அந்த ஊரிலிருக்கும் யானைக்காரர்கள் சம்பந்தப் பட்ட விக்னேஸ்வருக்கான வழிபாடு அங்குள்ள ஆலயத்தில்... கணபதி ஆலயத்தைச் சுற்றிலும் விசேஷமான அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்த நிலையில், தொங்கு விளக்குகளும் தோரணங்களும் தொங்கவிடப்பட்டிருந்தன.v நேரம் நடுப்பகலை நெருங்கிக்கொண்டிருந்தது.
பலமான வெயில் அடித்துக்கொண்டிருந்தது.
சூரியன் கொதித்து உருகிக்கொண்டிருந்தது.
அந்த இடம் முழுவதும் யானைக்காரர்களால் நிறைந்திருந்தது.
அந்த ஒரு நாளன்று விக்னேஸ்வரன் கோவிலும் சுற்றியிருக்கும் பகுதிகளும் முழுமையாக யானைக் காரர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும். அன்று அவர்களுக்கு எப்போதும் இருப்பதைவிட, அதிகமான சுதந்திரம் இருக்கும். ஆச்சார அனுஷ்டானங்களில் அதிகமான தளர்வு அளிக்கப்படும் நாள்! அன்று அவர்கள் அங்கு என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். கம்பு சுற்றலாம்... கத்தி சுழற்றலாம்.... கும்மியடிக்கலாம்... காலால் தாளம் போடலாம்...
நடனமாடலாம்... வேண்டிக் கொள்ளலாம்... கும்பிடலாம்... சரணம் கூறலாம்... இவை எதுவுமே இல்லையென்றால்கூட, கூட்டமாகக் கூடி நின்று, சத்தம் போடலாம்.
மாரியம்மாவின் தரிசனம்தான் மிகவும் வண்ணமயமானது.
விக்னேஸ்வரன் கோவிலிலிருந்து மாரியம்மனைக் கொண்டு செல்வார்கள். சிறப்பு நிகழ்ச்சிகளின் பட்டிய லில்தான் உறியடியையும் சேர்த்திருக்கின்றனர்.
மாரியம்மனின் ஊர்வலத்துடன் உறியடிக்காரனை வேடமணியச் செய்து, குளத்தைச் சுற்றிவரச் செய்து, கோஷங்களுடன் உறியடிப் பந்தலில் கொண்டுவந்து நிறுத்துவார்கள்.
பகல் திருவிழா முடிந்தபிறகு, வாண வேடிக்கை ஆரம்பிக்கும் அது முடிந்து, நள்ளிரவு வேளையில் இன்னொரு உறியடி இருக்கும். அதைப் பார்ப்பதற்கு அபூர்வமாகவே ஆட்கள் இருப்பார்கள்.
குறிப்பாக... பெண்கள்.
உறியடிக்காரனும் யானைக்காரனும் சேர்ந்து வட்ட வடிவில் நின்றுகொண்டு நடத்தும் குழு நடனத்தைப் பார்ப்பது என்பதே மிகவும் அருமையான விஷயமாக இருக்கும். வட்டமாக நின்றவாறு நான்கு திசைகளிலும் வளைந்து சென்று உறியடிக்கும் ஆளிடமிருந்து உறியை அகற்றுவதற்காக நீர் நிறைக்கப்பட்ட பம்ப்புகளை முகத்தில் பீய்ச்சியடிப்பார்கள்.
பீய்ச்சியடிக்கும் பம்ப்புகள் பல வகைகளிலும், அளவிலும், விசேஷமான மரக் கொம்புகளைக் கொண்டு செய்யப்பட்டும் இருக்கும். இப்போது நீர் நிறைக்கப்பட்ட பம்ப்புகள் ரப்பராலும் இரும் பாலும் செய்யப்பட்டவையாக இருக்கின்றன. நவீன பாணியில் இருக்கக்கூடிய உறியடியை வசதி படைத்தவர்கள் பயன்படுத்துவதைப் பார்க்கலாம்.
