வாஜ்பேயீ பொற்கால ஆட்சி ஒன்றைத் தந்த ஒரு சிறந்த பிரதமர் என்கிற அளவு இன்று அரசாலும் ஊடகங்களாலும் முன்நிறுத்தப்படுகிறார். ஒருபக்கம் அவர் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க ஆகியவற்றின் விசுவாசமான ஊழிய ராகவே வாழ்வைத் தொடங்கி முடித்தவராயினும், இன்னொரு பக்கம் அவர் ஒரு மென்மையான இந்துத் துவவாதி, பாபர் மசூதி இடிப்பில் கலந்து கொள்ளாதவர், குஜராத் 2002 வன்முறையைக் கண்டித்தவர், அவரது ஆளுகை ஊழலற்ற ஒன்று என்பதாகவெல்லாம் அவர் குறித்த பிம்பம் இன்று கட்டமைக்கப்படுகிறது. அவரது கட்சி மட்டுமின்றி, ஊடகங்களும் இந்தப் பிம்ப உருவாக் கத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்தப் பின்னணியில் இந்துத்துவ அரசியல் குறித்த மாற்றுக் கருத்து உடைய வர்களாலும் கூட, “ஒரு தவறான கட்சியிலிருந்த சரியான மனிதர் என்றெல்லாம் அவ்வப்போது அவர் குறித்து கருத்துக்கள் உதிர்க்கப்படுகின்றன.
நான் அவரது ஆட்சிக் காலங்களை மிகக் கூர்மை யாகக் கவனித்து குறைந்த பட்சம் நான்கு நூல்களுக்குமேல் எழுதியவன் என்கிற வகையில் இந்தக் கருத்துக்கள் எதிலும் எனக்கு உடன்பாடில்லை. இந்துத்துவ அரசியலுக்கு எதிரானவன் என்கிற வகையில் என் கருத்துக்கள் ஒரு பக்கச் சார்பானவை என யாரும் குற்றஞ்சாட்டினால் அதில் நியாயம் உண்டு. ஆனால் அந்தக் குற்றச்சாட்டு மட்டுமே நான் வாஜ்பேயீ குறித்துச் சொல்பவை தவறு எனச் சொல்வதற்கு ஆதாரமாகவும், நிரூபணமாகவும் ஆகிவிட இயலாது.
மோடி ஆட்சியில் குஜராத்தில் (2002) நடந்த மிகப் பெரிய மத வன்முறையில் பெரிய அளவில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டபோது வாஜ்பேயீ அதைக் கண்டித்தார் என்கிற கருத்தை எடுத்துக்கொள்வோம். அது தவறு.
அப்படிப் பெரிதாக மோடியை அவர் எதுவும் கண்டிக்க வில்லை. "ஆள்பவர்களுக்கு ராஜதர்மம் வேண்டும்' என மோடியை வாஜ்பேயீ கண்டித்தார் என்பார்கள். குஜராத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின்போது வாஜ்பேயீ அப்படிச் சொன்னது உண்மை. மேடையில் அவருடன் அமர்ந்திருந்த மோடி, "அவசரமாக, நான் அப்படித்தான் ஆட்சி நடத்துகிறேன்'' என்றார். வாஜ்பேயீ உடனடியாக அதை ஏற்று “உண்மை என்றார்.
அதுதான் அன்று உண்மையில் நடந்தது.
சுதந்திரத்திற்குப் பிந்திய இந்தியாவில் நடந்த மிகப்பெரிய மதக் கலவரம் அது. ஆயிரம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சொந்த நாட்டில் அகதிகளாயினர். கண்முன் நடந்த கொலைகளை மோடியின் காவல்துறை வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றது. ஒரு கேபினட் அமைச்சர் வன்முறைகள் நடந்து கொண்டிருந்த ஒவ்வொரு இடங்களாகச் சென்று வன்முறையாளர்களை ஊக்குவித்துக் கொண்டு வந்தார். இப்படியான வன்முறையில் வாஜ்பேயீ ஒரு பிரதமராக இருந்து தெரிவித்த கண்டனம் இவ்வளவுதான். அதற்குமேல் எந்த நடவடிக்கையையும் அவர் மேற்கொள்ளவில்லை. குறைந்தபட்சம் நரேந்திரமோடி பதவி விலகவேண்டும் என்றுகூட அவர் சொல்லவில்லை.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட அன்று அவர் அந்த இடத்தில் இல்லாமல் இருந்திருக்கலாம். அத்வானி யுடன் ரத யாத்திரையில் பங்கு பெறாமலும் இருந்திருக் கலாம். ஆனால் மசூதி இடிப்பை வாஜ்பேயீ எந்நாளும் எதிர்க்கவில்லை. குறைந்த பட்சம் வருத்தம் தெரிவிக்கக் கூட இல்லை. பாபர் மசூதி இடிக்கப்பட்ட அதே நாளில் அவர், அயோத்தியில் இராமர் கோவிலைக் கட்டுவது என்பது இன்னும் பூர்த்தி செய்யப்படாத தேசிய உணர்வின் வெளிப்பாடு எனக் கூறி (The Hindu, Dec 07, 1992) அதை ஆதரித்தார்.
