்தைகளுக்கு அர்த்தம்... "வாழ்க்கை கடவுளின் கொடுப்பினை.'

அவரின் 'சப்தங்கள்' புதினத்தில் வரும் வரிகள் அவை.

பஷீர் எப்போதும் அமர்ந்து எழுதக்கூடிய சாய்வு நாற்காலியை என்னிடம் காட்டினார் அவரின் மகன் அனீஸ். அதை நான் தொட்டு வணங்கினேன்.

எப்படிப்பட்ட உன்னத படைப்புகளை அதில் அமர்ந்து பஷீர் எழுதி யிருக்கிறார்! வீட்டிற்கு முன்னாலிருக்கும் மங்குஸ்தான் மரத்தைக் காட்டினார்கள்.

அதற்குக்கீழே அமர்ந்துதான் பஷீர் எப்போதும் எழுதுவார். அந்த இடத்தைத் நான் தொட்டு கும்பிட்டேன்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நான் அங்கு இருந்தேன்.

பஷீரைப் பற்றி நான் பெருமையாகப் பேசியதை அவர்கள் மிகுந்த விருப்பத்துடன் கேட்டார்கள் என்பதை அவர்களின் முக மலர்ச்சியே வெளிப்படுத்தியது.

பிரியா விடைபெற்று அங்கிருந்து கிளம்பினேன். என் வாழ்வின் மதிப்புமிக்க நிமிடங்கள் அவை.

2000...

புதுமைப்பித்தன் பதிப்பகம், சந்தியா பதிப்பகம் ஆகியவை ஆரம்பிக்கப்பட... சகோதரர் இளையபாரதி என்னைத் தொடர்பு கொள்ள...

15 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இலக்கியப் பாதையில் நடக்க ஆரம்பித்தேன். நான் மொழிபெயர்த்த 5 புதினங்களைக் கொண்ட பஷீரின் "மரணத்தின் நிழலில்' நூல் வெளியானது.

தொடர்ந்து "மதில்கள்'... பிறகு...

"முதல் முத்தம்'... "ஐசுக்குட்டி' என்ற இரு சிறுகதைத் தொகுப்புகள்.

இவற்றில் நான் மொழிபெயர்த்த பஷீரின் சிறந்த 25 சிறுகதைகள்... அவற்றைத் தொடர்ந்து...

நான் மொழி பெயர்த்த மந்திரப் பூனை, சப்தங்கள்,எங்கள் தாத்தாவிற்கு ஒரு யானை இருந்தது, சிங்கடி முங்கன் ஆகிய பஷீரின் புதினங்கள்...

பிறகு...

நான் மொழிபெயர்த்த பஷீரின் கட்டுரைகள்.. "கம்யூனிஸ்ட் பாசறை' என்ற பெயரில் வெளி வந்தது.

திரு. நடராஜன், திரு. இளையபாரதி... இருவருக்கும் நான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.

அவர்கள் இல்லாமல் இது சாத்தியமா?

அதைத் தொடர்ந்து நான் மொழிபெயர்க்க... நக்கீரன் பதிப்பகம் வெளியிட்ட பஷீரின் படைப்புகள்... பாத்தும்மாவின் ஆடு... இளம் பருவத்துத் தோழி... மூன்று சீட்டுக்காரனின் மகள்... சசினாஸ்...

சிரிக்கும் மர பொம்மை..

வருடங்கள் பறந்தோடி விட்டன.

இத்தனை வருடங்களுக்குப் பிறகு...

நடந்த சம்பவங்கள் ஒவ்வொன்றையும் நான் நினைத்துப் பார்க்கிறேன்.

எப்படிப்பட்ட ஈடற்ற எழுத்தாளரின் மகத்தான இலக்கியப் பொக்கிஷங்களை நான் மொழிபெயர்த்திருக்கிறேன்!

நினைக்கும்போதே பெருமையாக இருக்கிறது.