ஒவ்வொரு குழாயிலும் வேறுவேறு அளவுகளில், பலவித நிறங்களிலிருக்கும் நீரை நிறைத்து வைத்திருப்பார்கள். ஆகாயத்தில்..பந்தலுக்கு அடியில் கீழ்நோக்கித் தொங்கிக் கொண்டிருக்கும் வண்ணத் தாள்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்ட உறி... உறியில் ஏழு கலசங்கள்... ஏழு சிறிய குடங்கள்... ஏழு குடங்கள் நிறைய பாலும் தயிரும்... கோபியர்குலப் பெண்களின் இல்லங்களில் ஸ்ரீகிருஷ்ணன் பதுங்கிச்சென்று வெண்ணெய்யையும் பாலையும் மோரையும் திருடி உட்கொள்ளும் கதையை விக்னேஸ் வர பூஜை நாள் நினைவில் கொண்டுவருகிறதோ? இந்த உறியடிக்காக வந்திருக்கும் ஆற்றல்கொண்ட மனிதன் யாரின் சார்பாக வந்திருக்கிறான்? உண்ணி கிருஷ்ணன் சார்பாகவா? அல்லது... தொப்பை வயிற் றைக் கொண்டிருக்கும் கணபதியின் சார்பாகவா? உறியடிக்காரனின் வேடம் ஸ்ரீகிருஷ்ணனுக்குப் பொருந்துவதைப் போல தெரியவில்லை.
பச்சிலையால் மூடிக் கட்டப்பட்ட சரீரம்... தலையில் ஒரு கூம்பு கொண்ட தொப்பி... கழுத்தில் வாடிய ஒரு துளசிப்பூ மாலை... கையில் சிறிய கழி... வேடம் பூண்டிருந்த ஆள் தொப்பை விழுந்த வயிற்றைக் கொண்ட, முதுமைக்குள் கால்களை எடுத்துவைத்திருக் கும் ஒரு வயதான மனிதன்... எனினும், அவன் மிகவும் கவனமாக நடந்துகொண்டான். உறியடி வீரன் என்ற பெயரைப் பெற்றிருக்கும் கதாநாயகனை அனைவரும் சேர்ந்து அழைத்துக்கொண்டு வந்தார்கள்.
அங்கு என்ன நடக்கப்போகிறது என்ற எந்த வொரு எண்ணமும் அங்கு திரண்டு நின்றிருந்த பொது மக்களுக்குத் தெரியாது. உறியடி என்று அவர்கள் கேள்விப்பட்டிருக்கிறார்கள். அவ்வளவுதான்.
பார்த்தவர்கள் என்று யாருமே இல்லை. எனினும், அங்கு திரண்டு நின்றிருந்த மக்கள் உறியடியின் ரசிக்கக்கூடிய பல அற்புத தருணங்களையும் மனதில் நினைத்து சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருந்தது.
பல பகுதிகளிலிருந்தும் கிளம்பி வந்திருந்த மக்கள் கூட்டம் விக்னேஸ்வரன் ஆலயத்திற்கு முன்னா லிருந்த பந்தலில் திரண்டு நின்றிருந்தனர்.
கோவில் நடை முழுவதும் பெண்கள்மயம்தான். திருமண மண்டபத்தின்மீதும் அவர்கள் நெருக்கிப் பிடித்து ஏற ஆரம்பித்தார்கள்.
தொடர்ந்து பல இளைஞர்களும். பல வயது களிலிருக்கும்... பலவகைப்பட்ட ஆண்களும் பெண்களும் அங்கு திரண்டு நின்று பலவற்றையும் பேசிக்கொண்டும் பார்த்துக்கொண்டும் புன்னகைத்துக்கொண்டும் பெருமூச்சு விட்டுக்கொண்டும் எதிர்பார்த்துக்கொண்டும் இருந்தார்கள்... உறியடியைப் பார்ப்பதற்கு.
மாரியம்மன் பவனி வரும் கோஷங்கள் நிறைந்த ஊர்வலம் பல வாத்தியங்களின் முழக்கங்களுடன் வந்துகொண்டிருந்தது. ஒரே மாதிரி ஆடைகள் அணிந்திருந்த யானைக்காரர்கள் கோவிலுக்குள் நுழையப் போகிறார்கள். மஞ்சள்நிற வேட்டியும் சிவப்புநிற தலைக்கட்டும்தான் அவர்களின் வேடம். இடுப்பில் தோல் உறை உள்ள, கறுத்த கைப்பிடி கொண்ட யானைக் கத்தி... வெள்ளி நட்சத்திரத்தைப்போல மின்னிக்கொண்டிருந்தது.