குற்றம் சுமத்தப்பட்டவர்கள் வேண்டுமென்றே வழக்கை இழுத்தடித்ததன் விளைவாக 1999 வரை வழக்கு விசாரணை தொடங்கவே இல்லை. லக்னோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியபோது மத்தியில் வாஜ்பேயின் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து கொண்டிருந்தது. மாநிலத்திலும் பா.ஜ.க ஆட்சிதான். இது குறித்து விசாரிக்க சி.பி.ஐ. தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டபோது மசூதி இடிப்பு தொடர்பான இரண்டு குற்றப் பத்திரிகைகள் ஒன்றாக இணைக்கப்பட்டதில் ஒரு சட்டப் பிரச்சினை உள்ளது என நீதிபதி ஜகதீஷ் பல்லா குறிப்பிட்டார். அதைத் திருத்துவதற்கு அன்றைய பா.ஜ.க. ஆட்சியாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் வழக்கு விசாரணை நிறுத்தப்பட்டது. இன்றுவரை யாரும் தண்டிக்கப் படவில்லை.
வாஜ்பேயீ ஆட்சியின்போது அணுகுண்டு வெடிக்கப் பட்டதிலும் கூட அவருடைய பங்கு ஒன்றுமில்லை என அவரை மென்மையானவராக முன்வைப்போர் சொல்வது வழக்கம். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தவிர இராணுவத்திற்குக் கூடத் தெரியாமல் மேற்கொள்ளப் பட்ட இந்த அணுகுண்டு சோதனையில் பிரதமருக்குத் தொடர்பே இல்லை எனச் சொல்வது அபத்தம். 1998, மே 11, 13 தேதிகளில் அந்த அணுகுண்டு சோதனை செய்யப்பட்ட போது அவருடைய அமைச்சர்களான அத்வானி, மதன்லால் குரானா முதலானோரெல்லாம், இனி பாகிஸ்தானுடன் சூடான அணுகல்முறைதான் (hot pursuit) மேற்கொள்ளப்படும் என்றும், இனி அவர்களின் தாக்குதலுக்கு எதிர்வினை ((reactive) புரிவது என்றில்லாமல், முதல் தாக்குதலே (proactive) எங்களுடையதுதான் எனவும், சண்டை வேண்டும் என்றால் பாகிஸ்தான் எங்கே எப்போது என்று சொன்னால் போட்டுப் பார்க்கலாம்’’ (மே 17, 1998) எனவும் முண்டா தட்டினார்கள்.
இந்தப் பின்னணியில் அந்தக் குண்டு வெடிப்பை விளக்கி அமெரிக்க அதிபர் கிளின்டனுக்கு வாஜ்பேயீ ஒரு கடிதம் எழுதினார். அதில் (மே 11, 1974) சீன ஆபத்தை ஒட்டித்தான் தாங்கள் அணுகுண்டு சோதனை செய்ய வேண்டியதாயிற்று என விளக்கம் அளித்தார். ஆனால் அடுத்த இரண்டு வாரங்களில் (மே 27), அவரது அமைச்சரவையில் அயலுறவு இணை அமைச்சராக இருந்த வசுந்தரா ராஜே சிந்தியா, சீனாவுடன் எல்லா முனைகளிலும் உறவுகள் சீர்பட்டு வருகின்றன எனவும், முரண்பாடுகள் தீர்ந்து கொண்டுள்ளன எனவும் கூறினார்.
இதுகுறித்து நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழும்பியபோது (ஜூன் 14), ""சீனா நம் முதல் எதிரி அல்ல'' என வாஜ்பேயீ பதிலளித்தார்.
வாஜ்பேயீ காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த அணுகுண்டு வெடிப்பு எந்த வகையிலும் புத்திசாலித் தனமானது அல்ல. ஏற்கனவே 1974-லேயே இந்திரா பிரதமராக இருந்தபோது அணுகுண்டு வெடித்து இந்தியா அணு வல்லமையுள்ள நாடு என்பது நிறுவப்பட்டு விட்டது. மீண்டும் ஒருமுறை சிறிய அளவிலான குண்டு களை வெடித்து அன்று வாஜ்பேயீ அரசு பெரிதாக எதையும் சாதித்துவிடவில்லை. இந்தியா ஐ.நா. பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பினராக இன்றுவரை ஆக முடியாமல் இருப்பது ஒன்றுதான் இதனால் விளைந்த ஒரே பயன்.
மக்களை ஆயுததாரிகளாக்குவது, இராணுவத்தைக் காவி மயமாக்குவது என்பது இந்துத்துவத்தின் அடிப்படை அணுகல்முறைகளில் ஒன்று. வாஜ்பேயீ ஆட்சியில் மிகப்பெரிய அளவில் இராணுவத்தில் இந்துத்துவக் கருத்தியல் உடையவர்கள் புகுத்தப்பட்டனர். வாஜ்பேயீ அரசால் பணிநீக்கம் செய்யப்பட்ட கப்பற்படைத் தளபதி விஷ்ணு பகவத், இக்காலகட்டத்தில் இராணுவத்தில் அதிக அளவில் காவிக் கருத்தியலுடையவர்கள் பல்வேறு மட்டங்களில் புகுத்தப்பட்டனர் என்கிற குற்றச்சாட்டை முன்வைத்தார். பின்னாளில் மலேகான் (2008), மெக்கா மசூதி, சம்ஜூதா எக்ஸ்பிரஸ் (2007) ஆகியவற்றில் குண்டுகள் வெடித்துப் பலரும் கொல்லப்பட்டபோது அதற்குக் காரணமாக இந்துத்துவ அமைப்பினர் பலர் கைது செய்யப்பட்டனர். அவர்களுள் ஸ்ரீகாந்த் புரோஹித், ரமேஷ் உபாத்யாயா முதலான முன்னாள், அன்னாள் இராணுவ அதிகாரிகளும் கைது செய்யப்பட்டனர். இராணுவ வெடிமருந்துக் கிடங்கிலிருந்து கொண்டுவரப்பட்ட வெடிமருந்துகள் இந்தத் தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்பட்டதும் உறுதியாயிற்று.
