தமிழக டெல்டா பகுதி விவசாயிகளின் இதயத்துடிப்பை பசுமையாக எதிரொலிக்கிறது வானவன் படைத்திருக்கும் ‘ஒரக்குழி’ புதினம். இதன் கருவும் கதைக்களமும் கதைப் போக்கும் இதில் சொல்லப்பட்ட தகவல்களும் தமிழ் இலக்கியச் சூழலுக்குப் புதியதாகும்.
வானவன் ஏற்கனவே பசுமைக் காவலராக அறியப்பட்டவர். சென்னையில் நடக்கும் அனைத்து இலக்கிய நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கும் இவர், அங்கு வருகிற அனைவருக்கும் தானிய விதைப் பொட்டலங்களை அன்பளிப்பாக வழங்கி, தோட்ட விவசாயத்தையும் ஊக்கப்படுத்துவார்.குடும்ப சகிதமாக இயற்கை விவசாயத்திற்காக வாழ்வைஅர்ப்பணித்துக்கொண்டிருக்கும் வானவன், இப்போது இலக்கிய விவசாயத்திலும், இந்தப் புதினத்தின் மூலம் இறங்கியிருப்பது பாராட்டுக்குரிறயது.
’உங்க காலத்துல தான் ரசாயன ஒரத்தையும் பூச்சிக்கொல்லி மருந்தையும் களைக்கொல்லியையும் போட்டு, நெலத்தை மலடாக்கி, உணவுப் பொருளை எல்லாம் வெசம் ஆக்கிட்டீங்க.... '- என ஜீரணித்துக் கொள்ளவே சற்று கடினமானதொரு உண்மையை, உரக்கப் பேசியபடி புதினத்தைத் தொடங்குகிறார் வானவன்....
வயலும் வயல் சார்ந்த இடமும் கொண்டது மருத நிலம்.....அத்தகைய மருதநிலமான கீழத்தஞ்சை, சோழ முத்திரை பதிந்த மகத்துவ பூமியாகும். இலக்கியங்களில் ‘யானைக் கட்டிப் போரடித்த களமாகக் கொண்டாடப்பட்ட பசுமை சூழ் மருதத்தையே, கதைக்கான களமாக வானவன் தேர்வுசெய்திருப்பது மிகப் பொருத்தமாக உள்ளது. தன் எழுத்துக்களால் அவர் மருதத்தை இந்தப்புதினத்தில் கொண்டாடித் தீர்த்திருக்கிறார்.
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்... மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்கிற அளவுக்கு, உழவையே தன் வாழ்வாதாரமாகவும் மூச்சாகவும் கொண்டு வாழ்ந்த டெல்டா மாவட்ட மக்களின் பாடுகளையும் வாழ்வியல் சார்ந்த பண்பாட்டையும், வெள்ளந்தித்தனமான மனிதர்களையும் இயற்கை விவசாயத்தோடு ஒட்டி எந்தவிதமான புனைவுமில்லாமல் எடுத்தியம்புவதே இந்த ஒரக்குழி நாவலின் சிறப்பம்சம்.
மானாம்பதி கிராமத்தின் நாயகன் செல்லமுத்து. மரபுசார் விவசாயத்தின் மேல் நம்பிக்கை கொண்ட முன்மாதிரி இளைஞன். புதினத்தின் நாயகனும் செல்லமுத்துதான். பக்கத்து வீட்டிற்கு மளிகை சாமான் வாங்கவேண்டிய பணத்தை எடுத்துக்கொண்டு உப்பு லாரி ஏறி சென்னை செல்லும் செல்லமுத்து, சில வருடங்களுக்கு பிறகு, பிறந்த மண்ணுக்கே திரும்பி வந்து, ரசாயன உரங்களையும், களைக்கொல்லியையும் பூச்சிக்கொல்லி மருந்துகளையும் இட்டு மலடாக்கி வைத்திருக்கும் தாய் நிலத்தை மீட்டெடுக்க, முன்னோர்கள் கையாண்ட இயற்கை விவசாயத்தைக் கையிலெடுக்கிறான்.