அவர்கள் அனைவரும் சிறப்புத் தன்மை கொண்ட திருநீறையும் சந்தனத்தையும் பூசியிருந்தார்கள்.
மாரியம்மனின் பூரம் திருவிழா குளத்தைச் சுற்றி நடந்துகொண்டிருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் ஆரவாரச் சத்தம் கேட்டது. சங்கு எழுப்பும் ஓசை... மக்கள் வெள்ளம்... செண்டை மேளமும் ஆர்மோனியமும் ஒலிக்க ஆரம்பித்தன.
கஜவீரனான குட்டி சிதம்பரத்தின் மீதுதான் மாரியம்மனின் திருவுருவச் சிலையை ஏற்றி வைத்திருக்கின்றனர். முதுகுப் பகுதியை பச்சை வேப்பிலையின் பூக்களைக் கொண்டும் அடர்த்தியான சிவப்புநிற செம்பருத்திப் பூக்களைக் கொண்டும் இளம் பனையின் பூக்களைக் கொண்டும் அழகாக அலங்கரித்திருக்கின்றனர். பளபளத்துக் கொண்டிருக் கும் பட்டுத்துணியில் கழுத்துவரை மூடப்பட்டிருக்கும் ஐம்பொன்னாலான, காண்போரை ஈர்க்கும் அம்மனின் அழகான விக்கிரகம்...
மாரியம்மா புன்னகைத்துக் கொண்டிருக்கிறாள்.
பூசப்பட்டிருக்கும் சந்தனத்தில் சிறிதுகூட உதிரவில்லை.
அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றித் தரும் அனைத்து சக்திகளும் படைத்த நாயகி!
உடுக்கையை அடித்தவாறு, நடனமாடியவாறு, காலெட்டுகளை மாற்றி மாற்றி வைத்தவாறு யானைக் காரர்கள் கோஷங்களுடனும் பாட்டுகளுடனும் முன்னோக்கி நடந்து போய்க்கொண்டிருந்தார்கள். உறியடிக்கும் கிழவன் கூம்பு கொண்ட ஓலையாலான தொப்பியை அணிந்து, பச்சிலைகளாலான மூடலை அணிந்து கும்மியடித்து அலகு குத்தி விளையாடிக் கொண்டிருந்தான்.
பெண் வேடமணிந்த ஆண் பிள்ளைகள் முடியையும் முலையையும் முகத்தையும் மூடியவாறு மெதுவாக...
மெதுவாக பேசா மடந்தைகளாக நகர்ந்துகொண்டி ருந்தார்கள். அவர்களின் வயிற்றில் பட்டைச் சாராயத் தின் பாதிப்புகள் நுரைத்து நெளிந்துகொண்டிருந்தன.
தலைப்பாகன்கள் குச்சியை வீசியவாறு முன்னால் வழி ஏற்படுத்திக் கொண்டு நடந்தார்கள். சிவப்புநிற தலைக்கட்டின் அதிக பிரகாசத்தைப் பார்த்து வெளிறிப் போனவர்கள், இரு பக்கங்களுக்கும் விலகி வழி உண்டாக்கிக் கொடுத்தார்கள்.
பெண்களின் படை, பட்டாள கட்டுப்பாட்டுகளைப் பின்பற்றி நடப்பதைப்போல முன்னோக்கி நடந்து சென்றது. அவர்கள் முக்கியமான பெண்மணிகளாக இருந்ததால், அப்படித்தான் நடந்தாகவேண்டும்.
உறியடியைப் பார்த்து குலுங்கிக் குலுங்கி சிரிப்பதற்கு மத்தியில், காதல் எண்ணத்துடன், கவரலாம் என்ற மோகத்துடன் வந்துசேரும் ஹிப்பி கூட்டத்தின் நிலை அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது. அவர்கள் ஆணா பெண்ணா என்ற விஷயத்தில் பலருக்கும் சந்தேகம் இருந்தது.