சிந்து தர்ஷன் (ஜூன் 27, 1999), பிரம்மபுத்ரா தர்ஷன் முதலான பெயர்களில் வேதாகமப்படி நடத்தப்பட்ட இந்து மதச் சடங்குகளுக்கு நடைமுறை உதவிகள் (logistic supportஎன்கிற பெயரில் இந்திய இராணுவம் பயன்படுத்தப்பட்ட குற்றச்சாட்டும் இந்த மென்மையான பிரதமரின் ஆட்சிக் காலத்தில் முன்வைக்கப்பட்டவைதான்.
1995 மே 7-ஆம் நாள் அன்று ஆர்.எஸ்.எஸ்.சின் ஆர்கனைசர் இதழில் வாஜ்பேயீ கட்டுரை ஒன்று எழுதி னார். சங்கம் எனது ஆன்மா என்பது தலைப்பு. சங்கம் என்பது ராஷ்ட்ரீய சுயம் சேவக் சங்கம் (RSS) என்ப தைக் குறிக்கிறது. இக்கட்டுரை இன்றும் சங்கத்தின் அதிகார பூர்வ இணையத் தளத்தில் உள்ளது. அடுத்த சில மாதங் களில் அவர் பிரதமர் நாற்காலியில் முதல் முறையாக அமரப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்.எஸ்.எஸ். முன்னுள்ள இரண்டு கடமைகளாக அவர்அதில் குறிப்பிடுவன 1. இந்துக்களை அமைப்பாக்க (organize) வேண்டும் 2. முஸ்லிம்களைத் தன்வயப்படுத்த (assimilate) வேண்டும். இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகள் மிக முக்கிய மானவை. இந்துக்களை ஆங்காங்கு இந்து அடையாளங் களுடன் கூடிய பல்வேறு அமைப்புகளாக்க வேண்டும். அதே நேரத்தில் முஸ்லிம்களை இந்து சமூகத்துக்குள் உள்வாங்க வேண்டும் என்பது பொருள்.
தொடர்ந்து அவர் இந்த நோக்கில் முஸ்லிம்கள் குறித்த அணுகல்முறைகள் எப்படியெல்லாம் இருக்கமுடியும் என்பதற்கு மூன்று வடிவங்களைச் சொல்கிறார். அவை:
அ. திரஸ்காரம்: ஒதுக்குதல் அல்லது விலக்குதல். அதாவது முஸ்லிம்களின் இருப்பையும் அடையாளங் களையும் மறுத்தல்;
ஆ. புரஸ்காரம்: முஸ்லிம்களுக்குச் சலுகைகள் கொடுத்து அவர்களை வசப்படுத்தல்.
இ. பரிஸ்காரம்: அவர்களை மாற்றிச் செரித்துக் கொள்ளுதல்.
இதில் இரண்டாவதாக அவர் குறிப்பிடுவது காங்கிரசின் அணுகல்முறையாம். மற்ற இரண்டும்தான் அவர் களின் அணுகல்முறைகளாம். அதாவது முஸ்லிம்களை ஒட்டுமொத்தமாக விலக்குவது அல்லது அவர்களை அடையாளம் இழக்கச் செய்து உள்ளே கொண்டுவருவது. அவைதான் இன்று பசுக் கொலைகள், கர்வாப்சி, சுத்தி எனப் பல்வேறு நடவடிக்கைகளாகச் சங்கப் பரிவாரங்களால் மேற்கொள்ளப்படுபவை.
வாஜ்பேயியின் மென்மை இந்துத்துவம் என்பது இதுதான்.
ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் பரிவார அமைப்பு களுக்கு இடையே எப்போதும் ஒரு மெல்லிய இழுபறி (tension) நிலவும். அதனுடைய சுதேசியக் கொள்கைக்கும், கார்போரேட் ஆதரவுக்கும் இடையிலான முரண்தான் அது. ஆனால் இறுதியில் வலிமையான இந்தியா, நவீனமான இந்தியா என்கிற முழக்கத்தின் ஊடாக சுதேசியம் என்பது ஊத்தி மூடப்படும். காங்கிரஸ் முதலான கட்சிகளைக் காட்டிலும் பலமடங்கு தீவிரமான கார்போரேட் மயமாதல், அந்நிய மூலதன ஊடுருவல் ஆகியவற்றிற்கு வழி திறக்கப்படும்.
வாஜ்பேயீ தலைமையிலான அரசுக்கும், மோடி அரசுக்கும் இந்த வகையில் எந்த வேறுபாடும் இல்லை. வாஜ்பேயீ அரசு மேற்கொண்ட சில நடவடிக்கைகள் மட்டும் இங்கே:
இந்திய காப்பீட்டுத் துறையில் அந்நிய மூலதன நுழைவைக் கடுமையாக எதிர்த்து வந்தது பா.ஜ.க. ஆனால் 1998-ல் வாஜ்பேயீ அரசு அதிகாரத்தில் அமர்ந்தவுடன் முன்வைத்த இன்சூரன்ஸ் சட்ட வரைவு (IRDA Bill - 1998) அத்துறையில் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியதோடு 40 சத அந்நிய ஈக்விடிக்கும் வழிவகுத்தது.
தயாரிப்பு முறைக்கு (process) வேண்டுமானால் பேடன்ட் உரிமம் வழங்கலாம். ஆனால் தயாரிக்கப்பட்ட பொருள்களுக்கு (product) ‘பேடன்ட்’ உரிமம் வழங்கக் கூடாது என்பது பா.ஜ.கவின் கொள்கை. ஆனால் ஆட்சிக்கு வந்த பின் தயாரிக்கப்பட்ட பொருளுக்கும் பேடன்ட்’ உரிமம் வழங்கும் வரைவைச் சட்டமாக்கியது (1998) வாஜ்பேயீ அரசு.