செல்லமுத்துவின் வாழ்வியலோடு பிணைந்துள்ள கதை மாந்தர்கள் ஒவ்வொருவரையும், கதாசிரியர் அறிமுகப்படுத்தும் விதமே அலாதியானது. பனங்கருக்க வகுந்து பின்னி சாணி போட்டு மெழுகுன தட்டு. அதுல கொஞ்சம் வெத்தலப் பாக்கு, சுண்ணாம்பு, பொகையிலன்னு இருக்கும். கத பேச வர்றவங்களுக்கு ....என கிராமத்து இயல்போடு சேர்த்து பரமசிவம் மாமாவை அறிமுகப்படுத்தும் இடத்திலிருந்து நம் மனதுமிக எளிதாக நாவலுக்குள் பயணிக்கத் துவங்கி விடுகிறது.
ஊரில் யார் யார் என்ன புகையிலை பயன்படுத்துவார்கள் என தெரிந்து வைத்திருக்கும் கிராமத்து வியாபாரிகள்...முதன் முதலில் நெல்லு, முந்திரி, தென்னை என செய்து கொண்டிருந்த விவசாயம் தாண்டி, செலவில்லாத வெள்ளாமையான வேர்க்கடலய ஊருக்குள் அறிமுகப்படுத்தி அதில் வெற்றியும் கண்ட கிருஷ்ணப்ப தாத்தா ....ஊர் முழுக்க வீடு வீடாக சென்று செய்தி பரப்பு செயலாளராக செயல்படும் சாம்பசிவம் சித்தப்பா ....விளைவித்த பொருளை இடைத்தரகர்களின்றி நேரடியாக விற்பனை செய்வதற்கு உதவி, அதன் மூலம் தனக்கும் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளும் அவயம்பா ....
செல்லமுத்துவை தேடி வருபவர்களுக்கு சுக்குக் காபி, நாட்டு சர்க்கரை கலந்து தேங்காய்ப்பால், வாழைப் பூ பிரியாணி என அசத்தும் செல்லமுத்துவின் மனைவி என....(ஏனோ இவரது பெயரை கடைசிவரை ஆசிரியர் குறிப்பிடவில்லை.) கதைக்கு உயிர்ப்பு கொடுக்கும் இப்படியான கதாபாத்திரங்கள் அனைவருடனும் நாமும் கொஞ்சம் வாழ்ந்திருப்பது கூடுதல் மகிழ்வாகிறது. புதினத்தில் இவர் எத்தகைய இயல்பான, தகவல் செறிந்த அழகான நடையைக் கையாண்டிருக்கிறார்என்பதற்கு சில வரிகளையாவது மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.
* என்னடா இது வெவகாரமா போச்சி.. ஆபிசுக்கு வந்தமா, கொஞ்ச ஒர மூட்ட வித்தமா, பக்கத்துல போயி டீ வட சாப்புட்டமான்னு ஒழுங்கா வேல பாக்குற நம்மளப் போயி இந்தாளு வம்புக்கு இழுக்கிறானே,
* ஒடம்பு அசட்டையா இருந்திச்சு. ஒரு குளியல் போடணும் போல இருந்துச்சு. மெட்ராசுல இருந்த வரைக்கும் பாத்ரூம்லயே வாழ்க்க ஓடிட்டு
*பெரியகுளம்... சூரிய ஒளியை அதிகம் உள்வாங்குவதால் எப்போதும் வெதுவெதுப்பாயிருக்கும் தண்ணி.அப்பா உடுத்துவது கதராடை தான். துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு வேட்டியை அவுத்து இருபுறமும் படர்ந்திருக்கும் நீல பச்சப் பாசியில் விரித்து விட்டு, கழுத்தளவு நீரில் அமர்ந்து விடுவார். மீன்கள் வந்து கொத்தும்... பாசியில் பச்சத் தவளை ஓடுவதை பார்க்கலாம். தண்ணீரில் முங்கி கண்ணை விழித்துப் பார்த்தா... மண்ணில் இருக்கும் கிளிஞ்சல் துண்டுகள் காசுகளைப் போல்ஜொலிக்கும். அவ்வளவு சுத்தமான தண்ணி.