வினோதமான ஆடைகளை அணிந்திருக்கும் முறை... தாடியும் முடியும் வளர்த்து தான்தோன்றிகளாக நடந்து திரியும் ஊரின் பிள்ளைகள்... அவர்களில் பணக் காரர்களின் பிள்ளைகள்தான் அதிகமாக இருந்தார்கள்.
பெண்களின்மீதிருந்த நிற்காத காமம்தான் அவர்களின் அடையாளமாக இருந்தது. அவர்கள் சிரித்துக்கொண்டிருந்தார்கள். பேசிக்கொண்டிருந் தார்கள். கூட்டத்திற்கு மத்தியில் புகை பிடித்தார்கள்.
ஒவ்வொருவரின் கையிலும் புகை பிடிக்கும் குழல் இருந்தது. அந்த குழல், மூங்கிலால் செய்யப்பட்டதல்ல. விலை மதிப்புள்ள ஆட்டோமட்டிக் பம்ப்புகள்! புகை பிடிக்கும் குழல்கள்! மக்கள் இமைகளை மூடாமல் இந்த புதிய விஷயத்தை ஆச்சரியம் நிறைந்த விழிகளுடன் பார்த்துக்கொண்டு நின்றிருந்தார்கள்.
ஆவேசத்துடன் ஆட்கள் நெருக்கியடித்துக் கொண்டு வந்தார்கள். கோவிலும் நடையும் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டன.
அனைத்து இடங்களிலும் நடக்க இருக்கும் உறியடிதான் பேசப்பட்டுக் கொண்டிருந்த விஷயமாக இருந்தது. எப்படிப் பார்த்தாலும், இது பார்க்கப்பட வேண்டிய ஒன்றுதான். என்ன ஒரு ஆவேசம்!
எந்திர ஊஞ்சலைப் போன்று காட்சியளித்த உறியடிப் பந்தல். அந்தப் பந்தலில் கீழ்நோக்கிக் கட்டித் தொங்கவிடப் பட்டிருந்த உறி... உறியைக் கட்டுவதற்கும் இழுப்பதற்கும் தயார் நிலையில் ஹிப்பி இளைஞர்கள் குழாய்களுடன் முன்னோக்கி வந்தார்கள்.
பெண்மணிகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக அவர்கள் அனைவரும் தலைமுடியிலும் கிருதாவிலும் செடிகளைச் சூடியிருந்தார்கள்.
விலை குறைந்த கைத்தட்டலுக்காக வெட்கமே இல்லாமல் பெண்களை நெருக்கியடித்துக் கொண்டு மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் பந்தலுக்குள் நுழைந்து வந்த மடையர்களைப் பார்த்து ஆண்கள் கூக்குரல் எழுப்பினார்கள்.
கூட்டத்தில் முன்னோக்கி நகர்ந்து வந்த ஒரு ஹிப்பி, மக்கள் பார்த்துக் கொண்டிருக்க, துணியைத் தூக்கிக் காட்டினான்.
பொதுமக்களை அவமானப்படுத்திய செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பலசாலியான ஒரு குள்ள மனிதன் உள்ளே நுழைந்து வந்து ஹிப்பியின் கன்னத்தில் பலமான ஒரு அடியைக் கொடுத்தான்.
விசாரித்தபோது, ஹிப்பியை அடித்த அந்த மனிதன் ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த விவசாயி என்பதும், மரியாதையான ஆள் என்பதும், நாசி நுனியில் முன் கோபத்தை வைத்திருப்பவன் என்ற ஒரேயொரு கெட்ட குணத்தைக் கொண்டவன் என்பதும் தெரியவந்தன.
காவல்துறையினர் ஹிப்பியையும் முரட்டு மனிதனையும் கஸ்டடியில் எடுத்து, நடு சாலையில் நடத்திக்கொண்டு செல்ல தயாரானார்கள்.
ஹிப்பி, சட்டவிரோத வழிகளில் பணம் சம்பாதிக்கும் மிகப் பெரிய ஒரு பணக்காரரின் அருமை மகன் என்பதும், ஆயிரங்களைப் புல் என நினைத்து செலவுசெய்யக்கூடிய நிலையிலிருக்கும் அவரின் மகனைத் தொட்டால், அந்த விளையாட்டு சாதாரணமானதல்ல என்ற மிரட்டலும் உண்டானது.