உலக வர்த்தக ஒப்பந்தத்திற்கான (WTO) டங்கல் வரைவை (GATT) எதிர்த்துக் கொண்டிருந்ததை மறந்து ஆட்சியில் அமர்ந்தவுடன் WTO-வில் எந்தத் தயக்கமும் இல்லாமல் தொடர்ந்தது வாஜ்பேயீ அரசு. சுங்க வரி ஒழிப்பிலும் அது தீவிரம் காட்டியது. இறக்குமதிக் கட்டுப்பாடுகள் வெகுவாகத் தளர்த்தப்பட்டன.
முன்னுரிமை இல்லாத துறைகளில் அந்நிய நேரடி மூலதனத்திற்கு((FDI)) கட்டுப்பாடு வேண்டும்; உயர் தொழில்நுட்பம், அகக் கட்டுமானம் முதலான முன்னுரிமைத் துறைகளில் மட்டும் அந்நிய மூலதனத் தை அனுமதிக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்த வாஜ்பேயீ ஆட்சிக்கு வந்த பின் முன்னுரிமை இல்லாத துறைகள் எவை என வரையறுக்க மறுத்தார். புகையிலை, சாராய வகைகள் உட்பட எல்லாவற்றிலும் அந்நிய நேரடி மூலதன நுழைவிற்கு வழி வகுக்கப்பட்டது.
பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்களே அதுபோலச் சுருக்கம் கருதி ஒரு சிலவற்றை மட்டுமே இங்கே குறிப்பிட்டுள்ளேன்.
இந்தியப் பொருளாதாரம் கார்பொரேட் மயமாவதற்கான செயல்பாடுகள் வாஜ்பேயீ அரசில் தீவிரமாயின. டாக்டர் இராதாகிருஷ்ணன், பேரா.கோத்தாரி முதலான புகழ்மிக்க கல்வியாளர்கள் தலைமையில் கல்விக் கொள்கை அறிக்கைகள் உருவாக்கிக் கொண்டிருந்த மரபு வாஜ்பேயீ ஆட்சியில் மாற்றப்பட்டது. குமாரமங்கலம் பிர்லா, முகேஷ் அம்பானி என்கிற இரு கார்பொரேட் பெருமுதலாளி களின் தலைமையில் உயர்கல்விச் சீர்திருத்தம் தொடர்பான குழு அமைக்கப்பட்டது. நீட் உட்பட இன்றைய உயர்கல்விப் பிரச்சினைகள் பலவற்றிற்கும் தோற்றுவாயாக அமைந்தது அந்த அறிக்கையின் பரிந்துரைகள்.
மாவட்டம்தோறும் ஒரு நவோதயாப் பள்ளி, மதிப்பீட்டுக் கல்வி எனும் பெயரில் புராண இதிகாசங் களைப் பாடத் திட்டத்தில் சேர்ப்பது, தேசிய அளவில் ஒரு பொதுவான பாடத் திட்டத்தை நோக்கி நகர்வது, ஆரம்ப மற்றும் நடுநிலைக் கல்விகளில் உள்ளூர்ச் சமூகத்திடமிருந்து நிதி திரட்டுவது. நீட் முதலான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள், சந்தைத் தேவையை ஒட்டிக் கல்வி அமைப்பை மாற்றுதல், பல்கலைக் கழகங்களுக்கு நிதியைக் குறைத்து மாணவர் கட்டணங்களை அதிகப்படுத்துதல், புதிய தனியார் பல்கலைக்கழகங்களை உருவாக்கச் சட்டம் இயற்றுதல், கல்லூரிகள் தரச் சான்றிதழ் (accreditation) பெறுவதைக் கட்டாயமாக்குதல், கல்லூரிகளைத் தன்னாட்சிக் கல்லூரிகளாக்குதல், உயர் கல்வியில் அந்நிய நேரடி முதலீடு, பல்கலைக்கழகங்களில் அரசியல் நடவடிக்கைகளைத் தடைசெய்தல் என்கிற பெயரில் மாணவர் சங்கச் செயல்பாடுகளைக் கட்டுக்குக் கொணர்தல், வெளிநாட்டு மாணவர்களுக்கு உயர்கல்விச் சந்தையைத் திறந்துவிடல், இதற்கெல்லாம் தோதாகப் பொருளாதாரத்தை எல்லாவிதக் கட்டுப்பாடு களிலிருந்தும் விடுவித்தல்- முதலான பரிந்துரைகளை அந்த அறிக்கை முன்வைத்தது.
இவை அனைத்தும், ஆம் அனைத்தும், இன்று நடைமுறைகளாகி விட்டதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
வாஜ்பேயீ ஆட்சிக்காலத்தில் பாடநூல்களில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள், உயர்கல்வி நிறுவனங் களை இந்துத்துவ சக்திகளைக் கொண்டு நிரப்பியது, ஜோதிடம், வேதம் முதலானவற்றையெல்லாம் பாடத் திட்டத்தில் புகுத்தியது முதலான செயல்பாடுகளுக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்புகள் உருவாயின.