* வேட்டியை பாசியிலிருந்து எடுத்துத் துணி துவைக்கும் கல்லில் அடித்துக் கும்மினால், அழுக்கு போய்விடும். வேட்டியப் புழிஞ்சு... இடுப்புல கட்டிக்கிட்டு, துண்டை எடுத்து, நீட்ட வாக்கில் இரு கையால் பிடித்து, முதுகில் முன்னும் பின்னும் இழுப்பார். அப்படியே கீழும் மேலுமாக போய் வரும் துண்டால், அழுக்கு போய்விடும்.-காட்சியைத் தத்ரூபமான நம் கண்ணெதிரே கொண்டுவரும் இந்த நடை, புதினத்துக்கு அசுர பலம்
தருகிறது.
இடையிடையே கிராமத்து மனிதர்களின் எதார்த்த இயல்பை ""வாயில் மாட்டிக் கொண்டவன் வெற்றிலையை
விட மோசமாக மென்று துப்பப்படுவான்"" என நகைச்சுவை உணர்வுடன் சுட்டிக்
காட்டும் நாவலாசிரியர், ஒரமும் மருந்தும் இல்லாமல் விவசாயம் செய்த காலத்தில் வரப்போரங்களில் அணிலுக்கும் சிறு பறவைகளுக்கும், குருவிகளுக்குமாக நட்டது தான் கொய்யா எனவும், அதைமனிதர்கள் கொய்யக்கூடாது என்பதற்காகத்தான் அப்பெயர் வந்தது என்றும் கூறி ஆச்சர்யக் கடலில் ஆழ்த்துகிறார் .
விளைவித்த பொருட்களை சந்தைப்படுத்தும் வழிமுறைகள், மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் லாபம், வீட்டிலிருக்கும் பெண்களுக்கு சொந்தமாக விஷமில்லாத காய்கறி தோட்டம்அமைத்தல், பூமிக்கும் மனிதர்களுக்கும் எந்தவித ஆபத்தும் விளைவிக்காத மூலிகைப் ’பூச்சி விரட்டி’ தயாரித்தல் ,ஞாயிறு சந்தை என தெளிவாகவும் எளிய நடையிலும் பலவற்றையும் விவரித்திருக்கிறார். வாழ்ந்து கொண்டிருப்பவர் களுக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் இந்நூல் அரியதொரு பொக்கிசம்...
இயற்கை விவசாயத்தை மீட்டெடுக்க வேண்டுமென்பதை இளைஞர்களுக்கு தெளிவுபடுத்திஅதன் மூலம் அவர்களுக்கு நல்லதொருவேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பதிலும்....ஒவ்வொரு அத்தியாத்திலும் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே கூறப்படும் மருத்துவக் குறிப்பிலும் ...ஒரக்குழி புதினம் கூடுதல் சிறப்பு பெறுகிறது. இன்னிக்கு பூமிய அழிச்சிஅடுத்த தலைமுறைக்கு சேர்க்குறவங்களோட அடுத்த தலைமுறை, வாழ பூமி இருக்குமான்னு தெரியல என ஆதங்கப்படும் எழுத்தாளரின் நியாயமான கோபம் நமக்கும்அச்சத்தை ஏற்படுத்தி சிந்திக்கவைக்கிறது.
மொத்தத்தில் நாவல் முழுதும் இலுப்பை எண்ணையில் விளக்கேற்றிய வாசம் வீசுகிறது...ஜீரோ டிகிரி பதிப்பகத்தின் விருது பெற்றிருக்கும் ""ஒரக்குழி’யின் ஆசிரியரை, வாழும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மாழ்வாரை, டெல்டா விவசாயக் குடும்பங்களின் சார்பில் மனதார வாழ்த்துகிறேன்.
-த. அமுதா