முரடனாக இருந்தாலும், அவனுக்குக் காது கேட்காது என்ற விஷயமே ஆட்களுக்குப் பின்னர்தான் தெரிய வந்தது. கேட்கும் திறனற்ற மனிதன் செய்த காரியம் மிகவும் அருமையானது என்றும், அவன் செவிடனல்ல... மிகவும் சாதுரியமானவன் என்றும்; பணமில்லாதவன் என்பதைக் காரணமாக வைத்து, செவிடனை யாராவது தொட்டால், அவன் ஒரு ஆட்டம் ஆடி விடுவான் என்றும் இன்னொரு பிரிவினர் சவால் எழுப்பினார்கள்.
உறியடி பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்று நினைத்து, யாரும் இரு பிரிவுகளைச் சேர்ந்தவர்களையும் உற்சாகப் படுத்தவில்லை. அதனால், அங்கு முகத்துடன் முகத்தைத் திருப்பி வைத்துக் கொண்டு யாரும் அடிக்கவில்லை.
கலவரமான சூழல் ஆறிக் குளிர்ந்தது. உள்ளூர் காவல்துறையும், ஸி.ஆர்.பி.யும் மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் ரோந்து சுற்றி வந்தார்கள். உறியடி பந்தலில் மாரியம்மனை இறக்கி வைத்து, வழிபட்டார்கள். குருதி தர்ப்பணம் முடிந்தது. இனி அடுத்த நிகழ்வு... உறியடிதான். "எந்த ஊரைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், இதில் ஆண்- பெண் வேறுபாடு இல்லாமல் பங்கெடுக்கலாம்' ஒலிபெருக்கியின் மூலமாக அறிவிக்கப்பட்டது.
உறிக்கயிறில் நல்ல பழக்கமுள்ள... மேல்நோக்கி உயர்த்துவதிலும் கீழ்நோக்கி இறக்குவதிலும் உரிய திறமை கொண்ட வித்தைக்காரனும், உறியடியில் ஈடுபட்டு ஏராளமான முத்திரைகளையும் பரிசுகளையும் பல இடங்களிலிருந்தும் வாங்கிப் புகழ்பெற்ற உறியடி வீரனுமான மனிதன் களத்திற்கு வந்ததும் மக்கள் சந்தோஷப் பெருக்குடன் ஆரவாரம் எழுப்பினார்கள்.
நீர் பீய்ச்சப்படும் குழாய்களுடன் ஹிப்பி இளைஞர் களும், மற்ற உறியடி பார்க்க வந்தவர்களும் வந்து சேர்ந்தவுடன் விளையாட்டு ஆரம்பித்தது.
அவர்கள் குழாயிலிருந்து நீரை பலமாக பீய்ச்சியடித்தார்கள்.
உறியடியிலிருந்து பின்னோக்கி இழுக்கக்கூடிய அவர்களுடைய முயற்சிக்கு சவால் விட்டவாறு உறியடி சுவாமி கழியால் கலத்தின் மீது அடித்துக் கொண்டிருந்தான்.
பல கலங்கள் அடித்து உடைக்கப்பட்டன. இனி ஒரு கலம் மட்டுமே மீதமிருந்தது.
கண்ணிலும் மூக்கிலும் நீர் நுழைந்து மூச்சுவிட முடியாத நிலைக்கு ஆளான... உறியடிக்காக ஊர் ஊராகச் சுற்றியிருக்கும் சுவாமி மிகவும் சோர்வடைந்து காணப்பட்டான்.
எஞ்சியிருந்த அந்த ஒரு குடத்தையும் உடைத்து, அதற்கான பணத்தை வாங்கிக்கொண்டு இடத்தைக் காலி பண்ணவேண்டும் என்ற ஆசை இல்லாமற் போயிருக்கிறது. இந்த நிகழ்ச்சியைச் சற்று சீக்கிரமே முடித்துவிட்டால் நல்லது என்பதாகத் தோன்றியது. என்ன செய்யவேண்டுமென தெரியவில்லை. இந்த குருஷேத்திரக் களத்திலிருந்து தனக்கு விடுதலை இல்லையா?