வாஜ்பேயீயின் இறப்பை ஒட்டி அவரது சாதனைகளாக இன்று தொலைத் தொடர்புத் துறையில் மேற்கொள்ளப்பட்ட புரட்சி (Telecom Revolution),, நால்வழிச் சாலைகள் மூலம் போக்குவரத்து மேம்படுத்தப்பட்டது, அணுவல்லமை பெற்ற நாடாக இந்தியா ஆகியது, பொதுத்துறைகள் தனியார் மயமாக்கப்பட்டது ஆகியன முன்வைக்கப்படுகின்றன. தொலைத் தொடர்புத் துறையில் மேற்கொள்ளப்பட்ட புரட்சி என்பது இன்று உலக அளவில் ஏற்பட்டுள்ள ஒன்று. அரசு நிறுவனங்களான BSNL, VSNL ஆகியன வீழ்த்தப்பட்டு இன்று ரிலையன்ஸ் முதலான கார்பொரேட்கள் நுழைவதற்கும், பெரும் ஊழல் களுக்கும் அவை வழிவகுத்தன என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவின் பெருமைமிக்க நிறுவனங்களாக இருந்த பொதுத்துறை நிறுவனங்கள் சீரழிக்கப்பட்டது என்பதை எந்த வகையிலும் பெருமைக்குரிய செயலாக நாம் கருத இயலாது. வாஜ்பேயீ ஆட்சியில்தான் நவரத்தினங்கள் என்றெல்லாம் போற்றப்பட்ட பொதுத்துறை நிறுவனங் களைச் சிதைத்து விற்பதற்கென்றே disinvestment ministry என ஒரு துறை அமைக்கப்பட்டு அதற்கென ஒரு அமைச்சரும் நியமிக்கப்பட்ட அவலம் நிகழ்ந்தது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vajpayee_7.jpg)
ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்தியா தவங்கிடந்த மனிதர், எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவர், பழுத்த அரசியல்வாதி என்றெல்லாம் வாஜ்பேயீ இன்று முன்னிறுத்தப்பட்டாலும், ஜனதா ஆட்சிக் காலத்தில் (1977-79) இரண்டாண்டு காலம் அவர் அயலுறவு அமைச்சராக இருந்ததைத்தவிர வேறு எந்த நிர்வாக அனுபவமும் அவருக்கு இருந்ததில்லை. பெரும் மக்கள் போராட்டங்கள் எதற்கும் தலைமை ஏற்ற அனுபவங்களும் அவருக்குக் கிடையாது. பதவி ஏற்றபோது அவர் மிகவும் தளர்ந்த உடலையுடைய ஒரு வயசாளி. இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டின் அரசுப் பொறுப்பை நிர்வகிக்க அவருக்கு நம்பிக்கையான துணைகள் தேவையாக இருந்தன. கூட்டணிக் கட்சிகளை அதிகமாக முண்ட விடாமல் ஒடுக்கி வைக்கவேண்டிய அவசியமும் அவருக்கு இருந்தது. இந்தப் பின்னணியில் தான் அவர் பிரஜேஷ் மிஸ்ரா, என்.கே.சிங் என்கிற தனக்கு மிகவும் நம்பிக்கையான இருவரைப் பெரும் அதிகாரங்கள் உள்ள பதவிகளைக் கொடுத்து அருகில் வைத்துக் கொள்ள வேண்டியதாயிற்று. இவர்களோடு எந்தப் பதவியும் இல்லாமல் ஒட்டிக் கொண்ட வாஜ்பேயீயின் வளர்ப்பு மருமகன் ரஞ்சன் பட்டாச்சார் யாவையும் சேர்த்து ஒரு சூப்பர் அரசாக அவர்கள் செயல்படத் தொடங்கினர். வேறு எந்தக் காலத்திலும் இல்லாத அளவிற்கு ஒரு அதிகாரம் குவிந்த உச்சி அமைப்பாகப் பிரதமர் அலுவலகம் ((PMO) இந்திய வரலாற்றில் முதல் முறையாக உருவாகியது.
இதில் மிகவும் கவனத்துக்குரிய விடயம் என்னவெனில் இந்த பிரஜேஷ் மிஸ்ராவும், என்.கே சிங்கும் பெருந்தொழில் நிறுவனங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். ஏஜன்டுகள் எனச் சொல்லும் அளவுக்கு நெருக்கமானவர்கள். பிரதமரின் முதன்மைச் செயலர், தேசப் பாதுகாப்பு ஆலோசகர் என இரட்டைப் பதவிகள் மிஸ்ராவுக்கு அளிக்கப்பட்டன. தேசப்பாதுகாப்பு ஆலோசகர் என்பது அதுவரையில் இல்லாத ஒரு பதவி. பொருளாதாரப் பிரச்சினைகளுக்கான சிறப்பு அதிகாரி என்கிற பதவி உருவாக்கப்பட்டு சிங்கிற்கு அளிக்கப்பட்டது. அமெரிக்க அரசைக் காப்பி அடித்து உருவாக்கப்பட்ட பதவிகள் இவை. சிங் இடையில் ஓய்வுபெற்றுவிட்ட போதும் பிரதமர் அலுவலகச் சிறப்பு அலுவலர் என்கிற பெயரில் அவர் தக்கவைக்கப்பட்டார்.
இதற்கெல்லாம் அரசியல் சட்டத்தில் இடமில்லை. அரசியல் சட்டப்படி அமைச்சரவைதான் உயர் அமைப்பு. அமைச்சரவைச் செயலர் (Cabinet Secretary) தான் உயர் அதிகாரப் பதவி. கூட்டு முடிவுகளுக்கு அமைச்சரவைதான் பொறுப்பு. துறைசார்ந்த முடிவுகளுக்கு அந்தந்த அமைச்சர்களும், செயலர்களும் பொறுப்பு. ஒரு அமைச்சரவையின் முடிவைப் பிரதமர் மறுபரிசீலனை செய்ய வேண்டுமானால் மொத்த அமைச்சரவையையும் கூட்டித்தான் அதைச் செய்ய வேண்டும். இதுதான் ஒரு ஜனநாயக அமைப்பின் நடைமுறை.
ஆனால் இந்த ஜனநாயக நெறிகளை எல்லாம் தாண்டிய ஒரு சூப்பர் அரசாக வாஜ்பேயீயின் அலுவலகம் அதிகாரத்திலும், அளவிலும் பெரியதாகியது. அதன் ஒரு உச்சகட்ட அதிகாரக் குவியலை இன்றைய மோடி ஆட்சியில் நாம் காண முடியும். எனினும் இதைத் தொடங்கி வைத்த பெருமை வாஜ்பேயீக்கே உண்டு.
பிரதமர் அலுவகம் என்கிற பெயரில் அமைச்சரவை முடிவுகளில் தலையிட்டுத் தமக்கு வேண்டிய கார்பொரேட்களுக்குத் சலுகைகளைச் செய்ய இந்தச் சிறப்பு அதிகாரிகள் இதன் மூலம் வாய்ப்புகள் பெற்றனர்.
காஷ்மீர்ப் பிரச்சினை உட்படப் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளில் முடிவெடுக்கும் சிறப்பு அதிகாரம் மிஸ்ராவுக்கும், அந்நிய மூலதனம் உட்பட முக்கிய தொழில்துறை அதிகாரங்கள் சிங்கிற்கும் அளிக்கப்பட்டன. அதோடு துறை சார்ந்த சிறப்பு முடிவுகளை எடுக்க ‘அமைச்சரவைக் குழுக்களை (GOM) அமைக்கும் முறையும் ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் துறை சார்ந்த அமைச்சர்களின் அதிகாரமும் பறிக்கப்பட்டு, அமைச்சரவைக்குழு என்கிற பெயரில் பிரதமர் அலுவலகமே முடிவெடுக்கும் நிலை ஏற்பட்டது. அமைச்சரவைக் குழுக்களில் தி.மு.க, ம.தி.மு.க, பா.ம.க, திருணாமுல் முதலான 21 கட்சிகள் ஒதுக்கப்பட்டன. இதன் மூலம் கூட்டணி ஆட்சி என்பதும் கேலிக் கூத்தாக்கப்பட்டது. இப்படியான அமைச்சரவைக் குழுவை அமைத்து பெருந்தொழில் நிறுவனங்களுக்குச் சலுகை அளிக்கப் பட்ட ஒரு சில எடுத்துக்காட்டுகளை மட்டும் இங்கே காணலாம்.
2001, ஜன 29 அன்று தொலை தொடர்புச் செயலர் சியாமல் கோஷ் தொழில்துறைச் செயலர் பியூஷ் மன்காடுக்கு ஒரு கடிதம் எழுதினார். இதை ‘அவுட்லுக் இதழ் (மார்ச் 5, 2000) வெளியிட்டு அம்பலப்படுத்தியது. பிரச்சினை இதுதான்: வெளிநாட்டு முதலீடுகளுக்கு அனுமதி வழங்கும் அதிகாரம் தொழில்துறையிடம் உள்ளது. தொலைத் தொடர்புத் துறை திறந்துவிடப் பட்ட காலம் அது. சில வெளிநாட்டு நிறுவனங்கள் 70 சதத்திற்கும் மேலாக முதலீடு செய்ய அனுமதி கோரியிருந்தன. ஆனால் 49 சதத்திற்கும் மேலாக வெளிநாட்டு மூலதனத்திற்கு அனுமதி இல்லை என்கிற விதியின்படி தொழில்துறை அவற்றை மறுத்துவிட்டது. ஆனால் வாஜ்பேயியின் பிரதமர் அலுவலகம் நியமித்த அமைச்சரவைக்குழு ஒன்று தொழில்துறை அமைச்சகத்தின் ஆணையைப் புறந்தள்ளி, தொழில்துறை அமைச்சர் உட்பட யாருக்கும் தெரியாமல் இந்த அனுமதிகள் வழங்கப்பட்டன. இவற்றின் ஊடாக எவ்வளவு தொகைகள் யாருக்குக் கைமாறி இருக்கும் என்பதை நாம் யூகித்துக் கொள்ளலாம். தமக்குத் தெரியாமலேயே இவ்வாறு தம் ஆணை புறக்கணிக்கப் பட்டு இந்த வெளிநாட்டு நிறுவனங்களுக்குச் சலுகைகள் வழங்கப்பட்டதைக் கண்டித்து தொழில்துறைச் செயலர் பியூஷ் எழுதிய கடிதத்தைத்தான் அவுட்லுக் இதழ் அம்பலப்படுத்தியது.
இவை தவிர பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு (EAC), செயற்திட்ட நிர்வாகக் குழு(SMG ஆகியவற்றின் ஊடாக பிரதமர் அலுவலகம் நேரிடையாகத் தலையிட்டு எடுத்த வேறு சில முடிவுகள்:
ஹிர்மா மின்சாரத் திட்டத்திற்கு (ஒரிசா) ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ரூ. 20,000 கோடி லாப உத்தரவாதத்துடன் அனுமதி அளிக்கப்பட்டது. நிதி, பொருளாதாரம், மின்சாரம் ஆகிய மூன்று துறை அமைச்சகங்களும் இதற்கு ஏற்கனவே அனுமதி மறுத்திருந்த நிலையில் பிரஜேஷ் மிஸ்ராவின் தலைமையிலான SMG நவ 17, 2000 அன்று இந்த அனுமதியை ரிலையன்சுக்கு அளித்தது. நிதி அமைச்சகமும், பொது முதலீட்டு வாரியமும் மறுத்த யூரியா இறக்குமதித் திட்டம் ஒன்றை ஜன 24, 2001 அன்று பிரதமர் வாஜ்பேயியின் அலுவலகம் அனுமதித்தது. சுமார் இரண்டு பில்லியன் டாலர் அந்நியச் செலாவணி நமக்குச் செலவாகும் ஒரு தேவையற்ற திட்டம் இது.