மூன்று மணி நேரமாக தான் இந்த கொடூரமான பொதுமக்களுடன் சமரில்... போராட்டத்தில்... ஒவ்வொரு கலத்தையும் கழியால் அடித்து நொறுக்கி சின்னாபின்னமாக்கியபோது, மிகுந்த கோபத்திற்குள்ளான எதிர்ப்பு அணி அவனை அளவின்றி வேதனைப்படச் செய்தது. நீர் பீய்ச்சியடிக்கும் குழாயைக்கொண்டு சரீரத்தின் பல பாகங்களிலும் குத்தி வேதனை கொள்ளச் செய்தது. அவனுடைய சரீரத்தின் காயங்கள் பச்சிலைகளுக்குள் இருந்ததால், இந்த கெட்ட மனிதர்களால் பார்க்க முடியவில்லை.
"பகவானே! இனி எனக்கு என்ன வழி?'' உறியடிக்காரன் தேம்பி அழுதான். ஒவ்வொரு காயத்திலும் சாயம் கலந்த உப்பு நீர் படும்போது, சுட்டு எரிவதைப்போல இருந்தது. எரிந்து... பிடித்து இழுத்தது. கண்கள் இருண்டன. தலை சுற்றியது.
இறுதியாக இருக்கும் கலத்தையும் அடித்து உடைக்காமல் களத்திலிருந்து பின்னோக்கிச் செல்வது சரியான செயல் அல்ல. முன்னோக்கி வைத்த காலைப் பின்னோக்கி வைப்பதென்பது தோல்வியைக் காட்டக் கூடியது. ஒருமுறை இந்த களத்தில் தோல்வியடைந்தால், அதன் இறுதி முடிவு மரணம்தான். அவன் இந்த களத்தில் தோல்வியடைவானா?
இந்த அறுபத்தைந்து வருடங்களுக்கிடையே எந்தவொரு திசையிலிருந்தும் தோல்வி பயத்துடன் பின்னோக்கி வந்ததில்லை.
உறிக்கலசங்கள் முழுவதையும் உடைத்து நொறுக்கி வெற்றிபெற்ற வரலாறு மட்டுமே அவனுடைய வாழ்க்கையில் நடந்திருக்கிறது. இப்போது... இந்த இடத்தில் வைத்து... அவன் என்றென்றைக்குமாக அவமானப் படலாமா? எப்போதும் இல்லாத ஒரு பயம் கிழவனை ஆக்கிரமித்தது.
எனினும், தாக்குப்பிடித்து நிற்பான். இறுதிவரை... இந்தக் களத்தில் தோல்வியடைந்தால், பிறகு...
அவன் இல்லவே இல்லை. இன்றுவரை பெற்றிருக்கும் புகழ் முடிவிற்கு வந்துவிடும். அவன் மாரியம்மனை மனதிற்குள் நினைத்தான்.
பல வகையான சிந்தனைகளாலும் மனம் குழப்பத்தில் இருந்தது. அனைத்து கலசங்களும் உடைந்து சிதறும். வெறும் நூறு ரூபாய்க்காகத்தான் இந்த சாகசச் செயலிலேயே இறங்கினான். காலம் மாறிய விஷயம் அறியாத அவன் என்ன ஒரு முட்டாள்!
"அப்பா... நூறு ரூபாய்க்கு ஆசைப்பட்டு நீங்கள் இந்த வயதான காலத்தில் இந்த வீண் வேலைக்குப் புறப்பட்டு போகக் கூடாது'' என்று மகள் பலமுறை கூறியது நினைவில் வலம் வந்தது. நூறு ரூபாய் கிடைத்தால், அவளுடைய காதுக்கு கல் வைத்த கம்மல் வாங்கித்தர வேண்டுமென விரும்பினான்.