நிலையான தொலைத்தொடர்புச் சேவை (FSPS)அளிக்கும் மொபைல் தொலைபேசிச் சேவைக்கு (LMS)அனுமதி வழங்கும் முடிவொன்றை பிரதமர் வாஜ்பேயீ அலுவலகம் ஜன 5, 2001 அன்று எடுத்தது. ஒரு மெகா ஹெர்ட்ஸ் ரூ 830 கோடி விலையுள்ள 30 மெகாஹெர்ட்ஸ் அதிர்வெண்களை ரிலையன்ஸ் மற்றும் இமாச்சல் ஃப்யூச்சரிஸ்டிக் கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் எனும் நிறுவனங்களுக்கு இலவசமாகக் கொடுக்கும் திட்டத்தை உள்ளடக்கியது இம்முடிவு. இதனால் அரசுக்கு ஏற்படும் இழப்பு ரூ 25,000 கோடி. மொபைல் உரிமையாளர் சங்கம் இதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தது (அவுட்லுக், பிப் 26, 2001). குஜராத் பூகம்பத்தால் பேரிழப்புகள் ஏற்பட்ட நிலையில் அதை ஈடுகட்ட வருமான வரி 2% உயர்த்தப்பட்ட பின்னணியில் ரிலையன்சுக்கும் இமாச்சல் லிமிடெடுக்கும் இந்தச் சலுகைகளை அளித்தார் வாஜ்பேயீ.
அவுட்லுக் இதழ் வெளியிட்ட மேலும் சில இப்படியான திட்ட இழப்புகளை சுருக்கம் கருதி நிறுத்திக்கொள்கிறேன். பிரதமர் வாஜ்பேயீ அலுவலகத்தின் இத்தகைய செயல்களைக் கண்டித்து பொருளதார விவகாரச் செயலர் EAS ஷர்மா நவ 2000-த்தில் பதவி விலகியது குறிப்பிடத்தக்கது. பிரதமர் அலுவலகம் மூலம் ரிலையன்ஸ், இந்துஜா முதலான நிறுவனங்கள் அரசை ஆட்டிப் படைப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். தேவையானால் அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டும் அளவிற்கு இந்துஜாக்கள் அதிகாரம் மிக்கவர்களாக உள்ளனர் என ஷர்மா குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்ல ரிலையன்ஸ்களும் இந்துஜாக்களும் ஒரு வகையில் மாநில அரசுகளையும் காட்டிலும் அதிகாரம்மிக்கவர்களாக இருந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார். தமது மின்சாரத் தேவைகளுக்கு மாநில அரசுகளே நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அதிகாரம் உண்டு. ஆனால் வாஜ்பேயீ அலுவலகம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் விளைவாக ஒரிசாவும் பிற மாநில அரசுகளும் நேரடியாக ஹிர்மாவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் உரிமையை இழந்தன.
இதற்குமுன் வரலாற்றில் இப்படியான நிலை இருக்கவில்லை. இந்திரா ஆட்சியில் இப்படி பிரதமர் அலுவலகம் நடைமுறையில்(defacto) அதிகாரம் பெற்றிருந்தது எனக் கூறினாலும் இத்தகைய முறைமீறல் கள் இந்த அளவிற்கு அப்போது சட்டபூர்வம் (dejure) ஆக்கப்படவில்லை.
வாஜ்பேயீயின் கடிதம் ஒன்றை எடுத்துக்கொண்டு ஒருமுறை பிரஜேஷ் மிஸ்ரா பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேரைச் சந்திக்கப் போகிறார். போபர்ஸ் ஊழலில் குற்றம் சாட்டப்பட்டிருந்த இந்துஜாவையும் அவர் கூட அழைத்துச் சென்றதையும் அவுட்லுக் இதழ் (மார்ச் 5, 2001) அம்பலப்படுத்தியது. அரசுப் பணி நிமித்தம் இன்னொரு நாட்டுப் பிரதமரைச் சந்திக்கும் ஒரு உயரதிகாரி ஒரு தொழிலதிபரைக் கூட அழைத்துச் செல்வது ஜனநாயக மரபல்ல. இப்படி அவுட்லுக், டெஹல்கா, ரெடிஃப் முதலான ஊடகங்கள் வாஜ்பேயீ அலுவலகத்தின் ஏராளமான அத்துமீறல்களை வெளிப்படுத்தின. பொதுத்துறை நிறுவனமான ‘பாரத் அலுமினியம் கம்பெனி லிமிடெட்டின் (BALCO) பங்குகள் வேதாந்தாவின் ஸ்டெர்லைட்டுக்கு அள்ளித் தரப்பட்டதும் வாஜ்பேயியின் காலத்தில்தான். பங்குச் சந்தை ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு ஸ்டெர்லைட், பி.பி.எல், வீடியோகான் ஆகியவை இரண்டாண்டுகாலம் மூலதனச் சந்தையில் பங்குபெறக் கூடாது என செபி அமைப்பால் தடைவிதிக்கப்பட்டிருந்த நேரம் அது. அந்தத் தடையை மீறியும், பால்கோ ஊழியர் கள் மற்றும் பொதுமக்களின் போராட்டங்களைக் கண்டு கொள்ளாமலும் பால்கோவின் 51% பங்கை வெறும் 550 கோடி ரூபாய்க்கு வேதாந்தாவிடம் விற்றது வாஜ்பேயீ அரசு.
ரிலையன்ஸ் மற்றும் இந்துஜாக்கள் மோடி அரசை மட்டுமல்ல வாஜ்பாயி அரசையும் ஆட்டிப் படைத்தனர் என்பதையும், மோடி போலவே வாஜ்பாயீயும் அப்படி ஒன்றும் இத்தகைய ஊழல் கார்பொரேட்டுகளால் அணுகமுடியாத உயரத்தில் இருந்தவர் அல்ல என்பதையும் நாம் மறக்கலாகாது.
பிரதமர் அலுவலகத்தின் ஊடாக சர்ச்சைக்குரிய வகையில் தலையிட்டுச் செயல்பட்ட இன்னொருவர் அன்றைய மத்திய அமைச்சர் புரமோத் மகாஜன். அவரது பெயரின் தலைப்பு எழுத்துக்களை வைத்து சிலேடையாக PM என அன்றைய நாளிதழ்கள் எழுதின. ரிலையன்ஸ் குழுமத்துக்கு மிக நெருக்கமாக இருந்து பல சலுகைகள் செய்தவர் என அவர் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப் பட்டன. புமோத் மகாஜனின் மருமகனுக்கும், அவரது நெருக்கமான நண்பரான சுதான்ஷு மித்ராவின் உறவினர் ஒருவருக்கும் ரிலையன்சின் பினாமி பங்குகள் வழங்கப்பட்டன என அப்போது சர்ச்சைகள் உருவாயின. இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபர் ஷிவானி பட்நகர் கொலை வழக்கிலும் மகாஜனின் பெயர் அடிபட்டுப் பின் டெல்லி போலீசால் அவர் பெயர் கைவிடப்பட்டது. மகாஜன் இறுதியில் அவரது சகோதரராலேயே கொல்லப்பட்டார்.
வாஜ்பேயீ ஒரு திறமையான பிரதமராக இல்லை என்பதையும் இங்கே சுட்டிக்காட்டுவது அவசியம். கார்கில் போர் பிரச்சினையை மட்டும் மிகச் சுருக்கமாகப் பார்ப்போம்.
இந்தியாவிற்கு மிகப்பெரிய படை இழப்பும், பொருள் இழப்பும் ஏற்படுத்திய போர் அது. இந்திய அரசின் கணக்குப்படி 1300 இந்தியப் படை வீரர்கள் கார்கில் போரில் கொல்லப்பட்டனர். 1750 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தானின் அறிக்கை கூறுகிறது. இந்தியாவிற்கு ஏற்பட்ட பொருள் இழப்பு 2.5 பில்லியன் டாலர் (ஃப்ரன்ட்லைன், செப் 29, 2000). அப்போதைய இந்திய அரசு, உளவுத்துறை மற்றும் இராணுவத்தின் கவனக் குறைவுகளே இந்த இழப்புகளுக்குக் காரணம் என இதுகுறித்த ஆய்வுகள் சொல்கின்றன. ஜனவரி 1999-லிருந்து கார்கில் பகுதியில் நடந்துவந்த ஊடுருவலை மே 99 வரை இந்தியாவால் கண்டுபிடிக்கமுடியவில்லை. ஒரு பக்கம் ஊடுருவல் நடந்துகொண்டிருந்தபோது இன்னொரு பக்கம் வாஜ்பேயீ பெரிய விளம்பரங்களுடன் டெல்லி- லாஹூர் பஸ் பயணம் நடத்திக் கொண்டிருந்தார்.
தனது உளவுத்துறை தவறிழைக்கவில்லை என வாஜ்பேயீ அடித்துச் சொன்னார் (ஜூலை 23, 2000). ஆனால் இதுகுறித்து ஆய்வு செய்ய அமைக்கப் பட்ட சுப்பிரமணியம் குழு உளவுத்துறையின் தவறையும் தோல்வியையும் சுட்டிக்காட்டியது. இக்குழு அமைக்கப்படும்போதே, தேசியப் பாதுகாப்புக்கான பரிந்துரைகளைச் செய்வது பாக்கின் ஆக்ரமிப்புக்குக் காரணமான நிகழ்வுகளைப் பரிசீலிப்பது என அதன் பணிகள் கட்டுப்படுத்தப்பட்டன. வாஜ்பேயீ திறமையான பிரதமரும் அல்ல; அவரது ஆட்சி ஊழலுக்கு அப்பாற்பட்டதும் அல்ல.
வாஜ்பேயீ அரசு அறுதிப் பெரும்பான்மையற்ற ஒரு கூட்டணி அரசு. அவர் பிரதமராக அமெரிக்கா சென்றபோது அங்குள்ள உயர்சாதி இந்தியர்கள் ஸ்லேட்டன் தீவில் அவருக்கு ஒரு விருந்தளித்தனர். அப்போது அவர், இப்போது நமக்கு அறுதிப் பெரும்பான்மை இல்லை. மூன்றில் இரண்டு பெரும்பான்மை உருவாகும்போது நாம் நமது கனவு இந்தியாவை உருவாக்குவோம் என்றார்.
இப்போதும் அவர்கள் மூன்றில் இரண்டு பங்குப் பெரும்பான்மை பெறவில்லை. எனினும் இன்றைய மோடி அரசு அறுதிப் பெரும்பான்மையுடன் கூடிய அரசு. மோடியைக் காட்டிலும் வாஜ்பேயீ சற்றே மென்மையாகத் தோன்றுவதன் அடிப்படை இதுதானே ஒழிய சாரத்தில் இருவரும் ஒன்றுதான்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-10/vajpayee-t.jpg)