அவளுடைய காதில் இப்போது இரண்டு குச்சிகள் மட்டுமே இருந்தன. அந்த குச்சி சிதிலமடையும் நிலையில் இருந்தது. அந்த அளவிற்குப் பழமையானது அது. இவ்வளவு காலமாகியும், தன் மகள் விரும்பக் கூடிய ஒரு கல் வைத்த கம்மலை தயார் செய்து தருவதற்கு இதுவரை அவனால் முடியவில்லை.
இவ்வளவு காலமும் உறியடியுடன் ஊர் ஊராகச் சுற்றினான். எதுவுமே சம்பாதிக்கவில்லை என்பது மட்டு மல்ல... அன்றாட வாழ்க்கையை நடத்துவதென்பதே பிரச்சினைக்குரிய ஒன்றாக இருந்தது. பெண் பிள்ளைகள் இரண்டுபேர் இன்னும் மீதமிருக்கிறார்கள்- திருமணம் செய்து கொடுப்பதற்கு. ஆண் பிள்ளைகள் எதற்கும் தயாராகவில்லை.
அனைவரும் குழந்தைகள்! அவர்களைக் குறை கூறுவதற்கில்லை.
இன்னும் சற்று வளர்ந்தபிறகு, அவர்கள் எங்காவது போய் பிழைத்துக் கொள்வார்கள். பெண்பிள்ளைகளின் நிலை அதுவல்ல. இனி இரண்டு பேரையும் யாரிடமாவது பிடித்து ஒப்படைக்க வேண்டும்.
மூத்தவளுக்கு இப்போதே ஒரு ஆள் இருக்கிறான். அவனும் அவளைத் திருமணம் செய்து கொள்வதாக இருந்தால், வரதட்சணையாக ஆயிரம் ரூபாய்களை ரொக்கமாகக் கையில் தரவேண்டும் என்று கூறுகிறான்.
இது தவிர, நகை வேறு. இளைய மகள் அப்படியல்ல.
அவள் எதையுமே கேட்கவில்லை. என்ன கொடுத்தா லும் அவளுக்குப் புகார் இல்லை. அவள் அவனிடம் வாழ்க்கையில் நேரடியாக வேண்டுமென கேட்டது... ஒரு கல் வைத்த கம்மல் மட்டுமே. அது இங்கு கிடைக்கும் என கருதினான். இந்த அளவிற்கு மக்கள் திரண்டு கூடுவார்கள் என்று நினைக்கவில்லை. இங்கு வரும்போதே மனதில் பயம் இருந்தது.
உறியடிக்காரனான சுவாமி எதையோ சிந்தித்து தலையைப் புண்ணாக்கிக் கொண்டிருப்பதற்கு மத்தியில், பின்னாலிருந்து ஒரு குத்து விழுந்தது. நீர் பீய்ச்சியடிக்கும் குழாயின் நுனிப்பகுதி இடுப்பு எலும்புகளுக்கு நடுவில் நுழைந்து செல்வதைப்போல தோன்றியது.
குழாயிலிருந்து சிவப்பு நீர் அவனுடைய சரீரத்தில் விழுந்து வழிந்தது. கொட்டி விழுந்த ரத்தம் நீரில் கலந்து பச்சிலை ஆடையின் வழியாக வழிந்து விழ ஆரம்பித்தது.
உறியடிக்காரன் தன் இறுதி பலத்தையும் பயன் படுத்தி உறியின்மீது பாய்ந்து அடித்தான். இறுதி உறியையும் அடித்து நொறுக்கி விட்டானெனினும், திடீரென சுயநினைவை இழந்து, வெட்டப்பட்ட வாழையைப்போல தரையில் முகம் மோத, அவன் கவிழ்ந்து விழுந்தான். மக்கள் அப்போதும் ஆரவாரம் எழுப்பி உரத்த சத்தத்தை உண்டாக்கினார்கள்.
கண்களைத் திறக்காமல் கவிழ்ந்த நிலையில் கிடந்த கிழவனின் சரீரத்தில் ஏராளமான பீய்ச்சியடிக்கும் குழாய்கள் ஒரே நேரத்தில் செயல்பட்டன. அவன் சிறிதும் அசையவில்லை.
பீய்ச்சியடிக்கும் குழாய்களில் நீர் முழுவதும் தீர்ந்த பிறகும், அவன் அங்கிருந்து எழவேயில்லை.